World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காUS bank losses intensify recession fears அமெரிக்க வங்கிகளின் இழப்புக்கள் மந்த நிலை அச்சங்களை அதிகப்படுத்துகின்றன By Patrick Martin 2007ம் ஆண்டு கடைசி கால்பகுதியில் அடைமானம் மற்றும் நுகர்வோர் கடன்களில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மேலும் இரண்டு வங்கிகள் திங்களன்று அறிவித்துள்ளன; இது அமெரிக்க நிதிய நெருக்கடி அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் மந்தநிலையை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தை வலுப்படுத்தியுள்ளது. நியூயோர்க் பபலோவைத் தளமாகக் கொண்டுள்ள M & T வங்கி நான்காம் காலாண்டு காலத்தின் வருமானங்களில் 70 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்புக்கள் பெரும்பாலும் Collatgeralized Debt Obligations எனப்படும் வீடு அடைமானப் பத்திரங்களை வணிகப் பத்திரங்களாக மாற்றக்கூடிய நிதியக் கருவியான அடைமானக் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும் உறுதிகளில் ஏற்பட்டுள்ள இழப்புக்களால் ஏற்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது. பிலடெல்பியாவில் உள்ள Sovereign Bancorp என்னும் வங்கி நான்காம் காலண்டில் அது $1.6 பில்லியன் பணத்தை நஷ்டம் எனத் தள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகவும் இது அடைமானக் கடன்களை ஒட்டியது என்றும் கூறியுள்ளது. ஆனால், $600 மில்லியன் இழப்பு நுகர்வோர் கடன்களில் கட்டாத நிலையினால் வந்தது என்று தெரியவந்துள்ளது; இது நிதிய நெருக்கடி பரவிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம் ஆகும். Sovereign வங்கி அது கார்க் கடன்கள் வழங்கி வந்திருந்த 15 மானிலங்களில் நெவடா, உடா, அரிஜோனா, பிளோரிடா, வடக்கு, தெற்கு கரோலினா உட்பட 7 மாநிலங்களில் கடன் கொடுப்பதை நிறுத்திவைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. திங்களன்று மிகப் பெரிய அமெரிக்க வங்கியான Citigroup பாரியளவிற்கு கிட்டத்தட்ட $24 பில்லியன் தொகையை நஷ்டக்கணக்கில் எழுத இருப்பதாவும், வங்கியில் இருந்து 24,000 பேர்களை பதவிநீக்கம் செய்யப் போவதாகவும் CNBS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வங்கி அதன் நான்காம் காலாண்டு வருமானம் பற்றி செவ்வாயன்று தெரிவிக்க இருப்பதாகவும் அதுவும் பங்கு இலாபம் கொடுப்பதில் வெட்டை அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் பல பில்லியன் டாலர் மதிப்புக்களை அடையும் பொருட்டு Citigroup முதலீட்டாளர்களை தேடி அலைகிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீட்பின் தலால் இதில் தொடர்பு உடையவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. புது மூலதனத்திற்காக வங்கிக்கு $15 பில்லியன் திரட்ட முயற்சிக்கிறது. திங்களன்று அரசாங்கத்திற்கு சொந்தமான சீன அபிவிருத்தி வங்கி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக இருந்த $2 பில்லியன் திட்டத்தை தொடருவது இல்லை என்ற முடிவிற்கு வந்த பின் Citigroup வேறு நிதிஉதவி செய்பவர்கள் உள்ளனரா என்று தேட முற்பட்டுள்ளது. திங்களன்று அமெரிக்காவின் மிகப் பெரிய பங்குச் சந்தை விற்பனை நிறுவனமான Merrill Lynch புது மூலதனத்திற்காக மேலும் $4 பில்லியன் நாடுவதாக பைனான்சியில் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது; குவைத் மூலதன அமைப்பு இதற்கு உதவக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது. மெரில் லிஞ்சைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட $14 பில்லியன் நஷ்டம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாபெரும் அமெரிக்க நிதிய அமைப்புக்கள் கையில் தொப்பியை ஏந்தி எண்ணெய் ஷேக்குகள் மற்றும் சீனா, தைவான், சிங்கப்பூர் ஆகியவற்றில் உள்ள அரசாங்க முதலீட்டு அமைப்புக்களிடம் பணத்திற்கு அலைவது என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகநிலையின் சரிவிற்கு ஒரு அறிகுறி ஆகும். மற்றொரு குறியீடு தொடர்ந்து டாலர் மதிப்பு வீழ்ச்சி பெற்று வருவது ஆகும்; போட்டி முதலாளித்துவ சக்திகளின் நாணயங்களுக்கும், தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்களுக்கு எதிராகவும் இந்த நிலை உள்ளது. லண்டன் வணிகத்தில் திங்களன்று தங்கம் $900 ஒரு அவுன்ஸிற்கு என்ற தரத்தில் இருந்தது; ஒரு கட்டத்தில் அது $914 என்ற தரத்தைத் தொட்டது; இது இதுகாறும் இல்லாத ஒரு நிலையாகும். பிளாட்டினம் ஒரு புதிய அளவீடான அவுன்ஸிற்கு $1,587 என்ற மதிப்பில், 27 வருஷங்களாக இல்லாத உயர்மட்டத்திற்கு சென்றது. இதுகாறும் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த மதிப்பான ஸ்விஸ் பிராங் 1.0912 விற்கு ஒரு டாலர் என்ற மதிப்பிற்கு டாலர் சரிந்தது; இதே நேரத்தில் ஏழுவார காலத்தில் மிகக் குறைவாத மதிப்பை யூரோ மற்றும் யென்னிற்கு எதிராகவும் அடைந்தது. ஒரு யூரோவிற்கு $1.4890 என்ற விகிதத்தில் டாலர் 1.50 தடை என்பதை முறிப்பதற்கு மிக அருகில் உள்ளது. இது பரந்த அளவில் உளரீதியான ஒரு மைல்கல் என்றும், இது தற்பொழுது டாலர்களில் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் நாடுகளிடையே பரந்த அளவில் அதை விற்றுவிடலாம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது; குறிப்பாக எண்ணெய் நாடுகள் மற்றும் ஆசிய ஏற்றுமதி நாடுகள் தங்கள் மேலதிக இலாபங்களை யூரோக்கள், யென் அல்லது தங்கள் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் உடைய மற்ற நாணயக் குவியலில் ஏதேனும் ஒன்றிற்கு மாற்றிக் கொள்ளத் தூண்டுதலாக இருக்கும். சமீபத்திய டாலர் சரிவு கடந்த வாரம் மத்திய வங்கி நிர்வாகக் குழுவின் தலைவர் பென் பெமாங்கே தெரிவித்த கருத்துக்களுக்கு விடையிறுப்பாக இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. அவர் அமெரிக்க பொருளாதாரத்திற்கு "கணிசமான கூடுதலான நடவடிக்கை" முட்டுக் கொடுத்து நிறுத்த அளிக்கப்படும் என்ற உறுதியைக் கொடுத்தார்; இந்த அறிக்கை பரந்த அளவில் அமெரிக்க வட்டி விகிதங்களை இம்மாதம் குறைந்தது அரை சதவிகிதம் குறைக்கக்கூடும் என்ற கருத்திற்குத் தள்ளியுள்ளது. நிதிய முறையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சரிவை ஒத்திப் போடும் முயற்சியில் வோல் ஸ்ட்ரீட் தூண்டுதலின் பேரில் செய்யப்படும் அமெரிக்க வட்டி விகிதத்தில் கூடுதலான வெட்டுக்கள் இறுதியில் நெருக்கடியை இன்னும் மோசமாகச் செய்யக்கூடும்; ஏனெனில் வட்டிவிகிதத்தை குறைப்பது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களை, டாலர் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் முதலீடுகளில் இருந்து இன்னும் கூடுதலான இலாபம் தரக்கூடிய முதலீடுகளுக்கு மாற்ற வைத்துவிடும். டாலர் மதிப்பின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மிகப் பெரும் அரக்கத்தனமாக உருப்பெற்றுள்ள அமெரிக்க வணிகப் பற்றாக்குறை ஆகும்; இது ஜனவரி 11ம் தேதி அமெரிக்க வணிகத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த நவம்பர் மாதத்தில் இது 14 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துவிட்டிருந்தது. வணிகப் பற்றாக்குறை 9.3 சதவிகிதம் உயர்ந்து $63.1 பில்லியன் என்று எதிர்பார்த்த அளவைவிடக் கூடுதலாக நின்றது; இதற்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் விலையில் 16.3 சதவிகித உயர்வும் ஒரு உந்துதல் ஆகும். எண்ணெய் இறக்குமதிகள் $34.4 பில்லியைத் தொட்டு மொத்த பற்றாக்குறையில் பாதிக்கும் அதிகமாக இருந்தது. சில்லரை விற்பனை பற்றிய புள்ளி விவரங்கள் செவ்வாயன்று பகிரங்கமாக டிசம்பரில் இருந்து அறிவிக்கப்பட உள்ளன; இவை நுகர்வோர் செலவினங்கள், அதிகபட்ச பெட்ரோல் செலவு மற்றும் வீடுகள் வெப்பப்படுத்துவதற்கான செலவினங்கள் என்று கூட்டாக நின்று வீடுகளின் மதிப்புக்களில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தின என்பதைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதம் சில்லறை விற்பனையில் உண்மையான குறைவு, கடந்த ஆண்டில் இதே மாதத்தில் இருந்ததோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜூன் மாதத்தில் இருந்து முதல் தடவையாக குறைவாக இருக்கும். தனிப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வந்துள்ள விற்பனை அறிக்கைகள் ஏற்கனவே நுகர்வோர் செலவினங்களில் கீழ்நோக்குச் சரிவின் பரிமாணங்களை தெரிவிக்கின்றன. Macy நிறுவனம் ஒரே கடையில் டிசம்பர் 2007 விற்பனையில் டிசம்பர் 2006 உடன் ஒப்பிடுகையில் 7.9 சதவிகிதச் சரிவு இருப்பதாகக் கூறியுள்ளது. Kohl நிறுவனம் 11 சதவிகிதம், Nordstrom 4 சதவிகிதம் எனச் சரிவைக் குறிப்பிட்டுள்ளன. இந்தப் பரந்த சரிவு உயர்மட்டம் மற்றும் மத்தியதர வருமான நுகர்வோர்கள் செலவினங்களை குறைத்துக் கொள்ளுவது பற்றிய குறிப்பைக் காட்டுகின்றன. மற்ற புள்ளிவிவரங்களும் வீடுகள் அடைமான நெருக்கடியின் பரந்த பரிமாணங்களை விரிவாக எடுத்துக் காட்டுகின்றன; இது நுகர்வோர் கடன்பெற்றுள்ள நெருக்கடியின் பொதுத் தன்மையாக மாறிவருகிறது. * ஒரு அடைமான வங்கியாளர்கள் அமைப்பின் மதிப்பீடு, கிட்டத்தட்ட 3 மில்லியன் குறைந்த பிணையுள்ள மாறக்கூடிய வட்டி விகிதக் கடன்களில் உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய கட்டங்கள் ஏற்கனவே தாமதாகிவிட்டதைக் காட்டியுள்ளது. *Freddie Mac என்னும் பெரும் அடைமான நிதிய நிறுவனம் தங்கள் அடைமானங்களை மறுநிதிய வசதிக்கு உட்படுத்தும் வீட்டுச் சொந்தக்காரர்கள் மூன்றாம் கால்பகுதியில் இரண்டாம் கால்பகுதியைவிடக் குறைவாக $20 பில்லியனைத்தான் பெற முடிந்தது என்பது கண்டுபிடித்துள்ளது. வீட்டு பங்குகளை பொறுத்தவரையிலான $60 பில்லியன் பணம் 2005ன் முதல் காலாண்டுக் காலத்தில் இருந்து மிகக் குறைவான தொகையாகும்; இது நுகர்வோர் செலவினங்களுக்கு இன்னமும் குறைந்த பணம்தான் கிடைக்கும் என்ற குறிப்பைக் காட்டுகிறது. * வீட்டு பங்கு வழிவகைக் கடன் விகிதங்களில் இருக்கும் பணம் கட்டாத நிலை செப்டம்பர்மாத இறுதிக்குள் 10 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு மிகவும் உயர்ந்துள்ளது என்பதை அமெரிக்க வணிகர்கள் சங்கம் கண்டுபிடித்துள்ளது. *மத்திய வங்கி நிர்வாகக் குழு கடந்த வாரம் மொத்த நிலைவையில் இருக்கும் கடன் அட்டைக் கடன் கிட்டத்தட்ட 11.3 சதவிகிதம் நவம்பர் 2007ல் ஆண்டு விகிதத்தில் உயர்வு பெற்றுவிட்டதாக தகவல் கொடுத்துள்ளது. ஆண்டிற்கு கடன் அட்டைக் கடன் 7.4 சதவிகிதம் உயர்ந்து $937.5 பில்லியன் என்று, 2003, 2005 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2ல் இருந்து 4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. நுகர்வோர்களின் பெருகிய கடன்தன்மை, செலவினங்களின் குறைவு என்பதுடன் இணைந்த வகையில், மில்லியன் கணக்கான வீடுகளில், தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதர வகுப்பில் இன்னும் கூடுதலான வகையில் அவர்களுடைய அன்றாடச் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக கடனில் மூழ்குவதாக தெரியவருகிறது. புதிய செலவினங்கள் முக்கிய நிதிய நெருக்கடிகளை தோற்றுவிக்கக் கூடும். இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகளான புஷ் நிர்வாகம், காங்கிரஸ், ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் வேட்பாளர்கள் பரபரப்புடன் தெரிவிக்கும் கருத்துக்கள் டைடானிக்கின் கப்பலின் மேல்தளத்தில் நாற்காலிகளை எப்படி ஒழுங்கமைப்பது என்ற கருத்துக்களுக்கு ஒப்பாகத்தான் உள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் கடந்த வாரம் செய்தி ஊடகத்திடம் புஷ் ஒரு ஊக்கம் தரக்கூடிய தொகுப்பை அமெரிக்கப் பொருளாதார உந்துதலுக்காக ஜனவரி 28ம் தேதி வரக்கூடிய நாட்டு நிலைமை பற்றிய உரையில் தெரிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளனர்; ஆனால் இது பற்றிய விவரங்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்று தெரிகிறது. கருவூலச் செயலாளரான ஹென்ரி போல்சன் ஜனவரி 11ம் தேதி அமெரிக்கப் பொருளாதாரம் "தடுத்து நிறுத்தப்படுமளவிற்கு" குறைந்துவிட்டது என்றும் நிதி உதவி வழங்க "உரிய நேர நடவடிக்கை மிகவும் முக்கியம்" என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரான நான்சி பெலோசி மற்றும் செனட்டின் பெரும்பான்மை கட்சித் தலைவரான ஹாரி ரீட், என்னும் இரு முக்கிய ஜனநாயகக் கட்சியின் காங்கிரசில் இருப்பவர்கள் புஷ்ஷிற்கு வெள்ளியன்று ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதியுள்ளனர்; இதில் "உங்களுடன் இணைந்து உழைக்க நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்திற்கு வெள்ளை மாளிகை சாதகமான விடையிறுப்பை கொடுத்துள்ளது; பெலோசி மத்திய வங்கித் தலைவர் பெர்லன்கேயைத் திங்களன்று சந்தித்து எத்தகைய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று விவாதித்தார். வணிகத்திற்கு சில வரி குறைப்புக்கள், வறிய தொழிலாளர்களுக்கு வரி குறைப்புக்கள் மற்றும் வேலையில்லாதோருக்கு வழங்கும் நலன்களில் குறைந்த அளவு விரிவாக்கம் அல்லது வீடுகள் வெப்பப்படுத்தப்படுவதில் சிறிது உதவி ஆகியவை இத்தகைய விவாதங்களின் விளைவாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது $50 முதல் $100 பில்லியன் வரை அளிக்கப்படலாம். ஆனால் இந்தத் திட்டங்களும் பிரச்சினைக்கு உரியவை; ஏனெனில் முக்கியமாக குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு கொடுக்கக்கூடிய உதவிகள் உட்பட காங்கிரசில் இருக்கும் குடியரசுக் கட்சியினர் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தக் கூடும். ஜனாதிபதி வேட்பாளர்களும் இணைந்த வகையில் கருத்தை தெரிவித்துள்ளனர்; குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பெருவணிகம், செல்வந்தர்கள் ஆகியோருக்கு இன்னமும் கூடுதலான வரிகுறைப்புகளை முன்மொழிகின்றனர்; இது தொழிலாள வர்க்கத்திடம் பரவியுள்ள பொருளாதார இடர்பாடுகளை தீர்க்க எப்படியும் உதவாது; ஜனநாயகக் கட்சியினரின் நிதி உதவி காயத்திற்கு அவசர கட்டு போடுவது போன்றவிதத்தில் சிறிய உதவியாகத்தான் இருக்கும். வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஹில்லாரி கிளின்டன் திட்டம் ஊக்கத் தொகையாக $70 பில்லியன் அளிக்கப்பட வேண்டும், வீடுகளை இழக்கும் நிலையை எதிர்கொள்ளும் உரிமையாளர்களுக்கும், வேலையில்லாதோருக்கான நலன்களின் விரிவாக்கத்திற்கும் இத்தொகை வேண்டும் என்றும் கூறுகிறது. இத்திட்டத்தைவிட சற்று கூடுதலாக பரக் ஒபாமா கூறுகையில் இது $75 பில்லியனாக இருக்க வேண்டும் என்றும் கூடுதலான தொகை வரிச் சலுகைகள் என்ற முறையில் வணிக நலன்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டங்கள் எவையும் அமெரிக்க சமூகப் பொருளாதார நெருக்கடியின் பரந்த பரிமாணங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு வாளி நீரில் ஒரு துளி நீர் விடுவதற்கு ஒப்பாகத்தான் இருக்கும். ஒரு மதிப்பீட்டின்படி கடந்த ஐந்து மாதங்களில் எண்ணெய் விலை $30 என பீப்பாய்க்கு உயர்ந்துள்ளதே அமெரிக்க நுகர்வோர்களுக்கு $150 பில்லியன் இழப்பைக் கொடுத்துள்ளது --இது கிளின்டன் மற்றும் ஒபாமா திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள "உதவி தொகையைப் போல்" இரு மடங்கு ஆகும். எந்தப் பெரு இன அரசியல்வாதியும் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் மிகப் பெரிய இலாபங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை கூறவில்லை. மாறாக கடந்த மாதம் ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள கூட்டாட்சிச் சட்ட மன்றத்தில் ஏற்கப்பட்டுள்ள விசை சட்டம் எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசின் மானிய தொகையான $12 பில்லியன் என்பதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்னும் அடிப்படையான வகையில், நுகர்வோர் செலவினங்களுக்கு ஒரு சிறிய உதவி கொடுத்தல் என்பது நிதியத் தொற்றுநோய் தன்மை பரவுதலுக்கு எதிரான தக்க நடவடிக்கையாக ஆகாது, அதபோல் கடன் சந்தைகளை மீண்டும் உறுதி செய்வதற்கும் பயன்படாது. வீடுகள் பிரிவுக் குமிழ் வெடிப்பு என்பது முன்னோடியில்லாத அளவில் ஒரு நிதிய நெருக்கடியின் ஆரம்பக் கட்டம்தான்; இது உலகம் முழுவதும் முதலாளித்துவ முறையின் உயிர்வாழும் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. |