:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan army advances into key LTTE areas
இலங்கை இராணுவம் புலிகளின் பிரதான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் முன்னேறுகிறது
By Sarath Kumara
26 August 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கை இராணுவம், சுமார் ஒரு வருடமாக இழுபட்டுக்கொண்டிருந்த இராணுவ
இக்கட்டு நிலைமையின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து வடக்குப் பிரதேசத்தில் பல பிரதான நிலைகளை
அண்மையில் கைப்பற்றியுள்ளது. தசாப்தத்துக்கும் மேலாக புலிகளின் நிர்வாக மற்றும் இராணுவத் தலைமையகமாக
இயங்கி வந்த கிளிநொச்சி நகரை சூழ சுற்றிவளைப்பை இறுக்குவதே இந்த நடவடிக்கையின் முழு நோக்கமாகத் தெரிகின்றது.
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கோட்டைகளைக் கைப்பற்றியதை அடுத்து கடந்த
ஜூலையில் இராணுவம் வடக்கில் தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கியது. ஆயினும், புலிகள் தம்மை பலவீனமாக்கும்
பிளவை எதிர்கொண்ட கிழக்கைப் போல் அன்றி, வடக்குப் பிரதேசத்தில் இராணுவம் ஒருமுகப்படுத்தப்பட்ட எதிர்ப்பை
சந்தித்தது. இங்கு புலிகள் விரிவான பாதுகாப்பை தயார் செய்திருந்தனர். நவம்பரிலும் மற்றும் ஏப்பிரலிலும் முகமாலையில்
முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் அழிவுகரமாக முடிந்ததோடு, இராணுவம் நூற்றுக்கணக்கான சிப்பாய்களை
இழந்ததோடு கணிசமானளவு இராணுவத் தளபாடங்களையும் இழந்தது.
பல மாதங்களாக முன்னரங்குகள் ஒப்பீட்டளவில் ஒரு நிலையில் இருந்தன. பிரதான
தாக்குதல்களை விட, புலிகளுக்கு அதிகம் உயிரிழப்புக்களை ஏற்படுத்த மட்டுமன்றி உள்ளூர் மக்களை பீதிக்குள்ளாக்கவும்
இராணுவம் அதன் உயர்தரமான சுடு திறனையும் விமானத் தாக்குதல்களையும் பயன்படுத்தி இடைவெளியின்றி எதிரியை
தாக்கி பலவீனப்படுத்தும் யுத்தத்தை முன்னெடுத்துள்ளது. உத்தியோகபூர்வ பக்கச் சார்பை தவிர்த்தாலும், புலிகளில்
உயிரிழந்தவர்களின், காயமடைந்தவர்களின் மற்றும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரே
தொடரான செய்திகள், இத்தகைய வழிமுறைகளால் புலிகளுக்கு சேதம் அதிகம் என்பதை குறிக்கின்றன.
தீவின் வடமேல் திசையில் மடு பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தைச்
சூழ உள்ள பிரதேசத்தை இராணுவம் கடந்த ஏப்பிரலில் கைப்பற்றிய போதே இந்த இராணுவ இக்கட்டு நிலை
முதலாவதாக தகர்க்கப்பட்டது. ஜூலை நடுப்பகுதியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கரையோர
கிராமமான விடத்தல் தீவை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். விடத்தல் தீவு, தென்னிந்திய மாநிலமான
தமிழ் நாட்டில் இருந்து குறுகிய பாக்கு நீரினைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அது புலிகளுக்கு இன்றியமையாத
விநியோகப் பாதையாகும். பல வாரங்களாக நீடித்த கடுமையான மோதலின் பின்னரே புலிகள் அங்கிருந்து
வெளியேறினர்.
ஆகஸ்ட் 12, மன்னாரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முளங்காவிலை
துருப்புக்கள் நெருங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. ஆகஸ்ட் 13, கிளிநொச்சிக்கு தெற்கே 15
கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கனமாக பலப்படுத்தப்பட்ட சிறிய கல்விளான் நகரை இராணுவம் கைப்பற்றியது.
ஆகஸ்ட் 22, அருகில் உள்ள துணுக்காய் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்தது. துணுக்காய் சிறிய
நகராக இருந்த போதிலும், புலிகள் மல்லாவியில் தமது கோட்டையை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் இந்த
நகரை தக்கவைத்துக்கொள்வது இன்றியமையாததாகக் கருதப்பட்டது.
ஆகஸ்ட் 16, வட கிழக்கில் மணலாறு பகுதியில் ஆண்டான் குளத்தில் காட்டில் உள்ள
புலிகளின் தளத்தை இராணுவம் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. இந்த தளத்தில் சுமார் 100
நிலக்கீழ் பங்கர்களும் நான்கு விரிவுரை மண்டபங்களும், கிணறு மற்றும் ஏனைய வசதிகளும் இருந்ததாக ஒரு
இராணுவப் பேச்சாளர் கூறினார்.
யுத்த பிரதேசங்களுக்குள் சுயாதீன ஊடகவியலாளர்கள் செல்ல
அனுமதிக்கப்படாதமையினால் இந்த செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ள வழியில்லை. அரசாங்கமும் புலிகளும்
எதிர்த்தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்துவதும் மற்றும் தமது தோல்வியை குறைத்து
அறிவிப்பதும் வழமையாகும். எதாவதொரு விதத்தில் இராணுவத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கடத்தி,
சித்திரவதை செய்து மற்றும் படுகொலை செய்வதன் ஊடாக, பீதி மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலை ஒன்றை
இராணுவமும் அதன் துணைப்படை பங்காளிகளும் உருவாக்கிவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இந்த புதிய
முன்னேற்றங்களை நிச்சயமாக பற்றிக்கொள்வர். ஆகஸ்ட் 12, லண்டனை தளமாகக் கொண்ட டைம்ஸ் சஞ்சிகைக்கு,
"இந்த ஆண்டு முடிவில் அது [கிளிநொச்சியை கைப்பற்றுவது] சாத்தியமாகும்" என பாதுகாப்புச் செயலாளரும்
ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த வார கடைசியில் நடந்த மாகாண
சபை தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்த பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, தேர்தல் தினத்தன்று இராணுவம்
கிளிநொச்சியைக் கைப்பற்றும் எனவும் புகழ்ந்துகொண்டார். "நாங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளோம். எங்களது
பார்வையில் இருந்து கிளிநொச்சி வெகு தூரத்தில் இல்லை," என அவர் கூறினார்.
கடந்த வாரக் கடைசியில் இராணுவம் கிளிநொச்சியை அடையவில்லை. ஆனால், அரசாங்கத்தின்
கூற்றுக்கள் தொடர்பாக புலிகள் மெளனம் காப்பது அந்த செய்திகளுக்கு நம்பகத் தன்மையை கொடுக்கிறது. முன்னேற்றங்களை
மறுப்பதற்குப் பதிலாக, புலிகள் இராணுவத்தால் உருவாக்கப்பட்டுள்ள மனிதாபிமான பேரழிவின் மீது குவிமையப்படுத்தியுள்ளனர்.
"இரண்டு வாரங்களுக்கு முன்னர் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீதான இடைவிடாத
செல் தாக்குதல்கள் அவர்களை மேலும் கிளிநொச்சிக்கு உள்ளே நகரத் தள்ளியுள்ளன," புலிகளின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.
"இன்னமும் தற்காலிக தங்குமிடங்களைப் பெறாமல் இன்னமும் மரங்களுக்குக் கீழ் வாழும் உள்ளூரில் இடம்பெயர்ந்த
மக்கள், மழையில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கின்றனர்," என அது மேலும் தெரிவித்தது.
கொழும்பில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம்
(யூ.என்.எச்.சீ.ஆர்.), அண்மைய மோதல்கள் புதிய அகதிகள் அலையை தோற்றுவித்திருப்பதாக
உறுதிப்படுத்தியது. அதன் புதிய மதிப்பீடானது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னியில் இருந்து ஏற்கனவே
இடம்பெயர்ந்துள்ள 125,000 பேருடன் மேலும் 55,000க்கும் 75,000 க்கும் இடைப்பட்டவர்களை
சேர்த்துள்ளது. யூ.என்.எச்.சீ.ஆர். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர விநியோகங்கள் ஆபத்தான
வகையில் மெதுவாக இடம்பெறுவதாக எச்சரித்துள்ளது.
கிழக்கில் செய்தது போலவே, அரசாங்கம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்
மீது பொருளாதார தடை ஒன்றை அமுல்படுத்தியுள்ளது. செல் தாக்குதல்கள், குண்டு வீச்சுக்கள் மற்றும் அடிப்படை
வசதிகள் இன்மையாலும் இருப்பிடத்தில் இருந்து வெளியேறுபவர்கள், கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனியாவை பொது மக்கள் அடைவதற்காக இராணுவம் மூன்று
வெளியேறும் வழிகளை மட்டுமே திறந்துவிட்டுள்ளது.
இராணுவத் தாக்குதல்களின் கொடூரம், இராணுவத்தின் சொந்த உயிரிழப்பு
எண்ணிக்கையில் கோடிட்டுக் காட்டுப்பட்டுள்ளது. ஜூலை வரையான ஏழு மாதங்களில் 751 படையினர்
கொல்லப்பட்டுள்ளதோடு 4,913 படையினர் காயமடைந்துள்ளனர் என கடந்த மாதம் பாராளுமன்றத்துக்கு
முன்வைக்கப்பட்ட புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்தத் தரவுகள் இராணுவத்தின் உண்மையான இழப்புக்களை
ஏறத்தாழ நிச்சயமாக குறைத்து மதிப்பிடுபவையாகும்.
இராணுவ வெற்றிகள்
. எவ்வளவு செலவு செய்தேனும்
புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் இரக்கமற்ற உறுதிப்பாட்டுக்கு குறையாத, பல
காரணிகளின் விளைவே கிழக்கிலும் இப்போது வடக்கிலும் இராணுவம் பெற்ற வெற்றிகளாகும். 2005 நவம்பரில்
நடந்த ஜனாதிபதி தேர்தலில் குறுகிய வெற்றியைப் பெற்றதில் இருந்தே, இராஜபக்ஷ உதிய ஆயுதங்களை
கொள்வனவு செய்யவும் யுத்தத்திற்கு நிதி வழங்கவும் பாதுகாப்பு செலவுக்கு மேலதிகமாக பிரமாண்டமான
தொகையை கொட்டியுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது இராணுவத்தின் திட்டமிட்ட குண்டுத்
தாக்குதல்களுக்கு சமாந்தரமாக, அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தமிழ் சிறுபான்மையினருக்கும்
யுத்தத்தை விமர்சிப்பவர்களுக்கும் எதிராக திட்டமிடப்பட்ட அச்சமூட்டும் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
இராணுவம் மற்றும் துணைப்படைகளாலும் இயக்கப்படும் கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல்
ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கமானது தொழிலாளர்கள், விவசாயிகள்
மற்றும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் உட்பட எந்தவொரு பரந்த எதிர்ப்பையும்
"புலி பயங்கரவாதிகளுக்கு" உதவும் செயலாகவும் தாய் நாட்டை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகவும்
முத்திரை குத்த தயங்குவதில்லை.
புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும் மெளனமாக
ஆதரிப்பது இராஜபக்ஷவுக்கு சார்பான ஒரு பிரதான காரணியாகும். இராணுவத்தின் பயங்கரமான மனித உரிமைகள்
மீறல் சாதனைகள் தொடர்பாக எப்போதாவது விடுக்கும் விமர்சனங்ளுக்கு மேலாக, அமெரிக்கா, ஐரோப்பா,
ஜப்பான் மற்றும் நோர்வே போன்ற இலங்கையின் சர்வதேச சமாதான முன்னெடுப்பு என சொல்லப்படுவதற்கு
அனுசரணையளித்த நாடுகள் அனைத்தும் கொழும்பு அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன. 2002ல்
கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடந்த ஜனவரியில் இராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக
கிழித்தெறிந்ததை "சர்வதேச சமூகம்" உறுதியான மெளனத்துடன் வரவேற்றது.
புலிகளை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்துவதிலும் இலங்கை இராணுவத்தின் இயலுமையை
ஊதிப் பெருக்கச் செய்வதிலும் அமெரிக்காவும் குறிப்பாக இந்தியாவும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஆற்றியுள்ளன.
இந்த ஆண்டு முற் பகுதியில் இந்தியா வழங்கிய தீர்க்கமான புலணாய்வு தகவல்கள், புலிகளின் பல விநியோகக்
கப்பல்களை ஆழ் கடலில் வைத்து மறித்து மூழ்கச் செய்ய இலங்கை கடற்படைக்கு வாய்ப்பளித்தது. இந்திய
இராணுவம் இலங்கையில் தமது சமதரப்பினரை பயிற்றுவிப்பதில் மேலும் மேலும் ஈடுபட்டு வருவதோடு கொலைக்குப்
பயன்படாத இராணுவ உபகரணங்கள் என சொல்லப்படுவதையும் விநியோகிக்கின்றது. அதே சமயம், தமிழ் நாட்டில்
புலிகளின் நடவடிக்கைகள் மீது பாய்ந்து விழுகின்றமை புலிகளின் விநியோகப் பிரச்சினையை மேலும்
உக்கிரமாக்கியுள்ளது.
வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் ஐரோப்பாவும் கனடாவும் முறையே 2006 மற்றும்
2007ல் புலிகளை சட்ட விரோதமாக்கியமை, புலிகளுக்கு பெருந்தொகையான தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடம்
இருந்து கிடைத்த நிதி மற்றும் அரசியல் ஆதரவை கீழறுத்தது. அதிலிருந்து அமெரிக்க, ஐக்கிய இராச்சிய மற்றும்
ஐரோப்பிய நாடுகளும் புலிகளின் ஆதரவாளர்களை சுற்றி வளைத்து நிதி சேகரிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுத்து
வருகின்றன. இதன் விளைவாக, புலிகள் அமைப்பு அரசியல் ரீதியில் தடுமாறுகிறது. அதன் தனித் தமிழ் அரசுக்கான
முன்நோக்கு எப்பொழுதும் ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவிலேயே தங்கியிருந்தது.
கடந்த வாரம் மாகாண சபை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய
ஜனாதிபதி இராஜபக்ஷ இசிவு நோயாளிபோல் பிரகடனம் செய்ததாவது: "ஒவ்வொரு அங்குல நிலமும் மீண்டும்
கைப்பற்றப்படும் வரை மற்றும் ஒவ்வொரு பயங்கரவாதியும் கொல்லப்படும் வரை அல்லது கைப்பற்றப்படும் வரை
எந்தவொரு சூழ்நிலையின் கீழும் அல்லது செல்வாக்கின் கீழும் பின்வாங்க மாட்டோம்." ஆகஸ்ட் 23 மாகாண சபை
தேர்தலை வென்ற பின்னர், "எமது வீரத் துருப்புக்கள் இந்த தேர்தல் வெற்றியில் இருந்து எமது நாட்டில் இருந்து
இரத்தம் தோய்ந்த பயங்கரவாதத்துக்கு இறுதியாக முடிவு கட்டும் வரையான மோதல்களில், பலத்தையும் மன
உறுதியையும் பெற்றுக்கொள்வார்கள்," என பறைசாற்றிக் கொண்டார்.
25 ஆண்டுகால நீண்ட இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகள் இன்னமும்
உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், புலிகளை நசுக்குவதில் இராணுவம் அடையும் வெற்றி முதலில் இந்த யுத்தத்துக்கு
வழிவகுத்த அரசியல் விவகாரங்களில் எதையும் தீர்த்து வைக்காது. அத்துடன் ஒரு புதிய அரசியல் நெருக்கடியை
உடனடியாக உருவாக்கும். 1948ல் சம்பிரதாயபூர்வமாக சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, சிங்கள பெரும்பான்மையினர்
மத்தியில் தமது ஆதரவை தக்கவைத்துக்கொள்ளவும் தொழிலாளர் வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தி வைக்கவும்
ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதில் தங்கியிருக்கின்றன.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான
வாழ்க்கைத் தரத்துக்கான உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் தமது இயலாமையை மூடி மறைப்பதற்காக
கொழும்பு அரசியல் ஸ்தாபனம் யுத்தத்தை சுரண்டிக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் (யூ.என்.பி.)
தமது சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழிலாளர் மற்றும் விவசாயிகள் மத்தியில் இருந்து வெகுஜன எதிர்ப்பு
தோன்றிய நிலையிலேயே 1983ல் அது யுத்தத்தை முன்னெடுத்தது. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,
வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதமையினால் எதிர்ப்புக்
கிழம்பிய போதே 2006ல் மீண்டும் யுத்தத்தை தொடங்கியது.
புலிகளை இராணுவ ரீதியில் நசுக்க இலங்கை அரசாங்கத்தால் இயலுமானால், அந்த
வெற்றி அடிநிலையில் உள்ள இனவாத பதட்டங்களை அல்லது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை
தீர்க்க எதுவும் செய்யப் போவதில்லை. யுத்தத்திற்காக "அர்ப்பணிக்க" வேண்டும் என உழைக்கும் மக்களை
கோரும் இராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் உள்ள சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகள்,
சேவை முன்னேற்றம் மற்றும் போராடும் விவசாயிகளுக்கு நிதி உதவிகள் போன்ற கோரிக்கைகளை உடனடியாக எதிர்கொள்வார்.
அதற்கான அவரது பதில் தவிர்க்க முடியாதபடி இராணுவ ரீதியானதாக இருக்கும்: சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்
உட்பட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிராக பொலிஸ் அரசு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
|