World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South Africa: General strike against price rises

தென் ஆபிரிக்கா; விலை அதிகரிப்புக்கு எதிராக பொது வேலை நிறுத்தம்

By Chris Talbot
7 August 2008

Back to screen version

புதன் கிழமை நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தம் தென் ஆபிரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடைய செய்துள்ளது. உணவு மற்றும் எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக தென் ஆபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (COSATU) அதன் 20 லட்சம் அங்கத்தவர்களுக்கு ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

மின்சாரக் கட்டணம் 27.5 வீதத்தால் அதிகரிக்கும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்தே இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அலைபோல் தொழிலாளர்களின் எதிர்ப்பு ஊர்வலம் பிரிட்ரோரியா வீதி வழியாக ஜனாதிபதி தாபு மெபிகி அலுவலகத்திற்கு சென்றது என நேரில் கண்டவர்கள் விளக்கினர். ஏனைய ஊர்வலங்கள் டர்பன், கேப் டவுன், லேடிஸ்மித், கிலெர்க்ஸ் டோர்ப், பொலொக்வான், விற் பாங் ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

தங்க சுரங்கங்கள் மூடப்பட்டன, மக்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, மோட்டார் கார் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. உலகின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான அங்கலோ கோல்ட் அசந்தி, அதன் எல்லா சுரங்கங்களும் ஒரு நாள் மூடப்பட்டதாக கூறியது. "எங்களுடைய சுரங்க நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன" எனவும் "இன்று சுரங்க வாயில் ஒன்றும் இயங்கவில்லை" எனவும் அலன் பினி கூறினார்.

எவ்வளவு உற்பத்தி இழப்பு ஏற்பட்டது என கம்பனி கூறவில்லை.

உலகத்தில் ஐந்தாவது பெரிய தங்க உற்பத்தியாளரான ஹார்மொனி, தமது எல்லா சுரங்கங்களும் வேலை நிறுத்தத்தினால் தாக்கத்துக்குள்ளானது எனக் கூறியது.

சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்க பேச்சாளர் லெசிபா செசோகா நிருபர்களுக்கு கூறியதாவது: "சுதந்திர அரச மாகாணத்தில் எமது எல்லா கிளைகளும் COSATU யின் நடவடிக்கையில் பங்கு பற்றியதுடன், பெரும்பாலும் ஹார்மோனி உற்பத்திகள் எல்லாமே மூடப்பட்டன".

சக தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டதிற்கு எதிராக ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க கடந்த வாரம் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தினால் ஹார்மோனி சுரங்கங்கள் பாதிக்கப்பட்டன. இரண்டு நாள் வேலை நிறுத்தத்தினால் 60-70 கிலோ பெறுமதியான தங்கம் கம்பனிக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உலகத்தின் மிகப்பெரிய பிளாட்டினம் சுரங்க உரிமையாளர் அங்கலொ பிளாட்டினம், 71 வீதமான அதன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக கூறியது. உலகத்தில் இரண்டாவது பெரிய உலோக தயாரிப்பாளரான இம்பாலா பிளாட்டினம், அதன் 40 வீதமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் என தெரிவித்தது.

உலகத்தில் மிகப்பெரிய சுரங்க கம்பனியான அங்கலொ அமெரிக்கன், அதன் 55 வீதமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் எனக் கூறியது. ஆனால் அதன் 9 தெற்கு ஆபிரிக்கன் தங்க சுரங்கங்கள் திறக்கப்பட்டிருந்ததாக கம்பனி கூறியது.

டைம்லர் அதன் கிழக்கு லண்டனில் உள்ள தொழிற்சாலையை மூடியது. போர்ட் நிறுவனம், போர்ட் எலிசபெத் மற்றும் சில்வர்டோனில் உற்பத்திகளை ஒரு நாள் மூடியது. வொல்க்ஸ் வொக்கன், ஒரு நாளைக்கு சாதாரணமாக 450 வாகனங்களை உற்பத்தி செய்கின்ற உய்தகே தொழிற்சாலையை மூடத் தள்ளப்பட்டது.

