World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Secret White House meeting plans US military escalation in Pakistan பாக்கிஸ்தானின் அமெரிக்க இராணுவ அதிகரிப்புச் செயல்களுக்கு வெள்ளை மாளிகையில் இரகசியக் கூட்டம் By Bill Van Auken புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்க இராணுவத் தலைவர்களும் உளவுத்துறை தலைவர்களும் வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் பாக்கிஸ்தானில் இராணுவக் குறுக்கீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்களை தயாரிக்கக் கூடினர் என்றும் நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது. முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோ கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து வெளிவந்துள்ள புதிய வாய்ப்பை நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்று பெயரிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோளிட்டு டைம்ஸ் தகவலைக் குறிப்பிட்டுள்ளது. டைம்ஸ்-ஆல் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரிகள் கூற்றின் படி, "ஜனாதிபதி முஷாரஃப்பின் அரசாங்கத்திற்கு வந்துள்ள அச்சுறுத்தல் தன்மை மிகப் பெரியதாக இருப்பதால் அவரும் பாக்கிஸ்தானின் புதிய இராணுவத் தலைமையும் அமெரிக்காவிற்கு இன்னும் கூடுதலான சலுகைகளை கொடுக்கக்கூடும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்களுள் சிலர் வாதிட்டனர்." வெள்ளை மாளிகையிலும், பென்டகனிலும் அதிகாரிகள் அதிகாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒரு அணுசக்தி நாடான பாக்கிஸ்தானில் அமெரிக்கர்களுக்கான விரிவாக்கப்பட்ட அதிகாரப் பொறுப்பிற்கு ஆதரவு தரும் வாய்ப்பாக கருதுகின்றனர். துணை ஜனாதிபதி செனி, வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ், படைத்தலைவர்கள் கூட்டுக்குழுவின் நிர்வாகி அட்மைரல் மைக் முல்லன், புஷ்ஷின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லி மற்றும் பல மூத்த அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இது ஒரு அறிவிக்கப்படாத கூட்டமாக இருந்தது. வெள்ளை மாளிகையும் பிற அரசாங்க பிரிவுகளும் இது பற்றி விவாதிக்க மறுத்து விட்டன. டைம்ஸ்-ன் படி, பாக்கிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படுவதில் CIA மற்றும் அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப்படைப் பிரிவுகள் எப்படி பயன்படுத்தப்படலாம் என்பதும் அடங்கியுள்ளன. உத்தியோகபூர்வமாக, பாக்கிஸ்தானில் வாஷிங்டன் 50 துருப்புக்களைத்தான் கொண்டுள்ளது, அவை பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அமெரிக்க நடவடிக்கைகளை பற்றி அறிந்தவர்கள் ஆப்கானிஸ்தான எல்லைக்கு அருகில் பழங்குடிப் பகுதியில் பாக்கிஸ்தானியர் நடத்தும் தாக்குதல்களில் இவர்கள் ஏற்கனவே பங்கு கொண்டிருந்தனர் என்று கூறுகின்றனர். மேலும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் அமெரிக்கா பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் தாலிபன் இலக்குகள் எனக் கூறப்படுபவற்றின் மீது ஏவுகணைகள், பீரங்கிப்படை மற்றும் எறிகுண்டுகளை, ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் அமெரிக்கப் படைகள் மூலம் வீசித் தாக்கவும் செய்துள்ளது. 2006ல் ஒரு நிகழ்வில் அமெரிக்கப் படைகள் மதராஸா மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் படைகளை விரட்டியடிக்கும்போது அவை எல்லையைக் கடந்தால் அவற்றை "தொடர்ந்து விரட்டுதல்" என்னும் முறையில் இஸ்லாமாபாத்தில் இருந்து முன் கூட்டிய அனுமதி இல்லாமலேயே அமெரிக்கப் படைகள் தாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தாக்குதல்கள் பாக்கிஸ்தானுக்குள் பரந்த சீற்றத்தை தூண்டியுள்ளதுடன், பழங்குடி மக்கள் வசித்து வரும் இடங்களில் இஸ்லாமிய போராளிகளுக்கு பெருகிய முறையில் ஆதரவையும் ஏற்படுத்தியுள்ளன; இப்பகுதிகளில் பஷ்டூன்கள் அதிகம் வசிக்கிறார்கள்; அண்டை ஆப்கானிஸ்தானத்திலும் இனவழியில் இவர்கள்தான் பெரும்பான்மையில் உள்ளனர். இவர்கள் எப்பொழுதுமே மத்திய அரசாங்கத்திடம் இருந்து தங்கள் சுதந்திரத்தை ஆக்கிரோஷமாக காத்து வருபவர்கள். "பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்" விரைவுபடுத்தப்படலை நியாயப்படுத்தும் நோக்கத்துடன், பூட்டோ படுகொலை அல் கொய்தாவின் செயல் என்னும் முஷாரஃப் ஆட்சியின் ஐயத்திற்குரிய கூற்றை எதிரொலிக்கும் விதத்தில் திட்டமிட்ட பிரச்சாரத்தின் வகையாக, பாக்கிஸ்தானில் அமெரிக்கத் தலையீடு பெரிதும் விரிவாக்கப்படுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரத்துடன் இணைந்து அல் கொய்தா தன்னுடைய செயல்களில் மூலோபாய நகர்வை கொண்டு பாக்கிஸ்தானின் உறுதிப்பாட்டை சீர்குலைக்க உள்ளது என்ற கருத்தும் பரப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ், "அல் கொய்தா இப்பொழுது தன் முகத்தை பாக்கிஸ்தான் பக்கம் திருப்பி, பாக்கிஸ்தானிய அரசாங்கம் மற்றும் மக்களை தாக்க விரும்புவது போல் தோன்றுகிறது" என்று கூறியது இந்த வழிவகைக்கு ஒரு உதாரணமாக உள்ளது. இதன் வெளிப்படையான நோக்கம் ஒரு மத்திய பயங்கரவாத ஆணையம் தன்து போராளிகளை பாக்கிஸ்தான் மீது குவிப்புக்காட்டு என உத்தரவிட்டது போல் காட்டுவதாகும். உண்மையில் நாட்டில் இருக்கும் பூசல்கள் பல ஆண்டுகளாகவே வளர்ந்து வருபவை ஆகும்; ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபான் அரசாங்கத்தை அகற்றுவதற்கு அமெரிக்கா ஆரம்பித்ததில் இருந்தே இவை உள்ளன, பழங்குடிப் பகுதிகளில் அமெரிக்க மற்றும் பாக்கிஸ்தானிய குறுக்கீடுகள் பல முறை நடந்ததால் தூண்டிவிடவும் பெற்றன. "பாக்கிஸ்தானிய மக்கள் மீது தாக்குதல்" என்பதை பொறுத்தவரையில், இவை பல முறையும் வாஷிங்டனின் முக்கிய நண்பரும், நாட்டு இராணுவத்தில் வலுப் பெற்றவருமான முஷாரஃப்பால்தான் செய்யப்பட்டன. பாக்கிஸ்தானுக்குள்ளேயே மக்களில் பல பிரிவினரும் அவரையும் அவருடைய இராணுவத்தையும்தான் பூட்டோ மரணத்தில் தொடர்புடையதாக பெரும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். பாக்கிஸ்தானின் எந்தப் பழங்குடி பகுதியிலும் அமெரிக்க இராணுவச் செயல் அதிகரிப்பின் மைய நோக்கமும் அல் கொய்தா பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு என்று இல்லாமல் மக்களை தாக்குவதற்கு என்றுதான் இருக்கும்; பழங்குடிப் பகுதியோ ஆப்கானிஸ்தானில் பரந்த அளவில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புக் காட்டுவோருக்கு பரவலாக பரிவுணர்வு காட்டுவதுடன் ஆப்கானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு பாதுகாப்பையும், போரிட வீரர்களையும் கொடுக்கின்றனர். அதே நேரத்தில் முஷாரஃப்பின் ஊழல் மலிந்த அடக்கு முறை ஆட்சியை முட்டுக் கொடுத்து ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளதுடன், மத்திய ஆசியாவில் அதன் புவி-மூலோபாயங்களை தொடர்வதற்கு இந்த ஆட்சியைத்தான் அமெரிக்க நிர்வாகம் பெரிதும் நம்பியுள்ளது. பாக்கிஸ்தானிய மக்களில் பெரும்பாலானவர்கள் இப்பகுதியில் அமெரிக்கருடைய கொள்கைக்கு விரோதப் போக்கு உடையவர்கள். செல்வாக்கு இழந்துள்ள முஷாரஃப்பிற்கு, அமெரிக்காதான் காப்பாளராக இருக்கிறது என்ற கருத்தும் பரவியுள்ளது. முஷாரஃப் அதிகாரத்தின்மீது வலிமையை கொள்ளுவதற்கு மாறுபட்ட வகையில்தான் அமெரிக்க கூறுக்கீடு முடிவை கொடுத்துவிடும். குறுக்கீடு ஏற்பட்டால் பரந்த சீற்றத்தையும் பெருகிய கொந்தளிப்பையும்தான் அது தூண்டிவிடும். இந்தக் காரணத்திற்காகத்தான் முஷாரஃப் அரசாங்கம் பகிரங்கமாக பாக்கிஸ்தானுக்குள் இலக்குகளை தாக்குவதற்கு தான் அமெரிக்கர்களுக்கு ஒருபோதும் அனுமதி கொடுத்திருக்கவில்லை என்றும், நாட்டிற்குள் அமெரிக்க இராணுவத்தின் தன்னிச்சை நடவடிக்கை பற்றிய பேச்சுக்கள் பொறுப்பற்றவை, ஆபத்தானவை என்றும் கண்டனம் செய்துள்ளது. இந்த வாடிக்கையான மறுப்புக்கள் மக்களை திருப்திப்படுத்த கூறப்படும் அதேவேளை, அவை பெரும் அரசியல் வெடிப்பைக் கட்டவிழ்த்துவிடும் அத்தகைய நடவடிக்கைகளின் திறன் மீதாக பாக்கிஸ்தானிய ஆட்சியின் அளவு கடந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன. கடந்த வியாழனன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் முஷாரஃப் பழங்குடிப்பகுதியில் இராணுவ நடவடிக்கை பற்றி மீண்டும் எச்சரித்தார். பூட்டோ படுகொலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று பாக்கிஸ்தானிய ஆட்சி குற்றம் சாட்டியிருக்கும் ஒரு பழங்குடித் தலைவர் பைதுல்லா மேசுத் பற்றிக் கூறுகையில் முஷாரஃப் அறிவித்தார்: "அவர் தெற்கு வஜீரீஸ்தான் பகுதியில் உள்ளார்; அந்த இடத்தில் அவரைத் தாக்குதல் என்பது ஆயிரக்கணக்கான மக்களுடன் சண்டையிடுவது போல் ஆகும்; அவரைப் பின்பற்றும் நூற்றுக்கணக்கானவர்களுடன் மோதுவது போல் ஆகும்; அதன் விளைவு பெரும் இணைச் சேதங்களை ஏற்படுத்தும்." இனவழி பஷ்டூன்களை ஏராளமாகக் கொண்டுள்ள பாக்கிஸ்தானிய இராணுவம் இப்பகுதியில் உள்ள போராளிகளுடன் நெருக்கமான பிணைப்புக்களை பல காலமாகக் கொண்டுள்ளது; ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்புடைய ஆட்சிக்கு எதிராக நடந்த CIA ஆதரவுப் போர் தொடங்கிய காலத்திலேயே இது இருந்தது; எனவே இராணுவம் எல்லைப் பகுதிகளை தடையின்றி சுடக்கூடிய பகுதிகளாக மாற்றுதற்கான வாஷிங்டனின் கோரிக்கை மீதாகப் பிளவுபட்டுள்ளது. வெள்ளை மாளிகை கூட்டங்கள் பற்றிய டைம்ஸ் கட்டுரையைத் தொடர்ந்து பல செய்தி ஊடக அறிக்கைகள் பாக்கிஸ்தானில் இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான அமெரிக்கத் தலையீட்டை நடத்துவதற்கான திட்டங்கள் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பே இருந்து வந்ததாக சுட்டிக்காட்டுகின்றன. அந்த நிகழ்வு இப்பொழுது அதைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கு உபயோகமான ஒரு போலிக்காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கச் சிறப்பு நடவடிக்கைளின் தளபதியான அட்மைரல் எரிக் ஓல்சன் ஆகஸ்ட்டில் இருந்து மூன்று தடவை பாக்கிஸ்தானுக்கு பறந்து சென்று முஷாரஃப்பையும் மூத்த பாக்கிஸ்தானிய தளபதிகளையும் சந்தித்துள்ளார்; எல்லைப்புற படைப்பிரிவின் தலைமையகத்திற்கும் சென்றிருக்கிறார்; அப்படை நாட்டின் எல்லைப் பழங்குடியினரில் இருந்து துருப்புகளை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டு தளபதி அட்மைரல் வில்லியம் பலோன் பாக்கிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி கடந்த மாதம் அமெரிக்காவின் குரலுக்கு கொடுத்த பேட்டியொன்றில் பாராட்டியுள்ளார்; அதே நேரத்தில் அமெரிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே அடையப்பட்டவிட்டது என்பது போலவும் கருத்தைக் கூறினார். "கடந்த சில மாதங்களாக நாம் பார்த்துவருவது அவர்களுடைய முறையான இராணுவப் பிரிவை எல்லைகளில் பயன்படுத்தும் விருப்பம் இருப்பதுதான்" என்று பலோன் கூறினார்; "இங்குதான் நாம் அமெரிக்கா மூலம் எழுச்சியாளர்களிடம் சமீபத்தில் பெற்ற நம்முடைய அனுபவங்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதப் பிரச்சினையில் இருந்து பெற்ற அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் உதவி புரிய முடியும் மற்றும் வழிகாட்ட முடியும். அவர்களோடு நாம் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்; அதைச் செய்வதற்கு எதிர் நோக்கியுள்ளோம்." Washington Post இன் தேசிய பாதுகாப்பு பற்றிய கட்டுரையாளர் வில்லியம் ஆர்கின், பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வந்த கட்டுரை ஒன்றில், "பாக்கிஸ்தானில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்" அமெரிக்கச் செயற்பாடுகள் அதிகப்படுத்தப்படும் என்று பென்டகன் ஆதாரங்கள் கூறியதாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்.இத்தகைய பாக்கிஸ்தானில் இராணுவத் தலையீட்டிற்கான உந்ததுலுக்கு இரு கட்சிகளின் ஆதரவும் உள்ளது என்பது சனிக்கிழமை இரவு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையே நியூ ஹாம்ப்ஷைரில் நடந்த விவாதத்தில் நன்கு விளக்கப்பட்டது. பாக்கிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படும் அல் கொய்தா இலக்குகளுக்கு எதிரான ஒருதலைப்பட்ச அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்கு முன்பு ஆதரவு கொடுத்துப் பேசிய நிலைப்பாட்டை இன்னும் கொண்டுள்ளாரா என்று கேட்கப்பட்டதற்கு, செனட்டர் பரக் ஒபாமா விடையிறுத்தார்: "முற்றிலும் அந்த நிலைப்பாட்டில் உள்ளேன்." "தலைமை தளபதி என்னும் முறையில் என்னுடைய பணி நாம் செயல்படக்கூடிய வகையில் உளவுத் தகவல்கள் வந்தால் அமெரிக்காவிற்கு தீமை செய்யக்கூடிய எவரையும் தாக்குதல் என்பதை உறுதி செய்வதுதான்" என்று மேலும் அவர் கூறினார். பின் முஷாரஃப் ஆட்சியை "நாம் இணைந்து செயல்பட்டு வரும் ஒரு நெறிமுறைகூடிய அரசாங்கம்" என்று கூறிப்பிட்டு அந்த அரசாங்கம் "ஜனநாயகத்தை கொண்டுவர முயல்கிறது" என்றும் கூறினார். ஒபாமாவின் வேட்பாளர் நியமனத்தில் முக்கிய போட்டியாளர்களான செனட்டர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் முன்னாள் செனட்டர் ஜோன் எட்வர்ட்ஸ் இருவரும் பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கைகளின் அச்சுறுத்தலை எதிரொலித்தே பேசினர். |