WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Communalism and militarism on display at Sri
Lanka's independence day celebrations
இலங்கையின் சுதந்திரத் தின கொண்டாட்டங்களில் இனவாதமும் இராணுவவாதமும் காட்சிப்படுத்தப்பட்டன
By K. Ratnayake
9 February 2008
Back to screen version
கடந்த திங்களன்று இலங்கையின் உத்தியோகபூர்வ சுதந்திரத் தின விழா, வெகுஜன ஆதரவு
அற்ற மற்றும் தொடக்கம் முதல் முடிவு வரை தேசப்பற்று ஆரவாரமும் இராணுவவாதமும் மேலாதிக்கம் செய்த ஒரு வரண்ட
விவகாரமாகியது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சி முடிவடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்னும், இனவாதம், சமூக துயரம்
மற்றும் முடிவே தென்படாத 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தைத் தவிர உழைக்கும் மக்களுக்கு வேறு எதையும் வழங்க
அரசாங்கமும் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும் இலாயக்கற்றுள்ளன.
அன்றைய தின நிகழ்வுகளுக்கு தலைமை வகித்த ஜனாதிபதி மகிஹந்த இராஜபக்ஷ, 2002ல்
கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதல்களை
மீண்டும் தொடங்கியதற்கு நேரடிப் பொறுப்பாளியாகும். இந்தக் கொண்டாட்டங்கள் தீவின் வடக்கில் மோதல்கள் மற்றும்
தலைநகரில் குண்டுவெடிப்புகளுக்கும் மத்தியிலேயே இடம்பெற்றன. கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சோதனை
நிலையங்களில் மற்றும் வீதித் தடைகளில் ஆயிரக்கணக்கான பொலிசாரும் துருப்புக்களும் நிறுத்தப்பட்டிருந்தன. "புலி
பயங்கரவாதிகளை" தேடும் சாக்குப் போக்கில் நூற்றுக்கணக்கான தமிழர்களை பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைத்திருந்தன.
மத்திய கொழும்பு ஏறத்தாழ வெறிச்சோடிக் கிடந்தது. இராணுவத் தலைமையகத்திற்கு வெளியில்
காலி முகத் திடலில் நடந்த "தேசிய விழாவில்" பங்குபற்றுவதற்காக வெளிநாட்டு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும்
பாரளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் இராணுவ உயர் மட்டத்தினருமாக அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஏறத்தாள கட்டளைகளின் கீழ் இயங்கும் அமைச்சரவை ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் மட்டுமே பார்வையாளர்களாக
இருந்தனர். படைத் தளபதிகளுடனும் பொலிஸ் மா அதிபருடனும் இராஜபக்ஷ மேடையில் இருந்தார். பாடசாலை மாணவிகள்
குழுவொன்று தேசிய கீதத்தை பாடியது.
இராணுவம் அதன் வலிமையை காட்சிப்படுத்தியது. தமது யுத்த தாங்கிகள், பல்குழல்
ஏவுகணை ஏவிகள் மற்றும் கனரக ஆட்டிலறிகளுடன் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் அணிவகுத்துச் சென்றன. காலிமுகத்
திடலுக்கு முன்னால் கடலில் கடற்படைப் படகுகள் அணிவகுத்து செல்ல விமானப்படை ஹெலிகொப்டர்களும் யுத்த ஜெட்
விமானங்களும் பறந்து சென்றன. இந்த விழாவானது அரசாங்கம் தனிமைப்பட்டிருப்பதையும் அது இராணுவத்தில்
தங்கியிருப்பதையும் மற்றும் அரசியல் ஸ்பானத்துக்கும் யுத்தத்தை விரும்பாத பெரும்பான்மை வெகுஜனங்களுக்கும் இடையிலான
பிளவையும் நாடகபாணியில் அம்பலப்படுத்தியது.
ஆளும் தட்டின் அரசியல் வங்குரோத்து இராஜபக்ஷவின் பேச்சில் சுருக்கிக் காட்டப்பட்டது.
1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து நிறைவேற்றிய ஏதாவதொரு உயர்ந்த குறிக்கோளை சுட்டிக் காட்டவோ அல்லது
1983ல் யுத்தத்தின் வெடிப்புக்கு வழிவகுத்து விவகாரங்களை அணுகவோ ஜனதிபதியால் முடியாமல் போய்விட்டது. அதற்குப்
பதிலாக, தமது அரசாங்கம் "சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்க முண்கொணர்ந்த ஒரு முக்கியமான தீர்க்கமான விடயம்
இருப்பதாகவும்" "அது தேசப்பற்றைத் தவிர வேறு ஒன்றும் அல்ல" என்றும் அவர் தற்பெருமைகொண்டார்.
ஆயினும், கொழும்பு அரசியல்வாதிகள் "தேசப்பற்றுக்கு" அழைப்புவிடுப்பதற்கும் மேலாக
புதிதாக ஒன்றும் அதில் இருக்கவில்லை. அது 1948ல் இருந்தே உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதற்காக மீண்டும் மீண்டும்
சுரண்டிக்கொள்ளப்பட்ட தமிழர்-விரோத பாரபட்சங்கள் மற்றும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தின் அர்த்தத்தையே
கொண்டதாகும். இராஜபக்ஷ வாக்குறுதியளித்தது எல்லாம், முதலில் யுத்தம் வெடிப்பதற்கு வழிவகுத்த பிற்போக்கு
இனவாதத்தை மேலும் உக்கிரமாக்குவதற்கே.
"சுதந்திரத்துக்கு அர்த்தமுள்ளதாக்குவதற்காக" இராஜபக்ஷ அரசாங்கம், ஊடகங்கள் மீது
தணிக்கைக்கு சமமான நடவடிக்கைகளை திணிக்கும் கொடுரூமான அவசராக விதிகளின் கீழ் ஆட்சி செய்வதோடு அதன்
கொள்கைகள் தொடர்பான குறிப்பாக தொழிலாளர்கள் அல்லது கிராமப்புற ஏழைகளின் எந்தவொரு கருத்துவேறுபாடு
அல்லது எதிர்ப்பையும் தேசத்துரோகத்துக்கு சமமானது என மீண்டும் மீண்டும் வகைப்படுத்துகின்றது. எதிர்க் கட்சி மீதான
மூடிமறைக்காத அச்சுறுத்தலில், "அரசியல் கட்சி வேறுபாடுகள் மற்றும் அரசியல் நலன்களுக்கு அடிமைப்படுத்தாமல்
மக்களின் உண்மையான தேசப்பற்று ஆர்வத்தை பேணிக் காப்பதே" எமக்குள்ள சவாலாகும் என அவர் பிரகடனம்
செய்தார்.
பிரதான எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள்
விடுதலை முன்னிணியும் (ஜே.வி.பி.) உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களை பகிஷ்கரித்தன. சிங்கள அதிதீவிரவாத
ஜே.வி.பி. மேலும் உக்கிரமான இராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துவதுடன் இரு கட்சிகளும் யுத்தத்தை
ஆதரிக்கின்ற போதிலும், அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கத்துடனும் அதன் கொள்கைகளுடனும் தம்மை
இணைத்துக்கொள்வதற்கு விரும்பவில்லை. புலிகளுக்கு சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பும் சமூகம் தரவில்லை.
1948ல் யூ.என்.பி. சுதந்திரத்தை பெற்றுத் தந்தத போதிலும், "யூ.என்.பி.
அரசாங்கத்தைத் தவிர ஏனைய அரசாங்கங்கள் சுதந்திரத்துடன் பெற்ற எமது குறிக்கோள்களை மறுபக்கம் திருப்பியுள்ளன"
என யூ.என்.பி. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க புலம்பினார். உண்மையில், 1948ல் கிளர்ச்சியடைந்த
தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட, தம்மை யூ.என்.பி. யினுள் அணிசேர்த்துக்கொண்ட முதலாளித்துவ அரசியல்வாதிகள்
சுதந்திரத்தை விரும்பாத போதிலும், அது அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே யூ.என்.பி.
தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக சிங்களப் பேரினவாதத்தில் தங்கியிருந்தது. யூ.என்.பி. செய்த சாதனைகளில்
1983ல் யுத்தத்தை முன்னெடுத்து முதல் 11 ஆண்டுகள் அதைக் கொடூரமாக முன்னெடுத்ததும் ஒன்றாகும்.
இராஜபக்ஷ வாழ்க்கை நிலைமை சீரழிந்து வருவது சம்பந்தமாக மக்கள் மத்தியில்
பரந்தளவில் நிலவும் அதிருப்தியை பற்றி விழிப்புடன் உள்ளார். அவர் தனது உரையில், "எங்களது மக்கள் ஏனைய நாட்டில்
உள்ளவர்களைப் போல் உலக உணவுப் பற்றாக்குறை மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பால் அதிகரித்துள்ள வாழ்க்கைச்
செலவின் சுமைகளை எதிர்கொண்டுள்ளனர்," என பிரகடனம் செய்தார். இராணுவச் செலவிலான பிரமாண்டமான
அதிகரிப்பின் தாக்கத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளமை, எண்ணெய் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான
மாணியங்களை அரசாங்கமே வெட்டித்தள்ளியுள்ளமை அல்லது அது உயர்ந்த வட்டி வீதத்துக்கு சர்வதேச நிதிச் சந்தைகளில்
பெற்றுக்கொண்டுள்ள பெருந்தொகையான கடன் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதியால் வழங்கக்கூடியது எல்லாமே, "சிரமங்கள்
நிரந்தரமானவை அல்ல" மற்றும் "குறிகியகால சிரமங்கள் நீண்ட கால நன்மைக்கு வழிவகுக்கும்" என்ற வெற்று
வாக்குறுதிகள் மட்டுமே. புலிகளை விரைவில் வெற்றிகொள்வது தீவின் பொருளாதார வாய்ப்புகளை முன்னேற்றும் என
இராஜபக்ஷ சந்தேகமின்றி எதிர்பார்த்துள்ளார். ஆயினும், புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பது 25 ஆண்டுகால
இனவாத மோதல்களுக்கு முடிவுகட்டாது அல்லது அது கட்டாயமாக வெளிநாட்டு மூலதனத்தின் உட்பாய்வுக்கும் ஒரு
பொருளாதார செழிப்புக்கும் உடனடியாக வழிவகுக்காது. யுத்தம் இழுபடுகின்ற நிலையில், அச்சுறுத்தும் அமெரிக்க
பொருளாதார பின்னடைவும் சர்வதேச நிதி நெருக்கடியும் இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி
ஆழமாகுவதே பெருமளவில் இடம்பெறக் கூடும்.
"கிழக்கின் விடுதலையை" ஒரு பெரும் வெற்றியாக காட்ட இராஜபக்ஷ பெரும்
சிரமப்பட்டார். 2006 ஜூலையில் முதலாவது தாக்குதலை முன்னெடுத்ததில் இருந்தே, இராணுவம் கிழக்கில் புலிகளின்
பிரதான கோட்டைகளை கைப்பற்றுவதில் வெற்றிகண்டது. பொருளாதார அபிவிருத்தி வீதத்தையும் கிழக்கு மாகாணத்தில்
"ஜனநாயக" ஸ்தாபிதத்தையும் ஜனாதிபதி பாரட்டினார். உண்மையில் அரசாங்கம் முன்னெடுத்த தாக்குதல்களில்
குறைந்தபட்சம் 200,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு அவர்களின் நிலங்களை சுதந்திர வர்த்தக வலயங்களை
ஸ்தாபிப்பதற்காக இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போதைய உள்ளூராட்சி சபை தேர்தல்களில், குண்டர்
நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு பேர்போன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.) என்ற தமிழ்
துணை ஆயுதக் குழுவுடன் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டமைப்பு ஒரு கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளது.
இராஜபக்ஷவின் நன்நம்பிக்கையுள்ள உரை ஒரு புறம் இருக்க, கொழும்பு ஊடகங்களின் பல
ஆசிரிய தலையங்கங்கள் இந்தவாரம் அரசியல் கும்பலின் பரந்த தட்டினரின் மத்தியில் காணப்படும் சோர்வான மனநிலையையும்
நம்பிக்கையீனத்தையும் பிரதிபலித்தன. கடந்த அறுபது ஆண்டுகால சாதனைகள் பற்றி எவராலும் இறுமாப்புக்கொள்ள
முடியாது. அனைவரும் இனவாத அரசியலில் மூழ்கிப் போய் யுத்தத்திற்கு ஆதரவளித்த போதிலும், இராணுவ வெற்றி அல்லது
பொருளாதார மேம்பாடு பற்றி அவர்களுக்கு பெரும் நம்பிக்கை இல்லாததோடு ஆளும் வட்டாரத்தை சூழ்ந்துகொண்டுள்ள
ஊழல் மற்றும் வன்முறைகள் பற்றி புண்படுத்தும் வகையில் பேசிக்கொள்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, சண்டே டைம்ஸ் பின்வருமாறு ஒரு கொடூரமான சித்திரத்தை
வரைந்துள்ளது: "இப்போது நாம் முகங்கொடுத்திருப்பது, இறைமையுள்ள அரசுக்கு நல்லாட்சி செய்யுமாறு கட்டளையிடும்
வெளிநாட்டு நிதிவழங்குபவர்களின் கருணையில் இருக்கும்; பிறக்க இருக்கும் அடுத்த பரம்பரையை எதிர்காலத்தில் திருப்பி
செலுத்த நெருக்கும் வகையில் வர்த்தக வங்கிகளில் குறைவின்றி கடன்பெறும்; பொது நிதி திருடப்படும் மற்றும் வீண் செலவு
செய்யப்படும்; அடிக்கடி வருந்தத்தக்க நிலையிலேனும், தமது வீட்டில் அடுப்பு எரிவதற்காக நாட்டுப் பிரஜைகள் 20
பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் வெளிநாட்டில் வேலை செய்யும்; வேலையின்மை; போஷாக்கின்மை நிறைந்துபோயுள்ள;
ராக்கட் வேகத்தில் உயரும் விலைவாசி; மோசடியான அரசியல்வாதிகள் இருக்கும்; மனித உரிமை மீறல்களில் மூழ்கிப்போயுள்ள;
எஞ்சியுள்ள எதையும் மிச்சம் வைக்காத மற்றும் பெருமளவில் உயிர், கை கால், சொத்து மற்றும் பொருளாதாரத்தையும்
பலியெடுக்கும் மோதலையும் கொண்ட பெரும் ஆபத்தில் மூழ்கிப் போயுள்ள தேசத்துக்கேயாகும்."
இந்த செய்தித்தாளால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே நம்பிக்கை கீற்று, இலங்கையர்களில்
பெரும்பான்மையோர் தற்போதைய சூழ்நிலையிலும் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் எனத் தெரிவிக்கும் அண்மைய
கருத்துக் கணிப்பு மட்டுமேயாகும். சில ஆபிரிக்க நாடுகளில் உள்ள பழங்குடி யுத்தங்கள், மோசடி மற்றும் எயிட்ஸ் நோய்
போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆசிரியர் தலைப்பு, "எங்களது அனைத்துப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், நாம்
எமது அதிஷ்டத்தை பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டும்" என பிரகடனம் செய்கின்றது. ஆயினும், இந்தப் பத்திரிகை
மேலும் தெரிவிப்பதாவது: "நாம் இந்த சுதந்திரத்தைக் கொண்டாடுவது தலைநகரம் ஏறத்தாள முற்றுகையிடப்பட்டுள்ள
ஒரு சூழ்நிலையிலேயே என்ற கசப்பான யதார்த்தத்தை நாம் நிராகரித்துவிட முடியாது."
இந்த ஆசிரியர் தலைப்பு, "பயங்கரவாத பேரிடருக்கு" எதிராக மட்டுமன்றி, "உயர்
மட்டத்திலான ஊழல் நோய், தகுதியின்மை மற்றும் வீண் விரயம் தொடர்பான முழு அக்கறையீனத்திற்கு" எதிராகவும்
போராட ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றது. சேர்ச்சிலிடம் இருந்து மேற்கோள்
காட்டும் அதன் ஆசிரியர், இன்னமும் அதிகம் தாமதமாகிவிடவில்லை என தொடர்கிறார்: "நாங்கள் இன்னமும் எமது
தலைவிதியை தீர்மானிப்பவர்கள். நாம் இன்னமும் எமது ஆத்மாவை ஆள்பவர்களாக உள்ளோம்." ஆயினும், உயர்ந்த
சொல்லாட்சி மிகைப்படுத்தல்களின் பின்னர், தற்போதைய அழிவுகரமான நிலைமைக்கு ஒரு விளக்கத்தையோ அல்லது ஒரு
தீர்வையோ வழங்காமல் அந்த ஆசிரிய தலைப்பு மொட்டையாக முடிவுற்றுள்ளது.
ஆளும் வட்டாரத்தில் நிலவும் இத்தகைய ஆழமான தோல்விமனப்பான்மை மற்றும்
செயலூக்கமின்மை, 60 ஆண்டுகால முதலாளித்துவ ஆட்சியின் மீது அவதூறு குற்றச்சாட்டை சுமத்துவதோடு எதிரில் உள்ள
ஆழமான அரசியல் கொந்தளிப்புக்கும் அறிகுறியாக விளங்குகிறது. பெப்பிரவரி 4 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின்
அறிக்கை விளக்கியவாறு, தற்போதைய முட்டுக்கட்டைக்கு முற்போக்கான அடிப்படையில் முடிவுகட்டும் இலாயக்குடைய ஒரே
சமூக சக்தி, சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கில் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். |