World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Musharraf resigns as Pakistan's political crisis deepens

பாக்கிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஆழமடைகையில் முஷாரஃப் இராஜிநாமா

By Peter Symonds
19 August 2008

Back to screen version

தன்னுடைய உள்நாட்டு நண்பர்களாலும் வெளிநாட்டு ஆதரவாளர்களாலும் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், பாக்கிஸ்தானின் இராணுவ வலிமை நிறைந்த பர்வேஸ் முஷாரஃப் நேற்று, இவ்வாரம் தொடங்க இருக்கும் பெரிய குற்ற விசாரணை நடவடிக்கைகளை எதிர்கொள்ளுவதைவிட, நாட்டின் ஜனாதிபதி என்னும் பதவியை முறையாக இராஜிநாமா செய்தார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் செளதி அதிகாரிகள் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவம் அரசாங்கத்திற்கு முன்னாள் சர்வாதிகாரிக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கொடுத்திருந்த அழுத்தம் சம்பந்தப்பட்ட சூழ்ச்சிக்கையால்களின் திரைமறைவு காட்சிகளுக்கு பின்னே ஒருவாரகாலத்தை தொடர்ந்து முஷாரஃப் இராஜினாமா வந்துள்ளது. தன்னுடைய இராஜிநாமாவிற்காக சலுகைகள் ஏதும் கொடுக்கப்பட்டுள்ளாரா என்பதை முஷாரஃப் மறுத்தாலும், "கெளரவமாக வெளியேறுவதற்கு" அவரை அனுமதிக்கும் வகையில் ஒரு உடன்பாடு காணப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை.

முஷாரஃப்பின் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்-க் (PML-Q) பெப்ருவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகளான பாக்கிஸ்தானிய மக்கள் கட்சி (PPP), பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் பிரிவு (PML-N) ஆகியவற்றிடம் அவமானகரமான தோல்வியை அடைந்ததில் இருந்தே சுவரில் எழுதப்பட்ட இந்த வாசகம் புலனாயிற்று. ஒன்பது ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சிக்கும் வாஷிங்டனின் "போலித்தனமான பயங்கரவாதத்திற்கு எதிரான" போருக்கு ஆதரவு கொடுத்ததால் முஷாரஃப் பரந்த அளவில் வெறுக்கப்படுகிறார்; பிந்தைய நிகழ்வு பாக்கிஸ்தானின் ஆப்கானிய எல்லைகளில் இருக்கும் பழங்குடி மக்கள் பிரதேசங்களில் கிட்டத்தட்ட ஒரு உள்நாட்டுப் போரை தூண்டி விட்டுள்ளது.

பல மாதங்களாக புஷ் நிர்வாகமும் அதன் நட்பு நாடுகளும் PPP தலைமையில் இருக்கும் கூட்டணி அரசாங்கத்திடம் முஷாரஃப்புடன் ஒத்துழைக்குமாறு அழுத்தம் கொடுத்தன; PPP அதை ஓரளவு செய்ய முயன்றது. PML-N மற்றும், 1999ல் இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் பிரதம மந்திரி பதவியில் இருந்து அகற்றப்பட்ட அதன் தலைவர் நவாஸ் ஷெரிப்பும் மக்கள் எதிர்ப்பை பயன்படுத்தி பெரிய குற்ற விசாரணையை நாடியதுடன் கடந்த ஆண்டு முஷாரஃப்பால் நீக்கப்பட்ட 57 தலைமை நீதிமன்ற நீதிபதிகளை பழையபடி பதவியில் இருத்தவும் முற்பட்டனர். ஷெரிப் மேமாதம் PML-N மந்திரிகளை அமைச்சரைவையில் இருந்து வெளியே இழுத்துக்கொண்டு இப்பிரச்சினைகளில் உடன்பாடுகள் காணப்பட முடியாவிட்டால் கூட்டணியை விட்டு நீங்குவதாகவும் அச்சுறுத்தினார்.

அரசாங்கத்திற்கு பெருகிய முறையில் இழப்பை எதிர்கொண்ட PPP தலைவர் அசிப் அலி ஜர்தாரி இறுதியில் ஆகஸ்ட் 7ம் தேதி முஷாரஃப் மீது பெரிய குற்ற விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்தார். கருத்துக் கணிப்புக்கள் இதற்கு பெரும் மக்கள் ஆதரவைக் காட்டின-- கிட்டத்தட்ட 75 சதவிகித கருத்து தெரிவித்தவர்கள் ஆதரவு கொடுத்தனர்; ஜனாதிபதியை அகற்றுவதற்கு ஆதரவு கொடுத்த நிலையில், நேற்று பாக்கிஸ்தான் நகரத் தெருக்களில் நடைபெற்ற தன்னெழுச்சியான, இயல்பான களிப்பு கொண்டாட்டங்கள் இதைப் பிரதிபலித்தன. ஜர்தாரி பெரிய குற்ற விசாரணை தொடங்கும் என்று அறிவித்தாலும், முறையான குற்றப்பத்திரிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை; ஆயினும், திரைக்குப் பின்னால் ஒரு உடன்பாட்டை காண்பதற்கு இவ்வாறு கால அவகாசம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கணிசமான சர்வதேச அழுத்தம் தேக்க நிலையை கடப்பதற்கும் பெரிய குற்றவிசாரணையை தொடக்காமல் இருப்பதற்கும் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி போகத்தான் வேண்டும் என்பதை தயக்கத்துடன் உணர்ந்த வாஷிங்டன் அதைச் சிறிதும் விரும்பவில்லை என்றாலும், முஷாரஃப்பின் குற்றங்கள் மற்றும் ஜனநாயக விரோத வழிவகைகள் மக்கள் முன்னிலையில் வைக்கப்படுவதயும் விரும்பவில்லை. அத்தகைய விசாரணை எந்த அளவிற்கு பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படைகளுடன் அமெரிக்க பிணைப்பு பாக்கிஸ்தானுக்குள் இஸ்லாமிய குழுக்களை அடக்குவதில் இருந்தது என்பதையும், ஆப்கானிஸ்தானிற்குள் நடக்கும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு கிளச்சியாளர்களுக்கு ஆதரவுடன் இருக்கும் ஆயுதம் தாங்கிய குடிப்படைகளுக்கு எதிராக நடத்தும் போரில் இதன் பங்கு பற்றியும் வெளிப்பட்டிருக்கும். CIA மற்றும் FBI இரண்டும் முஷாரஃப் மற்றும் இராணுவம் பொறுப்பு கொண்ட "காணாமற்போயுள்ள" நூற்றுக்கணக்கானோருள் கொண்ட பங்கும் வெளிவந்திருக்கும்.

2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த காலத்தில் இருந்து முஷாரஃப்பை நம்பி இருந்த புஷ் நிர்வாகம் வலுவற்ற பாக்கிஸ்தானிய அரசாங்கம் FATA எனப்பட்ட கூட்டாட்சிக்கு உட்பட்ட பழங்குடி மக்கள் பகுதியில் இஸ்லாமிய குடிப்படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதில் தோல்வி அடையும் என்ற கவலையையும் கொண்டிருந்தது. பெப்ருவரி தேர்தலில் முஷாரஃப்பை அமெரிக்க கைக்கூலி என்று முத்திரையிட்டு வெற்றிபெற்ற பின், கூட்டாட்சி அரசாங்கமானது ஆரம்பத்தில் போரை நிறுத்தும் வகையில் பல ஆயுதமேந்திய குழுக்களுடன் உடன்பாடு கண்டது; இந்நடவடிக்கை வாஷிங்டனால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

புஷ் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் பென்டகன் அதிகாரிகளும் எல்லைப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆழ்ந்த பிரச்சாரத்தை தொடக்கியுள்ளன. பாக்கிஸ்தானிய பிரதம மந்திரி யூசுப் ராஜா கீலானி இது பற்றி ஜூலை மாதத்தில் வாஷிங்டன் சென்றிருந்தபோது, அமெரிக்க எதிர்ப்பு கெரில்லாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் அல்லது அமெரிக்க இராணுவம் எடுக்கும் என்று இறுதிக்கெடுகூட கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அடையாளங்கள் இருந்தன. இதற்கு விடையிறுப்பாக கீலானி அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", "நம்முடைய போர்" என்று அறிவித்தார்.

அறிவிக்கப்பட்டிருந்த பெரிய குற்ற விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக, பாக்கிஸ்தானிய இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை பஜெளர் பிரிவில் தொடக்கியது. இப்பொழுது ஸ்வாட் மாவட்டப் பகுதிகளில் இருந்து பெஷாவர் மாவட்டப் பகுதிகள் வழியே பஜெளர் மற்றும் கைபர் பிரிவுகள் வரை கடுமையான சண்டை நடக்கிறது. 12 நாட்கள் வான் மற்றும் தரைப்பகுதியில் இருந்து குண்டுவீச்சிற்குப் பின்னர் கிட்டத்தட்ட 300,000 பேர் எல்லைப் பகுதிகளை விட்டு நீங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரம் உக்கிரமான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கும் அதற்கு ஈடாக அமெரிக்க முஷாரஃப்பை அகற்ற ஒப்புக் கொள்ளுவது பற்றியும் வாஷிங்டனுடன் மறைமுகமான புரிதலை குறிக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், கொண்டலீசா ரைஸ் முன்னாள் பாக்கிஸ்தானிய சர்வாதிகாரி பற்றி முழு மனதுடன் புகழ்ந்தார். "அமெரிக்காவின் உற்ற நண்பராகவும் உலகின் பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றிற்கு எதிரான போரில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த பங்காளிகளில் ஒருவர்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு கொடுக்கப்பட்டுவந்த பாக்கிஸ்தான் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை முஷாரஃப் எடுத்ததும், நடக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அவர் கொடுத்த ஆதரவும் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு இருந்த அவருடைய ஆரம்ப ஆதரவுத் தளம் சரிந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

பிரிட்டிஷ் மற்றும் செளதி அதிகாரிகளும் மூடிய கதவுகளுக்கு பின் பேச்சு வார்த்தை நடத்தி முஷாரஃப் இராஜிநாமா செய்வதற்கு குற்றவிசாரணை விலக்கு மற்றும் பிற உத்தரவாதங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று விவாதித்து வந்தனர். செளதி அரேபியாவின் சக்தி வாய்ந்த உளவுத்துறைத் தலைவர் இளவரசர் Muqin bin Abdul Aziz இஸ்லாமாபாத்தில் வார இறுதியில் வந்து சேர்ந்தார்; எண்ணெய் உதவித் தொகைகள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு $5 பில்லியன் கொடுத்துவருவது முஷாரஃப் கெளரவமாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றால் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் பாக்கிஸ்தானிய இராணுவமும், பகிரங்கமாக தான் அரசியலுக்கு அப்பால் இருப்பதாக வலியுறுத்தினாலும், அமைதியான முறையில் பெரிய குற்ற விசாரணை நடவடிக்கைகளுக்கு தான் எதிர்ப்பு காட்டுகிறது என்பதைத் தெளிவு படுத்தியது; இந்தக் கருத்து முஷாரஃப்பிற்கு இறுதியாக நேற்று அணிவகுப்பு மரியாதை கொடுப்பது என்பதில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அரசியல் அமைப்பு மீறல்கள் மற்ற குற்றங்களுக்காக முஷாரஃப் மீது விசாரணை வந்தால், ஒன்பது ஆண்டுகள் அவர் பெரிதும் நம்பியிருந்த இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. பாக்கிஸ்தானின் Daily Times ன் ஆசிரியர் நஜம் சேத்தி கார்டியனுக்கு குறிப்பிட்டது போல், "பண்டோராப் பெட்டியை (பெரும் குழப்பங்கள் வெளிவரும் பெட்டி) திறக்க எவருக்கும் விருப்பமில்லை. பெரிய குற்ற விசாரணை உண்மையில் தொடங்காது."

ஒரு உறுதியற்ற அரசாங்கம்

முஷாரஃப் இப்பொழுது பதவியில் இருந்து இறங்கிவிட்டாலும், இஸ்லாமாபாத்தில் இருக்கும் அரசியல் நெருக்கடி நிச்சயமாக உக்கிரமடைந்துதான் போகும். கூட்டணியின் இரு பெரும் கட்சிகள், PPP, PML-N இரண்டும் நீண்டகாலமாக கடுமையான எதிரிக் கட்சிகள் ஆகும். பல வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, முஷாரஃப்பிற்கு எதிர்ப்பு என்ற ஒரு கருத்துத்தான் இந்தக்கூட்டணியை ஒட்ட வைத்துக் கொண்டிருந்தது. முஷாரஃப்பின் உடனடி வருங்காலம் பற்றிக் கூட இவற்றிற்கு இடையே உடன்பாடு கிடையாது.

PPP அதிகாரிகள் இந்த உடன்பாடு முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டபூர்வ விலக்கு அளிப்பதற்காக அடையப்பட்டது என்றும் அவர் இதற்காக நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்புக் கொடுத்துள்ளனர். இந்தக் கட்டத்தில் முஷாரஃப்பின் செய்தித் தொடர்பாளர்கள் அவர் பாக்கிஸ்தானில் இருக்க விரும்புகிறார் என்று குறிப்பு காட்டியுள்ளனர்; இஸ்லாமாபாத்திற்கு வெளியே கட்டப்பட்டுள்ள ஒரு இல்லத்தில் வசிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. நேற்று ஒரு மணி நேரம் நடைபெற்ற தொலைக்காட்சிப் பேட்டியில் முஷாரஃப் தான் பதவியில் இருந்தபோது எடுத்த நடவடிக்கைகள் பற்றி உறுதியான நிலைப்பாட்டைக் காட்டி தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரச் சரிவிற்கு அரசாங்கத்தைக் குறைகூறமுடியாது என்றும் தெரிவித்தார். PPP யோ வருங்காலத்தில் தன் ஆட்சிக்கு எதிர்ப்பு பெருகையில், தாக்கும் தூரத்தில் முஷாரஃப் இருப்பதை விரும்பவில்லை.

PML-N முஷாரஃப் அவருடைய குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பகிரங்கமாகவேனும் கூறுகிறது. கடந்த வாரம் ஷெரிப் லாகூரில் தெரிவித்தார்: "பாக்கிஸ்தானுக்கு இவ்வளவு தீமையைச் செய்த ஒருவருக்கு எப்படி பாதுகாப்பான வெளியேற்றம் தரமுடியும்?' இரு கட்சிகளுக்கும் இடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருத்துதல் பற்றியும் கருத்து வேறுபாடு உண்டு; இதற்கு காரணம் PPP தலைவர் ஜர்தாரி நீதிபதிகள் இவருக்கு எதிராக மீண்டும் ஊழல் குற்றச் சாட்டுக்களின் தண்டனையை புதுப்பிக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்.

மற்றொரு உடனடி மோதலுக்குக் காரணம் முஷாரஃப்பிற்கு பதிலாக யார் ஜனாதிபதி என்பதில் வரும். தற்பொழுது முறையாக செனட்டின் தலைவரான மகம்மத் மியான் சூம்ரோ அவருக்குப் பின் பதவிக்கு வந்துள்ளார்; இவர் பெப்ருவரி தேர்தல் வரை பிரதம மந்திரியாக இருந்து முஷாரஃப்பிற்கு நெருக்கமாக இருந்தவர். நாட்டின் தேர்தல் அவையின் மூலம் ஒரு புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்; அதில் தேசிய சட்ட மன்றம் மற்றும் நாட்டின் நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து மொத்தமாக வாக்களிப்பர். ஜர்தாரிக்கு இப்பதவிக்கு வரும் ஆசை இருப்பதாகத் தெரிகிறது; ஆனால் அத்தகைய நடவடிக்கை ஷெரிப்பால் கடுமையாக எதிர்க்கப்படும். முஷாரஃப் இயற்றிய அரசியல் அமைப்பில் ஜனாதிபதிக்கு கணிசமான அதிகாரம் உள்ளது; அரசாங்கத்தை நீக்கும் அதிகாரம் மற்றும் இராணுவ தளபதி உட்பட பல முக்கிய நியமனங்களை செய்யும் அதிகாரங்கள் அவற்றில் அடங்கும்.

இன்னும் அடிப்படையில், அரசாங்கம் இப்பொழுது முஷாரஃப் எதிர்கொண்ட அதே சங்கடத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான எல்லைப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறு வாஷிங்டனின் ஆழ்ந்த அழுத்தம் வந்துள்ளது; அங்கு ஏற்கனவே இராணுவம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. கீலானியும் ஒரு அமெரிக்கக் கைப்பாவை என முத்திரையிடப்படும் ஆபத்தை எதிர்கொள்ளுகிறார்; விரைவில் ஆதரவுத் தளத்தையும் இழந்து வருகிறார். இதில் பின்வாங்கினால் ஒருதலைப்பட்ச அமெரிக்க நடவடிக்கை வரக்கூடும்; அது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தாக்குதலைப் பெரிதும் தூண்டிவிடும்.

அதே நேரத்தில் பாக்கிஸ்தானிய பொருளாதாரம் உயரும் எண்ணெய், உணவுப் பொருட்கள் விலையால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது; மேலும் இதன் அமெரிக்க, ஐரோப்பிய ஏற்றுமதிகளுக்கு தேவை குறைந்துள்ளது. ஆண்டுப் பணவீக்க விகிதம் 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது; பாக்கிஸ்தானின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 22 சதவிகிதம் இவ்வாண்டு குறைந்துள்ளது; கடந்த ஐந்து வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி இருப்புக்கள் $1.1 பில்லியன் குறைந்து $10.15 பில்லியன் என்று வந்துவிட்டது; இதற்குக் காரணம் முக்கியமாக இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் இன் விலைதான். வணிகப் பற்றாக்குறை மிக அதிகமாக 53 சதவிகிதம் அதிகரித்து 2007-08 ஜூன் மாதம் முடிவுற்ற நிதி ஆண்டில் $20.7 பில்லியன்களாக உயர்ந்து விட்டது. பங்குச் சந்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து 30 சதவிகிதச் சரிவைக் கொண்டுள்ளது.

பங்குகளின் மதிப்புக்கள் மற்றும் ரூபாயின் மதிப்பு நேற்று முஷாரஃப்பின் இராஜிநாமா செய்தியை அடுத்து உயர்ந்தன; ஆனால் அடுத்த அரசியல் கொந்தளிப்பு இந்த வெற்றிகளை மாற்றிவிடும். உயரும் விலைகள் சமூக அமைதியின்மை மற்றும் அரசாங்கத்திற்கான எதிர்ப்பை எரியூட்டும். முஷாரஃப்பின் இராஜிநாமா பாக்கிஸ்தானிய மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்தில் பாக்கிஸ்தானில் ஜனநாயகம் நோக்கிய ஒரு அடிவைப்பு என்று வெளியிடப்பட்டாலும், PPP, PML-N இரண்டுமே சர்வாதிகார ஆட்சி வரலாற்றைக் கொண்டவைதாம். இறுதியில் எப்படி முடிவு வந்தாலும், இஸ்லாமாபாத்தில் அதிகாரத்தைக் கையில் கொண்டிருக்கும் ஆட்சி ஜனநாயக விரோத வழிமுறைகளை பயன்படுத்தி அதன் கொள்கைகளுக்கு எதிரான எந்த அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்கு தயங்காது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved