WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government imposes new anti-strike
measures on health workers
இலங்கை அரசாங்கம் வேலை நிறுத்தங்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகளை சுகாதார
தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது
By W.A. Sunil
15 January 2008
Back to screen version
இலங்கை சுகாதார அமைச்சு, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு
சுகாதார ஊழியருக்கும் எதிராக பயன்படுத்த புதிய தண்டனைகளை கடந்த மாதம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, டிசம்பர்
13 வெளியான சுற்று நிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு செப்டெம்பருக்கு முன்தேதியிடப்பட்டுள்ளது. இது, தமது
சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக்கொள்வதன் பேரில் ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும்
நாட்டின் 80,000 சுகாதாரத் துறை ஊழியர்களை அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் இப்போது சம்பளம் வெட்டப்படும்
சாத்தியத்தை எதிர்கொள்கின்றனர். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வெளிநாட்டு புலமை பரிசில்களுக்கான விண்ணப்பங்களும்
இதனால் பாதிக்கப்படும். நிரந்தரமாக்கப்படுவோம் என எதிர்பார்த்திருக்கும் நிரந்தரமாக்கப்படாத தொழிலாளர்களது
தகுதிகான் காலம் விரிவுபடுத்தப்படக் கூடும். ஒருவருக்குப் பதலீடாய் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகத்
தொழிலாளர்கள் தம் மீது உத்தியோகபூர்வமாக குத்தப்பட்ட கறுப்பு அடையாளங்களைக் கொண்டிருப்பர். இது அவர்களின்
எதிர்கால தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
சுகாதார அமைச்சின் தலைவர் டாக்டர். அதுல கஹன்தலியனகே தெரிவித்ததாவது:
"சுகாதாரத் துறையில் உள்ள பல பகுதிகளைச் சார்ந்த ஊழியர்கள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தம் மற்றும் தொழிற்சங்க
நடவடிக்கைகள் சுகாதார சேவையை பராமரிப்பதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இத்தகைய நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன." எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப புலிகளுக்கு எதிரான அராசங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு
செலவிடுவதற்காக நிதிகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் நலன்புரி உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகள்
போல், இலவச சுகாதார சேவையின் ஸ்தம்பிதத்துக்கு அரசாங்கமே பொறுப்பாளியாகும்.
கடந்த ஆண்டு பூராவும் சுகாதார தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பிரச்சாரத்தில்
ஈடுபட்டுவந்துள்ளனர். மிக அண்மையில், மருத்துவம் சாராத ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய நேர கட்டுப்பாட்டு
முறையை எதிர்த்து, அவர்கள் அக்டோபர் 30 மற்றும் 31, நவம்பர் 27 மற்றும் 28 மற்றும் டிசம்பர் 4 மற்றும் 5
ஆகிய திகதிகளில் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். இந்த முறையின் கீழ் விரல் அடையாள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட
உள்ளதோடு அவற்றை பயன்படுத்த மறுப்பவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வெட்டித் தள்ளப்படும்.
தீவு பூராவும் மருந்தக ஊழியர்கள், ஆய்வுக்கூட ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள்
மற்றும் ஏனைய மருத்துவம் சாரா ஊழியர்கள் உட்பட 50,000 க்கும் அதிகமான சுகாதாரத் துறை ஊழியர்கள்
டிசம்பரில் நடந்த இரண்டு நாள் பிரச்சாரத்தில் பங்குபற்றினர். அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் தொழிற்சங்க
நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை புறக்கணித்திருந்தனர்.
பெயர் குறிப்பிடாத ஒரு நீரிழிவு நோயாளி பெயரளவில் நீதிமன்ற தடையைக் கோரியிருந்த
போதிலும், அந்த மனு அரசாங்கப் பிரச்சாரத்தின் அனைத்து தரக்குறியீடுகளையும் கொண்டிருந்தது. ஆஸ்பத்திரி சேவைகள்
ஸ்தம்பிதமடைந்துள்ளமை தொடர்பாக முறைப்பாடு செய்த அதே சமயம் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
"இந்த நடவடிக்கைகளை செய்யுமாறு (ஆஸ்பத்திரியை பராமரிப்பது) முப்படைகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் போது
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும்."
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சர்களும், யுத்த முயற்சிகளை
கீழறுப்பதாக வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் தாக்குகின்றனர். உண்மையில் அவர்களை
புலிகளின் ஆதரவாளர்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர். டிசம்பர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, வேலை நிறுத்தத்தை
தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. சில ஆயிரம்
இராணுவம், கடற்படை மற்றும் பொலிசாரும் பிரதான ஆஸ்பத்திரிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பிரச்சாரத்தின் பின்னர் புதிய தண்டனைகள் சுமத்தப்பட்டிருந்தன. சுகாதார அமைச்சர்
நிமல் சிறிபால டீ சில்வா, "ஒரு சுகாதார துறையில் உள்ள ஒழுக்கமற்ற மற்றும் சட்டமீறிய நிலைமையை முடிவுக்கு
கொண்டுவர வேண்டும்," என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இலவச சுகாதார துறையை நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும்
வகையில் மறு சீரமைப்பதற்கு அரசாங்கம் தயாராகின்ற நிலைமையிலேயே இந்த புதிய நடவடிக்கைகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2007-2016 காலத்துக்கான சுகாதார சிறப்புத் திட்டம், "செயற் திறன், பயனுடைமை
மற்றும் கடமைப் பொறுப்பை முன்னேற்றுவதற்காக சுகாதார முறையின் ஒழுங்கமைப்பு உட்கட்டமைப்பு மற்றும்
முகாமைத்துவத்தையும்" மறுசீரமைக்கும் திட்டமாகக் கருதப்படுகின்றது. செயற் திறன் மற்றும் கடமைப்பொறுப்பை
அதிகரிக்கும் திட்டங்கள், நிலையான செலவு குறைப்பை நடைமுறைப்படுத்துவதாகும். இது சுகாதார சேவையையும் அதன்
தரத்தையும் குறைப்பதோடு தொழிலாளர்கள் மீது கடும் சுமைகளை ஏற்றுவதாகும்.
சுகாதார சேவையை பாதுகாக்கவும் சுகாதார ஊழியர்களின் சம்பள மற்றும் நிலைமைகளை
உயர்த்தவும் ஒரு பரந்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் திட்டம் எதுவும் தொழிற்சங்கங்களிடம் கிடையாது. விரல்
அடையாள இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிராக நடைபெறும் புதிய பிரச்சாரமானது குறுகிய நிர்ப்பந்தத்தால்
முன்னெடுக்கப்படுவதோடு இதில் வைத்தியர்களோ அல்லது தாதிமார்களோ சம்பந்தப்படவில்லை. முடிவில், இயந்திரம்
தொடர்பான விடயத்தில் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை விலக்கிக்கொண்டதுடன் கொடுக்க மறுத்த மேலதிக
கொடுப்பணவில் 50 வீதத்தை உடனடியாகத் தரவும் எஞ்சியதை பின்னர் வழங்கவும் அரசாங்கம் கொடுத்த பதிலை
ஏற்றுக்கொண்டன.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சுகாதார சேவைகள் தொழிற்சங்க
முன்னணிகளின் கூட்டு, புதிய தண்டனைகள் தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. சிங்கள அதி
தீவிரவாதக் கட்சியான ஜே.வி.பி., புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த யுத்தத்தை ஆதரிப்பதோடு கடந்த மாதம்
கடைசி வாக்கெடுப்பு நடந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு
ஆதரவளித்தது. இந்த வரவு செலவுத் திட்டத்தில், இலவச சுகாதார சேவை போன்ற அத்தியாவசியமான சமூக
சேவைகளின் செலவில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பிரச்சாரங்களில் ஈடுபட்ட ஏனைய பிரதான தொழிற்சங்கம், சுகாதார துறை
தொழிற்சங்க கூட்டமைப்பாகும். இது பெயரளவில் பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமானதாகும். அமைச்சின்
புதிய தண்டனை நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாட அதன் தலைவர்கள் ஜனவரி 9ல் சந்தித்தனர்.
சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபமானது அரசியலமைப்பு ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுடன்
அரசாங்கத்துறை விதிமுறைகளுடனும் முரண்படுவதாக சுகாதார துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
ரவி குமுதேஷ் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். தொழிற்சங்கத்தால் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சர்வதேச தொழில் அமைப்பிலும்
(ILO) முறையீடு செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இந்த தொழிற்சங்கம் சுகாதார அமைச்சுக்கு வெளியில் புதிய விதிகளை
விலக்கிக்கொள்ளுமாறு கோரி மறியல் போராட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் ஐ.எல்.ஓ. க்கும் முறையீடு செய்வதால் இந்த நடவடிக்கைகள்
விலக்கிக்கொள்ளப்பட மாட்டாது. அவசியமானது என்னவெனில், தொழிலாளர்கள் மீது புதிய பொருளாதாரச் சுமைகளை
திணிக்கவும் மேலும் மேலும் ஜனநாயக விரோத வழிமுறைகளை பயன்படுத்தவும் நேரடியாக வழிவகுக்கும் அரசாங்கத்தின்
புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான அரசியல் பிரச்சாரமேயாகும். அரசாங்கத்தை விமர்சிப்பதற்குப்
பதிலாக இந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அறிக்கை இராஜபக்ஷவிற்கும் அவரது அமைச்சர்களுக்கும் தொழிலாளர்களின்
உரிமைகளைப் பாதுகாக்க தலையிடுமாறு அற்பத்தனமான வேண்டுகோளை விடுக்கின்றது.
சுகாதார ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள புதிய தண்டனைகள், ஏனைய பிரிவு
தொழிலாளர்களுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை விரிவுபடுத்த இராஜபக்ஷ அரசாங்கம் தயாராகிக்கொண்டிருக்கின்றது
என்பதற்கான எச்சரிக்கையாகும். குறிப்பிடத்தக்க வகையில், அண்மைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குபெறாத
வைத்தியர்கள் மற்றும் தாதிமார் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபம் உரியதாகும். இந்த
தண்டனைகளுக்கு எதிரான கூட்டுப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள்
சம்மேளனம் மற்றும் பொது சேவை தாதிமார் தொழிற்சங்கமும் இந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக மெளனம்
காக்கின்றன.
தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள், இலவச சுகாதார துறையுடன் நிற்கப்
போவதில்லை. யுத்தம் மற்றும் வாழ்க்கை நிலைமையின் மீதான அதன் தாக்கத்திற்கும் எதிராக வெகுஜன எதிர்ப்பு
வளர்ச்சி காண்பதை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், உழைக்கும் மக்களை பிளவுபடுத்த வேண்டுமென்றே
இனவாத பதட்டங்களை கிளறிவிடுவதோடு எந்தவொரு விமர்சனத்தை அல்லது எதிர்ப்பை அடக்குவதன் பேரில் மிகவும்
கொடூரமான வழிமுறைகளை முனனெடுப்பதற்கான சாக்குப் போக்காக "தேசிய பாதுகாப்பை"
பயன்படுத்திக்கொள்கிறது. வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், தோட்டத்
தொழிலாளர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் தமது உரிமைகள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக
போராடுவதால், அவர்கள் மீது யுத்த முயற்சிகளை கீழறுப்பவர்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. |