World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பொது வேலை நிறுத்தம் பற்றி இலங்கை தொழிலாளர்களுடன் பேசினர் By our correspondents இலங்கையில் வியாழக் கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது உலக சோசலிச வலைத் தள (WSWS) குழுவினர் தலைநகர் கொழும்பு, கண்டி நகரம், மத்திய பெருந்தோட்ட பிரதேச நகரங்களான ஹட்டன் மற்றும் பண்டாரவளை மற்றும் வடக்கில் யாழ்க்குடாவில் யாழ்ப்பாண நகரிலும் உள்ள தொழிலாளர்களுடன் உரையாடினர். அநேக தொழிற்சங்கங்கள் எதிர்க் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (யூ.என்.பி) சார்பானவை. இவை எந்தவொரு கூட்டத்தையோ அல்லது மறியல் போராட்டங்களையோ நடத்தியிராத பட்சத்தில், வெளிநடப்புச் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பற்றி மதிப்பிடுவது கடினமான காரியமாக இருந்தது. அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அணிதிரட்டியதாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை இந்த வேலை நிறுத்தம் கீழறுப்பதாக கண்டனம் செய்ததாலும் தொழிலாளர்கள் அச்சுறுத்தலை உணர்ந்தனர். அநேக தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்ய குறைந்தளவே முயற்சி செய்திருந்தமை பற்றியும் வேலை நிறுத்தக்காரர்கள் தொழில் வழங்குனரின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என உத்தரவாதமெதனையும் வழங்காமை குறித்தும் பெரிதும் ஆத்திரமடைந்திருந்தனர். தூரதிருஷ்டியுள்ள பலர், தொழிற்சங்கங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரத்துக்கும், ஜே.வி.பி. யும் யூ.என்.பி. யும் யுத்தத்தை ஆதரிக்கின்றன என்ற உண்மைக்கும் இடையிலான தொடர்பை கிரகித்துக் கொண்டனர். பேட்டி வழங்கியவர்களில் அனைவரும் துரிதமாக அதிகரித்துவரும் விலைவாசியின் விளைவாக தாம் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான நிலைமை வளர்ச்சியடைவது பற்றி பேசினர். எண்ணெய், போக்குவரத்து மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் ராக்கட் வேகத்தில் அதிகரிப்பதுடன் சேர்த்து, உத்தியோகபூர்வ பணவீக்கம் 30 வீதத்தை எட்டியுள்ளது. சர்வதேச விலை அதிகரிப்பு நிச்சயமாக பங்களிப்பு செய்திருக்கும் அதே வேளை, யுத்தம் மற்றும் அதனுடன் இணைந்த இராணுவச் செலவு அதிகரிப்பும் பணவீக்கம் அதிகரிப்பதற்கு பிரதான காரணிகளாகும். பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டமை மானியங்கள், நலன்புரி சேவை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளிலும் வெட்டுக்களை பெறுபேறாக்கியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள் "இலங்கை: சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்கு போராடுவதற்கான ஒரு சோசலிச வேலைத் திட்டம்" என்ற தலைப்பிலான அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர். யுத்தத்தை எதிர்ப்பதற்கான ஒரு அரசியல் வேலைத் திட்டம் இன்றி தொழிலாளர் வர்க்கத்தால் மிக அடிப்படையான உரிமைகளையும் நிலைமைகளையும் கூட பாதுகாத்துக்கொள்ள முடியாது என அந்த அறிக்கை விளக்கியது. குறிப்பாக அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை ஜே.வி.பி. ஆதரிப்பதன் காரணமாக, தற்போதைய தொழிற்சங்கத் தலைமைத்துவம் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் தவிர்க்க முடியாமல் அடிபணியும் என அது எச்சரித்தது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டிகளை நாம் கீழே பிரசுரிக்கின்றோம். தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாகாமல் பாதுகாப்பதன் பேரில் அவர்களின் பெயர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களே வேலை நிறுத்தத்தில் அதிகளவு பங்குபற்றியிருந்தனர். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமிழ் பேசுபவர்களாகவும் ஜே.வி.பி. யின் சிங்களப் பேரினவாத அரசியலையும் யுத்தத்திற்கான அதன் ஆதரவையும் எதிர்ப்பவர்களாக இருக்கும் நிலையில், இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். எவ்வாறெனினும், பேட்டி வழங்கியவர்கள் ஜே.