WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
JVP assists the Sri Lankan government to
pass its war budget
இலங்கை அரசாங்கத்தின் யுத்த வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஜே.வி.பி. உதவுகிறது
By K. Ratnayake
20 December 2007
Back to screen version
இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த யுத்த வரவுசெலவுத் திட்டத்தின்
மூன்றாவதும் கடைசியுமான பாராளுமன்ற வாக்கெடுப்பில் ஒருவாறு வெற்றியை சாதித்துக் கொண்டது. இதைச் செய்வதற்காக
அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஆதரவில் தங்கியிருந்தது. ஜே.வி.பி. இரண்டாவது சுற்றில் செய்தது
போல், வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்குப் பதிலாக அதைப் புறக்கணிப்பதன் மூலம் ஆட்டங்கண்டு
போன ஆளும் கூட்டணியை காப்பாற்றியது.
இறுதியாக 37 ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்த நிலையில்,
114 வாக்குகள் சார்பாகவும் 67 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. தொழிலாளர்களதும் வறியவர்களதும்
பாதுகாவலனாகக் காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி. இப்போது நாட்டின் பிற்போக்கு உள்நாட்டு யுத்தத்தை உக்கிரமாக்குவது
மட்டுமன்றி விலவாசி உயர்வு மற்றும் மானியங்கள், சேவைகள் வெட்டு போன்றவற்றின் ஊடாக உழைக்கும் மக்களின் முதுகில்
யுத்தத்தின் முழு சுமையையும் கட்டியடிக்கும் வரவுசெலவுத் திட்டத்திற்கு அரசியல் ரீதியில் பொறுப்பாளியாகும்.
2006 ஜூலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கத்
தொடங்கிய அரசாங்கம், இராணுவச் செலவுக்காக 166 பில்லியன் ரூபாவை (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்)
ஒதுக்கி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு சாதனையில் இருந்து 20 வீத அதிகரிப்பாகும். யுத்தத்திற்கு செலவிடுவதற்காக,
பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களையும் தனது பொறுப்பில் வைத்துள்ள ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷ, புதிய
மறைமுக வரிகளையும் சமூக செலவு வெட்டுக்களையும் அமுல்படுத்தியுள்ளார்.
புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர, ஏனைய அனைத்து எதிர்க்
கட்சிகளும் ஏதாவதொரு வழியில் யுத்தத்தை ஆதரிக்கின்றன. அதே சமயம், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி
(யூ.என்.பி.) வாழ்க்கைத் தரம் சீரழிவது தொடர்பாக மக்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் ஆத்திரத்தில்
பயன்பெறுவதன் பேரில் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்தது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்
(ஸ்ரீ.ல.சு.க.) இருந்து பிரிந்த இரு சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்து புதிய
பாராளுமன்றத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க யூ.என்.பி. எதிர்பார்த்திருந்தது.
பாராளுமன்ற சமநிலையின் திறவுகோளாக ஜே.வி.பி. இருந்துள்ளது. ஜே.வி.பி. யிடம்
ஒரு நிலைப்பாட்டை எடுக்க சரியான எண்ணிக்கை இருக்காத அதே வேளை, வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிரான ஒரு
தெளிவான நிலைப்பாடு, ஆளும் கூட்டணியில் இருந்த உறுப்பினர் எதிர்தரப்புக்கு மாறுவதற்கு தூண்டக்கூடியதாக இருந்தது.
வரவுசெலவுத் திட்டம் ஜே.வி.பி. யை நெருக்கடியில் தள்ளியது. ஒரு புறம் ஜே.வி.பி. தேசப்பற்று யுத்தத்தை
உக்கிரமாக்க உரக்க கோரிக்கை விடுத்த போதிலும், மறுபுறம் உழைக்கும் மக்களின் துன்பத்தை தணிக்க நடவடிக்கை
எடுக்குமாறும் வார்த்தைஜால அழைப்புவிடுத்ததோடு சில சமயங்களில் தம்மை சோசலிஸ்டுகள் என்றும் கூறிக்கொண்டது.
நவம்பர் 19 இரண்டாவது வாசிப்புக்கு முன்னதாக பல வாரங்களாக மழுப்பிக்கொண்டிருந்த
ஜே.வி.பி. க்குள் இந்த விவகாரம் பிளவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஜே.வி.பி. எதிர்த்து வாக்களித்ததை அடுத்து
அரசாங்கம் குறுகிய வெற்றியைப் பெற்றது. மூன்றாவது வாசிப்புக்கு முன்னதாக, ஜே.வி.பி. ஒரு தொகை
கோரிக்கைகளை முன்வைத்தது. அவை பொருளாதார சுமைகளை குறைப்பவையாக இருக்கவில்லை. மாறாக அவை
புலிகளைத் தடைசெய்வது உட்பட யுத்தம் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கோரின. குறிப்பாக, ஒரு
உயிரற்ற ஆவனமாக இருந்த போதிலும், பெயரளவில் சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை
அரசாங்கம் இன்னமும் ஆதரிப்பதாக கூறிக்கொள்ள அனுமதித்த, 2002 யுத்தநிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறியுமாறு
இராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. வலியுறுத்தியது.
திரைக்குப் பின்னால், வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதைத் தடுப்பதற்காக
அரசாங்கம் தனது சொந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே லஞ்சம் கொடுத்து நெருக்கத் தள்ளப்பட்டது. வாக்கெடுப்பு
நான்கு நாட்களுக்கு முன்னதாக, இராணுவத்துடன் சேர்ந்த துணைப்படைக் குழுவொன்று மூன்று தமிழ் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களைக் கடத்தியதோடு அவர்கள் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக
வாக்களித்தால் கடத்தியவர்களைக் கொல்வதாக அறிவித்தது.
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காக யூ.என்.பி. யும் மேலதிக நேரம்
உழைத்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா.) தலைவர் ரவுப் ஹக்கீமும் மூன்று பிரதி அமைச்சர்களும்
இராஜினாமா செய்துவிட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டனர். அரசாங்கம் குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான
பாரபட்சங்களை மேற்கொள்வதாக ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது இறுதி வாக்களிப்பு
நடந்த போது, ஸ்ரீ.ல.சு.க. முன்னணி உறுப்பினரும் அமைச்சரவை அமைச்சருமான அனுர பண்டாரநாயக்க எதிர்தரப்புக்கு
மாறினார்.
மத்திய மலையகப் பிரதேசத்தில் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை களமாகக்
கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு) கூட
கட்சி தாவுவதற்கான அறிகுறிகள் இருந்தன. ம.ம.மு. உறுப்பினர் வி. இராதாகிருஷ்னன் "மக்கள் வரவுசெலவுத்
திட்டத்தை [தமது கட்சி] எதிர்ப்பதையே விரும்புகிறார்கள்" என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது மேலும் இரு
வாக்குகள் இழக்கப்படுவதை அர்த்தப்படுத்தியது.
இந்த நிலைமைகளின் கீழ், வரவுசெலவுத் திட்டத்தின் தோல்வி ஜே.வி.பி. யின்
வாக்களிப்பிலேயே தங்கியிருந்தது. ஜே.வி.பி. தலைவர்கள் கடந்த மாதம் செய்தது போல், கடைசி நிமிடம் வரை
எதிர்த்து வாக்களிப்பதாக பிரகடனம் செய்துகொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை கூட, கட்சியின் வானொலி சேவையான
M. எப்.எம். இல் பேசிய அதன் பொதுச் செயாலளர் டில்வின் சில்வா, தலைமைத்துவம் எதிர்த்து
வாக்களிக்க முடிவெடுத்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
ஆயினும், வெள்ளிக்கிழமை பின்னேரம், ஜனாதிபதியின் சகோதரர் பசில் இராஜபக்ஷவுடன்
பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. "வெள்ளிக்கிழமை பி.ப. 2
மணிக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமைத்துவத்துக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில்
இராஜபக்ஷவுக்கும் இடையில் மூடிய கதவுகளுக்குள் நடந்த சந்திப்பு, வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள தீர்க்கமான
வாக்கெடுப்பை ஜே.வி.பி. புறக்கணிக்கும் என்ற அறிவித்தலை விடுக்க வழிவகுத்தது," என நேஷன் பத்திரிகை
செய்தி வெளியிட்டிருந்தது.
பக்கம் தாவுவதைப் பற்றி சிந்திக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் துரிதமாக மனம் மாறினர்.
