World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president marks tsunami anniversary by beating the war drums

இலங்கை ஜனாதிபதி யுத்த பேரிகை கொட்டுவதன் மூலம் சுனாமி ஆண்டு நிறைவை கொண்டாடுகிறார்

By Panini Wijesiriwardane
2 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

2004 டிசம்பர் 26ம் திகதி பிராந்தியத்தை கொடூரமான சுனாமி தாக்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் 21,000 ற்கும் அதிகமான இலங்கையர்கள் இன்னமும் இழிநிலையான முகாம்களில் வாழத் தள்ளப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மேலும் துரிதமான மீள் கட்டமைப்புகளுக்கு வாக்குறுதியளிக்க சுனாமி ஆண்டு நிறைவை பயன்படுத்துவதற்குப் மாறாக, அவரது அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை பாதுகாக்க அதை பயன்படுத்திக் கொண்டார்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் நகரமான மாத்தறையில் சுனாமியை நினைவு கூர்வதற்காக டிசம்பர் 26 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய இராஜபக்ஷ, "பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன்" முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இராணுவ வெற்றிகள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை நோக்கி புலிகளை தள்ளிச் செல்ல வழிவகுக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்... நாம் சுனாமி பேரழிவில் இருந்து மேலெழுந்தவாறு, நாம் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு விரைவில் அதில் இருந்து மீள்வோம்."

சுனாமியின் பாதிப்பில் இருந்து "மீள்வது" பற்றி இராஜபக்ஷ குறிப்பிடுவது கேலிக்கூத்தானதாகும். 230,000 மக்களை கொன்று 1.7 மில்லியன் மக்களை வீடற்றவர்களாக்கிய ஆசிய சுனாமியால் இந்தோனேஷியவை அடுத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இலங்கையேயாகும். அண்மைய உத்தியோகபூர்வ அறிக்கைகளின் படி, 30,920 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். தீவில் 117,372 வீடுகள் அழிந்துபோயுள்ளன அல்ல சேதமடைந்துள்ளன. 562,601 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளே.

பிரச்சினையில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, சுனாமியின் தாக்கமானது சாதாரண உழைக்கும் மக்களை ஏற்கனவே தொற்றிக்கொண்டிருந்த பொருளாதார சமூகப் பிரச்சினைகளை மேலும் ஆழமடையச் செய்தது. நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுக்கும் சூழ்நிலையில் இந்தப் பேரழிவின் மூன்றாவது ஆண்டு நிறைவில் இராஜபக்ஷவின் முன்னீடுபாடானது "அரசியல் தீர்வு" காண்பதை இலக்காகக் கொண்டதல்ல. மாறாக அது வளர்ச்சிகண்டு வரும் அரசாங்க-விரோத உணர்வுகளை இனவாத முட்டுச் சந்துக்குள் திருப்பி விடுவதேயாகும்.

இதில் ஜனாதிபதி மிகவும் கந்தலடைந்த பாதையை பின்பற்றுகின்றார். 1948ல் சுதந்திரம் கிடைத்ததில் இருந்தே, சமூகப் பிரச்சினைகள் மற்றும் மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண அடிப்படையிலேயே இலாயக்கற்றவை என்பதை இலங்கை முதலாளித்துவம் நிரூபித்துள்ளது. அதற்குப் பதிலாக, அது இனவாத பிளவுகள், பதட்டங்கள் மற்றும் உச்சகட்டமாக 1983ல் தொடக்கி வைக்கப்பட்ட உடன்பிறப்பைக் கொல்லும் மோதல்களைப் தூண்டுவதன் மூலம் தமது ஆட்சியை ஸ்திரமாக்கிக்கொள்ள அது முயற்சித்து வருகின்றது. சுனாமியை அடுத்து, மோசமாக அழிந்துபோன பிரதேசங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இன பிரிவுகளைக் கடந்த ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள தன்னிச்சையாக ஒன்று சேர்ந்த போது, இந்தக் கொள்கை உடனடியாகவும் தெளிவாகவும் அம்பலத்துக்கு வந்தது.

இந்த ஒத்துழைப்பால் அதிர்ச்சியும் பீதியுமடைந்த ஆளும் கும்பலின் தட்டுக்கள், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற பலவித சிங்கள அதி தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து, இத்தகைய ஐக்கியத்தின் வெளிப்பாட்டை கலைத்து கீழறுக்கும் தமது இனவாத பிரச்சாரத்தை உக்கிரமாக்கியது.

தனது ஆண்டு நிறைவு உரையில், இந்த நிகழ்வுகளை இராஜபக்ஷ குறிப்பிட்டார். "சுனாமியும் குறுகிய வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்று சேர்த்தது," என அவர் பிரகடனம் செய்தார். ஆனால், அவர் "அனைவரும்" எனக் கூறியது சாதாரண வெகுஜனங்களை அன்றி, தீவிர வலதுசாரிக் கட்சிகளையேயாகும். சுனாமியை அடுத்து வந்த நாட்களில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களுக்கு சுனாமி நிதியை விநியோகிப்பதை எதிர்த்த ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் பக்கம் இராஜபக்ஷ சாய்ந்துகொண்டார். சுனாமி புலிகளை பலவீனப்படுத்தியுள்ளது, புலிகளை "அழிக்க" யுத்தத்தை மீண்டும் தொடங்குவதற்கு இதுவே நேரம் என அவர்கள் கூறிக்கொண்டனர்.

2002 பெப்பிரவரியில் புலிகளுடன் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை "மீளாய்வு" செய்வதாக வாக்குறுதியளித்த பின்னர், ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் ஆதரவுடனேயே இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார். கடந்த ஜூலையில், புலிகளுடனான பதட்ட நிலைமைகள் குவிந்து வந்ததை அடுத்து, யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி கிழக்கில் இராணுவத் தாக்குதல்களை புதுப்பிக்குமாறு இராஜபக்ஷ இராணுவத்திற்குக் கட்டளையிட்டார். அப்போதிருந்தே, இராணுவம் புலகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டது. அவர் யுத்தத்தை மீண்டும் தொடங்கியமைக்கு அமெரிக்கா உட்பட பெரும் வல்லரசுகள் ஊக்கமளித்தன. அவர் தனது உரையில் பெரிதுபடுத்தி கூறியது போல், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" "சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனேயே" இடம்பெறுகின்றது.

கடந்த இரு ஆண்டுகளில் இராஜபக்ஷவின் கீழ் அரசாங்கம் பாதுகாப்பு ஒதுக்கீட்டை 265 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டுக்கான யுத்த வரவு செலவுத் திட்டம் மேலும் 20 வீதத்தால் 166 பில்லியன் ரூபா (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) சாதனைத் தொகையை எட்டியுள்ளது.

யுத்தத்திற்கான செலவில் இத்தகைய பிரமாண்டமான அதிகரிப்பின் சுமையானது வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களின் வடிவில் சாதாரண மக்களின் தோள்களில் நேரடியாக சுமத்தப்படுகின்றது. இதன் பிரதிபலனாக தொழிலாளர்ள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்ட அலைகள் வெடிக்கின்றன. அக்டோபர் 13, அரசாங்கத் துறைசார்ந்த சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் 200,000 பேர் சம்பள உயர்வு கோரி நாடு பூராவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அதே வேளை, நவம்பரிலும் டிசம்பர் கடைப் பகுதியிலும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் கொடூரமாக தாக்குதல் தொடுத்தனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களிலும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டாலும் தற்காலிகக் குடிசைகளாக உள்ளவற்றிலும் உள்ள ஆத்திரமடைந்துள்ள அகதிகள் உட்பட ஏனையவர்கள் தமது நிலைமைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக அச்சுறுத்துவதன் பேரில், இராஜபக்ஷவும் அவரது பங்காளிகளும் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை "சிங்கள புலிகள்" அல்லது "தாய் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள்'' என அடிக்கடி முத்திரை குத்துகின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசிக்கும் பிரதேசத்தில், யுத்தம் மீண்டும் தொடங்கியதன் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 5,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 250,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். நாட்டின் தெற்கில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவிலானவர்கள் இன்னமும் பல சிரமங்களை எதிர்கொள்கின்ற அதே வேளை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை மிக மிக மோசமானதாகும்.

டிசம்பர் 24ம் திகதி நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளரான டபிள்யு. கே. கே. குமாரசிறி, யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட கிழக்கிலுள்ள மாவட்டமான அம்பாறையில் இன்னமும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் 58 முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டார். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ளவர்கள், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முகாம்களில் யுத்த அகதிகளுடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மோசமானதாகும். அரசாங்கத்தின் மீள்கட்டுமான மற்றும் அபிவிருத்தி முகவரின் படி, வடக்கில் வீடமைப்புத் திட்டத்தில் 39 வீதம் மட்டுமே 2007 அக்டோபர் மாதம் வரை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ தரவுகளின் சரிநுட்பம் சுயாதீன அமைப்புகளால் சவால் செய்யப்பட்டுள்ளன. ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் ஒப் ஸ்ரீலங்கா (Transparency International of Sri Lanka -TISL) வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "இங்கு நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வீடு பற்றாக்குறை கடுமையாக உள்ளது. உதாரணமாக, மூதூரில் 1, 249 வீடுகள் அழிக்கப்பட்ட இடத்தில், நிதி வழங்குபவர்களின் உதவியுடனும் உரிமையாளரின் செலவிலும் 422 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. "அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் அடிப்படை யதார்த்தத்தை மூடிமறைக்கும் சித்திரத்தை வெளிக்காட்டுவதாக" டி.ஐ.எஸ்.எல் வலியுறுத்தியுள்ளதோடு "வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வீட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறும் அதை மதிக்குமாறும்" கேட்டுக்கொண்டுள்ளது.

குமாரசிறியின் படி, தெற்கில் மாத்தறையில் நான்கு சுனாமி அகதி முகாம்களும் காலியில் மூன்றும் உள்ள அதே சமயம், தீவின் தலைநகரான கொழும்பில், தமது வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து 4,000 க்கும் அதிகமான குடும்பங்கள் 12 முகாம்களில் தங்கியுள்ளன.

இந்த முகாம்களின் நிலைமை திகைப்பூட்டுகிறது. இந்த குடிசைகளில் பெரும்பாலானவை தகரத்தால் சுவர் அமைக்கப்பட்டு ஒலையில் கூரை வேயப்பட்டவையாக உள்ளன. இங்கு மலசலகூட பற்றாக்குறை நிலவுவதோடு தற்போது இருப்பவை மழை பெய்யும் போது நிறைந்து போகின்றன.

பல புதிய குடியிருப்புகளுக்கு வீதி, தண்ணீர், மின்சாரம் மற்றும் அடிப்படை சுகாதார சேவைகளுக்கு வசதி பற்றாக்குறை இருப்பதனால், இலங்கையின் சுனாமி வீட்டுத் திட்டத்தை "பூர்த்தியானவையாக கருத முடியாது" என சர்வதேச தொழில் அமைப்பு (ஐ.எல்.ஓ.) தெரிவித்துள்ளது. புதிய வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தரம் குறைந்த கட்டுமானத்தால் பொதுவில் ஏமாற்றமடைந்துள்ளனர். சரியான திட்டமின்மையால், நிரந்தரக் குடியிருப்புகள் மற்றும் படகுகளின் கட்டுமான வேலைகள் பெருமளவில் மேற்பார்வை செய்யப்படாத மற்றும் தரம் குறைந்தவையாக உள்ளன. டி.ஐ.எஸ்.எல். அறிக்கை குறிப்பிட்டிருப்பதாவது: "குறிப்பாக தெற்கில், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் மத்தியில் பொதுவில் அதிருப்தியைக் காணக்கூடியதாக உள்ளது. பல இடங்களில், தரங்குறைந்த வீடுகள் அல்லது கலாச்சாரம் மற்றும் சூழலில் அக்கறை செலுத்தாது கட்டப்பட்ட வீடுகள் உரிமையாளர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு சவால் செய்யும் நிலையில் இந்த அதிருப்திக்கு மேலும் வலுப்படுகிறது.

மீனவர்களின் தேசிய மீன்பிடி ஒத்துழைப்பு இயக்கத்தின் முன்னணி உறுப்பினரான ஹேர்மன் குமார ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "நாங்கள் செய்த புதிய ஆய்வில், புதிய வீடுகளின் சுவர்கள் ஏற்கனவே விரிசலடைந்துள்ளதோடு சுவர்களுக்கும் கூரைகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளதை நாம் கண்டோம்." தரம் குறைந்த உற்பத்தியின் காரணமாக படகுகள் கடல் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல என அவரது அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

குறிப்பாக பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கை இன்னமும் பூர்த்தியடையவில்லை. சண்டே டைம்ஸ் பத்திரிகையில் டிசம்பர் 23 வெளியான அறிக்கையின் படி, சேதமடைந்த 183 பாடசாலைகளில் 100 மட்டுமே மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்பதை சுனாமி கல்வி புனரமைப்பு கண்காணிப்பு அமைப்பின் அதிகாரி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் 40 பாடசாலைகளின் வேலைகள் இன்னமும் பாதியில் உள்ளன.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில், யுத்தத்தின் காரணமாக 40 பாடசாலைகளை மீண்டும் கட்டும் நடவடிக்கை கிடப்பில் தள்ளப்பட்டுள்ளது. "இந்த பாடசாலைகள் வடக்கு மற்றும் கிழக்கில் அமைந்திருப்பதால் அரசாங்கம் பாதுகாப்புப் படைகளின் அங்கீகாரத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது" என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்ததாக அரசாங்கத்திற்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகை டிசம்பர் 27 செய்தி வெளியிட்டிருந்தது.

மீள் கட்டுமான நடவடிக்கைகளில் பெரும்பாலானவைக்கு அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களே நிதி வழங்கியுள்ளன. எவ்வாறெனினும், சுனாமியை அடுத்து வெளிநாட்டு நிதி வழங்குனர்கள் வாக்குறுதியளித்த 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களில், வெறும் அரைவாசியான 1.7 டொலர்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.

"ஆறு மாதங்களுக்குள்" வீட்டுப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதாக 2005 நவம்பரில் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டது ஏன் என்பதை மீளாய்வு செய்ய தனது ஆண்டு நிறைவு உரையை பயன்படுத்துவதற்கு மாறாக, இராஜபக்ஷ மிகவும் சத்தமாக யுத்தப் பேரிகை கொட்டியதற்கான காரணம், பேரழிவின் மூன்று ஆண்டுகளின் பின்னரும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் எதிர்கொண்டுள்ள தாங்க முடியாத நிலைமைகளை அனுகும் எண்ணம் அவரது அரசாங்கத்திற்கு இல்லை என்பதை தெட்டத் தெளிவாக்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து உடனடியாக துருப்புக்களை திரும்பப் பெற்றுக்கொண்டு, யுத்தத்திற்கு முடிவு கட்டுவதோடு நிஜமான சோசலிச மற்றும் அனைத்துலகவாத கொள்கைகளின் அடிப்படையில் சமுதாயத்தை உச்சி முதல் அடிவரை மீளக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதை அவசியமாக்கியுள்ளது.