World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி: 6

இனவாத யுத்தம் நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டது

விஜே டயஸ்

Use this version to print | Send this link by email | Email the author

SLFP, சமசமாஜ, கம்யூனிச கட்சிகளின் கூட்டரசாங்கத்தினால் 1972ல் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தைத் தூண்டி ஆரம்பிக்கப்பட்ட யுத்தத் திட்டம், அதில் இருந்து 11 ஆண்டுகளின் பின்னர் 1983 கறுப்பு ஜூலை மக்கள் படுகொலைகளுடன் ஒரு பூரண யுத்தமாக நடைமுறையில் பரிணாமம் கண்டது.

இந்த இனவாத யுத்தத்திற்காக யூ.என்.பி.அரசாங்கம் ஐந்து முன்னணிகளைத் தொடக்கி வைத்தது.

01. யூ.என்.பி. 1978 அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆறாவது திருத்தத்தை கொணர்ந்து நிறைவேற்றியதன் மூலம் தமிழர் பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவது.

02. தேசிய பாதுகாப்பு அமைச்சினை நிறுவி இராணுவத்தினைப் பலப்படுத்துவது.

03. அன்று 35 ஆண்டுகளை கடந்துவிட்டிருந்த சுதந்திர ஆட்சிமுறை எனப்படுவதன் கீழ், முதலாளித்துவ ஆட்சியாளர்களால் வாழ்க்கைக்கு வழியற்றவர்களாக்கப்பட்ட வறிய சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் முதலிய மாவட்டங்களில் குடியேற்றுவது.

04. இனவாத யுத்தத்திற்காக சமசமாஜ, கம்யூனிச, நவசமசமாஜ, இ.தொ.கா. முதலான தொழிலாளர் வர்க்க துரோகக் கட்சிகளின் ஆதரவைப் பெறும்பொருட்டு வட்ட மேசை மாநாட்டை ஆரம்பிப்பது.

05. அமெரிக்கா முதலான ஏகாதிபத்திய நாடுகளதும் இந்திய காங்கிரஸ் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் ஆதரவை அணிதிரட்டிக்கொள்வது.

இந்த ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் விளக்குவது அவசியம். அது வருமாறு:

1. எல்லே குணவன்ச காவியுடைக்காரரின் ஆலோசனைப்படி, "நாட்டு மக்களுக்கு" உரை நிகழ்த்திய ஜனாதிபதி ஜயவர்த்தன கூறியதுபோல், இனவாத கறுப்பு ஜூலையின் தீச்சுவாலைகள் அணைந்து போவதற்கு முன்னதாக 1983 ஓகஸ்ட் 4ம் திகதி 6வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் திருத்தச் சட்டத்தை பிரதமர் ஆர். பிரேமதாச சமர்ப்பித்தார். இந்த திருத்தச் சட்டம், தனிநாட்டுக்காக முன்நிற்பது அல்லது பிரச்சாரம் செய்வதிலிருந்து சகல தனி நபர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களையும் தடை செய்வதாகக் கூறியது. அங்ஙனம் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு குறையாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும், அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தடைசெய்யப்படும் எனவும் அது கூறியது.

மக்களால் தெரிவு செய்யப்படும் சகல பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களும் ஒற்றையாட்சி முறையை பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பதும் அந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அடங்கியிருந்தது.

ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு குழிபறிக்கும் இந்த அரசியலமைப்புச் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அரசாங்கத்தின் அவசரத்தை காட்டும் வகையில், இந்த மசோதா ஒரு அவசர மசோதாவாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் சகல இடைக்கால விதிகளும் இரத்துச் செய்யப்பட்டு பாராளுமன்றம் இதை 13 மணித்தியாலங்களுள் சட்டமாக்கிக் கொண்டது. பாழடைந்த வீட்டுக்குள் பாத்திரங்களை உடைப்பது போல், பாராளுமன்றம் தனித்து சிங்கள இனவாத அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் கூச்சல்களால் நிறைந்து போயிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதத்தைப் பகிஷ்கரித்தனர். அன்றிலிருந்து அடுத்து வந்து ஆறு வருடங்களுக்கு அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவில்லை.

சிங்கள, தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் பாராளுமன்ற விளையாட்டினுள் பங்கிட்டுக் கொண்டிருந்த, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை பிளவுபடுத்தி முதலாளித்துவ ஆட்சியைப் காக்கும் திட்டத்தை ஒரு முடிவுக்கு கொணர்ந்து, இனவாத யுத்தத்திற்கு வழிவகுக்கும் திட்டம் யூ.என்.பி. அரசாங்கத்தினால் அன்று நடைமுறைக்கிடப்பட்டது.

தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத ஆயுத இயக்கங்களின் அழுத்தத்தின் கீழ் தனி நாட்டுக் கோரிக்கைக்கு இயைந்து போன முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒற்றையாட்சியைக் காக்கும் நடவடிக்கைக்கு இணங்கி சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதை நிராகரித்தது. ஆனால், அவர்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்து, ஜனாதிபதி ஜயவர்த்தனவுக்கும் யூ.என்.பி. அரசாங்கத்துக்கும் எந்தவிதத்திலும் குறையாத ஏகாதிபத்தியச் சார்பு இந்திராகாந்தியின் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் எம்.ஜி. இராமச்சந்திரனின் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்திடமும் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் ஈடுபாடு கொண்டனர்.

இதற்கிடையே "ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நீக்கப் பிரச்சாரம் செய்!" என்ற தலைப்பின் கீழ், தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு அறிக்கை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அத்தகைய பிரச்சாரத்துக்கு குறுக்கே நிற்கும் துரோக அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் அம்பலப்படுத்துவதில் ஈடுபட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு கூறியது:

"இந்த (ஆறாவது) அரசியலமைப்புத் திருத்தம், தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் வர்க்கம் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைத் தடுத்துள்ளது மட்டுமன்றி அது தொடர்பாக தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் பகிரங்கமான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு உள்ள உரிமையையும் நீக்கியுள்ளது.

"இந்த அரசியல் அமைப்பு திருத்த விவாதத்தில் ஒற்றையாட்சி முறைக்கு தாம் என்றும் விசுவாசமாக இருப்பதாக தெரிவித்த ஸ்டாலினிச இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்முத்தேட்டுவேகம, அந்த திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்களதும் உரிமைகளை ஒரேயடியாக காட்டிக்கொடுப்பதாக விளங்கியது.

"ஆறாவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு எதிராக நின்று கொண்டுள்ள சமசமாஜ மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள மத்தியவாதிகளும், முதலாளி வர்க்கம் திணிக்கும் இனவாத பொறிக் கிடங்கில் தொழிலாளர் வர்க்கத்தை தள்ளுவதற்குத் துடிக்கின்றனர்.

"....தொழிலாளர் வர்க்கம் மார்க்சிச நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த துரோகத்தை எதிர்த்து நிற்க வேண்டும். முதலாளித்துவ அரசின் விலங்குகளை உடைத்து ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை அணுவளவும் குறையாமல் பாதுகாக்க முன் நிற்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் தனது அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியும்.

"இங்கு 6வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கு!" என தொழிற்சங்கங்கள் மற்றும் வர்க்க அமைப்புக்களுள் ஆரம்பிக்கும் பிரச்சாரம் தீர்க்கமானது என நாம் சுட்டிக் காட்டுகின்றோம். இது இனவாதத்திற்கு எதிரான பலம் வாய்ந்த அடியாக இருப்பதோடு, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கிடையில் கூட்டை ஏற்படுத்தவும் முதலாளித்துவ ஆட்சியை ஒழித்துக் கட்டவும் அணிதிரட்ட உள்ள ஒரே வழியாகும். இது சோசலிச இந்தியத் துணைக் கண்டத்துக்காக அடியெடுத்து வைப்பதாகும்." (கம்கறு மாவத்த 1983 செப்டம்பர்20)

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களின் துணையை நாடி நின்ற தமிழ் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ குழுக்களுக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் இந்திய துணைக்கண்ட தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் திரும்பினர். அது தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டமாகும். தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தமது கைக்குள் கொணர்ந்து சோசலிச சமத்துவத்தை ஸ்தாபிதம் செய்வதன் மூலமே ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்.

கிரிமிநாசினி மேலதிக படைப்பிரிவு

2. இனவாத யுத்தத்தையும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மீது எதிர்த் தாக்குதலையும் தொடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சை நிறுவி இராணுவ நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாக, யூ.என்.பி. அரசாங்கம் மேலதிகப் படைப் பிரிவுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் இறங்கியது. இந்தப் படைப்பிரிவு அமைக்கும் நடவடிக்கை, "தேசிய சேவையை" ஆரம்பித்தல் என அழைக்கப்பட்டது. இந்தப் பணி அன்றைய இளைஞர் சேவை அமைச்சரும் இன்றைய யூ.என்.பி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இளைஞர் சேவை அமைச்சரிடம் 18 வயது தொடக்கம் 55 வயதுக்கும் இடையிலான சகல "இளைஞர்களையும்" அணி திரட்டும் பணி ஒப்படைக்கப்பட்டது. அது கட்டாய தேசிய சேவை விதிகளின் கீழ் செய்யப்பட்டது. அமைக்கப்படும் சேவைப் படைப் பிரிவுகள் ஊர்காவல் படையின் துணைப்படையாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தேசிய சேவைகளின் நோக்கங்களை அன்று "தவச" என்ற முதலாளித்துவ பத்திரிகை நிறுவனத்தின் "சன்" பத்திரிகை தூக்கிப் பிடித்துப் பேசியது. அதன் ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கூறியது: "பிரேரணை மிகவும் பாராட்டுக்குரியது மட்டுமன்றி அர்த்தமுள்ள ஒரு கிருமிநாசினி. இதை நடைமுறைப் படுத்துவதை தாமதப்படுத்தக் கூடாது. ஒழுக்கமான பழக்கவழக்கம் மற்றும் அரை இராணுவ யுத்த உபாயப் பயிற்சிகளுக்குப் பின்னர், மேலதிக படையணியானது கிளர்ச்சி, எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு யுத்தங்களில் கூட உரிய எதிர்ப்பை உண்மையில் வழங்கும்".(சன் -1983 செப்டம்பர் 02)

இந்தப் புதிய திட்டத்தை கிளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு யுத்த நிலமைகளில் பயன்படுத்தக் கூடிய ஒரு "கிருமிநாசினியாக" முதலாளி வர்க்கம் புரிந்து கொண்டிருந்தது. அந்த வர்க்கத்திற்கு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் கிருமியாக விளங்கினர். உண்மையில் மக்கள் கிருமியாகுவது, தமது உரிமைகளைக் காக்கும் பொருட்டு கிளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு யுத்தங்களுக்கு எழுச்சிபெறும் போதேயாகும். எதிர்புரட்சிகர சக்திகளை கட்டவிழ்த்து விட்டு அதை நசுக்க வேண்டும். யூ.என்.பி. பிரேரித்த ஆளும் வர்க்க திட்டத்தின் பின்னணியில் இருந்த மிலேச்சத்திட்டம் அதுவேயாகும்.

வளர்ச்சி கண்டுவரும் இந்த ஆபத்துக்களைப் பற்றி தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை எச்சரித்து அவசியமான அரசியல் தயாரிப்புகளுக்காகப் போராடியது இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளின் துரோகிகள், யூ.என்.பி. அரசாங்கத்தின் பிற்போக்குத் திட்டத்திற்கு முழுமனே அங்கீகாரம் வழங்கும் வகையில், சட்டத்தையும் ஒழுங்கையும் காக்கப் பொலிஸ் இராணுவப் படையணிகள் ஒழுங்கு முறையாகக் கையாளப்படுவதில்லை எனக் கூறிக்கொண்டனர். இதன் மூலம் எதிர்ப்புரட்சியைத் தூண்டும் திட்டத்துக்கு துணை போயினர். அது முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊதுகுழல் ஆகியது. யூ.என்.பி.க்கு எதிர்ப்புக் காட்டுவதாக வெளியில் காட்டிக் கொண்டபோதிலும், முதலாளித்துவ அரச இயந்திரத்தை வெகுஜனங்களுக்கு எதிராக பலப்படுத்தும் பிரச்சாரத்தில் இவர்கள் ஒன்றிணைந்து கொண்டனர்.

இந்தப் பிற்போக்கு பிரச்சாரத்தின் புண்ணியத்தினால் இராணுவ பலத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் யூ.என்.பி. அரசாங்கம் இறங்கியது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை மேலும் பலப்படுத்துவது அதன் மற்றொரு நடவடிக்கையாக விளங்கியது. முன்னர் பொதுசன பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்ததன் பின்னர் மட்டுமே இராணுவத்துக்கு கையளிக்கப்பட்டுவந்த அடக்குமுறை அதிகாரங்கள், இதன் மூலம் நாட்டின் அன்றாட சட்டமாக்கப்பட்டது.

புதிய சட்டதிட்டங்களின் கீழ் ஆயுதப்படைகள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த ஒரு இடத்தினுள்ளும் நுழையவும் சோதனையிடவும் எந்த ஒரு நபரையும் கைது செய்யவும், போக்குவரத்து வாகனங்கள் கடற்பயணப் படகுகள் மற்றும் விமானங்களை நிறுத்திச் சோதனையிடவும் அதிகாரம் வழங்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவம் சாதாரண சட்டங்களில் இருந்து விடுபட்டு கொலைகார தயாரிப்புகளில் ஈடுபடவும் இதன் மூலம் அதிகாரம் கிடைத்தது. இந்தச் சட்டதிட்டங்களை சட்டப் புத்தகங்களில் வைத்துக்கொண்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு உட்பட்ட டயர் தீச்சுவாலைகளில் வெந்து இறந்தவர்களையிட்டு முதலைக் கண்ணீர் வடித்தபடி நடாத்திவரும் விசாரணைகளின் இரத்தம் தோய்ந்த பகிடிகளில் இருந்து தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் முதலாளித்துவ அமைப்பின் காட்டுமிராண்டித்தனத்தைக் தூக்கி வீசுவதற்கு அவசியமான அரசியல் தயாரிப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமசமாஜ, கம்யூனிச தலைவர்களதும் அவ்வாறே குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளது பிரச்சாரங்களதும் ஆதரவுடன், யூ.என்.பி. அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அமைச்சை நிறுவ நடவடிக்கை எடுத்தது. இதன் அமைச்சராக லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டார்.

அவரின் விரைவான நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்த, எதிர்ப் புரட்சி உள்நாட்டு யுத்தத்திற்காக முப்படைகளையும் பலப்படுத்தி வழிநடத்த உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக விளங்கியது.

இராணுவத்தை பலப்படுத்துதல்

இராணுவம் அமைச்சர் அத்துலத்முதலியின் பொறுப்பில் விடப்படும் போது, காலாட் படையின் பலம் நிரந்தரப் படையாட்கள் 11,000 ஆகவும் தொண்டர் படை 2,000க்கும் 4,000க்கும் இடைப்பட்டதாகவும் விளங்கியது. ஆட்களை திரட்ட அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இதன்படி 1987ல் நிரந்தரப் படைகளின் எண்ணிக்கை 50,000 வரை, அதாவது நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்தது. முதலாளித்துவ ஆட்சியாளர்களால் திசை தெரியாமல் செய்யப்பட்ட கிராமப்புற ஏழைக் குடும்பங்களின் இளைஞர்கள் வேறு மார்க்கம் இல்லாது போன நிலையில், "இருந்தாலும் சரி இறந்தாலும் சரி" என நினைத்துக் கொண்டு இந்த அலுகோசு வேலைக்குத் திரட்டப்பட்டனர். இளைஞர்கள் மீது திணிக்கப்பட்ட இந்தத் தரித்திரம் பிடித்த நிலைக்கு எதிராக "இனவாத யுத்தத்திற்கு ஒரு ஆளோ, ஒரு சதமோ வழங்க வேண்டாம்" எனக் குரல் கொடுத்தது ட்ரொட்ஸ்கிசப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். கடந்து சென்ற ஒவ்வொரு வாரத்திலும் இனவாத யுத்தத்தின் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்பட்டு துண்டு துண்டாக சிதறுண்ட இளைஞர்களின் சடலங்கள் சவப்பெட்டிகளில் சீல் வைத்து கிராமங்களுக்கு வந்திறங்கியபோது ட்ரொஸ்ட்கிஸ்ட்டுகளின் நிலைப்பாட்டின் பொருத்தம் நிரூபிக்கப்பட்டது.

"வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறு!" என்ற சுலோகம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அவ்வாறே சிங்கள இளைஞர்களை இனவாத யுத்தத்தின் பலிக்கடாக்கள் ஆக்குவதற்கும் எதிராக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பொதுமக்களிடையே முன்வைத்த சுலோகமாகும். அது யூ.என்.பி. ஆட்சியை தூக்கிவீச அணிதிரள்வதற்கான குரலாகியது. தொழிலாளர் வர்க்கம் அந்த சுலோகத்தை தனதாக்கிக்கொண்டு ஒடுக்கப்படும் மக்களிடையே பிரச்சாரத்தில் இறங்கியிருக்குமானால், அதனால் உருவாகக் கூடிய பலத்தின் மூலம் தனது வர்க்க அவசியங்களை இட்டு நிரப்ப மட்டுமன்றி ஒடுக்கப்படும் மக்களின் உதவியோடு தமது அரச அதிகாரத்தை ஸ்தாபிதம் செய்யவும் முடிந்திருக்கும். இதை தடுத்து யார்? இந்தத் துரோகிகள் சகலரும் இனவாத யுத்தத்தின் காட்டுமிராண்டி பெறுபேறுகளுக்கும், அவ்வாறே யூ.என்.பி. அரசாங்கத்திற்கு பதிலீடாக பொதுஜன முன்னணியை காட்டி ஆட்சிக்கு கொணர்ந்து மக்களைக் கதியற்றுச் செய்து பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியதற்கும் பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கான முட்டுக்கட்டைகளை திறந்துவிடுவதற்காக இனவாத ஆத்திரமூட்டல்களை சிருஷ்டிக்கும் பொருட்டு, அந்த இரண்டு மாகாணங்களிலும் புதிதாக சிங்கள மக்களைக் குடியமர்த்த கறுப்பு ஜூலை முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து வைக்கும் வகையில், மாகாவலித் திட்டத்துக்குரிய மாதுறு ஓயாப் பகுதியில் சிங்களக் கிராமத்தைத் திணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முன்னணியில் நின்றவர் பேர்போன இனவாதியான திம்புலாகல சீலாலங்கார காவியுடைக்காரராகும். அரச அதிகாரிகளையும் கூட பயமுறுத்தும் காடைத்தனங்களுக்குப் பேர்போனவரான அவர், கிழக்கு மாகாண "ஏஜன்ட் துறவிக்கும்" மேலாக நின்று கொண்டிருந்தார்.

சீலாலங்காரவின் பாலத்காரக் குடியேற்றம் பற்றி யூ.என்.பி. அரசாங்கத்தின் உள்நாட்டு அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகமும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்துவும் முறைப்பாடுகள் செய்த போதிலும், மகாவலி அதிகார சபை அதையிட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மாகாவலி அதிகார சபையின் அன்றைய தலைவராக விளங்கிய பண்டிதரத்னவுக்கும் ஜனாதிபதி ஜயவர்த்னவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் பிரசித்தி பெற்றவை.

மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் பலாத்காரமாக குடியேறியவர்களை அப்புறப்படுத்தும்படி ஜனாதிபதி பண்டிதரத்தனவுக்கு உத்தரவிட்டார். ஆனால் கிடைத்த பதில், "குடியேற்றங்கள் திம்புலாகல பிக்குவின் தலமையில் செய்யப்பட்டதால் அவர்களை வெளியேற்ற முடியாது," என்பதாகும். இந்தப் பதிலால் ஆத்திரமடைந்த ஜயவர்த்தன, "மகாவலி அதிகார சபை தொழிற்படுவது திம்புலாகல தேரோவுக்கு அவசியமான விதத்திலாகின் நான் அவரை அதன் தலைவராக்குகின்றேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்," எனக் குறிப்பிட்டார்.

அடுத்து ஜயவர்தன அந்தப் பணியை மாவட்ட அமைச்சர் போல் பெரேராவிடம் ஒப்படைத்தார். மகாவலி பிராந்தியத்துக்கு சென்ற அவர் 20,000க்கும் அதிகமானோர் மகாவலி பிராந்தியத்தில் குடிசைகள் அமைத்துக்கொண்டு பலாத்காரமாகக் குடியேறிக்கொண்டுள்ளதாக அறிக்கை செய்தார். அச்சமயத்தில் மகாவலி அதிகார சபையோ குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் குறைவானது என்று அறிக்கை செய்திருந்தது. இந்தப் பிரச்சினையை சிறுப்பித்துக் காட்டும் பொருட்டு, இந்தப் பிழையான அறிக்கையின் பின்னணியில் மகாவலி அமைச்சர் காமினி திசநாயக்க செயற்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் குடியேற்றவாசிகள் மகாவலி அதிகார சபைக்கும் மகாவலி ஒப்பந்தங்களில் ஈடுபட்டு இருந்த முதலாளிகளுக்கும் சொந்தமான லொறிகளில் ஏற்றிக் கொணர்ந்து இறக்கப்பட்டனர்.

இன்னும் இரண்டு தமிழர் வாழ் பிரதேசங்களிலும் இந்தப் பலாத்காரச் சிங்களக் குடியேற்றங்களுக்கு உட்கார்ந்துகொள்ள இடமளிக்கப்பட்டது. திருகோணமலையையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் யான் ஓயாப் பகுதியும் மன்னார் மாவட்ட மல்வத்து ஓயாப் பகுதியும் இதற்கென ஒதுக்கப்பட்டது.

இந்த விதத்தில் குடியேறத் தள்ளப்பட்ட எந்த ஒரு குடும்பமும் "சிங்கள மரபுகளைக்" காக்கும் உணர்வுகளால் தூண்டப்பட்டவை அல்ல. முதலாளித்துவ அமைப்பினால் இருக்க இடமற்றவர்களாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே அவர்கள் இந் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த மக்கள் புதிதாகக் குடியேறியதைத் தொடர்ந்து தினமும் தமிழர்-விரோத இனவாத விஷம் ஊட்டப்பட்டது. பொலிசாரும் இராணுவத்தினரும் திட்டமிட்டு நடத்தி, பின் தமிழ் மக்களின் தலையில் பழியைக் கட்டியடித்த ஆத்திரமூட்டல்கள் மூலம் இம்மக்களை இனவாத யுத்தத்தின் கைத் தேங்காயாக்கும் வேலைத்திட்டம் நனவான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

இனவாத யுத்தத்திற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை தூண்டிவிடுவதற்கு அவசியமான பொய் பிரச்சாரங்களை நடத்துவதில் முதலாளித்துவ அரச இயந்திரமே முன்னணியில் நின்றது. அதனுடன் ஒத்தூதும் வேலைகளில் முதலாளித்துவ பத்திரிகைகள் ஈடுபட்டன.

திரித்துக்கொண்டிருந்த அரச இயந்திரத்தின் பொய் திரிகைக்கு வள்ளுவன் இராஜலிங்கம் என்ற பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்ததன் மூலம் எண்ணெய் பூசப்பட்டது. அவர் சென்னையில் இருந்து திரும்பும் போது தலை மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வள்ளுவன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதனை திருமணம் செய்யவிருந்த தனது சகோதரியை மணமகன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை சென்றிருந்தார். கைது செய்யப்பட்ட வள்ளுவன் வசமிருந்த புதுமையான நான்கு கடிதங்கள் மன்னார் துறையில் காவலில் இருந்த படையாட்களால் "தேடி" பிடிக்கப்பட்டது.

முக்கியமானது என இரகசியப் பொலிசார் கருதிய அந்தக் கடிதங்களை ரூபவாஹினியில் தோன்றி வாசிக்கும் பொருட்டு பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வள்ளுவனை கொழும்புக்குக் கொணரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடிதத்தை எழுதியவர் அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வரான காண்டீபன். தமிழர் விடுதலைக் கூட்டணி இளைஞர் பேரவைத் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

உரிய தருணம் வரும்போது இலங்கை இராணுவத்தை எதிர்த்து போராடும் பொருட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ தேசிய இராணுவத்தை ஒழுங்கு செய்கின்றது, என்பதே அக் கடிதத்தில் அடங்கியிருந்த முக்கிய விடயமாகும். இந்த தேசிய இராணுவத்துக்கு திரட்டிப் பயிற்சியளிக்கும் படைகளின் எண்ணிக்கை 50 க்கும் 100க்கும் இடைப்பட்டதாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பயிற்சி முகாமாக ஒதுக்கப்பட்ட இடம் இரண்டு பிரிவாக ஒதுக்கப்பட்ட 13 ஏக்கர் நிலம் எனவும் கூறப்பட்டது. அதற்கான நிதி லண்டனில் திரட்டப்படுவதாகவும், வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்த அமிர்தலிங்கம் லிபியத் தொடர்பை அவரிடம் ஒப்படைத்ததாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய "அரச விரோத சதிகார" தகவல்கள் அந்தளவு அப்பட்டமான விபரங்களோடு சகலரும் வாசித்து விளங்கிக்கொள்ளும் ஒரு கடிதத்தில் இடம்பெறுவது உண்மையில் ஆச்சரியத்துக்கு உரியதாகும். ஆனால், இவற்றை விழுங்கிக்கொள்ள வாயைப் பிளப்போர் இருக்கின்றனர் எனக் கருதி பொது அறிவையும் கூட இழிவுபடுத்தும் பொய்ப் பிரச்சாரங்களில் ஆளும் வர்க்கம் ஈடுபட்டமை, அந்தளவுக்கு அது கையறு நிலைக்குத் தள்ளப்பட்டதை வரலாறு காட்டுகின்றது.

இத்தகைய கசப்பான கசாயத்தின் செறிக்காத பகுதியை செறிக்க வைப்பதன் பேரில் அவசியமான குறைபாடுகளை நிரப்பும் நடவடிக்கை முதலாளித்துவ கந்தல் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் அமிர்தலிங்கம் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானிய சுற்றுலாவில் நிகழ்த்திய பேச்சுக்களை பயன்டுத்தி நாற்றத்தின் எல்லையையும் தாண்டிச் செல்லும் இனவாத புதைச் சேறு ஒன்று இந்த கந்தல் பத்திரிகைகளால் நிர்மாணிக்கப்பட்டது.

4. சேறு கலக்கிகளாக இந்தச் சேற்றில் சமசமாஜ, ஸ்டாலினிச, நவசமசமாஜ தலைவர்கள் இறங்கியிருந்தனர். இவர்களை ஆளுக்காள் பலிகொள்ள ஜனாதிபதி ஜயவர்த்தனா மட்டப்பலகையாக "சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டை" தயார் செய்தார்.

அரசியல் நெருக்கடி

1983 ஆகஸ்டு-செப்டம்பர் அளவில் யூ.என்.பி. அரசாங்கம் முகம் கொடுத்திருந்த அரசியல் நெருக்கடி வேகமாக உக்கிரம் கண்டது.

கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற தமிழர் எதிர்ப்பு தீவைப்புகளின் சூடு இந்தியா பூராவும் பொதுமக்களை வீதியில் இறக்கும் நிலைமையை உருவாக்கியது. அது தமிழ் நாடு மாநிலத்தில் பெரிதும் உக்கிரமான முறையில் வெளிப்படாகியது. சிறப்பாக பல்கலைக்கழக, பாடசாலை மாணவர் உட்பட இளைஞர் பகுதியினர் ஆயிரம், ஆயிரமாக வீதியில் இறங்கி கொழும்பு அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தியின் மத்திய அரசாங்கத்தினதும் எம்.ஜி இராமச்சந்திரனது மாநில அரசாங்கத்தினதும் நடைமுறை தொடர்பாக பெரிதும் வெறுப்படைந்திருந்த தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்கள், வீதியில் இறங்கி தமது ஆத்திரத்தை வெளிக்காட்டும் பொருட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான இரத்தக் களரிகளையும் படுகொலைகளையும் சந்தர்ப்பம் ஆக்கிக் கொண்டனர்.

தமிழ் நாட்டில் கருணாநிதியின் தி.மு.க. இந்த மக்கள் எதிர்ப்பின் உச்சியில் பாய்ந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அவர் தமிழ் நாடு மாநில எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இராஜிநாமாச் செய்து தொழிற்படத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆரின் கட்சியினுள் போராட்ட அலையின் தாக்கம் சட்டசபையினுள் அண்ணா தி.மு.க கட்சியின் பிரதம அமைப்பாளரான ஜனார்தனனின் பதவி இராஜிநாமாவாக வெளிப்பட்டது. இந்த நெருக்கடி நிலமையை தம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்ற பீதியின் காரணமாக எம்.ஜி.ஆரின் மாநில அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நல்லாதரவு தெரிவித்து இலங்கை அரசாங்கத்தை நெருக்கும்படி காங்கிரஸ் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தது.

யூ.என்.பி. அரசாங்கத்தின் இனவாத காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம், இந்திய எல்லையையும் தாண்டி வளர்ச்சி காணத் தொடங்கியது. சிறப்பாக 6வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற ஆசனங்கள் 1983 ஒக்டோபர் 20ம் திகதி இரத்துச் செய்யப்பட்டதோடு பாராளுமன்ற எதிர்க்கட்சி ஒன்று இல்லாது போகும் அளவுக்கு யூ.என்.பி. யின் சர்வாதிகார வெறி பொதுமக்களின் கண்களின் எதிரில் அம்பலமாகியது.

மறுபுறந்தில், ஏகாதிபத்திய வங்கியாளர்கள் சிபார்சு செய்த வேலைத்திட்டங்களை அணுவும் பிசகாமல் நடைமுறைக்கிடுவது தொடர்பாக யூ.என்.பி. அரசாங்கம் காட்டிய ஈடாட்டம் அதன் எசமானர்களின் கசப்புக்கு இலக்காகியது. உதாரணமாக, இலவசக் கல்வியை ஒழித்துக்கட்டும் பொருட்டு கொணர்ந்த கல்வி வெள்ளை அறிக்கையை ஒரேயடியாக நடைமுறைக்கிடுவதை பொதுமக்களின் எதிர்ப்பின் மத்தியில் சுருட்டிக் கொள்ள நேரிட்டமை குறிப்பிடத்தக்கது. 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் தொழில் உரிமை நாசமாக்கப்பட்டு இருந்துடன் இன்னமும் "நட்டமான பொருளாதாரத் துறைகளின்" பராமரிப்புக்காக நிதி ஒருக்கீடு செய்வதை நிறுத்த முடியாது போய்விட்டது. இதற்குத் தொழிலாளர்களிடம் இருந்து கிளர்ந்து வந்த எதிர்ப்பே காரணம். இனவாதத்தைப் பயன்படுத்தி குழப்ப நிலையைச் சிருஷ்டித்து 1984 வரவு செலவு திட்டத்தில் அரசாங்கச் செலவுகளை நூற்றுக்கு 20 வீதத்தினால் வெட்டித்தள்ள அரசாங்கம் தீர்மானம் செய்தது. எனினும் அதை நடைமுறைக்கிடும் அளவுக்கு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு சக்தி உள்ளதா? என்பதையிட்டு வங்கியாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதில் இருந்து தலையெடுக்கும் பொருட்டு சர்வாதிகாரத் திட்டங்களை விரைவுபடுத்த நேரிட்டது. ஆனால் வடக்கில் தோன்றியிருந்த கிளர்ச்சிகர நிலமைகளின் எதிரில் இராணுவத்தை திட்டவட்டமான அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரத்துக்கு இருந்து வந்த வாய்ப்பு வரையறுக்கப்பட்டது. கறுப்பு ஜூலையின் அனர்த்தங்களின் பெறுபேறாக வடக்கில் கிளர்ச்சிகர இயக்கங்களின் கை பலப்படுத்தப்பட்டிருந்ததையும் ஏகாதிபத்தியவாதிகள் கணக்கில் கொண்டனர். இதனால் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அரசியல் ரீதியில் மேலும் குழப்பியடித்து மலடுகளாக்கும் பொருட்டு சமசமாஜ, கம்யூனிஸ்ட், நவசமசமாஜ கட்சிகளின் துரோகத்தை பயன்படுத்த நேரிட்டது.

இங்கு முதலாளித்துவ சார்பு கையாட்களை அணிதிரட்டுவதற்கான துரும்பாக சர்வகட்சி வட்டமேசை மாநாடு பயன்பட்டது.

யூ.என்.பி. அமைச்சர்களாலேயே ஒழுங்கு செய்து கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் இனவாத இரத்தக் களரிக்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக, இதற்கு சில தினங்களுக்கு முன்னர் நடத்தத் திட்டமிட்டிருந்த சர்வகட்சி வட்டமேசை மாநாடு எனப்படுவதில் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வமான புள்ளிகள் மட்டுமே கலந்து கொள்வதாக விளங்கியது.1983 ஜூலை 20ம் திகதி கூட்டப் பட்டிருந்த அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு யூ.என்.பி.க்கு மேலாக சி.ல.சு.க, சமசமாஜக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சி, இ.தொ.கா., நவசமசமாஜ கட்சி, தமிழ் காங்கிரஸ் முதலான ஆறு ஏழு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் யூ.என்.பி. யும், அதன் முண்டுகோலான இ.தொ.கா.வும் மட்டுமே அதில் கலந்து கொண்டன. கறுப்பு ஜூலையின் அழுக்கு வடுக்கள் ஏனைய சகல கட்சிகளதும் அகோர முகங்களில் ஒட்டப்படுவது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. கறுப்பு ஜூலைக்கான பொறுப்பைச் சுமத்தும் பொருட்டு பின்னர் மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்ட போதிலும் அது புதையுண்டு போன பொய் முயற்சியாகியது.

இப்போது அந்த சர்வ கட்சி மோசடியை மீண்டும் தோற்றுவிக்காமல் இருக்க முடியாது போய்விட்டது. யூ.என்.பி. அரசாங்கம் முகம் கொடுத்த அரசியல் நெருக்கடியே அதற்கான காரணமாகும். யூ.என்.பி. அரசாங்கத்தின் நெருக்கடியை முதலாளித்துவ ஆட்சியினது நெருக்கடியாக புரிந்து கொண்ட வர்க்க அடிமைகள் இப்போது அதற்கு தோழ் கொடுக்க ஆயத்தமாகி வந்தனர்.

அவர்களின் வர்க்கத் துரோக ஆயத்தங்களைப் பற்றி ஏதும் சந்தேகம் இருந்திருக்குமானால் அந்தக் குறைபாடுகளைப் பூசி மெழுகும் நடவடிக்கையில் முதலாளித்துவ கந்தல் பத்திரிகைகள் இறங்கின. முன் கூட்டியே யூ.என்.பி. ஆட்சிக்கு முண்டு கொடுக்க அந்தக் கட்சிகள் காட்டும் தாயாரிப்பைப் பத்திரிகைக்காரர்கள் பிரச்சாரம் செய்தனர்.

ஓகஸ்ட் 23 ம் திகதி ஞாயிறு ரிவிரச பத்திரிகை, எதிர்க் கட்சியின் பிரபல அரசியல் கட்சிகள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தமை அந்த பிரச்சாரங்களில் ஒன்றாகும். அதையிட்டு அது பின்வருமாறு குறிப்பிட்டது: "பயங்கரவாத இயக்கத்தினால் தமது கட்சிகளின் அமைப்பு நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்காது போனால் எதிர்காலத்தில் அது தமக்கும் தலையிடியாகும் என அக் கட்சிகளின் தலைவர்கள் உள்வாரி கலந்துரையாடங்களில் குறிப்பிட்டுள்ளதாகவும், தமது கட்சிகளின் எதிரில் தெளிவு படுத்தப்பட்டுள்ள விடயங்களின்படி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தீர்வு தேட ஒன்றிணையுமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்குமானால் அதை ஏற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அந்தக் கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."

"விடயம் அறிந்த" வட்டாரங்கள் எதுவாக இருப்பினும் "கட்சிகளும்" மற்றும் அவற்றின் உள்வாரிக் கலந்துரையாடல்களும் எது எனக் குறிப்பிடாத இந்த அறிக்கைகள் முடிவுகளை வலுக்கட்டாயமாக திணிப்பதை இலக்காக் கொண்டு எழுதப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்வது கடினமானது அல்ல. ஆனால், இந்த இலக்குக்கு அடிபணிந்து போவது ஆளும் வர்க்கத்தின் முடிவுகளைத் திணிக்க வாயைப் பிளந்து கொண்டுள்ள முதலாளித்துவ சார்பு கட்சிகள் மட்டுமே என்பதைத் தெரிந்து கொள்வதும் சிரமம் அல்ல. சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனாதிபதி ஜயவர்தனா கூட்டியதுதான் தாமதம், வட்ட மேசை மாநாட்டில் வயிறழப்பதன் மூலம் அப்பரீட்சையில் உயர் சித்தியடைந்தன. முதலாளித்துவ ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் அத்தருணத்தில் தடை செய்யப்பட்டிருந்த நவசமசமாஜக் கட்சிக்கும் ஜே.வி.பி. க்கும் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்புக் கிடைக்கவில்லை.

சமசமாஜ-கம்யூனிச துரோகிகளையும் சேர்த்துக்கொண்டு இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் முதல் சுற்று, பாராளுமன்றத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை வட்டமேசைக்கு இழுப்பதாக விளங்கியது. இரண்டாவது சுற்று, வடக்கில் கிளர்ந்து எழுந்த மக்களுக்கும், வர்க்கப் போராட்ட பாதையில் காலடி வைக்கும் சகல தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராக சகல முதலாளித்துவ கட்சிகளதும் ஆதரவுடன் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை இலக்காகக் கொண்டிருந்தது.

5. இரண்டாவது இலக்கை நோக்கி செல்கையில் அவசியமான ஏகாதிபத்தியவாதிகளதும் இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களதும் ஆதரவை திரட்டிக் கொள்ளும் பொருட்டு ஜயவர்த்தன ஆட்சியைப் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆளுக்காள் போட்டியிட்டுக் கொண்டிருந்தன.

இந்திய வெகுஜனங்கள் காங்கிரஸ் கட்சியின் பிடிக்குள் அகப்பட்டுக் கிடந்த ஒரு நிலமையின் கீழ், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிப்பதன் மூலம் அதனைச் சீர்செய்ய இந்திராகாந்தி யோசித்தார். சிறப்பாக 1980 களில் பஞ்சாபில் சீக்கிய மக்களுக்கு எதிரான இராணுவ ஒடுக்குமுறைகளை உக்கிரமாக்கியதில் மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்கள் குழுக்களின் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதில் பேர்போன வரலாற்றை உரித்தாக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள், இலங்கைத் தமிழ் மக்கள் மீது "அனுதாபம்" காட்டுவதன் பின்னணியில் பிற்போக்கு அரசியல் அவசியங்கள் பதுங்கிக் கொண்டிருந்தன.

தமிழ் மக்கள் படுகொலைகள் மற்றும் இரத்தக் களரிகள் சமபந்தமாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியே தள்ளியது தொடர்பாகவும் இந்திராகாந்தி இந்தியப் பாராளுமன்றத்திலும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் வெளியிட்ட அறிக்கைகளின் அரசியல் நெருக்கு வாரங்களில் இருந்து தலையெடுக்க ஜனாதிபதி ஜயவர்த்தன உடன் நடவடிக்கை எடுத்தார். அவர் ஆசியாவின் சகல பிற்போக்கு ஆட்சியாளர்களதும் ஏகாதிபத்திய சக்திகளது பக்கமும் திரும்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் பக்கம்

தமது சிறப்பு பிரதிநிதியாக செயற்பட்டு வந்த வழக்கறிஞர் எச்.டபிள்யு. ஜயவர்த்தனவை இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான், ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்தின் தலைநகரங்களுக்கு ஜயவர்த்தனா அனுப்பி வைத்தார். தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதையிட்டு ஒரு வார்த்தை தன்னும் கூறாத இந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொண்டு தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு எதிரான அறிக்கைகள் பெற்றுக் கொள்வதில் அவர் வெற்றி கொண்டார். ஆனால், சீனாவைத் தவிர ஏனைய சகல நாடுகளும் இந்தியாவின் தலையீட்டைக் கண்டனம் செய்வதை நிராகரித்தன.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் இராணுவ உதவி உள்ளடங்கலான உதவிகளை வென்றெடுக்க ஜனாதிபதி ஜயவர்த்தனா வெளிநாட்டு அமைச்சர் ஹமீட்டை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இந்தியாவின் ஏகாதிபத்திய சார்பு இந்திராகாந்தி ஆட்சி முகம் கொடுத்த நெருக்கடியையும், இலங்கையின் பேரிலான அங்குள்ள பிரதிபலிப்புகளையும் பற்றி உணர்ச்சி கண்டிருந்த றீகன் அரசாங்கம், இலங்கைக்கு நேரடியாக இராணுவ உதவி வழங்க இணங்கவில்லை. அதற்குப் பதிலாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசிய அரசாங்கங்களின் ஊடாக உதவி வழங்க இணக்கம் தெரிவித்தது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு றீகன் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான வேர்ணன் வோல்டரை கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. குளிர் யுத்தம் இன்னமும் அனைந்திராத நிலையில் இந்தியாவைக் கணக்கெடுக்காமல் தாம் செயற்படவில்லை எனக் காட்டிக்கொள்ளும் விதத்தில், வோல்டரின் பயணத்தைப் பற்றி இந்திராகாந்தி அரசாங்கத்துக்கு முன் கூட்டியே அறிவிக்கவும் அமெரிக்கா மறந்துவிடவில்லை.

ஜனாதிபதி ஜயவர்த்தனவின் யூ.என்.பி. ஆட்சியின் சார்பில், இந்தியாவுக்கு எதிராக பந்தயம் பிடிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அவர்களது கைக்கூலி பிற்போக்கு ஆட்சியாளர்களும் ஈடாடுவதைக் கண்ட யூ.என்.பி. அரசாங்கம், இயலாக் கையாக இஸ்ரேல் பக்கம் திரும்பியது. ஜனாதிபதி ஜயவர்தனவின் "யங்கிடிக்கி" நிலைப்பாட்டையும், வெளிநாட்டு அமைச்சர் ஹமீட்டின் இஸ்லாம் மதத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்தும் மத்திய கிழக்கு எண்ணைப் பணத்தினாலும் பிளைக்கப் போட்ட திட்டத்தை பின்தள்ளி, ஜயவர்த்தன தனது மகன் ரவி ஜயவர்த்தனாவை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார்.

அரச எதிர்ப்பு சதிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி "லிபியன் தொடர்பு" வைத்திருந்ததாக முன்கூட்டியே பிரச்சாரம் செய்து வந்த பொய்யின் இலாபத்தையும் பெற்றுக் கொண்டு, இஸ்ரேலில் இருந்து இராணுவப் பயிற்சியாளர்களை தருவிக்க ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஜயவர்த்தனா வெற்றி பெற்றார். இஸ்ரேலுக்கான கப்பமாக அந்நாட்டுடன் மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள யூ.என்.பி. உடன்பட்டது. அந்த இஸ்ரேல் தொழிற்பாடுகளை அமெரிக்க தூதரகத்தின் ஒரு பாகமாக ஸ்தாபிதம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் அமெரிக்க, பிரித்தானிய ஆட்சியாளர்களைச் சந்தித்து முறையிட்ட போதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர் தமது சகாக்களுடன் தமிழ் நாட்டில் வேரூன்றி, எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் கருணாநிதி கோஸ்டிகளதும் இந்திராகாந்தி அரசாங்கத்தினதும் ஆதரவின் மீது வாழ்க்கையை ஓட்ட முடிவு செய்தார். இனவாத சிங்கள முதலாளித்துவ அரசாங்கத்தினது ஒடுக்குமுறை நசுக்குதல் எதிரில் கிளர்ந்து கொண்டிருந்த வடக்கு-கிழக்கு தமிழ் மக்களிடையே, தமது ஆதரவு தளம் வேகமாக தகர்ந்து கொண்டு வந்த ஒரு நிலமையில், வசிப்பிடத்தைக் கூட இந்தியாவுக்கு மாற்றிக்கொள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தீர்மானித்தனர். இதன் மூலம் அவர்கள் முதலாளித்துவ பாராளுமன்ற தமிழ் தேசியவாதத்தின் படு வங்குரோத்தை வெளிக்காட்டிக் கொண்டனர். அதே நேரம், முதலாளித்துவ தமிழ் தேசியவாதத்தின் ஆயுதப் போராட்டப் பாதையின் வங்குரோத்தும் பிற்போக்கும் வெளிப்பட இன்னமும் சிறிது காலம் கழியவேண்டி இருந்தது. தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத ஐக்கியத்தை அடிப்டையாகக் கொள்ளாத அத்தகைய முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ வேலைத்திட்டங்களின் மூலம், ஏகாதிபத்தியச் சார்பு சிங்கள இனவாத பிற்போக்காளர்களதும் அவர்களின் ஆட்சியினதும் கிழண்டிப்போன இரு கால்களுக்கும் பலம் சேர்ப்பதைத் தவிர வேறு எதுவும் இடம்பெறாது.

See Also :

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

பகுதி 1: இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

பகுதி 2: 1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும்

பகுதி 3: யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்

பகுதி: 4: 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

பகுதி 5 : 1983 கறுப்பு ஜூலை