World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian prime minister's visit to China seeks to boost bilateral ties, but tensions persist

இந்தியப் பிரதமரின் சீனப் பயணம் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த தலைப்படுகிறது, ஆனாலும் பதட்டம் தொடர்கிறது

By Deepal Jayasekara
30 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

மே 2004 முதல் இந்தியாவின் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் சீனாவுக்கான தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை ஜனவரி 13 முதல் 15 வரை மேற்கொண்டார். இந்த பயணத்தின் நிறைவில் சிங் அறிவித்ததாவது: " 'சீனாவைக் கட்டுப்படுத்துவோம்' என்றழைக்கப்படுவது போன்ற எந்த ஒரு முயற்சிகளிலும் இந்தியா ஒரு அங்கமாக இல்லை என்பதை சீனத் தலைமைக்கு நான் தெளிவாக்கி விட்டிருக்கிறேன்".

சிங்கின் கூற்றும் மற்றும் அவரது ஒட்டுமொத்த பயணமும் அமெரிக்காவுடன் "மூலோபாய கூட்டணி"யை இந்தியா பின்பற்றும் என்பதான சீனாவின் அச்சத்தை குறைப்பதான முயற்சியே. இரண்டாவது மற்றும் இது தொடர்பான இலக்கானது ஆசியாவின் இரண்டு "எழுச்சியுறும் சக்திகளுக்கு" இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகப்படுத்துவதற்கான வசதி செய்தலாகும்.

புஷ் நிர்வாகமும் மற்றும் சிங்கின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் ஒரு படைத்துறைசாரா அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பெரும் ஆற்றல் மற்றும் அரசியல் மூலதனத்தை முதலிட்டுள்ளன. அனைத்துலக அணு சக்திக் கழகம் மற்றும் அணுபொருள் வழங்குநர்கள் குழுவால் ஒப்புதல் பெறப்படும் பட்சத்தில், இந்த ஒப்பந்தமானது, பெரும் சக்திகளால் ஸ்தாபிக்கப்பட்ட அணுசக்தி வளர்ச்சிப் பரவல் தடுப்பு விதிகளுக்கு முரணான வகையில் அணு ஆயுதங்களை தயாரித்திருந்தாலும் மேம்பட்ட படைத்துறை சாராத அணுசக்தி தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதான ஒரு அரசு என்கிற ஒரு தனித்துவமான அந்தஸ்தை அகில அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்புக்குள் இந்தியாவிற்கு பெற்றுக் கொடுக்கும்.

இந்தியா ஒரு "உலக சக்தியாக" உருவாவதற்கு உதவுவதற்கான ஒரு வழியாக அமெரிக்காவுக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் இருப்பதாக புகழுரை அளிக்கும் புஷ் நிர்வாகம், முன்மொழியப்படும் இந்திய-அமெரிக்க "உலக மூலோபாயப் பங்காண்மை" வரும் தசாப்தங்களில் அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய இரண்டு அல்லது மூன்று அதி முக்கிய கூட்டணிகளில் ஒன்றாக வர்ணித்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை வேலைகளுடன், இந்திய அமெரிக்க இராணுவ உறவுகளை விரிவாக்குவதிலும் புஷ் நிர்வாகமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் தலைமையேற்று செயல்படுகின்றன. சீனாவைத் திகைக்கச் செய்யும் வண்ணம், சென்ற செப்டம்பரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெற்ற, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகளை ஓரிடத்தில் கொணர்ந்ததான கடற்படை பயிற்சியில் இந்தியா பங்கேற்றது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தனது நெருக்கமான கூட்டாளிகளாக திகழும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்த்து தன் தலைமையிலான நான்கு நாடுகள் இராணுவப் பாதுகாப்பு கூட்டணியில் இந்தியாவும் இறுதியாக சேர்ந்து கொள்ளும் என்ற தனது நம்பிக்கையில் அமெரிக்கா இரகசியம் எதுவும் கொண்டிருக்கவில்லை.

இந்தியாவினை சார்பு கொண்ட உறவுமுறைக்குள் பற்றிக் கொள்ளச் செய்வதற்கும், இது குளிர்யுத்த சமயத்தில் இந்தியா நெருக்கமாய் உறவுகள் கொண்டிருந்ததும் மற்றும் இந்தியாவுடன் முக்கியமான இராணுவ உதவிகள் வழங்குநர் மற்றும் தோழமை நாடாக தொடர்வதுமான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த உறவு ஏற்படுத்தக் கூடிய கவலைகள் மீதும் அமெரிக்கா கண் வைத்துள்ளது என்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதிகபட்ச நனவாக இருக்கிறது. இதுவரை இந்தியாவானது, உலகின் முக்கிய சக்திகளால் ஆதரவு நாடப்படும் ஒரு நாடாக திகழும் தனது தற்போதைய அந்தஸ்தின் மூலம் அனுகூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில், உலக புவிசார்-அரசியலில் வளர்ச்சியுறும் பிளவுகளுக்கு இடையே ஆற்றிலொருகால் சேற்றிலொருகால் வைக்கும் முயற்சியிலேயே சென்றிருக்கிறது. இவ்வாறு தான் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுடன் நெருக்கமான உறவுகளை தக்கவைத்துக் கொண்டே, சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளர் அந்தஸ்தையும் பெற முடிந்திருக்கிறது.

சீனா தன் பங்காக, இந்தியாவை குரோதமாக்காத வகையில் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறது. இந்திய - அமெரிக்க படைத்துறைசாரா அணு ஒப்பந்தம் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ள சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முறையாக இணைவது என்பது இந்தியாவின் பக்கத்தில் முறையற்றதாகத் தோன்றும் என்று தெளிவாக எடுத்துரைத்து விட்டது. ஆனால் அது இந்தியாவிடம் ஊடாடவும் கூட முயற்சித்துள்ளது. சீன ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ நவம்பர் 2006 இல் இந்தியாவிற்கு வருகை தந்த போது, பெருமளவில் மேம்படுத்தப்பட்ட பொருளாதார கூட்டுறவு, இராணுவப் பரிமாற்றங்கள் மற்றும் படைத்துறைசாரா அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்டதான இருதரப்பு உறவுகளில் எதிர்பாராத அளவுக்கு அதிகரிப்பை வழங்க அவர் முன்வந்தார். (பார்க்கவும் "அமெரிக்க கட்டுப்படுத்தும் மூலோபாயத்திற்கு மாற்றாக இந்தியாவை ஊடாடும் முயற்சியில் சீனா")

இந்த மாதம் சீனாவுக்கான தனது பயணத்தின் போது, சிங்கும் அவரது சரிநிகர் சீன பதவியாளர் வென் ஜியாபாவும், வர்த்தக அதிகரிப்பு, மேம்படுத்தப்பட்ட இராணுவ மற்றும் "பயங்கரவாத-எதிர்ப்பு" ஒத்துழைப்பு, மற்றும் இணைந்த காலநிலை மற்றும் எரிசக்தி முன்முயற்சிகள் உள்ளிட்ட, இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான உறவுகளை வளர்ப்பதை லட்சியமாகக் கொண்ட ஏழு பக்க ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டனர். "சீனா-இந்தியா நட்புறவு மற்றும் பொதுவான வளர்ச்சி" "சர்வதேச அமைப்பின் எதிர்காலத்தின் மீது செலுத்தத்தக்க ஆக்கமான பாதிப்புகள் குறித்து" இந்த அறிக்கை பேசியது.

இது தவிர, ரயில்வே, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, கிராம வளர்ச்சி, நில நிர்வாகம், விவசாயம் மற்றும் மரபு மற்றும் கலாச்சார மருத்துவ முறைகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல பகுதிகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு நல்குவது குறித்த மேலும் 10 ஒப்பந்தங்களும் சிங்கின் பயணத்தின் போது இந்திய சீன அதிகாரிகள் இடையே கையெழுத்தாயின.

விரிவாகும் பொருளாதார உறவுகள் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்துவதில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின. சிங் கூறினார், "எங்களது மூலோபாய மற்றும் ஒத்துழைக்கும் பங்காண்மையானது வலிமையான, விரிந்துபட்ட மற்றும் பரஸ்பர அனுகூலம் கொண்டதொரு பொருளாதார உறவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம்".

இந்திய சீன வர்த்தகமானது மிக மிக துரிதமாக வளர்ச்சி கண்டிருக்கிறது, மிகவும் குறைந்த நிலை அளவிலிருந்து ஆரம்பித்திருந்தாலும் கூட. சிங்கின் பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்களது இரு தரப்பு வர்த்தக இலக்கினை 40 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2010 ம் ஆண்டிற்குள் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உயர்த்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. நவம்பர் 2006 இல் ஹூ இந்தியா வருகை தந்தபோது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது, 2007 ம் ஆண்டிலேயே ஏறக்குறைய சாதிக்கப்பட்டு விட்டது.

இந்த வர்த்தகப் பெருக்கமானது உரசல்கள் இல்லாமல் நேர்ந்து விடவில்லை. சிங் சீனாவுக்கு கிளம்புவதற்கு முன்னதாக, சீனாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் எதனையுமோ அல்லது இன்னும் கூடுதலான துரித வர்த்தக தாராளமயமாக்கத்தையோ மேற்கொண்டு விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இந்திய வர்த்தக நிறுவனங்களில் இருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் அவரை முற்றுகையிட்டன. இந்தியாவின் பெருநிறுவன மேல்தட்டு இந்தியா தற்போது சீனாவுடன் 9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருடாந்திர வர்த்தக பற்றாக்குறை கொண்டுள்ளதை சுட்டிக் காட்டியது. இந்தியாவின் கவலைகளைப் புரிந்து கொண்ட சீன வர்த்தக அமைச்சர் சென் டெமிங், இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்திடம், இந்தியாவுக்கு தொடர்ந்து கொள்முதல் நடவடிக்கை குழுக்களை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

வர்த்தக உரசல்கள் ஒருபுறமிருக்க, இரு நாடுகளின் பொருளாதாரங்கள் எந்த அளவு வளர்ச்சியுறுகிறதோ, அந்த அளவுக்கு எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற ஆதாரங்களுக்கு அவர்கள் போட்டியிடுதலும் அதிகரிக்கிறது.

சென்ற மாதத்தில், இரு நாடுகளின் இராணுவங்களும் சீனாவின் கும்மிங்கில் தங்களது முதல் இணைந்த இராணுவ நடவடிக்கை பயிற்சியை மேற்கொண்டன. தனது பயணத்தின் போது செய்தியாளர் கூட்டத்தில் சிங் கூறினார், "எங்களது இரு இராணுவப் படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை ஆழப்படுத்துவதைத் தொடர [நாங்கள்] சம்மதித்திருக்கிறோம். எங்களது முதல் இணைந்த இராணுவ நடவடிக்கை பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம், இந்த ஆண்டில் இந்தியாவில் இரண்டாவது பயிற்சியை தொடரவும் ஒப்புக் கொண்டிருக்கிறோம்."

"பயங்கரவாத-எதிர்ப்பில்" இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்க இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியா காஷ்மீரில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மோதலை "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" ஒரு பகுதியாக சித்தரிக்க, சீனாவும் தனது சின்சியாங் மாகாணத்தின் இஸ்லாமிய சிறுபான்மையினரை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மத்தியில் இயங்கும் பிரிவினைவாதக் குழுக்களுக்கு எதிரான தனது சொந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" குறித்து அறிவித்தது.

சிங்கும் அவருக்கு சீனாவில் விருந்தளித்தவர்களும், இரு நாடுகளுக்கு இடையே 1962ம் ஆண்டில் ஒரு சிறிய போருக்கு இட்டுச் சென்றதான இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் இலக்கிலான பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல சபதமேற்றனர், ஆனாலும் பெரிதும் முன்னேற்றம் இருந்ததெனச் சொல்ல முடியாது.

மற்றவற்றுடன் சேர்த்து சீனாவுடன் படைத்துறை சாரா அணுசக்தி வர்த்தகத்தை வளர்க்கவும் முன்வந்ததன் மூலம், இந்திய பிரதமர் தனது பயணத்தை, அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சீனாவின் ஆதரவைப் பெறும் பொருட்டு பயன்படுத்திக் கொள்ள முயன்றார். தனது பயணத்தின் கடைசி நாளில் சிங் அறிவித்தார், "படைத்துறை சாரா அணுசக்தித் துறையில் இந்தியா சீனாவுடன் உள்பட அனைத்துலக ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறது."

பிற்பாடு, இந்தியாவிற்கு திரும்பும் வழியில், செய்தியாளர்களிடம் பேசிய சிங், படைத்துறை சாரா அணுசக்தி ஒத்துழைப்பில் சீனா ஆர்வம் காட்டும் அதே வேளையில், அணுசக்தி ஆதாரங்கள் வழங்குநர் குழுவில் (NSG) இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினை அது வழிமொழியுமா என்பதை அது தெரிவிக்க மறுத்து விட்டது என்றார், "உறுதியான, வரையறுத்த பதிலை நான் பெற்றிருப்பதாகக் கூற முடியாது, இருந்தாலும் நம்பிக்கை மற்றும் புரிதல் உறவானது தற்போது ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக என் மனது சொல்கிறது, அதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். சம்பந்தப்பட்ட அமைப்புகளின் முன்னதாக இந்த விவகாரம் வரும்போது, சீனா ஒரு தடையாக இருக்கும் என்று நான் கருதவில்லை. நான் இன்று ஒரு வாக்குறுதியைப் பெற்றிருக்கிறேன் என்று கூற முடியாது".

அணுசக்தி ஆதாரங்கள் வழங்குநர் குழு ஒருமைப்பாட்டு விதியின் கீழ் செயல்படுகிறது, அதாவது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செயல்முறைக்கு வர வேண்டுமென்றால் சீனாவின் ஆதரவு அவசியம் என்கிற வகையில். ஆனால் சீனாவின் ஆதரவைப் பெற சிங் கவனம் கொள்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதன் ஆதரவு இந்தியாவின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி, ஒப்பந்தத்திற்கு எதிரான தனது எதிர்ப்பைக் கைவிட ஊக்குவிப்பதாக அமையக் கூடும் என்பது அவரது கணிப்பாக இருக்கிறது. சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது தனது நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு இடது முன்னணியின் ஆதரவைச் சார்ந்ததாக உள்ளது.

ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்திற்கான தனது முயற்சியை சீனாவை ஆதரிக்கச் செய்யவும் இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனாலும், இந்த விஷயத்திலும் மாட்டிக் கொள்ளா வண்ணம் சீனா தவிர்த்து விட்டது. பாதுகாப்பு சபையில் "சீர்திருத்தத்திற்கு" மட்டும் தன் ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறி விட்டது.

நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் முயற்சித்துக் கொள்ளும் வேளையிலும், இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவுகளானவை பதற்றம், பகைமை, மற்றும் பரஸ்பர சந்தேகம் நிரம்பியதாகவே தொடர்கிறது.

ஒருவருடன் ஒருவர் மோதல் இன்றியே இரு நாடுகளுமே வளர்வதற்கு இரண்டிற்கான இடமும் தாராளமாக உள்ளது என்று இந்திய மற்றும் சீன அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே அவர்கள் மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தங்களது மேலாதிக்கத்திற்கான தந்திர வேலைகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, தனது ஆதிக்கப் பகுதியாக தான் கருதும் தெற்கு ஆசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் தாக்கம் குறித்து இந்தியா பதட்டம் கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக, சீனா பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது, தனது இருப்பினை இலங்கை மற்றும் பங்களாதேஷ் உடனும் விரிவாக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மிகுந்த நாடான பர்மாவில் இந்திய சீன போட்டி வெளிப்படையானதாக இருக்கிறது.

சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை தீவிரமாக எதிர்நோக்கும் நிலையிலும், இந்தியா துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மற்றும் உற்பத்தித் துறையின் சில பிரிவுகள் உள்ளிட்ட பல துறைகளில் சீன முதலீட்டினை எச்சரிக்கை கண் கொண்டே அணுகுகிறது. லண்டனில் இருந்து செயல்படும் யுரேஷியா குழும நிபுணர் சீமா தேசாய், தனது ஜனவரி 14 அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகிறார், "அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை கண்காணிப்பதற்கு இந்தியா தேசிய பாதுகாப்பு வழிகாட்டல்களை செயல்முறையில் கொண்டுள்ளது, சீனாவில் இருந்து முன்மொழியப்பட்ட ஏராளமான முதலீட்டு திட்டங்கள், உதாரணமாக, Huawei Technologies மற்றும் ZTE முன்வைத்தவை, தடுக்கப்பட்டுள்ளன."