World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பாFuel price protests spread across Europe ஐரோப்பாவில் எரிபொருள் உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் By Kumaran Ira and Alex Lantier உயரும் எரிபொருள் விலைகளை பற்றிய பெருகும் சீற்றம் ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களின் அலையை தோற்றுவித்து, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு பெரும் அரசியல் நெருக்கடியாக மாறிவருகிறது. பிரான்சில் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்த பின்னர், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் மீனவர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தங்களை மே 30 அன்று மேற்கொண்டு உயரும் எண்ணெய் விலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள், லாரி, டாக்சி சாரதிகள், ஆம்புலனஸ் தொழிலாளர்கள் என்று கண்டம் முழுவதும் தொழிலாளிகள் எதிர்ப்பை காட்டினர். சர்வதேச அளவில் விரைந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையானது மீன்பிடி, போக்குவரத்து, விவசாயம் ஆகிய தொழில்துறைகளையும் சாதாரண மக்களுடைய வாழ்க்கையையும் உலகம் முழுவதும் பாதித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சராசரி விலை லீட்டர் ஒன்றுக்கு 50ல் இருந்து 100 சதவிகிதம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் உயர்ந்துள்ளது. பிரெஞ்சு மீனவர்கள் வேலைநிறுத்தங்கள் மே மாதத்தில் இரு வாரங்களுக்கும் மேலாக நீடித்தது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இருக்கும் மீனவர்கள் கடந்த வாரம் ஒரு கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்புக் கொடுத்து அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும், உயர்ந்த எண்ணெய் விலைக்கும் மீனுக்கு கிடைக்கும் குறைந்த விலைக்கும் இடையே உள்ள இடைவெளியை ஈடுசெய்ய உதவித் தொகை வேண்டும் என்றும் கோரினர். மீன்பிடிக்கும் தொழிலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 400,000 மக்கள் உள்ளனர்; இது குறிப்பாக ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் போர்த்துக்கலில் கூடுதல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பிரான்சில் கப்பலுக்கான எரிபொருள் ஆறு மாதங்களில் ஒரு லிட்டருக்கு யூரோ 0.45ல் இருந்து 0.70 என்று உயர்ந்து விட்டது. மீனவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக பிரெஞ்சு அரசாங்கம் தற்காலிக உதவித் தொகைகளை கொடுக்கத் தயாராக இருந்தாலும், வெள்ளியன்று அவர்கள் தங்கள் எதிர்ப்புக்களை தொடர்ந்தனர்; இதற்கு காரணம் தங்களது ஐரோப்பிய சக ஊழியர்களுக்கு தங்களின் ஒற்றுமையின் அடையாளத்தை காட்ட விரும்பினர். Fos-sur-mer ல் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சேகரித்து வைக்கும் இடங்கள் ஆகியவை வெள்ளியன்று மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. Archaon, Cherbourg, Saint-Brieuc ஆகிய இடங்களில் உள்ள மீனவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கை தொடரவேண்டும் என்று வாக்களித்துள்ளனர். மே 30 அன்று, ஐரோப்பாவில் மீன்பிடிக்கும் படகுகளை ஏராளமாக வைத்திருக்கும் ஸ்பெயினில் டிராலர்களும் பெரும் வணிக படகுகளும் நாடு முழுவதும் கரையில் இருந்து புறப்படவில்லை; 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாட்ரிட்டில் கூடி 20 தொன் மீனை இலவசமாக கொடுத்தனர். அசோசியேட்டட் பிரஸ் எழுதியது: "ஸ்பெயினின் மீன்பிடிக்கும் கூட்டமைப்பு? 