ஐரோப்பா
:
பிரான்ஸ்
French revisionist Pierre Lambert dies aged 87
பிரெஞ்சுத் திருத்தல்வாதி பியர் லம்பேர்ட் தனது 87வது வயதில் காலமானார்
By Peter Schwarz
21 January 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
OCI (Organisation
Communiste Internationaliste) மற்றும் இன்றைய
PT
(Parti des Travailleurs)
இன் நீண்ட காலத் தலைவருமான பியர் லம்பேர்ட் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த
பின் ஜனவரி 16ம் தேதி பாரிசில் 87 வயதில் காலமானார்.
ட்ரொட்ஸ்கியின் காலத்திலேயே நான்காம் அகிலத்தில் சேர்ந்த தலைமுறையின் கடைசிப்
பிரதிநிதிகளில் லம்பேர்ட்டும் ஒருவராவார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைப்பில் முக்கிய பங்கை
வகித்திருந்தார்.
பாரிசில் ஒரு புலம்பெயர்ந்த ரஷ்ய யூதக் குடும்பத்தில் 1920 ஜூன் 9ம் தேதி பிறந்திருந்த
பியர் போசல் (அவருக்கு இடப்பட்ட பெயர்), 14 வயதிலேயே கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கத்தில்
சேர்ந்திருந்தார். பிரான்சில் இருந்த Pierre Lavel
உடைய அரசாங்கத்துடன் ஸ்ராலின் கொண்டிருந்த உடன்படிக்கையை விமர்சித்ததற்காக ஓராண்டிற்கு பின்னர் அவர்
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் விரைவாக செல்வாக்கை பெற்றுக் கொண்டிருந்த சோசலிஸ்ட்
இளைஞர் இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்; போரின்போது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
1950 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலம் பெருகிய முறையில் ஒரு திருத்தல்வாத
அழுத்தத்தின் கீழ் வந்தது. கிழக்கு ஐரோப்பாவில் பல தேசியமயங்கள் ஏற்பட்டதை அடுத்து, ஸ்ராலினிசத்திற்கு
இந்த திருத்தல்வாதம் ஒரு முற்போக்கு பங்கை கொடுத்தது. மைக்கேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல்
தலைமையில் வழிநடத்தப்பட்ட இந்தப் போக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் நுழைவதற்கு அழைப்பு விடுத்தது. அது வெற்றி
பெற்றிருந்தால் அந்த முன்னோக்கு நான்காம் அகிலத்தின் கலைப்பிற்கு வழிவகுத்திருக்கும்.
இந்த பப்லோவாத திருத்தல்வாதத்தை பெரும் ஆற்றலுடன் பிரெஞ்சுப் பகுதியின்
பெரும்பான்மை எதிர்த்தது; அதன் மதிப்பும் இதையொட்டி பெருகிற்று.
Marcel Bleibtreu, Daniel Renard
போன்ற முக்கியமான உறுப்பினர்கள் பப்லோவாதிகளின் கலைப்புவாத போக்கிற்கு எதிராக மதிப்புடைய
கட்டுரைகளை எழுதினார்கள். பியர் லம்பேர்ட் கட்சியின் பெரும்பான்மைக்கு ஆதரவு கொடுத்தார்; ஆனால்
பப்லோவாதத்திற்கு எதிரான அவருடைய எழுத்து மூல ஆதாரங்கள் ஏதும் இப்பொழுது கிடைக்கவில்லை.
1953ல் பிரெஞ்சு PCI
ன் பெரும்பான்மை (பின்னர்தான் அது தன்னை
OCI என
அழைத்துக் கொண்டது), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் சேர்ந்து கொண்டது; இது பப்லோவாத
திருத்தல்வாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை காக்கும்பொருட்டு அமெரிக்க சோசலிச
தொழிலாளர் கட்சியின் (SWP)
முன்முயற்சியால் நிறுவப்பட்டிருந்தது. இக்காலக்கட்டத்தில்தான் பிரெஞ்சுப் பகுதியில் லம்பேர்ட் முக்கிய பங்கைக்
கொண்டிருந்தார்.
ஆனால் 1950களின் இறுதியில் லம்பேர்ட்டின்
PCI
நோக்குநிலைதவறிய மற்றும் சோர்வுற்ற நிலையின் அடையாளங்களை காட்டத் தொடங்கியது; ஜெனரால் டு கோல்
அதிகாரத்திற்கு வந்தது, மற்றும் 1958ல் ஐந்தாம் குடியரசு நிறுவப்பட்டதை ஒரு போனப்பார்ட்டிச ஆட்சி
மாற்றம் என்று விளக்கம் கண்டது; தொழிலாள வர்க்கத்தின் போராடும் திறன் பற்றி மிகப்பெரிய அளவு
அவநம்பிக்கையை கொண்டது; அடுத்த சில ஆண்டுகளில் பல நேரம் தன்னுடைய பணிகளை தலைமறைவாகச் செய்தது.
1960 களின் தொடக்கத்தில், பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியத்தை
OCI எதிர்த்தது;
அப்பொழுது அமெரிக்க SWP
அதற்காக வாதிட்டுப் பின் இறுதியில் அதைச் செயல்படுத்தவும் செய்தது. ஆயினும், இந்தப் போராட்டத்தில்
OCI
ஒரு குறைந்த பங்கையே கொண்டிருந்தது; மறு ஐக்கியத்திற்கு எதிரான அரசியல் மற்றும் தத்துவார்த்த
போராட்டம் ஜெரி ஹீலியின் தலைமையிலான பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தினால்
(Socialist Labour League -SLL)
முக்கியமாக நடத்தப்பட்டது.
1960களில் லம்பேர்ட்டின்
OCIல் காணப்பட்ட பெருகிய நெருக்கடியின் அடையாளங்கள்,
பப்லோவாதத்திற்கு எதிரான IC
யின் போராட்டம் மீதாக கட்சி ஒரு கேள்விக்குறியை முன்வைத்த அளவில் இன்னும் தெளிவாகத் தோன்றின.
தொடக்கத்தில் இது நான்காம் அகிலம் ஒரு மடிந்துவிட்ட அமைப்பு, இது பப்லோவாதத்தால்
அழிக்கப்பட்டுவிட்டிருந்தது, மீழ கட்டியமைக்கப்பட வேண்டி இருந்தது என்ற அதன் கூற்றிலேயே தெளிவாய்
காட்டப்பட்டது.
பிரிட்டிஷ் SLL
இந்த வாதத்தை வன்மையாக எதிர்த்தது. 1967ல் இது
OCI க்கு எழுதியதாவது: "நான்காம் அகிலத்தின் எதிர்காலம்
தங்கள் போராட்டங்களை காட்டிக் கொடுத்த ஸ்ராலினிசவாதிகள் மற்றும் சீர்திருத்த வாதிகளுக்கு எதிரான மில்லியன்
கணக்கான தொழிலாளர்கள் தேக்கிவைத்திருக்கும் வெறுப்பிலும் அனுபவங்களிலும் எடுத்துக்காட்டாய் இருக்கிறது.
தலைமை இதை நிறைவேற்றுவதற்கு நான்காம் அகிலம் கட்டாயம் நனவுடன் போராட வேண்டும் ....
திருத்தல்வாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டம்தான் முதலாளித்துவம் மற்றும் அதிகாரத்துவம் இவற்றிற்கு எதிரான
போராட்டத்தில் ஈர்க்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தலைமையை ஏற்பதற்கு காரியாளர்களை
தயார் செய்யமுடியும்.... பப்லோவாதத்திற்கு எதிரான உயிரோட்டமான போராட்டம் மற்றும் காரியாளர்களையும்
கட்சியையும் இப்போராட்டத்தின் அடிப்படையில் பயிற்றுவித்தல் என்பது 1952ல் இருந்து நான்காம் அகிலத்தின் உயிர்நாடியாக
இருந்தது." (Trotskyism versus
Revisionism, vol. 5, London 1975, pp. 107-14).
1968ல் பெரும் வர்க்கப் போராட்டங்களுக்கு சற்று முன்னதாக,
SLL, OCI யின்
ஐயுறவாத நிலைப்பாட்டின் விளைவுகளை பற்றியும் எச்சரித்தது: "இப்பொழுது மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக
பிரான்சில், தொழிலாளர்கள் தீவிரமயப்படுவது மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.... அத்தகைய
வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு புரட்சிகர கட்சி நிலைமையை எதிர்கொள்ளும்போது ஒரு புரட்சிகர வழியை
பின்பற்றாமல் பழைய தலைமையின் கீழ் தங்கள் அனுபவத்தை ஒட்டியே தொழிலாளர்களை குறிப்பிட்ட அளவு
போராட்டத்திற்கு மேல் போகாமல் தடைசெய்துவிடக் கூடிய ஆபத்து உள்ளது. அதாவது, தவிர்க்க முடியாமல்
தொடக்க குழப்பத்தில் ஆழ்த்திவிடுதல் என்பது உள்ளது. சுயாதீனமான கட்சி மற்றும் இடைமருவு வேலைத்திட்டம்
ஆகியவற்றுக்கான போராட்டம் பற்றிய திருத்தல்கள் தொழிலாள வர்க்கத்திடம் நெருங்கிச் செல்வதாக
பொதுவாகக் காட்டப்படும்; போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே ஐக்கியம் எனக் காட்டப்படும்; இறுதி
எச்சரிக்கைகள் விடப்படமாட்டா; வறட்டியம் (Dogmatism)
கைவிடப்படும் என்றெல்லாம் ஏற்பட்டுவிடும்." (ibid.,
pp.113-114)
இந்த எச்சரிக்கை பொருட்படுத்தப்படவில்லை. 1968 ன் எழுச்சிகள்
OCI மற்றும் அதன்
இளைஞர் அமைப்பான AJS
க்கு ஆயிரக்கணக்கான புதிய, அனுபவமற்ற உறுப்பினர்களை கொண்டு வந்திருந்தன.
OCI அவர்களுடைய
குழப்ப நிலைக்கு ஏற்றவிதத்தில் தன்னை மாற்றிக் கொண்டது. "ஒன்றுபட்ட வர்க்க முன்னணி" என்ற கோரிக்கை
--இதுவும் 1967ல் SLL
ஆல் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தது-- இப்பொழுது ஒரு சூத்திரமாக வெளிப்பட்டு
OCI தன்னை சமூக
ஜனநாயக அதிகாரத்துவத்திற்கு ஏற்ப அமைத்துக் கொண்டது; புதிதாக வென்றெடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்த
சக்திகள் அனைத்தையும் பழைய அதிகாரத்துவக் கருவிகளிடம் கொண்டு சேர்த்து விட்டது.
இதன்பின் OCI
க்கும் பப்லோவாதிகளுடைய கருத்துக்களுக்கும் இடையே எவ்வித அடிப்படை வேறுபாடுகளும் இல்லாமற் போயின.
OCI
சமூக ஜனநாயகத்தின் பக்கம் நோக்குநிலை கொண்டிருந்தது என்பதுதான் ஒரே வேறுபாடு ஆகும்; ஸ்ராலினிசத்திற்கு
எதிரான இதன் விரோதப் போக்கு பெருகிய முறையில் சமூக ஜனநாயகத்தின் கம்யூனிச எதிர்ப்பில் கரைந்து
போயிற்று; பப்லோவாதிகள் ஸ்ராலினிச கட்சிகள் மீது நோக்குநிலைப்படுத்திக் கொண்டன.
1971 TM
OCI அனைத்துலகக்
குழுவிடம் இருந்து உடைத்துக் கொண்டது. இந்தப் பிளவிற்கான அடிப்படை என்ன என்ற பிரச்சினைகளையும்
தெளிவுபடுத்தவில்லை. தன்னுடைய பங்கிற்கு SLL
பெருகிய முறையில் பிரிட்டனில் தன் தேசிய பணியின்மீது குவிப்புக் காட்டி, சர்வதேச பிரச்சினைகளை
தெளிவுபடுத்துவதில் அக்கறையை இழந்தது. 1960 களில் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலான முறையில்
OCI
வலதிற்கு திரும்பிய போதிலும்கூட, இந்நிலை தொடர்ந்தது. இதன்படி
OCI ஒரு குறிப்பிட்ட வகையிலான அரசியல் சந்தர்ப்பவாதத்தை
வளர்க்கத் தொடங்கியது; அப்பொழுது முதல் லம்பேர்ட்டின் பெயர் அரசியல் சந்தர்ப்பவாதத்துடன் அடையாளம்
காணப்பட்டது.
லம்பேர்ட்டிசத்தின் இயல்பான கூறுபாடாக புரட்சிகர மார்க்சிசத்தின் பதாகையின்
கீழ் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் என்பதும் நிராகரிக்கப்பட்டு இருந்தது.
மாறாக, இது தொழிற்சங்க, சீர்திருத்தவாதக் கருவிகளின் முக்கிய பிரதிநிதிகள் மீது அழுத்தம் செலுத்த
முற்படுகிறது. லம்பேர்ட்டின் நிறுவன அமைப்பு தொழிலாளர்களை ஈர்க்கவில்லை; சில செல்வாக்கான நபர்களின்
காதுகளில் மெதுவான குரலில் பேசியது.
மொரோக்கவில் இருக்கும் லம்பேர்ட்டின் அமைப்பில் முன்பு உறுப்பினராக இருந்த
பத்திரிகையாளரான Jamal Berraoui,
Aujourd'hui le Maroc
என்னும் ஏட்டில் இரங்கற்குறிப்பில் இதை உருப்படுத்திக் கொடுத்துள்ளார்: அவர் எழுதுகிறார்: "பெரும் வர்க்கப்
போராட்டங்களின்போது நாம் வெகு ஜனத்தின் தலைமை அல்ல என்று லம்பேர்ட் உறுதியாகக் கூறினார்; அந்தப்
பங்கை மரபார்ந்த கருவிகளுக்கு அவர் கொடுத்தார். மக்கள் இயக்கத்தை ஆராய்தல், தக்க சொற்றொடர்களை
கொடுத்து அவர்களை ஒரு ஒற்றுமையான முன்னோக்கிற்கு வழிகாட்டுதல், அதே நேரத்தில் மரபார்ந்த
தலைமைகள், கருவிகளுக்கு பதிலாக தன்னைக் காட்டாமல் இருத்தல் --இதுதான் அவருடைய நிலைப்பாடாக
இருந்தது."
இந்த நிலைப்பாடு பிற்போக்கு அதிகாரத்துவக் கருவிகளுக்கு நெருக்கடி காலத்தில்
ஒரு இடது மறைப்பைக் கொடுத்தது; தொழிலாள வர்க்கத்தை முடக்குவதற்கும் முதலாளித்துவ ஆட்சியை
ஸ்திரப்படுத்தவும் இது பயனபட்டது. இந்த விதத்தில் லம்பேர்ட் சந்தேகத்திற்கு இடமின்றி "வெற்றிகரமானவர்"
என்று பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் இருந்து வெளிவந்துள்ள ஏராளமான இரங்கற்குறிப்புக்கள் சான்று கூறுகின்றன.
"ஒரு திறமையான கண்மாறாட்டக்காரரான பியர் லம்பேர்ட் தன்னைச் சுற்றி எப்படி
பல சக்திகளையும் திரட்டுவது என்பதை அறிந்திருந்தார்; ஒரு நிதானமான, வரம்பிற்குட்பட்ட திறமையான
நிறுவனத்தை நடத்திச் செல்லும் வழிமுறைகளையும் கண்டார்" என்று
Le Monde
எழுதியுள்ளது. இந்த நாளேடு லம்பேர்ட்டின் தொடர்புகள்
Grand Orient Freemasons
விடுதியுடன் தொடர்புகொண்டிருந்தது பற்றிச் சுட்டிக் காட்டியுள்ளது;
1970களில் இதன் தலைவராக பிரெட் ஜெல்லர் என்பவர் இருந்தார்; அவர் ஒரு காலத்தில் ட்ரொட்ஸ்கியின்
செயலாளராக இருந்தவர்; OCI,
FO வின்
தொழிற்சங்க சம்மேளனம் மீது செல்வாக்கு கொண்டிருந்தது --FO
வின் நீண்டகால செயலாளரான Marc Blondel
லம்பேர்ட்டின் நெருங்கிய நண்பராக இருந்தார்-- மற்றும்
OCI, மாணவர்
அமைப்பான MNEF
ஐ கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது -அது மாணவர்களின் சமூக காப்புநிதித் திட்டத்தை நிர்வகித்தது ஆகியவை
பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லிபரேஷன் ஏட்டின்படி லம்பேர்ட் செய்தி ஊடகப் பிரபுவான
ரொபேர்ட் ஹெர்சன்ட்டுடனும் வாடிக்கையாக விவாதங்களை நடத்தினார் என்றும், 1995ல் ஓய்வூதியச்
சீர்திருத்தங்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கு சற்று முன்பு ஜனாதிபதி அரண்மனையில் ஏனைய
FO அலுவலர்களுடன்
சேர்ந்து தனி விருந்து ஒன்றில் கலந்து கொண்டதாகவும் கூட தெரிகிறது.
ஆனால் சீர்திருத்த அதிகாரத்துவத்துடன் லம்பேர்ட் இணக்கமாக நடந்து கொண்டதின்
மிக முக்கியமான விளைவு பல முக்கியமான சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவரது கல்விக் கூடத்தில் பயின்றவர்கள்
என்ற உண்மையில் உள்ளது. இவர்களுள் மிகவும் நன்கு அறியப்பட்டவர் லியோனல் ஜோஸ்பன் ஆவார்; இவர் 1997
முதல் 2002 வரை பிரெஞ்சு அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்; 2002ல் ஜனாதிபதித் தேர்தல்களின்
வேட்பாளராக நின்றார். ஆனால் அவர் ஒருவரோடு பட்டியல் நின்றுவிடவில்லை.
1960 களின் நடுப்பகுதியில் ஜோஸ்பன் ஒரு மாணவராக இருக்கும்போது
OCI ல்
சேர்ந்திருந்தார். பின்னர் 1971ல் சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு கோரப்பட்டார். அங்கு அவர் வெகு
விரைவில் கட்சித் தலைவரான பிரான்சுவா மித்திரோனுக்கு நெருக்கமான அணிகளில் உயர்ந்தார். 1981ல்
மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் ஜோஸ்பனை கட்சியின் முதல் செயலாளராக
வருமாறு உறுதிசெய்தார். சுதந்திரமான தகவல்கள் பின்னர் உறுதிப்படுத்தியவாறு, தன்னுடைய நெருக்கமான சக
உழைப்பாளிகள் அனைவரையும் கண்காணிப்பில் வைத்திருந்த மித்திரோனுக்கு,
OCI ல் ஜோஸ்பன்
இரகசிய உறுப்பினராக இருந்தது, மற்றும் லம்பேர்ட்டுடன் நெருக்கமான உறவுகள் கொண்டது ஆகியவை பற்றி
நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
1970 களின் ஆரம்பத்தில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கும் மேலாக உறுப்பினர்களை
கொண்டிருந்த OCI-ன்
ஆதரவு மற்றும் மற்றும் அதன் இளைஞர் பிரிவான
Alliance des Jeunes pour le Socialisme (AJP)
பல்லாயிரக்கணக்கானவர்களை திரட்டக் கூடியதாக இருந்தது மித்திரோனுக்கு பெருமுக்கியத்துவம் வாய்ந்ததாக
இருந்தது. இந்த செல்வாக்கிழந்த முதலாளித்துவ அரசியல்வாதி --குறுகிய காலத்திற்கு விஷி ஆட்சியில்
பணிபுரிந்தவர், அல்ஜீரிய போரின்போது உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரியாக இருந்தவர்-- 1971ல்
சோசலிஸ்ட் கட்சியின் தலைமைக்கு வந்தார் மற்றும் அதற்கு இடதுசாரி நற்சான்றுகளையும் கொடுக்க முற்பட்டார்.
1968 பொதுவேலை நிறுத்தம் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பினால் தீவிர
அதிர்வுக்குள்ளாகி இருந்த பிரான்சில் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு புதிய, உறுதியான அடிப்படையை கொடுப்பது
மித்திரோனின் இலக்காக இருந்தது; இதை, தான் ஆதிக்கம் செய்யக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டின் மூலம்
சாதிக்க முயன்றார்; இறுதியில் அம்முயற்சியில் வெற்றியும் பெற்றார். "இடது கூட்டை", "தொழிலாளர்களின்
ஐக்கிய முன்னணி" என்று OCI
புகழ்ந்தேற்றியதுடன் அதை இடதில் இருந்து எவரேனும் விமர்சித்தால் அவர்களைத் தாக்கவும் செய்தது.
OCI க்கும் மித்திரோனுக்கும்
இடையேயான உறவுகள் இறுதியில் அமைதியானபொழுது, ஜோஸ்பனும் 1971ல் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்த
மற்ற OCI
உறுப்பினர்களும் அதிலேயே இருந்தது மட்டுமல்லாமல், 1986ல் லம்பேர்ட் அமைப்பின் ஒரு பிரிவு முழுவதும்
Jean Christophe Cambadelis
என்னும் அதன் மாணவர் பிரிவுத் தலைவரின் கீழ் மித்திரோன் முகாமிற்கு நகர்ந்தது. பாராளுமன்றத்தில் 10
ஆண்டுகள் உறுப்பினராக இருந்த Cambadelis
இன்று சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப் படிநிலையில் அதன் மிகவும்
முக்கியமான நபர்களில் ஒருவராக இருக்கிறார்.
1995/96 குளிர்காலத்தில்
இரயில்வே மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் பல வாரங்களுக்கு நீடித்து ஜாக் சிராக்கின்
கோலிச ஆட்சியை ஆட்டம்காண வைத்தபோது, ஆளும் உயரடுக்கு நிலைமையைக் கட்டுப்படுத்த இவர்களைத்தான்
நோக்கி நின்றது. 1997ல் லியோனல் ஜோஸ்பன் பிரதம மந்திரியாக வந்தபோது, பிரெஞ்சு அரசாங்கம் அதன்
தலைமையில் 20 ஆண்டுகள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் எனக் கூறப்பட்டதின் ஒழுங்கின் கீழ் பணியாற்றிய ஒரு மனிதரை
அதன் தலைமையில் கொண்டிருந்தது.
ஜோஸ்பனுடைய பங்கு தொழிலாள வர்க்கத்தை தன் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவதற்காக தன்னுடைய இடதுசாரி தோற்றத்தைப் பயன்படுத்துதல் ஆகும்; அதே நேரத்தில் நிதி
மூலதனத்தின் நலன்களுக்கு இயைந்தவாறு தனியார்மயமாக்குதல், பொதுநலச் செலவினக் குறைப்பு ஆகிய
கொள்கைகளை பின்பற்றியது. இதன் விளைவு பேரழிவு தரக்கூடியதாயிற்று. பரந்த அளவிலான பிரமை நீக்கம்
Jean Marie Le Pen
இன் தீவிர வலதுசாரி தேசிய முன்னணியால் சுரண்டிக்கொள்ள மட்டுமே முடிந்தது. அவர் பின் ஜோஸ்பனை 2002
ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் தோற்கடித்து, இரண்டாம் சுற்றில் சிராக்கிற்கு சவால் விடுக்க தொடர்ந்து
சென்றார்.
இதற்கிடையில், லம்பேர்ட் ஒரு புதிய திட்டத்திற்கு திரும்பி,
Parti des Travailleurs (PT)
என்பதை 1991ல் நிறுவினார். இக்கட்சி முன்னாள் OCI
யால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றாலும், அது தான் ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பு இல்லை என்பதை
வலியுறுத்துகிறது; முன்னாள் OCI
உடன் தன்னை சமூக ஜனநாயகவாதிகளுடனும், ஸ்ராலினிஸ்ட்டுக்களுடனும் சேர்ந்து
PT க்குள் ஒரு
போக்காக Courant Communiste
Internationaliste என்று தன்னைக் காட்டிக்
கொள்ளுகிறது. PT
நிறுவப்பட்டதுடன், OCI
அது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஓரளவிற்கு தன்னுடைய சொந்த
அதிகாரத்துவ கருவியை தோற்றுவித்துள்ளது.
PT இலக்கு வைத்துள்ள குழு சாதாரண
தொழிலாளர்கள் அல்லர் மாறாக செயல் நிர்வாகிகள் ஆவர்; ஏதேனும் ஒருவிதத்தில் அவர்கள் சோசலிஸ்ட் அல்லது
கம்யூனிஸ்ட் அதிகாரப் படிநிலையில் மயக்கம் தெளிந்தவர்கள் ஆவர்; ஏனெனில் அவர்கள் விரும்பியபடி அவர்களின் பிழைப்புவாத
அபிலாசைகள் நிறைவடையவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது,
PT தன்னை
36,000 பிரெஞ்சு மேயர்களின் நலன்களின் பிரதிநிதி என்று கூறிக் கொண்டது; அத்தொகுப்போ சதிகளும் ஊழல்களும்
நிறைந்தது ஆகும். தேர்தல் திட்டத்தின் நடுவில் இது ஒரு தீவிர நாட்டு வெறி கொண்ட பிரச்சாரத்தை ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு எதிராக இருத்தியது; அதுதான் பிரெஞ்சு சமூகத்தில் இருக்கும் அனைத்து தீமைகளுக்கும் காரணம்
என்றும் கூறியது.
லம்பேர்ட்டின் ஆதரவாளர்கள் இன்னமும்
FO தொழிற்சங்கத்தில்
கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றனர்; அது பிளொண்டல் காலத்தில் இருந்த அளவு இப்பொழுது இல்லை என்பது
உண்மைதான்.
லம்பேர்ட்டின் செல்வாக்கு பிரான்ஸுடன் நின்றுவிடவில்லை. வட ஆபிரிக்கா, இலத்தீன்
அமெரிக்கா, துருக்கி இன்னும் சில நாடுகளில் அவருடைய ஆதரவாளர்கள் தங்கள் ஆசானை ஒரு முன்னோடியாக
கொண்டு, சீர்திருத்தக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுள் பணிபுரிகின்றனர்.
Parti des Travailleurs
என்பது பிரேசிலில் லூலாவின் கட்சிப் பெயருக்கு இணையாக இருக்கிறது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.
லம்பேர்ட்டின் பிரேசில் ஆதரவாளர்கள் தற்போதைய பிரேசிலிய ஜனாதிபதியின் கட்சியை நிறுவுவதில் முக்கிய
பங்கைக் கொண்டிருந்தனர்; அதன் தொண்டர்களாக மிகவும் விசுவாசமாக இருக்கின்றனர்; கட்சிக் கருவியை இடதில்
இருந்து வரும் விமர்சனங்களுக்கு எதிராக காக்கின்றனர்.
லம்பேர்ட்டின் வாழ்வும் மரபும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான
படிப்பினைகளை கொண்டுள்ளது. அவை அரசியல் சந்தர்ப்பவாதத்தின் விலையை சித்தரித்துக் காட்டுபவை ஆகும். இது
வெறுமனே கருத்துவேறுபாடுகள் அல்லது தவறுகள் என்ற விஷயம் இல்லை. நெருக்கடி காலத்தில் சந்தர்ப்பவாதம்
முதலாளித்துவ ஆட்சியின் கடைசிப் பாதுகாப்பு வழியாக ஆகிறது.
லம்பேர்ட்டின் வாழ்வு, அவருடைய முக்கியத்துவம் பற்றி உலக சோசலிச வலைத்
தளம் இன்னும் விரிவான, விமர்சன ரீதியான மதிப்பீட்டை விரைவில் வெளியிடும். |