World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Students need a socialist perspective and a turn to the working class பிரான்ஸ்: மாணவர்களுக்கு ஒரு சோசலிச முன்னோக்கும், தொழிலாள வர்க்கத்தின்பால் திரும்புதலும் அவசியம் By the editorial board பல மாத முற்றுகைகள், போலீசுடன் மோதல்கள் இருப்பினும், பிரெஞ்சு பல்கலைக் கழகங்களை சீர்திருத்தும் பெக்கிரஸ் சட்டம் (La Loi Pécresse) நீக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த இயக்கம் இப்பொழுது முன்னேற்றம் இல்லாமல் தேக்கம் கண்டுவிட்டது. சட்டம் நடைமுறையில் இருப்பதுடன், கிறிஸ்துமஸ் விடுமுறைகள் தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலான மாணவர் முற்றுகைகள் முடிந்து விட்டன அல்லது கட்டாயமாக அடக்கப்பட்டுவிட்டன. சட்டத்தை எதிர்க்கும் மாணவர்களை எதிர்கொண்டுள்ள அடிப்படைக் கேள்வி இதுதான்: சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை எந்த அரசியல் அடிப்படையில் தொடர முடியும்? ஆகஸ்ட் விடுமுறையின்போது இயற்றப்பட்ட சட்டம் பல்கலைக் கழகங்களுக்கு தங்கள் சொத்துக்கள், வரவு செலவுத் திட்டம், பணியாளர்களை தேர்ந்தெடுத்தல், பாடத்திட்டங்களை வடிவமைத்தல், பெருவணிகத்துடன் பங்கு கொள்ளுதல், தனியார் பெருநிறுவனங்களில் இருந்து கூடுதலான நிதி பெறுதல் ஆகியவற்றை நிர்வகிக்க கூடுதலான அதிகாரங்களை கொடுத்துள்ளது. பல்கலைக் கழகங்களின் தலைவர்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் கட்டுப்பாடு, வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் அதிகாரம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு பல்கலைக் கழகங்களில் கூடுதலான தனியார் முதலீடு செய்யும் உரிமை அளிக்கப்பட்டு, அதையொட்டி பல்கலைக் கழகம் தனியார் வணிக நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் திட்டமிட்ட ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிராக இரயில்வே தொழிலாளர்கள் சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்களை நடத்திய நேரத்தில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாணவர்கள் நடத்திய வேலை நிறுத்தங்களும், பாதிக்கும் மேலான பல்கலைக் கழகங்களில் பாதிப்பை ஏற்படுத்தின. பல்கலைக்கழக கட்டிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் ஆக்கிரமித்து வகுப்புக்கள் நடைபெறாமல் போயின. பிரான்சில் உள்ள 85 பல்கலைக் கழகங்களில் 50க்கும் மேலானவை மாணவர்கள் பேரவையை (Assemblées Générale) கூட்டின; சட்டம் அகற்றப்படவேண்டும் என்று 30 பல்கலைக் கழகங்கள் வாக்களித்தன. நாட்டின் மிகப் பெரிய மாணவர் சங்கமான, பிரெஞ்சு பல்கலைக்கழக மாணவர் சங்கக் கூட்டமைப்பு (UNEF) எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே இதில் தலையிட்டது. சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள இந்த அமைப்பு ஜூலை மாதத்திலேயே முதுநிலை மாணவர்களைப் பொறுத்தவரையில் தேர்ந்தெடுக்கும் முறை இருக்காது என்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியிடம் இருந்து "உறுதிமொழிகளை" பெற்ற அளவில் சட்டத்திற்கான எதிர்ப்பை கைவிட்டது. உயர்கல்விக்கு இன்னும் கூடுதலான நிதியுதவி வேண்டும் என்று அரசாங்கத்துடன் UNEF பேச்சு வார்த்தையை நடத்தியது; அதையொட்டி மாணவர்கள் பொது மன்றங்கள் (AGs) ஒரு தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தன, அரசாங்கத்துடன் எவ்வித பேச்சு வார்த்தைகளை நடத்த மறுத்துவிட்டன. போர்க்குணம் நிறைந்த SUD, "தீவிர 'இடதான'" LCR, மற்றும் அராஜகவாதக் குழுக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு பல பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான வாராந்திர கூட்டங்களை நடத்தி, சட்டம் அகற்றப்படுவதற்கு அழைப்பு விடுத்தது. இரயில்வே தொழிலாளர்கள் பற்றி மாணவர்களிடையே பரந்த பரிவுணர்வு காணப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள், மாணவர்கள் இயக்கங்களின் அமைப்புக்கள் இல்லாமலும், பெரும் ஆதரவு இல்லாத நிலையிலும், பெரும்பாலும் இரயில்வே நிலையங்களை தனியாக முற்றுகையிடும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், மிக விரைவாகப் போலீசார் அவர்களை தாக்கிக் கூட்டத்தை கலைத்து விட்டனர். மாணவர், தொழிலாளர் வேலைநிறுத்தங்களை இணைக்கத் தவறியமை இயக்கங்களின் தலைமைகளின் அரசியல் முன்னோக்குகளிலிருந்து நேரடியாக எழுந்தது. அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் மூலம் உடன்பாடு வேண்டும் எனக் கூறி இரயில் தொழிலாளர்கள் வரம்பைக் குறைக்கும் வகையில் ஒரு சில தனித்த ஒருநாள் வேலைநிறுத்தம் மட்டுமே செய்ததின் மூலம் தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களது போராட்டங்களை ஒருங்கிணைப்பதை எதிர்த்தன. மேலும் அவை இரயில் நிலையங்களை முற்றுகையிட விரும்பிய மாணவர்களுக்கும் எவ்வித உதவியையும் கொடுக்கவில்லை. Force Ouvrière இன் தலைவரான Jean Claude Maily, நவம்பர் 12ம் தேதி தொலைக்காட்சி நிலையத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், "நாளை நடத்தப்படும் என்று சிலர் அறிவித்துள்ள முற்றுகைப் போராட்டம் சரியானது அல்ல என்று நான் நினைக்கிறேன்" என்றார். CGT இரயில் தலைவரான Didier Le Reste இரயில் நிலைய முற்றுகைகளை எதிர்த்து, "அவை பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்" என்று கூறினார். மேலும் நவம்பர் 2ம் தேதியன்று UNEF தலைவர் புருனோ ஜூலியார்ட் UNEF இரயில்வே முற்றுகைகளுக்கு "ஆதரவைக் கொடுக்கவில்லை" என்றும் அறிவித்துவிட்டார். நவம்பர் மாத நடுவில் இரயில்வே வேலைநிறுத்தங்கள் தோல்வி அடைந்தன; இதையடுத்து அரசாங்கம் மாணவர்கள் முற்றுகை பிரச்சினையில் கவனம் செலுத்தி அதைத் தோற்கடிக்கவும் முடிந்தது. பொருளாதாரத்தின் இரயில் மற்றும் போக்குவரத்துப் பிரிவுகள் மூடப்படும் பெரும் அபாயத்தை எதிர்நோக்கிய நிலையில், அரசாங்கம் மாணவர்களுக்கு எதிராகத் தன் சக்தியை வெளிப்படுத்த விரும்பவில்லை. இரயில் வேலைநிறுத்தங்கள் முடிந்த பின்னர், போலீசார் மாணவர்கள் முற்றுகையை வெளிப்படையாக எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்; குறிப்பாக நவம்பர் 25 அன்று, போலீஸ் வண்டி ஒன்று மோதியதில் இரு இளைஞர்கள் இறந்தபின், Villiers-le-Bel பகுதியில் ஏற்பட்ட கலகங்கள் அடக்கப்பட்டது பற்றிய செய்தி ஊடகப் பரபரப்பிற்கு பின்னர் இவ்வகை தீவிரமாயிற்று. CRS கலகப் பிரிவுப் படைகள் மற்றும் போலீசார், Paris, Grenoble, Nantes, Lyon, Montpellier, Rouen, Rennes, Amiens இன்னும் மற்ற நகரங்களிலும் பல்கலைக்கழக வளாகங்களில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மாணவர்களை படிப்படியாக வெளியேற்றினர். UNEF தலைமையும் சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு தான் கொடுத்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவையும் இரயில் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்ததும் விலக்கிக் கொண்டுவிட்டது. உயர்கல்வித் துறை மந்திரி வலெரி பெக்றஸ் இடம் மிகக் குறைந்த சலுகைகளை பெற்ற பின்னர், நவம்பர் 27ம் தேதி ஜூலியார்ட், "முக்கியமான முன்னேற்றங்கள்" ஏற்பட்டுள்ளதாகவும், பொது மன்றங்கள் அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தார். "மாணவர்களின் பயத்தை போக்குவதற்கு புதிய உத்தரவாதங்களும், பாதுகாப்புக்களும் உள்ளன." என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், "முற்றுகைகள், தடுப்புக்கள் அகற்றப்பட வேண்டும், மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளின் காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது" என்றும் அறிவித்தார்.அரசாங்கத்துடன் ஒரு அரசியல் போராட்டத்திற்கு தீவிரமாக தயார் செய்யாமல் இருந்த தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு, இன்னும் கூடுதலான முறையில் நோக்குநிலை தவறியது. Lille ல் நவம்பர் 24-25 கூட்டத்திற்குப் பின்னர், "எமது கோரிக்கைகளை அடுத்து அரசாங்கத்தை பின்வாங்கச் செய்ய முடியும்... நம்மால் பின்வாங்க நேரிடத் தேவையில்லை என்று தான் விரும்பும் வரை சார்க்கோசி கூறலாம். ஆனால் அவரும் அவருடைய அரசாங்கமும் வேலைநிறுத்தங்களால் பலவீனம் அடைந்துள்ளன. இரயில் தொழிலாளர்கள் குறிப்பாக சார்க்கோசிக்கும் அவரது கொள்கைக்கும் எதிராகப் போராடுதல் முடியும் எனக் காட்டினர்" என்று அறிவித்தார். உண்மையில் பின்னர் நிகழ்வுகள் காட்டியபடி, இரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தமை மாணவர்களை கையாளுவதற்கு அரசை சுதந்திரமாக விட்டது. தொழிலாளர்களும், மாணவர்களும் போராடலாம்; ஆனால் முழு மக்களையும் வெல்வதற்கான ஒரு அரசியல் பிரச்சாரம் இல்லாவிட்டால், அவர்கள் வெற்றிபெற முடியாது. இந்த அரசியல் முன்னோக்கு இல்லாமையானது, மாணவர்களுக்கு சலுகைகளுக்கான அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வகையில் இடம் இருப்பதாக ஒரு கடும் மிகை மதிப்பீடுடன் இணைந்து கொண்டது. உலக முதலாளித்துவ முறையில் ஏற்பட்டுள்ள மகத்தான மாறுதல்களின் அதிர்வின் காரணமாக மற்றும் அதனுள்ளேயான ஐரோப்பாவின் இடத்தை பாதித்துள்ளமையின் காரணமாக, அரசாங்கம் தன்னுடைய சீர்திருத்தங்களை கட்டாயம் செயல்படுத்த வேண்டியதாக உள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஒரு குறைப்பை எதிர்கொண்டுள்ளது; இது சீனா, இந்தியா போன்ற குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு உற்பத்தி நாடுகளின் பொருளாதாரத்தால் விளைந்த அதிகப் போட்டியினால் எழுந்த நிலைமை ஆகும். இப்புதிய சூழ்நிலையில் போட்டியிடுவதற்கு பிரெஞ்சு முதலாளித்துவம் விரும்பும் மூலோபாயம் தன்னுடைய பொருளாதாரத்தை உயர் தொழில்நுட்பத் துறைக்கு நகர்த்திக் கொள்வது ஆகும். பிரதம மந்திரியின் பொருளாதாரப் பகுப்பாய்வுக் குழு (Conseil d'analyse économique -CAE), "பூகோளமயமாக்கல்: பிரான்சின் வலிமைகள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தில் கூறுவதாவது: "பிரான்சின் ஏற்றுமதிகளில் 42 சதவிகிதம் உயர் தொழில்நுட்ப பிரிவில் உள்ளது. இதில் மூன்றில் இரு பங்குகள் விமானத் தொழில்நுட்பத்தில் உள்ளது. சீனாவை பொறுத்த வரையில் [உயர்தொழில் நுட்பம்] ஏற்றுமதி விற்பனையில் 13 சதவிகிதத்தைத்தான் பிரதிபலிக்கிறது. இது மிக முக்கியமானது ஆகும்; ஏனெனில் குறைவூதிய நாடுகளில் இருந்து வரும் போட்டிக்கு எதிராக ஒரு தடையை இது கொண்டிருக்கிறது.... பிரான்சிற்கு விருப்பத் தேர்வு ஏதும் இல்லை... சீனாவின் போட்டி மங்கி விடும் அளவிற்கு தன்னை உயர் தொழில் நுட்பப் பிரிவில் இருத்திக் கொள்ள வேண்டும்." ஆனால், உயர்தொழில் நுட்பப் பொருட்களை பொறுத்த வரையில், வளர்ச்சியில் பிரான்ஸ் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. உதாரணமாக 2004ல் R&D (ஆய்வு, வளர்ச்சித்துறை) யில் பிரான்ஸ் செலவழித்தது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.16 சதவிகிதம்தான்; இது ஜேர்மனியின் 2.49, ஸ்வீடனின் 3.7 சதவிகிதம் என்பவற்றைவிடக் குறைவானது ஆகும். 2003ல் மில்லியன் மக்களுக்கு காப்பு உரிமைப் பத்திரம் (Patent) பெற்றோர் என்பது 40.0 ஆக பிரான்சிலும், 90.5 ஆக ஜேர்மனியிலும், ஸ்வீடனில் 91.2 ஆகவும் இருந்தன. தனியார் துறையின் இந்த பலவீனத்தை ஈடு செய்வதற்கு, பிரெஞ்சு முதலாளித்துவம் பல்கலைக் கழகங்களை பணியாற்ற அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. பொருளாதாரப் பகுப்பாய்வுக் குழு (CAE) அறிக்கை, அரச ஆய்வு மையங்கள், பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு இடையே கூட்டு முயற்சிகள், "போட்டி மையங்களை" கட்டமைப்பது தேவை என்று வலியுறுத்தியுள்ளது. பாரிஸ் பகுதியில் மருத்து ஆய்வுத் தொகுப்பாக "Gsk, Ispen, Philips-Fr, Pierre Fabre, Sanofi Aventis, Servier, Siemens [State research institutes], CEA, CNRS, INRIA, INSERM, Pasteur, Curie, Roussy Institutes, மற்றும் பாரிஸ் 5,6,7, பாரிஸ் தெற்கு, மத்திய [பொறியியல்] கூடம், ENS, ESPCI இவை மறு குழுசேர்தலாவது" சுட்டிக் காட்டப்படுகிறது. இப்படி திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் மாணவர்கள்-தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஐக்கியத்திற்கான புறநிலை அடிப்படையை கொடுக்கின்றன. ஏனெனில் அவை பிரெஞ்சுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரங்களில் உறுதியான தாக்குதல்களுக்கு வகை செய்கின்றன. பல்கலைக் கழக "தன்னாட்சி" வலியுறுத்தப்படுவது, பல்கலைக் கழகங்களுக்கு இடையே சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும்; ஏனெனில் தனியார் துறையால் ஆய்வு மையங்கள் எனக் கருதப்படும் பல்கலைக் கழகங்கள் மட்டும் நிதி உதவி பெறும்; கிராமப்புற, சிறுநகர்ப்புற பல்கலைக்கழகங்கள் நலிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படும். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு உடனடி இலாபம் தராத பாடத்திட்டங்கள் நிதியம் அளிக்கப்படாத நிலையில் நலிந்து வாடும். பல்கலைக் கழகங்கள் தனியார் நிதியை நம்பியிருக்கும் கட்டாயத்தில் தள்ளுவது பெருகிய முறையில் தொழிலாள வர்க்க மாணவர்களை தவிர்க்க முடியாமல் அச்சுறுத்தும். ஏனெனில் அமெரிக்கா போல் இங்கும் மிக அதிக பயிற்சிக் கட்டண முறை அறிமுகப்படுத்தக்கூடிய நிலை வந்து விடும். அங்கு மாணவர்கள் படிப்பதற்கு கடன்கள் வாங்குகின்றனர்; பல நேரமும் பல ஆயிரக்கணக்கான டாலர்கள் என்று கட்டுப்படுத்த முடியாத அளவு கடன் அதிகரித்ததும் கல்விக்கூடங்களை விட்டு அகலுகின்றனர். ஒரு முதலாளித்துவ அடிப்படையில் உயர் தொழில்நுட்ப தொழிற்துறை வளர்ச்சி என்பது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை தாக்காமல் வெளிவர முடியாது. உதாரணமாக பிரான்சில் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலதனத்தை ஈர்ப்பதற்காகவும் சர்வதேச ரீதியாக போட்டித்தன்மை மிக்கதாக இருக்கவும், அவை மருந்துகள், மருத்துவ வசதிக்கான கட்டணங்கள் ஆகியவற்றை வியத்தகு அளவிற்கு, அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து இவற்றில் உள்ள தரத்திற்கு அதிகரிப்பது தேவைப்படும். இதற்கு செல்வந்த முதலீட்டாளர் வர்க்கத்தின் வளர்ச்சியும் கூட தேவை. அதாவது, சமூகத்தின் வளங்கள் தொழிலாளர்களிடம் இருந்து எடுக்கப்பட்டு, மாற்றப்படுவதும் சமூக சமத்துவமின்மை அதிகரிப்பதும் ஆகும். CAE அறிக்கை கூறுவதாவது: "பிரான்சில் மிகக் குறைவான முதலீட்டு முதலாளிகள், அதாவது வணிக தேவதைகள்தான் உள்ளனர். (இங்கிலாந்தில் 60,000 என்றால், இங்கு 600 என்றுதான் எண்ணிக்கை உள்ளது)." தங்கள் போராட்டங்களை முன்னேற்றுவிப்பதற்கு பிரெஞ்சு மாணவர்கள் தொழிலாள வர்க்கத்திடம் கட்டாயம் திரும்ப வேண்டும். இலாப நோக்கத்தால் உந்தப்படும் ஆளும் வர்க்கம் பல்கலைக் கழகங்களை குறி வைப்பதை எதிர்க்கும் முறையில் மாணவர்களும் தொழிலாளர்களும் திட்டமிட்ட வகையில், ஜனநாயக முறையில், சர்வதேச அளவிலான வளங்களை சமூக தேவைக்கு பயன்படுத்துவதற்கான ஒரு முன்னோக்கை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும். அத்தகைய முன்னோக்கு, சர்வதேசரீதியாக புரட்சிகர மார்க்சிச மரபியம் புத்துயிர்பெறலை சார்ந்து இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் நாம் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (ISSE), நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) ஆகியவற்றின் பகுதிகளை பிரான்சில் கட்டிமைக்குமாறு அழைப்பு விடுகிறோம். |