WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Bomb blast marks formal end of Sri Lankan
ceasefire agreement
குண்டு வெடிப்பு இலங்கை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் உத்தியோகபூர்வ முடிவை குறிக்கின்றது
By K. Ratnayake
17 January 2008
Back to screen version
இலங்கையின் தென்கிழக்கில் புத்தலைக்கு அருகில் நேற்றுக் காலை பஸ் மீது நடத்தப்பட்ட
குண்டுத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எந்தவொரு குழுவும்
இதற்குப் பொறுப்பேற்காத போதிலும், இந்தத் துன்பத்தை 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்வதற்கு
எடுத்த முடிவை நியாயப்படுத்த சுரண்டிக் கொண்ட அரசாங்கம், தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டியது.
அரசாங்கம் ஜனவரி 2ம் திகதி இரண்டு வாரக் காலக்கெடு கொடுத்த பின்னர் யுத்த நிறுத்தம் நேற்றுடன் உத்தியோகபூர்வமாக
இரத்துசெய்யப்பட்டது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவம் தொடர்ச்சியான
தாக்குதல்களை முன்னெடுத்ததை அடுத்து கடந்த ஆண்டு "விடுதலை" செய்துவிட்டதாக அரசாங்கம் பிதற்றிக்கொண்ட
நாட்டின் கிழக்கு மாகாணத்திற்கு நெருக்கமாகவே புத்தல பிரதேசம் அமைந்துள்ளது. அந்த பஸ் வறிய கிராமத்தவர்களால்
நிறைந்து போயிருந்தது. குண்டுவெடிப்பின் பின்னர் தாக்குதல்காரர்கள் துப்பாக்கிப் பிரயோகமும் செய்ததாக நேரடியாகப்
பார்த்தவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். பெருந்தொகையான பாடசாலை சிறுவர்கள் பஸ்ஸில் இருந்ததாக
பாதுகாப்பு அமைச்சு அறிவித்த அதே வேளை, சிறுவர்கள் கொல்லப்படவில்லை என உள்ளூர் வைத்தியசாலை அலுவலர்கள்
தெரிவித்தனர்.
ஒன்றன் பின் ஒன்றாக மேலும் சம்பவங்கள் நடந்தன. அதே பிரதேசத்திற்கு அருகில்
இன்னுமொரு குண்டு இராணுவ வாகனம் ஒன்றைத் தாக்கியதில் நான்கு படையினர் காயமடைந்தனர். சில நிமிடங்களின்
பின்னர் சேனைப் பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கிதாரிகள் சுட்டதில் குறைந்தபட்சம் ஐந்து
பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இராணுவத்தினர் உடுத்தும் உடையை போன்றே தாக்குதல்காரர்களும் உடுத்தியிருந்ததாக
நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் வன்முறைகள் நடக்கலாம் என்ற பீதியில், நியந்தல, தம்பேயாய மற்றும் மினிபுறவைச்
சேர்ந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறினர்.
குண்டுத் தாக்குதலை கண்டனம் செய்த இலங்கை ஜனாதிபதி தெரிவித்ததாவது: "இது
[புலிகள்] மாற்றமின்றி பயங்கரவாதத்தையே நாடுவதையும் மற்றும் இலங்கையின் இறைமைக்கும் பிராந்திய
ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் புலிகளின் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பிரிவினைவாத குறிக்கோளை
முன்னெடுப்பதில் ஜனநாயகத்தையும் நாகரீகமான நடைமுறைகளையும் முழுமையாக நிராகரிப்பதையும் முழு உலகுக்கும்
வெளிப்படுத்தியுள்ளது."
இந்த குண்டுவெடிப்பை பிரச்சாரத் தேவைகளுக்காகப் பற்றிக்கொண்டு இராணுவமும்,
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் தோய்ந்த சடலங்களின் புகைப்படங்களை
வெளியிட்டிருந்தது. மற்றைய இரு சம்பவங்களுக்கும் புலிகள் மீது குற்றஞ்சாட்டிய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர்
கெஹலியே ரம்புக்வெல்ல, புலிகள் விவசாயிகளை சுட்டுவிட்டு ஓடுவதை நேரில் கண்டுள்ளனர் எனக் கூறிக்கொண்டார்.
பஸ் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பல உள்ளூர்வாசிகள் புத்தல
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒன்றுகூடினர். குண்டுவெடிப்புக்கு முன்னதாக அருகில் உள்ள காட்டில்
சந்தேகத்திற்கிடமானவர்களைக் கண்டதாகவும் பொலிசாருக்கு அறிவித்ததாகவும் கிராமவாசிகள் ஊடகங்களுக்குத்
தெரிவித்திருந்தனர். பொலிசார் முறையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என அவர்கள் விமர்சித்தனர்.
இதுவரை அறிக்கைகள் எதையும் வெளியிடாத புலிகள், பஸ் மீதான தாக்குதலுக்கு
பொறுப்பாளிகளாக இருக்கக் கூடும். புலிகள் குறிப்பாக அப்பாவி சிங்களப் பொதுமக்களை இலக்கு வைத்து கடந்த
காலத்தில் இதுபோன்ற அட்டூழியங்களை செய்துள்ளனர். அவர்களின் அறிக்கைகள், பாதுகாப்புப் படையினரால்
மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு முழு "சிங்கள இனத்தின்" மீதும் குற்றஞ்சாட்டுவது வழமையானதாகும்.
புலிகள் 2002 யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதோடு "சர்வதேச
சமூகத்தின்" ஆதரவுடன் கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ளும்
எதிர்பார்ப்பில் தனியான தமிழ் அரசுக்கான தமது கோரிக்கையையும் கைவிட்டனர். பேச்சுவார்த்தைகள் வேகமாக
கவிழ்ந்து போனதோடு, பெரும் வல்லரசுகள் இராணுவம் வெளிப்படையாக யுத்த நிறுத்தத்தை மீறியதை விமர்சிக்க மறுத்து
கடந்த இரண்டு ஆண்டுகளாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவளித்து வந்தன.
கிழக்கு மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த புலிகள், இப்போது தமது வடக்கு கோட்டையில் இராணுவத் தாக்குதல்களை
எதிர்கொள்கின்றனர்.
பாதுகாப்புப் படையினருடன் கூடியுள்ள புலிகள்-விரோத துணைப்படையும் இந்தத்
தாக்குதலுக்கு பொறுப்பாளிகளாக இருக்கலாம். முன்னர் கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமயில் இயங்கிய
புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழுவும் கிழக்கில் இத்தகைய இரக்மற்ற நடவடிக்கைகளுக்கு பேர்போனதாகும். அதன்
தலைவர் கருணா வெளியேற்றப்பட்ட பின்னர், பிள்ளையான் குழு என அழைக்கப்படும் இந்தக் குழு இராணுவத்தின் ஆதரவுடன்
முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இனவாத மோதல்களை கிளறிவிடும் நோக்கில் எதிரிகளின் மீது தாக்குதல்
தொடுப்பதில் ஈடுபட்டுள்ளது.
எவர் செய்திருந்தாலும், இந்தக் குண்டுத் தாக்குதல் அரசாங்கத்தின் கைகளில் நேரடியாக
பயன்படுகின்றது. பிரதேசத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு கொழும்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அமைச்சர், இராணுவம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற சிங்கள அதிதீவிரவாத
அமைப்புகள் இந்தத் தாக்குதலை இனவாத பதட்டங்களை உக்கிரமாக்கவும் பயம் மற்றும் பீதியான மனநிலையை
உருவாக்கவும் பயன்படுத்துகின்றன.
வாரக் கடைசியில் கொழும்பில் வைத்து ஜப்பானிய விசேட தூதர் யசூஷி அகாசி வெளியிட்ட
பீதியான கவலையை தள்ளிவைக்கவும் இந்தத் தாக்குதல் பயன்பாட்டுக்குரியதாகும். ஜனாதிபதியை சந்தித்த அகாஸி, யுத்த
நிறுத்தத்தின் முடிவு மேலும் வன்முறைகளுக்கும் பொதுமக்களின் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என கவலை தெரிவித்திருந்தார்.
யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ள நிலையில் அதன் உதவித் திட்டத்தை ஜப்பான்
மறுபரிசீலனை செய்யும் என அவர் சமிக்ஞை செய்தார். ஜப்பான் இலங்கையில் பெரும் நிதி வழங்கும் நாடாக
இருப்பதோடு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வேயுடன் சமாதானப் முன்னெடுப்புகள் என
சொல்லப்படுவதன் துணை அனுசரணையாளராகவும் இருந்தது.
சமாதானப் முன்னெடுப்புகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இருந்த நோர்வே,
இதே போன்ற கவலையையே தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்த நோர்வே
தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழு, நேற்று அதன் அலுவலர்களை நாட்டில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது.
நோர்வே புலிகளுக்கு சார்பாக நடந்துகொள்கின்றது எனவும் ஜே.வி.பி. யும் மற்றும் ஏனைய சிங்களப் பேரினவாத
குழுக்களும் கசப்புடன் விமர்சித்து வந்தன. கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜோஹன் சொல்பர்க், மீண்டும் சமாதானப்
பேச்சுக்களுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதோடு நீண்ட கால யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வு
காணுமாறும் கேட்டுக்கொண்டார்.
புஷ் நிர்வாகம், யுத்த நிறுத்தத்திற்கு முடிவுகட்டப்பட்டதையிட்டு தாம் "அசெளகரியத்திற்குள்''
தள்ளப்பட்டதாக பிரகடனம் செய்த போதிலும், சமாதானப் பேச்சுக்களைத் திரும்பவும் தொடக்க அது எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையில், அமெரிக்கா புலிகளை உரத்த குரலில் விமர்சித்ததோடு இலங்கைக்கு இராணுவ
உதவிகளை வழங்கி இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் யுத்தத்திற்குத் திரும்பியதற்கு அது பிரதான காரணியாகும்.
எப்.பி.ஐ. குறிப்பிடத்தக்க வகையில், யுத்த நிறுத்தத்தை இரத்து செய்ய அரசாங்கம் முடிவெடுத்த உடனேயே, "உலகில்
உள்ள மிக மிக ஆபத்தான மற்றும் மரணம் விளைவிக்கும் அதிதீவிரவாதிகளில்" புலிகளும் அடங்குவர் என பிரகடனம் செய்து
அதன் இணையத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2005 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. யின் ஆதரவுடன் இராஜபக்ஷ குறுகிய வெற்றியைப்
பெற்ற பின்னரே யுத்த நிறுத்தம் கவிழ்ந்து போனது. அவரது தேர்தல் வாக்குறுதிகள், 2002 யுத்த நிறுத்தத்தை இராணுவத்தின்
நிலையைப் பலப்படுத்தும் வகையில் மீண்டும் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்வதை உள்ளடக்கியிருந்தது. இந்த நகர்வு
அடுத்த சமாதான பேச்சுக்கள் அனைத்தையும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் சீரழித்தது. இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த
குறுகிய காலத்தின் பின்னர், இராணுவமும் அதனுடன் சேர்ந்து செயற்படும் கருணா குழு போன்ற துணைப்படைகளும், புலிகளைப்
பலவீனப்படுத்தவும் மற்றும் எதிர்ச்செயலாற்றத் தூண்டவும் திட்டமிட்டு இழிந்த இரகசிய யுத்தத்தை முன்னெடுத்தன.
ஜூலை 2006ல், புலிகளின் கட்டுப்பாட்டிலான மாவிலாறு பிரதேசத்தைக் கைப்பற்ற
தாக்குதல் தொடுக்குமாறு இராணுவத்திற்கு இராஜபக்ஷ கட்டளையிட்டார். இது யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறிய செயலாக
இருந்த போதிலும் சர்வதேச விமர்சனங்கள் எதுவும் வெளிவரவில்லை. புலிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக
மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகை மூடி விவசாயிகளுக்கான தண்ணீரைத் துண்டித்தமை இந்தத் தாக்குதலுக்கான
சாக்குப் போக்காக அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு
தொடர் தாக்குதல்களில் முதலாவது தாக்குதலே மாவிலாறு இராணுவ நடவடிக்கை என்பது இதன்மூலம் விரைவில் வெளிப்படையாகியது.
ஒரு மதிப்பீட்டின்படி, கடந்த இரு ஆண்டுகால மோதல்களில் 5,000 பேர்வரை
கொல்லப்பட்டுள்ளதோடு 200,000 க்கும் அதிகமான பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களால்
பாதிக்கப்பட்டவர்களாவர். அதே சமயம், உள்ளூர் மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கும் முயற்சியில்
நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள், இராணுவத்தாலும் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும்
துணைப்படைகளாலும் கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யுத்தநிறுத்தத்தை
உத்தியோகபூர்வமாக இரத்துசெய்யும் முடிவு, வெறுமனே சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படும்
சவப்பெட்டிக்கு அடித்த கடைசி ஆணியாகும்.
தீவின் 25 ஆண்டுகால கொடூர யுத்தத்தை மீண்டும் தொடங்கியமைக்கும் மற்றும் அதனால்
புதுப்பிக்கப்பட்ட மோதல்கள் ஏற்கனவே உருவாக்கி விட்டுள்ள மேலும் பல துன்பங்களுடன் நேற்றைய பஸ் மீதான குண்டுத்
தாக்குதலுக்கும் இராஜபக்ஷவின் அரசாங்கமே அரசியல் ரீதியில் பொறுப்பாளியாகும்.
|