World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைInternational greetings to the Sri Lankan SEP இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு சர்வதேச வாழ்த்துச் செய்திகள் 21 July 2008 நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) ஒரு பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 40வது ஆண்டை முன்னிட்டு ஜூலை 16 அன்று சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் நடத்திய பொதுக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட வாழ்த்துச் செய்திகளை இங்கு பிரசுரிக்கின்றோம். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடி இயக்கமாகும். லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளைக் காட்டிக்கொடுத்த பின்னர் 1968 ஜூலை 15, 16ம் திகதிகளில் கொழும்பில் நடந்த மாநாட்டில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் மற்றும் யுத்தம் முடிந்த உடனேயும் சோசலிச அனைத்துலகவாதத்துக்காக சக்திவாய்ந்த போராட்டத்தை முன்னெடுத்த ல.ச.ச.க., நீண்ட சீரழிவுக்கு அடிபணிந்தது. இந்த சீரழிவு, 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் ல.ச.ச.க. நுழைந்து கொண்டதுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது. மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மன்டேல் தலைமையில், நான்காம் அகிலத்திற்குள் தலைநீட்டிய சந்தர்ப்பவாத போக்கின் தோற்றம் வரை ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பின் வேர்களை பு.க.க. ஆய்வு செய்தது. இந்த சந்தர்ப்பவாத போக்கு, சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டத்தையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் கைவிட்டது. பப்லோவாதிகளின் செல்வாக்கின் கீழ், ல.ச.ச.க. இலங்கையில் தேசிய சமுதாய சூழ்நிலையின் இனவாத அரசியலுக்கும் பாராளுமன்ற மந்த நிலைக்கும் தன்னை விரைவில் அர்ப்பணித்துக்கொண்டது. ல.ச.ச.க. யின் காட்டிக் கொடுப்பை அடுத்து தோன்றிய அனைத்துப் போக்குகளிலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே பப்லோவாதத்துக்கு எதிரான நா.அ.அ.கு. வின் போராட்டத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு காலப் பரீட்சையில் உறுதியாக நின்றது. கீழ்வரும் வாழ்த்துச் செய்திகள் தெளிவுபடுத்துவது போல், கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முனனெடுத்த நீண்டதும் கடினமானதுமான போராட்டம், குறிப்பாக ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் உள்ள இன்றைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் பொருளாதார நெருக்கடி, இனவாதம் மற்றும் யுத்தம் போன்ற பூகோளப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற நிலையில் அவர்களுக்கு மிகவும் சம்பந்தப்பட்டதாகும். *** அமெரிக்க சோ.ச.க. யின் தேசிய செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தி. அன்பின் தோழர்களுக்கு, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில், உங்களது அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட 40வது ஆண்டு விழாவுக்காக இலங்கையில் உள்ள அனைத்துத் தோழர்களுக்கும் எங்களது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். பிரதான அரசியல் நிகழ்வுகளின் ஆழமான முக்கியத்துவம் கணிசமான காலம் கடந்த பின்னரே தெளிவாகும் சம்பவங்களை அடிக்கடி காணலாம். 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதும் அத்தகைய ஒரு நிகழ்வேயாகும். எப்பொழுதும் சர்வதேச இயக்கங்களின் தீர்க்கமான இடமாக இருந்துவரும் ஒரு நாட்டில் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டமையானது ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியது. லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) ஆழமான சந்தர்ப்பவாத சீரழிவு, 1964 ஜூன் மாதம் பண்டாரநாயக்க அம்மையாரின் கூட்டரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டதில் உச்சக் கட்டத்தை அடைந்தமை, உலகம் பூராவும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை சிதறடிக்குமளவு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுக் காட்டிக்கொடுப்பாக இருந்தது. ல.ச.ச.க. வலதுபக்கம் திரும்பியதை மூடி மறைப்பதில் சர்வதேச பப்லோவாத இயக்கம் பிரதான பாத்திரம் வகித்ததோடு என்.எம். பெரேரா நிதி அமைச்சராக ஆனதை அடுத்து பப்லோவாதிகள் முன்வைத்த விமர்சனங்கள், அவர்கள் அளித்த பதில்களை விட ஆழமான பிரச்சினைகளை எழுப்பியது. இலங்கையின் நிகழ்வுகள் தனிமைப்பட்டவையாக இருக்கவேயில்லை. அவை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் பேரழிவு உண்டாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பவாதத்தின் பொது சர்வதேச இயக்கத்தின் பாகமாக இருந்தன. 1953ல் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துலகக் குழு மாத்திரமே இந்த சந்தர்ப்பவாத முன்நோக்கிலான காட்டிக்கொடுப்பின் கோட்பாட்டு மற்றும் அரசியல் பூர்வீகத்தை தெளிவுபடுத்தும் இயலுமையைக் கொண்டிருந்தது. ல.ச.ச.க. யின் ஒரு பிரிவு தலைமைத்துவத்தில் இருந்து பிரிந்து புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை (பு.ல.ச.ச.க.) ஸ்தாபித்த போதிலும், அந்த அமைப்பு மாபெரும் காட்டிக்கொடுப்பின் மூலங்களை கடுமையாக ஆராய்வது தொடர்பாக அக்கறை காட்டவில்லை என்பது விரைவில் தெளிவாகியது. ஆயினும், அரசியல் மற்றும் கோட்பாட்டுத் தெளிவுக்காக போராடுவதற்காக உறுதிகொண்டிருந்த ஒரு சிறுபான்மை குழு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததோடு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்க முடிவெடுத்ததும் அந்த சக்திகளேயாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக கீர்த்தி பாலசூரிய நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) சவால் செய்யமுடியாத அரசியல் உத்வேகம் மற்றும் உறுதிப்பாட்டினை கட்டியெழுப்புவதில் சாதனை செய்தது. பு.க.க. பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியாக (சோ.ச.க.) பரிணமித்தது. ஆழமான கொள்கைகள் மற்றும் ஒரு அசாதாரணமான அளவிலான அரசியல் தூரதிருஷ்டியில் பு.க.க./சோ.ச.க பண்பிடப்பட்டுள்ளது என்ற உண்மையை அரசியலைக் கற்ற புறநிலை அவதானிகள் எவராலும் நிராகரிக்க முடியாது. அது எடுத்த பல நிலைப்பாடுகளில் மிக முக்கியமான சிலவற்றை மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள்: ஜே.வி.பி. ஒரு புரட்சிகர மார்க்சிய இயக்கமாகக் தன்னைக் காட்டிக்கொண்டிருந்த 1970 களின் முற்பகுதியில் ஜே.வி.பி. யைப் பற்றிய அதன் விமர்சனம்; 1971ல் இந்திய பாகிஸ்தான் யுத்தத்தை அது எதிர்த்தமை; 1972 இனவாத அரசியலமைப்பை அது எதிர்த்தமை; இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இனவாத யுத்தத்திற்கு எதிரான அதன் தொடர்ச்சியான சளைக்காத போராட்டம்; 1987-1990 களில் இலங்கையில் இந்தியா தலையிட்டதை எதிர்த்தமை. புலிகளின் தேசியவாத அரசியல் பற்றிய சமரசமற்ற கொள்கைப்பிடிப்பான விமர்சனத்துடன், யுத்தத்தை இடைவிடாமல் எதிர்க்கவும் மற்றும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வலிமையுடன் பாதுகாக்கவும் இலங்கைப் பகுதி கொண்டுள்ள இயலுமை உண்மையில் குறிப்பிடத்தக்கதும் உத்வேகமளிப்பதுமாகும். இந்த வேலைகளில் பெரும்பாலானவை இடைவிடாத அடக்குமுறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் உட்பட, மிகவும் கடினமான சரீர நிலைமைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டவை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சோசலிச போராட்டத்திற்கான தியாகத்திற்கு பு.க.க./சோ.ச.க. தமது பங்களிப்பை செய்துள்ளது. இலங்கையில் பு.க.க./சோ.ச.க. வலிமையுடன் அனைத்துலகவாதத்தில் திசையமைவு கொண்டுள்ளமை அதன் சாதனைகளில் மிகவும் முக்கியமானதாக இருப்பது உணர்ச்சியைத் தூண்டுகிறது. உண்மையில், எப்போதும் இருந்துகொண்டுள்ள தேசிய சந்தர்ப்பவாதத்துக்கு அடிபணியச் செய்யும் அழுத்தங்களை எதிர்த்து நிற்கும் இயலுமை கட்சிக்கு இருப்பதாலேயே அது இந்த அனைத்துலகவாத தூரநோக்கை பேணிக்காக்கின்றது. 1985ல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் துரோகத்திற்கு எதிரான அரசியல் கொள்கையின் கோட்டையாக பு.க.க. தலைமைத்துவம் தோன்றியது. அந்த தீர்க்கமான காலகட்டத்தில் தோழர் கீர்த்தியுடன் வேலை செய்தவர்களில் எவராலும் அவர் இட்டுநிரப்பிய தலைசிறந்த பாத்திரத்தை மறக்க முடியாது. 1987 டிசம்பர் 18, பு.க.க. மற்றும் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் நிச்சயமான ஒரு கறுப்பு நாளாகும். 39வது வயதில் கீர்த்தி அகால மரணமாவார் என்பதை இலங்கையிலும் மற்றும் அனைத்துலகக் குழுவிலும் எந்தவிதத்திலும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. இன்னமும் தோழர் விஜே டயஸ் மற்றும் பு.க.க. யின் அரசியல் தலைமைத்துவத்தில் உள்ள அவரது தோழர்களும் இந்த சிரமமான நிலைமையிலும் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தை தொடர்வதிலும் அபிவிருத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். உலக முதலாளித்துவ நிலைமையில் பிரமாண்டமான மாற்றங்களின் எதிரில் இலங்கை சோ.ச.க. 40வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றது. இத்தகைய மாற்றங்களின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்வதற்கு, உங்களது பிரதான அரசியல் பகைவர்களாக இருக்கும் ல.ச.ச.க., இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி, எண்ணற்ற பப்லோவாத மற்றும் மத்தியவாத போக்குகள் மற்றும் தமிழ் தேசியவாத அமைப்புக்கள் போன்றவற்றின் இன்றைய தலைவிதியை மட்டுமே ஒருவர் ஆராயவேண்டும். இந்த சகல அமைப்புக்களும், அவை இப்போதும் இருந்தாலும், ஆழமாகவும் திருத்தமுடியதவாறும் அவமதிப்புக்குள்ளாகியுள்ளன. தமது குற்றவியல் காட்டிக்கொடுப்புக்களை மூடிமறைக்கும் எதிர்பார்ப்புடன் மட்டுமே கடந்த 40 ஆண்டுகளை அவர்களால் வெட்கத்துடன் திரும்பிப் பார்க்க முடியும். மறுபுறுத்தில், சோசலிச சமத்துவக் கட்சியால் தற்பெருமையுடனும் எதிர்காலம் பற்றிய மிகப்பெரும் நம்பிக்கையுடனும் அதன் வேலைகளை நோக்க முடியும். இந்தியத் துணைக்கண்டத்தில் அனைத்துலக புரட்சிகர சோசலிசத்திற்கான கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் தூய்மையான கட்சி நீங்கள் கட்டியெழுப்பும் கட்சியே ஆகும். புரட்சிகர வாழ்த்துக்களுடன், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழுவின் சார்பில், டேவிட் நோர்த் * * * ஆஸ்திரேலிய சோ.ச.க. யின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் அனுப்பிய செய்தி. அன்பின் தோழர் விஜே, ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 40வது ஆண்டு நிறைவின் பேரில் உங்களுக்கும் இலங்கையில் உள்ள அனைத்துத் தோழர்களுக்கும் இதயம் நிறைந்த புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். கீர்த்தி பாலசூரிய, வில்பிரட் பெரேரா (ஸ்பைக்) மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபகர்கள் அனைவராலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எங்களது முழு இயக்கத்திற்கும் தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1972ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பகுதியாக சோசலிச தொழிலாளர் கழகத்தை ஸ்தாபித்த காரியாளர்களுக்கு கல்வியூட்டுவதிலும் மற்றும் அப்போதிருந்து கட்சியில் இணைந்துகொள்ள வந்த உறுப்பினர்களை பயிற்றுவிப்பதிலும் அவர்கள் ஆற்றிய பாத்திரம் சிறியதல்ல. பு.க.க. மற்றும் இப்போது சோ.ச.க. முன்னெடுத்த போராட்டங்களும் அனுபவங்களும் எமது உலக இயக்கத்திற்கு எப்போதும் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அவர்கள் போக்குகள் மற்றும் நடைமுறைகள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சினர். அந்தப் போக்குகளும் நடைமுறைகளும் எங்கும் காணப்பட்டாலும் அவை முதலில் இலங்கையில் இருந்தே தோன்றின. 1998ல் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் அபிவிருத்தியின் ஊடாக புதிய வழிகளில் எங்களது கூட்டுழைப்பை அபிவிருத்தி செய்துகொள்ள முடிந்துள்ளது. அவை முன்னர் சாத்தியப்படாத வழிகளாகும். நாங்கள் இலங்கை பகுதியின் ஸ்தாபிதத்தைக் கொண்டாடும் போது, எங்களது கட்சியின் வேலைகளை எப்போதும் பண்புமயப்படுத்தும் கொள்கைக்கான போராட்டத்தின் புறநிலை வரலாற்று முக்கியத்துவம் மேலும் தெளிவாகின்றது. எப்போதும் எல்லா இடங்களிலும் தேசியவாத முன்நோக்கிலேயே நின்றுகொண்டுள்ள அனைத்து விதமான குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராக, மார்க்சியத்தின் அடித்தளமான பாட்டாளிவர்க்க அனைத்துலகவாதத்துக்கான போராட்டமே இதன் சாரம் ஆகும். உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் எதிர்கொள்கின்ற யுத்தம், உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை, தொடர்ந்தும் வளர்ந்துகொண்டிருக்கும் பூகோள பொருளாதார வீழ்ச்சி அச்சுறுத்தல், காலநிலை மாற்றம் போன்ற சகலவிதமான பிரச்சினைகளில் ஒன்றையேனும் ஒரு அனைத்துலக வேலைத்திட்டம் மற்றும் முன்நோக்கு இன்றி தீர்க்க முடியாமல் இருப்பதில் இந்தப் போராட்டத்தின் அர்த்தத்தைக் காணமுடியும். உலக முதலாளித்துவத்தின் யுத்தத்திற்குப் பிந்திய மீள் ஸ்தாபிதம் இரண்டு மைய அடித்தளங்களில் தங்கியிருக்கின்றது: அவை சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்ப் புரட்சி பாத்திரமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார பலமும் ஆகும். அந்த இரு தூண்களிலும் முதலாவது 1991-92ல் வீழ்ச்சியடைந்தது. இரண்டாவது பொறிந்து விழுந்துகொண்டிருக்கின்றது. எப்பொழுதும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் முக்கியத்துவம் இதுவேயாகும் -1930களின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து தோன்றியுள்ள மிகப் பெரிய நெருக்கடி. ஒருமுறை உலக முதலாளித்துவ ஒழுங்கை ஸ்தாபித்த அமெரிக்க முதலாளித்துவம், இப்போது ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் மிகப்பெரும் காரணியாக உள்ளது. இது எதிரில் ஒரு புதிய புரட்சிகர போராட்ட காலகட்டம் இருந்துகொண்டுள்ளதை குறிக்கின்றது. கடந்த 40 ஆண்டுகளும் அதற்கான இன்றியமையாத தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் நாங்கள் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க அழைக்கப்படுவோம். எதிர்காலத்தில் உங்களுடன் எங்களுடைய கூட்டுழைப்பை ஆழப்படுத்திக்கொள்ள முயற்சிப்போம். எங்களது அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மீண்டும் ஒரு முறை இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிக் பீம்ஸ், தேசிய செயலாளர், சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) * * * ஜேர்மனி மற்றும் பிரான்சில் உள்ள சோ.ச.க. யின் புலம்பெயர்ந்தவர்களின் செய்தி. அன்பின் தோழர்களுக்கு, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) 40வது ஆண்டு விழாவுக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்களை அனுப்புவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு நிறைவு ஆசிய துணைக் கண்டத்தில் அனைத்துலக மார்க்சியத்துக்கான இடைவிடாத போராட்டத்தின் மைல் கல்லாகும். இலங்கையின் ஒரே அரசியல் கட்சி என்ற வகையில், இந்த ஆண்டு விழாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள சக சிந்தனையாளர்களுடன் சேர்ந்து நீங்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு புதிய யுகத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றது. இந்தியத் துணைக் கண்டத்தில் முதலாளித்துவ நெருக்கடி உக்கிரமடைகின்றமையும் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரமான தலைமையின் அவசியமும் அரசியல் போராட்டத்தை புதிய கட்டத்திற்கு எடுத்துச்செல்ல எங்களை நெருக்குகின்றன. கடந்த மாதம், ஐரோப்பாவில் மில்லியன் கணக்கானவர்களின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய 1968 அரசியல் எழுச்சியின் ஆண்டு நிறைவில் நாம் தலையீடு செய்தோம். ஏழு ஆண்டுகளில் நீண்ட இந்த எழுச்சி பல சந்தர்ப்பங்களில் புரட்சிகர பண்பை எடுத்தது. அது அரசாங்கங்களை பதவி விலகச் செய்யவும், சர்வாதிகாரத்தை கவிழ்க்கவும் நெருக்கியதோடு முழு முதலாளித்துவ அமைப்பின் அடித்தளத்தையே உலுக்கியது. இதே காலத்தில் தான் 10,000 மைல்களுக்கு அப்பால் சோ.ச.க. யின் முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பின் மத்தியில், பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டமையானது அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாக இருந்தது. தீவிர நெருக்கடியான அரசியல் நிலைமைகளின் கீழ், ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்புக்கு எதிராகவும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்கு எதிராகவும் இந்தியத் துணைக்கண்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க பு.க.க. போராடியது. நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் உறுதியான நிலைப்பாட்டை கட்சி எடுத்தது. பங்களாதேஷில் இந்திய படையெடுப்புக்கு எதிராக சுயாதீனமான தொழிலாள வர்க்க நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்வதிலும் மற்றும் அனைத்துலகக் குழுவை பாதுகாக்க தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொண்டதிலும் காலம் சென்ற கீர்த்தி பாலசூரியவின் தலைமைத்துவத்தின் கீழ் பு.க.க. செய்த பங்களிப்பு துணைக்கண்டத்தில் தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் சிங்கள, தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான சோ.ச.க. யின் போராட்டம், இலங்கையில் நீண்டகால உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்ட பிரதானமானதாகும். பிரிவினைவாதத்திற்கும் தேசியவாதத்திற்கும் எதிரான உங்களது போராட்டத்தின் ஊடாக, அரசியல் ரீதியில் நனவான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நம்பகமான மாற்றீடாக இந்தக் கட்சி கருதப்படுகிறது. துணைக் கண்டத்தில் சோசலிசத்துக்கான போராட்டத்தில் இந்த ஆண்டு விழாவானது மேலும் வாய்ப்புக்களை திறந்துவிடும் என நாம் நம்புகிறோம். உளங்கனிந்த வாழ்த்துக்களுடன் ஞானா * * * இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்கள் அனுப்பிய செய்தி. புதுப்பிக்கப்பட்ட யுத்தம் தீவின் வடக்கை தெற்கில் இருந்து துண்டித்துள்ளதால் அவர்களால் கொழும்பில் நடந்த கூட்டத்திற்கு வருகை தரமுடியாமல் போனது. அன்பின் தோழர்களுக்கு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தோழர் விஜே டயஸ் மற்றும் ஏனைய தோழர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தோழர்களின் சார்பில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமையடைகின்றேன். உடல் நிலை குறைவு காரணமாக எனது செய்தியை சுருக்கிக்கொள்ள நேரிட்டதையிட்டும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களில் எவருக்கும் கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியாமல் போனதையிட்டும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வடக்கில் வசிக்கும் மக்கள் அவர்களது பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் ஏனைய உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமது சொத்துக்களை இழந்துள்ளதோடு போதுமான உணவு இன்றி பயங்கரமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு சிறை வாழ்க்கை போன்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக சோ.ச.க. யை கட்டியெழுப்பாமல் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கிடையாது என்பதில் அசையா உறுதியுடன் இந்தச் செய்தியை எழுதுகிறேன். தொழிலாளர் வர்க்கத்திற்கு பாதை வகுக்கும் பொறுப்பை வரலாறு எங்களிடம் ஒப்படைத்துள்ளது. அதற்கான பலமும் எங்களுக்கு உள்ளது. 40 ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் அனுபவங்களும் படிப்பினைகளும் எங்களிடம் உள்ளன. தொழிலாள வர்க்கம் அனைத்து துரோகத் தலைமைகளுக்கு எதிராகவும் அரசியல் சுயாதீனத்திற்குப் போராட வேண்டும் என்பதையே இந்த அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். சோசலிச சமத்துவக் கட்சி வாழ்க! நான்காம் அகிலம் வாழ்க! தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவுகள் நீடூழி வாழ்க! யாழ்ப்பாண தோழர்களின் சார்பில், எஸ். சந்திரசேகரன் * * * இந்தியாவில் சோசலிச தொழிலாளர் கழகம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி. அன்பின் தோழர்களுக்கு, இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஒற்றுமை கொண்டுள்ள சோசலிச தொழிலாளர் கழகம், சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு இதயம் நிறைந்த புரட்சிகர வாழ்த்துக்களை அனுப்பி வைக்கின்றது. கடந்த நான்கு தசாப்தங்களாக, பப்லோவாத சந்தர்ப்பவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் எதிரில் மட்டுமன்றி சரீர ரீதியான ஆபத்து மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் பு.க.க./சோ.ச.க. யின் உறுதியான அரசியல் இருப்பானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் சோசலிச அனைத்துலகவாதத்துக்காக நா.அ.அ.கு. முன்னெடுத்த போராட்டத்தை மெய்ப்பித்துக் காட்டுகிறது. தெற்காசியாவில் உள்ள உழைக்கும் மக்களின் பெரும்பான்மையானவர்களின் பயங்கரமான சமூக நிலைமைகளும் மற்றும் திகைப்பூட்டும் சமூகத் துருவப்படுத்தலும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்ற பெயரளவான சுதந்திரத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றன. தெற்காசியாவில் ஆறு தசாப்த கால முதலாளித்துவ ஆட்சி, 1947ல் ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினையின் பிற்போக்கு உற்பத்திகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையிலான மோதலில் பிராந்தியத்தை அணுவாயுத யுத்தத்தின் விளிம்புக்குக் கூட தள்ளிச் சென்றது. "உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில்" "பொருளாதார அற்புதத்தை" பற்றி பிதற்றிக்கொண்டு திரிந்த ஊழல் நிறைந்த இந்திய அரசியல்வாதிகள், 400 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்ற நிலையில் ஒரு வெடிக்கும் நிலையில் உள்ள சமூக நேரக் குண்டின் மீது அமர்ந்துகொண்டுள்ளனர். எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் அவர்களுக்கு தயக்கம் கிடையாது. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பர்மாவில் தற்போது உள்ள இராணுவ ஆட்சிகள், தமது நாடுகளில் வெடிக்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளை தணிக்க உள்ளூர் ஆளும் கும்பல்களுக்கு வேறு வழி கிடையாது என்பதை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. இலங்கை முதலாளித்துவத்தின் இனவாத அரசியல், ஆதிக்கத்திற்கும் மற்றும் இறுதிக் கட்டமாக 1983ல் உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கும் வழி வகுத்தது, ல.ச.ச.க. ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காட்டிக்கொடுத்து 1964ல் அதன் தலைவர்கள் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்து கொண்டமையே ஆகும். இந்தியாவில் ஸ்டாலினிச மற்றும் மாவோவாதிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் ல.ச.ச.க. காட்டிக்கொடுப்பு பங்களிப்பு செய்துள்ளது. இந்திய ஸ்டாலினிஸ்டுகள் இந்திய முதலாளித்துவ ஆட்சியை தாங்கிப் பிடிப்பதில் தீர்க்கமான முண்டுகோலாக இருந்து வருகின்றனர். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட உடன், அவர்கள் மேலும் மேலும் வலது பக்கம் நகர்ந்ததோடு முதலாளித்துவ திறந்த பொருளாதார கொள்கையை அணைத்துக் கொண்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் மூலோபாய கூட்டணியை அவர்கள் எதிர்ப்பது, தேசியவாத அக்கறைகளின் அடிப்படையிலேயே ஆகும். இந்திய ஸ்தாபனத்தின் ஒரு பாகம் என்ற வகையில், நெருக்கடி ஆட்கொண்டுள்ள இராணுவவாத அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்வது இந்தியாவின் சொந்த பூகோள அரசியல் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அவர்கள் பீதியடைகின்றனர். ல.ச.ச.க. காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்தில், பு.க.க. தலைவர்கள் இந்திய துணைக் கண்டம் பூராவும் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தனர். சோ.ச.க. அறிக்கை ஒன்று பிரகடனம் செய்வதாவது: "இலங்கை தொழிலாளர்களின் உறவுகளை கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனத்தில் அன்றி, பிராந்தியம் பூராவும் மற்றும் உலகிலும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளின் மத்தியிலேயே காண முடியும். பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை முன்னேற்றும் வழிமுறையாக தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியங்களுக்காக சோ.ச.க. போராடுகின்றது." உண்மையில், சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக சோ.ச.க. யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் முன்னெடுத்த கடினமானதும் நீண்டதுமான அரசியல் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்வதற்கு இந்தியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் நிறையவே உள்ளன. இந்தியாவில் உள்ள நாம், மார்க்சிய அடிப்படைக்கான உங்களது உறுதியான போராட்டத்தில் இருந்து தொடர்ந்தும் கற்றுக்கொள்வதோடு தெற்காசியா சோசலிச குடியரசு ஒன்றியங்களுக்கான போராட்டத்தில் உங்களுடன் ஒத்துழைப்போம் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம். தோழமையுடன், இந்தியவில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் சார்பில், அருண் குமார் |