WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government proposes phony
solution to communal conflict
இலங்கை அரசாங்கம் இன முரண்பாட்டுக்கு போலி தீர்வொன்றை பிரேரிக்கின்றது
By K. Ratnayake
15 February 2008
Back to screen version
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நாட்டின் "இனப் பிரச்சினைக்கு" "அரசியல்
தீர்வு" ஒன்றை காண்பதற்காக ஜனவரி 23ம் திகதி இன்னுமொரு பிரேரணையை முன்வைத்தார். கொழும்பில் வெளியாகும்
அரசியல் சங்கேத சொற்களை விளங்கிக்கொள்ளும் பழக்கம் இல்லாத ஒருவர், தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான
திட்டமிட்ட பாரபட்சங்களுக்கு முடிவுகட்டவும் மற்றும் நாட்டின் 25 ஆண்டுகால கொடூர யுத்தத்திற்கு முடிவு கட்டுவதன் பேரில்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இராஜபக்ஷ திட்டமொன்றை முன்வைக்கின்றார் என நம்பினால்
அவர் ஏமாற்றப்படுவார். இதைவிட உண்மைக்கு அப்பாற்பட்டது ஒன்றும் இருக்க முடியாது.
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என்பதை இராஜபக்ஷ மீண்டும் மீண்டும்
தெளிவுபடுத்தியுள்ளார். ஜனவரி முற்பகுதியில், அவரது அரசாங்கம் பெயரளவிலேனும் நடைமுறையில் இருந்த 2002 யுத்த
நிறுத்த உடன்படிக்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக விலக்கிக் கொண்டது. கடந்த 18 மாதங்களாக, கிழக்கில் புலிளின்
கட்டுப்பாட்டில் இருந்த பிரதான பிரதேசங்கள் அனைத்தையும் கைப்பற்றிக்கொண்ட இராணுவம் இப்போது வடக்கில் உள்ள
நிலைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி தனது "அரசியல் தீர்வை" அறிவித்துள்ள
போதிலும் கூட இராணுவம் மோதல்களை உக்கிரமாக்கிக் கொண்டிருக்கின்றது.
இராஜபக்ஷவின் அறிவிப்பின் குறிக்கோள் யுத்தத்திற்கு முடிவுகட்டுவதல்ல. மாறாக, புலிகளை
இராணுவ ரீதியில் அழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒரு மூடுதிரையை வழங்குவதே. இது அனைத்துக் கட்சி பிரதிநிதிகள்
குழுவில் ஒரு ஆண்டுக்கு மேலாக நீண்டுவந்த விவாதத்தின் பெறுபேறாகும். இந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு
சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர பாராளுமன்றத்தில் உள்ள அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளும் அடங்குகின்றன.
2006 ஜூலையில் கிழக்கு மாகாணத்தில் மாவிலாறு பிரதேசத்தில் இராணுவம் முதலாவது தாக்குதலை தொடுப்பதற்கு
சற்று முன்னதாகவே இந்தக் குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த "அரசியல் தீர்வின்" உள்ளடக்கமே அதன் குறிக்கோளை மேலும் தெளிவாக்குகின்றது.
இராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இந்த பிரேரணைகளை அவசரமாக வரைந்தது. அது
தமிழ் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்குக்கு "அதிகபட்ச மற்றும் விளைபயனுள்ள அதிகாரப்
பரவலாக்கல் அதிகாரத்தை" வழங்க கூடியவாறு அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை "முழுமையாக அமுல்படுத்த"
ஒரு "செயற்திட்டமாகவே" ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் திட்டமானது 1987ல் யுத்தத்திற்கு
முடிவுகட்டுவதற்காக மேற்கொண்ட முதலாவது தோல்விகண்ட முயற்சியான இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு
அரைகுறையாகத் திரும்புவதை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் கீழ், "தமிழ் தாயக" கோரிக்கைக்கான ஒரு
சலுகையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தமும்
மாகாண மட்டத்தில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவு சுயாட்சியை வழங்குகிறது. இந்த உடன்படிக்கையை அமுலுக்கு
கொண்டுவரவும் புலி கெரில்லாக்களை நிராயுதபாணியாக்கவும் வடக்கு கிழக்குக்கு இந்திய "அமைதி காக்கும்" படைகள்
அழைத்துவரப்பட்டன.
மாகாண சபை தேர்தல்கள் 1988 செப்டெம்பரில் இடம்பெற்றன. ஆனால், இந்த
உடன்படிக்கை நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக கண்டனம் செய்துகொண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)
இனவாதப் பிரச்சாரமொன்றை தொடங்கிய உடனேயே, அரசாங்கம் வடகிழக்கு மாகாண சபையை கலைத்தது.
பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்த இராஜபக்ஷ இப்போது அழைப்புவிடுத்தாலும், அவர் ஜே.வி.பி. யின்
கிளர்ச்சிகளை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 20
ஆண்டுகளாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு விளைபயனுள்ள விதத்தில் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வருகின்றது. இந்திய
"அமைதி காப்பவர்களுக்கும்" புலி போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்த உடனேயே அந்த உடன்படிக்கையும்
துரிதமாக கவிழ்ந்து போனது.
புதிய திட்டமானது வடக்கு கிழக்கு இணைப்பு பிரேரணை பற்றியதல்ல. ஜே.வி.பி. மற்றும்
ஜாதிக ஹெல உறுமயவும் தாக்கல் செய்த மனு தொடர்பாக கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு,
அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு முரணாக வட கிழக்கு மாகாணத்தை இரண்டாக பிரித்தது. இராஜபக்ஷவின்
அரசாங்கம் ஜே.வி.பி.-ஹெல உறுமயவின் நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது நீதிமன்றத்
தீர்ப்பை எதிர்க்கவோ இல்லை. தற்போது கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறுகின்றன.
ஆயினும், கடந்த மே மாதம் ஸ்ரீ.ல.சு.க. முன்வைத்த தற்போதுள்ள மாகாண சபைகளை
தூக்கி எறிந்துவிட்டு சிறிய மாவட்ட சபைகளை அமைக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு
பிரேரணைகளில் இருந்தும் இந்த புதிய "அரசியல் தீர்வு" பின்வாங்கியுள்ளது. இந்த மாவட்ட சபை திட்டமானது 1983ல்
யுத்தம் வெடிப்பதற்கு முன்னதாக, 1981ல் ஜனாதிபதி ஜயவர்தனவால் முன்கொணரப்பட்ட போதிலும் அது அப்போதே
தமிழ் கட்சிகளால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது.
ஸ்ரீ.ல.சு.க. முன்வைத்த மாவட்ட சபை பிரேரணை, இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின்
பங்காளிகளான ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவுக்கும் வேண்டுகோள் விடுக்க வரையப்பட்டதாகும். இந்த இரு
கட்சிகளும் சிங்கள பெளத்த அதிகாரத் தட்டுக்களின் அரசியல் மேலாதிக்கத்தை இல்லாதொழிக்ககூடிய எந்தவொரு
சலுகையையும் தமிழ் சிறுபான்மையினருக்கு வழங்குவதை கடுமையாக எதிர்க்கின்றன. "ஒற்றை ஆட்சியை" பாதுகாப்பதன்
பெயரில், அவர்கள் மத்திய அரசாங்கதின் அதிகாரங்களை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் உள்ளூர் மட்டத்தில்
பகிர்வை மட்டுமன்றி அனைத்தையும் எதிர்க்கின்றனர்.
எவ்வாறெனினும், பதின்மூன்றாவது திருத்தத்தை "முழுமையாக அமுல்படுத்துவதை" அறிவிக்கும்
இராஜபக்ஷவின் முடிவு, அந்தப் பிரேரணை குறிப்பிடுவது போல், "குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்
பேசும் மக்களின் அபிலாஷைகளை" இட்டு நிரப்ப பயன்படப் போவதில்லை. அதற்கு மேலாக அது, இலங்கையில் முழு
யுத்த முயற்சிகளுக்கு திரும்பியது தொடர்பாக பெரும் வல்லரசுகள் மத்தியில் எழுந்துள்ள சலனங்களை தணிப்பதற்கும் மற்றும்
யுத்தம் மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கம் தொடர்பாக வளர்ச்சி கண்டுவரும் பரந்த எதிர்ப்பை
அடக்குவதற்காகவும் வரையப்பட்டதாகும்.
இந்த நடவடிக்கை குறிப்பாக இந்திய அரசாங்கத்தை நாடும் செயலாகும். இந்திய
அரசாங்கம் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு இரகசியமாக ஆதரவளித்த போதிலும், குறிப்பாக
இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் அநியாயங்கள் தொடர்பாக பரந்த அதிருப்தி கிளம்பியுள்ள தென் மாநிலமான
தமிழ்நாட்டில் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கின்றது. தமிழர் விரோத பாரபட்சங்களுக்கு முடிவுகட்டுவதற்காக ஒரு
"அரசியல் பொதியை" வரையுமாறு இலங்கை அரசாங்கத்தை புது டில்லி தொடர்த்தும் கோருகின்றது. அனைத்துக் கட்சி
பிரதிநிதிகள் குழுவின் திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு "வரவேற்கத்தக்க
முதலாவது நடவடிக்கை" என இந்த நகர்வை பாராட்டியது.
இராஜபக்ஷ புலிகளை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்த முயற்சிக்கும் அதே வேளை, ஏனைய
தமிழ் கட்சிகளின் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார். அவர் கூட்டரசாங்கத்தின் பங்காளியாக உள்ள
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) பிரதிநிதிகள் உட்பட மற்றும் எஞ்சியுள்ள தமிழர் ஐக்கிய விடுலை
கூட்டணியின் தலைவரான வி. ஆனந்தசங்கரிக்கும் இந்த பொதியைக் கலந்துரையாட அழைப்புவிடுத்துள்ளார். இந்த
பிரேரணைக்கு ஈ.பி.டி.பி. மட்டுமே ஆதரவளித்துள்ளது.
அரசாங்கத்தை ஆதரிக்கும் ஆனந்தசங்கரி, "பொருத்தமானதல்ல" எனக் கூறி
இராஜபக்ஷவின் முன்நிலையிலேயே இந்தத் திட்டத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்தப் பிரேரணைகளுக்கு
உடன்பட்டு "அரசாங்கத்தின் இறப்பர் முத்திரையாக" முடியாது எனவும் பின்னர் ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு
தெரிவித்திருந்தார். ஏற்கனவே பல தமிழர்களின் கண்களுக்கு முன்னால் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள ஆனந்தசங்கரி,
தோல்விகண்ட 1987 உடன்படிக்கையின் பலத்தைக் குறைப்பதை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு திட்டத்துக்கு சாதாரணமாக
ஆதவளிக்கும் நிலையில் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) மற்றும் தமிழர்களை தளமாக கொண்ட
மேலக மக்கள் முன்னணியும் தம்மை அரசாங்கத்தின் பிரேரணைகளில் இருந்து தூர விலத்துக்கொண்டதோடு மேலும் விரிவான
அதிகாரப் பரவலாக்கல் பொதியைக் கோருகின்றன.
மாகாண ஆளுனரின் தலைமையில் வடக்கு மாகாணத்திற்கான ஆலோசனை குழுவொன்றை
நியமிக்கும் தனது எண்ணத்தை இராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களிலும் தமிழர்கள்
நியமனங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழ் பேசும் பொலிசார் மற்றும் ஏனைய ஊழியர்களை
சேர்த்துக்கொள்வதையும் இந்த பொதி உள்ளடக்கிக்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பிரேரணைகளின் மட்டுப்படுத்தப்பட்ட
மற்றும் காலங்கடந்த இயல்பு, நாட்டின் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கு எதிரான நீண்டகால உத்தியோகபூர்வ
பாரபட்சத்தின் ஆழத்தை சாதாரணமாகக் கோடிட்டுக்காட்டுகின்றன.
இந்தப் பிரேரணைகளுக்கு "இடது" முகங் காட்டுவதற்காக லங்கா சமசமாஜக் கட்சியின்
சேவையும் கோரப்பட்டுள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் முன்னர் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதன் மூலம்
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடிப்படைகளை காட்டிக்கொடுத்த லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீ.ல.சு.க. யில் இருந்த ஏறத்தாள
பிரித்தே எடுக்க முடியாத ஒரு அதிகாரத்துவ பகுதியாக சீரழிந்து போயுள்ளது. சமசமாஜக் கட்சியின் ஒரே பாராளுமன்ற
உறுப்பினரான திஸ்ஸ விதாரன, "அமைதிக்காக இயங்குவதாக" இந்த குழுவுக்கு ஆடை உடுத்துவதன் பேரில் அனைத்துக் கட்சிகளின்
பிரதிநிதிகள் குழுவின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
2007 செப்டெம்பரில் இந்தக் குழுவில் இருந்து வெளியேறிய ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.),
அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தூண்டில் போடுவதாக அரசாங்க கட்சிகளை குற்றஞ்சாட்டியது. யூ.என்.பி. இந்த
புதிய பிரேரணைகளை 20 ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்தல் என ஓரங்கட்டிய போதிலும், தனது சொந்த வேலைத்திட்டங்கள்
எதையும் முன்வைக்கவில்லை. 1983ல் யுத்தத்தை தொடக்கிவைத்தமைக்கு பொறுப்பாளியான யூ.என்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியை போலவே சிங்கள மேலாதிக்கவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளது. யூ.என.பி. யின் பொதுச் செயலாளரான
திஸ்ஸ அத்தநாயக்க, "நாட்டை பிரிக்காத எந்தவொரு தீர்வையும்" தமது கட்சி ஆதரிக்கும் என பிரகடனம் செய்தார்
--இது ஜே.வி.பி.யின் நோக்கத்திற்கு தலையாட்டும் ஒரு அரசியல் சமிக்ஞையாகும்.
எந்தவொரு மாகாண அதிகாரப் பரவலாக்களையும் கசப்புடன் எதிர்த்த ஜே.வி.பி, கலந்துரையாடலை
கண்டனம் செய்து 2006 டிசம்பரில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் இருந்து விலகிக் கொண்டது. இராஜபக்ஷவின்
அறிவித்தலை அடுத்து உடனடியாக பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க,
அந்தப் பிரேரணைகளுக்கு எதிராக தமது கட்சி முழு மூச்சுடன் எதிர்த்துப் போராடும் என பிரகடம் செய்தார்.
பத்திரிகையாளர் மாநாட்டின் கடைசியில், "புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதே
முதலாவது" என அமரசிங்க பிரகடனம் செய்தார். அதே சமயம், ஜே.வி.பி. ஏற்கனவே ஆத்திரமூட்டும்
இந்திய-விரோத பிரச்சாரத்தை கிளறிவிட்டுள்ளது. ஜனவரி 30 நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், "சிறுபான்மை
தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையை இப்போது இந்தியா
நெருக்குவது, புலிகளை நசுக்கும் இலங்கை இராணுவத்தின் வெற்றிகரமான பிரச்சாரத்தை குறுக்கறுப்பதற்கே," என
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்த குற்றஞ்சாட்டினார்.
இந்தக் கருத்துக்கள், ஜே.வி.பி. யின் தலைவர்கள் ஒற்றை ஆட்சியின் பாதுகாப்புக்காக
சகல கட்சிகளையும் அணிதிரளுமாறு அழைப்புவிடுக்கும் அதே வேளை, இலங்கையின் மீது இந்தியாவின் "ஏகாதிபத்திய"
தலையீட்டை கண்டம் செய்து 1980களின் பிற்பகுதியில் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக முன்னெடுத்த பாசிச
பிரச்சாரமே நினைவுக்கு வருகிறது. தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க மறுத்த நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகள்,
தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளை ஜே.வி.பி. குண்டர்கள் படுகொலை செய்தனர்.
குறிப்பாக, யுத்த முயற்சிகளுக்கு உழைக்கும் மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஜே.வி.பி. யின் கோரிக்கைக்கு
எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருகின்ற நிலைமையின் மத்தியில், மீண்டும் ஜே.வி.பி. அத்தகைய வழிமுறைகளை நாடும் ஆபத்து
இருந்துகொண்டுள்ளது.
சமாதானத்தை நோக்கிய அடியெடுப்புக்கு பதிலாக, இராஜபக்ஷவின் "அரசியல்
தீர்வானது" முழு கொழும்பு அரசியல் கட்டமைப்பின் இனவாத அரசியல் எந்தளவுக்கு கையாலாகாதது என்பதையே
அம்பலப்படுத்தியுள்ளது. புலிகளை அழிக்கும் தனது இலக்கை இலங்கை இராணுவம் அடைந்தாலும் கூட, தவிர்க்க முடியாத
விதத்தில் இன்னுமொரு வடிவத்தில் வெடிக்கக் கூடிய, அடியில் இருந்துகொண்டுள்ள இனவாத முரண்பாடுகளை தீர்ப்பதற்கு
எந்தவொரு பிரதான கட்சியும் இலாயக்கற்றதாகவே இருக்கும். |