World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Inflation worsens as China lifts petrol prices

சீனா பெட்ரோல் விலைகளை உயர்த்தியதால் பணவீக்கம் மோசமடைகிறது

By John Chan
4 July 2008

Back to screen version

ஒரு பாரிய மாற்றமாக, ஜூன் 19ல் சீன அரசாங்கம் சில்லறை பெட்ரோல் விலைகளை 16 முதல் 18 சதவீதம் உயர்த்தியது. இந்த நடவடிக்கை பணவீக்கத்தை தவிர்க்க முடியாமல் மேலும் உயர்த்தும் என்பதுடன் சமீப மாதங்களில் பிற ஆசிய நாடுகளில் ஏற்பட்ட அதே முறைமைகளையே பின்தொடர்கிறது. ஓர் அரசியல் ரீதியான உணர்வுள்ள முடிவாக, ஆகஸ்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு பின்னர் தான் பெய்ஜிங் விலைகளை உயர்த்தும் என எதிர்பார்த்திருந்த பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு இந்த நடவடிக்கை ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகள் உலகளவில் எதிர்ப்பலைகள் மற்றும் போராட்டங்களை தூண்டி விட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை தரம் தான் பெருமளவிலான தொழிலாளர்களும், மாணவர்களும் எதிர்ப்புகளில் ஈடுபடுவதற்குரிய முக்கிய காரணிகள் என்பதை 1989 ஜூன் மாதம் தியானன்மென் சதுக்கத்தில் இராணுவத்தால் ஒடுக்கப்பட்ட போராட்டங்கள் மூலம் சீனா நன்கு அறிந்துள்ளது.

தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு குழு பெட்ரோல் விலையுயர்வு முடிவை பின்வருமாறு அறிவித்தது: "சர்வதேச எண்ணெய் விலைகளின் கடுமையான உயர்வுகளால், சில சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட வேண்டியதாயிற்று. இது பெட்ரோல் நிலையங்களில் வரிசைகளையும் சில பிராந்தியங்களில் பங்கீட்டு முறையும் ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் விலைகளில் செய்யப்பட்டுள்ள இந்த பொருத்தமான உயர்வுகள் வினியோகத்தை அதிகரிக்க உதவும் என்பதுடன் எரிசக்தி சேமிப்பையும் ஊக்குவிக்கும்."

பெய்ஜிங் சில்லறை பெட்ரோல் விலையில் 16.7 சதவீதமும், டீசல் விலையில் 18.1 சதவீதமும் உயர்த்தியதால் பெட்ரோல் ஒரு தொன்னுக்கு 6,980 யான் (1,015 அமெரிக்க டாலர்) மற்றும் டீசல் விலை ஒரு தொன்னுக்கு 6,520 யான் என்ற அளவை எட்டியுள்ளன. இத்துடன், மே 12ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் மற்றும் ஏழைமையான மத்திய ஆசிய மாகாணமான ஜின்ஜியாங் ஆகியவை தவிர்த்து பிற இடங்களில் மின்சாரத்தின் சில்லறை விலையையும் பெய்ஜிங் சராசரியாக 4.7 சதவீதம் உயர்த்தியது.

வளர்ந்து வரும் பிற ஆசிய நாடுகளைப் போன்றே, சீனாவும் உள்நாட்டு முதலீடுகளை செய்வதன் மூலம் சர்வதேச அளவை விட குறைவான விலையில் எரிபொருள் விற்கப்படுகின்றது. அதன் விளைவாக, பெட்ரோசீனா மற்றும் சீனோபெக் போன்ற அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களும், சுத்திகரிப்பு ஆலைகளும் பாரிய நிதி இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் அவை உற்பத்தியை குறைக்க அல்லது அவற்றின் உற்பத்தியையும் இறக்குமதியையும் நிறுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன. சில சிறு சுத்திகரிப்பு ஆலைகள் திவாலாகி விட்டன. இதே காரணங்களுக்காக, நவம்பரில் 9-10 சதவீதம் எண்ணெய் விலைகளை சீனா உயர்த்த வேண்டி இருக்கும்.