20,000 தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் 1.400 மீன் பிடிக்கும் நிறுவனங்கள்? இத்தகைய நெருக்கடி ஒரு நூற்றாண்டில் தோன்றியதில்லை. எரிபொருளின் விலைகள் 320 சதவிகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது; பல மீனவர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்துவது கட்டுபடி ஆகாது என்று கூறினர்." "மக்கள் இதை இன்னமும் பொறுத்துக் கொள்ள முடியாது; எனவே எதிர்ப்பு நடத்துகின்றனர்; அரசாங்கமும் ஐரோப்பிய குழுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று ஸ்பானிய மீனவர் கூட்டமைப்பான Cepesca வின் பொதுச் செயலாளரான Javier Garat ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்தார்: "அடுத்த இரு வாரங்களில் மிகப் பரந்த முறையில் வேலைநிறுத்தம் வரும் என்று நான் நம்புகிறேன். ஐரோப்பிய படகுகள் அனைத்தும் அடுத்த 15-20 நாட்களுக்கு கரையில் கட்டிவைக்கப்பட்டிருக்கும்." இத்தாலியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இத்தாலியின் இரு கடலோரப்பகுதிகளிலும் தொழிலை மூடிவிட்டனர். நாடு முழுவதும் 2,000 மீனவர்கள், மொத்தத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இத்தாலிய தொலைக்காட்சிக்கு ஒரு மீனவர் கூறினார்: "எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை என்றால் இது வெளிப்படையான போர் ஆகிவிடும். வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்து ஒரு பைசா கூட சம்பாதிக்காத நிலையில் நாங்கள் பெரும் களைப்புற்றுள்ளோம்." போர்த்துக்கலில் பெரும்பாலான மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். "ஒரு படகு கூட கடலுக்கு செல்லவில்லை" என்று தேசிய மீன்பிடி தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவரான Antonio Macedo, Agence France Presse இடம் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு மீனவர் விழிப்புக் குழு நேற்று பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய மீனவர்கள் ஒன்றாக இணைந்து புதனன்று பிரஸ்ஸல்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஐரோப்பிய ஒன்றிய பொறுப்பாளர்கள் படகிற்கான எரிபொருளை 0.40 யூரோ லிட்டருக்கு என்று வைத்திருக்குமாறு கோரப்போவதாக தெரிவித்தது. குழுவின் செய்தித் தொடர்பாளரான அலன் ரிக்கோ Le Nouvel Observateur இடம்: "இத்தாலிய போர்த்துகீசிய மீனவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டனர்; ஸ்பெயின் மீனவர்கள் செவ்வாயன்று உறுதி செய்வர்; ஆனால் கொள்கையளவில் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அனைத்து பிரெஞ்சு துறைமுகங்களிலும் இருக்கும் படகுகளும் துறைமுகத்திலேயே இருக்க வேண்டும் அல்லது துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் படகுக் குழுவினர் பிரஸ்ஸல்ஸுக்கு பயணித்து வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளோம்" எனக் கூறினார். உயர்ந்துள்ள எரிபொருளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீன்பிடிக்கும் துறைக்கும் அப்பால் படர்ந்து விவசாயிகள், போக்குவரத்துத் துறையின் சாரதிகள், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் என சூழ்ந்துள்ளது. பிரான்சில் கடந்த வாரம் நாடு முழுவதும் விவசாயிகள் எண்ணெய் கிடங்குகளை முற்றுகையிட்டனர்; இதில் Toulouse, Sète, F"rontignan, Marseille ஆகியவை அடங்கும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் மே 28 அன்று Lille இல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Villette-Vienna வில் உள்ள எண்ணெய் கிடங்கு, Dijon க்கு தெற்கில் இருக்கும் இரு கிடங்குகள் ஆகியவை