World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Further escalation of tensions in the Caucasus between Russia and Georgia

காகசஸ் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் ஜோர்ஜியா இடையிலான பதட்டம் அதிகரிக்கிறது

By Vladimir Volkov
14 July 2008

Back to screen version

ஜோர்ஜியாவின் இரண்டு உடைந்து பிரிந்த பிராந்தியங்களான - அப்காசியா மற்றும் தெற்கு ஒசடியா ஆகியவற்றின் நிலை குறித்து ரஷ்யா மற்றும் ஜோர்ஜியா இடையே நிலவி வரும் பதட்டத்தில் புதியதொரு தீவிரத்தை ஜூலையின் முதல் பத்து நாட்கள் கண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்படாத நிலையில், இரண்டு பகுதிகளுமே ரஷ்யாவால் பாதுகாப்பளிக்கப்பட்டு வருகின்றன மற்றும் இம்மக்களில் பெரும்பாலோனோர் ரஷ்ய கடவுச்சீட்டுக்களை கொண்டிருக்கின்றனர். தனது பங்குக்கு, அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவை மனதில் கொண்டு ஜோர்ஜியா அப்பகுதிகளை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

தெற்கு ஒசெடியாவில், ஜூலை 3-4 இன் இரவில், ஜோர்ஜிய துருப்புகள் பீரங்கிகள், கையெறி குண்டு வீச்சு வாகனங்கள், மற்றும் சிறு ஆயுதங்களைப் பயன்படுத்தி பிராந்திய தலைநகரான ட்ஷின்வாலி மீது தாக்குதல் நடத்தின. வடக்கு ஒசெடியாவின் அதிகாரிகளின் கூற்றின் படி, இதில் ஒருவர் இறந்தார், பலர் காயமுற்றனர்.

தெற்கு ஒசெடியாவின் தலைவர் எட்வார்ட் கொகோய்டி பொதுமக்கள் அணிதிரளல் ஒன்றை அறிவித்தார். பின் அமைதியை உறுதியளிக்கும் தேவையை சுட்டிக் காட்டி அவர் அதனை நிறுத்தி விட்டார்.

ஒரு நாள் முன்னதாகத் தான், ஜூலை 3 அன்று காலையில், இணையான ஜோர்ஜிய ஆதரவு 'தெற்கு ஒசெடிய தற்காலிக நிர்வாகத்தின்' தலைவர் ட்மிட்ரியா சனகோவினை கொல்லும் முயற்சி நடந்தது. அவரது வாகனம் அமைதிப் படைகளின் முகாமில் இருந்து மிக அருகாமையில் ஒரு கண்ணி வெடியால் தாக்குதலுக்குள்ளானது, அதன் பின் எந்திரத் துப்பாக்கியாலும் தாக்குதலுக்குள்ளானது.

சனகோவின் நிர்வாகமானது நவம்பர் 2006 அன்று குடியரசில் "அதிகாரபூர்வ" தேர்தல் நடந்த அதே தினத்தில் ஜோர்ஜிய அதிகாரிகளால் நடத்தப்பட்ட "மாற்று ஜனாதிபதி தேர்தல்" மூலம் உருவாக்கப்பட்டது. இந்த இணை நிர்வாகத்தின் அடித்தளம் தெற்கு ஒசெடியாவின் பிராந்தியத்தில் வசிக்கும் ஜோர்ஜிய மக்களாகும்.

ஜூன் மாத இறுதியிலும் ஜூலை ஆரம்பத்திலும், ரஷ்யாவின் எல்லையில் கருங்கடலின் கரையில் இருக்கும் ஒரு பிராந்தியமான அப்காஸியாவின் பல நகரங்களில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதன் விளைவாய், பதினைந்து பேருக்கும் அதிகமான மக்கள் காயமுற்றனர் மற்றும் நான்கு பேர் கொல்லப்பட்டனர்:

*ஜூன் 29 அன்று காக்ராவில் இரண்டு வெடிகுண்டுகள் சில நிமிடங்கள் இடைவெளியில் வெடித்தன - ஆறு பேர் காயமுற்றனர்;

*ஜூன் 30 அன்று, சுகுமியில் மார்க்கெட் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமுற்றனர்.

*ஜூலை 6 அன்று காலையில், ஜோர்ஜிய-அப்காசிய மோதல் பகுதியான ருகி கிராமத்தின் அருகே நான்கு வெடிகுண்டுகள் வெடித்தன. அதே நாளின் மாலையில், காலியின் மையப்பகுதியில் உள்ள ஒரு தேநீர்மையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் - நான்கு பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமுற்றனர்.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஜோர்ஜிய ரகசிய அமைப்புகள் தான் காரணம் என்று அப்காசிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்த வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியவர்களின் நோக்கம் ரஷ்ய அமைதிகாக்கும் படையினர் திறமின்றி செயல்படுவதையும் அந்த மக்களுக்கு அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியாததையும் அம்பலப்படுத்துவதே ஆகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சூழல் கூர்மைப்பட்டது முன்னெப்போதும் காணாத கடுமையான அறிக்கைகளை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசாங்கத் துறைக்கு ஒரு சாக்காக அமைந்து விட்டது, இது அதிகரிக்கும் பதட்டத்தின் அத்தனை பழியையும் ரஷ்யா மீது தூக்கிப் போட்டது.

ஜூலை 7 திங்களன்று அமெரிக்க அரசாங்கத் துறை அறிவித்தது, "ஜோர்ஜிய பிராந்திய இறையாண்மைக்கான தன்னுடைய உறுதியான ஆதரவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது, அத்துடன் ஜோர்ஜியா அப்காசியாவில் போர் நிறுத்த எல்லையின் இரு பக்கத்தில் இருந்துமான சமீபத்திய குண்டுவீச்சு சம்பவங்களை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுக்கிறது". நேரடிப் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடக்க ஜோர்ஜிய அரசாங்கத்திற்கும், "அப்காசியாவில் உள்ள நடப்பு அதிகாரத்திற்கும்" அழைப்பு விடுத்திருக்கும் அமெரிக்கா, முதன்முறையாக ரஷ்யாவின் முயற்சிகள் மற்றும் நிலைகள் மீது சுதந்திரமாக செயல்படுவதற்கு வெளிப்படையாக ஆலோசித்துள்ளது.

இந்த நிலைப்பாடுகளின் வரிசையில், உத்தியோகபூர்வ அமெரிக்க வெளியுறவுத் துறை பிரதிநிதியான சீன் மெக்கார்மக், சமீபத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த அப்காசிய பிராந்தியங்களில் சர்வதேச அமைதிக்காப்பு படைகளை நிறுத்துவதற்கு முன்மொழிந்திருக்கிறார். இந்த போலிஸ் படைகள் ரஷ்ய துருப்புகளாலான மொத்த அமைதிகாப்பு படைகளுக்கு ஒரு மாற்றாக செயல்படும்.

இந்த அறிவிப்புகள் எல்லாம் ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத இறுதி எச்சரிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.

ஜூலை 9 அன்று அரசாங்க செய்தித்தாளான ரஷ்யன் கெஸட், 'குறைந்தபட்சம் காலனித்துவ ஆட்சியிடம் பேசுவதைப் போன்ற ஒரு தொனியில் ரஷ்யாவிடம் கூறப்பட்டது', அமெரிக்காவே ஒரு "சறுக்கல் இடத்தில்" தான் இருக்கிறது என்று எழுதியது.

"அமெரிக்க அரசாங்க நிர்வாகமானது ரஷ்யா அப்காசியா இடையே ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை நடப்பதை தவிர்க்கும் வரை, ரஷ்யா மற்றும் அப்காசியாவுடன் காலனி நாடுகளைப் போல் பேசும் வரை காகசஸ் பிராந்தியத்தில் 2008 இன் கடும் கோடையானது கடும் இலையுதிர் காலம், கடும் குளிர்காலம் என போய்க் கொண்டே தான் இருக்கும்" என்று அந்த பத்திரிகை மேலும் எழுதுகிறது.

CIS (சுதந்திர அரசாங்கங்களின் பொது நல அமைப்பு) மீதான ரஷ்ய சட்டமன்றத்தின் கீழ் அவையான கோஸ்டூமா கமிட்டியின் தலைவரின் முதல் உதவியாளரான கான்ஸ்டான்டின் சதுலின், அமெரிக்க அரசாங்க துறையின் அறிக்கையானது பூகோளம் குறித்த பற்றாக்குறை அறிவினால் விளைந்ததாகும் என்றார். "வெளிப்படையாக, அவர்கள் ஜோர்ஜியாவை அமெரிக்க மாகாணமான ஜோர்ஜியாவுடன் போட்டு குழப்பியிருக்கிறார்கள்" என்று ஜூலை 9 அன்று ரஷ்யன் கெஸட் இதழில் சதுலின் அறிவித்தார். "அவர்கள் தங்களது சொந்த அரசுகளில் ஒன்றைக் குறித்து பேசுவார்களேயானால், அமெரிக்கர்களுக்கு சர்வதேச போலிஸ் துருப்புகளை அழைப்பதற்கு நிபந்தனையற்ற உரிமை உள்ளது. ஆனால் ஜோர்ஜிய-அப்காசிய மோதல் பிராந்தியத்திற்கு சர்வதேச போலிசை அழைப்பது என்பது இந்த இரு தரப்பின் சம்மதத்துடன் தான் நடைபெற முடியும். இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்படும் அமைதி காக்கும் நடவடிக்கை என்னும் வடிவமைப்பைத் தான் நாங்கள் கொண்டிருக்கிறோம்".

உத்தியோகபூர்வமாக, அப்காசியாவின் நிலையானது இன்னமும் ஆகஸ்டு 1994 இல் CIS ஆல் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம் மூலமாகவே கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தீர்மானங்களின் படி, பிரிந்து சென்ற குடியரசு நாடுகளில் ரஷ்யா தான் ஸ்திரத்தன்மைக்கான வாக்குறுதியளிப்பு நாடாக இருக்கிறது, இதுவே எல்லை நதியான இங்குரியின் இரு பக்கங்களிலும் 12 கிமீ தொலைவு பாதுகாப்பு மண்டலங்களில் நிறுத்தப்பட்டுள்ள அதன் "அமைதி காப்பு" துருப்புகளை பராமரிக்கிறது.

இந்த 1994 தீர்மானங்களின் ஒரு கூடுதல் அபிவிருத்தியாக 1996ல் CIS உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட மொத்த ஒப்பந்தம் இருக்கிறது. இது அங்கீகரிக்கப்படாத குடியரசுடன் வர்த்தகம் மற்றும் பிற உறவுகளின் மீது தடையை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 1999ம் ஆண்டுக்குள்ளாக, ரஷ்யா இந்த தடைகளில் ஏராளமானவற்றை தளர்த்தியது, இந்த ஆண்டின் வசந்தகாலத்தில் ஏறக்குறையை எல்லாவற்றையுமே ஒட்டுமொத்தமாக இரத்து செய்து விட்டது.

இந்த கூர்மையான திருப்பமானது, இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட கொசோவோ சுதந்திரப் பிரகடனத்துக்கான அங்கீகாரம் மற்றும் ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கு நேட்டோவில் உறுப்பினர் பதவி அளிக்கும் திட்டங்கள் ஆகிய மேற்கின் நடவடிக்கைகளுக்கான ஒரு மறுமொழியாக இருந்தது.

கொசோவோ சுதந்திர பிரகடனத்திற்கான முன்னுரையில், இது முந்தைய சோவியத் குடியரசின் பிராந்தியத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத பிராந்தியங்கள் விஷயத்தில், அதிலும் குறிப்பாக அப்காசியா மற்றும் தெற்கு ஒசெடியா விஷயத்தில், இதே போன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு முன்னுதாரணமாக ஆகி விடும் என்று ரஷ்யா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியிருந்தது.

இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடியான புவிஅரசியல் மோதல்கள் குறித்த அச்சத்தில், ரஷ்யா இந்த இரண்டு பிராந்தியங்களின் சுதந்திரத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. மாறாக, ஏப்ரலில் இவற்றுடன் முழு அளவிலான பொருளாதார ஒத்துழைப்பை செய்வதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது, இது பிராந்திய பதட்டங்களை கூடுதலாக்கியது.

இந்த பதட்டங்கள் ஏப்ரலின் இறுதியிலும் மே மாத தொடக்கத்திலும் மெதுவாய் அதிகரித்தது. இப்போது மோதலின் ஒரு கூடுதல் வெடிப்பு திருப்பம் நிகழ்ந்து வருகிறது.

ஜூலை 8ம் தேதி, ஜோர்ஜிய எல்லைப்பகுதி சட்டத்தை மீறும் வகையாக நான்கு ரஷ்ய விமானங்கள் தெற்கு ஒசெடியாவின் வான்பகுதியில் பறந்தன. இரண்டு நாட்கள் கழித்து, ஜூலை 10 அன்று, ரஷ்ய வெளியுறவு விவகார அமைச்சகம் உண்மையை ஏற்றுக் கொண்டது, ரஷ்யாவின் நடவடிக்கைகள் "ஜோர்ஜியாவின் பதட்ட பகுதிகளில் அமைதி நிலவ அனுமதித்திருக்கிறது, அத்துடன் வன்முறையின் போக்கில் சூழல் வளர்வதை தடுத்திருக்கிறது, இதன் சாத்தியக்கூறு தோற்றமளிப்பதை விட அதிகமாக இருந்தது" என்று விளக்கமளித்தது.

மறுமொழியாக, ஜூலை 11 வெள்ளிக்கிழமையன்று ஜோர்ஜிய நாடாளுமன்றம் அடுத்த முறை ரஷ்ய இராணுவ விமானங்கள் ஜோர்ஜிய வான் பகுதியில் அத்துமீறி பிரவேசித்தால், ரஷ்யா "அதன் துகள்களைத் தான் பொறுக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்தது.

அதே நாளில், ரஷ்யாவில் உள்ள ஜோர்ஜிய தூதர் ஆலோசனைக்காக ரஷ்யாவில் இருந்து மீண்டும் அழைத்துக் கொள்ளப்பட்டார்.

ஜோர்ஜியா மற்றும் ரஷ்யா இரண்டுமே ஐநாவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன, ஐநா பாதுகாப்பு சபையிடம் இருந்து உறுதிப்படுத்தல் கோரி தீர்மானங்களை வழங்கியிருக்கின்றன. மோதல் பிராந்தியத்தில் ஜோர்ஜியாவினை ஆயுத நடவடிக்கைக்கு "தூண்டுவதாக" இருக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஜோர்ஜியா கோருகிறது. அங்கீகரிக்கப்படாத குடியரசுகளுக்கு எதிராக படைபலத்தை உபயோகிக்க கூடாது என்பதற்கான ஒப்பந்தத்தில் ஜோர்ஜிய தரப்பு கையெழுத்திட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது.

இந்த மோதலில் மேற்கு ஐரோப்பா ஒரு சுதந்திர இடைத்தரகராக செயலாற்ற முயற்சிக்கிறது. ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மெயர் அளித்த ஒரு திட்டத்தின் படி, சமரச நடைமுறையானது மூன்று கட்டங்களைக் கடந்தாக வேண்டும். முதல் கட்டம் பதட்டத்தை தணிப்பது - இரு தரப்பும் படைபலத்தை துறக்க கடமைப்பட்டுள்ளன. இரண்டாவது, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்தான நிதி உதவி மூலம் அப்காசியா மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டும், ஜோர்ஜிய அகதிகள் திரும்ப வேண்டும். மூன்றாவது கட்டத்தில் தான் அப்காசியாவின் வருங்கால நிலை மீதான விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிராந்தியங்கள் மீது அமெரிக்காவின் தீவிர நடவடிக்கைகள் மீது மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் அதிருப்தி கொண்டுள்ளதையும், ஐரோப்பாவுக்கான எரிசக்தி வளங்களை வழங்குவதில் முதன்மை சப்ளையராக இருக்கும் ரஷ்யாவுடன் அவை சுமூக உறவுகளை பராமரிக்கவே விரும்புகின்றன என்பதையும் இந்த நிலைப்பாடு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

அலெக்ஸாண்டர் ரார் வெளியுறவுத் துறைக்கான ஜேர்மன் கவுன்சிலின் ரஷ்யா மற்றும் CIS க்கான திட்ட இயக்குநராக இருக்கிறார். காகசஸில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த மேற்கு ஐரோப்பிய மனோநிலையை விளக்கும்போது, அவர் "புஷ் பதவிக் காலம் முடிவுபெற இருப்பதால் தனது நடவடிக்கையின் ஒரு நேர்மறையான முடிவை அவர் காட்ட வேண்டியிருக்கிறது, ஏனென்றால் ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் அமெரிக்க கொள்கைக்கான ஒரு பெருந்துயரமாக ஆகிக் கொண்டிருக்கின்றன" என்பதால் தான் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கின்றன என்று அவர் ஜூலை 9 அன்று Independent Gazette பத்திரிகையிடம் தெரிவித்தார்.

தலைநகர் திபிலிசிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் சென்ற வாரம் பயணம் மேற்கொண்டதும் ஜோர்ஜியாவை ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் உறுதியை எடுத்துக் காட்டும் மற்றுமொரு சுட்டிக் காட்டல் தான். அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு உறுப்புகளை கட்டுவதற்கு செக் குடியரசில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன் இணைத்துக் கூறப்பட்ட இந்த பயணத்தின் கட்டமைப்பிற்குள், ரைஸ் அறிவித்தார், "வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில மாதங்களில் ரஷ்யர்கள் செய்த சில விஷயங்கள் இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகமாக்கி விட்டது".

நேட்டோவுக்கான உறுப்பினர் நடவடிக்கை திட்டத்தில் (MAP) ஜோர்ஜியாவை சேர்ப்பது அப்காசியா மற்றும் தெற்கு ஒசெடியாவில் இறுகிய மோதல்களைக் கட்டுப்படுத்த உதவும் என்பதால் "அமெரிக்கா ஜோர்ஜியாவை MAP இல் சேர்க்க முயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டால் - அநேகமாக இந்த ஆண்டு டிசம்பரில் - "பனிப்போரின்" முடிவுக்குப் பின்னர் முதன்முறையாக ரஷ்யா (இது முன்பு போலவே அணு ஆயுதங்களின் ஒரு சக்திவாய்ந்த கையிருப்பை பராமரிக்கிறது) மற்றும் நேட்டோ இடையே நேரடியான இராணுவ மோதலைக் காணும் அபாயத்தை உலகம் எதிர்நோக்கும்.

அமெரிக்க ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் புவிஅரசியல் நலன்கள் தான் காகசஸில் அதிகரிக்கும் பதட்டத்திற்கான முக்கிய ஆதாரமாக இருக்கிறது. பலவீனப்படும் அமெரிக்க பொருளாதாரமும் காஸ்பியன் கடல், காகசஸ், மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களில் இருந்து உலக சந்தைக்கான எரிசக்தி வளங்கள் அளிப்பின் முக்கிய பாதைகளில் கட்டுப்பாட்டை பாதுகாப்பதற்கான விருப்பம் இரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, சார்பு அரசாங்கங்களுக்கு எதிராக இராணுவ சாகசங்கள் மற்றும் தீவிர நடவடிக்கைகளுக்கு தள்ளுகிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர்கள் தான் ஏகாதிபத்திய இலட்சியங்களின் இந்த வெடிப்பிற்கு தெளிவான உதாரணங்கள். இந்த உள்ளடக்கத்திற்குள்ளாக, காகசஸில் மிகவும் முக்கியமானதொரு புள்ளியாக ஜோர்ஜியாவை அமெரிக்கா பார்க்கிறது; அமெரிக்கா அமைப்புரீதியாக ஜோர்ஜியாவின் இராணுவத்திற்கு ஆயுதமளிப்பு பயிற்சியளிப்புகள் செய்துவருகிறது.

ஜோர்ஜிய இராணுவம் நடப்பு தருணத்தில் சுமார் முப்பதாயிரம் பேரை கொண்டுள்ளது, இதில் இரண்டாயிரம் பேர் சென்ற இலையுதிர்காலத்தில் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர்.

அமெரிக்காவின் புவிஅரசியல் இலக்குகள் ரஷ்ய ஆதிக்க பிராந்தியங்களாக அறியப்பட்ட இந்த பிராந்தியங்களில் சலுகைக்கள் செய்து கொள்ள ரஷ்யா விருப்பமின்மையுடன் மோதுவதாக இருக்கிறது. உலகளாவிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உயர்ந்த விலைகள் மூலம் ரஷ்ய அரசாங்க நிலைமை சமீப ஆண்டுகளில் வலுப்பட்டிருப்பது ரஷ்யாவின் ஆளும் மேல்வர்க்கத்தினரை தனது அதிகாரம் மற்றும் குறைவான இணக்கநிலை மீது கூடுதல் நம்பிக்கை கொள்ளச் செய்திருக்கிறது.

காகசஸில் இராணுவ மோதல்கள் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கு பின்னர் 1980கள் மற்றும் 1990களில் வெடித்தது. பத்தாயிரக்கணக்கானோர் தங்களது உயிர்களை துறந்தனர், நூறாயிரக்கணக்கானோர் அகதிகளானார்கள். சோவியத் ஒன்றியத்தின் சிதைவானது இந்த பிராந்தியத்தின் மக்களுக்கு அமைதியையும் செழிப்பான வாழ்க்கையையும் கொண்டு வரவில்லை, மாறாக சமூக பிளவின் வளர்ச்சியையும் கணக்கிட முடியாத துயரமான விளைவுகளுடனான இரத்தம் தோய்ந்த போர்களின் அபாயத்தையும் தான் கொண்டு வந்திருக்கிறது என்கிற உண்மையை விடவும் கடந்த 20 ஆண்டுகள் நடைமுறைகளின் அபாய இயல்பை சிறப்பாக எடுத்தியம்புவது ஏதும் இல்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved