WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Iranian government intensifies crackdown on left-wing
opposition
SEP and ISSE demand immediate release of arrested
students
இடதுசாரி எதிர்க்கட்சிகள் மீதான ஒடுக்குமுறையை ஈரானிய அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது
சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பும்
கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க கோருகிறது
By Joe Kay
28 January 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
ஜனவரி 15ல், உள்நாட்டு எதிர்ப்பின் மீதான மிருகத்தனமான ஒடுக்குதலின் ஒரு பகுதியாக
ஈரானில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பை (இது தீவிரவாத இடதுசாரி என்றும் அழைக்கப்படுகிறது)
சேர்ந்த மேலும் 10 உறுப்பினர்களை ஈரானிய அரசாங்கம் கைது செய்தது. ஜனவரி 24ல் மேலும் இரு மாணவர்கள்
கைது செய்யப்பட்டனர். தற்போது 40க்கும் மேலான உறுப்பினர்கள் ஈரானின் மோசமான
Evin சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 4ல், "மாணவர்
தினம்" என்ற பெயரில்
ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற 33 மாணவர்களை ஈரானிய போலீஸ் படைகள் கைது செய்தன. 1953ம் ஆண்டு
டிசம்பர் 7ல் அப்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதியான ரிச்சார்ட் நிக்ஸனின் வரவை எதிர்த்தபோது அமெரிக்க
ஆதரவு பெற்ற ஷா அரசாங்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று மாணவர்களின் மரணத்தை ஒட்டி அந்த நாள்
ஞாபகார்த்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. (பார்க்கவும்:
"Iranian
government cracks down on student protests.")
சமீபத்திய எதிர்ப்பு அலையில் பங்கேற்ற மாணவர்கள் ஈரானிய அரசாங்கம் மற்றும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த திட்டங்கள் ஆகிய இரண்டுக்கும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மாணவர்கள்
மீதான இந்த கைது நடவடிக்கையானது பெருமளவிலான அடக்குமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஜனாதிபதி
மஹ்மூத் அஹ்மதினிஜாத் அரசாங்கத்தின் மீது வளர்ந்து வரும் எதிர்ப்பை பிரதிபலிக்கிறது.
இந்த மாதம் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் முந்தைய கைது நடவடிக்கைகளுக்கு
எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டு வந்தனர். தீவிரவாத இடதுசாரி என்பது எந்தவித
அரசியல் கட்சியுடனும் இணைந்துகொள்ளாத ஒரு சோஷலிச மாணவர் குழுவாகும். அது தற்போதைய ஈரானிய அராசாங்கத்தையும்
மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மொஹமத் கதாமி மற்றும் ஹசீமி ரப்ஷான்ஜா ஆகியோருடன் தொடர்புடைய
உத்தியோகபூர்வ மறுமலர்ச்சி இயக்கத்தை எதிர்த்த மாணவர்களை கொண்டது.
ஒரு உயர்ந்தபட்ச ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர், டிசம்பரில் கைது செய்யப்பட்ட
மாணவர்களில் ஏழு பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட
தகுதியுடையவர்களாக உள்ளனர், ஆனால் அவர்களின் குடும்பங்கள் அதற்கான செலவை ஏற்க முடியாமல் உள்ளன.
பெருமளவிலான மாணவர்கள் விடுவிக்கவே முடியாத நிலையில் உள்ளனர் என்பதுடன் அவர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு
வருகின்றனர்.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர், இம்மாத
தொடக்கத்தில் அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த குடும்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி,
மாணவர்கள் அவர்களின் சிறைக்காலத்தில் முழுமையாக தனிமையான சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால்,
தாங்கள் வெளிநாட்டு குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கெடுக்க முயன்றிருப்பதாகவும்
தொலைக்காட்சியில் தாமாகவே ஒத்துக்கொள்ள அந்த மாணவர்கள் தீவிர அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பல மாணவர்களின் மீது கடுமையாக அடிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவரின் கால் மற்றும் தோள்பட்டை உடைக்கப்பட்டு விட்டதாகவும், பிறரின் உடல்களில்
காயங்களும், வெட்டுக்களும் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய கைதுகளுக்கு முன்னதாக, ஈரானின் ஒரு நடவடிக்கையாளரிடம் உலக
சோசலிச வலைத் தள குழு பேசிய போது, ஈரானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தண்டனைக் குறித்து
அவர் விவரித்தார். "பல
சமயங்களில் பல மாணவர்கள் சிறைச்சாலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்."
என்று கூறிய அவர், "கைதிகளை
விசாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்கச் செய்ய கைதிகளை அடிப்பது என்பது பொதுவான விடயம் தான், ஆனால் அவர்கள்
பெருமளவில் உளவியல்ரீதியான அழுத்தத்தில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஒரு மாணவர் தற்கொலைக்கு
முயன்றதாகவும், பின் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் நாங்கள் அறிந்தோம்."
என்று தெரிவித்தார்.
(பார்வையிடவும்:
"An
interview with an Iranian activist on arrests of left-wing students.")
போராடும் மாணவர்களுக்கு எதிராக ஈரானிய அரசாங்கத்தால் வழங்கப்படும்
தண்டனை மேலும் தீவிரமடைந்து வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த மாதத்திற்கு தொடக்கத்தில்,
சுதந்திரம் மற்றும் சமத்துவ மாணவர் அமைப்பின் உறுப்பினர் அல்லாத ஒரு குர்திஷ் மாணவர், ஈரானிய புலனாய்வு
அமைச்சகத்தின் சிறையில் இருக்கும் போது கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன்னதாக அவர் மீது
"சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகளை காட்டியதாக" அந்த மாணவரின் பெற்றோர்கள்
தெரிவித்தனர்.
டிசம்பர் முதல், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு
வளாகங்களில் பரவலான கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட பலர், விசாரிக்கப்படுவதற்காக
அவர்களின் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்ட "ஒழுங்குமுறை
குழு" என்றழைக்கப்பட்டதற்கு
வரவழைக்கப்பட்டனர். இந்த மாதத்தில் கைது செய்யப்பட்டவர்களை மிக வெளிப்படையாகவே நெருக்கமாக அரசாங்கம்
கண்காணித்தது.
கைது நடவடிக்கைகளை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், போராட்டங்களில் ஈடுபட்ட
மாணவர்கள், அவர்களின் வகுப்புகளில் இருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்பது உட்பட, ஒழுங்கு நடவடிக்கைகளாலும்
பயமுறுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நேரம் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்ட இடம் இரண்டும்
ஈரானிய ஆட்சியின் முழுமையான பிற்போக்கான மற்றும் ஜனநாயகவிரோத குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. ஈரானிய
மக்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற ஷாவின் கொடூரமான நடவடிக்கைகளுக்குரிய ஒரு ஞாபகார்த்தநாளில்
மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைக்கப்பட்ட கொடுமையான சிறையானது ஷாவின் கீழ் இருந்த வெறுக்கப்பட்ட
உள்நாட்டு உளவுப்படையான SAVAK
ஆல் உருவாக்கப்பட்டது. இதுவரை கூட, அரசியல் கைதிகளை சித்திரவதைப்படுத்தவும்,
தடுத்துவைக்கவுமே அது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான
சர்வதேச மாணவர் அமைப்பும் கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய
கோருகின்றது. அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட வேண்டும். இந்த மாணவர்கள் எவ்வித
குற்றமும் செய்யவில்லை. யுத்தம் மற்றும் ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக முழுவதுமான நியாயமான எதிர்ப்புக்கு
குரல் கொடுத்ததல்லாமல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. |