நேற்று விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டன; விவசாயிகள், Toulouse கிடங்கு, மீனவர்கள் Fos-sur-mer வசதி ஆகியவற்றை முற்றுகையிட்டதால் அதனை முறியடிக்க கலகப் பிரிவு போலீசார் கண்ணீர்க்குண்டு, தடியடி பிரயோகம் செய்தனர். மீனவர்கள் போலவே, பால்பண்ணை தொழிலாளர்களும் ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய அடிப்படை முறையீடானது மீனவர்கள் உடையதைப் போன்றதாக உள்ளது: அதிக எரிபொருட் செலவுகளுக்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் இவர்களால் செலுத்தப்படும் குறைந்த விலைகளுக்கும் இடையே அவர்கள் பொறியில் அகப்பட்டுக் கொண்டது போல் உள்ளனர். ஜேர்மனி, டென்மார்க், ஹாலந்து, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாட்டு விவசாயிகள் சுரக்கும் பாலை கன்றுகளுக்கு மட்டும் கொடுத்து, அல்லது எஞ்சியதை வயல்களில் கொட்டி எதிர்ப்பைக் காட்டிய வகையில், பாலை பலரும் பீதியுடன் வாங்கிச் சேகரித்தனர். ஒரு ஜேர்மனிய விவசாயி பிரிட்டிஷ் கார்டியனிடம் கூறினார்: "உற்பத்திச் செலவுகள் எங்களுக்கு எப்பொழுதும் கூடுதலாகி வருகின்றன. நஷ்டங்களை தவிர்க்க விரும்பினால் எங்களுக்கு குறைந்தது லிட்டருக்கு 0-.33 யூரோ கிடைக்க வேண்டும்; ஆனால் தானியம், உரம், ஆற்றல் ஆகியவை உயர்ந்துள்ளபோதிலும் எங்களுக்கு லிட்டருக்கு 0.30 யூரோதான் கிடைக்கிறது." லாரி, டாக்ஸி சாரதிகள் ஆகியோரும் பல நாடுகளில் எதிர்ப்பை காட்டியுள்ளனர்; வரவிருக்கும் நாட்களில் கூடுதலான வேலைநிறுத்தங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மே 27 அன்று நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் சாரதிகள் மத்திய லண்டனில் தெருக்களை அடைத்து அரசாங்கம் உயரும் எரிபொருள் விலை பற்றி உதவ வேண்டும் என்று கோரினர். கடந்த வாரம் பிரெஞ்சு லாரி சாரதிகள் "மெதுவாக செல்லும்" போராட்டத்தை முக்கிய பெரும் சாலைகளில் பாரிசுக்கு அருகேயும் நாட்டின் மற்ற இடங்களிலும் நடத்தினர். லாரி, பஸ், டாக்சி சாரதிகள் பல்கேரியாவிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தலைநகரான சோபியாவைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தையும் மூடிவிட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளுவது பற்றி கடுமையான உடன்பாடின்மைகள் வெளிப்பட்டுளன; பல அரசாங்கங்களும் நேரடியாக எதிர்ப்புக்களால் பாதிக்கப்பட்டு விலை உயர்வை எதிர்த்து போராட ஐரோப்பிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முறையீடுகள் வந்துள்ளன. மே 27ம் தேதி போர்த்துகீசிய பொருளாதார மந்திரி Manual Pinho ஐரோப்பிய ஒன்றியம் எரிபொருள் விலையுயர்வு பற்றி அவசர விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். அன்றே பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஒரு அசாதாரண ஒரு மணி நேரக் காலைப் பேட்டி ஒன்றை RTL வானொலிக்குக் கொடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் மதிப்புக் கூட்டு வரிகள் (TVA) எரிபொருள் மீது குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். பேட்டியாளர்கள் இது பற்றி அவநம்பிக்கை நிறைந்த வினாக்களை எழுப்பினர்; பிரான்ஸ் அதன் பற்றாக்குறை வரவு-செலவு திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே விமர்சனத்தை எதிர்கொள்கின்றவேளை, சார்க்கோசி ஆரம்பத்தில் 2009ல் இது தீர்ந்துவிடும் என்று உறுதி கூறியிருந்ததற்கு மாறாக இந்தப் பற்றாக்குறை 2012 வரை சமமாகாது என்ற நிலையில் அது அரசு வருமானத்தின் முக்கிய ஆதாரத்தை குறைத்து விடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இத்திட்டத்திற்கு மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களில் இருந்து, குறிப்பாக அதிகம் வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்படாத நாடுகளில் இருந்து உறுதியான எதிர்ப்பு வந்துள்ளது. தற்பொழுது ஐராப்பிய ஒன்றிய தலைமையை சுழற்சி முறையில் வகித்துவரும் ஸ்லோவேனிய அரசாங்கம், பின்ஹா கேட்டுக் கொண்டபடி அவசர கூட்டத்தை அழைக்க மறுத்துவிட்டது. ஆஸ்திரிய நிதி மந்திரியான Wilhelm Molterer வரிவெட்டுக்கள் அரசாங்கத்தின்மீது நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்; "மீண்டும் விலைவாசி குறைந்தால் என்ன செய்வீர்கள், மறுபடியும் வரியைப் போடுவீர்களா? இது பற்றி அரசியல் விவாதங்கள் தேவை" என்று கேட்டார் அவர். வரிக்குறைப்புக்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய அரசாங்கங்கள் உயரும் எரிவாயுப் பொருள்மீதான விலையை, அதிக பற்றாக்குறை வரவு-செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் வரி குறைப்பது என்பதன் மூலம் உட்கிரகித்துக்கொள்ளும் என்று சமிக்கை கொடுக்கும் என்று ஐரோப்பிய குழு குறிப்பிட்டது. இதன் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது: "உயரும் எண்ணெய் விலையை சமாளிக்க எரிபொருள் நிதிய முறையை மாற்றுதல் என்பது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு தவறான சமிக்கையை கொடுத்துவிடும். அதாவது, அவர்கள் எண்ணெய் விலையை உயர்த்த முடியும், ஐரோப்பியர்கள் அதற்கு வரி கொடுப்பார்கள் என்று ஏற்பட்டுவிடும். இது கோட்பாட்டளவில் மிக மோசமான சமிக்கை ஆகும், நாம் அதைச் செய்யக் கூடாது." இதில் உள்ள ஆபத்து ஐரோப்பாவில் எரிபொருள் விற்பனையினால் ஏற்படும் மகத்தான வருமானம் என்பது உலகளவில் பிரியும் என்பதாகும். தற்பொழுது இந்த வருமானங்களின் பெரும்பகுதி ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு செல்கிறது; அவை கூட்டாக நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை எரிபொருள் வரி என்று வசூலிக்கின்றன. இங்கிலாந்தில் 2007ம் ஆண்டு எரிபொருள் வரிகள் 30.5 பில்லியன் பவுண்டுகள் உயர்ந்து விற்பனை நிலைய விலைகளில் 68 சதவிகித்ததை கொண்டது. பிரான்சில் 2006ம் ஆண்டு விற்பனை நிலையங்களில் வரிகள் எரிபொருள் விலை விற்பனையில் 70 சதவிகிதம் ஆகி மொத்தம் 33.2 பில்லியன் யூரோக்கள் எரிபொருள் வரிகளாக அதிகரித்தது, அல்லது தேசிய அரசாங்கத்தின் வருமானத்தில் 13 சதவிகிதமாக ஆனது. பெட்ரோல் மிக அதிக அளவிற்கு வரிவிதிப்பிற்கு உட்படுகின்றன; அநேகமாக யூரோ மண்டலத்தின் ஏனைய நாடுகளிலும் இப்படித்தான் உள்ளது. மார்ச் 2008 ல் பிரான்சில் ஒரு கிலோ லிட்டர் 602.3 யூரோ, இத்தாலியில் 564 யூரோ; ஜேர்மனியில் 654.4 யூரோ, நெதர்லாந்தில் 664.9 யூரோவாக இருந்தது. வரிகளைக் குறைப்பதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் கொண்ட உடன்பாடானது எண்ணைய் சந்தைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்னும் விலையை உயர்த்தத் தூண்டும்; இது ஐரோப்பிய அரசாங்கங்களின் பகிரக் கூடிய வருமானத் தொகுப்பை பாதிப்பிற்கு உட்படுத்திவிடும்; எண்ணெய் நிறுவன இலாபங்களுக்கும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் வருவாய்க்கும்தான் அவை செல்லும். ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் உயர்ந்த விலையினால் மிக அதிக இலாபங்களை ஈட்டுகின்றன; பிரிட்டிஷ் நிறுவனங்கள் Shell, BP ஆகியவை அசாதாரமான முறையில் 7.2 மில்லியன் பவுண்டு இலாபத்தை 2008 முதல் காலாண்டில் ஈட்டின; பிரான்சில் Total அதே காலத்திற்கு 3.6 பில்லியன் யூரோ இலாபத்தை அறிவித்துள்ளது. |