World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman army takes command of strike force in northern Afghanistan வடக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் படையின் கட்டுப்பாட்டை ஜேர்மன் இராணுவம் எடுத்துக்கொள்ளுகிறது By Ludwig Niethammer ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் ஒரு நேட்டோ தாக்குதல் படையின் கட்டுப்பாட்டுப் பொறுப்பை ஜூலை 1ம் தேதி ஜேர்மனிய இராணுவம் எடுத்துக் கொண்டது. இப்பகுதியிலேயே முதல் தடவையாக ஒரு போரிடும் படைப் பிரிவை ஈடுபடுத்தியுள்ளது. Quick Reaction Force (QRF) எனக்கூறப்படும் விரைவில் செயல்படும் இப்படையில் நன்கு ஆயுதபாணியாக்கப்பட்ட 200 ஜேர்மன் இராணுவத்தினர் உள்ளனர். மஸார்- இ- ஷாரீவில் நிறுத்தி வைக்கப்பட்டு இப்பிரிவு முக்கியமாக வடக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கும் நாட்டின் தென் பகுதிக்கும் இப்படை செல்லக் கூடும் என்பதுடன் QRF நடவடிக்கைக்கு கால வரம்பு ஏதும் கிடையாது. இராணுவத் திட்டமிடுவோர் இப்படைகள் 10ல் இருந்து 15 ஆண்டுகள் வரை அந்நாட்டிற்கு தேவைப்படும் என மதிப்பிட்டுள்ளனர். இதுவரை QRF ஜேர்மனியின் பொறுப்பின் கீழ் 2006இல் இருந்து செயல்பட்டுவந்த ஒரு நோர்வே நாட்டுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.பாதுகாப்பு மந்திரி ஃபிரன்ஸ் யோசெவ் யுங் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்- CDU) புதிய படைகள் ஈடுபடுத்தப்படுவது கூடுதலான இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தை கொண்டுள்ளது என்பது பற்றி ஜேர்மனிய மக்கள் தெரிந்திருக்கவேண்டும் என வலியுறுத்திக் கூறினார். கட்டுப்பாட்டு மாற்றம் நிகழ்ந்த சூழ்நிலை எந்த அளவிற்கு ஜேர்மன் இராணுவம் தீவிரமடைந்துவரும் போரில் ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்தது என்பதை தெளிவாக்குகின்றது. ஜேர்மனிய படைகள் அனுப்பப்படும் ஒரு இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின் போதே குண்டுஸ் என்ற இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஜேர்மன் இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். இரு ஜேர்மனிய படையினர் குண்டுத் தாக்குதலில் காயமுற்றனர். இராணுவ அறிக்கை ஒன்றின்படி உயிருக்கு ஆபத்து எதையும் அத்தாக்குதல் கொடுக்கவில்லை. கடந்த புதனன்று தாலிபன் பிரிவுகள் காபூலுக்கு அருகே கூட்டணி படையினர் பலரை கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டரை டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை பயன்படுத்தி வீழ்த்தினர். வார இறுதியில் ஒரு தற்கொலை குண்டுவீச்சு தாக்குதல் தலைநகரில் இந்திய தூதரகத்திற்கு அருகே குறைந்த பட்சம் 40 பேர் உயிரை பலிகொண்டது. நாட்டை வெளிநாட்டு படைகள் ஆக்கிரமித்தற்கான எதிர்ப்பு தெளிவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தெற்கிலும், கிழக்கிலும் சாதாரண மக்களை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யும் அமெரிக்க தலைமையிலான நீடித்த சமாதானத்திற்கான நடவடிக்கையில் (Operation Enduring Freedom-OEF) ஈடுபட்டிருக்கும் படையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகமாகி இருப்பது மட்டும் இல்லாமல், சர்வதேச பாதுகாப்பு படைகளுக்கு (ISAF) எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன; ISAF இனை சிவில் உதவி, சமாதானம் ஆகியவற்றிற்கான சக்தி என்று ஜேர்மன் பிரசாரம் செய்ய முற்பட்டுள்ளது. சமீப மாதங்களில் இறப்புக்கள், காயங்கள் தொடர்பு உடைய தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கடந்த புதனன்று ஐரோப்பாவின் நேட்டோ இராணுவத் தளபதி அமெரிக்க ஜெனரல் ஜோன் கிராட்டோக் ஆப்கானிஸ்தானில் சீர்குலைந்துள்ள நிலைமையின் உண்மைகளை வெளிப்படுத்தினார். இவர் கொடுக்கும் எண்ணிக்கைப்படி, IASF மற்றும் தாலிபானுக்கு இடையே பூசல்கள் வசந்தகாலத்தில் இருந்து 41 சதவிகிதம் அதிகரித்து விட்டன. icasualties.org என்ற வலைத் தளம் ஜூன் மாதம் கூடுதலான கூட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானத்திலும் (45) ஈராக்கிலும் (30) இறந்துவிட்டதாக கூறியிருக்கிறது. 2001 கடைசியில் தாலிபான் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் இது மிக அதிக எண்ணிக்கை ஆகும். இரு நாடுகளிலும் பெரும்பாலான இராணுவ இறப்புக்கு உள்ளானவர்கள் அமெரிக்கர்கள் ஆவர். முன்பு குவான்டனாமோ சிறைக்கு தலைவராக இருந்த தளபதி கிராட்டோக் இந்த எண்ணிக்கைகளை பயன்படுத்தி ஐரோப்பியர்கள் கூடுதலான இராணுவத்தினரை அனுப்ப வேண்டும் என்று வாதிட்டுள்ளார். போர்ப்பகுதியில் விரைவாக செல்வதற்கு நேட்டோ துருப்புக்களுக்கு சிறந்த கருவிகள் வேண்டும் என்றும் அவர் விளக்கினார்; அதேபோல் தேசிய அரசாங்கங்கள், அப்படைகளை பயன்படுத்துவது பற்றி அதிக கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறினார். கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறையினால் வெளியிடப்பட்ட ஒரு 72 பக்க அறிக்கையும் அமெரிக்க, நேட்டோ, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பியப் படைகளின் கூட்டு இராணுவங்கள் எந்த அளவிற்கு எதிர்ப்பை சந்திக்கின்றன என்பதை எடுத்துக்காட்டியது. ஒரு கட்டத்தில் இந்த அறிக்கை ஆப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பை "அழிக்க முடியாத எழுச்சி" என்று விவரித்துள்ளது. 2008 முழுவதும் தாலிபான் தற்போதைய தாக்குதல் வேகத்தை தக்க வைத்துக்கொள்ளும் அல்லது அதிகப்படுத்தும் என்றும் கணித்துள்ளது. மேலைத் துருப்புக்கள் நாட்டின் தெற்கில் தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பல கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணி என்ற இரு நீடித்த எதிர்ப்பை எதிர்கொள்கின்றன என்று அறிக்கை கூறுகிறது. இந்த மே மாதம் ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் ஜேர்மனியர்கள் இரண்டாம் மிகப் பெரிய அளவில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தட்ட 60 ஜேர்மனிய படையினர் "Operation Karez" என அழைக்கப்பட் நடவடிக்கையில் தொடர்பு கொண்டிருந்தனர். இத்தாக்குதலுக்கு ஜேர்மனிய பிரிகேடியர் ஜெனரல் டீட்டர் டாம் யாகோப் என்ற ISAF இன் வடக்கு பிராந்திய கட்டுப்பாட்டு தலைவர் தலைமை தாங்கினார். German-Foreign Policy.com என்னும் வலைத் தளத்தின் கூற்றின்படி, இத்தாக்குதலின் நோக்கம் கடந்த ஆண்டு நேட்டோ கிளர்ச்சியாளர்களிடம் இழந்துவிட்ட பகுதியின் கட்டுப்பாட்டை மீட்பது ஆகும். அந்த நேரத்தில், ஜேர்மனியக் கட்டுப்பாட்டின் முதல் போர் நடவடிக்கையின்கீழ், ISAF அப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள்மீது தாக்குதல் ஒன்றை நடத்தியது (Operation Harekate Yolo). இரு நடவடிக்கைகளும் ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் நோர்வேஜிய விரைவுப் படைகளினால் நடத்தப்பட்டன.செய்தி ஊடக தகவல்களின்படி, இந்த சமீபத்திய இராணுவத் தாக்குதல் ஜேர்மனியின் அதிகார வரம்பிற்கு புறத்தே உள்ள பகுதியில் நடைபெற்றது; இது ஆப்கானிஸ்தானத்தில் நாட்டின் துருப்புக்கள் எப்படி இயங்கவேண்டும் என்று ஜேர்மனிய பாராளுமன்றம் விதித்த முறைகளை ஒருவேளை மீறியிருக்கக்கூடும். கட்டுப்பாட்டு மாற்றம் நடந்த நேரத்தில் டீட்டர் டாம் யாகோப் நோர்வேஜிய QRE மற்றும் தளபதி Kjell Inge Baekken இற்கு நன்றி செலுத்தினார். தாலிபனுக்கு எதிராக எடுக்கப்பட்ட "Karez" நடவடிக்கைக்கான QRF இன் ஆதரவு, "உறுதியான இராணுவ வலிமை நிறைந்தது" என அவர் கூறினார். இதற்கு பதில் கூறுகையில் Baekken வரவிருக்கும் மாதங்களில் ஜேர்மனியர்கள் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதைக் கணிப்பது கடினம் என்றார். "ஆனால் ஆபத்துக்கள் நிறைந்துள்ளன" என்றார். இந்த சமீபத்திய கட்டுப்பாட்டு மாற்றம் ஜேர்மனிய துருப்புக்களை குருதி கொட்டும் மோதல்களில் ஈடுபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜேர்மனிய இராணுவவாதத்தின் புதுப்பித்தலில் இது ஒரு புதிய கட்டத்தை பிரதிபலிக்கிறது; போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனிய அரசியலமைப்பு இதை கடுமையாக வரம்பிற்கு உட்படுத்தியிருந்தது. ஜேர்மனிய இராணுவ நடவடிக்கையில் விரிவாக்கம் அதே நேரத்தில் ஜேர்மனிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் அது கொண்டிருக்கும் துருப்பு எண்ணிக்கையை 1000 படையினரால் கூடுதலாக உயர்த்த விரும்புகிறது. கடந்த வாரம் இது ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரியால் அறிவிக்கப்பட்டது. வருங்காலத்தில் இன்னும் கூடுதலான 1,000 ஜேர்மனிய படையினர் தற்பொழுது இருக்கும் 3,500 பேருடன் அதிகமாக இருப்பர். "சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளுவற்கு" இது உதவும் என்று யுங் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் தன்னுடைய பணியை ஜேர்மனிய இராணுவம் தொடங்கியபோது இருந்த படைகளைப் போல் நான்கு மடங்காகி இந்த எண்ணிக்கை 4,500 ஆகிவிடும். ஜேர்மனிய பாராளுமன்றம் இந்த இலையுதிர்காலத்தில் படைகளை விரிவாக்கம் செய்யலாமா என்பது பற்றி வாக்களிக்கும்; ஆனால் ஆளும் கூட்டணி (சமூக ஜனநாயக கட்சி -கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-SPD-CDU) மற்றும் எதிர்த்தரப்பு பசுமைக் கட்சி, வணிக சார்பு உடைய தாராளவாத ஜனநாயக கட்சி இரு பிரிவிலும் விரிவாக்கத்திற்கு பரந்த பெரும்பான்மை ஆதரவு உள்ளது. இடது கட்சி (Left Party) ஒன்றுதான் இத்தகைய விரிவாக்கத்தை எதிர்க்கிறது. ஆனால் எதிர்காலத்தில் ஒரு தேசிய மட்டத்தில் கூட்டணி அரசாங்கத்தில் தானும் பங்கு பெறுவதற்கு பேரம் பேசுவதற்கு ஆப்கானிஸ்தானின் படை விரிவாக்கப் பிரச்சினையை இடது கட்சி பயன்படுத்தக்கூடும் என்பற்கான அடையாளக் குறிப்புக்கள் தென்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய செயற்பாடுகளுக்கான தற்போதைய அங்கீகாரம் அக்டோபர் 13, 2008 வரை உள்ளது; இதை டிசம்பர் 2009 வரை நீடிக்க யுங் திட்டமிட்டுள்ளார். வருடாந்த புதுப்பித்தலுடன் கூடுதலான இரு மாத விரிவாக்கம் என்பது அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இக்கேள்வி ஒரு பிரச்சினையாக வருவதை தடுக்கும் நோக்கத்தை தெளிவாகக் கொண்டுள்ளது. துருப்புக்கள் திட்டமிடப்பட்டு அதிகரிக்கப்படுவது என்பது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU-CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சியினால் கிட்டத்தட்ட ஒரு மனதான வரவேற்பை பெற்றது. சமூக ஜனநாயக கட்சி "இடதும்" துணைத் தலைவரான Niels Annen ஐ பொறுத்த வரையில் இந்த விரிவாக்கம் "சரியானதுதான்"; படைகள் அனுப்பிவைக்கப்படுவதின் தளத்தில் எந்த அடிப்படை மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. சில பசுமைகட்சி வாதிகள் கவலை தெரிவித்தாலும், கட்சியின் தலைமை அடிப்படையில் இந்த அதிகரிப்பை "இராணுவக் கண்ணோட்டத்தில் உணர்ந்து கொள்ளக் கூடியதே" என்று ஏற்றுக் கொண்ணுள்ளது. பல வர்ணனையாளர்களும் ஜேர்மனிய இராணுவ நடவடிக்கை அதிகமாக தீவிரப்படுத்துவதை அமெரிக்கா, நேட்டோ இவற்றின் அழுத்தத்தின் விளைவு என்று விளக்க முற்பட்டுள்ளனர். உண்மையில், ஜேர்மனிய இராணுவத் தலையீட்டுக் கொள்கையை அதிகமாக்கும் தற்போதைய பெரும் கூட்டணியின் செயல் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயக கட்சி, பசுமைவாதிகளின் கூட்டணி அரசாங்கம் தொடக்கிய நடவடிக்கையை அதிகப்படுத்திருப்பதுதான். பசுமைக் கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரியான ஜோஷ்கா பிஷ்ஷர்தான் 1998இல் யூகோஸ்லேவியாவிற்கு ஜேர்மனிய படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்; அது போல் ஆப்கானிஸ்தானிற்கு ஜேர்மனிய துருப்புக்களை அனுப்பிவைப்பதிலும் அவர் முக்கிய பங்கை கொண்டிருந்தார். 2001ம் ஆண்டு பீட்டர்ஸ்பேர்க் மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார்; அதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் எடுபிடியான ஹாமிட் காஸாய் இனை ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமித்தது. ஒரு அரசியல் வர்ணனையாளர் என்ற முறையில் பங்கைக் கொண்டு இருக்கும் பிஷ்ஷர் பல மாதங்களாக ஜேர்மனி ஐரோப்பிய, உலக அரங்கில் அதன் அரசியல், இராணுவப் பங்கை தீவிரப்படுத்த வேண்டும், அதுதான் ஜேர்மனிய வணிக நலன்களைக் காக்கும் எனக் கூறிவருகிறார். பல விதங்களிலும் அவர் ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் நலன்களைத்தான் தெளிவாக எடுத்துக் கூறி அதன் உருவகமாகவும் உள்ளார். ஐரோப்பாவில் பெரும் சக்திகளுக்கு இடையே (எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனிக்கும் பிரான்சிற்கும் இடையே), இன்னும் நெருக்கமான கட்டாயமாக ஜேர்மன் தலைமையிலான ஒரு தன்னிறைவான ஐரோப்பிய வெளிநாட்டு தலையீட்டு படை என்பது தேவை என்று பிஷ்ஷர் பலமுறையும் அழைப்புவிடுத்துள்ளார். |