ஜொஹானெஸ்பேர்க்கில் உள்ள தெற்கு ஆபிரிக்கன் பொருளாதாரத்தின் நிதி மையத்தை வேலைநிறுத்த நடவடிக்கைகள் பாதித்ததன் மூலம் கெளடெங் மாகாணத்தில் உள்ள மெற்ரோ ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்தது. ஜொஹானெஸ்பெர்க்கில் வேலை நிறுத்தத்தால் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. போட் எலிசபெத்தில் பஸ் இருக்கவில்லை. பல பகுதிகளில் உள்ள வீதிகளில் வாடகை வாகன சேவை நடத்தப்படவில்லை.

கட்டுமானப் பணிகள் ஒரு நாள் நிறுத்தப்பட்டன. 2012ம் ஆண்டு உலக கோப்பைக்கான வசதிகளை ஏற்படுத்தும் கட்டிட வேலைகள் நிறுத்தப்பட்டன.

ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் பெரிய எண்ணிக்கையில் வேலைநிறுத்த அழைப்புக்கு ஆதரவு கொடுத்தார்கள். 100க்கு மேற்பட்ட ஆடை நிறுவனங்கள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தெற்கு ஆபிரிக்கன் ஆடைத் தொழிலாளர் சங்கம் 93 வீதமான அங்கத்தவர்கள் வேலைநிறுத்த அழைப்பை ஏற்று பங்குபற்றினார்கள் என அறிவித்தது.

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டதால் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டன.

பெரிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டன, எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றதால் வீதிகள் மூடப்பட்டன. டர்பேர்னில் உள்ள பெரிய களஞ்சியத்தில் ஒன்றான சொப்றைற் திறந்து இருந்தது. ஆனால் வேலை செய்வோர் இருக்கவில்லை.

விலை ஏற்றத்திற்கு எதிராக கடந்த வாரத்தில் மூன்று மாகாண ரீதியான வேலைநிறுத்தங்களை அடுத்தே இந்த தேசிய வேலை நிறுத்தம் நடைபெற்றது.

வேலை நிறுத்த அழைப்புக்கு கிடைத்த பாரிய ஆதரவானது விலைவாசி உயர்வுக்கும், பரந்த மக்களின் தேவைகள் சம்பந்தமாகவும் அரசாங்கத்தின் அலட்சியப்போக்குக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் அளவுகடந்த கோபத்தை பிரதிபலிக்கின்றது. கடந்த வருடம் உணவு விலை 17 வீதத்தினால் அதிகரித்துள்ளது, வட்டி வீதம் 20 வீதத்தாலும், எண்ணெய் விலை 36 வீதத்திற்கு மேலாகவும் அதிகரித்துள்ளன. அதே காலத்தில் சம்பளம் 12 வீதத்தால் மாத்திரம் உயர்ந்தது.

வேலை செய்கிறவர்களே இத்தகைய விலை உயர்வினால் பாதிக்கப்படுவார்களாயின், தென் ஆபிரிக்காவின் 48 மில்லியன் மக்கள் தொகையில் 40 வீதமான வேலையில்லாதோர் மிகவும் மோசமான வறுமை நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.

சுரங்கங்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மின்சாரக் பற்றாக்குறையினால் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. சுரங்கப் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், மின்சாரக் பற்றாக்குறையின் விளைவாக தாம் வேலை இழப்போமோ என அஞ்சினர்.

கடந்த 5 வருடங்களாக சராசரி பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு 5 வீதமாக இருந்தது. ஆனால் கடந்த வருடம் அது 3 வீதத்திற்கு குறைவாக வீழ்ச்சி கண்டது. பொருளாதார வளர்ச்சி நலிவடைந்ததை தொடர்ந்து வேலையில்லாமை மேலும் அதிகரிக்கிறது.

COSATU அதன் அங்கத்தவர்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியினால் வேறு வழியில்லாமல் வேலைநிறுத்தத்தை தேசிய மட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தொழிற்சங்கங்கள் தங்களுடைய அங்கத்தவர்களின் நியாயமான எதிர்ப்பை திசை திருப்பும் முயற்சியாக, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்சின் புதிய தலைவர் ஜெகப் சுமாவுக்கான ஆதரவு பிரச்சாரத்துக்குள் அந்த எதிர்ப்பை திருப்புகின்றது. கேப் டவுணில் உள்ள எதிர்ப்பாளர்கள் சுமாவுடன் தொடர்புள்ள பாடலான "உம்ஷினி வம்மி" "எனது இயந்திர துப்பாக்கியை கொண்டுவா" என்ற பாடலை பாடினார்கள்.

COSATU, சுமாவின் கீழ் உள்ள ANC அரசாங்கம், மெபெகியின் கீழ் உள்ள ANC அரசாங்கத்தை விட வேறுபட்டது என்ற போலி நம்பிக்கையை பரப்புகின்றது. உண்மை என்னவெனில், சுமா 1999ம் ஆண்டிலிருந்து 2005 ஆண்டுவரை மெபெகியின் உப ஜனாதிபதியாக இருந்தார். தென்னாபிரிக்கா மின்சார உற்பத்தி நிறுவனமான எஸ்கொம்மை தனியார்மயமாக்கும் திட்டத்தை உருவாக்கும்போது சுமா அரசாங்கத்தில் இருந்தார். இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை ஏனெனில், சிதைந்து போன உட்கட்டமைப்பு இலாபம் ஈட்டுவதை தடுக்கும் என்பதை கம்பனிகள் புரிந்துகொண்டிருந்தன.

சுமா அங்கத்தவராக இருந்த அரசாங்கமே பொது சேவைக்கு நிதியை வெட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலை தொடர்ந்து பின்பற்றியது. ஏற்கனவே பழைய எஸ்கொம்மின் உட்கட்டமைப்பு புதுப்பிக்கப்படாததன் காரணமாக விநியோகத்தை நிறுத்தவேண்டியதாயிற்று. இதன் நேரடி விளைவாகவே 27 வீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. திருத்த வேலைக்கான நிதி திட்டத்திற்கு அரசாங்கம் நிதி வழங்க மறுத்துவிட்டது.

சுமாவின் கழுத்தளவுக்கு இருந்த சுதந்திர சந்தை நடவடிக்கைகளே மின்சாரக் கட்டணம் உயர்வுக்கு வழிவகுத்தது. அவர் மெபெகியை வெளியேற்றுவதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்ததிலிருந்து, உள்நாட்டுக்குள் மக்கள் நலன் பற்றி தம்பட்டம் அடிக்கும் அதே நேரத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதே கொள்கையை தொடர்வதாக தெளிவு படுத்தினார்.

COSATU, அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து நெருங்கிய கூட்டை வைத்திருந்தது. தமது வாழ்க்கை நிலைமைகள் மீதான பாரிய தாக்குதலை முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்காவின் சாதாரண மக்களின் துன்பத்திற்கு தொழிற்சங்க அதிகாரத்துவமே பொறுப்பு ஏற்க வேண்டும். மக்களின் ஆத்திரம் வளர்ச்சியடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர்கள் அதை ஆர்ப்பாட்டமாகவும் ஒரு நாள் வேலை நிறுத்தமாகவும் திசை திருப்புவார்கள். கிராமப்புற ஏழைகளாக அல்லது வேலையற்றோராக இருக்கும் பல தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் எதையும் வழங்கவில்லை.

தென் ஆபிரிக்கன் கம்யூனிஸ்ட் கட்சி (SACP) சுமாவுக்கும், விலைவாசி ஏற்றம் சம்பந்தமான எதிர்புக்களுக்கும் ஆதரவு கொடுத்துள்ளது. ஆனால் அது ANC அரசாங்கத்திற்கும் அதன் ஆரம்பத்திலிருந்து ஆதரவு கொடுத்தது. அரசாங்கத்தின் சுதந்திர சந்தை கொள்கையின் தாக்கங்களுக்கான பொறுப்பில் அவர்களும் பங்கு ஏற்கவேண்டும். COSATU, SACP, ANC ஆகியன தென் ஆபிரிக்காவின் பரந்த மக்களின் நலன்களுக்கு எதிராக ஒன்றிணைந்து தொழிற்பட்டன.

ஆளும் கூட்டுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகள், கறுப்பு மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கும் செல்வத்தை குவிக்க விரும்பும் முதலாளி வர்கத்திற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதையே பிரதிபலிக்கின்றது. COSATU, SACP மற்றும் சுமாவும் மக்களின் எதிர்ப்பை வாகனமாக பயன்படுத்தி மெபெகியின் குழுவை ஆட்சியிலிருந்து அகற்றி, தங்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு தயாரிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கொள்கை மெபெகி பின்பற்றிய கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல.

COSATU பொதுச் செயலாளர் சிவெல்லின்சிமா வாவி, கேப் டவுனில் வேலைநிறுத்தம் செய்தோர் மத்தியில் உரையாற்றும் போது கடுமையாக பேசினார்.

"ஒரு தொழிலாளி வேலை இழந்தாலும், அமைச்சர்கள் வெளியேற வேண்டும். மற்றவர்கள் செய்யும் குற்றங்களுக்கு எங்களை நட்டஈடு செலுத்த வைக்கிறார்கள்" என வாவி கூறினார். ஆனால் மின்சாரக்கட்டணம் உயர்வதை குறைப்பதில் வெற்றியீட்டியதாக வாவி த சொவேற்றன் பத்திரிகைக்கு பெருமையாகக் கூறினார்.

"ANC உடன் எங்களுடைய ஒப்பந்தம் இல்லையாயின் நாடு 60 வீதத்திற்கு மேலாக இப்பொழுது செழுத்த வேண்டி இருந்திருக்கும். இந்த உயர்வுக்கு எதிராக COSATU போராட்டத்தை முன்னெடுத்தது. நாம் இப்பொழுது 27 வீதம்தான் செலுத்த வேண்டும், இது முன்னேற்றமானது," என வாவி கூறிக்கொண்டார்.

COSATU மின்சார நெருக்கடி சம்பந்தமான இணைந்த மகாநாட்டுக்காக அமைச்சர்களை மே மாதம் சந்தித்தது. விற்பனை வரி வெட்டு, சமூக ஒதுக்கீடுகளை அதிகரிப்பது மற்றும் ஏழைகளுக்கு கூப்பன்களை வழங்குவது உட்பட்ட ஒரு தொகை சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதாக வாவி கூறினார்.

"உடனடியாக ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் அவை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று மக்களுக்கு கூறினார்கள்."

வாவி ஏற்றுக்கொண்டது போல், எண்ணெய் கட்டணத்தில் 27 வீத அதிகரிப்பானது அந்த மாநாட்டுக் கூட்டத்தின் விளைவேயாகும். இதற்கு கைமாறாக COSATU வென்ற ஒரு சில சலுகைகள் பெரும்பாலும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டன. COSATU அரசாங்கத்துடன் இணைந்தது சாதகமான செல்வாக்காகவும் மற்றும் பாரிய விலை உயர்வில் தனது சொந்த பங்கை ஒரு வெற்றியாகவும் வாவி முன்வைக்கிறார்.

பொது வேலை நிறுத்தத்தில் விலைவாசி ஏற்றத்திற்கு எதிரான தொழிலாளர்களின் கோபம் தெளிவாக வெளிப்பட்டது. ஆனால் அவர்கள் வாவி போன்ற தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களுடன் கட்டுண்டிருக்கும் வரை, அவர்களால் தங்களை தாங்களே காத்துக்கொள்வதில் வெற்றிகொள்ள முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved