World Socialist Web Site www.wsws.org |
Sri Lankan Trotskyists mark 40 years of struggle for socialist internationalism இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சோசலிச அனைத்துலகவாதத்திற்கான 40 ஆண்டு கால போராட்டத்தை நினைவு கூர்ந்தனர் By our correspondents சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டு 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் ஜூலை 16ல் பகிரங்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பில் இருந்து வந்த தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களோடு தீவின் தெற்கு மற்றும் வடமேல் மாகாணம் மற்றும் மத்திய பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்தும் சுமார் 150 பேர் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரும் பு.க.க. ஸ்தாபக உறுப்பினருமான கே. ரட்னாயக்க கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தக் கூட்டம் ஒரு சம்பிரதாய நிகழ்வு அல்ல என அவர் சுட்டிக்காட்டினார். தொழிலாளர் வர்க்கம் தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் புதிய புரட்சிகர எழுச்சிக் காலகட்டத்துக்குள் நுழைகின்ற தருவாயில், பு.க.க. அடிப்படையாகக் கொண்டுள்ள ட்ரொட்ஸ்கிஸ வேலைத்திட்டமும் அதன் கடந்த 40 ஆண்டுகால போராட்டங்களின் அரசியல் படிப்பினைகளும் தொழிலாள வர்க்கத்திற்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1968 ஜூன் மாதம் 16 மற்றும் 17ம் திகதிகளில் சுமார் 30 பேர் கொழும்பில் கொம்பனி வீதியில் தொழிலாளர் கூட்ட அறையில் ஒன்று கூடி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்ததை ரட்னாயக்க நினைவு கூர்ந்தார். பு.க.க. ஸ்தாபக பொதுச் செயலாளரான கீர்த்தி பாலசூரியவுக்கு ரட்னாயக்க புகழுரையாற்றினார். தொடக்கத்தில் இருந்து 1987 டிசம்பரில் அகால மரணம் அடையும் வரை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கீர்த்தி பாலசூரிய அனைத்துலக ட்ரொட்ஸ்கிஸ இயக்கத்துக்கு ஒப்பற்ற பங்களிப்பை செய்துள்ளார். "ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ், தெற்காசியாவிலான அரசியல் நெருக்கடி இலங்கையில் அதி தீவிரமான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. அது தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும் பலவீனப்படுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தை புதுப்பித்துள்ளதோடு தமிழர் விரோத இனவாதத்தையும் உக்கிரமாக்கியுள்ளது. 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு லங்கா சமசமாஜக் கட்சி செய்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக, கட்சியை ஸ்தாபிப்பதற்கான பு.க.க. மாநாட்டில் நடந்த கலந்துரையாடலின் இதயமாக லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு இருந்தது. இந்த 40 ஆண்டுகால முன்நோக்குதான் துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரே மாற்றீடாகும்," என ரட்னாயக்க விளக்கினார். அமெரிக்க சோ.ச.க. உடைய தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தள அனைத்துலக ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், ஆஸ்திரேலிய சோ.ச.க. யின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளையும் ரட்னாயக்க வாசித்தார். வடக்கில் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தால் துண்டிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சோ.ச.க. தோழர்களும், ஐரோப்பாவில் சோ.ச.க. யின் புலம்பெயர்ந்தவர்களின் அமைப்பும் மற்றும் இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) ஆதரவாளர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். சோ.ச.க. பொதுச் செயாலளரும் பு.க.க. ஸ்தாபக உறுப்பினருமான விஜே டயஸ், பிரதான விரிவுரையை நிகழ்த்தினார். "புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் 40 ஆண்டுகால போராட்டத்தை இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவுகூர்வதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். பு.க.