World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்ா
:
பிரான்ஸ் பிரான்ஸ்: எரி பொருள் விலையுயர்வை எதிர்த்து மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர் By Alex Lantier அரசாங்கம் தற்காலிக எரிபொருள் உதவித் தொகை அளிப்பதாகக் கூறியும், பிரான்சில் உயரும் எரிபொருள் விலைக்கு எதிராக இந்த வார இறுதியில் மீனவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வதுடன் துறைமுகங்களை முற்றுகையிட்டும் உள்ளனர். பெரும் அங்காடிகளில் மீனுக்கு நுகர்வோர் கொடுக்கும் அதிக விலைக்கும் தாங்கள் விற்பனை செய்யும் விலைக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளி பற்றியும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தொழிலில் இது சர்வதேச அளவில் இருக்கும் எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாகும்; குறிப்பாக மீன்பிடித்தல், இலாரிப் போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளில் இது உள்ளது; உலக எண்ணெய் விலை வெடித்து உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பெருநஷ்டங்களில் இதுவும் ஒன்றாகும்; கடந்த வாரம் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 135 டாலர்களாக உயர்ந்துவிட்டது. பிரான்சின் மேற்கு கடற்கரை நெடுகிலும் La Rochelle, Saint-Gilles-Croix-de-Vie, and Sables-d'Olonne ஆகிய இடங்களி மே 10ம் தேதி வேலைநிறுத்தங்களும், சாலைத் தடுப்புக்களும் தொடங்கின. வேலைநிறுத்தங்கள் ஆங்கில கால்வாய் மீதுள்ள Cherbourg, Caen, மற்றும் Dieppe ஆகிய துறைமுகங்களுக்கு மறியலும் Saint-Malo வில் வேலைநிறுத்தமும் பரவியதுடன மத்தியதரை கடற்கரையோரப் பகுதிகளிலும் பரவியது. அங்கு மீனவர்கள் Fos-sur-Mer (மார்சேயிக்கு அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிக்கும், இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கு பகுதி) மற்றும் Sète (மற்றொரு துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ளது), Frontignan, Grau d'Agde ஆகிய இடங்களிலும் வேலை நிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்திற்கு இங்கிலாந்திற்கு படகு சேவையையும் தடுத்து நிறுத்தினர். சில துறைமுகங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கடலோரப் பகுதியினரும் படகுச் சொந்தக்காரர்களும் உள்ளூர் மீனவர் அமைப்புக்களில் இருந்து சுயாதீனமான வேலைநிறுத்த குழுக்களை அமைத்துள்ளனர்; அவை அரசாங்கத்தின் அரசியல் கருவிகள் என்று சரியாக பார்க்கப்படுகின்றன. பைம்போல் துறைமுகத்தில் உள்ள உத்தியோகபூர்வ மீனவர் குழுவின் தலைவரான யான்னிக் ஹெமுரி கன்சர்வேட்டிவ் நாளேடான Le Figaro விடம் கூறினார்: "எங்கள் சமூக தளத்தில் அதன் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத்துடன் நம்பிக்கை பற்றிய நெருக்கடி வந்துவிட்டது." Cherbourg ல் முற்றுகையிட்டிருக்கும் மீனவர்கள் "நாங்கள் குறைந்த மதிப்புடைய, கோபமுற்ற மீனவர்கள்! நாங்கள் Conger மீனை ஒரு கிலோ 0.19 யூரோவிற்கு விற்கிறோம்; அது மீன் கடைகளில் ஒரு கிலோ 12.90 யூரோக்களுக்கு விற்கப்படுகிறது! பணம் முழுவதும் எங்கு செல்கிறது? என்று எழுதியிருந்த பதாகைகளை வைத்திருந்தார்கள். மற்றவர்கள் ஒரு கிலோ Cod மீனை 3.50 யூரோவிற்கு விற்கிறார்கள்; ஆனால் அவை பேரங்காடிகளில் 25 யூரோக்களுக்கு விற்பனையாகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு அருகில் இருக்கும் துறைமுகங்களை குறிப்பாக Fos, மற்றும் Dunkerque -ல் இருக்கும் பெரிய துறைமுகங்களை மீனவர்கள் முற்றுகைக்கு இலக்காகக் கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் ஒரு சில எண்ணெய் கப்பல்களை அனுமதித்தாலும், அளிப்புக்கள் அதிக அளவில் குறைந்துவிட்டன-- மே 20ம் தேதி Montpellier, La Rochelle ஆகிய எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு இல்லை. அரசாங்கம் மீனவர்கள் குழுக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது; வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு தற்காலிக சலுகைகளும் எரிபொருள் உதவித் தொகையும் கொடுக்கப்படுகின்றன. மே 21ம் தேதி மீன்வளத் துறை மந்திரி மிசேல் பார்னியேர் 110 மில்லியன் யூரோக்கள் உதவித் தொகை திட்டத்தை அறிவித்தார்; மேலும் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஒரு 310 மில்லியன் யூரோ திட்டம் மூன்று ஆண்டுகள் என்பதற்கு பதிலாக இரண்டு ஆண்டுகளில் பகிர்ந்து கொடுக்கப்படும். இது மீனவர்களின் எரிபொருள் திறனை முன்னேற்றுவிக்கவும் அவர்களுக்கு குறைந்த வட்டியில் வணிகக் கடன்களுக்கும் பயன்படுத்தப்படும். எரிபொருள் விலை லிட்டருக்கு 0.70 யூரோவில் இருந்து 0.40 யூரோ ஆகக் குறைக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. ஆயினும் இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் அதிகாரிகளால் நிறுத்திவைக்கப்படக் கூடும்; அவர்கள் தடையற்ற வணிகத்தை இது சிதைக்கிறது என்று காரணம் காட்டக் கூடும். மீனவர்கள் இந்த நடவடிக்கைகளை சிறிதும் மறைக்காத சந்தேகம் மற்றும் எதிர்ப்புடன் எதிர்கொண்டனர். La Rochelle ல் ஒரு படகுத் தலைவராக இருக்கும் Pascal Guenezan மைய இடது நாளேடான Le Monde இடம் தெரிவித்தார்; "அவர்கள் கடலுக்கு எங்களை மீண்டும் நல்ல சொற்களுடன் அனுப்புகின்றனர். நாங்கள் இம்முறை நடவடிக்கை வேண்டும், நீடித்த தீர்வுகள் வேண்டும் என்று கூறுகிறோம். எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு 0.35 யூரோ என்னும்போதுதான் எங்களுக்கு சற்றேனும் இலாபம் கிடைக்கும். அது இப்பொழுது 0.72 யூரோ என உள்ளது. அவர்கள் எரிபொருளை லிட்டருக்கு 0.40 யூரோ டிசம்பர் வரை தருவதாகக் கூறுகின்றனர். அதற்குப் பின் என்ன ஆவது? நாங்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமா? கடந்த 15 ஆண்டுகளில் மீன் படகுகள் La Rochelle யில் 40ல் இருந்து 10 ஆகக் குறைந்துவிட்டன என்று அவர் கூறினார்; "இன்னும் இரண்டு வெகு விரைவில் செயல்படாது." Le Monde தொடர்ந்து எழுதுகிறது: "எதிப்பு இயக்கத்தின் முன்னணியிலுள்ள இளம் மீனவர்கள்கூட, வருங்காலத்தில் நம்பிக்கையை வைக்க விரும்புகின்றனர்." இந்த வழி வேலை கடினம்தான் ஆனால், அது எங்கள் தொழில்" என்று 17 வயதான Kevin Perrinaud கூறுகிறார். "படகுகள் இல்லை என்ற நிலை வரும் வரை நான் மீனவனாகத்தான் இருப்பேன்." அரசாங்கம் மிகக் குறைந்த சலுகைகளைக் கொடுத்து வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர நம்பிக்கை கொண்டுள்ளது; எரிபொருள் விலைகள் பற்றி மீனவர்களுக்கு நீண்டகால உதவி கொடுப்பதற்கும் கடுமையாக எதிர்ப்பைக் கொண்டுள்ளது. மே 23 அன்று பிரான்ஸ்-2 தொலைக்காட்சியில் பார்னியேர் நயமில்லாமல் இந்த உண்மையை அடிக்கோடிட்ட வகையில் ஒரு லிட்டர் 0.40 யூரோக்கு உறுதியாக கொடுக்கப்படுவது பற்றி கூறியது: "மீனவர்கள் வேலைக்கு திரும்ப வேண்டிய தேவை எனக்கு இருக்கிறது..... நாங்கள் ஒன்றும் திட்டமிட்ட பொருளாதாரம் இருந்த மற்றும் ஒரு ஆணைமூலம் எரிவாயு விலையை நிர்ணயிக்க கூடிய மாஸ்கோவில் இல்லை." அரசியல் ரீதியாக பார்னியேர் கூறியது மிகவும் முக்கியம் வாய்ந்தது. கட்டுப்பாடற்ற உலகளாவிய விலைவாசி உயர்வுகள் (எண்ணெய், உணவு போன்றவற்றில்) தொழிலாளர்களுடைய கஷ்டங்களை பெருக்கி முழுத் தொழில்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன; ஜனநாயகக் கட்டுப்பாட்டு முறை, பொருளாதாரத் திட்டம் ஆகியவை அவசரமான நடைமுறைச் செயலா என்பது பற்றிய வினாவை எழுப்புகின்றன. அனுபவமுடைய முதலாளித்துவ அரசியல்வாதிகளான பார்னியேர் போன்றவர்கள் இப்போக்கை சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிகின்றனர்; எனவே அவர்களுடைய கோரிக்கைகள் அரசியல் பரபரப்பை அடைவதற்கு முன்பு, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்ப முயலுகின்றனர். ஆனால் எதிர்ப்புக்கள் தொடரும் என்ற குறிப்புக்கள்தாம் உள்ளன. Sables-d'Olonne யில் வார இறுதியில் மீனவர்கள் வேலைக்கு திரும்பினாலும், முதலாளித்துவ செய்தி ஊடகம் அப்போராட்டம் "அமைதியை நோக்கி செல்லுகிறது" என பறைசாற்றினாலும், La Tribune கூறியுள்ளதுபோல், பிரான்சில் பரந்த அளவில் மீனவர் வேலைநிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது மற்றும் அது ஐரோப்பாவிற்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. மீனவர்களின் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் மே 30 அன்று ஸ்பெயினிலும் போர்த்துகலிலும் திட்டமிடப்பட்டுள்ளன; மாட்ரிட்டில் ஒரு எதிர்ப்புப் பேரணி நடக்க உள்ளது. நூற்றுக் கணக்கான பெல்ஜிய மீனவர்கள் மே 23ம் தேதி Zeebrugge யில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற நடத்தினர்; குறைந்த விலையில் எரிவாயு கேட்டனர்; உள்ளூர் மக்களுக்கு 1 டன் மீனை இலவசாகமாக கொடுத்தனர் என்று ஊள்ளூர் போலீசார் தெரிவிக்கின்றனர். எரிவாயு விலை உயர்வாலும் 400 லாரி நிறுவனங்கள் வேலையை நிறுத்தியுள்ளதாலும் எண்ணெய் விலை உயர்வை எதிர்த்து பிரெஞ்சு லாரி டிரைவர்கள் நெடுஞ்சாலைகளில் மகத்தான முறையில் மெதுவாக செல்வது என்ற முடிவில் உள்ளனர். இன்னும் மெதுவாக வேலைசெய்தல், சாலை அடைப்புக்கள் ஆகியவை பெல்ஜியத்திலும் பிரெஞ்சு பகுதிகளான Bourgogne, Rhône-Alpes, Auvergne, Normandy ஆகியவற்றிலும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த இயக்கம் தீவிர அரசியல் ஆபத்துக்களையும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு கொடுக்கிறது. இப்பொழுது அரசியலில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்கள் போன்றவை 2007 அக்டோபர்-நவம்பர் முதல் நடந்து வருவதால் அது மிகவும் செல்வாக்கை இழந்து நிற்கிறது. அவருடைய தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் வேறுவிதமாகக் கூறியிருந்தாலும், தொழிலாளர்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது. கடந்த மாதத்தில் சார்க்கோசி இரு தேசிய வேலைநிறுத்தங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளை சந்தித்தார்; மே 15 அன்று வேலை மற்றும் கல்விச் செலவினக் குறைப்புக்களுக்காகவும், மே 22 அன்று ஓய்வூதியக் குறைப்புக்களுக்காகவும் நடந்தன; இவை நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்று சேர்த்தன; பிரான்சின் பெரிய வணிக முன்னணித் தலைமை துறைமுகங்கள் பற்றிய அவருடைய திட்டமிட்ட சீர்திருத்தங்கள் கூட ஏப்ரல் மாதக் கடைசியில் துறைமுக இயந்திரம் இயக்குபவர்களால் நடத்தப்பட்ட இருவார கால வேலைநிறுத்தத்தை கண்டன. மீனவர் வேலைநிறுத்தம் மக்களின் பரந்த தட்டினர் அரசாங்கத்துடனான போராட்டத்தில் நுழைவதற்கு அணிதிரளும் புள்ளியாக அமையலாம் என்ற முதலாளித்துவ கவலையை Le Monde வெளிப்படுத்தும் வகையில் எழுதியுள்ளது: "எரிவாயு விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட மற்றவர்களான --விவசாயிகள், வண்டி ஒட்டுபவர்கள், பொதுவாக கார் வைத்திருப்போர் கூட-- அவர்களும் "கஷ்டப்படும்" பிரான்சின் ஒரு அங்கம் என்ற முடிவுக்கு வரக்கூடும் என்ற ஆபத்து அங்கு இருக்கிறது. அரசு தங்கள் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்று கோருகின்றனர். ஏற்கனவே டிரக் டிரைவர்கள் புறப்பட்டுவிட்டனர். அடுத்தது என்ன?" |