World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government intimidates voters in two provincial council elections

இலங்கை அரசாங்கம் இரு மாகாணங்களுக்கான தேர்தல்களில் வாக்காளர்களை அச்சுறுத்துகிறது

By Saman Gunadasa

22 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் அதன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு வழியில்லாமல் இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் அடிப்படையில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் அதே வேளை, ஆளும் கூட்டணியானது எதிர்க் கட்சிகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் எதிரான சகலவிதமான அச்சுறுத்தல் மற்றும் சரீர வன்முறையை நாடியுள்ளது.

ஆகஸ்ட் 19, தேசிய ஒளிபரப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வட மத்திய மற்றும் சப்பரகமுவ மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் யுத்தத்தை ஆதரிப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக தெளிவுபடுத்தினார். அச்சுறுத்தலுக்கு சமமான முறையில் அவர் எச்சரித்ததாவது: "இந்தத் தேர்தல் முடிவுகளால் அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்படுமானால், யுத்தத்தில் ஏற்கனவே பெற்ற வெற்றிகள் ஆபத்துக்குள்ளாகும்."

இராஜபக்ஷவின் தேர்தல் மூலோபாயம் கரடுமுரடானதும் பிற்போக்கானதுமாகும். 2006 நடுப்பகுதியில் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிய அவரது அரசாங்கம், இழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களுக்கும் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் அழிவுக்கும், அதே போல், பிரமாண்டமான இராணுவ வரவுசெலவுத் திட்டத்தாலும் மற்றும் உலக ரீதியில் எண்ணெய் மற்றும் உணவு விலை அதிகரிப்பால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு சீரழிவுக்கும் நேரடி பொறுப்பாளியாகும். யுத்தத்தின் மீது மாத்திரம் குவிமையப்படுத்துவதன் மூலம், அவர் பரந்த அதிருப்தியை திசைதிருப்ப எண்ணுவதோடு எந்தவொரு எதிர்ப்பையும் தேசப்பற்றின்மை அல்லது தேசத் துரோகம் என முத்திரை குத்துகிறார்.

இராணுவத்தின் புதிய முன்னேற்றங்களைப் பற்றிய பிதற்றலுக்கு ஜனாதிபதி தனது ஒளிபரப்பை பயன்படுத்திக்கொண்டார். மிகப் பெரும் வரைபடம் ஒன்றின் முன் நின்றுகொண்டு, அதில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி குறுகியிருப்பதை காட்டிய அவர், "யுத்த முனையில் அரசாங்கம் வழங்கும் ஆதரவு மற்றும் இராணுவத் தளபதிகளின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால், இப்போது இராணுவத்தின் மனவுறுதி உயர்ந்த மட்டத்தில் உள்ளது," என பிரகடனம் செய்தார். வாக்காளர்கள் யுத்த முயற்சிகளை கீழறுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேலை நிறுத்தங்களுக்கு எதிராக அச்சறுத்தும் வகையில் எச்சரித்த இராஜபக்ஷ: "[இராணுவம்] நான் [புலிகளின் கட்டுப்பாட்டிலான] முல்லைத்தீவு மாவட்டித்திற்குள் நுழையும் போது, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு சென்றன. நான் [புலிகளின் கோட்டையான] கிளிநொச்சிக்குள் நுழையும் போது மாணவர்கள் எனது வீடான அலரி மாளிகைக்குள் பாய்ந்து விழுகின்றனர். இவை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகள்," எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் கவலைகொண்டுள்ளது போல், இந்த தேர்தல் யுத்தம் தொடர்பான ஒரு கருத்துக் கணிப்பாகும். இதன் படி, ஆளும் கூட்டணிக்கும் மற்றும் அதன் இராணுவக் கொள்கைகளுக்கும் வழங்கும் ஒரே வாக்குதான் சட்டப்பூர்வமான வாக்காகும். வாக்காளர்களையும் எதிர்க் கட்சிகளையும் பயமுறுத்தவும் அதே போல் வாக்கு மோசடியில் ஈடுபடவும், பொலிசுடன் கூட்டாக செயற்படும் அரசாங்க சார்பு குண்டர் படைகளையும் மற்றும் அரசாங்க வளங்களையும் அணிதிரட்டிக்கொள்வதன் பேரில், இந்த இரண்டு மாகாண சபைகளும் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இராஜபக்ஷவால் கலைக்கப்பட்டன.

