World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காSocial crisis in Detroit: An investigative report டெட்ராயிட் சமூக நெருக்கடி: ஒரு புலனாய்வு அறிக்கை பகுதி 1 : திருகுசுருளாய் உயரும் உணவுப் பொருட்களிள் விலைகள் By Lawrence Porter and Naomi Spencer பின்வருவது மூன்று பாகங்கள் கொண்ட தொடரில் முதலாவதாகும். கடந்த மாதம், டெட்ராயிட் நகரப் பகுதியில் உள்ள தொழிலாள வர்க்கத்தினர் மீது அதிகரிக்கும் உணவு மற்றும் பெற்றோல் விலைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து உலக சோசலிச வலைத் தளம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. வரலாற்று ரீதியாக உலகின் வாகனத் துறை தலைநகரமாக அறியப்படும் டெட்ராயிட், அமெரிக்க கணக்கெடுப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 31.4 சதவீத வறுமை விகிதத்துடன், அமெரிக்காவின் மிகப்பெரிய ஏழை நகரமாக உருமாற்றம் கண்டுள்ளது. வாகனத் துறையானது நன்கு பண வருவாய் அளித்த ஆயிரக்கணக்கான வேலைகளை அழித்ததால் கடந்த 30 வருடங்களில் டெட்ராயிட் பலமுறை இந்த இடத்தை எட்டியிருக்கிறது. ஒரு சமயத்தில் வளர்ந்து வந்த நகரமாக 2 மில்லியன் மக்களுடன் இருந்த இந்நகரம் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இழந்து இப்போது 9 இலட்சம் என்கிற அளவில் உள்ளது. இந்த வெளியேற்றம் ஆண்டுக்காண்டு அதிகரித்தும் வருகிறது. சில பகுதிகளில் ஏழை மக்கள் மட்டுமே தொடர்ந்து இருக்கிறார்கள். வரி மற்றும் வேலைவாய்ப்பு அடித்தளங்கள் சிதைந்து விட்டன. இந்த சரிவின் காரணமாக, டெட்ராயிட் நாட்டின் வேறெந்த பெரிய நகரத்தையும் விட அதிகமாக உயர்நிலைப் பாடசாலைகளை விட்டு நின்று விடும் மாணவர்கள் எண்ணிக்கையைக் -50 சதவீதத்துக்கும் அதிகமாக - கொண்டுள்ளது. அமெரிக்காவின் அதிகப்பட்ச வேலை வாய்ப்பில்லாத விகிதங்கள் கொண்டவற்றுள்ளும் இந்த நகரம் இடம் பிடித்துள்ளதோடு, கட்டவேண்டிய பணத்தைக் காலத்தில் கட்டத் தவறிய காரணத்தால் சொத்தின் அடைமான மீட்புரிமை இரத்து செய்யப்பட்ட வீடுகளின் பட்டியலின் 10 இடங்களில் இது முன்னணியில் உள்ளது. இந்த நகரம் உணவு உதவி அவசியப்படும் குடும்பங்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நகரமாக இருப்பதும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று ஒப்பீடுகள், அவை போதுமானவை அல்ல என்றாலும், பல வருடங்களாக அல்லது தசாப்தங்களாக நடைபெற்று வந்திருக்கும் மாற்றத்திற்கான ஒரு ஒப்பீட்டுப் புள்ளியை வழங்க அவை பல சமயங்களில் உதவியாக இருக்கும். போருக்குப் பிந்தைய 1940கள் மற்றும் 1950களின் சமயங்களில், டெட்ராயிட் உலகின் வாகனத் துறை தலைநகரமாக இருந்தது. அந்த நேரத்தில் உலகின் 80 சதவீத கார்கள் அமெரிக்காவில் உற்பத்தியாயின, அதில் பெரும் சதவீதம் டெட்ராயிட்டில் உற்பத்தியானது. 1950களில், வாகனத்துறை ஊழியர்கள் கொண்டிருந்த உயர்ந்த வாழ்க்கைத் தரம் காரணமாக, டெட்ராயிட்டும் மிச்சிகன் மாநிலமும் அமெரிக்காவில் மிக அதிகமான எண்ணிக்கையில் தனி வீடு உரிமைத்துவ விகிதம் கொண்ட பெருமையைப் பெற்றன. இன்று, டெட்ராயிட்டில் இருக்கும் அனைத்து வீடுகளின் 5 சதவீதமானது, மீட்புரிமை இரத்து செய்யப்பட்ட முன்மூடலின் ஒரு வடிவத்தில் இருக்கிறது. இது தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமான விகிதமாகும். சில மதிப்பீடுகளின் படி, சென்ற ஆண்டு முன்மூடல் ஏலங்களில் டெட்ராயிட்டைச் சுற்றியிருக்கும் கவுண்டிகளில் சுமார் 30 சதவீத வீடு விற்பனைக்கு உள்ளானது. போருக்கு பிந்தைய காலகட்டத்தில் தான், ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர்கள் (UAW) மூன்று பெரும் வாகன நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான வேலை நிறுத்தங்கள் மூலம் அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஊதிய ஆதாயங்கள் மற்றும் நலன்களைப் பெறுவதற்கான போக்கினை அமைத்தார்கள். இதற்கு மாறாக, 2007 இல், புதிய தொழிலாளர்களின் ஊதியத்தினை முந்தைய நிலைகளின் பாதியாக, வரையறுக்கப்பட்ட ஆதாயங்களுடன் மணிக்கு $14 என்ற அளவிற்கு குறைத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை, ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் ஆகிய நிறுவனங்களுடன் UAW நடத்தியது. தொழிலாளர்கள் ஊதியத்தை இழந்தனர், அதே சமயத்தில் தொழிற்சங்கம் பல மில்லியன் டொலர் ஓய்வூதிய சுகாதார பராமரிப்பு திட்டமான VEBA (தன்னார்வ ஊழியர் ஆதாய கூட்டமைப்பு) மீது கட்டுப்பாட்டை வென்றது. American Axle பெரும் தொழிற்சாலைக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த வாகனத் தயாரிப்பு துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், நடப்பு தொழிலாளர்களின் ஊதியத்தை, மணிக்கு $28 என்பதில் இருந்து, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டு நிலைக்கு கீழிருப்பதும், வீட்டு அடமானத்திற்கு ஒதுக்க வழியில்லாத வருவாயுமான, மணிக்கு $10 என்னும் நிலைக்கு இறக்கி விட்டு விட்டுள்ளது.எப்படி இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உடனடிக் காலத்தில் வாகனத்துறை தொழிலாளர்களின் ஒப்பீட்டளவில் உயர் வாழ்க்கைத் தரமானது பெருமளவில் அமெரிக்க சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்வதாக அமைந்ததோ, அதே போல இன்று UAW ஆல் வாகனத்துறை முதலாளிகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு சலுகை மற்றும் திருப்பிக் கொடுத்தலும் அமெரிக்க பொருளாதாரம் முழுமையிலும் சம்பளக் குறைப்பு மற்றும் வேலை இழப்புகளுக்கான மேடையை திறந்துவிடுகிறது. டெட்ராயிட்டை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையானது குறிப்பாக மிச்சிகனில், மிட்வெஸ்டில், மற்றும் நாடு முழுவதும் வளரும் ஒரு போக்கின் கூர்மையான வெளிப்பாடு ஆகும். பல தொழில்துறை நகரங்களைப் போலவே, டெட்ராயிட்டும் உற்பத்தித் துறை வேலைகளின் இழப்பால் - இங்கு வாகனத்துறை மற்றும் அதன் துணையுறுப்பு தொழிற்துறைகள் - கடுமையாகப் பாதிப்புற்றுள்ளது. டெட்ராயிட்டின் நகரப்பகுதி மட்டும் 2000 ம் ஆண்டிலிருந்து 150,000 வேலைகளை இழந்துள்ளது. இதனால், நகரின் உள்புறம் மற்றும் சுற்றியிருக்கும் புறநகர்ப் பகுதிகள் இரண்டும் பாதிப்படைந்துள்ளது. நகரின் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்க மக்களின் வாழ்க்கைத் தரத்தின் நீடித்த சீர்கேடானது, பிற நாடுகளில் மக்கள் போராட்டங்கள், கலகம் மற்றும் அரசாங்கங்களின் வீழ்ச்சியைத் தூண்டியிருக்கும் ஒரு உலகளாவிய நிகழ்வான, அதிகரித்துக் கொண்டே செல்லும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாய் கூர்மையாய் துரிதப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைக்காக தகவல்களை சேகரிப்பதும், நேர்முகம் காண்பதுமாக நாங்கள் இருந்த வாரங்களில், எரிபொருளின் விலை ஒரு கலனுக்கு $3.64 இல் இருந்து $4.09 ஆக அதிகரித்து விட்டது. உணவுப் பொருள் விலைகள் அதிகரிப்பானது ஏறக்குறைய திகைக்க வைப்பதாக இருக்கிறது. கடந்த வருடத்தில், தொழிலாளர் வாரிய புள்ளிவிவரப்படி, பாணின் விலை 16.3 சதவீதமும், முட்டைகள் 34.8 சதவீதமும், பால் 23.1 சதவீதமும், மாவு 37 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடும் துயரத்தின் அறிகுறிகள் ஏற்கனவே வெளிப்படையாக இருக்கின்றன. மே 11 அன்று, மாநிலமெங்கும் உணவு உதவி தேவை அதிகரிப்பதை சுட்டிக்காட்டி Detroit Free Press கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இந்தக் கட்டுரையில், டெட்ராயிட்டின் சற்று வசதியான புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான, கிராஸ் பாயிண்ட் உட்ஸில் வசிக்கும் வேலை இல்லாத வாகன பாக வடிவமைப்பாளர் ஒருவர் குறித்து வெளியிடப்பட்டிருந்தது. மிச்சிகன் மனித சேவைகள் துறையின் கூற்றுப்படி, எண்ணிக்கையிலான மிச்சிகன் வாசிகள் - 590,000 வீடுகளில் வசிக்கும் 1.26 மில்லியன் வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் - அரசு வழங்கும் உணவுக் கூப்பன்களைப் பயன்படுத்துகிறார்கள். மாநிலத்தில் பெறும் 10 பேரில் 3 பேர் டெட்ராயிட் இருக்கும் வெயின் கவுண்டியில் வசிக்கிறார்கள். இதில் மிகப்பெரும்பான்மையான பகுதியினர் நகரத்திலேயே வசிப்பவர்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. Free Press கூற்றுப்படி, 2003 ஆம் ஆண்டிலிருந்து உணவுக் கூப்பன்கள் தேவையில் மிச்சிகன் 53 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளது. ஒரு வீட்டில் இருக்கும் ஐந்து குழந்தைகளில் ஒருவர் உணவுக் கூப்பனுக்கு தகுதி உள்ளவராகிறார்.இருப்பினும், அதிகரித்திருக்கும் தேவை அடிப்படையில், மசாசூசெட்ஸ் 77 சதவீத அதிகரிப்பையும் அயோவா 63 சதவீதத்தையும் கொண்டு மிச்சிகன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது நிலைமையானது உள்ளூர் பிரச்சினையாக இருப்பதிலிருந்து வெகுதொலைவில் உள்ளது என்கிற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆண்டின் துவக்கத்தில் இருந்தே உணவு மற்றும் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ள நிலையில் தேசிய அளவில், ஜனவரி 2008 இல் திகைக்க வைக்கும் அளவில் 27.7 மில்லியன் மக்கள் உணவுக் கூப்பன்களைப் பெற்றிருக்கிறார்கள். டெட்ராயிட்டில் உணவு விலையேற்றத்தின் தாக்கம் கடந்த மாதத்தில், டெட்ராயிட்டில் உழைக்கும் வர்க்க குடும்பத்தினர் மீது சமீபத்து உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து உலக சோசலிச வலைத்தளம் உள்ளூர்வாசிகள், உணவு வங்கி வழங்குநர்கள், மற்றும் தொண்டு நிறுவன தொழிலாளர்கள் இடையே நேர்முகங்களை நடத்தியது. ஜடா பிரவுனிங், 29, சமீபத்தில் தான் வேலை பார்த்து வந்த உணவு விடுதி மூடப்பட்டதால் வேலை இழந்தார். இரண்டு வயது, நான்கு வயது, பன்னிரண்டு வயதில் இருந்த தனது மூன்று குழந்தைகளுக்கும் உணவளிப்பதில் தான் படும் சிரமங்களை அவர் WSWS வசம் எடுத்துரைத்தார். "சில வாரங்களில் எங்களுக்கு குறைவான உணவு தான் இருந்தது, பசி கடுமையாக இருந்தும் இரண்டாவது முறைக்கான உணவு இருக்காது. நீங்கள் உகந்த அளவில் பிரித்து பரிமாற வேண்டும். இது துயரமாய் இருக்கிறது" என்று அவர் கூறினார். கடந்த வருட பணவீக்கத்தின் காரணமாக அவரது குடும்ப சூழ்நிலை மோசமாகி இருக்கிறதா என்று கேட்டபோது, "ஆம், ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருட காலமாக" என்று ஜடா கூறினார். தான் பொருள் வாங்கும் சலுகை விலை மளிகை கடையிலும், "நீங்கள் ஒரு டாலர் அல்லது ஒரு டாலர்-ஐம்பதுக்கெல்லாம் பொருட்களை வாங்க முடிந்தது. இப்போது அது இரண்டு-ஐம்பது என்றாகி விட்டது. ஒரு கலன் பால் ஏறக்குறைய நான்கு டாலர்கள். பைத்தியக்காரத்தனமாக உள்ளது." நிலையான வருவாயில் வசிக்கும் ஒரு ஓய்வு பெற்ற ஊழியர் ஓலா ஹார்னே, டெட்ராயிட்டில் அதிகரிக்கும் சிக்கல்களைக் குறிப்பிட்டார். "காலம் மோசமாக இருக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பொருளாதாரத்துடன் இயைந்து செல்ல முடியாது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டது. மக்களின் சம்பளங்கள் குறைக்கப்படுகின்றன - வாழ்க்கை செலவு அதிகரிக்கிறது". "நான் ஒரு 67-வயது பெண்மணி, இது சாத்தியமில்லாதது. கனவுகள் எல்லாம் இல்லை, உங்கள் கனவெல்லாம், நாளை காலை நீங்கள் எழும்போது உங்கள் வீடு பிளாக்கில் அப்படியே இருக்கிறது, அல்லது உங்களது பயன்பாட்டு சாதனங்கள் வரத்து இல்லாமல் மூடப்பட்டிருக்கவில்லை, அல்லது ஐந்து கலன்களை நீங்கள் பெறத்தக்க அளவு 5 டாலர்களுக்கு நீங்கள் எரிவாயுவை வாங்க முடிகிறது, இவை தான். இப்போது நீங்கள் ஒரு கலன் கூட வாங்க முடியாது". "நான் வேலை செய்ய முடிந்தால் அது வேறு விஷயம், ஆனால், யார் வேலைக்கு சேர்க்கப் போகிறார்கள்?" என்று ஓலா கூறினார். டெட்ராயிட் நகரப் பகுதியில் மிகப்பெரிய உணவு வங்கி விநியோக அமைப்பாக இருக்கும் Gleaners உணவு வங்கியின் தலைவரான ட்வெயின் வெல்ஸ், சென்ற ஆண்டில் மட்டும் இந்த அமைப்பு Salvation Army, the Capuchin Soup Kitchen, மற்றும் இதர 420 உதவி அமைப்புகளுக்கு 25 மில்லியன் இறாத்தலுக்கு அதிகமான உணவினை வழங்கியிருப்பதாக WSWS வசம் தெரிவித்தார். சென்ற ஆண்டில் தினசரி வழங்கப்பட்ட 40 தொன்கள் உணவும் அதிகரித்துவரும் உணவுத் தேவைக்கு போதுமானதாக இல்லை என்று வெல்ஸ் தெரிவித்தார். குறிப்பாக "முதல்முறையாக உதவி கோரி வரும் மக்களின்" தேவைகளை பூர்த்தி செய்வது அமைப்புகளுக்கு பெரும் பிரச்சினையாகி இருக்கிறது என்று அவர் கூறினார். ''கூடுதலான உழைக்கும் ஏழைகள், தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படும் நிலையில், தங்களுக்கு அல்லது தங்களது குடும்பத்திற்கான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் கூடுதலான மூத்த வயதினர் ஆகியோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்." குறைந்த வருவாய்க்கு உழைக்கும் குடும்பங்களும், நிலையான வருவாயை நம்பி வாழ்வோரும் குறிப்பாக பணவீக்கத்தால் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வெல்ஸ் குறிப்பிட்டார். "பயன்பாட்டுப் பொருட்கள், போக்குவரத்து செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் உயர்வை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொண்டால், வழக்கமாக மாத இறுதியில் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணம் இருப்பதில்லை. அங்கு தான் Gleaners மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் வருகின்றன. உணவுத் தேவைகளின் அதிகரிப்பு அதே சமயத்தில் நன்கொடைகள் குறைந்ததையடுத்து சமீபத்தில் Gleaners நிதி கோரி அவசர கோரிக்கை எழுப்பியது. டெட்ராயிட் மற்றும் மிச்சிகனில் எழுந்துள்ள "கடினமான காலத்தின்" காரணமாக தனிநபர் நன்கொடைகள் மற்றும் பெருநிறுவன நன்கொடைகள் பெருமளவு சரிந்துள்ளதாக வெல்ஸ் தெரிவித்தார். "ஒட்டுமொத்தமாக அமெரிக்க பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறலாம் என்றாலும், தேவை உச்சத்தில் இருக்கும் இடங்களில் மிச்சிகனும் ஒன்றாக இருக்கிறது". டெட்ராயிட்டில் காணப்படும் பொருளாதாரப் பிரச்சினைகள் இனம் தொடர்பானவையல்ல என்று வெல்ஸ் உறுதிபடக் கூறினார். "வயது, இனம், கலாச்சாரம்....உள்நகரம், புறநகர், கிராமம் என அனைத்து இடப்பொருத்தங்களையும் கடந்து உள்ளது. இது பரவலாக இருக்கிறது. உழைக்கும் ஏழைகளை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறுகிய காலத்தவையோ அல்லது வெறுமனே தனிநபர் கஷ்டகாலமோ அல்ல என்பதையும் வெல்ஸ் தெரிவித்தார். "கடந்த காலத்தில், [வேலை இழந்த பிறகு] முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு குடும்பம் உள்ளவர்கள் வருவார்கள், வேலை தேடிக் கொண்டு தங்களை எதிர்கொண்ட தற்கொலிக நெருக்கடியில் இருந்து வெளிவந்து விடுவார்கள், பின் அவர்கள் வருவதை நிறுத்தி விடுவார்கள்". "ஆனால், இப்போது மக்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகும் வருவதை நிறுத்துவதில்லை, அவர்கள் தொடர்ந்து சார்புநிலையில் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறையும் அல்லது அதற்கு அதிகமான காலத்தை தங்களை நிலைப்படுத்த எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். இது ஒரு அவசரநிலை உணவு அமைப்பாக செயல்படுவதாக மாறி, ஒரு நிரந்தர 'இடைவெளி' நிரப்பு அமைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது". தொடரும்--- |