வரவுசெலவுத் திட்டம் ஏதாவதொரு வழியில் நிறைவேறுமாயின், இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. உறுப்பினர்கள் அரசாங்கத்தில்
இருந்து வெளியேறி, தமது அமைச்சுப் பொறுப்புக்களை கைவிட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தயாராகவில்லை. யுத்தத்திற்கு
தமது ஆதரவை கோடிட்டுக்காட்டுவதன் பேரில், இறுதி வாக்களிப்பு முன்னதாக தனிப்பட்ட விவகாரமாக எடுக்கப்பட்ட
பாதுகாப்பு செலவீன ஒதுக்கீட்டுக்கு ஜே.வி.பி. உண்மையிலேயே வாக்களித்தது. வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட
பின்னர், ஜே.வி.பி. க்கு நன்றி செலுத்தும் விதத்தில் பசில் இராஜபக்ஷ கருத்துத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி, அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க
சனிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "யூ.என்.பி. வெற்றிபெற்றிருந்தால் அது புலிகளுக்கு எதிரான
பாதுகாப்புப் படைகளின் தற்போதைய பிரச்சாரத்தில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். பெருங்குழப்பமும்,
அரசியல் ஸ்திரமின்மையும் இருந்திருக்கும். மற்றும் அது எதிரிக்கும் முன்னேற்றகரமானதாக இருந்திருக்கும். குறிப்பாக வெற்றிகரமான
இராணுவப் பிரச்சாரம் பற்றிய நோக்கில், ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்தும் ஜே.வி.பி. யின் விருப்பம், வரவுசெலவுத்
திட்டத்தை தோல்வியில் இருந்து தப்பவைத்து, அதன் மூலம் அரசாங்கத்தை தம்முன் மண்டியிட வைத்துள்ளது."
அமரசிங்கவின் அறிக்கை பல பகுதிகளை பேசுகிறது. இந்தக் கட்சி யுத்தத்தை உக்கிரமாக்கவும்
முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரப்பாட்டையும் இலங்கை அரசையும் பாதுகாக்கவும் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. "முதலில் தாய்நாடு"
என்ற ஜே.வி.பி. யின் நீண்டகால பேரினவாத சுலோகத்தை அமரசிங்க சாதரணமாக மீண்டும் உச்சரித்தார். 24
ஆண்டுகால இனவாத யுத்தத்தில் தமது உயிர்களையும் வாழ்க்கைத் தரத்தையும் அர்ப்பணிக்கத் தள்ளப்பட்டுள்ளவர்கள்,
உழைக்கும் மக்களும் அவர்களின் பிள்ளைகளுமே ஆவர்.
ஜே.வி.பி. யின் நிலைப்பாடானது வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை பாராட்டி
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட பேரினவாத பத்திரிகை அறிக்கையின் பாதையில் முழுமையாக பயணிக்கின்றது. "வரவுசெலவுத்
திட்டத்தில் அரசாங்கம் தோல்வியடைவதைக் காண பெரும் விருப்பங்கொண்டிருந்தது பயங்கரவாத தலைவர் வே. பிரபாகரனை
(புலிகளின் தலைவர்) தவிர வேரும் யாருமல்ல. பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள், துரோக அரசியல்வாதிகள் மற்றும்
ஊடக மோசடிக்காரர்களதும் தோல்வியானது சமாதானத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் நிச்சயமாக ஒரு
பெரும் வெற்றியாகும்," என அது பிரகடனம் செய்துள்ளது.
வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் ஜே.வி.பி. யின் தீர்மானம், தொழிலாளர்கள்
மத்தியில் அதன் முகத்திரையை கிழித்துள்ளது. வாக்கெடுப்பை புறக்கணிப்பதற்கு தீர்மானிப்பதற்கு முன்னதாக டிசம்பர் 11
அன்று, இலங்கை தபால் ஊழியர் சங்க ஆண்டுக் கூட்டத்தில் பேசிய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்
காந்த, இராஜபக்ஷவின் அரசாங்கம் "மிகவும் மோசடியானது, திறமையற்றது மற்றும் இலங்கையின் அரசியல் வரலாற்றில்
இல்லாத கொடுமையான ஆட்சியை அது நடத்துகிறது. உச்சி முதல் அடிவரை அனைத்து உயர்மட்டத்தினரும்
மோசடிக்காரர்களும் தவறாக நிர்வாகம் நடத்துபவர்களுமாவர்" என உணர்ச்சி கிளம்ப பேசினார்.
வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் பலவீனமாகியுள்ள ஜே.வி.பி. யிலேயே
அரசாங்கம் இப்போது தங்கியிருக்கின்றது. எவ்வாறெனினும், பின்வாக்குவதற்குப் பதிலாக, ஜே.வி.பி. அதன் "முதலில்
தாயகம்" என்ற அதன் இனவாத பிரச்சாரத்தை உக்கிரமாக்கும். மற்றும் ஜே.வி.பி. கடந்த காலத்தில் செய்ததைப்
போலவே, யுத்தத்தை எதிர்க்கும் எவருக்கும் எதிராக அச்சுறுத்தல்கள் மற்றும் சரீர தாக்குதல்களையும் முன்னெடுக்கத்
தயங்கப் போவதில்லை. |