World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காUS presidential nomination campaigns remain deadlocked after January 19 votes ஜனவரி 19 வாக்களிப்பிற்கு பின்பு அமெரிக்க அதிபருக்கான நியமன பிரச்சாரங்கள் முட்டுக்கட்டு நிலையில் உள்ளன By Patrick Martin சனியன்று நடைபெற்ற தெற்கு கரோலினாவின் அதிபருக்கான ஆரம்ப தேர்தலில் வெளியான குடியரசுக் கட்சி முடிவுகளும், நெவெடாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சியினதும் ஜனநாயகக் கட்சியினதும் உள்கட்சி வாக்கெடுப்பு முடிவுகளும் இரண்டு கட்சிகளின் அதிபர் நியமனங்களுக்கான போட்டிகளை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவியதாயில்லை. ஜனநாயகக் கட்சியின் நியமனத்திற்கு செனட்டர் ஹிலாரி கிளின்டனும், செனட்டர் பாரக் ஒபாமாவும் மிகவும் நெருங்கிய போட்டியில் இருக்கின்றனர். சிதறுண்டிருக்கும் குடியரசுக் கட்சியின் போட்டியில் இன்னமும் அரசியல் ரீதியாக சாத்தியமான நான்கு போட்டியாளர்கள் களத்திலிருக்கிறார்கள். சுமார் 1,000 சிறிய வட்டார கட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர பிரதிநிதிகளில் 51 சதவீதத்தை பெற்று நெவெடா உட்கட்சித் தேர்தல்களில் ஹிலாரி ஒரு குறைந்த வாக்கு வித்தியாசத்தால் வெற்றியை பெற்றிருக்கிறார். ஒபாமா 45 சதவீதத்தை வென்றிருக்கிறார், முன்னாள் செனட்டர் ஜோன் எட்வர்ட்ஸ் 4 சதவீதத்தை மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. இது பிரதிநிதிகள் ஆதரவைப் பெறுவதற்கு அவசியமான 15 சதவீத வரம்பு நிலையை பெறுவதற்கு பெரும்பாலான சிறிய வட்டார நிலை கட்சித் தேர்தல்களில் அவர் தோற்றிருப்பதை பிரதிபலித்தது. வாக்குகளின் புவியியல் ரீதியான பங்கீட்டின் காரணமாக, ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்புக் கூட்டத்தில் ஒபாமா, கிளின்டனை விட அதிகமான நெவேடா பிரதிநிதிகளை பெறக் கூடும். அவர் லாஸ்வேகாஸை உள்ளடக்கிய கிளார்க் நகரம் எனும் ஒரே ஒரு நகரத்தை தவிர மாநிலத்தில் ஒவ்வொரு நகரத்திலும் வென்றிருக்கிறார், மற்றும் மாநிலரீதியான வாக்குகளில் 70 சதவீதத்திற்கு உரித்தாகிறார். கிராமப்புற, சிறு-நகர மற்றும் புறநகர் மேல்தட்டு வாக்காளர்கள் இடையே ஒபாமா கிளின்டனை தோற்கடித்திருக்கிறார். ஆனால் லாஸ்வேகாஸில் உள்ள கறுப்பின தொழிலாள வர்க்கத்தின் சற்று பெரிய சிறுநகரப்பகுதியை தவிர நகர்ப்புற தொழிலாள வர்க்க பகுதிகளில் தீர்மானமாய் தோல்வியை தழுவியிருக்கிறார். நெவெடா கட்சித் தேர்தல்களின் முக்கியமானதொரு அம்சமானது சமையல் தொழிலாளர்கள் சங்கம் அதன் சொந்த உறுப்பினர்களாலேயே தாக்கத்திற்குரிய முறையில் கைவிடப்பட்டது தான். சென்ற வாரம் சங்கத் தலைமை ஒபாமாவுக்கு வழிமொழிந்திருந்த நிலையிலும் குறிப்பிடத்தக்க