WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பால்கன்
Kosovo "independence" brings new uncertainties in Asia
கொசோவோ "சுதந்திரம்" ஆசியாவில் புதிய உறுதியற்ற தன்மைகளை கொண்டு வருகிறது
By John Chan
22 February 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய சக்திகளுடைய ஆதரவுடன் வெளிவந்துள்ள
கொசோவோவில் ஒருதலைப்பட்சமான சுதந்திரம் பற்றிய அறிவிப்பு பால்கன்களுக்கு அப்பாலும் உறுதித்தன்மையை
குலைக்கும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவிலும் மற்ற இடங்களிலும் ஒரு சிறு மக்கள் குழுவை இன அல்லது மத
வழியில் ஒரு தேசிய-நாடு என்று புதிதாக பிரித்து உருவாக்குவது எந்த நாட்டிலும் மேற்கோள்ளப்படலாம் என்ற
பரந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கொசோவோவின் சுதந்திரத்தை சீனா உடனடியாக எதிர்த்தது; தைவான் மற்றும்
திபெத் அல்லது Xinjiang
பகுதிகளில் இந்த உதாரணத்தை காட்டி பிரிந்து செல்லும் இயக்கங்களை நிறுத்த இவ்வாறு செய்துள்ளது. தங்கள் பகுதிகளிலேயே
பிரிவினைக்கு எதிராக யுத்தம் தொடுத்து வரும் இலங்கை போன்ற சில ஆசிய நாடுகளின் அரசாங்கங்கள்,
கொசோவோவை அங்கீகரிப்பதற்கு மறுத்துள்ளன.
சேர்பியாவில் இருந்து கொசோவோ முறித்துக் கொண்டு சென்றுள்ளது, சுதந்திர
சார்பு உடைய தைவானின் ஜனநாயக முற்போக்கு கட்சி
(DPP) அரசாங்கத்திற்கு தைரியத்தை கொடுத்துள்ளது.
கொசோவோவிற்கு அங்கீகாரம் கொடுத்த முதல் சில நாடுகளில் தைபேயும் ஒன்று ஆகும். வெளியுறவு மந்திரி
ஜேம்ஸ் ஹுவாங் பெப்ருவரி 19 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்: "பல இடர்பாடுகளையும்
கடந்த பின் கொசோவோ மக்கள் சுதந்திரத்தை அடைந்துள்ளனர். இது எங்கள் பாராட்டை பெரிதும் பெறுகிறது."
"தன்னாட்சி உரிமை" என்பது "ஒரு புனித உரிமை" என்று ஐ.நா.பட்டயத்திலேயே பொதிந்திருப்பதை ஹுவாங்
பாராட்டியுள்ளார்; இதை தைவானும் கோரக்கூடும்.
1949 புரட்சியின்பொழுது முன்னாள் கோமின்டாங் சர்வாதிகாரி இத்தீவிற்கு
சென்றபின் சீனா தைவானை ஒரு துரோகம் செய்துள்ள மாநிலமாக கருதுகிறது. சீனாவில் இருந்து முறையாக
சுதந்திரம் பெற்றுவிட்டதாக தைவான் அறிவித்தால், தைவானை மீண்டும் இணைத்துக் கொள்ளுவதற்கு இராணுவ வலிமை
பயன்படுத்தப்படும் என்று சீனா பலமுறையும் அச்சுறுத்தியுள்ளது. தைவானின் ஜனாதிபதி
Chen Whui-bian
அமெரிக்காவிடம் இருந்து அரசியல் மற்றும் இராணுவ ஆதரவு வரும் என்று நம்பியுள்ளார். சமீப ஆண்டுகளில் புஷ்
நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக "இருக்கும் நிலைமையை" சென் மாற்ற முயற்சிப்பதாக குறைகூறியுள்ளது. ஆனால்
வாஷிங்டன் கொசோவோவிற்கு ஆதரவு கொடுத்தால் தைவானுக்கு அது கொடுக்கக்கூடாது என்பதற்கு சரியான
காரணம் இல்லை என்று சென் வாதிட்டுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சரகம் கொசோவோவை தைவான் அங்கீகாரம்
செய்துள்ளதற்கு விடையிறுக்கும் வகையில் சீனாவின் ஒரு பகுதி என்ற முறையில் தைபேய் அவ்விதம் செய்ய உரிமை
அற்றது என்று கூறியுள்ளது. எவராலும், எவ்விதத்திலும் சீனாவில் இருந்து தைவான் "பிரிக்க"ப்படுவதை" பெய்ஜிங்
அனுமதிக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவை பொறுத்த வரையில் அதன் அக்கறைகள் தைவானுக்கும் அப்பால்
செல்கின்றன. Inter Press Service News
Agency பெப்ருவரி 19 கொடுத்துள்ள ஒரு பகுப்பாய்வு
குறிப்பிடுவதாவது: "சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வது என்ற கருத்து வேறுபாடு உடைய வாக்கை
செலுத்தியதின்மூலம் கொசோவோ சீனாவில் நாட்டின் பகுதியில் பாதிக்கும் மேலானவற்றில் இருக்கும் 56
அங்கீகரிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினருக்கு, ஒரு முன்னோடியைக் கொடுக்கும் அச்சுறுத்தல் ஆகிறது.
இதைத்தவிர, ஹாங்காங், மாகோ, தைவான் நிலப்பகுதி போன்ற சிறப்பு நிர்வாகப் பகுதிகள் உள்ளன; தத்துவ
அளவில் இவை பெல்கிராட்டிற்கு கொசோவோ இருந்தது போன்ற அதே உறவைத்தான் கொண்டுள்ளன."
கொசோவோ அறிவிப்பு வந்த உடனேயே, பெய்ஜிங் கடந்த மாதம் திங்களன்று
க்சின் ஜியாங்கின் ஒரு "தன்னாட்சி" பகுதியாக, "கிழக்கு துருக்கிஸ்தான்" என்ற பெயரில் அறியப்படும், முஸ்லிம்
உய்கர்சில் நடந்த பெரிய "பயங்கரவாத-எதிர்ப்பு" நடவடிக்கை பற்றிய செய்தியை வெளியிட்டது. இதில் இருவர்
கொல்லப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் பெய்ஜிங் "கிழக்கு துருக்கிஸ்தான்
பயங்கரவாதிகள்" ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் ஒலிம்பிக் பந்தயங்களை தாக்க சதி செய்து வருவதாகக்
குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை சீன அரசாங்கம்
Xinjiang, திபெத் மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் பிரிவினை
நடவடிக்கைகளுக்கு எதிராக அடக்குமுறை அலைகளை கட்டவிழ்த்துவிடும் என்பதற்கு அடையாளம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு இது பற்றிய உட்குறிப்புக்களை பற்றியும் பெய்ஜிங்
எச்சரிக்கையான கவலையை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் --ஐ.நா.பாதுகாப்புக் குழுவில்
இருக்கும் ஐந்து தடுப்பதிகார சக்தி உடைய நாடுகளில் மூன்று-- கொசோவோவிற்கு ஆதரவு கொடுக்கும்
செயல்களாக இருப்பதால் குழுவில் பிளவு ஏற்படும் அச்சுறுத்தல் வந்துள்ளது. மற்ற இரண்டு தடுப்பதிகார
சக்திகளான ரஷ்யாவும் சீனாவும் கொசோவோ சுதந்திரத்திற்கு ஐ.நா. ஒப்புதல் கொடுப்பதை எதிர்த்துள்ளன.
ஐ.நா.வில் சீன தூதராக உள்ள
Wanv Guangya கொசோவோ பற்றி "ஆழ்ந்த கவலையை"
தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுவில் அவசரக் கூட்டம் ஒன்றில் அவர் கொசோவோவின் ஒருதலைப்பட்ச
அறிவிப்பு "உலக சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை காக்கும் முக்கிய கருவியாகிய" பாதுகாப்புக் குழுவின்
நம்பகத்தன்மை, அதிகாரம் ஆகியவற்றைத் தீவிரமாக சமரசப்படுத்தியுள்ளது என்று அறிவித்தார். கொசோவோவின்
தலைவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுடைய நடவடிக்கைகள் ஐ.நா. தீர்மானங்களை "குப்பைக்
காகிதம் போல்" செய்துவிடும் தன்மையைக் கொண்டுள்ள என்றும் வாங் கூறினார்.
பெய்ஜிங் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் செய்தி ஊடகமும் மேலை நாடுகளின் உண்மை
நோக்கம் மாஸ்கோவின் புவி-அரசியல் நிலைமையை வலுவிழக்கச்செய்வதுதான் என்று அறிவித்துள்ளது. திங்களன்று
பெய்ஜிங் நியூஸ் ஒரு தலையங்கத்தில் எழுதியது: "சேர்பியாவின் விருப்பத்திற்கு எதிராக கொசோவோவின்
சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுப்பது ஐரோப்பா மற்றும் பால்கன் பகுதிகளில் ரஷ்யாவில் செல்வாக்குப் பகுதிகளின்
மீது மறைமுகத்தாக்குதல் தொடுப்பதற்கு ஒப்பாகும்." சர்வதேச உறவுகள் பற்றிய சீன வல்லுனர்
Ma Xiaolin ,பெய்ஜிங்
யூத் டெய்லியில், "கொசோவோவின் சுதந்திரம் ரஷ்யாவை அடக்கும் நோக்கத்தை கொண்ட அமெரிக்கத்
தலைமையிலான நேட்டோ இராணுவக் குறுக்கீட்டின் இறுதி முடிவு" என்று எழுதினார்.
சேர்பியாவிற்கு எதிரான நேட்டோ இராணுவ நடவடிக்கையின்போது, அமெரிக்கா
பெல்கிரேடில் இருந்த சீனத் தூதரகத்தின்மீது குண்டுவீசியது; அது சீனாவின் மீதான அமெரிக்க கொள்கையை இன்னும்
ஆக்கிரோஷமாக்கும் வகையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. 2001ல் புஷ் நிர்வாகம் பெய்ஜிங்கை
அமெரிக்காவின் "ஒரு மூலோபாய போட்டியாளர்" என்று முத்திரையிட்ட அரங்கில் பதவிக்கு வந்தது.
ஆப்கானிஸ்தானில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" மற்றும் 2003 ல் ஈராக்கின் மீதான முழு அளவு
படையெடுப்பு ஆகியவை மத்திய ஆசியா, மத்திய கிழக்கில் இருக்கும் பரந்த ஆற்றல் வளங்களை கைப்பற்றும்
நோக்கை கொண்டவை ஆகும். இந்த அமெரிக்க நடவடிக்கைகள் சீனாவை பெருகிய முறையில் அரசியல் இராணுவ
உறவுகளை ரஷ்யாவுடன் பிணைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படுத்தின.
ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சில மத்திய ஆசியக் குடியரசுகளை சேர்த்து 2001ல்
SCO
என்னும் Shanghai Cooperation
Organisation ஐ தோற்றுவித்தது. இந்தக் குழுவின்
நோக்கங்கள் மத்திய ஆசியா, காஸ்பியன் பகுதியில் அமெரிக்க நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு கொடுப்பது ஆகும்.
சீனாவும் ரஷ்யாவும் Chechnya
அல்லது Xinjiang
ஆகியவற்றில் இருக்கும் பிரிவினை இயக்கங்கள், கொசோவோ விடுதலை இராணுவம் போல் மேலை சக்திககளுக்கான
முகவர்களாகக்கூடும் என்று ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.
SCO வின் முக்கிய
உத்தியோகபூர்வ நோக்கம் "பிரிவினை, தீவிரவாதம், பயங்கரவாதம்" ஆகியவற்றிற்கு எதிராகப் போரிடுதல்
ஆகும்.
சீனாவும் ரஷ்யாவும் 2005ல் மஞ்சள் கடலில் மேற்கொண்ட கூட்டு இராணுவப்
பயிற்சிகள் மற்றும்; கடந்த ஆகஸ்ட்டில் யூரல் பகுதியிலும் மேற்கொண்ட பயிற்சிகள் பல பிரிவினை இயக்கங்களுக்கு
ஒரு எச்சரிக்கை குறிப்பு ஆகும், மேலை சார்பு உடைய "வண்ணப் புரட்சிகள்" ஆதரவாளர்கள் மற்றும் தைவானின்
அரசாங்கம் ஆகியவற்றிற்கும் எச்சரிக்கைக் குறிப்பு ஆகும். பொருளாதார அளவில்
SCO மத்திய
ஆசியாவில் இருக்கும் பரந்த எண்ணெய், எரிவாயு வளங்களை பயன்படுத்தி ஒரு "ஆற்றல் சங்கத்தை" கட்டமைக்க
விரும்புகிறது; அது இந்தியா, ஈரான் மற்ற நாடுகளையும் ஈர்த்துள்ளது. இந்த முன்னோக்கு நேரடியாக யூரேசிய
மையத்தானத்தில் இருக்கும் ஆற்றல் வளங்களை தான் கட்டுபடுத்த வேண்டும் என்ற அமெரிக்க திட்டங்களை
நேரடியாக அடியில் வெட்டுகின்றது.
ஆசியாவின் மற்ற பகுதியிலும் தளர்ச்சி
வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நட்புநாடான ஜப்பான் கொள்கை
அளவில் அதை ஒப்புக்கொள்வதாக கூறிபோதிலும் கொசோவோவின் சுதந்திரத்தை உடனடியாக அங்கீகரிக்கவில்லை.
ஜப்பானின் முக்கிய அரசாங்க செய்தி தொடர்பாளரான
Nobutaka Machimura ஞாயிறன்று நிருபர்களிடம் கூறினார்:
"சட்டபூர்வமாகவும், அரசியல் அளவிலும் கொசோவோ ஒரு அரசு என்ற தகுதிக்கு வருகிறதா என்பதை நாங்கள்
ஆராயவேண்டும்; இந்த வழிவகை முடிய எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று நான் சொல்ல முடியாது." ஜப்பானை
பொறுத்தவரையிலும் அரசியலில் இதையொட்டிய கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான்.
அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் ஜப்பான் தொடர்பு கொள்ளுவது
ரஷ்யாவிற்கு ஒரு ஆபத்து என்று மாஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானுக்கு தகவல் கொடுக்கும் வகையில்
ஒரு ரஷ்ய மூலோபாய குண்டுவீசும் விமானம் இம்மாத தொடக்கத்தில் ஜப்பானின் வான்வழியில் பறந்தது;
இதையொட்டி ஜப்பான் 22 ஜெட் இராணுவ விமானங்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது.
கொசோவோவிற்கு டோக்கியோவின் அங்கீகாரம் என்பது ரஷ்ய-ஜப்பானிய உறவுகளை மேலும் பாதிப்பிற்கு
உட்படுத்தும்; ஏனெனில் ரஷ்ய தூர கிழக்கு பகுதியில் இருக்கும் எண்ணெய், எரிவாயு அளிப்புக்களை பெறுவதற்கு
ஜப்பான் முயன்று வருகிறது.
இந்தியா கொசோவோ பிரச்சினையில் ஒருபுறத்தில் சேரவேண்டும் என்ற அழுத்தத்தை
திசை திருப்ப முயன்றுள்ளது. இந்திய வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர்
Navtej Sarna
திங்களன்று, "சில சட்டப் பிரச்சினைகள்" கொசோவோ அறிவிப்பில் உள்ளதாகவும், அரசாங்கம் "வளர்ந்து வரும்
நிலைமையை ஆராய்வதாகவும்" கூறியுள்ளார். "அனைத்து நாடுகளின் இறைமை, நிலப்பகுதி உரிமை ஆகியவை
முற்றிலும் மற்ற நாடுகளால் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியா தொடர்ச்சியாக கொண்டுள்ள
நிலைப்பாடு" என்றும் அவர் கூறினார்.
புது டெல்லி தனது சொந்த பிரிவினை இயக்கங்கள் பற்றி, குறிப்பாக காஷ்மீரில்
உள்ளவை கவலை கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் ஈரானை
தளமாகக் கொண்டுள்ள Islamic Republic News
Agency இடம் கூறினார்: "சர்வதேச சமூகம், குறிப்பாக
ஐரோப்பிய ஒன்றியம், கொசோவோவில் செய்தது போல், கூடுதலான முறையில் காஷ்மீர் பிரச்சினை பற்றியதில்,
தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நிலைப்பாடு அதன் மூலோபாய சங்கடத்தையும் பிரதிபலிக்கிறது. புஷ்
நிர்வாகம், சீனாவிற்கு எதிராக இந்தியாவை செல்வாக்கிற்கு கொண்டுவர முயன்றாலும், புது டெல்லி பெய்ஜிங்கை
பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.
SCO வில் "ஒரு
பார்வையாளர்" என்ற முறையில் இந்தியா சேர்ந்துள்ளது. கொசோவோவிற்கு ஆதரவு என்று அறிவித்தால் இந்தியா
அதன் நீண்ட நாள் நட்பு நாடு ரஷ்யாவுடன் கொண்டுள்ள உறவுகளுக்கு உறுதியாக சேதம் விளையும்.
இலங்கை இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது. அதன் வெளியுறவு
அமைச்சரகம் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கொசோவோ ஒருதலைப்பட்சமாக சுதந்திரத்தை
அறிவித்துள்ளது சர்வதேச உறவுகளில், நிறுவப்பட்டுள்ள உலக இறைமை பெற்ற நாடுகளின் ஒழுங்கில், கட்டுப்பாடற்ற
ஒரு முன்னோடியை ஏற்படுத்தக் கூடும்; அதையொட்டி சர்வதேச சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பெரும்
அச்சறுத்தல் வரக்கூடும்."
சிங்கள மக்கள் மற்றும் தமிழ் சிறுபான்மை ஆகியோரின் சமூக விழைவுகளை பூர்த்தி
செய்ய முடியாத நிலையில், இலங்கையின் ஆளும் உயரடுக்கு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
க்கு எதிராக ஒரு 25 ஆண்டு கால பேரழிவு தரும் உள்நாட்டுப் போரில் மூழ்கியுள்ளது. கொசோவோவின்
சுதந்திரம், சுதந்திர தமிழ் அரசுக்கான LTTE-ன்
அழைப்பிற்கு ஆக்கம் கொடுக்கக்கூடும் என்று கொழும்பு அஞ்சுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் சில அமெரிக்க நட்பு நாடுகளும்
கொசோவோவிற்கு ஆதரவு கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்கின்றன. 18,000 தீவுகள் மற்றும்
நூற்றுக்கணக்கான இனவழிப் பிரிவுகள் இருக்கும் பரந்த நாடான இந்தோனேசியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"இந்தோனேசிய அரசாங்கம் கொசோவோவில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனிக்கும்; ஆனால் ஒருதலைப்பட்ச
சுதந்திரத்தை அங்கீகரிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கும் நிலையில் இல்லை."
Aceh, மேற்கு
பாப்புவா, மாலுகு தீவுகளில் கொசோசவோ பிரிவினை போக்குகளை தூண்டக்கூடும் என்று ஜாகர்த்தா அஞ்சுகிறது.
அப்பகுதியில் தங்கள் செல்வாக்கை பெருக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலியா, போர்த்துக்கல் சூழ்ச்சித்திட்டங்களின்
விளைவாக 1999ல் கிழக்கு தைமூர், இந்தோனேசியாவில் இருந்து முறித்துக் கொண்டு சென்றது.
பிலிப்பைன்சின் வெளியுறவு மந்திரி ஆல்பேர்ட்டோ ரோமுலோ "அனைத்து தரப்பினருக்கும்
உகந்த முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். ஒரு
சுதந்திர கொசோவோவை மணிலா எதிர்க்கவில்லை என்றாலும், "சர்வதேச மற்றும் நிலப்பகுதி இறைமைக்
கோட்பாடுகள் சர்வதேச அளவில் ஏற்கப்பட்டவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும்" என்று அது கூறியுள்ளது. முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக பிலிப்பினோ அரசாங்கம் தெற்கு மிண்டநோ பகுதியில் இருக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை
முன்னணி பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வருகிறது; இப்பொழுது அது முஸ்லிம் சிறுபான்மையினருக்கு
"தன்னாட்சி" கூடுதலாகக் கொடுப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடக்கியுள்ளது.
கிழக்கு தீமூரில் "சுதந்திரத்தை" ஏற்படுத்திய ஆஸ்திரேலியா கொசோவோ சுதந்திரத்தை
ஆர்வத்துடன் அங்கீகரித்துள்ளது. "கொசோவோ அரசாங்கம் வரவிருக்கும் பணிகளை நன்கு செய்யும் என்று ஆஸ்திரேலியா
வாழ்த்துகிறது" என்று வெளியுறவு மந்திரி ஸ்டீபன் ஸ்மித் கூறினார். 1999ல் கிழக்கு தீமூரில் ஆஸ்திரேலிய தலையீடு,
கொசோவோவில் நேட்டோ சக்திகள் "நன்னெறி சார்ந்த ஏகாதிபத்தியத்திய" அடிப்படையில் தலையீடு என்ற
கூற்றுக்களைத்தான் எதிரொலிக்கிறது. சேர்பிய சக்திகளால் கொசோசவோ அல்பேனியர்கள் கொல்வதை தடுக்க
அமெரிக்கா சேர்பியாவின் மீது குண்டுவீச்சு நடத்துவது முக்கியம் என்று அமெரிக்கா கூறியது. முன்னாள் ஹோவர்ட்
அரசாங்கம் இந்தோனேசிய போராளிகளால் படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருந்த கிழக்கு தீமூர் மக்களுடைய காவலராக
தன்னைக் காட்டிக் கொண்டது.
ஒரு "சுதந்திரமான" கொசோவோ ஒன்றும் ஆஸ்திரேலிய துருப்புக்கள் உள்ளூர் அரசாங்கத்திற்கு
முட்டுக் கொடுத்துள்ள கிழக்கு தீமூரை விட அடக்குமுறையிலிருந்து சுதந்திரமாக இருக்கப்போவது கிடையாது. தன்னுடைய
புவி-அரசியல் செல்வாக்கை தெற்கு பசிபிக்கில் வலுப்படுத்திக் கொள்ளவும் தீமூர் கடலில் இருக்கும் எரிவாயு வளங்களை
சூறையாடுவதற்கும்தான் ஆஸ்திரேலியா கிழக்கு தீமூரில் தலையிட்டது. இப்பொழுதும் கூட தீமூர் மக்கள் கடும் வறுமையிலும்,
நீடித்த வேலையின்மையிலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆழ்ந்திருப்பது போல்தான் கொசோவோவுடைய மக்களும்
அதிக வேறுபாடு இல்லாமல் இருப்பர்; சொல்லப்போனால் அமெரிக்க ஐரோப்பிய சக்திகளின் மேலாதிக்கத்தின்கீழ்
நிலைமை மோசமடையும். |