World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா Britain: SEP candidate officially registered for Haltemprice and Howden by-election பிரிட்டன்: ஹால்டெம்பிரைஸ் மற்றும் ஹெளடன் இடைதேர்தலுக்கு சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் உத்தியோகபூர்வமாக பதிவு செய்தார் By Julie Hyland ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் இடைதேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் கிறிஸ் ரால்போட்டின் வேட்புமனு புதனன்று தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, தற்போது அவர் உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை வழக்கின்றி 42 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கலாம் என்ற அரசாங்கத்தின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை எதிர்த்து தற்போதைய பழமைவாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் டேவிஸ் இராஜினாமா செய்ததை அடுத்து யோர்க்ஷைனின் கிழக்கு ரைடிங் பகுதியில் ஜூலை 10, வியாழனன்று இந்த இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுவரையிலும் இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. பிபிசி இன் செய்திப்படி, மொத்தம் 11 வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். டேவிட் டேவிஸ் செவ்வாயன்று உத்தியோகப்பூர்வ பழமைவாத கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் பாராளுமன்றத்திலிருந்து பழமைவாத கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. முன்னொருபோதுமில்லாத நடவடிக்கையாக, அரசாங்கத்தின் சட்ட மசோதாவின் ஒரு முக்கிய விடயத்தை இந்த தேர்தல் சார்ந்திருக்கும் போதினும், தொழிற்கட்சி தனது வேட்பாளரை நிறுத்த மறுத்துள்ளது. டேவிஸின் இராஜினாமாவிற்கு முன்னரே, தாம் அந்த இடத்திற்கு போட்டியிடப் போவதில்லை என்ற அவருடன் செய்து கொண்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து சுதந்திர ஜனநாயக கட்சியினரும் இந்த தேர்தலில் நிற்கவில்லை. இதனால் டேவிஸ் தாராளவாத ஜனநாயகவாதிகளின் சார்பிலான வேட்பாளருமாகின்றார். எதிர்கால வாய்ப்புகளை எதிர்நோக்கி எட்டு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். இவர்கள் குறிப்பாக எந்த விடயத்திற்காக பிரச்சாரம் செய்யவிருந்தாலும், இந்த வேட்பாளர்கள் அனைவரும் அரசாங்கத்தின் தடுப்பு காவலுக்கான கால நீடிப்பிற்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சோசலிச சமத்துவக் கட்சியை தவிர, பசுமை கட்சி மட்டுமே இந்த 42 நாட்கள் காலநீடிப்புக்கான எதிர்ப்புடன் டேவிஸிற்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. அவரின் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதை தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் ரால்போட் கூறியதாவது, "தொழிற்கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அனைத்து அடக்குமுறை முறைமைகளுக்கு எதிராகவும், சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தின் அடிப்படையில் நாட்டு மக்களின் சுதந்திரங்களை பாதுகாப்பிற்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் நான் மட்டுமே ஆவேன்." என்றார். கடந்த தசாப்தத்தில், தொழிற்கட்சி அரசாங்கம் நாட்டில் பெருமளவிலான அதிகாரங்களை உரிமையாக்கி கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், அத்துடன் அது ஒரு போலீஸ் ஆட்சிக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பையும் உருவாக்கி உள்ளது என்றார். "நான் என் வேட்புமனுவை கையளிக்கும் போது கூட, குற்ற வழக்குகளில் பெயர்குறிப்பிட விரும்பாத சாட்சிகளை ஏற்று கொள்வதை சட்டபூர்வமாக்குவதற்கு அடுத்த வாரம் பாராளுமன்றம் மூலம் அவசர சட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாயின." "தங்கள் குற்றவாளிகளை விசாரிக்கும் பிரதிவாதியின் உரிமையை அது நிராகரித்து விடுவதாலும், அவர்களை முழுமையாக குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் அது தடுப்பதாலும் இதுபோன்ற சாட்சிகள் சட்டவிரோதமானவை என்று ஒதுக்குதற்கு அளிக்கப்படும் பிரதிபலிப்பாக அந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 'அவ்வாறு நடத்தப்பட்ட ஒரு வழக்கு பொதுவான நியாயங்களின் தரங்களை கொண்டிருக்கும் என்று கூறமுடியாது' என உயர்நீதிமன்றம் சரியாக அதை நிராகரித்தது." "சந்தேகத்திற்கிடமான பெயர்குறிப்பிடாத சாட்சியின் அடிப்படையில் அமைந்த பல தீர்ப்புக்கள் தற்போது ஐயுறவிற்குள்ளாகியிருப்பதால், அரசாங்கம் நீதிபதிகளின் தீர்ப்புகளை மீறுவதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பல செய்திகளின்படி, Privy குழு எனப்படும் மகாராணியின் தனிப்பட்ட ஆலோசனைக்குழுவின் 'Order in Council' (ஆர்டர் இன் கவுன்சிலை) பயன்படுத்துவதற்கான ஒரு சாத்தியக்கூறு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட தேவையில்லை." (அதாவது சட்டம் Order in Council இனால் மகாராணியின் தனிப்பட்ட ஆலோசனைக் குழுவான Privy Council இல் முன்வைக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படாமல் மகாராணியின் கையழுத்துடன் நிறைவற்றப்படும்) "Shell எரிபொருள் நிறுவன லாரி சாரதிகளின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கும் பொதுச்சேவையை உறுதிப்படுத்தும் சட்டம் 2004ன் (Civil Contingencies Act 2004) உள்ளடக்கமான சிறப்பு அவசர அதிகாரங்களை அரசாங்கம் ஊக்குவித்திருப்பது குறித்து வெளியான செய்திக்கு அடுத்த சில வாரங்களில் இதுவும் வெளியாகி உள்ளது." இதுபோன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் சுதந்திரத்திற்கு எதிரான ஓர் அரசாங்கத்தின் தற்காலிக விருப்பம் என்ற அடித்தளத்தில் விளக்கப்படுத்த முடியாதவை என சோசலிச சமத்துவ கட்சி குறிப்பிடுவதாக ரால்போட் குறிப்பிட்டார். தொழிற்கட்சியின் இராணுவவாதம் மற்றும் அன்னிய நாடுகள் மீதான அதன் யுத்த கொள்கைகள் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மீதான அதன் தாக்குதல்கள் மீது அக்கட்சிக்கு பெரிய மக்கள் ஆதரவு கிடைக்காததால், இதுபோன்ற அசாதாரண அதிகாரங்களின் தேவையை அது விரும்புகிறது. "உழைக்கும் மக்களை பொறுத்த வரை, தொழிற்கட்சியின் முடிவுக்கு வந்துவிட்டது. அது தொழிலாளர் வர்க்கத்துடனான அதன் எல்லாவித உறவுகளையும் உடைத்துக்கொண்டு, அதன் பழைய சீர்திருத்த கொள்கைகளையும் அது கைவிட்டுவிட்டது. தாங்கள் சொந்த இலாபமடைவதில் மட்டும் ஆர்வம் கொண்ட அரசியல்ரீதியாக மலிந்திருக்கும் தன்னல உட்குழுக்கள் மட்டுமே அங்கு இருக்கின்றன." "தொழிற்கட்சியின் பயங்கரவாத கொள்கைகளை நிராகரிக்கவும், அரசாங்கத்திற்கெதிராக திரண்டெழவும் தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் 1984-85 ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான நிலக்கரிச்சுரங்க தொழிலாளர்களை கைது செய்ய தொழிற்சங்க தடுப்பு சட்டத்தை முன்வைத்த பழமைவாத கட்சியின் டேவிட் டேவிஸை ஆதரிப்பதால் இதை நடத்தி காட்ட முடியாது." என்று அவர் தெரிவித்தார். தனியார் சுதந்திரங்களின் மீதான தாக்குதலானது, அரசாங்கத்தின் பெரிய வியாபார திட்டத்தின் நேரடி விளைவான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று ரால்போட் தெரிவித்தார். மூலதனத்தை பாதுகாப்பதில் எந்த முக்கிய கட்சியிலும் வேறுபாடு இல்லை என அவர் தெரிவித்தார். "அதனால் தான் சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. எங்களின் தேர்தல் அறிக்கை குறிப்பிடுவது போல, 'பாரிய அரசியல் போராட்டங்கள் மூலம் தொழிலாள வர்க்கம் மட்டுமே அதன் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இன்று அது உண்மையாகி வருகிறது.' ஒரு புதிய உண்மையான சோசலிச கட்சியை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்ற இந்த அடிப்படை விடயத்தின் அடித்தளத்தில் தான் நான் இந்த தேர்தலில் போராட இருக்கிறேன்." சோசலிச சமத்துவ கட்சி அதன் பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு, ஜூன் 27 வெள்ளியன்று, சிவிக் ஹால், மார்கெட் க்ரீன், கோத்தென்காமில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. |