க. ஆரம்ப மாநாட்டின் உறுப்பினர் எண்ணிக்கையும் மற்றும் கூட்டம் நடந்த இடமும் சிறியதாக இருந்த போதிலும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்த்திற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறித்தது. பு.க.க. ஸ்தாபக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் இருந்து அவர் மேற்கோள் காட்டினார். "கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் நான்கு காங்கிரசுகளில் எடுத்த தீர்மானத்தையும், 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஆரம்பிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத் திட்டத்தையும் மற்றும் 1939-40 களில் ட்ரொட்ஸ்கி தானே முன்னெடுத்த போராட்டங்களையும், மற்றும் பிந்தைய காலத்தில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தை சீர்திருத்துவதன் மூலம் நான்காம் அகிலத்தை கறைத்துவிட முயற்சித்த திருத்தல்வாத வேலைத்திட்டத்திற்கு எதிராக 1953ல் நா.அ.அ.கு. முன்னெடுத்த போராட்டத்தையும் பு.க.க. தனது வேலைகளின் அடிப்படையாகக் கொண்டுள்ளது," என அது தெரிவித்தது. "இதனை வேறு வார்த்தைகளில் சொன்னால், இருபதாம் நூற்றாண்டு பூராவும் முன்னெடுக்கப்பட்ட உலக சோசலிச புரட்சிக்கான போராட்டங்களின் இன்றியமையாத கோட்பாட்டு அத்திவாரங்களில் பு.க.க. காலூன்றிக்கொண்டுள்ளது... நாம் 40 ஆண்டுகால பு.க.க. வரலாற்றை திருப்பிப் பார்ப்பது, இன்றைய தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிச அனைத்துலகவாத ட்ரொட்ஸ்கிஸ முன்நோக்கின் தீர்க்கமான முக்கியத்துவத்தை விளக்குவதற்கேயாகும்," என டயஸ் விளக்கினார். உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் நிலவும் ஆழமான பொருளாதார நெருக்கடியை புரிந்துகொள்ளாமல் உலகில் எந்த இடத்தில் உள்ள வெகுஜனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் எவற்றையும் புரிந்துகொள்ள முடியாது, என டயஸ் தெரிவித்தார். பிரதான நிறுவனங்களை காப்பாற்றவும் அமெரிக்க மற்றும் பூகோள நிதி கட்டமைப்பு உடனடியாக பொறிந்து போவதை தடுக்கவும் அமெரிக்க அரசாங்கம் தலையீடு செய்து நான்கே மாதங்களுக்குள் இரண்டாவது தடவையாக ஃபன்னி மயே மற்றும் ஃபிரேடி மக் (Fannie Mae and Freddie Mac) ஆகிய கடன் கொடுக்கும் இராட்சத நிறுவனங்களை பெடரல் ரிசர்வ் போர்ட் பிணையெடுக்க தலையீடு செய்ததை அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கம் சீரழிந்து வருவதை தடுப்பதற்காக தனது எஞ்சியுள்ள இராணுவ மேலாதிக்கத்தை அணிதிரட்ட அமெரிக்கா எடுத்த முயற்சியே அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு என பேச்சாளர் விளக்கினார். புஷ் நிர்வாகத்தின் இராணுவத் தலையீட்டுக் கொள்கைகளே, தெற்காசியாவிலும் மற்றும் உலகின் ஏனைய பாகங்களிலும் ஸ்திரமின்மையையும் பதட்டநிலையையும் மேலும் உக்கிரமாக்கியுள்ளது. "ட்ரொட்ஸ்கிஸத்தின் மூலோபாய படிப்பினைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் ஒருவரால் இந்த கொந்தளிப்பான அரசியல் நிலைமையை கிரகித்துக்கொள்ள முடியாது" என அவர் தெரிவித்தார். பூகோளமயமாக்கப்பட்ட உலக பொருளாதாரத்துக்கும் காலங்கடந்த தேசிய அரச அமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திக்கும் தனியார் சொத்துக்கும் இடையாலான முரண்பாடுகள் போன்ற முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகள் உக்கிரமடைவதோடு, அவை அணுவாயுதம் பயன்படக்கூடிய ஒரு மூன்றாவது உலக யுத்த ஆபத்தை முன்கொணர்ந்துள்ளது. இதில் இருந்து விடுபடுவதற்கு, 1968ல் பு.க.க. ஸ்தாபிதத்தின் மையமாக இருந்த சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கு மட்டுமே மனித குலத்திற்கு வழிவகுக்கும், என டயஸ் தெரிவித்தார். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) காட்டிக்கொடுத்ததை அடுத்து பு.க.க. ஸ்தாபகர்கள் போராடி வெற்றியடைய செய்யவேண்டி இருந்த விவகாரங்களை டயஸ் விவரித்தார். ல.ச.ச.க. ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிடுவதற்கும் மற்றும் தேசியவாதத்துக்கும், இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து நான்காம் அகிலத்திற்குள் மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாத போக்கின் தோற்றத்திற்கும் அடிபணிவதற்கும் காரணமாயிருந்த அரசியல் வேர்களையும் பு.க.க. கண்டுகொண்டது குறிப்பாக நா.அ.அ.கு. வின் வழிகாட்டலின் கீழேயே ஆகும். பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிஸ வேலைத் திட்டத்தை பாதுகாக்கவே நா.அ.அ.கு. 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது. பு.க.க. ஸ்தாபிதம் உட்பட ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பை அடுத்து நா.அ.அ.கு. எடுத்த தீர்மானங்கள், "1968ல் ஆரம்பித்து 1975 வரை ஏழு ஆண்டுகள் உலகம் பூராவும் விரிவடைந்த வர்க்கப்போராட்ட அலையை முன்கணித்தது" என டயஸ் தெரிவித்தார். பிரான்சில் 1968 மே-ஜூன் பொது வேலை நிறுத்தம், இலங்கையில் பெருந்தோட்டங்களிலும் தனியார் துறையிலும் நடந்த போராட்டங்கள் மற்றும் 1975ல் கிறீஸ் மற்றும் போர்த்துக்கேயத்தில் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்கள் கவிழ்க்கப்பட்டதை அடுத்து வந்த நிலைகுலைவு உட்பட இந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவதற்கு பலவித திருத்தல்வாத போக்குகள் துணைப் பாத்திரம் வகித்தன. ட்ரொட்ஸ்கிஸ கொள்கைகளுக்கான போராட்டத்தில் பு.க.க./ சோ.ச.க. யின் நீண்ட சாதனைகளை டயஸ் விளக்கினார். 1970ல் பு.க.க. ஸ்தாபிக பொதுச் செயாலளர் கீர்த்தி பாலசூரிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியலும் அதன் வர்க்கத் தன்மையும் என்ற பெயரில் ஒரு திறனாய்வு நூலை எழுதினார். ஜே.வி.பி. உடன் ஆழமான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், 1971ல் ஜே.வி.பி. மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை அலையை பு.க.க. எதிர்த்ததோடு "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்ற கோரிக்கையை அது எழுப்பியது. பு.க.க. 1972 சிங்கள-பெளத்த இனவாத அரசியலமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. "நாங்கள் 40 ஆண்டுகால நீண்ட போராட்டத்தை திருப்பிப் பார்ப்பது தற்போதைய அரசியல் போராட்டங்களுக்கு தாயாராவதற்கே. பு.க.க/சோ.ச.க. மற்றும் நா.அ.அ.கு. ஆகியவை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசியல் மற்றும் கோட்பாட்டு அத்திவாரங்களின் ஊடாக மட்டுமே இன்று எம்முன் எழுந்துள்ள அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். தனது வரலாற்றை பெருமையுடன் மீட்டுப் பார்க்கவும் விளக்கவும் கூடிய ஒரே இயக்கம் எங்களுடைய இயக்கம் மட்டுமே. மாவோ, கோசிமின் மற்றும் சேகுவரா கொள்கைகளில் தகவமைவு கொண்டுள்ள அரசியல் அமைப்புக்களுக்கு முற்றிலும் மாறான விதத்தில், நா.அ.அ.கு. உலகம் பூராவும் இலட்சக்கனக்கான வாசகர்களின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்கின்றது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை "சோ.ச.க. யில் இணையுமாறும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சாத்தியமானளவு விரிவாக உலக சோசலிச வலைத் தளத்தை அறிமுகப்படுத்துமாறும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆய்வுகளின் ஊடாக அவர்களுக்கு கல்வியூட்ட போராடுமாறும், அதன் மூலம் சோ.ச.க. யை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் வேண்டுகோள் விடுத்து டயஸ் தனது உரையை நிறைவு செய்தார். சோ.ச.க. நிதிக்காக கூட்டத்தின் முடிவில் ரூபா 5,850 சேகரிக்கப்பட்டது. வருகை தந்த பலர் கூட்டத்தைப் பற்றி WSWS உடன் உரையாற்றினார்கள். கொழும்பு பல்கலைக்கழக மாணவரான சம்மிக, கூட்டத்திற்கு வருகை தந்த காரணத்தை விளக்கினார்: "எங்களது கல்வி நடவடிக்கையின்போது பல விடயங்களில் விரிவுரைகளில் ட்ரொட்ஸ்கியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் கலைத் துறை தொடர்பாக. எவ்வாறெனினும், மேல் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக ட்ரொட்ஸ்கியின் சரியான கருத்துக்களை அவர்கள் கூறுவதில்லை. எனது சக மாணவர் ஒருவருடன் ட்ரொட்ஸ்கி பற்றி கலந்துரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் சோ.ச.க. யுடன் நெருங்கிய தொடர்பு உடையவராவார். "நாம் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாக உள்நாட்டு யுத்தத்தை நான் காண்கின்றேன். இலங்கை தேசியப் பிரச்சினை தொடர்பாக பு.க.க. மற்றும் சோ.ச.க. எடுத்த நிலைப்பாடுகள் பற்றி நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இலங்கை ஆளும் வர்க்கத்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். புலிகளை தோற்கடித்த பின்னர் நாம் சமாதானத்தை அனுபவிக்க முடியும் என நாம் நினைத்தோம். ஆயினும், கிழக்கு மாகாணத்தில் நிலைமை முன்னரை விட மோசமாக உள்ளது. பல்வேறு பட்ட இனக் குழுக்களுக்கு இடையில் மட்டுமன்றி, ஒரே இனக் குழுக்களுக்கு இடையிலும் ஆயுத மோதல்கள் அங்கு இடம்பெறுகின்றன. "சுதந்திரத்தில் இருந்தே கடந்த 60 ஆண்டுகளாக கொழும்பில் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சங்களை முன்னெடுத்தது என்பதை நான் பலமாக நம்புகிறேன். சோ.ச.க சொல்வது போல், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்துவதற்கு இந்த பாரபட்சங்களை பயன்படுத்தியுள்ளனர். ஆட்சியாளர்கள் இந்த யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை. எவ்வாறெனினும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பது எப்படி என்பது பற்றி எனக்கு சரியான கருத்து இல்லை. எனது பிரச்சினைகளுக்கு பதிலளிக்க இந்த விரிவுரை உதவும் என நான் நினைக்கின்றேன்." அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரசன்ன தெரிவித்ததாவது: "பல்கலைக்கழக மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். உண்மையில் நாங்கள் கல்வி கற்பதற்கான உரிமையை அனுபவிக்கவில்லை. எங்களுக்கு 2,500 ரூபா கல்விக் கொடுப்பனவு கிடைப்பதோடு அது எங்களது தங்கும் அறைக்கு செலுத்துவதற்கே போதாது. அதற்கும் மேலாக, நாங்கள் உணவுக்காக 4,000 ரூபா செலவிடுகின்றோம். எங்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிலாள வர்க்க குடும்பத்தை அல்லது விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே எஞ்சியதை எங்களது பெற்றோர்களால் செலவிட முடியாது. நாங்கள் சில தற்காலிக தொழில்களை செய்கின்றோம். இதனால் அடிக்கடி விரிவுரைகளையும் கைவிட நேருகிறது. "பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் ராக்கெட் வேக அதிகரிப்பதால், மூன்று வேளை உணவை நாங்கள் இரண்டு நேரத்துக்கு குறைக்கத் தள்ளப்பட்டுள்ளோம். முதலில் கடன் வாங்கியதை திருப்பி செலுத்த கல்விக்கான கொடுப்பனவு கிடைக்கும் வரை காத்திருப்போம். அடுத்த நாள் மீண்டும் கடன் வாங்க வேண்டும். நாங்கள் ஒரு கொடிய கடன் வட்டாரத்திற்குள் இருக்கின்றோம். பட்டம்பெற்ற பின்னரும் கூட வருடக் கணக்காக வேலையற்றோர் பட்டியலில் காத்திருக்க வேண்டும். "தங்களது தலைமையின் கீழ் நடந்த போராட்டங்களின் ஊடாக பல கோரிக்கைகளை பல்கலைக்கழக மாணவர்கள் வென்றதாக ஜே.வி.பி. யின் மாணவர் சங்கம் சொல்லிக்கொள்கின்றது. உண்மையில், எனது அனுபவம் என்னவெனில், இந்தப் போராட்டங்களின் ஊடாக நாங்கள் ஒரு கோரிக்கையையும் கூட வெற்றிகொள்ளவில்லை. கல்விச் சேவையில் வெட்டுக்களுக்கு ஜே.வி.பி. யே பொறுப்பு என்பதுதான் உண்மை. அண்மையில் அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து யுத்த வரவு செலவுத் திட்டத்திற்கும் அவர்கள் வாக்களித்தனர். அரசாங்கம் நலன்புரி சேவை, சுகாதாரம் மற்றும் கல்விச் சேவையில் இருந்து நிதியை வெட்டி யுத்தத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றது. "மாணவர்கள் மத்தியில் உள்ள பிரதான தடம் ஜே.வி.பி. தான். இதில் இருந்து நாம் மீள வேண்டும். தொழிலாள வர்க்கத்தைப் போலவே அதன் சிங்கள இனவாதம் மாணவர்களையும் பிளவுபடுத்துகின்றது. ஜே.வி.பி. மாணவர்கள் மத்தியில் ஆதரவு இழந்து வருகின்றது. எங்களது சகல பிரச்சினைகளுக்கும் பதிலீட்டைத் தேடவே நான் இங்கு வந்தேன். "சர்வதேச செய்திகளின் படி, உலகம் பூராவும் ஒரு நிலைமை தான். எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உலகம் பூராவும் சகல மக்களையும் பாதித்துள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் நலன்புரி சேவைகள் வெட்டப்படுவதை நாம் காணலாம். உலகம் பூராவும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சோ.ச.க. கூறுவது போல் ஒரு அனைத்துலக சோசலிச இயக்கம் அவசியம். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக போராட்ட வரலாற்றை நான் மதிக்கின்றேன்." |