எதிர்க் கட்சிகளின் அலுவலகங்களையும் எதிர்க் கட்சி வேட்பாளர்களின் வீடுகளையும் குண்டர்கள் தீ வைத்து நாசமாக்கியுள்ளனர். பொலிசார் இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததோடு உத்தியோகபூர்வ முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துள்ளனர். ஆகஸட் 13ம் திகதி, சப்பகரகமுவ மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க பெல்மதுலையில் வைத்து குண்டர்களால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளானார்.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான பிரச்சாரம் என்ற தேர்தலைகளைக் கண்காணிக்கும் அமைப்பு, தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான 200 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 65க்கும் மேற்பட்ட வன்முறைகள் கடுமையானவை. இவற்றில் துப்பாக்கிச் சூடும் அடங்கும். 30 வன்முறைகளுக்கும் அதிகமானவற்றில் ஆளும் கூட்டணி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக அரச வளங்களைப் பயன்படுத்தியுள்ளது. இது இலங்கை சட்டத்தின் படி சட்ட விரோதமானதாகும்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வடமத்திய மாகாணத்துக்கான தனது பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டீ.எம்.வி.பி.) மங்களம் மாஸ்டரை சேர்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கிழக்கு மாகாணத்தின் தமிழ் ஆயுதக் குழுவின் அரசியல் கட்சியாகவே டீ.எம்.வி.பீ. ஸ்தாபிக்கப்பட்டது. கருணா குழு என்றழைக்கப்படும் இந்த இராணுவக் குழு இலங்கை இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படுவதோடு காணாமல் போகும் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளுக்கும் இழிபுகழ் பெற்றதாகும். இந்த ஆண்டின் முற்பகுதியில் கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலில் குண்டர் தாக்குதல் மற்றும் வன்முறைகளின் மூலம் டீ.எம்.வி.பீ. குறுகிய வெற்றி பெற்றது.

யூ.என்.பி. மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) இரு பிரதான வலதுசாரி கட்சிகளாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு) நாட்டின் மத்திய மலையக மாவட்டங்களில் உள்ள தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை தளமாகக் கொண்டிருப்பவையாகும்.

இந்தக் கட்சிகளில் எவையும் அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை சவால் செய்யவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தத்தைத் தொடங்கி வைத்தமைக்குப் பொறுப்பாளியான யூ.என்.பி., வட மத்திய மாகாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை நிறுத்தியுள்ளது. தனது கொடூரமான இராணுவச் சாதனைகளில் பேர் போன பெரேராவை நிறுத்துவதன் மூலம், யூ.என்.பி. தனது சொந்த இராணுவ நம்பிக்கையையும் மற்றும் யுத்தத்திற்கான முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரக் கடைசியில் சண்டே லீடர் பத்திரிகைக்கு பெரேரா தெரிவித்ததாவது: "வட மத்திய மாகாணத்தின் கட்டுப்பாட்டை வெல்வதே தற்போதைய நிலைமையில் எனக்கு நடக்கக்கூடிய சிறந்த விடயமாகும்... என்னைப் போன்றவர்களை மாகாண உயர் பதவியில் வைத்திருப்பது அரசாங்கத்திற்கு முன்னேற்றகரமானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். அந்த வகையில், அரசாங்கத்தால் சுதந்திரமாக யுத்தத்தை முன்னெடுக்க முடியும். மக்களையும் பிராந்தியத்தையும் எவ்வாறு பார்த்துக்கொள்வது என்பது எனக்குத் தெரியும்."

சிங்கள பேரினவாதம் மற்றும் மக்கள் சார்பு வாய்வீச்சுக்களின் கலவையை அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி. 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்ததோடு புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்தையும் உச்சிவரை ஆதரிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளாத அதே வேளை, பாதுகாப்புச் செலவை மேலும் பிரமாண்டமான அளவு அதிகரிக்குமாறு மீண்டும் மீண்டும் ஜே.வி.பி. அழைப்பு விடுக்கின்றது. அது யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தர சீரழிவுக்கு முடிவுகட்டுமாறு விடுக்கும் வெற்று அழைப்புக்களுடன் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கையையும் ஒன்றிணைக்கின்றது.

இந்த ஆண்டு முற்பகுதியில் ஜே.வி.பி.யில் பிளவு ஏற்பட்டது. அதில் இருந்து பிரிந்து சென்ற கூட்டமும் வெளிப்படையாக அரசாங்கத்தை ஆதரிப்பதோடு அதன் பிற்போக்கு யுத்தத்தை முழுமையாக பாதுகாக்கின்றது. தமது ஆதரவு சரியும் நிலையில், ஜே.வி.பி. தனது மக்கள் சார்பு வாய்வீச்சுக்களை புதுப்பித்துள்ளது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளின் பேரில் அது முன்வைக்கும் கூற்றுக்கள், விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வெட்டுக்கு பங்களிப்பு செய்யும் யுத்தத்திற்கான ஜே.வி.பி. யின் ஆதரவுடன் நேர் எதிராக நிற்கின்றது. அதன் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டாலும் கூட, ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அவசரகால அதிகாரங்களுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணியும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துக்கொள்ளும் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்த இரு கட்சிகளும் தொழிற்சங்கங்களாகவும் செயற்படுவதோடு, அந்த பலத்தைப் பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க பிரச்சாரங்களையும் கீழறுப்பதில் இவை பொறுப்புச் சொல்ல வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், "எமது ஐக்கியத்தையும் பலத்தையும் நிரூபிப்பதற்காக" இ.தொ.கா. வுக்கு வாக்களிக்குமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை வேறு வார்த்தைகளில் சொன்னால், மாகாண சபையிலும் தேசிய ரீதியிலும் இ.தொ.கா. வின் பேரம் பேசும் நிலையை பலப்படுத்துவதாகும்.

சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களினால் உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் பரந்த அதிருப்தி தொடர்பாக எந்தவொரு கட்சியும் இந்தத் தேர்தலில் குரல் கொடுக்கவில்லை. 30 வீதத்தை தாண்டியுள்ள நாட்டின் பண வீக்கம் மற்றும் வாழ்க்கையை ஓட்டுவதில் தமது சொந்த நெருக்கடிகள், முடிவில்லாமல் செல்லும் யுத்தத்துடன் கட்டுண்டுள்ளதை காண்கின்றனர். யுத்தத்திற்கான நடைமுறை ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் அதே வேளை, பெரும்பாலானவர்கள் அதை நிறுத்துவதற்கு சக்தியற்றவர்களாக உணர்கின்றனர். இறுதி ஆய்வில், இந்த உணர்விலேயே இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தங்கியிருக்கின்றது மற்றும் அனைத்து எதிர்க் கட்சிகளும் இதையே ஊக்குவிக்கின்றன.

எவ்வாறெனினும், இந்தத் தேர்தலில் வெகுஜன எதிர்ப்பு வெளிபடுத்தப்பட்டால் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம். அவ்வாறு வெளிப்படுத்தப்பட்டால் அது உருச் சிதைந்த வகையில் மட்டுமே வெளிப்படும். இந்த வாரம் டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் அரசாங்கத்தின் பிரச்சார மூலோபாயம் பற்றி வலுக்குறைந்த எச்சரிக்கை ஒன்றை விடுத்தது: "அரசாங்கம் அதன் முட்டைகளில் பெரும்பாலானவற்றை யுத்தக் கூடைக்குள்ளேயே போடுவதோடு, இரு மாகாணங்களையும் சேர்ந்த வாக்காளர்களுக்கு இந்த முட்டைப் பொரியல்கள் சுவையானதாக இருக்குமா இல்லையா என்பதை நாடு புரிந்துகொள்ள வெகுகாலம் செல்லாது."