World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Kenya: Social disintegration in country touted as African "success" story

கென்யா: ஆபிரிக்க "வெற்றி" யாக போற்றப்பட்ட தேசத்தில் சமூக சீர்குலைவு

By Chris Talbot
8 January 2008

Back to screen version

கென்யாவில் ஜனாதிபதி தேர்தல் மோசடியை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஏறக்குறைய இரு வாரங்களில் 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அரசியல் தீர்வுக்கான எந்த அறிகுறியும் கண்களுக்கு தட்டுப்படாத ஒரு நிலையில் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இறந்தவர்கள் அனைவரும் போலிஸ் அடக்குமுறையிலும் இன மோதல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். எதிர்க்கட்சி வேட்பாளர் ரய்லா ஒடிங்காவை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக "போலிஸ் மற்றும் இராணுவத்தினால் வரம்பு மீறி அதிகாரம் பயன்படுத்தலை" மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கண்டித்துள்ளது. நைரோபியின் குடிசைப் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதை பிரிட்டிஷ் சானல் 4 செய்தி காண்பித்தது, உள்ளூர் மருத்துவமனை ஒன்றின் டாக்டர்கள் அவர்கள் சிகிச்சையளிக்கும் மக்களில் பாதிப் பேர் போலிசாரால் தான் காயம்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

ஜனாதிபதி கிபாகியுடன் தொடர்புபடுத்தப்படும் கிகுயு பழங்குடி இனத்தின் உறுப்பினர்கள் நிழல் உலகத்தின் ரவுடிக் கும்பல்களால் தேர்ந்தெடுத்து தாக்கப்படுகின்றனர். ஆபிரிக்க முனைக்கான செஞ்சிலுவை பணிகளின் துணைத்தலைவர் அலெக்சாண்டர் லைபெஸ்கின்ட் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்க்கு கூறும்போது, "வெறுப்பின் அளவு மிக உயரிய அளவில் இருக்கிறது. பழங்குடி வம்சாவளியினரின் வன்முறையே மிகவும் மோசமானதாக இருக்கிறது; அதற்கு எந்த வரம்பும் கிடையாது, அடக்குவதற்கும் அதீத சிரமமானதாக இருக்கிறது."

பழங்குடி வன்முறை என்பது பத்தாண்டுகளுக்கும் மேலாக கென்யாவில் கேட்டறியாததாய் இருக்கிறது. 1990களில் நடைபெற்ற வன்முறை இந்த அளவில் இல்லை. இந்த தாக்குதல்கள் இன்னும் கூடுதலாக பரந்துபட்டதாய் இருக்கிறது.

பல்தரப்பட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒடிங்கா வலிவு பெற்றிருக்கும் மேற்கு நகரான கிசுமுவில், தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளர்களாக கருதப்படும் கிகுயு மற்றும் பிற பழங்குடி இனங்களின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் நகரை விட்டு பேருந்துகள் மூலம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில், மோசமான இனத் தாக்குதல்களின் ஒரு அடையாளமாக, சுமார் 100,000 பேர் உணவு வேண்டி இருக்கிறார்கள். அவர்கள் தேவாலயங்களிலும் போலிஸ் நிலையங்களிலும் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். சில இடங்களில், லுவோ பழங்குடி இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் அண்டை வீட்டுக்காரர்களான கிகுயு இனத்தவரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு தங்களது சொந்த வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சாலைத் தடைகள் பல்வேறு இனக் குழுக்களை சேர்ந்த ஆயுதமேந்திய ரவுடிக் கும்பலால் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவப் பாதுகாப்புடன் கூடிய வாகனங்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும்.

பெரும் அளவிலான மனிதாபிமான நெருக்கடி இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேசக் குழுவானது, சுமார் அரை மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று கூறுகிறது. ஐநாவின் கூற்றுப்படி, குறைந்தது 250,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு அடைக்கலம் தேடும் நிலையிலுள்ளனர்.

பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக 2,500 தொன்கள் உணவுப் பொருட்களை சுமந்து கொண்டுள்ள ஐ.நா உலக உணவுத் திட்ட டிரக்குகள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. பிபிசி க்கு கூறிய மருத்துவ தொண்டு நிறுவனத்தின் மெர்லின், உணவு மற்றும் குடிநீர் வழங்கல் "அபாயமூட்டும் அளவு குறைவாக" உள்ளமை வாந்திபேதி, தொற்று மற்றும் உடல் வரட்சி போன்ற சுகாதார அபாயங்கள் வரலாம் என்று அச்சத்தைத் தூண்டிவிட்டுள்ளது என தெரிவித்தார்.

மோசமடைந்து வரும் இந்த சூழ்நிலையானது அமெரிக்காவுக்கு ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" கென்யா ஒரு முக்கியமான கூட்டணி நாடு. பேச்சுவார்த்தை தீர்வுக்கு முயற்சிக்க ஆபிரிக்காவுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலர், ஜென்டய் ஃபிரேஸர் நைரோபிக்கு அனுப்பப்பட்டார். கிபாகி ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்கும் ஒடிங்காவை ஒரு தேசிய கூட்டு அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கும் அவ்வம்மையார் முயற்சிக்கிறார்.

அமெரிக்க அழுத்தத்தின் கீழ், கிபாகி ஒடிங்காவுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார், ஆனால் ஜனாதிபதி பதவியை விட்டு இறங்க மறுத்து விட்டார். இதன் காரணமாக தேசிய அரசாங்கத்தில் பங்கேற்பதை ஒடிங்கா நிராகரித்து விட்டார், வன்முறையின் அளவு அதிகரிக்கும் அச்சுறுத்தலை உறுதிப்படுத்தும் வண்ணம் அரசாங்கத்திற்கு எதிராக கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற அதே சமயத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒடிங்காவின் ஆரஞ்சு ஜனநாயக இயக்கம் (Orange Democratic Movement -ODM) ஏறக்குறைய பாதி இடங்களை வென்றது. கிபாகியின் அமைச்சர்களில் பதினைந்து பேர் தங்களது நாடாளுமன்ற தொகுதிகளை இழந்தார்கள்.

ஒடிங்கா ஜனாதிபதி தேர்தலிலும்கூட வெல்லவில்லை என்பது நம்புவதற்கு கடினமானதொன்றாய் இருக்கிறது. தேர்தல் கமிஷனின் தலைவர் "திரு. கிபாகி தேர்தலில் வென்றாரா என்பது" அவருக்கு தெரியாது என்பதைத் தான் அப்போதிலிருந்தே கூறி வருகிறார். முடிவுகளை அறிவிக்க தனக்கு "நெருக்கடி இருந்ததாக" அவர் புகார் கூறினார். வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் தீவிர கவலைகளை தெரிவித்தனர்.

வாக்குகள் மீதான பிரச்சினையை கென்யாவின் அரசியல் சட்டத்தின் படி நீதிமன்றங்களில் தீர்த்துக் கொள்ள அனுமதிக்க கிபாகி முன்வந்திருக்கிறார். ஒடிங்கா இதனை நிராகரித்துள்ளார். நீதித்துறை முக்கியமாக கிபாகி- ஆதரவானதாக இருக்கிறது. அவரது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தொல்லை தருபவர்களாக அவர் உணர்ந்த மூத்த நீதிபதிகள் பலரை அவர் அகற்றியிருக்கிறார்.

நடப்பு அரசியல் நெருக்கடியானது கென்யாவின் ஆளும் மேற்தட்டிற்குள் அதிகரிக்கும் மோதல்களை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. ஒடிங்கா கிபாகியின் கூட்டாளியாக இருந்தார். 2002 தேர்தலில் கிபாகியின் முக்கிய ஆதரவாளராக இவர் இருந்தார்.

தன்னுடைய விசுவாசத்திற்கு பிரதிபலனாக, தான் பிரதமராக நியமிக்கப்படுவதை அவர் எதிர்பார்த்தார். மாறாக, தான் ஒதுக்கித் தள்ளப்பட்டதை அவர் கண்டார்.

முன்னதாக, கிபாகிக்கு முந்தையவரான டானியல் அராப் மோய் உடன் ஒடிங்கா கூட்டு வைத்திருந்தார். மோய் 24 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார். மோய்க்கு எதிராக செயல்பட்டதற்காக ஒடிங்கா 1990களில் சில காலம் சிறைக்கும் தள்ளப்பட்டார். ஆனால் சுதந்திரமான தேர்தலை அனுமதிக்க மேற்கில் இருந்து மோய்க்கு நெருக்கடி வந்ததைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் சமரசமாயினர்.

மோய் தனக்குப் பின்னர் ஒடிங்காவையே சிபாரிசு செய்வார் என்று ஒடிங்கா நம்பினார், ஆனால் பேசிக் கொண்டபடி நடந்து கொள்ளத் தவறிய மோய் 2002ல் நிற்க உகுரு கென்யட்டாவை தேர்வு செய்தார். முதல் கென்ய அதிபர் ஜோமோ கென்யட்டாவின் மகன் தான் இந்த உகுரு கென்யட்டா. இதன் மூலம் பின்னாலிருந்து அதிகாரத்தைக் கொண்டிருப்பதைத் தான் தொடர முடியும் என்று மோய் நம்பினார்.

கிபாகி கென்யட்டாவை தோற்கடித்தார், ஆனால் விரைவிலேயே மீண்டும் மோய் உடன் அணி சேர்ந்து கொண்டு - ஒடிங்காவை புறக்கணித்து விட்டார். சுதந்திரமான தேர்தல் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளப்பட்ட போதிலும், கென்யாட்டா, மோய் மற்றும் கிபாகி என சுதந்திரம் பெற்ற முதலே கென்யாவின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று அதிபணக்கார குடும்பங்களே வெற்றி பெற்றவர்களாக எழுந்தனர்.

இந்த அனுபவத்திற்கு பின்னர், ஒடிங்கா அரசுக்குள் கொண்டுவரப்பட தயங்கி மூன்றாவது முறையாக கைவிடப்பட்டுள்ளார். அரசியல் ஸ்தம்பிப்பு அநேகமாகத் தொடர்வதற்கான அறிகுறிகளே உள்ளன, அதனுடன் மனிதாபிமான நெருக்கடியே வளர்ந்து கொண்டு செல்ல முடியும்.

கிபாகி மேலை அரசாங்கங்களின் குறிப்பாக அமெரிக்காவின் தொடர்ந்த ஆதரவின் மீது சூதாட்டம் நடத்துகிறார். மோசடித் தேர்தல்களுக்கு பின்னரும் மூலோபாய ரீதியில் முக்கிய ஆபிரிக்க அரசுகளை அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய சக்திகளும் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளதை அவர் பார்த்துள்ளார்.

நைஜீரியாவில் சென்ற ஆண்டும், எத்தியோப்பியாவில் 2005 லும் நடந்த தேர்தல்களை ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் விமர்சித்தனர். ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் முடிவுகளை ஒப்புக் கொண்டன. இரண்டுமே "பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும்" எண்ணெய் வழங்கலிலும் மூலோபாய அடிப்படையில் முக்கியமான நாடுகள் ஆகும்.

கென்யாவில் தொடரும் நெருக்கடியின் பொருளாதார பின்விளைவுகள் பெரிய அளவிலிருப்பதை நிரூபிக்கின்றன. கென்யாவின் முக்கிய தொழில் சுற்றுலா, விடுதிகள் ஒரே நாளில் காலியாகி விட்டன. பங்கு விலைகள் நைரோபி பங்குச் சந்தையில் சரிவு கண்டன, கென்யன் ஷில்லிங்கும் அப்படியே.

கென்யாவுக்கு மட்டுமல்லாது சுற்றியிருக்கும் நாடுகளுக்கும் முக்கியத் துறைமுகமான மோம்பாஸா ஸ்தம்பித்து நிற்கிறது. சாலைத்தடுப்புகளில் நிறுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்படலாம் என்ற அச்சத்தால் டிரக்குகள் துறைமுகத்தினை விட்டு அகல முடியாமல் இருக்கின்றன. சூடான் மற்றும் சோமாலியாவுக்கான ஐ.நா நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் துறைமுகத்தில் குவிந்து கொண்டே செல்கின்றன.

1960களிலும் 1970களிலும் ஆபிரிக்காவிலேயே உயர்ந்த சில வளர்ச்சி விகிதங்களை கென்யா கொண்டிருந்தது, ஆனால் 1980களில் இது ஒரு கூர்மையான வீழ்ச்சியை சந்தித்தது. கென்ய பொருளாதாரம் தேயிலை மற்றும் காப்பியை சார்ந்திருந்ததால் பண்டங்களின் விலை சரிவால் இது பாதிக்கப்பட்டது.

1983ல், அதிபர் மோய் சர்வதேச நாணய நிதிய கட்டமைப்பு சீர்படுத்தல் திட்டத்திற்கு உடன்பட நிர்ப்பந்திக்கப்பட்டார். கென்யாவும் பெரும்பாலான ஆபிரிக்க ஆட்சிகளும் பெரிதும் நம்பியிருந்த தேசிய வளர்ச்சி மூலோபாயங்களின் அனைத்து சாத்தியக்கூறுகளையும் பூகோளமயமாக்கல் கீழறுத்துவிட்டது. எப்படியிருந்தாலும், 20 வருடங்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நடவடிக்கைகளின் கீழ், மக்கள் தொகையின் பெரும்பான்மையினருக்கான வாழ்க்கைச் சூழல் தொடர்ந்து சரிவு கண்டிருக்கிறது. இன்று, 60 சதவீதம் வரை வறுமையில் வாழ்கின்றனர்.

நைரோபியின் மையப்பகுதியில் இருந்து 2 கிலோமீட்டருக்கும் உள்ளதாக இருக்கும் சுமார் 1 மில்லியன் மக்கள் வாழும் சேரிப் பகுதியான கைபீரியாவின் பரிதாபமான சூழல்கள், The Constant Gardener எனும் திரைப்படத்தில் காட்சி ரீதியாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. வளைத்த உலோக தகடுகளின் மூலம் கட்டப்பட்டுள்ள சின்னஞ்சிறு வீடுகளில் பாதை இல்லை, மின்சாரம் அல்லது வெளிச்சம் பற்றாக்குறை, சுகாதாரம் இல்லை. மக்கள் பணம் கொடுத்து சமுதாய கழிவறைகளையோ அல்லது குளியலறைகளையோ பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அல்லது திறந்த வெளியாக இருக்கும் திடீர் சாக்கடைகளை பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வருமானத்தில் பெரும் சமத்துவமற்ற நிலை தோன்றியது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் ஆண்டிற்கு சுமார் 60,000 அமெரிக்க டாலர்கள், இது தவிர படிகளும் அதிக அளவில் இருக்கிறது, அதே சமயத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியோ தலா ஆண்டிற்கு 1,500 அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலேயே இருக்கிறது. உத்தியோகபூர்வமான குறைந்தபட்ச சம்பளம் ஆண்டிற்கு 700 டாலர் என்ற அளவில் இருக்கிறது, குறைந்தபட்ச சம்பளத்திற்கு தகுதி பெறாதோர் ஆண்டிற்கு 200 அமெரிக்க டாலருக்கும் குறைவான வேலைகளை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

கடன் திருப்பிச் செலுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் செலுத்தப்பட்டன மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு பொருளாதாரத்தை திறந்து விட கோரப்பட்டனர். இருந்தாலும், மோய் மற்றும் அவரது உட்குழுவினர் முதலீட்டாளர்கள் மேல் இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கான கோரிக்கைகளை தடுத்து வந்தனர், மாறாக தங்களை ஆதரிப்பவர்களுக்கு உதவி, பதவியை தக்க வைத்துக் கொள்ளும் வண்ணம் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தில் தங்களது சுருட்டலை அதிகப்படுத்தினர். எந்த வித விசாரணைகளும் நடக்கின்ற அறிகுறி இல்லாமல் பில்லியன் கணக்கான டாலர்கள் அரசு கஜானாவில் இருந்து காணாமல் போயிருக்கின்றன.

அந்நிய முதலீட்டின் மீது இருந்த சில கட்டுப்பாடுகளை அகற்றி, மேற்கு மற்றும் உலக நாணய நிதியத்தில் இருந்து வந்த நெருக்கடிக்கு கிபாகி வளைந்து கொடுத்துள்ளார். விளைவு முதலீடு செழுமையாக, வளர்ச்சி விகிதங்கள் இப்போது 7 சதவீதம் வரையில் இருக்கிறது.

கென்யா அதன் மலிவு கூலி உழைப்பு மற்றும் ஆழ நீர் துறைமுகத்தின் காரணமாக ஈர்ப்பு மிக்கதாக ஆகியிருக்கிறது. கென்யாவின் நெருக்கடி அதன் வருவாயை பாதிக்கும் என்று தி பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்துள்ளது.

கென்யா மட்டுமல்ல அதன் அண்டை நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். சென்ற ஆண்டு ஆபிரிக்க முதலீட்டு நிதி 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாய் குவித்தது.

மிகவும் நிலையானதொரு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஒரு நாடு அரசியல் மற்றும் இன வன்முறைக்கு இறங்கியிருப்பது எழுச்சியில் இருக்கும் சந்தை முதலீட்டு வணிகத்தில் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கும். பிற சந்தைகளை கடன் நெருக்கடி நிலை பாதித்து விட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து வளர்ச்சி கண்டு கொண்டிருந்த சில பிரிவுகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

கென்யாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியானது மக்கள்தொகையின் பெரும்பகுதியினர் எதிர்கொள்ளும் வறுமையில் எந்த விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இது கென்ய சமூகத்தின் மேலிருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் வட்டத்தின் பசியுணர்வை அதிகப்படுத்தியுள்ளது. இந்த வகையில் அரசியல் சூழலை நிலையற்றதாக்குவதில் இது ஒரு பங்கினை ஆற்றியுள்ளது.

கென்யாவின் புதிய முதலீட்டு வாய்ப்புகள் எனும் புதையலை அபகரிக்க தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட இந்த ஊழல் குழுவில் இருந்து தான் ஒடிங்காவின் ODM-ஐயும் கிபாகியின் தேசிய ஐக்கிய கட்சியையும் (PNU) ஒன்றாக வைத்திருக்க நிதி திரட்டல் நிகழ்ந்தது.

இரண்டு தரப்புமே மோய் காலத்தில் இருந்தே சண்டையிட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகளின் கூட்டணி தான், சில புதிய நம்பிக்கை கொண்டுள்ளவர்களுடன் இணைந்து 2005 இல் அரசியல்சட்ட கருத்துக்கணிப்பு ஒன்றிற்கு வாக்களிக்க "வேண்டாம்" என்ற பிரச்சாரத்தில் ODM களமிறங்கியது. இது கிபாகி தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கத்தக்க அரசியல் சட்ட மாற்றத்தை தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்றது.

கிபாகியால் விலக்கப்பட்ட லுவோ மற்றும் பிற பழங்குடி குழுக்களுக்கான மேல்வர்க்க பொருளாதார வளர்ச்சியில் இருந்து வருவாயில் அதிகமானதொரு பங்கினைக் கோருவதே ODM இன் முக்கிய நோக்கமாகும். கிபாகியின் PNU கென்யாவின் அதிகமான பொருளாதாரத்தை இயக்கி வருவதாக கூறப்படும் பணக்கார கிகுயு தொழிலதிபர்களை அடிப்படையாக கொண்டது.

இரண்டு குழுக்களுமே தேர்தல் பிரச்சாரத்தில் பழங்குடியின வாதத்தை தட்டியெழுப்பி விட்டன. ODM அல்லது PNU கென்ய மக்கள் தொகையின் பெரும்பான்மையோர் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சமூகத் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக கொண்டிருந்த ஒரே வழி பிற பழங்குடி இனத்தை பலிகடா ஆக்குவதன் மூலமே. அவர்கள் தங்களின் சுயநலத் தேவைகளை முன்னெடுத்துச் செல்ல கென்யாவை உள்நாட்டு யுத்தத்தின் எல்லைக்கே கொண்டு வந்து விட்டனர்.

கென்யாவுக்கான அமெரிக்க தூதர் மைக்கல் ரானெபேர்கர் மற்றும் செனட்டரும் ஜனாதிபதி பதவி வேட்பாளருமான பாராக் ஒபாமா, இவரும் லுவோ வம்சாவளி தான், இருவருமே 2007 ஆரம்பவாக்கிலேயே கென்யாவில் வளர்ந்து வரும் பழங்குடிவாதம் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தியதாக ஆபிரிக்கா இரகசியம் கூறுகிறது. கிபாகியும் பிற அரசு அமைச்சர்களும் கூட இதனை எதிர்த்துப் பேசுவதற்கு கடமைப்பட்டிருந்தனர். "பதட்டமேற்படுத்தும் இன உரைகளின் அபாயங்கள் குறித்து கென்ய தலைவர்களுக்கு விழிப்பு ஏற்படுத்தும் பொருட்டு" ருவாண்டாவுக்கு ஒரு அனைத்து கட்சி பயணம் மேற்கொள்ள வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் முன்மொழிந்திருந்தார்.

ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில், 1992 தேர்தலுக்கு முந்தைய சமயத்தில், மோய் பழங்குடிவாத அரசியலை பயன்படுத்தியபோது, அதனைத் தொடர்ந்த மோதல்களில் 800 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் பத்தாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் தோன்றியது. ஆறு மாத காலத்திற்கு மேற்கத்திய அரசுகள் அனைத்து உதவிகளையும் நிறுத்திக் கொண்டன, எதிர்க்கட்சிகள் தேர்தலில் நிற்க அனுமதிக்க மோய் நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.

இடைப்பட்ட காலத்தில் பழங்குடிவாதம் பின்புலத்திலேயே அதிகமாகப் பாதுகாக்கப்பட்டது. கிபாகி 2002 தேர்தலில் அதிகமான பெரும்பான்மையை பெற்றார் ஏனென்றால் அவரது வானவில் கூட்டணி மோய்க்கு எதிரான அனைத்து பழங்குடி குழுக்களையும் உட்சேர்த்ததாக பார்க்கப்பட்டது.

இப்போது பழங்குடியினர் மோதல்கள் இன்னும் பரந்த அளவில் மறு எழுச்சி கண்டு விட்டன. 15 வருடங்களுக்கு பின்னர், மேற்கு அவ்வளவு எளிதாக திடீரென்று நிறுத்தி விட இயலாது. கிபாகியிடம் இருந்து ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு தயக்கம் ஏனென்றால் ஆபிரிக்க வளங்களுக்கு அதிகரித்து வரும் போட்டியை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் கொரியா எல்லோருமே ஆபிரிக்காவில் தங்களது நலன்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நைஜீரியாவின் இயற்கை எரிவாயுவை சுரண்ட பெரும் ஒப்பந்தத்தில் ரஷ்யா இப்போது தான் கையெழுத்திட்டுள்ளது. கென்யா அதன் எல்லைக்குட்பட்ட நீர்ப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் வாயு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது.

கென்யாவின் அரசியல் நெருக்கடியின் அதிர்வுகள் குறித்த சர்வதேசரீதியான கவலை வளர்ந்து வருகிறது, ஆயினும் இது கென்ய ஆளும் மேல்வர்க்கம் அல்லது மேற்கத்திய சக்திகளின் தீர்வு காண்பதற்கான சக்திக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. இந்த நெருக்கடி, அடிப்படையில், நடந்து கொண்டிருக்கும் ஆபிரிக்க கண்ட ஏகாதிபத்திய சுரண்டலின் விளைபொருளே ஆகும். சுதந்திரத்தின் போது பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளிடம் இருந்து முறையான அதிகாரத்தை ஒப்படைக்கப் பெற்ற தேசியவாத மேல்தட்டினர் இந்த பொருளாதார ஆதிக்கத்தை வெல்வதற்கான திறனற்றிருப்பதை இது இரத்தக் கறையுடன் உறுதிப்படுத்துகிறது.

மெள-மெள எழுச்சியின் போது கென்யாவின் முதல் அதிபரான ஜோமோ கென்யட்டா பிரிட்டிஷ் சிறையில் எட்டு ஆண்டுகள் காலம் கழித்தார். இந்த எழுச்சியானது பிரிட்டிஷாரால் முரட்டுத்தனமாக அடக்கப்பட்டது.

கென்யாட்டா, எதிர்ப்பின் அங்கியை அணிந்து கொண்டார், நாட்டில் பரந்துபட்ட ஆதரவுடன் சிறையில் இருந்து வெளிவந்தார். சுதந்திரத்திற்கு பின்னர் அநேக ஆபிரிக்க அரசுகள் கடைப்பிடித்த அதே தேசியவாத கொள்கைகளையே அவரும் கைக்கொண்டார், அவற்றை "ஆபிரிக்க சோசலிசத்தின்" ஒரு வடிவம் என முன்வைத்தார். ஒரு புத்தகம் குறிப்பிடுவதைப் போல, "கென்யாட்டா, 'ஆபிரிக்க சோசலிசம்' என்னும் நாகரீகமான ஆடையை உடுத்திக் கொண்டு, முதலாளித்துவ வளர்ச்சி தத்துவத்தின் நடப்பிலிருக்கும் அநேக ஆச்சாரங்களை கைக்கொண்டார்." (*)

பதிலுக்கு, அவரது மிதவாதத்திற்காக மேற்கின் பாராட்டுகளை சம்பாதித்தார். குளிர்யுத்த காலத்தில் மேற்கின் ஒரு விசுவாசமான கூட்டாளி என்பதை அவர் நிரூபித்தார்.

1960களில் காலனித்துவ சக்திகள் வைத்த அரசியல் மற்றும் பொருளாதார ஏற்பாடுகள் மக்கள் தொகையின் பெரும்பான்மையினருக்கு சேதமளிக்கும் விளைவுகளுடன் நொருங்கி போவதை கடந்த 30 வருடங்கள் கண்டிருக்கின்றன. கென்ய மேல்தட்டினர் நாட்டை கொள்ளையடித்தார்கள், அவர்கள் இப்போது அந்நியமுதலீட்டு புதையலை கைப்பற்றும் பொருட்டு சமூக வன்முறைக்குள்ளும் நாட்டை அமிழ்த்தி விட்டார்கள்.

சுதந்திரம் அடைந்த முதற்கொண்டு எப்போதுமே, அவர்கள் தனித்துவமான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை சாதிப்பதில் திறனற்றவர்கள் என்று காட்டி வந்திருக்கிறார்கள், ஏனெனில் தொடர்ந்து அவர்கள் மேற்கத்திய அரசுகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு துணைபோய் வந்துள்ளனர். உற்பத்திப் பொருட்களை வழங்குநராகவோ அல்லது ஒரு பரபரப்பான முதலீட்டு வாய்ப்பாகவோ, பிரம்மாண்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகளினால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலகச் சந்தையின் பிடிக்குள் கென்யா தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

(*) John D Hargreaves, Decolonisation in Africa, Longman, 1996, p. 210.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved