World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Lahore bombing casts pall over Pakistani election லாகூர் குண்டுவெடிப்பானது பாகிஸ்தான் தேர்தல் மீது இருள்சூழ செய்கின்றது By K. Ratnayake வியாழன்று கிழக்கு பாகிஸ்தான் நகரமான லாகூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலானது பிப்ரவரியில் நடத்தப்பட இருக்கும் தேசிய தேர்தல்கள் மீது புதிதாக சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிசம்பர் 27ல் எதிர்கட்சித் தலைவர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையைத் தொடர்ந்து நடந்த கலகத்தில் சில தேர்தல் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டதால் இந்த தேர்தல் ஏற்கனவே ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு நகரத்தின் உயர்நீதிமன்ற கட்டிடத்தின் வெளியில் நடந்தது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர், ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப்பின் நீதிபதிகளை நீக்கும் நடவடிக்கையை எதிர்த்து நடந்த வக்கீல்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரிப்பு நடந்தபோது கூடியிருந்த கலகம் அடக்கும் போலீஸார் ஆவர். உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 19ஆக மறுஅறிவிப்பு செய்யப்பட்டிருப்பதில், 16 பேர் போலீஸார் ஆவர் மற்றும் 62 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு குறித்த விபரங்கள் இதுவரையிலும் தெளிவாக இல்லை. ஒரு தற்கொலை குண்டுதாரி தனது உடலில் கட்டியிருந்த பெரிய குண்டை வெடிக்கச் செய்ததாக அறிவித்த போலீஸ், அவரின் அடையாளம் கண்டறிய சிதறிய உடலின் பாகங்களையும் சேகரித்துச் சென்றது. குண்டுவெடித்தவர் கால்நடையாகவா அல்லது மோட்டார் சைக்கிளிலா வந்தடைந்தார் என்பதிலும், அவர் போலீஸ் காவல்எல்லையை மோதினாரா அல்லது விசாரிக்கப்பட்டபோது தன்னை வெடிக்கவைத்தாரா என்பதிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பாக்கிஸ்தான் Dawn செய்தித்தாளிடம் ஒரு பொலிஸ்காரர் தமக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை நிற சுசூக்கி மோட்டார்வாகனத்தை அகற்ற முயன்றபோது குண்டு வெடித்ததாக கூறியுள்ளார். எந்த அமைப்பும் இதற்கான பொறுப்பேற்கவில்லை. உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா உடனடியாக, கடந்த ஜூலையில் இஸ்லாபாத்தின் செம்மசூதியில் இராணுவத்தின் முற்றுக்கையைத் தொடர்ந்து சமீபத்திய மாதங்களில் ஒரு தொடர்ச்சியான தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்திய அல் கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகளைக் குற்றம்சாட்டி இருக்கிறார். "இதில் யாருடைய தொடர்பு இருக்கிறதென்று உடனடியாகக் கூற முடியாது, ஆனால் இது நிச்சயமாக அதே போன்ற தற்கொலை படை வெடிகுண்டு வெடிப்புகளின் ஒரு பகுதியாகும்." என அவர் பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், இது யார் மீதான இலக்கு என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல் போலீஸை விட எதிர்தரப்பு பேரணியை இலக்காகக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. போராட்டத்தில் பங்கு கொண்ட வக்கீல்கள் டெய்லி டைம்ஸ் இதழிடம் கூறியதாவது: "நூற்றுக்கணக்கான வக்கீல்கள் [உயர்நீதிமன்றத்திற்கு அடுத்ததாக உள்ள] பொது தபால் அலுவலக முற்றத்தில் கூடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பாளி எங்களையும் தாக்கி இருந்தால், இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும்." எனத் தெரிவித்தனர். நியூயோர்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் வக்கீல் அலி அஹ்சான் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி கூறியிருப்பதாவது: "இது ஒரு சோகமான சம்பவம், தெளிவாக இதற்கான குற்றச்சாட்டு அரசாங்கத்தை நோக்கியே செல்கிறது." இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்தநேரத்தில் வெடிக்கும் குண்டின் விளைவாகும். மேலும் இதில் ஒரு தற்கொலை படையாளி சம்பந்தப்பட்டுள்ளார் என லாகூர் போலீஸ் தீர்மானித்திருப்பது ஆச்சரியப்படுத்தியது என தனது கருத்தை அவர் வெளிப்படுத்தினார். தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அட்ஜாஜ் அஹ்சானின் மகனான அலி அஹ்சான் வக்கீல்களின் அரசாங்க எதிர்ப்பு போராட்டகாரர்களின் தலைவரான உள்ளார். எதிர்தரப்பு அரசியல்வாதிகளும் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி உள்ளனர். "[லாகூர்] குண்டுவெடிப்பானது வக்கீல்களின் போராட்டத்தை நாசப்படுத்துவதற்கான மற்றும் தேர்தலை மேலும் தள்ளி வைப்பதற்கான ஒரு சதித்திட்டமாக இருக்கலாம்." என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்கள் அறிவித்திருப்பதாக இதழ்கள் வெளியிட்டன. இந்த தாக்குதல் "நாட்டை ஸ்திரமின்மைக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சியாகும்" என பாகிஸ்தான் மக்கள் கட்சி பொது செயலாளர் ஜெஹாங்கிர் பாதர் தெரிவித்தார். "ஜனாதிபதி முஷாரப் பதவி விலகும் வரை இந்த இரத்தகளரி தொடரும்." என மற்றொரு முக்கிய எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - என் (PML-N) தெரிவித்தது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஆளும் அரசாங்கம் சம்பந்தப்பட்டு இருப்பதாக பரவலாக சந்தேகிக்கப்படுகிறது, பெனாசீர் பூட்டோவின் படுகொலையைச் சுற்றியுள்ள சூழலாலும் இதுபோன்ற அட்டூழியங்களுக்கு எண்ணெய் வார்க்கப்பட்டு வருகிறது. ராவல்பிண்டியின் கேரிசன் நகரத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தேர்தல் பேரணியில் பெனாசீர் தமது கார் மேற்கூரையில் தலையை மோதிக்கொண்டதால் இறந்ததாக போலீஸ் மற்றும் அரசாங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்தனர். குண்டுவெடிப்புக்கு முன்னதாக ஒரு துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதாக ஒளிப்பதிவுநாடா மற்றும் நேரில் பார்த்தவர்களின் தகவல்கள் தெரிவித்தன. பாகிஸ்தானிய விசாரணையின் நம்பகத்தன்மை அழிந்துவிட்டதால், பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்ட் குழுவை உதவிக்கு அழைக்க வேண்டிய நிலைக்கு முஷாரப் தள்ளப்பட்டார். பாகிஸ்தானிய ஜனாதிபதியின் மறுப்புரைகள் இருந்த போதிலும், நீண்டகாலமாக ஆயுதமேந்திய இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் மற்றும் பூட்டோவைத் தமது சொந்த அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளுக்கு அச்சுறுத்தலாக கண்டு வந்த இராணுவ அல்லது அரசாங்க பிரிவுகளின் மூலம் அவரின் கொலை நடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பூட்டோவின் படுகொலையைத் தொடர்ந்து தேர்தல்களைத் தள்ளிப்போட்டு வரும் முஷாரப்பை எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருக்கின்றன. ஆனால் அவை அவற்றில் பங்கெடுக்க உறுதி அளித்திருக்கின்றன. இவ்வாறு செய்வதன் மூலம், தனது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக போலீஸ் அரசு முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் இந்த தள்ளாடும் ஆட்சிக்கு அவர்கள் நம்பகத்தன்மையை அளிக்கிறார்கள். பிரசாரத்தினூடாக எதிர்ப்பைத் அணிதிரட்டுவதன் மூலம் ஆட்சியை எதிர்க்க தங்களுக்கு விருப்பம் இல்லை என பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - என் (PML-N) தெளிவுபடுத்தி உள்ளன. எந்த தேர்தலிலும் தமது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- க்யூ (PML-Q) மிக மோசமாக தோற்கடிக்கப்படும் என்பதற்கான எவ்விதமான பதட்டமும் முஷாரப்பிடம் காணப்படவில்லை. சிங்கப்பூரின் ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், தேர்தலுக்குப் பின்னர் எதிர்கட்சிகள் தன் மீது குற்றஞ்சுமத்தினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதியைக் குற்றஞ்சாட்ட, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இருக்க வேண்டும். ஆகவே, வாக்காளர்களை மிரட்டவும், எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் பேரணிகளை ஒடுக்கவும் மற்றும் இராணுவம் மற்றும் போலீஸ் இருப்பை அதிகரிக்கத் தேவையான ஒரு போலிகாரணத்தை அளிக்கவும் தேர்தல் வன்முறை குறித்த அச்சுறுத்தல் ஆட்சிக்குப் பயன்படுகிறது. லாகூர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தின் 22 மாவட்டங்களில் இராணுவம் நிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது. குறிப்பிட்ட இடத்தில் படையினர் நிறுத்தப்படுவது குறித்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என உள்துறை செயலாளர் குஷ்ராவ் பர்வீஜ் கான் தெரிவித்தார். "Aiwan-i-Sadr sey" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும் போது, அரசாங்கம் எதிர்ப்புகளை ஓர் இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என முஷாரப் குறிப்பிட்டார். "சுதந்திரமான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலின்" தேவை குறித்து கூறும் போது, அவர் "ஆனால் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ நாங்கள் எவ்விதமான கிளர்ச்சியையும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் ஒருவர் மிக தெளிவாக இருக்க வேண்டும்." ஒருவர் குற்றஞ்சாட்டுக்களைத் அளிக்கும் போது "நாகரீகமான நடத்தையைக்" காட்ட வேண்டும் எனக் கூறி, அவரது அரசாங்கம் தேர்தல் மோசடியில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதி சாட்டை அடி அளித்தார்.1999இல் ஓர் இராணுவ சதி மூலம் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து முஷாரப்பின் சாதனை நாகரீமானதை தவிர வேறொன்றுமாக இல்லை. இராணுவம் தேர்தல்களில் மோசடி செய்திருக்கிறது; ஜனநாயகத்திற்கெதிரான முறைமைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது; அரசியலமைப்பை அவமதித்துள்ளது மற்றும் இரக்கமற்ற முறையில் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்கி இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னால், அரசாங்கம் அரசியல் அமைப்பை செல்லாததாக்கி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதுடன், நூற்றுக்கணக்கான மக்களை கைது செய்து நீதிபதிகளையும் நீக்கியது. நெருக்கடி நிலை நீக்கப்பட்டுள்ளது, ஆனால் ஜனநாயகத்திற்கெதிரான பல முறைமைகள் இருந்து வருகிறது. லாகூர் குண்டுவெடிப்புக்குப் பின்னர், தகவல் அமைச்சர் நிசார் மேனன் கூறியதாவது: "தேர்தல்கள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்." எவ்வாறிருப்பினும், ஏற்கனவே, தேர்தல் அலுவலகங்கள் சேதமடைந்ததால் ஒருமுறை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அரசாங்கம் போலியாக மன்னிப்பு கேட்டிருந்தது. இது அவரின் அரசியல் நோக்கங்களுக்கு பொருந்துமானால், மற்றொரு தள்ளிவைப்பை அறிவிக்க, லாகூர் போன்ற குண்டுவெடிப்பு நிகழ்வை தனக்கு சாதகமாக பாவித்துக்கொள்ளும் நிலையில் முஷாரப் உள்ளார். |