பெரும் அளவிலானோர் ஹிலாரிக்கு வாக்களித்தனர். கஸினோ தொழிலாளர்கள் வேலைக்கிடையே உள்கட்சித் தேர்தல்களில் கலந்து கொள்வதை அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து கிளின்டன் பிரச்சார தரப்பு உரக்க புகார் தெரிவித்தது. அதன் சொந்த சங்க ஆதரவாளர்கள் இந்த கட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் தடுக்க நீதிமன்றத்திற்கும் சென்று தோல்வியுற்றனர். ஆனால் கடைசியில், ஒன்பது கஸினோ உள்கட்சித் தேர்தல்களில் ஹிலாரி ஏழினைக் கைப்பற்றினார். இந்த கூட்டங்களில் கலந்துகொண்ட நகர பிரதிநிதிகளில் 268 ஐக் கைப்பற்றினார், ஒபாமா 224 ஐக் கைப்பற்றினார். தேர்தலுக்கு பிந்தைய ஊடக கருத்துக்களானவை தேர்தல்களில் இனவெறி துருவமாக்கல் இருந்ததாக கூறப்படுவதின் மீது மையம் கொண்டிருந்தது. வாக்களிப்பின் பின்னான கருத்துக்கணிப்புகள் ஹிலாரி கிளின்டன் ஹிஸ்பானிக் வாக்காளர்களின் வாக்குகளை 64-27 சதவீத விகிதத்தில் கைப்பற்றியதையும், வெள்ளை வாக்காளர்களின் வாக்குகளை 51-38 என்ற விகிதத்தில் கைப்பற்றியதையும், ஒபாமா கறுப்பின வாக்குகளை 83-14 என்ற விகிதத்தில் கைப்பற்றியதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இதே போன்றதொரு போக்கு பிப்ரவரி 5 அன்று "சிறப்பு செவ்வாயில்" நடைபெற இருக்கும் கலிபோர்னியா, அரிஸோனா, கொலராடோ, நியூயோர்க் மற்றும் நியூஜெர்சி என ஹிஸ்பானிக் வாக்காளர்களை பெருமளவில் கொண்டிருக்கும் மாநிலங்களில் இருக்குமானால், ஹிலாரி கிளின்டன் அவற்றில் ஒரு தீர்மானமானதொரு வெற்றியை கைப்பற்றுவார் என்று ஏராளமான கணிப்புகள் காட்டின. இது அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்களை எதிர்கொண்டிருக்கிற உண்மையான, இரண்டு கட்சி அதிபர் வேட்பாளர்களாலும் தீவிரமாக கவனம் செலுத்தப்படாத, அதிகரித்து வரும் அமெரிக்க பொருளாதார நெருக்கடி, சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, ஜனநாயக உரிமைகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள், மற்றும் ஈராக்கில், மத்திய கிழக்கில் மற்றும் மத்திய ஆசியாவில் மிக அதிகமான அளவில் அமெரிக்க இராணுவத்துவத்தின் வளர்ச்சி ஆகிய பிரச்சினைகளில் இருந்து பிற்போக்கான முறையில் அரசியல்ரீதியான திசைதிருப்பலுக்கு இனஉணர்வினை பயன்படுத்துவதற்கான முயற்சிகளின் தொடர்ச்சியே ஆகும். லாஸ் வேகாஸில் சென்ற செவ்வாயன்று நடந்த நெவெடா வாக்களிப்பிற்கு முன்னதான ஜனநாயக கட்சி வேட்பாளர் விவாதத்தில், ஹிலாரி கிளின்டன் ஈராக் மீதான போரை அங்கீகரிப்பதற்கு வாக்களித்தது குறித்து விமர்சிப்பதையே ஒபாமா ஏறக்குறைய கைவிட்டார், தவிரவும் எட்வர்ட்ஸ், ஒபாமா, ஹிலாரி ஆகிய மூன்று பங்கேற்பாளர்களுமே அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் அல்லது அதன் அருகில் காலவரையின்றி தொடரும் என்பதை ஒப்புக் கொண்டனர். இந்த நிலைப்பாட்டை எடுத்தமை, 2004 போலவே, இரண்டு முக்கிய கட்சிகளிலுமே பிரபலமான போர்-எதிர்ப்பு மனோநிலையை வெளிக்காட்டும் வழியெதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் வண்ணம் அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஆளும் மேல்வர்க்கத்தால் சாதுர்யமாக கையாளப்படுகிறது என்பதை விளங்கச் செய்கின்றது. இது தவிர பொருளாதார மற்றும் சமூக விஷயங்களில் ஒபாமா ஹிலாரியை விடவும் சற்று வலது பக்கமாக நிலைப்படுத்திக் கொள்கிறாரே தவிர இடதின் பக்கமாக அல்ல. ஹிலாரி நெவெடாவில் இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பொருளாதாரத்தை முக்கியத்துவமான விடயமாக்கி கொண்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் பிற்போக்கு முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பினுள் ஒரு உருக்குலைந்த விதத்திலேனும் குறைந்த பட்சம், வேலைவாய்ப்புகள் மீதான கவலை, உண்மையான சம்பளங்கள் குறைந்து வருவது, மற்றும் பரவலாகி விட்ட திவால்நிலைகள் மற்றும் வீடுகள் கட்டாய ஏலம் பற்றிய பிரதிபலிப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக வீடுகள் ஏலமானது லாஸ் வேகாஸ் பகுதியில் மிகவும் கூர்மையான பிரச்சனையாக இருக்கிறது. ஒபாமா Reno Gazette-Journal இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் தனது சொந்த வாய்ப்புகளையே கெடுத்துக் கொண்டார். அதில் அவர் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனை அமெரிக்க அரசியலை உருமாற்றிய, குடியரசுக் கட்சியினை பத்தாண்டுகளுக்கும் மேலாக "சிந்தனைகளின் கட்சியாக்கிய" ஒரு பிரதிநிதியாக வர்ணித்திருந்தார். ரீகனின் பரந்துபட்ட பிரபலமானது அரசியல் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களில் விசுவாசத்திற்குரிய ஒரு விஷயமாக இருந்தாலும், உண்மையில் ரீகன் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளால் வெறுக்கவேபட்டது. அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களிடையே இன்றும் அந்த வெறுப்பு நிலவுகிறது. உள்கட்சித் தேர்தலுக்கு முந்தைய தினங்களில் ஹிலாரி தொடர்ந்து ஒபாமாவின் கருத்துக்களை தாக்கிப் பேசினார். "சமூகசேவை பாதுகாப்பை தனியார்மயமாக்குவதை ஒரு சிறந்த சிந்தனை என்று நான் கருதவில்லை" என லாஸ் வேகாஸின் அச்சகசாலை ஒன்றில் பேசுகையில் அவர் கூறினார். "குறைந்தபட்ச சம்பளம் என்பதை நீக்குவது ஒரு உகந்த சிந்தனை என்று நான் கருதவில்லை". ஒபாமாவை விட ஹிலாரி பெற்ற குறுகிய வாக்கு வித்தியாச வெற்றியை விட மிகவும் முக்கியமானதாக இருந்தது உள்கட்சித் தேர்தல்களுக்கான வாக்களிப்பில் இரண்டு பெரும் வர்த்தகக் கட்சிகளுக்கு இடையில் இருந்த பெரும் சமமின்மையாகும். ஜனநாயகக் கட்சி தேர்தல்களில் 2004ல் 9,000 ஆக இருந்ததில் இருந்து உயர்ந்து 120,000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர். இது குடியரசுக் கட்சியின் கட்சித் தேர்தல்களில் கலந்து கொண்ட 44,000 பேர்களை போல் ஏறக்குறைய மூன்று மடங்கு. இந்த மாநிலத்தில் தான் ஜோர்ஜ் புஷ் 2000 மற்றும் 2004ல் மிகக் குறுகிய வித்தியாசத்தில் தப்பித்தார் என்பதால் இந்த இடைவெளி மிகவும் முக்கியமானதாகும். குடியரசுக் கட்சித் தேர்தல்களின் கருத்துக் கணிப்பு தேர்தலை முன்னாள் மசாசூசெட்ஸ் கவர்னர் மிட் ரோம்னி மாநிலத்தின் பிரதிநிதிகள் உறுதியளிக்காத மற்றும் அவரது அநேக எதிர்போட்டியாளர்கள் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்வில் 51 சதவீத வாக்குகளை கைப்பற்றி வென்றிருக்கிறார். காங்கிரஸ் உறுப்பினரான டெக்சாஸின் ரோன் பால் 13 சதவீத வாக்குகளை கைப்பற்றினார் மற்றும் அரிஸோனாவின் செனட்டர் ஜோன் மெக்கெயின் 12 சதவீதத்தை பெற்றார். மிச்சிகனில் ஜனவரி 15 அன்று நடைபெற்ற ஆரம்ப தேர்தல், மற்றும் ஜனவரி 5 அன்று வியோமிங்கில் நடைபெற்ற பெரிதும் போட்டியற்ற மற்றும் அதிக அளவில் போட்டியாளர்களுமில்லாத கட்சித் தேர்தல்களை அடுத்து ரோம்னியின் இந்த வெற்றியானது அவரது மூன்றாவதாகும். தேசிய அமைப்புக் கூட்ட பிரதிநிதிகளில் ரோம்னி முன்னணி வகிக்கிறார், ஆனால் அவரது நெவெடா வெற்றி, தெற்கு கரோலினாவின் ஆரம்ப தேர்தலில் முன்னாள் அர்கன்சாஸ் கவர்னர் மைக் ஹக்கபேயை மெக்கெயின் மிகக் குறைந்த வித்தியாசத்தில் 33 சதவீதத்திற்கு 30 சதவீதம் என்ற விகிதத்தில் வெற்றி பெற்றதில் மங்கலாகிவிட்டது. டென்னஸின் முன்னாள் செனட்டரான ஃபிரெட் தொம்ஸனும் ரோம்னியும் முறையே 14 சதவீதம் மற்றும் 13 சதவீதம் பெற்று பின்தங்கினர். தெற்கு கரோலினாவில் மெக்கெயினின் வெற்றியானது தாக்கம்மிக்க ஒன்றாக இல்லை. குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே ஹக்கபேயுடன் தலா 30 சதவீதமான வாக்குகளை பகிர்ந்துகொண்டு, சிறு சுயாதீனமான வாக்குகளில் பெரும் பங்கினை கைப்பற்றி வெற்றிக்கான தனது மட்டுமட்டான மூன்று சதவீத வாக்குகளை மெக்கெயின் பெற்றார். உண்மையில் 2008ல் மாநிலத்தில் வெற்றி பெறும்போது அவர் பெற்றிருக்கக் கூடிய வாக்குகள், 2000ல் அவர் தோற்கும்போது பெற்றதை விட குறைவானவையே ஆகும், அப்போது அவர் ஜோர்ஜ் புஷ்ஷால் 53-42 சதவீத வாக்குகள் எனும் வித்தியாசத்தில் தான் தோற்கடிக்கப்பட்டார். சனியன்று அவர் பெற்றதான மொத்த வாக்குகள் சுமார் 140,000, இது எட்டு வருடங்களுக்கு முன்னால் அவர் பெற்றதான 240,000 வாக்குகளில் வெறும் பாதிக்கும் கொஞ்சம் கூடுதலானதே ஆகும். குடியரசுக் கட்சியின் மொத்த ஆரம்ப தேர்தல் வாக்குப்பதிவே 2000ல் 550,000 ஆக இருந்து இந்த ஆண்டு வெறும் 400,000 என்ற எண்ணிக்கைக்கு வீழ்ச்சி கண்டு விட்டது. ஹக்கபே அடிப்படைவாதிகளையும், மெக்கெயின் மாநிலத்தின் பெரும் வாக்களிக்கும் மக்களான முன்னாள் படையினரையும் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரையும் குறிவைத்து பிரச்சாரம் செய்ததால் ஹக்கபே-மெக் கெயின் போட்டியினை ஒரு ஊடக வர்ணனை "கிறிஸ்தவ படையினருக்கும் முன்னாள் படையினருக்கும்" இடையிலான போட்டி எனக் கூறியது. இந்த போட்டியில் ஹக்கபே தோற்றதற்கு தொம்ஸன் ஒரு முக்கியக் காரணம், இவரும் குடியரசுக் கட்சி சுவிசேஷ (evangelical) மதவாக்காளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மாநிலத்தின் அதே உயர்பகுதிகளைக் குறி வைத்து பிரச்சாரம் செய்தார் என்பதால். முன்னாள் அர்கன்சாஸ் கவர்னர் சுவிசேஷ வாக்குகளில் 40 சதவீதம் வரை கைப்பற்றினார், ஐயோவாவில் இது 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததால் அங்கு ஜனவரி 3 உள்கட்சித் தேர்தல்களில் அவர் வென்றிருந்தார். ஹக்கபே-தொம்ஸன் போட்டியானது அடிப்படைவாதிகளுக்கும் மற்றும் வலதுசாரி சகிப்புத்தன்மையற்றோருக்கும் உரத்த அழைப்பு விடுதல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. அடிமைத்தனத்திற்கு அடையாளமான கொடியை பொது இடங்களில் வெளிக்காட்டுவதை ஆதரித்துப் பேசிய ஹக்கபே, ஒரே-பால் திருமணங்களை மிருக இயல்புடன் ஒப்பிட்டார். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை "வாழ்கின்றதொரு, சுவாசிக்கும் ஆவணமாக" குறிப்பிட்டதற்காக கண்டித்து தொம்ஸன் பதிலடி கொடுத்தார். எழுத்தின்வழியான பொருள்கொள்ளலில் இருந்து விலகியதானதாகும் இது என்று கூறிய அவர், "இது தெளிவாக தேசமெங்கும் கருக்கலைப்பினை சட்டப்பூர்வமாக்கிய Roe எதிரான Wade தீர்ப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கிய Lawrence எதிரான Texas தீர்ப்பு இவற்றையெல்லாம் தந்த அரசியலமைப்புச் சட்டம் குறித்து பிழையாக வழிநடத்தும் வகையில் எண்ணுவது தான்" என்றார். அவர் முக்கியமானதொன்று என்று அறிவித்திருந்த ஒரு போட்டியில் பரிதாபமான மூன்றாவது இடத்தைப் பிடித்த பின்னர், தெற்கு கரோலினாவில் இருந்து தொம்ஸன் ஜனவரி 29ல் குடியரசுக் கட்சியின் அடுத்த ஆரம்ப தேர்தல் நடைபெற இருக்கும் புளோரிடாவுக்கு செல்வதற்கு பதிலாக, வாஷிங்டன் டிசி பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு பறந்து சென்று விட்டார். அவரது பிரச்சார பயணத்திட்டத்தில் எதிர்வரும் வாரத்திற்கான திட்டம் எதுவும் இல்லை. அவர் போட்டியிலிருந்து விலகி மெக்கெயினுக்கு ஆதரவளிப்பார் என்றும் ஒரு பரவலான ஊகம் இருக்கிறது. 2000ல் குடியரசுக் கட்சி அதிபர் நியமனத்தேர்தலுக்கான மெக்கெயினின் வெற்றி பெறாத பிரச்சாரத்திற்கு தொம்ஸன் தேசிய இணைத் தலைவராக பணியாற்றியிருக்கிறார். இது புளோரிடாவில் பதிவு செய்த குடியரசுக் கட்சியினர் மட்டுமே வாக்களிக்க கூடியதும் சுயேச்சைகள் இல்லாத மற்றும் சாதாரண வாக்காளர்கள் கலந்துகொள்ளமுடியாத ஆரம்ப தேர்தலுக்கான ஒரு நான்கு முனை போட்டியை அநேகமாக அமைக்கலாம், அதாவது மெக்கெயின், ஹக்கபே, ரோம்னி மற்றும் முன்னாள் நியூயோர் மேயர் ருடோல்ப் யூலியானி இவர்களுக்கிடையே தெளிவான முன்னிலை வகிக்கத்தக்கவர் என்கிற நிலையில் எவருமில்லை. புளோரிடா ஆரம்ப தேர்தலானது ஜெயிப்பவருக்குத் தான் எல்லாம் என்பதாக, அதாவது நான்கு முனை போட்டியில் ஒரு வேட்பாளர் வெறும் 30 சதவீத வாக்குகளை மட்டுமே கைப்பற்றினாலும், அவர் குடியரசுக் கட்சியின் தேசிய அமைப்புக் கூட்டத்தில் 100 சதவீத மாநிலப் பிரதிநிதிகளையும் பெற முடியும். குடியரசுக் கட்சியின் எஞ்சியிருக்கும் நான்கு பேருமே நியமனத்தை வெல்வதில் குறிப்பிடத்தக்க தடைகளை கொண்டிருக்கிறார்கள். மெக்கெயினுக்கு கட்சியமைப்பினுள்ளும் மற்றும் வலதுசாரி ஊடக நிபுணர்கள் இடையே பரவலான எதிர்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு Talk radio தொகுப்பாளர் ரஷ் லிம்பா ''மெக்கெயின் அல்லது ஹக்கபே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் அது "குடியரசுக் கட்சியை சிதைப்பதாக இருக்கும். அது கட்சியை நிரந்தரமாக மாற்றுவதான ஒன்றாக, அதன் இறுதியாகக் கூட இருக்கும்" என கடுமையாகக் கூறுகிறார். ரோம்னி அவரது பெரும் சொந்த சொத்துக்கள் மற்றும் முதலீட்டு மூலதன உலகத்தில் அவருக்கு இருக்கும் தொடர்புகள் காரணமாகதான் இதுவரை சிறப்பான நிதிஆதரவு கொண்டவராக இருக்கிறார். ஆனால் தேசிய கணிப்புகளில் அவர் மோசமாகப் பின்தங்கியிருக்கிறார், வேறு எந்த வேட்பாளரை விடவும் அதிகமாக தன்னை சந்தைப்படுத்திக் கொள்வதற்காக 10 மில்லியன் டாலர்கள் செலவழித்திருந்த நிலையிலும் கூட. கிறிஸ்தவ வலதுசாரிகளின் பக்கத்திலிருந்து மோர்மோன்-எதிர்ப்பு மதவெறி குற்றச்சாட்டின் இலக்காகவும் அவர் ஆகியிருக்கிறார். ஹக்கபேயின் பிரச்சாரத்தில் பணமும் இல்லை, பணியாளர்களும் இல்லை. தெற்கு மாகாணங்களை விட குறைவான எண்ணிக்கையில் சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் உள்ள நியூயோர்க், கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் பிப்ரவரி 5 "சிறப்பு செவ்வாயன்று" நடைபெறவிருக்கும் ஆரம்பதேர்தல்களில் இது ஒரு முக்கியமானதொரு விஷயமாக இருக்கும். யூலியானி, அவர் கொஞ்சமே பிரச்சாரம் செய்து முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் ஆறாவது இடத்தையே பிடித்திருக்கிறார். அவரது புளோரிடாவில் தனது முயற்சிகளை மத்தியப்படுத்தியுள்ளார். |