World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Fed minutes show extent of Bear Stearns crisis

மத்திய வங்கி கூட்டமைப்பின் குறிப்புக்கள் பேர் ஸ்டேர்ன்ஸ் நெருக்கடியின் பரிமாணத்தை காட்டுகின்றன

By Nick Beams
30 June 2008

Back to screen version

வசனங்கள் அதிகாரத்துவ ரீதியாக ஒன்றையும் வெளிப்படுத்தாததாக இருந்தாலும்கூட, மத்திய வங்கி கூட்டமைப்பின் (Federal Reserve Board-FED) மார்ச் 14, 16 அவசர கூட்டங்களின் குறிப்புக்கள் முதலீட்டு வங்கியான பேர் ஸ்டேர்னஸ் (Bear Stearns) சரியப் போகிறது என்பது தெரியவந்தவுடன் நிதி அதிகாரிகளை பற்றிக்கொண்ட சில பயங்களை நன்கு வெளிப்படுத்துகின்றன.

மார்ச் 13ம் தேதி பேர் ஸ்டேர்ன்ஸ் அதற்கும் பிற அரசாங்க அமைப்புக்களுக்கும் தமது சொத்துக்களை பணமாக்க கூடிய நிலை (Liquidity) மோசமடைந்துவிட்டது, மாற்று நிதி ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றால் மறுநாள் திவால் நிலையை தாக்கல் செய்யவேண்டியிருக்கும் என்று தெரிவித்தபோது மத்திய வங்கி கூட்டமைப்பு தலையிட வேண்டியதாயிற்று. முந்தைய ஜூன் மாதத்தில் இருந்தே அதன் உடைமையாக இருந்த இரு பெரிய தனியார் முதலீட்டு நிதியங்கள் (Hedge fund) சரிவுற்று கிட்டத்தட்ட முதலீட்டாளர்களின் நிதி 1.6 பில்லியன் டாலர்கள் இழக்கப்பட்டதில் இருந்தே பேர் ஸ்டேர்ன்ஸ் பெருகிய முறையில் கஷ்டங்களை எதிர்கொண்டு வந்தது.

மத்திய வங்கி கூட்டமைப்பின் தலைமைக்குழு ஆளுனர்கள் மறுநாள் காலை 9.15க்குக் கூடி பிணை எடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்க முற்பட்டனர். குறிப்புக்கள் தெளிவாகக் காட்டுவது போல் முழு நிதிய முறையும் பொறியும் தறுவாயில் உள்ளது என்ற உண்மையான பயத்தால் சூழப்பட்டிருந்தது.

"இப்பொழுது நிதியச் சந்தைகளின் உடைந்து விடும் தன்மையை எடுத்துக்கொண்டால், பேர் ஸ்டேர்ன்ஸின் முக்கிய நிலைமை அச்சந்தைகளில் இருப்பதை உணர்கையில், பேர்ஸ்டேர்ன்ஸ் உடனடியாக சரிந்தால் விளையக்கூடிய தொடர்ந்த விளைவுகளின் எதிர்பார்ப்பை கருத்திற்கொண்டு, கிடைக்கக்கூடிய சிறந்த மாற்றீடு நியூயோர்க்கில் இருக்கும் JP Morgan Chase & Co உடன் உடன்பாட்டின் மூலம் பேர் ஸ்டேர்ன்ஸின் நெருக்கடி தற்காலிக உதவி அளித்தல் என்ற முடிவிற்கு குழுவின் உறுப்பினர்கள் வந்துள்ளனர். இத்தகைய கடன் பேர் ஸ்டேர்ன்ஸ் நிலைமைக்கு ஒரு தீர்வு காண்பதை எளிதாக்கும்; அது நிதிய உறுதிப்பாடு காக்கப்பட வேண்டும் என்ற கருத்திற்கு இணக்கமாக இருக்கும்" என்று அக்குறிப்புக்கள் கூறுகின்றன.

JP Morgan Chase மூலம் பேர்ஸ்டேர்ன்ஸுக்கு கடன் கொடுப்பதற்கு தலைமைக்குழு ஒப்புதல் கொடுத்தது மட்டும் இல்லாமல் இன்னும் பரந்த அளவில் நிதியங்கள் கிடைக்குமாறும் செய்தது.

"இருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கோண்டு" தலைமைக்குழு, நியூயோர்க்கின் மத்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னன்கேயுடன் ஆலோசனை நடத்தி "மத்திய வங்கி கூட்டமைப்புடன் நேரடியாக வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கும் (Primary securities dealers) நிதி கொடுக்க இசைவு கொடுக்கிறது; கடன் வாங்குபவர்களுக்கு பிற வங்கிகளில் இருந்து போதுமான கடன்வசதி கிடைக்கவில்லை என்ற இந்த நிலையில் இவ்வாறு செய்யப்படுகிறது" என்று குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

வேறுவிதமாகக் கூறினால், பேர் ஸ்டேர்ன்ஸின் சரிவு ஒரு பெரும் பொது நம்பிக்கை நெருக்கடியை நிதியச் சந்தைகள் முழுவதும் ஏற்படுத்தி கடன் எவருக்கும் இல்லாமல் வறண்டு போகும் என்று தலைமைக்குழு அஞ்சியது.

கூட்டம் அழைக்கப்பட்டிருந்த அவசரத்தில் தலைமைக்குழுவிற்கு தேவையான ஐந்து ஆளுனர்களுக்கு கூட அழைப்புவிட முடியவில்லை; எனவே அவசரநிலை அதிகாரங்களை பயன்படுத்தி, இருக்கும் நான்கு பேரைக் கொண்டு முடிவுகளை எடுத்தது.

மத்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் பெர்னன்கே ஒரு அமெரிக்க மற்றும் உலகந்தழுவிய நிதியமுறை சரிவிற்கான சாத்தியம் இருப்பதை பின்னர் அமெரிக்க காங்கிரசிடம் நெருக்கடி பற்றி சாட்சியம் அளிக்கையில் விவரித்தார். பேர் ஸ்டேர்ன்ஸ் மிகப் பரந்த அளவில் "பரந்தளவிலான நெருக்கடி சந்தைகளில்" தொடர்பு கொண்டிருந்ததால், அது திடீரென சரிதல் என்பது "சந்தைகளில் பெரும் குழப்ப நிலைகளை ஏற்படுத்திவிடும், நம்பிக்கை இழக்குமாறு செய்துவிடும். அந்நிறுவனத்தில் தோல்வி பேர்ஸ்டேர்ன்ஸின் ஆயிரக்கணக்கான உதவி அமைப்புக்கள் மற்றும் இதே தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் நிலைப்பாட்டின்மீதும் நிதிச் சந்தேகங்களை ஏற்படுத்திவிடும்'' என்றார்.

"உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிய முறையில் இருக்கும் அசாதாரண அழுத்தங்களை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, பேர் ஸ்டேர்ன்ஸ் செய்யும் தவறு கடுமையாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் ஆகிவிடும். மேலும் அதன் தவறு நிதிய முறையோடு நிற்காமல் மிகப் பரந்த அளவில் யதார்த்தமான பொருளாதாரத்திலும் படர்ந்து நிற்கும்; ஏனெனில் அதன் தாக்கம் சொத்து மதிப்புக்கள் மற்றும் கடன் வழங்கும் நிலைமையிலும் படர்ந்து உள்ளன."

"நெருக்கடியான சந்தைகளில்" பேர் ஸ்டேர்ன்ஸின் தொடர்பின் பரிமாணம், உலகெங்கிலும் இருக்கும் நிறுவனங்களுடனான வணிகத் தொடர்புகள் மூலம் புலப்படுகிறது. இது கிட்டத்தட்ட $2.5 டிரில்லியன் என்று உள்ளது.

மிகப் பரந்த அளவில் அவை இருப்பதால், மார்ச் 14ம் தேதி மத்திய வங்கி கூட்டமைப்பு எடுத்த முடிவுகள்கூட நெருக்கடியை நிறுத்த முடியவில்லை; ஆளுனர் குழு மீண்டும் ஞாயிறு மார்ச் 16 பிற்பகல் கூட்டப்பட்டு, பேர் ஸ்டேர்ன்ஸை JP Morgan Chase இற்கு விற்க ஏற்பாடு செய்தது. இந்த உடன்பாட்டின் முக்கிய கூறுபாடு என்னவெனில், பேர் ஸ்டேர்ன்ஸ் இன் $30 பில்லியன் சொத்துக்களுக்கு இணையான அடைமானக் கடனை வழங்க மத்திய வங்கி கூட்டமைப்பு உறுதிசெய்ததாகும். மத்திய வங்கி கூட்டமைப்பு இதற்கு முன்பு ஒருபோதும் பாதுகாப்பிற்காக அடைமானத்தால் பாதுகாப்புள்ள உறுதிப்பத்திரங்களை ஏற்றதில்லை.

இந்த முன்னோடியில்லாத நடவடிக்கை JP Morgan Chase பேர் ஸ்டேர்னஸை எடுத்துக் கொள்ளும் உடன்படிக்கைக்கு மையப்பகுதியாக இருந்தது. தலைமை நிர்வாகி Jamie Dimon பின்னர் சாட்சியத்தில் கூறினார்: "மத்திய வங்கி கூட்டமைப்பு அளித்த $30 பில்லியன் இல்லாமல் பேர் ஸ்டேர்ன்ஸை எடுத்துக் கொள்ளுவதில் இருக்கும் கணிசமான ஆபத்துக்களை நாங்கள் ஏற்றிருக்க மாட்டோம், ஏற்றிருக்க முடியாது."

உடன்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை என்றால், உலக நிதியச் சரிவு என்ற ஆபத்து திங்கள் காலை ஆசிய சந்தைகள் ஒரு சில மணி நேரத்தில் திறக்க இருக்கையில் எங்கும் பரவியிருக்கும்.

"குழுவிற்கு கிடைத்த சான்றுகளின்படி பேர் ஸ்டேர்ன்ஸ் மறுநாள் தான் கொடுக்க வேண்டிய கடன் வகைகளை திருப்பிக் கொடுப்பதில் பெரும் கஷ்டங்களை கொண்டிருந்திருக்கும். பேர் ஸ்டேர்னஸ் எடுத்துக் கொள்ளப்பட்டது போன்ற கணிசமான ஆதரவு, அது திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்களுக்கு உடனடி உத்தரவாதம் ஆகியவை, நிதியச் சந்தைகளில் தீவிர தடைகளை தவிர்க்க தேவையாக இருந்தன" என்று அக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

30 பில்லியன் டாலர்கள் கடன் அசாதாரண உடன்பாட்டின் ஒரு கூறுபாடு மட்டும் அல்ல. மத்திய வங்கி கூட்டமைப்பு 18 மாத காலத்திற்கு JP Morgan Chase க்கு பேர் ஸ்டேர்ன்ஸை எடுத்துக் கொண்ட தொடர்பில் மத்திய வங்கி கூட்டமைப்பு சட்டவிதிகள், மூலதனம் தொடர்பானவை பலவற்றில் இருந்து விதிவிலக்கு கொடுத்தது.

இதைத் தவிர, நியூயோர்க் ரிசேர்வ் மத்திய வங்கி கூட்டமைப்புடன் நேரடியாக வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கும் கடன் கொடுக்கும் முடிவு பற்றி இரு நாட்கள் முன்னர் செய்தது பற்றியும் விளக்கம் கூறியது. இந்த வணிகர்கள் தங்கள் இருப்புக்கள் உள்ள வங்கிகளில் இருந்து கடன்களை பெற முடியாது. அவர்களுக்கு கடன் கொடுக்கும் முடிவு "சமீபத்தில் விரைவில் மாறிய சில வளர்ச்சிகிளை அடுத்து இருந்தன; அவை நிதியச் சந்தைகளில் பரந்த அளவில் சேதம் ஏற்பட்டதற்கு இந்த வணிகர்களுக்கும் பொறுப்பு என்பதைக் காட்டுகின்றன; அவர்கள் எனவே போதுமான நிதியத்தை மாற்று ஆதாரங்களில் இருந்து பெற முடியாததால் இந்த வசதி கொடுக்கப்படுகிறது."

முன்றரை மாதங்களுக்கு பின்னர், பேர் ஸ்டேர்ன்ஸை சூழ்ந்திருந்த உடனடி நெருக்கடி கடக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதன் பொருள் 1930 களுக்கு பின்னர் மிக தீவிரம் என்று பரந்த அளவில் விவரிக்கப்பட்ட அமெரிக்க மற்றும் உலக நிதிய முறையில் நெருக்கடி முடியும் தறுவாயில் உள்ளது எனக் கூறப்படவே முடியாது. உண்மையில் வீடுகள் சந்தை அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு கீழ்நோக்கிய சரிவை ஏற்படுத்திய அளவில் அது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம்.

முன்னாள் அமெரிக்க நிதி மந்திரியான லோரன்ஸ் சம்மர்ஸ் இன்றைய ஃபைனான்சியல் டைம்சில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் பின்வருமாறு தெரிவிக்கிறார்: "கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய அமெரிக்க நிதிய நெருக்கடியில் இப்பொழுது நாம் மிக ஆபத்தான நிலையில் இருக்கக் கூடும். எண்ணெய் மற்றும் பிற பொருட்களில் கடுமையான விலையுயர்வு அமெரிக்க நுகர்வோரின் நம்பிக்கையை மிகக் குறைவாகச் செய்து பணவீக்கம் பற்றி தீவிர கவலைகளை ஏற்படுத்தியுள்ளது; இதனால் நிதிய கொள்கையின் திறன் நிதியப் பிரிவை எதிர்கொள்ளுவதற்கு தக்கமுறையில் இல்லாமல் குறைந்த தன்மையில் உள்ளது. ஏனெனில் உண்மையான முதலீட்டின் மதிப்புக்களை வைத்து எடைபோடுகையில் இது நெருக்கடி தொடங்கியதில் இருந்து மிக பலவீனமான முறையில் உள்ளது. வீடுகளின் மதிப்புக்கள் இன்னும் குறைந்து கொண்டிருக்கையில், பிரச்சினைகள், கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் கடன் பிரிவுகளுக்கும் படர்ந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில், ஒரு தடுமாடும் பொருளாதாரம் நிதிய முறை முழுவதையும் சேதப்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது; இது பொருளாதாரத்தை இன்னும் வலுவிழக்கச் செய்யும்."

இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்த தீவிர செயற்பாட்டுக் காலத்திற்கு பின்னர் "இப்பொழுது கொள்கை மீண்டும் வளைகோட்டிற்கு பின் சென்றுள்ளது" என்று சம்மர்ஸ் கூறினார்.

வரக்கூடிய மாதங்களில் "கணிசமான நிதிய அமைப்புக்கள் சொத்துக்களை பணமாக மாற்றக்கூடிய பிரச்சினை மட்டும் இல்லாமல் கடன்வழங்கும் தகமை பற்றிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடும்" என்ற உண்மையான ஆபத்து உள்ளது என்று எச்சரித்த அவர், அவற்றை ஒழுங்குபடுத்துவோருக்கு புதிய சட்ட அதிகாரம் இருக்க உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். "பேர் ஸ்டேர்ன்ஸ் தோல்வி அடைந்தபோது ஒரு இயல்பான ஒருங்கிணைந்த கூட்டாளி இருந்தது அதிருஷ்டவசமானது; அடுத்த முறையும் அதிருஷ்டம் இருக்கும் எனக் கூறுவதற்கில்லை."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved