World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய அமெரிக்கா, கரிபியன்

Fidel Castro retires as Cuban president after 49 years in power

49 வருட அதிகாரத் தலைமைக்கு பின் கியூப ஜனாதிபதிப் பதவியில் இருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெறுகிறார்

By Patrick Martin
20 February 2008

Back to screen version

1950 மற்றும் 60களில் அதிகாரத்திற்கு வந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதல் போக்கினை கைக்கொண்ட "மூன்றாம் àôè" தேசியவாதிகளில் கடைசியானவரான ஃபிடல் காஸ்ட்ரோ, செவ்வாயன்று, தான் கியூபாவின் ஜனாதிபாதி பதவியில் இருந்தும் இராணுவப் படைகளின் தலைமைத் தளபதி பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கியூப புரட்சி வெற்றியின்- 1959 ஜனவரி 1ல் காஸ்ட்ரோவின் கெரில்லா படைகள் ஹவானாவிற்குள் அணி நடை போட அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி ஃபல்ஜென்சியோ பாட்டிஸ்டா நாட்டை விட்டு ஓடியபொழுதான - 49 வது ஆண்டு நிறைவுற்று ஒரு மாதமே ஆன நிலையில் இந்த முடிவு வந்தது.

குடல் இரத்தக்கசிவை தடுப்பதற்கு ஒரு அவசர குடல் அறுவைச் சிகிச்சையினை ஜூலை 2006 இல் அவர் எடுத்துக் கொள்ள நேர்ந்தது முதல் காஸ்ட்ரோ பொதுமக்கள் பார்வையில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். உடனடியான அபாயத்திலிருந்து அவர் மீண்டு சில அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கு பெறத் திரும்பினார், முதன்மையாக கியூப பத்திரிகைகளுக்கு கருத்துக் கட்டுரைகள் எழுதுவது, என்றாலும் பொதுமக்கள் முன் அவர் தோன்றவேயில்லை. டிசம்பரில் ஒரு செய்தியில் விரைவில் தனது முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகுவதற்கான காலமாக இருக்கும் என்று அவர் சூசகமாகத் தெரிவித்திருந்தாலும், அடுத்த மாதமே கியூபா ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

நாடாளுமன்றம் ஆட்சி மன்றப் பேரவையை தேர்ந்தெடுப்பதற்கு பிப்ரவரி 24 அன்று கூடுகிறது, அன்றாடப் பணிகளை ஆளும் நிர்வாக அமைப்பான இந்த அவை தான் 'ஆட்சி மன்ற ஜனாதிபதி' யை தேர்வு செய்கிறது, இது தான் காஸ்ட்ரோ வகித்த அதிகாரபூர்வ அரசாங்கப் பதவி. காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பால் அவருக்கு அடுத்த ஜனாதிபதியை இந்த அவை ஞாயிறன்று தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இது அநேகமாக கடந்த 18 மாதங்களாக நாட்டின் செயல்பாட்டு தலைவராக இருந்து வரும் பாதுகாப்பு அமைச்சரான காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவாகத் தான் இருக்கும்.

1959 லிருந்து காஸ்ட்ரோவுடன் சேர்த்து இன்னும் சில விஷயமும் - கியூபா மீதான தனது பாதி காலனி ஆதிக்க வகை மேலாதிக்கத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கும், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு இருப்பதற்கான இலாபகர சாத்தியக்கூறுகளையும் கூடுதல் அனுகூலமாக வைத்துக் கொண்டு, இந்த தீவினை மீண்டும் ஒரு கரும்பு ஆலைத் தளம் மற்றும் மாஃபியா சாவடியாக மாற்றுவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் கொண்டுள்ள பசிவெறி - தப்பிப் பிழைத்திருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதான அறிவிப்புகள் மூலம் அமெரிக்க அரசாங்கம் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறது.

இலத்தீன் அமெரிக்க கலகத் தடுப்பு போர்களில் மிகுந்த அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற படை வீரரான அமெரிக்க அரசு துணைச் செயலாளர் ஜோன் நெக்ரோபோன்ட், காஸ்ட்ரோவின் இராஜினாமா அமெரிக்க கொள்கையை மாற்றப் போவதில்லை என்று தெரிவித்தார். "அவ்வளவு சீக்கிரத்தில் அது நடப்பதற்கான வாய்ப்புகள் என் கண்ணுக்குத் தெரியவில்லை" என்றார் அவர்.

ஜனாதிபதி புஷ், கியூப ஆட்சியை மேலும் தனிமைப்படுத்துவதற்கு கூடுதலான சர்வதேச நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், இது ஒரு "ஜனநாயக மாற்றத்திற்கு" வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ள அவர், "சுதந்திரத்தின் அருளினை உணர கியூபா மக்களுக்கு அமெரிக்கா உதவி செய்யும்" என்றும் கூறியுள்ளார். இது அமெரிக்காவின் விவசாய வர்த்தகமும் பிற பெருநிறுவன நலன்களும் இந்த தீவு நாட்டில் சுதந்திரமாக கொள்ளையடிக்க திரும்புவதற்கான ஒரு இரகசிய மொழியே ஆகும்.

புஷ் நிர்வாகம், கியூப- அமெரிக்க சமூகத்தின் அதீத வலதுசாரி உறுப்புகளுடன் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது, ஜனநாயகம் குறித்த இவர்களின் கருத்தாக்கம் என்பது நாட்டில் இருந்து வெளியேறிய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நில உடைமையாளர் கூறுகளை மீளக் கொணர்வதற்கு கியூபாவின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைப் படுகொலை செய்வது என்னும் எதிர்புரட்சியாகும்.

இந்த தீவுக்கு செல்லும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கும் குறையும் வண்ணமும், தீவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு பணமும் பொருளும் அனுப்பும் அமெரிக்காவில் வாழும் கியூபர்களை தண்டிக்கும் வண்ணமும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உட்பட, கியூபாவுடனான வணிகத்திற்கான சுமார் 50 வருட தடையில், கூடுதலான கட்டுப்பாடுகளை திணித்ததன் மூலம் தனது காஸ்ட்ரோ எதிர்ப்பு விஷயத்தில் பழைய "மண்புழுக்களை" மிஞ்சவும் கூட புஷ் தலைப்பட்டிருக்கிறார்.

ஃபுளோரிடாவில் இருந்து வெறும் 90 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு சிறிய தீவு தேசத்தின் தலைவராக அரை நூற்றாண்டு காலத்திற்கும் காஸ்ட்ரோ தாக்குப் பிடித்திருக்கிறார். அவரது ஆட்சியை தூக்கியெறிய அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் - அவற்றில் குறிப்பிடத்தக்கது பிக்ஸ் வளைகுடா ஊடுருவல் - தோல்வியுற்றது என்றால், அதற்கு கியூப மக்களின் பெரும்பான்மையோரிடையே காஸ்ட்ரோவுக்கு இருந்த ஆதரவும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அனுதாபமுமே பெரிய காரணம்.

இராணுவ வலிமை மூலம் காஸ்ட்ரோ ஆட்சியை அழிக்க முடியாது என்று கண்டு கொண்ட பின், அமெரிக்கா கியூப ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு முயற்சி செய்தது, காஸ்ட்ரோவினை படுகொலை செய்ய சிஐஏ மற்றும் கியூபாவிலிருந்து வெளியேறியவர்களின் பல்வேறு பாசிச குழுக்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இப்படியெல்லாமிருந்த நிலையிலும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகளின் நிர்வாகங்களை கடந்திருக்கிறார்: ஐசனோவர், கென்னடி, ஜோன்சன், நிக்ஸன், ஃபோர்ட், கார்டர், ரீகன், புஷ், கிளின்டன். பொறுப்பில் இருந்து விலகும் சமயத்தில் அமெரிக்கர்களிடம் ஜோர்ஜ் புஷ் பெற்றுள்ளதை விட எட்ட முடியாத அளவு அதிகமான ஒரு புகழுடனேயே கியூபாவில் காஸ்ட்ரோ ஓய்வு பெறுகிறார்.

கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மிகவும் மேம்பாடுடையதாக்கியது, அதேபோல அமெரிக்க நிறுவனங்களின் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய பணக்காரர்களின் சொத்துக்களை தேசியமயமாக்கியது உள்பட கியூபா அரசு முக்கியமான சமூக சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் இதழில் சென்ற நவம்பரில், குரோதம் மிக்க ஒரு கட்டுரையில், கியூபாவின் மிகப்பெரும் உற்பத்திப் பொருட்கள் என்றால் சர்க்கரையும், இது தவிர நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மிகவும் நம்பிக்கை உற்சாகமளிக்கப்பட்டுள்ள டாக்டர்களும் தான், இவர்கள் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு பாரம்பரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள் என்பதோடு தங்களது தாய்நாட்டிற்கு நற்பெயரையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள், என்று வருத்தம் தொனிக்க எழுதப்பட்டிருந்தது. பிற எந்த ஒரு மூன்றாம் உலக அரசாங்கமும் இது போன்றதொரு மதிப்புமிக்கதும் சமுதாய நலன் காப்பதுமான "ஏற்றுமதியை" வளர்க்க ஏன் இயலவில்லை என்பது குறித்து விளக்க அந்த கட்டுரை முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இந்த சாதனைகள் இருந்தாலும், ஹவானாவில் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் "கம்யூனிசத்திற்கு" மாற பொது அரங்கங்களிலேயே காஸ்ட்ரோ சபதமேற்றிருந்தார் என்றாலும், கியூபா ஒரு போதும் ஒரு சோசலிச நாடாக இருந்தது இல்லை. கியூபாவில் தொழிலாளர் சக்தியின் சுதந்திரமான உறுப்புகள் ஒரு போதும் இருந்ததில்லை, கியூப கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அரசியல் ஏகபோகத்தை அனுபவித்து வருகிறது. ஆளும் கட்சிக்குள்ளாக தனது அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எந்த சவாலுக்கும், ஜோடிக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தண்டனைகள் என முரட்டுத்தனமான வன்முறையின் மூலமே காஸ்ட்ரோ மறுமொழியளித்திருக்கிறார்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான நனவான புரட்சிகர போராளி என்கின்ற பொருளில் காஸ்ட்ரோவே கூட ஒரு உண்மையான சோசலிஸ்ட்டாக ஒருபோதும் இருந்ததில்லை. சொல்லப் போனால், காலனி எதிர்ப்பு வெகுஜன இயக்கங்களின் விளைவாக ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு முதலாளித்துவ தேசியவாதிகளின் தலைமுறையில் மிகவும் தீவிரம் கொண்ட ஒருவராகத் தான் அவர் இருந்தார். இறுதியாக, அவரது சரிநிகர் பொறுப்புகள் கொண்ட தலைவர்களான அல்ஜீரியாவில் பென் பெல்லாவும், இந்தோனேசியாவில் சுகார்னோவும், தென்னாபிரிக்காவில் மண்டேலாவும், நிகராகுவாவில் டானியல் ஒர்டேகா போன்றோரும் சென்ற அதே குருட்டுப் பாதை வழியிலேயே, அவர்களது அரசியல் வாழ்க்கைப்பாதைகள் வெவ்வேறு விதமாக அமைந்தது என்றாலும் கூட, காஸ்ட்ரோவும் தனது நாட்டை விட்டு சென்றார்.

கியூப ஆட்சியானது, 81 வயதுள்ள ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து அவரை விட சற்று மேம்பட்ட உடல்நலம் கொண்டுள்ளவராக இருக்கும் 76 வயதுள்ள அவரது சகோதரர் ரால் வசம் மன்னர் குல வழியில் அதிகாரம் கைமாறும் வகையில், தனிநபர் சர்வாதிகார வழிவகை கொண்டதாக இருக்கிறது. உண்மையில், வரலாற்றில் மிக அதிக காலம் பயிற்சி காலத்தில் இருந்தது ராலாகத் தான் இருக்கும், 1959 ஆம் ஆண்டு முதலாக இவர் ஹவானாவில் படைகளின் இரண்டாவது தலைவர் நிலையில் செயலாற்றி வருகிறார்.

ஜனவரி நாடாளுமன்ற தேர்தல்களில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியால் நன்கு ஆய்வு செய்யப்பட்ட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார். கட்சி வழிகாட்டுதல்களுக்கு கிடைத்த ஒரு இறுகிய மறுமொழியாக, 614 வேட்பாளர்களில் ரால் காஸ்ட்ரோ தான் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார், அவர் 99.4 சதவீதம் வாக்குகளை பெற்றார், இது 2005 இல் அவர் பெற்றிருந்த 99.75 சதவீதத்தை விட மிகச் சிறிதே குறைவாகும்.

பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர பாசாங்குகள் இருந்தாலும், அவரது அரசாங்கம் ஒருபோதும் ஏகாதிபத்தியம் அல்லது ஸ்ராலினிசத்தில் இருந்து உண்மையான சுதந்திரமானதாக இருக்கவில்லை. 1990 களின் ஆரம்பத்தில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தனது அரசுக்கான நீண்ட கால பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுத் தூணை அகற்றி விட்ட நிலையில், வெளி ஆதரவுக்கு காஸ்ட்ரோ இரண்டு அடித்தளங்களை கண்டறிந்தார் - ஒன்று ஐரோப்பிய சுற்றுலா, இது நாட்டின் மெல்லிய வானிலை மற்றும் அழகான கடற்கரைகளால் கவரப்பட்டது, முன்னாள் அமெரிக்க காலனியை வலிமைப்படுத்தும் நம்பிக்கையில் அரசாங்கங்களால் ஊக்கப்படுத்தப்பட்டது; இன்னொன்று வெனிசூலா எண்ணெய், 1998 இல் வெனிசூலாவில் பதவிக்கு வந்த ஹியூகோ சாவேஸ் இதனை கியூபாவுக்கு மிகவும் குறைக்கப்பட்ட விலையில் வழங்கினார்.

கியூபாவுக்கு இப்போது வெனிசூலாவால் வழங்கப்படும் மானியமானது, இது சென்ற வருடம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது, 1960, 1970, 1980 களில் சோவியத் அதிகாரத்துவத்தால் வழங்கப்பட்ட ஆதரவிற்கு சவாலளிப்பதாக உள்ளது.

சென்ற மாதம் சியன்பியுகோஸில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை தொடக்க சாவேஸ் கியூபா பயணம் மேற்கொண்டார், இந்த ஆலை சோவியத் பொறியாளர்களால் கட்டப்பட்டு சோவியத் ஒன்றியம் 1991 இல் வீழ்ச்சியுற்ற பின்னர் மூடப்பட்டது, ஆனால் இப்போது கியூபா-வெனிசூலா கூட்டு முயற்சியாக மீண்டும் உயிரூட்டப்பட்டிருக்கிறது. கியூப கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எண்ணெய் வளம் கண்டறியும் முயற்சிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் எண்ணெய் வள முதலைகளின் பசிவெறியை தூண்டியிருக்கிறது, காரணம் அமெரிக்க மண்ணியல் ஆய்வு மதிப்பீட்டின் படி அந்தப் பகுதியில் 4.6 பில்லியன் பீப்பாய்கள் கண்டறியப்படாத எண்ணெய் வளமும் 9.8 டிரில்லியன் கன அடி கண்டறியப்படாத இயற்கை வாயு வளமும் இருக்கிறது.

ஐரோப்பிய சக்திகளோ அல்லது வெனிசூலா மற்றும் பிரேசில் போன்ற தென் அமெரிக்க நாடுகளோ கியூபாவுடன் உறுதியான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் அமெரிக்க ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் பல பிரிவுகளை இந்த தீவுக்கான ஒட்டுமொத்த பொருளாதாரத் தடை குறித்த நீண்ட கால கொள்கையை கேள்விக்குள்ளாக்க காரணமாயிருக்கிறது. நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியின் சில பிரிவுகள் கூட, மத்திய மேற்கில் விவசாய வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மிகவும் இலாபகரமான சந்தையாக மாற்ற வழிவகை செய்ய தடையைத் தளர்த்த கோரியிருக்கின்றன.

இந்த வேறுபாடுகள், காஸ்ட்ரோவின் ஓய்வுக்கு மறுமொழியாக, மூன்று முதன்மை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன், பாரக் ஒபாமா மற்றும் குடியரசுக் கட்சியின் ஜோன் மெக்கெயின் விடுத்துள்ள அறிக்கையில் பிரதிபலிக்கிறது.

கடந்த 49 ஆண்டுகாலத்தின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பு எதிலும் இருந்து எளிதில் நகலெடுக்கப்பட்டிருக்கக் கூடிய வகையிலான அறிக்கை ஒன்றில் மெக்கெயின், "கியூபா மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கையில் கிட்டி விடவில்லை" என்று அறிவித்தும், தற்போதைய ஆட்சி முழுமையாக அகல வேண்டும் என்று கோரியும் செய்தி வெளியிட்டுள்ளார். "காஸ்ட்ரோ சகோதரர்கள் அதிகாரத்தின் மீது தங்கள் பிடியை வைத்திருக்க விரும்புவது தெளிவு" என்று மெக்கெயின் தெரிவித்துள்ளார். "அதனால் தான், நிபந்தனையின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவும், அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களையும் சட்டபூர்வமானதாக்கவும், சர்வதேசக் கண்காணிப்புக்குட்பட்ட தேர்தல்களுக்கான கால அட்டவணையை நிர்ணயம் செய்யவும் நாம் கியூபா அரசாங்கத்தை நெருக்க வேண்டும்".

விசுவாசமுள்ள அமெரிக்க ஆதரவு அரசுகளும், காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தை விட பல மடங்கு முரட்டுத்தனம் கொண்டதுமான சவுதியின் முடியாட்சி, பாகிஸ்தானின் முஷாரஃப் சர்வாதிகாரம், அல்லது அமெரிக்காவால் கூட்டாளிகளாக கருதப்படும் எந்த ஆபிரிக்க இராணுவ ஆட்சியாளர்கள் குறித்தும் மெக்கெயின் இது போன்ற கோரிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பாரக் ஒபாமா கொஞ்சம் கூடுதலான சமரச சம்பிரதாய அறிக்கையை விடுத்தார், காஸ்ட்ரோ இராஜினாமா "அத்தியாவசியமான முதல் படி" என்று கருத்தினை உதிர்த்துள்ள அவர் இந்த நடவடிக்கையானது "கியூபாவுக்கு அர்த்தமுள்ள ஜனநாயக மாற்றத்திற்கு" வழிகாட்ட தொடங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கியூபா ஆட்சியால் செய்யப்படும் எந்த மிதவாத சீர்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க அரசாங்கம் பொருளாதார மற்றும் தூதரக சலுகைகள் மூலம் பதிலுதவி செய்ய வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஹிலாரி கிளின்டனோ, அமெரிக்க கொள்கையில் ஒரு மாற்றம் வேண்டும் என்று திட்டவட்டமாக அழைப்பு விடுத்துள்ளார். தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், "கியூபாவில் ஜனநாயகத்தினை நோக்கிய அமைதியான மாற்றத்தை காண்பதில் தீர்க்கமான அக்கறை கொண்டுள்ள மற்றும் இந்த நோக்கில் அமெரிக்கா ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஆற்ற வேண்டும் என்று விரும்புகின்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எங்களது பங்காளிகளை இதில் ஈடுபடுத்துவேன்" என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒபாமாவும் சரி, ஹிலாரி கிளின்டனும் சரி கியூபாவுக்கான அமெரிக்க கொள்கையில் எந்த அடிப்படையான மாற்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஐந்து தசாப்த கால தடையானது காஸ்ட்ரோ அரசாங்கத்தை வெளியேற்றுவதில் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் பிற சக்திகள் முன்னாள் அமெரிக்க அரை-காலனிய நாட்டில் தங்களது செல்வாக்கை ஏற்படுத்த முனைப்பு காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும் அங்கீகரிக்க மட்டுமே அவர்கள் செய்திருக்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved