:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spain: The Popular Party begins to fracture
ஸ்பெயின்: மக்கள் கட்சி உடைய ஆரம்பிக்கிறது
By Vicky Short and Paul Stuart
20 June 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஸ்பெயினின் வலதுசாரி எதிர் கட்சியான மக்கள் கட்சி
(Popular Party-PP),
இன்று முதல் மூன்று நாள் தேசிய மாநாடு தொடங்கும் நிலையில்,
சற்றே உள் அரசியல் பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளது.
முன்னாள் பாப்புலர் கட்சி பத்திரிகை
El Mundo
குறிப்பிட்டதாவது, "கட்சிக்குள் மனக்குழப்பமான" ஒரு சூழல் நிலவுகிறது என்றது.
ABC செய்தியின்படி,
மாநாட்டில் இந்த நெருக்கடிகள் எழுவதையும், "தெருக்களில் இந்த மோதல்கள் முரசு கொட்டப்படுவதை" தவிர்க்க
மக்கள் கட்சி அமைப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
மார்ச் 2004 மற்றும் மார்ச் 2008ல் நடந்த இரண்டு பொது தேர்தல்களிலும் மக்கள்
கட்சி தோல்வியடைந்ததே பிரச்சனைக்கான உடனடி காரணமாக உள்ளது. மேலும் தெளிவாக கூறுவதானால், ஃபிராங்கோவாதியான
(பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சி கொள்கைகளை பின்பற்றுபவர்கள்) மந்திரி மானுவேல் ஃபிராகாவால்
வடிவமைக்கப்பட்ட மக்கள் கட்சியும் மற்றும் 1975ல் பிராங்கோவின் மறைவிற்கு பின் "ஜனநாயக மாற்றத்திற்காக"
1978ல் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு உடன்பாடுகள் உடைவதையும் இது எடுத்துகாட்டுகிறது.
மார்ச் 2007ல் நடந்த தேசிய தேர்தல்களுக்கு சற்று முன்னால், ஆளும் சோசலிஸ்ட்
தொழிலாளர் கட்சியின் (PSOE)
செல்வாக்கு மிகவும் பாதிக்கப்பட்டது. அச்சமயம் விமர்சகர்கள் மக்கள் கட்சி மட்டுமட்டாக வெற்றி பெறும் என
எதிர்பார்த்தார்கள். எவ்வாறிருப்பினும், மக்கள் கட்சியின் நவ-தாராளமய பொருளாதார கொள்கைகள் மற்றும்
ஈராக் யுத்தத்திற்கு அது அளித்த ஆதரவு மீதான பாரிய வெறுப்பால் சோசலிச தொழிலாளர் கட்சி மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டது. மார்ச் 2004ல் தொழிலாள வர்க்கத்தின் இடது நோக்கிய தீவிரமயப்படுத்தலால் பயனடையும்
தகுதியில்லாமலிருந்தபோதும் இந்த அரசியல் வெறுப்புணர்வால் மீண்டும் சோசலிச தொழிலாளர் கட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டது.
இந்த தோல்விக்கு வெளிப்படையான மூர்க்கத்தனத்துடன் தனது பிரதிபலிப்பை மக்கள்
கட்சி காட்டியது. புதிய அரசாங்கம் சட்டவிரோதமானது என்றும், இடதுசாரி குழுவின் சதி ஏற்பாடு என்றும்
தோற்கடிக்கப்பட்ட ஜோஸே மரியா அஸ்னார் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும் கத்தோலிக்க
தேவாலயம் மற்றும் இராணுவ பிரிவுகளுடன் இணைந்து நான்காண்டு "எதிர்ப்பு" பிரசாரத்தையும் மக்கள் கட்சி
தொடங்கியது. பிராந்திய தன்னாட்சி, ஆயுதந்தாங்கிய பாஸ்க் பிரிவினைவாத
ETA உடனான
பேச்சுவார்த்தை, சோசலிச தொழிலாளர் கட்சியின் சமூகக்கொள்கைகள் மற்றும் பிராங்கோவின் பாரம்பரியத்தை
பாதுகாப்பது உட்பட்ட பிரச்சனைகள் மீது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அப்பிரச்சாரம் கொண்டிருந்தது. 2007
இன் ஆரம்பத்தில், பிராங்கோவிற்கு பிந்தைய இரு கட்சி கூட்டு "அழிக்கப்பட்டு விட்டதாக" அஸ்னார் அறிவித்தார்.
இந்த வலதுசாரி எதிர்ப்புகளால் சோசலிச தொழிலாளர் கட்சி அரசியல்வாதிகள்
கடுமையாக பாதிக்கப்பட்டனர். மதகுருக்கள் வலதுசாரி ஊர்வலங்களை நடத்தினர் மற்றும் மட்ரிட் இற்குள்
நுழைந்துவிடுவோம் என்று இராணுவம் அச்சுறுத்தியது. மக்கள் கட்சிக்கு சாதகமான இந்த கடுமையான
மாபெரும் விரோத உணர்வால் சோசலிச தொழிலாளர் கட்சி மீள தேர்ந்தெடுக்கப்பட்டது. 2008 தேர்தலுக்கு
முன்னர், கட்சியின் ஊடக தொடர்பாளர், கப்ரியல் எல்லோரியஜா, மக்கள் கட்சி தனது நடவடிக்கைகளில் "ஒரு
கடுமையான வலதுசாரி வடிவத்தை" கொண்டிருக்கிறது என்றும், "நமது சொந்த வாக்காளர்களும் கூட தாங்கள்
மக்கள் கட்சியுடன் இருப்பதை விட மத்தியவாதிகளாக இருப்பதாகவே உணர்கிறார்கள்" என்றும் தெரிவித்தார்.
இதுபோன்றதொரு பிரச்சாரத்தின் அடிப்படையில் சோசலிச தொழிலாளர் கட்சியை
தோற்கடிப்பது என்பது சாத்தியமேயில்லை என்று பிறர் தெரிவிக்கின்றனர். ஒருபால் திருமணம், கருக்கல
ஆராய்ச்சி மற்றும் ETA
உடனான பேச்சுவார்த்தை மீதான அதன் விரோத உணர்வையும் மக்கள் கட்சி கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி
El Mundo
பத்திரிகையின் நிறுவனர், பெட்ரோ ஜோஷ் ரமிரெஜ் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தினார். எவ்வாறிருப்பினும்,
இதுபோன்ற நிலைப்பாடுகளை இல்லாமல் செய்வதால் ஒரு தற்காலிக தேர்தல் வெற்றியை பாதுகாக்கலாம்
என்பதே பிரச்சனையாகும். மற்றும், மக்கள் கட்சி மிக தீவிர பாசிச அடுக்குகளிலிருந்து அந்நியப்படுவதன் மூலம்
உடைய ஆரம்பிக்கலாம் எனவும் நோக்கப்படலாம்.
இந்த ஆண்டின் தேர்தல் தோல்விக்கு சில மணி நேரங்களுக்கு பின்னால், "மோதல்
அரசியலுடன்" இரஜோய் மிக நெருக்கமாக இருப்பதைக் கண்டறிந்த வலதுசாரி பத்திரிகை
El Mundo
அவரை விமர்சிப்பதில் திரும்பியது. அது பின்வருமாறு கேள்வி எழுப்பியது, "2012 இல் ஸபடேரோவை
தோற்கடிக்க வேண்டிய மக்கள் கட்சியின் தலைவரான இரஜோய் இருப்பாரா? நேற்றைய இரவு, கட்சியின்
தலைமைபீடத்தில் தாம் தொடரவிருப்பதையும் மற்றும் பதவி விலகுவது குறித்தும் உறுதிப்படுத்த மறுத்ததன் மூலமும்,
அவர் இந்த ஐயுறவுகளுக்கு ஊக்கமளித்துள்ளார். அவர் தம் தொண்டர்களுக்கு உரையாற்றும் போது வெளிப்படுத்திய
மட்டுப்பட்ட உணர்ச்சிப்பாடு எப்போதும் போல நேர்மையானதும் மற்றும் உணர்வுபூர்வமானதாக இருந்தபோதும்
ஊகங்களுக்கு இடமளித்தது." என்று குறிப்பிட்டது.
பதவி விலகுவதற்கு பதிலாக, எல்லோரும் எதிர்பார்த்தது போல, கட்சியை
"அரசியலின் மையத்திற்கு" (வலதுசாரிக்கும் -இடதுசாரிக்கும் இடைப்பட்ட நிலைக்கு) கொண்டு செல்லவதற்காக
தாம் தலைவராக நீடிக்க இருப்பதாக இரஜோய் அறிவித்தார். இரஜோயின் வெளிப்படையான திசைமாற்றம்
தந்திரோபாயகரமானது.
சோசலிச தொழிலாளர் கட்சியின் உறுதியைக் குலைக்கவும், அகற்றவும் வலதுசாரி
எதிர்ப்பை ஆதரித்த போதினும், எலோரய்கா மற்றும் ரமிரெஜ் போன்றோரின் பிரச்சாரங்கள் எதிர்விளைவை
ஏற்படுத்தி இருந்ததில் இருந்து ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தார். இரண்டு மில்லியன் வாக்காளர்களின் கட்சியாக,
அதாவது, பாசிச கடும்போக்களார்களின் கட்சியாக மக்கள் கட்சி உருவாவதற்கான அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தார்.
மேலும் "விஷயங்களை வேறுபட்ட கோணங்களில் அது ஒருங்கிணைக்க இருக்கிறது... அடுத்த பொது தேர்தலில் 12
அல்லது 13 மில்லியன் வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும்." என்றார்.
ஜூன் தொடக்கத்தில், மக்கள் கட்சி மத்தியில் இருக்க வேண்டும், எல்லோருடனும்
தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அது எப்போதும் தன்னைத்தானே ஓரத்தில் நிறுத்திக் கொண்டிருக்க கூடாது."
என்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவரின் கொள்கைகளை வெளிப்படையாக சவால் விடும் யாரையும் அவர்
விமர்சித்தார்.
ஜூன் 17ல், இரஜோயின் நெருங்கிய ஆதரவாளரான மட்ரிட் மேயர் அல்பெர்டோ
ரிஜு-கல்லர்டன் தமது விமர்சனங்களை வலதுசாரி பாசிஸ்டுக்களின் பக்கம் திருப்பினார். அவர் கூறுகையில்,
"மக்கள் கட்சியை பற்றி குடிமக்கள் நினைக்கும் போது, அவர்களை எதிர்காலத்தை பற்றி நினைக்க செய்வதே
எங்களின் அடுத்த வெற்றிக்கான திறவுகோலாகும். கடந்த காலத்திற்கு கட்டுப்பட்டிருப்பதை போலில்லாமல்
எதிர்காலத்திற்குரிய ஒரு திட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
மக்கள் கட்சியின் தலைவராய் இரஜோய் இருப்பதற்கு மிக தீவிர எதிர்ப்பு
காட்டியவர் ரமிரெஜ் ஆவார். இரஜோயை, "அதிகாரத்துவ முறையில் செயல்படும் ஒரு வீணாகி போன முரடன்"
என்றும், "ஒரு தகைமையற்ற தலைவர்" என்றும், அவரொரு "தன்னினம் கொல்லும் அரசியல்வாதி" என்றும் கூறி
கத்தோலிக்க பேராலய வானொலி நிலையத்தில் (COPE)
முன்னெப்போதுமில்லாத வகையில் ரமிரெஜ் வசை மொழிந்தார். பொது தேர்தலில் இரஜோவிற்கு வாக்களிக்குமாறு
தாம் கேட்டு கொண்டதற்காக தம்மை மன்னித்து விடுமாறு ஏற்கனவே மதிப்பிழந்திருந்த
COPE வானொலி
நிகழ்ச்சி வழங்குனர் பெடிரிகோ ஜிமெனெஜ் லொசொன்டோஸ் அவரின் வானொலி இரசிகர்களை கேட்டுக்
கொண்டார். கடந்த கால குற்ற உணர்வு இல்லாத ஒரு தலைமை மக்கள் கட்சிக்கு தேவைப்படுகிறது என்ற
அறிவிப்புடன் இந்த அமளியில் அஸ்னாரும் சேர்ந்து கொண்டார்.
மக்கள் கட்சி அரசியல்வாதிகள் அதன் தலைவருக்கு "எதிராக எழுச்சி" பெற
வேண்டும் என ரமிரெஜ் அழைப்பு விடுத்தார். மேலும் ஜூவான் கோஸ்டா மக்கள் கட்சியின் துணை
தலைவராவதற்கான விருப்பங்கள் குறித்தும் யோசனைகள் தெரிவித்தார். "அனுபவம், திறமை, அர்ப்பணிப்பு"
ஆகியவற்றுடன் அஸ்னாரின் நிழலில் வளர்ந்துள்ள தலைமுறை, அதாவது, மக்கள் கட்சியின் வெளியுறவு துறைக்கான
நிழல் மந்திரி குஸ்டவோ டி அரிஸ்டிகி அல்லது எஸ்பிரன்ஜா அகுய்ரி குழுவிலிருந்து ஜனநாயக சீர்மைகளின் மீது
நம்பிக்கை கொண்ட வேறு இளைஞர்கள்... தற்போது பொறுப்பேற்க தயாராக உள்ளதாக" கோஸ்டா
தெரிவித்தார்.
கட்சி தலைவராக இரஜோய் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் மட்ரிட்
பிராந்தியத்தின் தலைவர் அகுய்ரியும் ஒருவராவார். அகுய்ரி எப்போது வேண்டுமானாலும் தாராளவாத கட்சியில்
சேர வாய்ப்பிருப்பதாக அறிவித்ததன் மூலம் இரஜோய் இதற்கு பதிலளித்தார்.
தேர்தலுக்கு பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சியை சமரசப்படுத்தும் வகையில்
மக்கள் கட்சியின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக 36 வயதான சோராயா சான்ஜ் டி சாண்தாமாரியா
உட்பட இளம் உறுப்பினர்களை இரஜோய் நியமித்ததை அவரின் எதிர்ப்பாளர்கள் கண்டார்கள். மக்கள் கட்சி
தற்போது "பொது சுகாதாரம், கல்வி பாதுகாப்பிலும், இன்றியமையாத சமூக பாதுகாப்பிலும்
ஈடுபட்டிருப்பதாக" சாந்தாமாரியா அறிவித்தார். எஸ்பிரன்ஜா அகுய்ரியின் எதிர்ப்பாளரான ரிஜு-கல்லர்டனை
முன்னிருக்கை பதவியில் இரஜோய் நியமித்தார். அவர் தெரிவித்ததாவது: "2012 பற்றி எனக்கு தெரியாது,
ஆனால் இன்று சிறந்த பணிகளைச் செய்வதில் நாம் வெற்றி பெற்றால், சோசலிச தொழிலாளர் கட்சியின் பல
வாக்காளர்கள் மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள். ஏனென்றால், மத்தி மட்டுமே அரசியல் களமாக உள்ளது"
என்றார்.
தேர்தல் தோல்வியில் இருந்து, பல வலதுசாரி முக்கியஸ்தர்கள் விலகிக்
கொண்டுள்ளனர். ஏப்ரல் 29ல், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கான முன்னாள் மந்திரியும், மக்கள்
கட்சி காங்கிரஸின் முக்கிய செய்தி தொடர்பாளருமான எடோர்டோ ஜப்லானா தமது விலகலை அறிவித்தார்.
அதற்கு ஒரு சில நாட்கள் கழித்து, மட்ரிட்டில் குண்டு வெடித்த போது, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போலீஸ்
துறைக்கு பொறுப்பான மந்திரி ஏஞ்சல் அசிபெஸ் விலகிக் கொண்டார். அந்த அட்டூழியம் இஸ்லாமிய
பயங்கரவாதிகளின் வேலையாகும் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்த போதிலும், அந்த குண்டு வெடிப்பு பாஸ்க்
பிரிவினைவாத அமைப்பின் (ETA)
வேலையேயாகும் என அசிபெஸ் பொது குற்றச்சாட்டு அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டார்.
மே இறுதியில், பாஸ்க் மக்கள் கட்சியின் தலைவர் மரியா சன் ஜில் மற்றும் 1996ல்
ETA
ஆல் கடத்தப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் சிறை காவலர் மற்றும் மக்கள்
கட்சி தொண்டரான ஜோஸ் அன்டோனியோ ஆர்டிகா லாரா இருவரும் தங்களின் இராஜினாமாவை அறிவித்தனர்.
இந்த இராஜினாமாக்கள் வெளிவந்த காலஇடைவெளிகள் அவை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தன்மையைக்
கொண்டிருந்தன. பாஸ்க் பிராந்தியத்தில் இருக்கும் மிதவாத பாஸ்க் தேசிய கட்சியை இரஜோய் சமரசப்படுத்த
முயல்வார் என்றும், பொதுஜன வாக்கெடுப்புக்கு அவர் திட்டமிடுகிறார் என்றும், ஸ்பெயினில் இருந்து பிரிந்து
செல்வதை நோக்கிய முதல் படியே அவர்களின் கோரிக்கையாக இருக்கும் என்றும் அவர்கள் இருவரும்
தெரிவித்தனர்.
இதற்கும் மேலாக சான் ஜில் பாஸ்க் மக்கள் கட்சியின் பிராந்திய மாநாட்டிற்கான
தேதியை முன் கொணர்ந்திருக்கிறார். அவர் உடனடியாக அஸ்னாரின் ஆதரவை பெற்றார். நெருக்கடிகளாலும் தம்
மனைவியாலும் தாம் ''ஆழ்ந்த அதிருப்தியில்'' இருந்ததாக அறிவித்த அவர் தன் மனைவியை "ஒரு நேர்மையான,
அரசியல் மற்றும் உணர்வுபூர்வமான மதிப்பீட்டு புள்ளியாக" குறிப்பிட்டார்.
அஸ்னார் அவரின் அறிக்கையை பெருவிலிருந்து திரும்பிய பின் அறிவித்திருந்தார். மக்கள்
கட்சி சிஐஏ உடன் இணைந்து இலத்தீன் அமெரிக்கா முழுவதும் வலதுசாரி இயக்கங்களுக்கு பயிற்சியும், ஊக்கமும்
அளித்து வருவதாக தீவிர குற்றச்சாட்டுக்களை அவர் சந்தித்து வருகிறார். 2006 ஜனவரியில், தெற்கு
அமெரிக்காவில் இவோ மோரேல்ஸ் மற்றும் ஹூகோ சாவஜ் போன்ற ஜனரஞ்சகவாத கட்சி தலைவர்களின்
உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடும்போது, சிலி நாட்டு பத்திரிகை மெர்கூரியோவிற்கு அஸ்னார்
தெரிவித்ததாவது, "ஜனரஞ்சகவாத அலை ஓய்ந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். யாராவது செய்ய வேண்டும்,
இது சரியான வழியல்ல என்று யாராவது எடுத்து கூற வேண்டும். அதை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
மேலும் அந்த விஷயத்தில் உதவி செய்வதற்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நான்
அறிவேன். எனவே நாம் ஒழுங்கமைத்து நம்மால் அதை செய்ய முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம்."
என்று தெரிவித்தார்.
சான் கில் மற்றும் ஓர்டிகா லாரா ஆகியோரின் இராஜினாவை தொடர்ந்து, மக்கள்
கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இரஜோயை அவமதித்து கூச்சலிட்டவாறும், அவரை உடனடியாக பதவி
விலக கோரியும் ஒரு கும்பல் கூடியது. "இரஜோய் எங்களின் வாக்கை காட்டி கொடுத்திருக்கிறார்", "எங்களின்
வாக்குகளை எங்களிடம் திருப்பி அளியுங்கள்" என்றும் "உடனடியாக வெளியேறு" என அவர்கள் கூச்சலிட்டார்கள்.
இரஜோயின் நெருங்கிய கூட்டினர்களில் ஒருவரான எல்லோரிகா கூறியதாவது,
"எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. மேலும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்... தற்போதைய எங்களின் தேவை
என்னவென்றால், புதிப்பிக்கப்பட்ட, உறுதியான ஒருங்கிணைந்த தலைமை தான் தேவை. கூறுவதற்கு எனக்கு
வருத்தமாக இருந்தாலும் கூட, அது போன்ற தலைமையை தரக்கூடிய நிலைமையில் இரஜோய் இல்லை."
மேனுவல் ஃபிராகா ஓய்வு பெற்று கொண்டு தலையிடுவதை நிறுத்தி கொள்ளவேண்டும்
என்ற கணிசமான கண்டனங்களும் இருக்கின்றன. சமீபத்தில்
ETA ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்ரிட்டில் நடந்த நினைவு
விழா கூட்டத்தில் இரஜோய், கலோர்டன் ஆகியோருக்கு எதிராக கண்டன குரல் எழுப்பிய மற்றும் ஃபிராகாவை
தூற்றிய கூட்டம், குறிப்பாக மத்திய வர்க்க கூட்டம், அகுய்ரிக்காக "ஜனாதிபதி, ஜனாதிபதி" என்று
உணர்ச்சிபூர்வமாக குரல் எழுப்பியது.
அனுபவமிக்க மற்றும் கொள்கை பிடிப்பான வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவரான
ஃபிராகா, பிரான்கோ சர்வாதிகாரத்தின் வீழ்ச்சியின் பின்னர் விழிப்புடன் இருக்கிறார். அதாவது வலதுசாரி
பிழைத்திருக்க வேண்டுமானால், ஜனரஞ்சகவாத அழைப்புக்களை விட்டு, அதன் பாசிச வேர்களிலிருந்து அது
தம்மைதாமே அந்நியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் விழிப்புடன் இருக்கிறார். 1962 லிருந்து 1969
வரையிலான பிரான்கோ ஆட்சியில் அவர் தகவல் மற்றும் சுற்றுலா துறை மந்திரியாக இருந்தார். பின்னர்
1975இல் பிரான்கோவின் மறைவுக்கு பின்னர் குறுகிய காலம் இருந்த முதல் வலதுசாரி அரசாங்கத்தில் உள்துறை
மந்திரியாக பதவி வகித்தார். அதற்கடுத்த ஆண்டு, மக்கள் கூட்டணி(AP)
உருவாக்க உதவிய அவர், அதன் தலைவராகவும் ஆனார்.
மந்தநிலை மற்றும் வீழ்ச்சிக்கு எடுத்து சென்ற, தனிமைப்படுத்தப்பட்ட தேசிய
பொருளாதார கொள்கைகளை மீள்மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை உணர்ந்திருந்த பிராங்கோவாத குழுவை
ஃபிராகா பிரதிநிதித்துவப்படுத்தினார். பிராங்கோவின் மறைவுக்குப் பின்னர், பாசிச அரசு இயந்திரங்கள் மூலமாக
அது சாத்தியப்படும் என்று அவர் எண்ணினார், ஆனால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாசைகளால்
விரைவிலேயே அந்த முன்னோக்கு தகர்க்கப்பட்டது. 1978ல், "ஒரு அமைதியான ஜனநாயக மாற்றத்திற்காக"
சோசலிச தொழிலாளர் கட்சி ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அவர் ஸ்பெயின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்
கட்சியுடன் (PCE)
இணைந்து பணியாற்றினார். அது பாசிசவாதிகளை எவ்விதத்திலும் பாதிக்காமல் விட்டதுடன், பூர்ஷூவா ஆட்சி
தொடரவும் உறுதியளித்தது.
1989இல், தம்மைத் தாமே பழமைவாதிகள், முற்போக்குவாதிகள், கிறிஸ்துவ
ஜனநாயகவாதிகள் மற்றும் முடியரசிற்கு ஆதரவானவர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் ஆகியோருடன் மக்கள்
கூட்டணியின் (AP)
அழிவுகளில் இருந்து மக்கள் கட்சியை உருவாக்க அவர் உதவினார். ஆனால் ஒரு விமர்சகர் குறிப்பிட்டது போல,
"மக்கள் கட்சியின் பதவி நிலையில் உள்ள சிலர் ஒருபோதும் பொதுமக்களிடம் தங்களின் உண்மையான கொள்கை
நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை." தற்போது மக்கள் கட்சியை மத்திக்கு கொண்டு வர இரஜோய் முயலும்
இவ்வேளையில் நீண்ட காலமாக மறைந்திருந்த இந்த கொள்கை நிலைபாடுகள் வெளியில் வரத் தொடங்கி
இருக்கின்றன.
பல ஆய்வாளர்கள் மக்கள் கட்சியில் தற்போது இருக்கும் கொந்தளிப்பை,
1980களின் தொடக்கத்தில் மக்கள் கூட்டணியில் இருந்த பிளவுகள் மற்றும் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகிறார்கள். கட்சிகள்
எவ்வித நிலையான அரசியல் அடித்தளமும் இல்லாமல் விரைவாக தோன்றுவதும், அழிவதுமாக இருந்து பாசிச வலதுசாரிகளுக்கு
நிரந்தர பிரச்சனையாக இருந்த காலத்துடன் ஒத்த முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும்
உள்ளன. 1989ல், நெருக்கடி காலத்தில் இருந்து மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. விரிவாகும்
பொருளாதாரத்தின் அடிப்படையில் ஃபிராகா அதன் உட்குழுக்களை சமாளித்தார். இந்த ஸ்திரத்தன்மைக்கு காரணமாக
இருந்த பொருளாதார உடன்பாடுகள் நெருக்கடிக்குள்ளாகையில் வலதுசாரியில் தற்போது கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் மிக அதிகளவில் பாதிக்கப்படும் நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாக இருக்கும்
என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்திருக்கிறது.
நீண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட சோசலிச தொழிலாளர் கட்சி
அரசியல்வாதிகள் மக்கள் கட்சியினுள் அதிகரித்துவரும் பதட்டங்களாலும், ஜனநாயக மாற்றத்தின் போது
உருவாக்கப்பட்ட அரசியல் ஒழுங்கமைப்புகள் வீழ்ச்சி அடைவதற்கான நிலைமை தீவிரமடையலாம் என்ற அச்சத்தாலும்
ஆழ்ந்த தொந்தரவுக்குள்ளாகி உள்ளார்கள். 1978 அரசியலமைப்பு உடன்பாடுகளுக்கு உடன்பட்ட பிற அரசியல்
போக்குகளையும், மிக குறிப்பாக சோசலிச தொழிலாளர் கட்சியின் முன்னாள் கூட்டணியாளரான ஐக்கிய
இடதுசாரிகளின்(IU)
உடைவுக்கு இந்த அரசியல் பதட்டங்கள் இட்டுச்செல்கின்றன என்பதை சோசலிச தொழிலாளர் கட்சி உணர்ந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் மிஞ்சியவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஐக்கிய இடதுசாரி மார்ச் தேர்தலில் குறைவான
வாக்குகளை பெற்றது.
இதுபோன்றதொரு வெளிப்படையான மோதலை தவிர்க்க ''ஜனநாயக''
செயல்முறையில் மீண்டும் ஒருமைப்பட தீவிர வலதுசாரிகளுடன் விவாதித்த போதினும், கடந்த நான்கு ஆண்டுகளில்,
மத்தியை நோக்கிய இரஜோயின் முனைவுகளை ஊக்கப்படுத்தவும், தீவிர வலதுசாரியிலிருந்து அவரை பிரிக்கவும்
ஸபடேரோ விரும்பினார். தீவிரப்பட்ட மற்றும் போரிட கூடிய உழைக்கும் வர்க்கத்துடன் ஒரு வெளிப்படையான
மோதலை தோற்றுவிக்க கூடிய, ஆட்சிக்கு எதிராக முழுமையாக வெடிக்கும் தற்போதைய நெருக்கடியை தவிர்க்க
ஜபடேரோ மற்றும் இரஜோய் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். மக்கள் கட்சிக்கு எதிராக பரந்த
எதிர்ப்பு வளர்ந்து வருவதாலும், ஒரு பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருவதாலும்
ஜனநாயக மாற்றத்திற்கு ஒட்டுமொத்த திட்டமும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
|