வி.பி. க்காக அன்றி தமது சொந்த தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணிக்கும் (ம.ம.மு) எதிராக வேலையை பகிஷ்கரிப்புச் செய்தனர் என்பதை தெளிவுபடுத்தினர். ஹட்டனில் ஒரு தேயிலை தோட்டத்தை சேர்ந்த தொழிலாளி, தான் தனது சொந்த தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டாலும் அதை மீறியமை பற்றி விளக்கினார். "ஒரு இ.தொ.கா. உத்தியோகத்தர் எமது தோட்டத்திற்குள் வந்து இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற வேண்டாம் என எமக்குக் கூறினார். இ.தொ.கா. உப தலைவரும் அரசாங்கத்தின் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கூட அரசாங்க தொலைக்காட்சி சேவையூடாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும் இங்கு சகல தொழிற்சங்கங்களையும் சார்ந்த தொழிலாளர்கள் அந்த அழைப்புக்கு செவிமடுக்கவில்லை. "எமக்கு நல்ல சம்பளம் வேண்டும். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் எமது நாளாந்த உணவை பெறுவதற்கு 500 ரூபா (5 அமெரிக்க டொலர்) கூட போதாது. ஆனால், நாளாந்தம் நாம் 200 ரூபாவையும் அத்தோடு 90 ரூபாவை ஊக்குவிப்புப் பணமாகவும் பெறுகின்றோம். இந்த அற்ப சம்பளத்தில் நாம் எப்படி வாழ்வது? ஆனால் எமது தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சர் பதவிகளை பெற்று ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். அவர்கள் இந்த அரசாங்கத்தையே பாதுகாக்க உழைக்கின்றார்கள். எங்களை அல்ல. "எமக்கு ஜே.வி.பி. யில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை. அவர்கள் எப்போதும் இரட்டை வேடம் போடுபவர்கள். அவர்கள் அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை ஆதரிப்பதில் முன்னணியில் நிற்பவர்கள். (ஜனாதிபதி மஹிந்த) இராஜபக்ஷ இந்த யுத்தத்திற்கு பெருமளவு பணத்தை செலவிடுகின்றார். இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அப்போது அந்த பணத்தை அரசாங்கத்தால் எமது சம்பளத்தை அதிகரிக்க பயன்படுத்த முடியும்." பண்டாரவளை அயிஸ்லபி தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, அங்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமைக்கு அற்ப சம்பளத்தில் அவர்களால் வாழ முடியாததே காரணம் என தெரிவித்தார். தான் முன்னர் ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் வேலை பார்த்ததாகவும் தனது பிள்ளைகளை பிரிந்திருக்க முடியாமையினாலேயே இந்த தோட்டத்தில் தற்போது வேலை செய்வதாகவும் அப்பெண் தொழிலாளி கூறினார். "இங்கு வேலை செய்வது மிகவும் கடினம் மற்றும் தோட்டத்தில் நாம் வேலை பார்ப்பதால் மோசமாகவும் நடத்தப்படுகிறோம். முன்பு நாம் ஜே.வி.பி. நல்லது என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கு அர்சாங்கத்திற்கு ஆதரவளித்தனர். இந்தப் போரினால் நாம் அனைவரும் சிரமப்படுகிறோம். எனெனில் இந்தப் போர் முடிவடையும் ஒன்றல்ல." "இரு பகுதியினரும் (அரசாங்கமும் புலிகளும்) எதிர் பகுதியினரின் இறப்பு எண்ணிக்கையை கணக்கிட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்த உயிர்களை மதிக்காதவர்கள், பொது மக்களது பிரச்சினையை தீர்த்து வைக்கவா போகிறார்கள்? என அவர் கேட்டார். வேறு பல பிரதேசங்களிலும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைமைகள் மீது தமது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தினர். கடந்த இரு வருடங்களாக, ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்து, யுத்தத்துக்கு முதலிடம் கொடுத்து, தொழிலை காக்கவும் சம்பள அதிகரிப்புக்கும் முன்னெடுத்த பிரதான வேலை நிறுத்தங்களுக்கு முடிவுகட்ட இணங்கின. கண்டி நகரில் அரசாங்கத்திற்கு சொந்தமான போக்குவரத்து சபையின் யட்டிநுவர டிப்போவை சேர்ந்த ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது: "இங்குள்ள தொழிலாளர்கள் எதுவித தயக்கமும் இன்றி வேலை நிறுத்தம் செய்ய தயாராயிருந்தனர். ஆனால் சில அரசாங்க சார்பான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை குழப்பியடித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்க தலைமைகள் வேலை நிறுத்தத்தை தகர்ப்பதாக பயமுறுத்தினர். நாம் மிகவும் மோசமான சம்பள பிரச்சினையை எதிர்கொள்கிறோம். எமக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படாது தவனை முறையில் தான் வழங்கப்படுகிறது. அண்மையில் அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட வாழ்க்கைச் செலவு கொடுப்பணவு கூட இன்னமும் வழங்கப்படவில்லை. "ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்காததுடன் தமது சொந்த அரசியல் இலாபத்துக்கான சில கோரிக்கைகளை முன்வைக்கவும் முயற்சித்தன. அவர்கள் சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கையை கைவிடத் தயாராகின்றார்கள் அல்லது தயக்கம் காட்டுகின்றார்கள் என்பது தெளிவு". கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் உள்ள 650 உத்தியோகத்தர்களில் கல்விசாரா ஊழியர்கள் 10 பேருக்கும் குறைவானவர்களே வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். அவர்களுக்கு ஜே.வி.பி. மீது நம்பிக்கை இல்லாமையே இதற்குக் காரணம். ஒரு பல்கலைக்கழக ஊழியர் வேலை நிறுத்தம் வெற்றிபெறாததை பற்றி கவலை தெரிவித்தார். வாழ்க்கைத் தர செலவு அதிகரிப்புக்கான பிரதான காரணம் யுத்தமேயாகும் என அவர் தெரிவித்தார். "அரசாங்கம் எமக்கு எதிராக யுத்தத்தை பயன்படுத்திக்கொள்கிறது" என அவர் கண்டனம் தெரிவித்தார். "கெளரவமான சமாதானத்துக்காக" செயற்படுவதாக உறுதியளித்ததால் தான் 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு வாக்களித்ததாக அவர் தெரிவித்தார். "யூ.என்.பி. யின் சமாதான நடவடிக்கையிலும் பார்க்க அது சிறந்ததாயிருக்கலாமென நான் நினைத்தேன். ஆனால் இதற்கு பதிலாக இராஜபக்ஷ ஜே.வி.பி. யின் உதவியுடன் பதவிக்கு வந்த பின் போரை தொடுத்தார். ஆகையால்தான் தொழிலாளர்கள் சுதந்திரமாக எந்தவொரு அரசியல் கட்சியையும் நம்பாது செயற்படுதல் வேண்டும். தொழிற்சங்கத் தலைமகளையோ ஜே.வி.பி. யையோ நாம் நம்பமுடியாது. கடந்த காலத்தில் இவர்களெல்லாம் எம்மை காட்டிக்கொடுத்து விட்டார்கள்." கொழும்பிலுள்ள ஒரு அரசாங்க பாடசாலை ஆசிரியர், ஒரு பெரிய சம்பள உயர்வு தேவைப்பட்ட போதிலும் தாம்மால் வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற முடியாததையிட்டு திகைப்படைந்ததாக கூறினார். ஆசிரியர்களை அணிதிரட்ட எந்தவொரு ஆர்வமும் காட்டாத தொழிற்சங்க தலைவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டினார். "எந்தவொரு நபரோ அமைப்புக்களோ இந்த வேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்வதையிட்டு எம்மை சந்திக்கவில்லை. அரசாங்கம் ஒரு நச்சுத்தனமான பிரச்சாரத்தை வேலை நிறுத்தத்திற்கு எதிராக தொடுத்தபோது நாம் எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்கான பொறுப்பை ஏற்க ஒருவரும் இருக்கவில்லை. உண்மையில் நாம் வேலையை இழப்போமோ என்ற அச்சத்திலிருந்தோம்." கொழும்புக்கு அருகில் இரத்மலானையில் உள்ள புகையிரத வேலைத்தள ஊழியர் ஒருவர் இதே போன்ற மன நிலையை வெளிப்படுத்துகிறார். "எனது மாத சம்பளம் ஏறத்தாள 19,500 ரூபா மட்டுமே. அதுவும் கூட பல்வேறு கடன்களுக்கு கழிக்கப்பட்டதும் குறைந்துவிடும். எனது குடும்பத்துக்கு போதுமானளவு வருமானத்தை நான் பெறவில்லை. எமக்கு வேலை நிறுத்தம் செய்யும் தேவை உண்டு. ஆனால் தொழிற்சங்கங்கள் எமது வேலைத்தளத்தில் எதையும் ஒழுங்கு செய்யவில்லை." தனது வேலைத்தளத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஜே.வி.பி. மீது எந்த நம்பிக்கையுமே கிடையாது என அவர் தெரிவித்தார். "கடந்த ஆகஸ்ட்டில் எமது வேலை நேரத்தை நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலமாக குறைக்க போராடினோம். ஆனால் ஜே.வி.பி. அதை காட்டிக் கொடுத்துவிட்டது." அவர் அரசாங்கத்தின் யுத்தத்தை எதிர்த்தார். "பெருந்தொகையான பொது மக்கள் அப்பிரதேசங்களில் (வடக்கில் யுத்த பிரதேசத்தில்) வாழ்கின்றார்கள். எல்லோருமே புலிகளின் அங்கத்தவர்கள் அல்ல. அரசாங்கத்தின் குண்டு வீச்சுக்களால் பெருந்தொகையானவர்கள் காயமடைந்தும் உயிரிழந்தும் உள்ளனர்" என அவர் கூறினார். கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி பெண் சிற்றூழியர் ஒருவர், தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது ஏன் என விளக்கினார். "எல்லா பொருட்களுமே தாங்க முடியாத மட்டத்தில் விலை அதிகரித்துள்ளன. ஒவ்வொரு மாதமும் நான் 5,000 ரூபா அளவு கடன்பட வேண்டியுள்ளது. சில்லறைக் கடைக்கு மாத முடிவில் பணம் கட்டிவிட்டு மீண்டும் அடுத்த மாதத்துக்கு கடனுக்கு வாங்க வேண்டியுள்ளது." "எமக்காக ஏதாவது செய்யக்கூடும் என்று நினைத்து நான் மஹிந்த இராஜபக்ஷவுக்கு வாக்களித்தேன். என்றாலும் இப்போது அது ஒரு மாயை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் கடக்கும் போது நிலைமை மேலும் மோசமாகிறது. தற்போது நான் யூ.என்.பி. க்கும் இந்த அரசாங்கத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் காணவில்லை. நாம் ஒரு சிறிய சம்பள உயர்வைக் கோரினாலும் அவர்கள் யுத்தத்தைக் காரணம் காட்டி அதை நிராகரிக்கின்றார்கள். ஆனால் அரசியல்வாதிகளும் உயர் மட்ட அதிகாரிகளும் தமது சம்பளத்தை பலமடங்குகளாக அதிகரித்துக்கொள்கின்றனர். "இந்த யுத்தத்துக்காக தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினை எம்மால் சுமக்க முடியாதுள்ளது. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். அரசாங்கம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் நாம் எல்லா தொழிலாளர்களது ஆதரவுடன் ஒரு பெரும் போராட்டத்திற்கு செல்ல வேண்டும். அரசியல் விவகாரங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியாது. ஆனால், நீங்கள் கூறியதன் பின், தொழிலாளர்கள் அதிலும் கவனத்தை செலுத்துதல் அவசியம் என நினைக்கின்றேன். உங்கள் துண்டுப் பிரசுரத்தை நான் வாசிப்பேன்." வடக்கு நகரமான யாழ்ப்பாணமானது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் மத்தியில் ஏறத்தாழ இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கமும் புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்பினும் எந்தவொரு ஆசிரியரும் அதில் பங்குபற்றவில்லை. ஒரு சிறு அளவினரான மருத்துவ சார்பற்ற ஆஸ்பத்திரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். வடக்கில் போர் விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் நகரிலும் சுற்றுப் புறங்களிலும் படையினர் பரந்த ரீதியில் நிலை கொண்டுள்ளனர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் விளக்கியதாவது: "வேலை நிறுத்தம் நியாயமானது. ஆனால் வடக்கிலுள்ள நாம் வேலை நிறுத்தங்களில் ஈடுபட முடியாது. அதுவே இங்குள்ள நிலைமையாகும். நாம் இராணுவ ஒடுக்குமுறையின் கீழ் வாழ்கின்றோம். நாம் வேலைக்கு சமூகமளிக்காமல் இருந்தால் எங்களை வேறு விதமாக கணிப்பார்கள். எமக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் கிடையாது. தொழிற்சங்கங்கள் எம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. அந்த தலைமைகள் தமது சுய நலன்களையே பார்த்துக்கொள்வார்கள்." இன்னுமொரு ஆசிரியர் கூறியதாவது: "நாம் மிக கொடிய நிலைமையில் வாழ்கிறோம். முன்னர் நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையாக அதனை குறைத்துள்ளனர். அத்துடன் உணவின் தரமும் குறைக்கப்பட்டுள்ளது. அநேகமானவர்கள் கறி இன்றி வெறும் ரொட்டியை மட்டும் உண்கின்றனர். நாங்கள் தரம் குறைந்த ஆடைகளையே அணிகின்றோம். அரசாங்கம் சம்பளத்தை அதிகரித்தாலும் கூட விலைவாசிகளும் மேலும் உயரும். எம்மை விட வறியவர்களே மேலும் மோசமாக பாதிப்புக்குள்ளாவர். அரசாங்கம் போரை நிறுத்த வேண்டும். எமக்கு சமாதானம் தேவை." |