Deutsche Bank பொருளாதார நிபுணர் ஜுன் மா கூறுகையில், "ஒலிம்பிக் விளையாட்டின் முன் பணவீக்கத்தை விட எரிசக்தி பற்றாக்குறை என்பது தான் ஸ்திரத்தன்மைக்கான ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக நிற்கிறது. எரிபொருள் பற்றாக்குறை சமீபத்திய வாரங்களில் சீனா முழுவதிலும் உள்ள பல நகரங்களின் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளை உருவாக்கி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் வகையில் போக்குவரத்துத்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் அரசு நிர்ணயித்த பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.85 டாலராகும். இது அமெரிக்காவில் விற்கப்படும் 1.08 டாலர் மற்றும் இங்கிலாந்தில் விற்கப்படும் 2.33 டாலர் விலையை விட குறைவானது. இந்த குறைவான விலைகளே வேகமாக விரிவடைந்து வரும் வாகனத்துறையின் உந்துசக்தியாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வாகனத்துறையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக தற்போது சீனா விளங்குகிறது.

எண்ணெய் விலைகளை உயர்த்த கோரி அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்தின், குறிப்பாக வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் பெய்ஜிங் வந்திருக்கிறது. சீனாவின் எண்ணெய் தேவையே விலை உயர்வை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி இருந்தார்கள். கடந்த வாரம், எண்ணெய் விலைகளில் பெய்ஜிங் அதன் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட, ஜனநாயக கட்சியின் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் புஷ் நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். "பெற்றோல் நிலையங்களில் உந்தப்படுவதை பார்க்கையில் சீனாவில் என்ன நடக்கிறது என்பதன் ஒரு பகுதியாக அமெரிக்கர்கள் பார்த்து வருகிறார்கள்." என்று அவர்கள் எழுதினார்கள்.

Wall Street பத்திரிகை பின்வருமாறு எச்சரித்தது: "பணவீக்கம் என்பது உலகளவில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருப்பதால், சீனாவின் சர்வதேச பொருளாதார விடயமாக இருந்து வரும் அதன் செலாவணி கொள்கைகள் மீதான நீண்டகால சச்சரவின் இடத்தை சீனாவின் விலை கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியல் கூச்சல்கள் எடுத்துள்ளது."

சீனாவின் எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் நியூயோர்க்கில் 2 சதவீதம் வீழ்ச்சியுற்றன. எவ்வாறிருப்பினும், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்களின் வேகமான வளர்ச்சிக்கு இடையில் நீண்ட கால அடிப்படையில், சீனாவின் எண்ணெய் தேவை குறைவது சாத்தியமில்லை. ஏற்கனவே எண்ணெய் நுகர்வில் சீனா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் 2007 முதல் 2030 வரையிலான காலத்தில் உலகளவிலான எண்ணெய் தேவையின் அதிகரிப்பில், சீனா மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் என சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணித்துள்ளது.

மோசமடையும் பணவீக்கம்

அதிகரித்திருக்கும் எரிபொருள் விலைகள் பணவீக்கத்தை மேலும் மேலும் மோசமடைய செய்யும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். ஏப்ரலில் 8.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் சற்றே குறைந்து மே மாதம் 7.7 சதவீதத்தை எட்டியது. அதேசமயம் 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெப்ரவரியில் 8.7 சதவீதமாக இருந்தது.

எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட உடனேயே நிதி அமைச்சகம், விவசாயிகள், டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 19.8 பில்லியன் யான் அல்லது 2.9 பில்லியன் டாலர் மானியத்தை அறிவித்தது. கார் உரிமையாளர்கள் மிகவும் குறைவாக இருக்கும் போதினும், அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெய்ஜிங்கில் பெட்ரோல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த ஒரு கார் ஓட்டுனர் லீ ஹாங்கூ பைனான்சியல் டைம்ஸ் இதழிடம் ஜூன் 20 இல் தெரிவிக்கும் போது: "விலை உயர்வு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதிகாரிகளின் கார்களுக்கும், பணக்காரர்களுக்கும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் சாதாரண மக்களுக்கு இந்த சுமை மிகவும் கடுமையானது." என்று தெரிவித்தார்.

இந்த விலையுயர்வால் தமது மாத வருமானமான 2,000 யானில் (290 டாலர்) கால் பகுதி வெட்டுபட்டாலும் கூட தான் ஓட்டுவதை நிறுத்த போவதில்லை என்று ஒரு டாக்ஸி ஓட்டுனரான கோங் ஃபான்ஷன் பெய்ஜிங்கில் பிரான்ஸ் பத்திரிக்கை நிறுவனத்திடம் (AFP) தெரிவித்தார். டாக்ஸி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், அவர் உத்திரவாத தொகையான 20,000 யான் இழக்க வேண்டி இருக்கும். "அதற்கும் மேலாக, எனக்கு கார் ஓட்டுவது மட்டும் தான் தெரியும். என் வயதுடைய நபர்களுக்கு வேறெந்த வேலையும் கிடைக்காது. பெரும்பாலான டாக்ஸி ஓட்டுனர்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

தமது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும்போது, தமது சிறிய வியாபாரம் பாதிக்கப்படும் என்று ஒப்பனை பொருட்கள் விற்பனை கடைக்காரர் சைமன் யாங் தெரிவித்தார். "குறிப்பாக பிறவற்றின் விலைகள் அதிகமாக இருக்கும் நிலையில், நிச்சயமாக இது நியாயமற்றதாகும். எரிவாயுவின் விலை உயர்வைத் தொடர்ந்து எல்லாவற்றின் விலையும் உயரும்." என்று அவர் தெரிவித்தார்.

பெருமளவிலான மக்களுக்கு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகள் உயர்ந்த போக்குவரத்து கட்டணங்களாக மாற்றமடையும். போக்குவரத்து செலவில் 8 சதவீத உயர்வு என்பது சீனாவின் பணவீக்க விகிதத்தில் மேலும் 2.3 சதவீதத்தை கூட்டும் என்று Credit Suisse First Boston (CSFB) கணித்தது.

உலக வங்கி அதன் சமீபத்திய காலாண்டு மதிப்பீட்டில், 2008 இல் சீனாவிற்கான பணவீக்க கணிப்பை 4.8 இல் இருந்து 7 சதவீதமாக மறு மதிப்பீடு செய்துள்ளது. அது குறிப்பிட்டதாவது, உணவு பொருட்களின் மோசமான விலை உயர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், தொழில்துறை மூலப்பொருட்கான விலை உயர்வுகளால் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தையும் சீனா சந்தித்து வருகிறது. ஜூன் 23ல், உடனடியாக, ஆங்கிலோ-ஆஸ்திரேலிய சுரங்க தொழில் பெருநிறுவனமான BHP-Billiton மற்றும் Rio Tinto இரண்டும் ஒரு புதிய சாதனை அளவாக இரும்பிற்கு 100 சதவீதத்திற்கும் மேலான விலைகளை அளிக்குமாறு சீன எஃகு நிறுவனங்களுக்கு அழுத்தம் அளித்தன.

சீனாவில் பல சிறு தொழில் ஆலைகள் மூடப்பட்டும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதாரம் சரிவடைந்திருந்த போதிலும், உலக வங்கி இந்த ஆண்டு 9.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை நம்பிக்கையுடன் கணித்தது. அரசாங்கம் வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், பணவீக்கத்தை எதிர்த்து போராட யான் மதிப்பை உயர்த்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 1.76 ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய போதினும், சொத்துக்களை பணமாக மாற்றுவதின் அதீததன்மை பணவீக்கத்தை அதிகரிக்கசெய்கின்றது என்ற அச்சத்தை அவ்வங்கி நிராகரித்தது. .

சீன அரசாங்கத்தின் ஆய்வு இதிலிருந்து வேறுபடுகிறது. சீனாவின் பாரிய வர்த்தக பற்றாக்குறையை (2007 இல் 256 பில்லியன் டாலர்) குறைக்க புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் இருந்து வரும் அழுத்தத்தின் கீழ், 2005 இல் பெய்ஜிங் யான்- அமெரிக்க டாலர் இடையிலான இணைப்பை துண்டித்து, அதற்குபதிலாக ஒரு தொகை நாணயங்களுடன் இணைத்துக்கொண்டது. பின்னர் யான் படிப்படியாக டாலருக்கு எதிராக 10 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பை பெற்றது. யான் மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்படும் மற்றும் வட்டி விகிதங்கள் உயரும் என்ற எதிர்பார்ப்பில் சீனாவில் ஊக மூலதனம் அதிகமாக பாய்ந்தது.

ஏப்ரலில், அரசு தகவல் மையத்தின் பொருளாதார முன்கணிப்பு துறையின் துணை தலைவர் ஜூ பெளலிங், ஒட்டுமொத்தமாக 2007ம் ஆண்டின் 120 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் முதல் காலாண்டில் மட்டும் ஊக மூலதனம் 80 பில்லியன் டாலரை எட்டியிருப்பதாக கணித்திருந்தார். சமூக விஞ்ஞானத்திற்கான சீன பயிலகத்தின் ஓர் ஆய்வாளர் ஜாங் மிங் ஒரு புதிய கணிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது, 2003 இல் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக ''அதிகவட்டியை எதிர்பார்க்கும் பணம்'' (Hot money) 1.75 ட்ரில்லியன் டாலராக இருக்கலாம் என அவர் தெரிவித்திருந்தார். இது முந்தைய கணிப்பான 500-600 பில்லியன் டாலரை விட மிக அதிகமாகும்.

ஊக வியாபாரிகள் திடீரென பின்வாங்குவதில் உள்ள அபாயங்கள் குறித்தும் ஜாங் எச்சரித்திருந்தார். "ஆசிய நிதி நெருக்கடியை (1997-98 இல்) போன்று ஒரு பெரியளவு வெளியேற்றத்திற்கான சாத்தியப்பாடு பாரியளவில் இல்லை. ஆனால் பொருளாதார அடிப்படைகள் குறிப்பிடத்தக்களவு மாறும் என்று அவர்கள் நினைத்தால், வெளியேறும் முதலீடுகள் பாரியளவிலானதாக இருக்கும்." என்று அவர் தெரிவித்தார்.

ஜூன் 16 இல் South China Morning Post பத்திரிகை குறிப்பிட்டதாவது: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் ஊக வாணிபத்தில் ஈடுபடுவதில்லை, அரசுத்துறை நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் கூட இதில் ஈடுபடுகின்றன. " நாட்டினுள் ஸ்திரமான பணத்தை கொண்டுவருவதற்காக ஏற்றுமதி அறிக்கைளை பிழைப்படுத்தி காட்டி, யானின் மதிப்பின் உயர்வை பயன்படுத்திக் கொள்ளும்." அதே நேரம், யானின் மதிப்பு உயர்வால் பேர்ல் மற்றும் யாங்ட்ஜ் நதி படுகையில் அமைந்துள்ள ஏற்றுமதி தொழில் ஆலைகள் பாதிக்கப்படும். அவை ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் 10 முதல் 20 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான பதட்டங்களும் அதிகரிக்கின்றன. கடந்த மாதம் அமெரிக்கா-சீனாவிற்கு இடையில் நடந்த "மூலோபாய பொருளாதார பேச்சுவார்த்தைகளின்" போது, அமெரிக்க கருவூல செயலாளர் ஹென்றி போல்சன், பெய்ஜிங் அதன் எண்ணெய் விலை கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், யானின் மதிப்பை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்காவில் குறைந்த பிணையுள்ள அடமானக்கடன் துறை சிக்கலில் இருக்கிறது என்பதற்காக, சீனா இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்த கூடாது என்று சீன அதிகாரிகள் எதிர்கருத்து தெரிவித்தனர்.

சீனாவின் மத்திய வங்கி தலைவர் ஜொ ஜியாசுவாங் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்: "குறு பொருளாதார (Macroeconomic) விதிமுறைகள் மற்றும் சந்தை பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை அமெரிக்காவின் அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ள சீனா ஆர்வம் கொண்டிருப்பது உண்மைதான், ஆனால் கொந்தளிப்புக்கு (அடமானக்கடன் துறை நெருக்கடி) பின்னர் ஏற்பட்ட அமெரிக்காவின் அனுபவத்தில் இருந்து என்ன பாடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதையே நாங்கள் தற்போது பார்த்து வருகிறோம். நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டதாவது: "அமெரிக்க பொருளாதாரம் மிகவும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லும் அமெரிக்காவின் வெளிப்படையான பாசாங்கால் சீன அதிகாரிகள் எரிச்சலைடைந்திருப்பது போல் தோன்றுகிறது."

அமெரிக்க டாலரின் வீழ்ச்சிக்கும், அடமானக்கடன் சந்தை நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுக்கும் மற்றும் பிற உலகளாவிய பொருளாதார பிரச்சனைகளுக்கும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வரும் போதிலும், சீன அதிகாரிகள் தங்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து கவலை அடைந்துள்ளனர். அது விரைவிலேயே சீன பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் அது சமூக மற்றும் அரசியல் அமைதியின்மைக்கும் இட்டு செல்லும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved