World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tamil opposition MP assassinated in Sri Lankan capital

இலங்கை தலைநகரில் எதிர்க் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார்

By K. Ratnayake
7 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 1ம் திகதி எதிர்க் கட்சி அரசியல்வாதி தியாகராஜா மகேஸ்வரன் பட்டப் பகலில் மத்திய கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து கொல்லப்பட்டார். அரசாங்கமும் பொலிசும் இந்தக் கொலைக்கான பொறுப்பை உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்த முயற்சித்த போதிலும், இந்தக் கொலையில் ஆயுதப் படைகளுடன் சம்பந்தப்பட்ட தமிழ் துணைப்படைக் குழுக்களின் நடவடிக்கைக்குரிய தரக் குறியீடு உள்ளது.

நேரடியாகக் கண்ட சாட்சிகளின்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) பாராளுமன்ற உறுப்பினர் சுமார் காலை 10 மணியளவில் இந்து கோவிலில் பிரார்த்தனைக்காக வருகை தந்திருந்த போதே துப்பாக்கிதாரி அவரை சுட்டான். காயமடைந்த அவர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஏனைய 12 பேருடன் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் காயமடைந்ததோடு இன்னுமொருவரும் கொல்லப்பட்டார்.

பொலிசாரின் படி, வசந்தன் என்ற தமிழ் பெயருடைய துப்பாக்கிதாரி, மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் திருப்பிச் சுட்டதில் காயமடைந்துள்ளதோடு இப்போது தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, இந்தப் படுகொலை புலிகளின் செயலே என்பதை ஒப்புவிக்க "தக்க ஆதாரங்கள்" இருந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சந்தேக நபர் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதையும் அவர் குருநகரில் இருந்து வந்தார் என்பதையும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறிக்கொண்டார். இரு நாட்களுக்குள், குருநகரில் உள்ள சந்தேக நபரின் பெற்றோர் உட்பட 12 பேரை பொலிஸ் கைதுசெய்துள்ளது.

பொலிசாரின் கூற்றுக்களை ஒப்புவிக்கும் ஆதாரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைப் படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியும் கடத்தல்கள் மற்றும் கொலைகளுக்கு வழமை போல் புலிகள் மீதே பாதுகாப்புப் படைகள் குற்றஞ்சாட்டி வந்துள்ளன. இந்த வழக்கில் ஆதாரங்களின் கிழிசல்கள் அரசாங்கப் பேச்சாளர் கெஹலியே ரம்புக்வெல்ல முன்வைத்த வாதங்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரி மைக்ரோ கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பதாலும் அத்தகைய ஆயுதங்களை புலிகளே பயன்படுத்தி வருவதாலும் இந்தக் கொலையில் புலிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கொலைக்கு பொறுப்பேற்க மறுத்து புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதோடு "தமிழரின் குரலை அடக்குவதற்காக" மஹேஸ்வரனைக் கொலைசெய்துவிட்டதாக இராணுவத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளனர். புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை மெளனமாக ஆதரிக்கும் யூ.என்.பி., இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக இராணுவத்தின் மீது குற்றஞ்சாட்டாத போதிலும், மகேஸ்வரனின் பாதுகாப்பை குறைத்தமைக்காக அரசாங்கத்தை விமர்சித்தது.

கடந்த காலத்தில், ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் புலிகளின் தாக்குதலை எதிர்ப்பதற்காக பெயரளவிலேனும் உத்தியோகபூர்வமாக வழமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. எவ்வாறெனினும், எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக தமிழர்கள் மற்றும் யுத்தத்தை எதிர்க்கும் எவரும், அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட துணைப்படைகள் மற்றும் குண்டர் கும்பல்களிடம் இருந்து உட்பட ஏனைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். ஜனாதிபதி இராஜபக்ஷவின் கீழ், பொலிஸ் மெய்ப் பாதுகாவலர்களை அகற்றுவதானது அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் பயமுறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஜூன் 3ம் திகதி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அண்மைய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அரசாங்கம் நெருக்குவதாக மகேஸ்வரன் தன்னிடம் முறையிட்டதாகத் தெரிவித்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்காக பிரமாண்டமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 14ம் திகதி அவர் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்த பின்னர், மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு 16ல் இருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டது. அவர் தனியார் நிறுவனத்தில் இருந்து ஐந்து மெய்ப்பாதுகாவலர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளத் தள்ளப்பட்டார்.

இன்னுமொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான மேலக மக்கள் முன்னணியின் மனோ கனேசன், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததை அடுத்து அவரும் இதை நிலைமையை எதிர்கொண்டார். மரண அச்சுறுத்தல்களின் காரணமாக தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக அவர் டிசம்பர் 30 ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பாதுகாப்பு படையினருடன் சம்பந்தப்பட்டுள்ள கொலைப் படைகளின் நடவடிக்கைகள் என பரந்தளவில் நம்பப்படும் கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் அதிகரித்துவருவதற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவற்றை அம்பலப்படுத்துவதில் முன்னணியில் நின்றார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, எதிர் தரப்புக்கு சென்ற ஒரு அமைச்சரவை அமைச்சர் உட்பட நான்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பாதுகாப்பு அமைச்சு விலக்கிக் கொண்டது. கிழக்கில் மட்டக்களப்பு நகரில், அரசாங்கத்துக்கு சார்பான ஒரு துணைப்படை, புலிகள்-சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறவினர்களை கடத்திச் சென்றதோடு அவர்கள் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் கடத்தியவர்களைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தியது.

மகேஸ்வரனை புலிகள் படுகொலை செய்தார்கள் என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லாத அதே வேளை, இராஜபக்ஷ அரசாங்கத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கும் கட்சிகளில் ஒன்றுக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது. வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் பேசிய மகேஸ்வரன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் துணைப்படை குழுவொன்றால் கப்பம் பெறுவதற்காக கடத்தல்கள் மேற்கொள்வது சம்பந்தமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அறிவித்தார்.

டிசம்பர் 30ம் திகதி சக்தி டீ.வி. யில் "மின்னல்" நிகழ்ச்சியில் பேட்டியளித்த போது, பாராளுமன்றம் 8ம் திகதி மீண்டும் கூடும் போது அந்த விபரங்களை அங்கு வெளியிடுவதாக தெரிவித்தார். அடுத்த நாள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ்ப்பாணக் குடாநாட்டில் இளைஞர்களைக் கொல்வதற்காக கொழும்பில் இருந்து குண்டர்களைக் கொண்டுவந்து பயன்படுத்துகிறது என மகேஸ்வரன் லங்கா நியூஸ் இணையத்திற்குத் தெரிவித்திருந்தார். ஈ.பி.டி.பி. ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருந்த போதிலும், ஆயுதப் படைகளுடன் நெருக்கமாக செயற்படும் துணைப்படையாகவும் இயங்குகிறது.

மகேஸ்வரனை கொன்றதாக கூறப்படும் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் முன்னால் உத்தியோகத்தர் ஆவார். அவர் முன்னர் மகேஸ்வரனின் பாதுகாப்பு குழுவில் கடமையாற்றியிருந்ததோடு அதற்கு முன்னர் ஈ.பி.டி.பி. தலைவர் டக்லஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு குழுவிலும் கடமையாற்றியுள்ளார். ஜனவரி 2ம் திகதி பி.பி.சி. யின் சிங்கள சேவைக்கு பேட்டியளித்த அரசாங்க பேச்சாளர் ரம்புக்வெல்ல, கொலையாளி அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தராக இருந்ததாகவும் தேவானந்தாவுக்காக சேவையாற்றியதாகவும் உறுதிப்படுத்தினார். ஆயினும் அவர் எந்தவொரு ஆதாரமும் வழங்காமல் அந்த துப்பாக்கிதாரி புலிகளின் ஒற்றனாக இருக்கலாம் என சமிக்ஞை செய்தார்.

மஹேஸ்வரனின் கொலை பரந்த ஆத்திரத்தை தூண்டிவிட்டுள்ளது. மயானம் வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்ற மரண ஊர்வலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கொலை தொடர்பாகவும், யுத்தம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத பிரச்சாரம் தொடர்பாகவும் அரசாங்கத்தின் மீது பலர் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். "மகேஸ்வரனைக் கொன்றது யார்? அரசாங்கமே பொறுப்பு" போன்ற சுலோகங்கள் அங்கு கோஷிக்கப்பட்டன.

சில செய்திகளின்படி இராணுவம் கடைகளை மீண்டும் திறக்குமாறு நெருக்கிய போதிலும் யாழ்ப்பாணத்தில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. வடக்கு நகரான வவுனியாவில், அனைவரும் முழு கடையடைப்பை நடத்திய நிலையில் அனைத்து வியாபார ஸ்தாபனங்களும் மூடப்பட்டிருந்தன. மத்திய கொழும்பின் புறக்கோட்டையில், பொலிசாரின் அச்சுறுத்தலின் மத்தியிலும் தமிழர்களுக்கு சொந்தமான அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ஜனாதிபதி இராஜபக்ஷ பொது மக்களின் ஆத்திரத்தை தணிக்கும் முயற்சியாக, ஒரு நண்பனான மஹேஸ்வரனை இழந்துவிட்டதாக பிரகடனம் செய்து அறிக்கையொன்றை வெளியிட்டார். இந்தக் கொலை பற்றி விசாரிப்பதற்காக பல குழுக்களை அமைத்துள்ளதாக பொலிஸ் அறிவித்தது. ஆனால், இதே போன்ற ஏனைய உயர் மட்டத்தினரின் கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்தவொரு முடிவையும் அவை வெளியிடத் தவறிவிட்டன.

2005 நத்தாரின் போது, கிழக்கு நகரான மட்டக்களப்பில் நள்ளிரவு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 2006ல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார். இந்த இரு கொலைகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமித்ததோடு ஜனாதிபதிக்கு அறிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், எதுவும் பிரசுரிக்கப்படவோ அல்லது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவோ இல்லை.

இரண்டு விவகாரங்களிலும், கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ஆயுதக் குழு சம்பந்தப்பட்டிருப்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டின. கருணா குழுவுடன் எந்த தொடர்பும் கிடையாது என அரசாங்கமும் இராணுவமும் மறுத்துவரும் அதே வேளை, மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்றுவரும் சாதாரணமானவர்கள் இந்த ஆயுதக் குழுவுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையிலான தெளிவான பகிரங்க உறவை விவரிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் இப்போது மகேஸ்வரனும் மிகவும் பிரபல்யமானவர்கள் மட்டுமே. இராணுவத்தால் அல்லது அதோடு சேர்ந்த துணைப்படை குழுக்களால் நேரடியாக இயக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கொலைப் படைகளின் செயற்பாட்டை பலமான முறையில் குறித்துக் காட்டும் ஒரு சூழ்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் அல்லது கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் இதனை எதிர்த்த போதிலும், உத்தியோகபூர்வ விசாரணைகள் ஏறத்தாழ கைதுகளை முன்னெடுக்கவோ அல்லது குற்றச்சாட்டுக்களை சுமத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் உள்நோக்கம், அரசாங்கத்தையும் மற்றும் ஆயுதப் படைகளையும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேனும் விமர்சிக்கும் எவரையும் அச்சுறுத்தி பயமுறுத்துவதேயாகும்.