World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government pulls out of 2002 ceasefire agreement

இலங்கை அரசாங்கம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொண்டது

By Wije Dias
9 January 2008

Back to screen version

இலங்கை அரசாங்கம், இரண்டு ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை முன்னெடுத்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002ல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான அறிவித்தலை ஜனவரி 2ம் திகதி விடுத்தது. இந்த முடிவானது புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதை இலக்காகக் கொண்ட மோதல்களை மேலும் உக்கிரப்படுத்துவதற்கு களம் அமைப்பதோடு சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் 25 ஆண்டுகால மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காண்பதற்குமான வாய்ப்புக்கு விளைபயனுடன் முடிவுகட்டுகிறது.

அரசாங்கம் கடந்த வாரம் அதன் முடிவை கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு அறிவித்தது. யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்த இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தலைமைவகித்து சமாதான முன்னெடுப்புகளுக்கும் அனுசரணை செய்த நோர்வே, இப்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்காக பொதிகளைத் தயார்செய்து கொண்டிருக்கின்றது. இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இருக்கவேண்டிய 14 நாள் இடைவெளி ஜனவரி 16ம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அன்றுடன் யுத்த நிறுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரும்.

வட இலங்கையில் ஏற்கனவே மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. கடந்த ஐந்து நாட்களில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் 94 புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் நான்கு படையினரை இழந்திருப்பதாகவும் இராணுவம் கூறிக்கொள்கின்றது. உயிரிழந்தவர்களில் ஒருவர் புலிகளின் புலணாய்வுத்துறை தலைவர் எனக் கூறப்படும் கேனல் சார்ள்ஸ் என்றழைக்கப்படும் சன்முகநாதன் ரவிசங்கராவார். நேற்று, தேசத்தைக் கட்டியெழுபபும் இலங்கை அமைச்சர் தா.மு. தசநாயக்க, கொழும்புத் தலைநகருக்கு அருகில் அவரது வாகனத்தை இலக்காகக் கொண்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலை பெரும்பாலும் புலிகளே மேற்கொண்டிருக்கக் கூடும்.

இலங்கை ஊடகங்களின்படி, ஜனவரி 2 நடந்த அமைச்சரவை கூட்டத்தில் யுத்த நிறுத்தத்தை இரத்து செய்யும் பிரேரணையை பிரதமர் ரட்னசிரி விக்கிரமநாயக்கவே முன்வைத்துள்ளார். அன்றைய தினம் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்கு உடனடியாக புலிகளின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. விக்கிரமநாயக்கவால் இந்த குண்டுவெடிப்பு சுட்டிக்காட்டப்பட்டதற்கும் மேலாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இந்த முடிவுக்கு உண்மையான விளக்கங்கள் எதையும் வழங்கவில்லை. அரசாங்க பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, யுத்த நிறுத்தம் "இனிமேலும் நடைமுறைக்குரியதல்ல" என சாதாரணமாக கூறிவிட்டார்.

யுத்த நிறுத்தம் கடதாசியில் மட்டுமே உள்ளது மற்றும் அது "வேடிக்கையானது" என டிசம்பர் 30 வெளியான சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய இராஜபக்ஷ, யுத்த நிறுத்தம் கவிழ்ந்தமைக்கு புலிகள் மீது வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். தனது சகோதரர் ஜனாதிபதியான போது, "யுத்த நிறுத்த உடன்படிக்கை 3,000 தடவைகள் மீறப்பட்டுள்ளதோடு புலிகள் செய்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் சமாதானத்தை நாடவேயில்லை. அவர்கள் செய்தது எல்லாம் யுத்த நிறுத்த காலத்தில் தமது இராணுவத்தையும் மற்றும் தாக்குதல் திறனையும் பலப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்ததே," என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

யதார்த்தத்தில், யுத்தநிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிய அரசாங்கம் எடுத்த முடிவு என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அத யுத்தத்தை நாடியதால் குவிந்துவந்துள்ள சமூக மற்றும் அரசியல் பதட்ட நிலைமைகளுக்கான அதன் பிரதிபலிப்பே ஆகும். சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான மோதல்களை உக்கிரமாக்கியதோடு உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதன் பேரில் தமிழர் விரோத உணர்வுகளை கிளறிவிட்டதுடன் அடக்குமுறை மற்றும் பொலிஸ்- அரச நடைவடிக்கைகளை நாடுவதையும் நியாயப்படுத்தினார்.

இராஜபக்ஷவின் புதிய வரவுசெலவுத் திட்டத்தைச் சூழ்ந்துகொண்ட கூர்மையான அரசியல் நெருக்கடிகள் யுத்த நிறுத்தத்தை இரத்து செய்வதற்கான உடனடி தூண்டுதலாக இருந்தது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு 167 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மூன்று மடங்காகும். யுத்தத்திற்கு செலவிடுவதற்காக மேலும் பொருளாதார சுமைகளை திணிப்பதற்கு எதிரான பரந்த எதிர்ப்பின் அழுத்தத்தின் கீழ் ஆட்டங்கண்டுபோன, அதன் சொந்த கூட்டணியின் உறுப்பினர்களே எதிர்ப்பதாக அச்சுறுத்திய நிலையில், டிசம்பர் 14 நடக்கவிருந்த வரவுசெலவுக்கான இறுதி வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைவதற்கான வாய்ப்பை எதிர்கொண்டது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்தரப்புக்கு மாறியது. ஸ்ரீ.ல.சு.க. ஸ்தாபகத் தலைவரின் மகனான அனுர பண்டாரநாயக்கவின் இராஜினாமாவில் வெளிப்பட்டவாறு இராஜபக்ஷவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே எதிர்தரப்புக்கு மாறுவதற்குத் தாயாராகிக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம், ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருக்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), கிராமப்புற ஏழைகள் மத்தியில் தமது ஆதரவை பெருக்கிக்கொள்வதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக சமிக்ஞை செய்தது.

எவ்வாறெனினும், கடைசி நிமிடத்தில், ஜே.வி.பி. ஜனாதிபதியின் இன்னுமொரு சகோதரரான பசில் இராஜபக்ஷவுடன் பேசிய பின்னர் வாக்களிப்பை புறக்கணித்ததோடு வரவு செலவுத் திட்டம் நிறைவேற அனுமதித்தது. அந்த பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் வெளியிடப்படாத அதே வேளை, ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுத்து புலிகளை அழிக்காமைக்காக அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஜே.வி.பி., தொடர்ச்சியாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்தது. அந்த கோரிக்கைகள் அனைத்தும் வரவு செலவுத் திட்டத்தின் தாக்கத்தை சீர்செய்வதற்குப் பதிலாக, யுத்தத்தை உக்கிரமாக்குவதுடன் தொடர்புபட்டவையாகும். யுத்தநிறுத்தத்தை இரத்து செய்தல், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவை வெளியேற்றுதல் ஆகிய இரு மிகவும் குறிப்பிடத்தக்க கோரிக்கைகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய சிங்கள பேரினவாதக் கும்பல்களைப் போல், நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவும் புலிகளுக்கு சார்பாக நடந்துகொள்கின்றன என்ற தமது குற்றச்சாட்டின் அடிப்படையில் கசப்பான விமர்சனங்களை ஜே.வி.பி. யும் முன்வைத்தது.

நீண்டகால செயற்பாடு

யுத்த நிறுத்தம் முறிந்து போனமை, தமது பிற்போக்கு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கு அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பகுதியும் இலாயக்கற்றது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. 2000ம் ஆண்டில் இராணுவம் புலிகளிடம் பெரும் பின்னடைவுகளை சந்தித்த பின்னரும் நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக 2001ல் பொருளாதாரம் கீழ்நோக்கிய வளர்ச்சியை கண்ட பின்னருமே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) 2002 பெப்பிரவரியில் யுத்த நிறுத்தத்தைக் கைச்சாத்திட்டது. செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவில் நடந்த தாக்குதலையடுத்து, புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" தமது நிபந்தனைகளின்படி "பயங்கரவாத" புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளும் சிறந்த வாய்ப்பாக ஆளும் தட்டின் பகுதிகள் கண்டன. உடனடி வெற்றியாக, ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து யூ.என்.பி. யும் அதன் பங்காளிகளும் பொதுத் தேர்தலில் வென்றதோடு சமாதானப் பேச்சுக்களின் முன்னோடியாக யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டது.

புலிகளுடனான அதிகாரப் பரவலாக்கல் கொடுக்கல் வாங்கல்களுக்கான உந்துதல் என்பன சாதாரண உழைக்கும் மக்கள் மீதான யுத்தத்தின் தாக்கத்தையிட்டு ஏற்பட்ட கவலையினால் உருவானது அல்ல. அதற்கு அப்பால், 1983ல் யுத்தத்தை முன்னெடுத்தமைக்குப் பொறுப்பான யூ.என்.பி., பெரும் வர்த்தகத் தட்டினரைப் பிரதிநிதித்துவம் செய்தது. இந்தப் பெரும் வர்த்தகத் தட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊள்ளீர்ப்பதற்கும் மற்றும் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், அரும்புவிட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தியுடன் இலங்கையையும் இணைப்பதற்கும் இந்த யுத்தம் ஒரு தடையாக இருப்பதாகக் கணித்தன. ஆயினும், சுதந்திரத்தில் இருந்தே இலங்கை முதலாளித்துவம் தமிழர் விரோத பேரினவாதத்தை நாடுவதிலேயே தங்கியிருக்கின்ற நிலையில், ஆரம்பத்திலிருந்தே ஆளும் அரசியல் வழிமுறையுடன் சமாதானப் பேச்சுக்கள் மோதிக்கொண்டன. பேச்சுவார்த்தைகளில் புலிகளின் நிபந்தனைகளுக்கு சரணடைவதன் மூலம் "தேசியப் பாதுகாப்பை கீழறுப்பதாகவும்" தேசத்தைப் பிளவுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டிய ஸ்ரீ.ல.சு.க. வின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் ஜே.வி.பி. யினதும் தாக்குதல்களை யூ.என்.பி. உடனடியாக எதிர்கொண்டது.

இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜே.வி.பி. மற்றும் இன்னுமொரு சிங்கள அதிதீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடனும் அணிசேர்ந்து ஒரு குறுகிய வெற்றியைப் பெற்று விக்கிரமசிங்கவை தோற்கடித்தார். மஹிந்த சிந்தனை என பெயரிடப்பட்டிருந்த அவரது தேர்தல் விஞ்ஞாபனம், யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்தல் மற்றும் இராணுவத்தை பலப்படுத்துதல் உட்பட ஜே.வி.பி. யின் பல கோரிக்கைகளை இணைத்துக்கொண்டிருந்தது. இராஜபக்ஷ சமாதானத்தை விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் அதேசமயம், அவரது வேலைத்திட்டம் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கான தெளிவான தயாரிப்பாக இருந்தது.

சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மேற்பார்வை செய்யும் பெரும் வல்லரசுகளின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதன் பேரில் அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கு பெயரளவில் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்தது. திடீரென யுத்தத்திற்குத் திரும்புவது வெகுஜன எதிர்ப்பை கிளறிவிடும் என்பதையிட்டும் இராஜபக்ஷ கவனமாக இருந்தார். அதே சமயம், இராணுவத்தின் மீதான பிடி கட்டவிழ்த்துவிடப்பட்டதோடு ஏறத்தாழ உடனடியாகவே ஆத்திரமூட்டல்கள் தொடங்கின. கிழக்கு நகரான மட்டக்களப்பில் 2005ம் ஆண்டு நத்தார் பண்டிகை நள்ளிரவு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது புலிகளுக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். 2006 ஜனவரியில், தமது பல்கலைக்கழக தேர்வுப் பரீட்சையில் சித்தியெய்திய மகிழ்ச்சியுடன் இருந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் திருகோணமலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரு விவகாரங்களிலும், சூழ்நிலையானது இராணுவத்தினதும் அதனுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படை குழுவினதும் தொடர்பை பலமாக சுட்டிக்காட்டின.

சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையளித்த இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும் சமாதானப் பேச்சுக்களுக்கு புத்துயிரளிக்க எடுத்த முயற்சிகளும் விரைவில் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டது. 2006 பெப்பிரவரியில் ஜெனீவாவில் நடந்த ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருப்பி எழுதும் அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரதிபலனாக, புலிகள் பேச்சுக்களில் இருந்து வெளியேறுவதாக அச்சுறுத்திய போது ஏறத்தாழ அது கவிழ்ந்தே போனது. இரண்டு மாதங்களின் பின்னர், யுத்தநிறுத்தத்தை கடைப்பிடிப்பதை மீளாய்வு செய்வதற்காக ஒஸ்லோவில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும், அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் குழுவில் ஒரு அமைச்சரவை அமைச்சரைக் கூட அனுப்பாததன் மூலம் அக்கூட்டத்தை விளைபயனுடன் கீழறுத்ததை அடுத்து, அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னமே தோல்விகண்டது. அதே சமயம், புலிகளை பலவீனப்படுத்தும், தமிழ் மக்களை அச்சுறுத்தும் மற்றும் புலிகளை எதிர்ச்செயலாற்றத் தூண்டுவதையும் இலக்காகக் கொண்ட இரகசிய ஆத்திரமூட்டல் யுத்தத்தை இராணும் தொடர்ந்தது.

பெரும் வல்லரசுகளின், குறிப்பாக வாஷிங்டனின் மெளனமான ஆதரவால் இராஜபக்ஷ மேலும் ஊக்கமடைந்தார். வாஷிங்டன் புலிகளிடம் இருந்து விட்டுக்கொடுப்புகளை கோரிய அதே வேளை, இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் மீது குருட்டுப் பார்வையை செலுத்தியது. புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியமும் 2006 மே மாதம் புலிகளை "பயங்கரவாத அமைப்பாக" உத்தியோகபூர்வமாக முத்திரைகுத்தி, ஐரோப்பாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புலிகளுக்கு இருந்த கணிசமான அரசியல் மற்றும் நிதி ஆதரவுக்கு குழிபறித்தது.

ஜூலை இறுதியில், கிழக்கில் புலிகளில் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியமான மாவிலாறு பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக இராணுவம் முதல் தடவையாக பகிரங்கமான தாக்குதல்களை முன்னெடுத்தது. இந்தப் பிரதேசத்தில் உள்ளூர்வாசிகளுக்கு துப்புரவான குடி தண்ணீரை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்பட்ட திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தவறியதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் பேரில், புலிகள் நீர்ப்பாசன அணைக்கட்டின் மதகை மூடிய சம்பவத்தை அரசாங்கம் இறுகப் பற்றிக்கொண்டது. பயிர்கள் அழிந்து போகும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள சிங்கள விவசாயிகளுக்கு ஏற்படவுள்ள "மனிதாபிமான சீரழிவை" தடுப்பதற்கு இராணுவ நடவடிக்கை அவசியம் என இராஜபக்ஷ பிரகடனம் செய்த போதிலும், இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவுகட்ட கண்காணிப்புக் குழு எடுத்த முயற்சிகளை நிராகரித்துவிட்டார். இந்தத் தாக்குதலை முன்னெடுக்கையில், புலிகளுடன் ஒரு உடன்பாட்டைக் கண்டு மதகைத் திறப்பதற்காக அந்த இடத்திற்கு சென்றிருந்த கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பாளர்களின் உயிரையும் இராணுவம் ஆபத்தில் தள்ளியது.

சம்பூர், வாகரை மற்றும் இறுதியாக கடந்த ஜூலையில் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த தொப்பிகல பிரதேசத்தையும் கைப்பற்ற முன்னெடுத்த ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களில் மாவிலாறு இராணுவ நடவடிக்கை முதலாவதாகும். ஜூலை 19, அரசாங்கம் கிழக்கின் விடுதலை என விளம்பரப்படுத்தி ஒரு விசித்திரமான வெற்றிவிழாவைக் கொண்டாடியது. எவ்வாறெனினும், வெகுஜனங்களைப் பொறுத்தளவில் இந்த "விடுதலையானது" சாவுகைளையும் துயரங்களையும் மட்டுமே கொண்டுவந்தது. 2006 ஜூலையில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 250,000 ற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மற்றும் குழந்களும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இழிநிலையிலான அகதி முகாம்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஒரு புதிய சுதந்திர வர்த்தக வலயத்தை துரிதமாக விளம்பரப்படுத்துவதில் இருந்து அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக, எந்தவொரு கணிசமான படையெடுப்புகளையும் செய்யாமல் வடக்கில் எஞ்சியுள்ள புலிகளின் கோட்டை மீது இராணுவம் அக்கறை செலுத்தியது. கிழக்கில், கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான குழுவொன்று புலிகளில் இருந்து பிரிந்து சென்றதால் பிளவு பட்ட புலிகள் அமைப்பையே இராணுவம் எதிர்கொண்டது. அரசாங்கம் மறுப்புத் தெரிவித்த போதிலும், புலிகளைத் தாக்குவதில் கருணா குழு இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படுவதுடன் கடந்த இரு ஆண்டுகளாக கிழக்கில் நடைபெறும் பல கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் கருணா குழு சம்பந்தப்பட்டிருப்பதாக பரந்தளவில் நம்பப்படுகிறது.

சமாதான முன்னெடுப்புகளின் முடிவு

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முடிவு, சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதன் பொறிவை குறிக்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில், இதுவரை இலங்கையிலோ அல்லது அனுசரணையாளர்களிடம் இருந்தோ மீண்டும் பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கான அழைப்போ அல்லது நகர்வுகளோ இருக்கவில்லை.

2002ல் யுத்த நிறுத்தத்தை கைச்சாத்திட்ட எதிர்க் கட்சியான யூ.என்.பி. இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பாதையில் விழுந்து கிடக்கின்றது. அரசாங்கத்தின் வழியைப் பின்பற்றிய யூ.என்.பி. தேசிய அமைப்பாளர் எஸ். பி. திசாநாயக்க, "அடிப்படை யதார்த்தம்" யுத்தநிறுத்த உடன்படிக்கையை "அர்த்தமற்றதாக்கி" உள்ளது எனத் தெரிவித்த போதிலும், மோதல்களை நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை. சமாதான எதிர்பார்ப்பில் அன்றி, யுத்த நிறுத்த உடன்படிக்கை புலிகளை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பலவீனப்படுத்தும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே உடன்படிக்கையில் கைச்சாத்திட முடிவெடுக்கப்பட்டது என்ற கூற்றை அவர் பாதுகாத்தார். "தனியான அரசு என்ற தமது முந்தைய நிலைப்பாட்டுக்குப் பதிலாக 'சமஷ்டியை' புலிகள் ஏற்றுக்கொண்டது போல், சமாதானப் பேச்சுக்கள் ஊடாக நாங்கள் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்கள் உள்ளன. மேலும், யுத்த நிறுத்த காலத்தின் போது கருணா குழுவும் புலிகளில் இருந்து விலகியது," என திசாநாயக்க பிரகடனம் செய்தார்.

அரசாங்கம் யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறியதையிட்டு புலிகள் இதுவரையும் உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் விடுக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, இந்த அல்லது அந்த பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்கிக் கொள்வதே அதன் முன்நோக்காக இருந்தது. புலிகள் 2002ல் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதோடு 2002ல் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமது நீண்டகால கோரிக்கையான "தமிழீழ" கோரிக்கையை உத்தியோகப்பூர்வமாக கைவிட்டனர். புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம், குறிப்பிடத்தக்க சுயாட்சியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண அரசாங்கத்தை உருவாக்குவதன் பிரதியுபகாரமாக, "புலிப் பொருளாதாரத்தை" உருவாக்குவதற்காக, அதாவது சுதந்திர சந்தை சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்காக கொழும்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வாக்குறுதியளித்தார். பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்து போனதில் இருந்து, அரசாங்கத்தை மீண்டும் சமாதான மேசைக்கு தள்ளுவதற்காக புலிகள் "சர்வதேச சமூகத்திடம்" வேண்டுகோள் விடுக்குமளவிற்கு இறங்கிவர வேண்டியதாயிற்று.

சமாதான முன்னெடுப்புகள் சிதைந்து போவதற்கான மிகவும் கூறத்தக்க அறிகுறி என்னவெனில், மோதலுக்கு முடிவுகட்டுவதற்காக "சர்வதேச சமூகம்" எந்தவொரு ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியையும் மேற்கொள்ளாமையே ஆகும். ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் அலுவலகம் பரிதாபமாக விடுத்துள்ள அறிக்கையொன்றில், அரசாங்கத்தின் முடிவையிட்டு தான் வருந்துவதாகவும் வன்முறைகள் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்ற நிலையில் யுத்த நிறுத்தத்தை இரத்து செய்தமை தொடர்பாக "ஆழ்ந்த கவலை" அடைந்திருப்பதாகவும் பிரகடனம் செய்தது. ஜப்பான், பிரிட்டன், கனடா மற்றும் இந்தியா போன்ற அனைத்து நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்ட போதிலும், இலங்கை அரசாங்கத்தை கண்டனம் செய்வது ஒருபுறமிருக்க அதனை விமர்சிக்கக் கூடத் அவை தவறியுள்ளதோடு சமாதான முயற்சிகளை புதுப்பிக்குமாறு அழைப்பு விடுக்கவில்லை.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் சேன் மெக்கோர்மக், "இலங்கையின் மோதலுக்கு சமாதானத் தீர்வை நிலைநிறுத்துவதை மேலும் கடினமாக்கும்" தீர்மானத்தால் அமெரிக்கா "குழம்பிப்போயுள்ளதாக" சாதாரணமாகத் தெரிவித்தார். மெளனமான மற்றும் பாசாங்குத்தனமான பிரதிபலிப்புகள் கடந்த ஆறு ஆண்டுகள் பூராவும் அமெரிக்காவின் சாதனைகளின் ஒரு சிறு பகுதியாகும். 2002-03 சமாதானப் பேச்சுக்களுக்கு புஷ் நிர்வாகம் ஆதரவளித்தது இலங்கை மக்களின் நிலைமை தொடர்பான கவலையினால் அல்ல. மாறாக, அமெரிக்காவின் பொருளாதார மூலோபாய நலன்கள் பரந்தளவில் விரிவாக்கப்பட்டுள்ள இந்தியா உட்பட்ட தெற்காசியாவில் ஸ்திரமின்மையில் செல்வாக்குச் செலுத்தும் யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்கேயாகும். கொழும்பின் நிபந்தனைகளின்படி புலிகளை கொடுக்கல் வாங்கல்களுக்குத் தள்ளுவதில் தோல்விகண்ட போது, வாஷிங்டன் இராஜபக்ஷ அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு இரகசியமாக ஆதரவளிக்கவும் இராணுவத்திற்கு உதவவும் செய்தது.

பெரும் வல்லரசுகள் அனைத்தும், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா, இலங்கை வெகுஜனங்களுக்கு சாவையும் அழிவையும் துரிதமாக்கும் யுத்தத்தை மீண்டும் தொடங்கியதற்கு பொறுப்பாளியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved