World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Constitutional reform strengthens presidency அரசியலமைப்பு சீர்திருத்தம் ஜனாதிபதிப் பதவியை வலுப்படுத்துகிறது By Antoine Lerougetel and Alex Lantier பிரெஞ்சு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் இணைந்த உறுப்பினர்கள் ஐந்தாம் குடியரசின் அரசியல் அமைப்பிற்கு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி முன்வைத்த சீர்திருத்தம் ஒன்றிற்கு வெர்சாய் இல் ஜூலை 27 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதம மந்தரியின் இழப்பில், தேசிய சட்டமன்றத்தின் முறையான அதிகாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகரிப்பு இருப்பினும், சீர்திருத்தத்தின் நிகர விளைவு ஏற்கனவே சக்திவாய்ந்த ஜனாதிபதி பதவியை மேலும் வலுப்படுத்துவதற்காகும். இடதுசாரி உணர்வை இணைத்துக் கொள்ளும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பகுதிகளுடன் ஒரு பேரம் செய்யும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக சார்க்கோசி தன்னுடைய 2007 தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான அழைப்பையும் சேர்த்துக் கொண்டார்; சோசலிஸ்ட் கட்சி அரசியல் சீர்திருத்தம் வேண்டும் என்று பல காலமாக கூறிவருவதாகும். தேசிய ஐக்கியம் மற்றும் சட்ட ஒழுங்கு உணர்விற்கு அழைப்பு விடுத்து அதிகாரத்திற்கு வந்ததால், சார்க்கோசி PS அலுவலர்களை உயர்ந்த அரசாங்க பதவிகளில் இருத்தினார்; குறிப்பாக வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் அப்படித்தான் நியமிக்கப்பட்டார்; PS ன் முன்னாள் மந்திரி ஜாக் லாங் அரசியல் சீர்திருத்த சட்டத்தை தயார் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சார்க்கோசியின் ஜனாதிபதிக் காலத்தின் முக்கிய இலக்கு போருக்குப் பிந்தைய காலத்தில் எஞ்சியிருக்கும் சமூக நல அரசின் கூறுபாடுகளையும் தகர்த்து, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை மகத்தான அளவில் குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகும் --அதாவது ஓய்வூதியங்களை குறைத்தல், சுகாதாரத்திற்காக அரசு செலவினங்களை குறைத்தல், வேலையின்மை கால இழப்பீட்டுத் தொகை குறைக்கப்படுதல் போன்றவை. அதே நேத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்கள் நாட்டுக்கு வெளியே ஆக்கிரோஷமான முறையில் தொடரப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 1990களில் இருந்து தொடர்ந்த பிரெஞ்சு அரசாங்கங்களின் அடிப்படை கொள்கைகள் இவ்விதத்தில்தான் உள்ளது. ஆனால் இந்த அரசாங்கங்கள் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன வேலைநிறுத்த இயக்கங்களால் தடுமாறிச் சரிந்துள்ளன; அவை இவற்றின் சட்டரீதியான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன் திட்டமிட்ட சமூக "சீர்திருத்த" முயற்சிகளையும் பின்வாங்கச் செய்துள்ளன. 1995, 2003 மற்றும் 2007ல் ஓய்வூதியத்தில் வெட்டுக்களை காண மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யூப்பே, ராஃபாரன் மற்றும் பிய்யோன் அரசாங்கங்களின் அதிகாரத்தை சிதைத்த வேலைநிறுத்தங்களுக்குத்தான் வழிவகுத்தன. தொழிற் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பிற சமூக செலவினக் குறைப்புக்கள் 2006 ல் டு வில்பனுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை ஏற்படுத்தின; இந்த ஆண்டும் ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசாங்கம் மிகவும் மதிப்பிழந்துள்ளது; சார்க்கோசிக்கான ஒப்புதல் வாக்கு அனைத்து சமீபத்திய கருத்துக் கணிப்புக்களிலும் 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு மாற்றங்கள், சமூகத் தாக்குல்களை எளிதுபடுத்துதல் மற்றும் மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்குவதற்கான அரசின் திறனைக் கூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன. அரசாங்கத்தின் பல்வேறு கிளைகளுக்கிடையில் அரசியல் அதிகாரத்தை மீள சமன்படுத்தல் நோக்கமாக இல்லை; மாறாக இன்னும் கூடுதலான இவ்வர்க்க நலன்களை உறுதிபடுத்தும் வகையில் அரச கருவியை மீளசமன்படுத்துவதாகும். அரசியலமைப்பு வகையிலும், மரபார்ந்த முறையிலும், ஜனாதிபதி வெளியுறவுக் கொள்கைக்கு பொறுப்பு ஆவார்; ஜனாதிபதிக்கு விடையிறுக்க கடமைப்பட்டிருக்கும் பிரதம மந்திரி அரசாங்கத்தின் உள்நாட்டுக் கொள்கையை செயல்படுத்துவார். அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து சார்க்கோசி, பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனுடைய செல்வாக்கை மட்டுப்படுத்துவதோடு, வெளி, உள்நாட்டு கொள்கைகள் இரண்டையும் மேற்பார்வையிட விரும்பியுள்ளார். இது பிரெஞ்சு இறைமையின் போர்வைக்குள் தன்னுடைய சமூக வெட்டுக்களை மூடிவைப்பதற்கு சார்க்கோசிக்கு உதவுவதுடன், தேர்தலுக்கு பின்னர் அவர் ஊக்கப்படுத்துவதற்கு விழைந்த அவருடைய தேசியவாத, சட்டம் மற்றும் ஒழுக்க நெறிகளுடன் ஒத்த வகையில், அரசின் தலைவர் என்ற முறையில் தன்னுடைய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. தற்போதைய அரசியலமைப்பு முறையின்படி, ஜனாதிபதிக்கு அரசாங்கத்தின் மற்ற பிரிவுகள்மீது கணிசமான அதிகாரங்கள் உள்ளன. சட்ட மன்றத் தேர்தல்களுக்கு பின்னர் இவர் பிரதம மந்திரியை நியமிப்பதுடன் அவர் பரிந்துரைக்கும் அமைச்சர்களையும் மந்திரிசபைக்கு நியமிக்கிறார். எந்த நேரத்திலும் ஜனாதிபதி சட்டமன்றத்தை கலைக்க முடியும். ஐந்தாம் குடியரசின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான அதிகாரங்கள், அல்ஜீரியாவில் ஆக்கிரமிப்பு இராணுவத்தில் உள்ள தளபதி சார்ல்ஸ் டு கோலின் ஆதரவாளர்களால் 1958ல் நான்காம் குடியரசுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் அரசியல் புரட்சியில், அதன் தோற்ற மூலத்தைக் கொண்டு தோன்றுகிறது; அந்த திடீர்ப்புரட்சி "வெல்வெட் ஆட்சி கவிழ்ப்பு" அல்லது "ஜனநாயக முறை ஆட்சி கவிழ்ப்பு" என்று அழைக்கப்பட்டது. அல்ஜீரியாவில் போருக்கு பெருகி வரும் மக்கள் எதிர்ப்புக்கிடையில், டு கோலின் தொடர்பாளர் Leon Delbecque அமைத்திருந்த அல்ஜீரியா மற்றும் கோர்சிகாவில் அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு எதிராக இராணுவ எழுச்சிகளை அமைத்திருந்தார். பாரிசில் பாரசூட் வீரர்கள் இறங்குவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இராணுவத்துடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் ஒரே வழி புதிய அரசியல் அமைப்பு எழுவதற்கும் மற்றும் ஐந்தாத் குடியரசை நிறுவவும் அவருக்கு அதிகாரம் வழங்குவதாகும். பாராளுமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் நான்காம் குடியரசின் வலுவற்ற ஜனாதிபதிப் பதவியின் நிலை -- இவை நாஜிக்களிடம் இருந்து பிரான்சை விடுவிக்க வெளிவந்தவை--ஆகியவை பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை திறமையுடன் காப்பதற்கு நிறுவப்பட்டதாகும் என்று டு கோல் கருதினார். அரசியலமைப்பை இயற்றுகையில் டு கோல் சக்தி வாய்ந்த ஜனாதிபதி பதவியை உருவாக்கினார்; தானே அப்பதவிக்கு வரவும் அவர் திட்டமிட்டிருந்தார்; அதுதான் அரசியல் நிலைமையை உறுதிப்படுத்தி அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆட்சியை வலிந்து தொடர்ந்து யெற்படுத்த உதவும் என்றும் அவர் கருதினார். அப்பொழுது முதல் அரசியல் அமைப்பு மக்களிடையே அதிக ஆதரவைக் கொண்டிருக்கவில்லை; 1960ல் இருந்து அதைத் திருத்தும் முயற்சிகள் 19 முறைக்கும் மேலாக கொள்ளப்பட்டதாக அரசியலமைப்புக் குழு பதிவு செய்துள்ளது. பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதியின் அதிகாரம் 2000ம் ஆண்டு அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு பின்னர் இன்னமும் அதிகமாயிற்று; அதன்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஏழு ஆண்டுகளில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல்கள் இப்பொழுது ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நடத்தப்படுவதால், அதுவும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு பின்னர், சிறப்பாக வெற்றி பெறும் கட்சி பாராளுமன்றத்தில் கூடுதாலன இடங்களை பெறுவதால் ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை தனது சொந்த கட்சிப் பெரும்பான்மையுடன் தொடக்கும் உத்தரவாதத்தை பெறுகிறார். புதிதாக திருத்தப்பட்ட அரசியலமைப்பு ஜனாதிபதி பதவிக்காலத்தை இரு ஐந்து ஆண்டுகள் காலம்தான் இருக்கலாம் என்று கூறுகிறது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை அதிகப்படுத்த சில மிகக்குறைந்த நடவடிக்கைகளை அது அளிக்கிறது; இதில் பாராளுமன்றக் குழுவிற்கு முக்கிய சட்டப்பிரிவு பதவிகளில் ஜனாதிபதி நியமனங்கள் மீது வாக்களித்து அகற்றும் அதிகாரமும் உண்டு. பாராளுமன்றம் செயல்படும் நாட்களில் 50 சதவீதம் தன் பணிகளை தானே நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரமும் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த செயற்பட்டியல் முற்றிலும் பிரதம மந்திரி மற்றும் அமைச்சர் குழுவால் நிர்ணயிக்கப்பட்டது. இச்சீர்திருத்தம் ஓரளவிற்கு பிரதம மந்திரி பிரச்சினைக்கு உரிய விதி 49-3 ஐப் பயன்படுத்தி தன்னுடைய விருப்பத்தை பாராளுமன்றத்தின் மீது செலுத்தும் அதிகாரத்தை குறைத்துள்ளது. இதுவரை பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு அல்லது தனது அரசாங்கத்தின்மீது "நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு" வாக்களித்து அதன்காரணமாக அது கவிழ்வதற்கு தேவையான பாராளுமன்றத்திற்கு தேவையான நடவடிக்கையை பிரதம மந்திரி பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கிறது. நடைமுறையில் பாராளுமன்றம் விதி 49-3 ன்படி அநேகமாக சட்டவரைவிற்கு ஒப்புதலைக் கொடுத்து வந்தது. தற்போதைய சீர்திருத்தத்தின்படி பிரதம மந்திரி தடையற்ற முறையில் 49-3 விதியை பயன்படுத்தி அரச வரவு-செலவுத் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கள் பற்றிய செலவினங்களுக்கும் சட்டம் இயற்ற முடியும்; ஆனால் இது ஒரு பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஒரு முறைதான் செய்யப்பட முடியும். அரசியலமைப்பு சீர்திருத்தம் ஜனாதிபதியின் அவசரகால அதிகாரங்கள் மீதும் சில வரம்புகளை வைத்துள்ளது; இவை சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கினால் 2005க்கு பின்னர் போலீஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக கலகங்கள் எழுந்தபோது பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதியின் அவசரகால ஆட்சி 30 நாட்கள் தொடர்ந்தபின், ஜனாதிபதி தொடர்ந்து அந்த அதிகாரங்களை செலுத்தலாமா என்பது பற்றி அது தீர்ப்பு அளிப்பதற்கு, பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளின் தலைவர்களும் அரசியலமைப்புக் குழு - அரசியலைமப்பு விதிகளைப் பற்றி இறுதித் தீர்ப்பு கூறும் அங்கம் - கூட்டப்பட வேண்டும் என்று கூட்டாக கோரலாம். அதன்பின்னர், இப்பிரச்சினை பற்றி அரசியலமைப்பு குழுவிடம் 60 நாட்களுக்கு ஒரு முறை முறையிடலாம். இச்சீர்திருத்தத்தின்படி அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உள்ளது. திருத்தப்பட்ட வாசகம் வருமாறு: "தலையீட்டுக் காலம் நான்கு மாதங்களுக்கும் அதிகமாகப் போனால், அரசாங்கம் இந்த கூடுதல் காலம் பற்றி பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்." முன்பு இந்த வரம்பு இருந்ததில்லை. வெளிநாட்டில் பிரெஞ்சு ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு ஜனநாயக நெறி கொடுக்கும் மறைப்பை அளிக்கும் நோக்கத்தை உடைய இந்த நடவடிக்கை இன்னும் கூடுதலான வகையில் ஆக்கிரோஷமான பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கான திட்டங்கள் தயார்நிலையில் இருப்பதைக் காட்டுகின்றனது. இத்திருத்தங்கள் உள்ளபோதிலும், ஜனாதிபதிக்கும் இன்னும் மகத்தான அதிகாரங்களும் சில விதங்களில் கூடுதலான சக்தியும் உள்ளன. இப்பொழுது அவர் பாராளுமன்ற கூட்டுத் தொடரில் உரையாற்றி தன்னுடைய உரையை விவாதத்திற்கு விடலாம் -- இந்த உரிமை 19ம் நூற்றாண்டிற்கு பின்னர் பிரெஞ்சு அரசின் தலைவர்களால் செயற்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியை கட்சிசார்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனக் காட்டும் தற்போதைய அரசியலமைப்பின் முயற்சிதான் இவ்விதத்தில் பாராளுமன்றத்திற்கு அவர் உரையாற்றுவதை வைத்திருக்கும் முடிவில் முக்கிய காரணியாக இருந்தது. இதுவரை பிரதம மந்திரிக்கு மட்டுமே இந்த உரிமை இருந்தது. துருக்கிக்கு எதிரான நேரடி நடவடிக்கை என்ற முறையில், திருத்தப்பட்டுள்ள அரசியலமைப்பின்படி ஐரோப்பிய ஒன்றிய புதிய நாடுகளை ஏற்பதை ஒப்புக் கொள்ளும் ஐரோப்பிய பிரேரணைகள் மக்கள் வாக்கெடுப்பின் இசைவிற்கு விடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும், இந்தவிதிநைக் கைவிடுவதற்கு ஜனாதிபதி முன்மொழிய முடியும். அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு சார்க்கோசி கடுமையாகப் பாடுபட வேண்டி இருந்தது. வாக்கெடுப்பு முடிவுகள் வரும் வரை முடிவு பற்றி தெளிவாகத் தெரியவில்லை; வாக்கெடுப்பு பொதுவாகக் கட்சி நிலைப்பாட்டின்படிதான் நடந்தது. குறிப்பிடத்தக்கவகையில், சார்க்கோசி ஒரு சர்வஜன வாக்கடுப்பிற்கு மாற்றப்பட்ட அரசியல் அமைப்பை முன்வைக்காமல் இருக்க முடிவு செய்தார். இப்படித் தேவைப்படும் வாக்குகளின் அளவு, இரண்டு வாக்குகள் கூடுதலாக இருந்த முறையில், சார்க்கோசியின் ஆதரவாளர்களால் பெற்ற வெற்றி எனப் பாராட்டப்பட்டது. சார்க்கோசிக்கு வெற்றி கொடுக்கும் வகையில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்த ஒரே PS உறுப்பினர் ஜாக் லாங்கை PS தலைவர்கள் குற்றம்சாட்டினர். பிரதிநிதிகளுக்கு சலுகை தரும் விதத்தில் உத்தியோகபூர்வ பாராளுமன்ற குழுவை அமைக்க 15 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று குறைப்பதாக உறுதியளித்ததன் மூலம், எதிர்க்கட்சி PS உடன் பொதுவாக இணைந்து பணியாற்றும் PRG (இடது குடியரசுக் கட்சி) பிரதிநிதிகளை சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சார்க்கோசி நம்ப வைத்தார். |