World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்In response to US demands: Pakistani military attacks Islamist forces அமெரிக்க கோரிக்கைகளின் பிரதிபலிப்பிற்கு: பாகிஸ்தான் இராணுவம் இஸ்லாமிய படைகளை தாக்குகிறது By James Cogan பாகிஸ்தானிய அரசாங்கம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (NWFP) மற்றும் கூட்டாட்சி நிர்வாகத்திலுள்ள பழங்குடி பகுதிகளிலுள்ள (FATA), ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கு எதிராக பாரிய இராணுவ தாக்குதல்களுக்கு உத்திரவிட்டுள்ளது. பிரதம மந்திரி யூசுப் ரூசா கிலானி கடந்த மாதம் வாஷிங்டனுக்கு சென்று வந்ததை அடுத்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன; அந்த விஜயத்தின் போது, புஷ் நிர்வாகம் ஓர் ஒடுக்குமுறையை வலியுறுத்தியது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து வெறும் 250 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பகுதியான, NWFP இல் உள்ள Swast Valley மாவட்டத்தில் இரத்தம் சிந்தும் சண்டை நடந்து வருகிறது. இந்த பிராந்தியம் ஒருகாலத்தில் ski சுற்றுலா தளமாக புகழ் பெற்றிருந்தது மற்றும் "பாகிஸ்தானின் ஸ்விட்சர்லாந்து" என்றும் போற்றப்பட்டது. அரசாங்க துருப்புகள் Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi (TNSM) அல்லது இஸ்லாமிய விதிகளை செயலாக்கும் இயக்கத்தில் உறுதியாக உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டிருப்பதால், தற்போது அந்த பிராந்தியம் பீரங்கி தாக்குதல்கள் மற்றும் குண்டுவீசும் ஹெலிகாப்டர்களின் குண்டுவீச்சுக்கு உள்ளாகி இருக்கிறது. சிறையிலுள்ள மதகுரு சுஃபி மொஹம்மதால் நிறுவப்பட்டு, தற்போது அவரின் மகன் மெளலானா பஜ்லுஹ்ஹாவினால் வழிநடத்தப்படும் அந்த இயக்கம் சில சமயங்களில் பாகிஸ்தானின் தாலிபான் என்றும் அறியப்பட்டது. TNSM இல் ஆயுதமேந்தியவர்களின் எண்ணிக்கை 4,500 ஆக இருக்கலாம் என்று சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவ்வமைப்பு, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பொருளாதார மற்றும் பண்பாட்டுரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வாழும் இனவழி பஷ்டூன் மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ளது. ஒருசமயம், ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அது தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்த இந்த அமைப்பு, மாணவிகளுக்கு கல்வி அளித்து வந்த 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை கொடூரமாக தீக்கிரையாக்கியது. பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அதன் முன்னோக்கை வளர்க்க விரும்புவதுடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக போரிட போராளிகளையும் இவ்வமைப்பு தீவிரமாக நியமித்து வருகிறது.அரசாங்கத்திற்கும் TNSMக்கும் இடையிலிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பரில் தோல்வி அடைந்தது. ஃபஜூல்லாவின் ஆதரவாளர்களால் மூன்று பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இம்மாதத்திலிருந்து அவ்வப்போதைய சண்டைகள் தீவிரமடைந்துள்ளன. இஸ்லாமியர்களை சிதைத்து, அதன் தலைமையை கொல்லவோ அல்லது சிறைப்பிடிக்கவோ ஏறத்தாழ 20,000 துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவ கருத்துப்படி, அதன் சொந்த துருப்புகளில் 11 பேரை பலிகொடுத்து, இதுவரை 94 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சண்டை குறித்து முரண்பாடான செய்தி அறிக்கைகளை TNSM வெளியிட்டுள்ளது. திங்களன்று, தங்கள் தரப்பில் ஒன்பது போராளிகளை மட்டும் இழந்து, அரசாங்க துருப்புக்களில் 70க்கும் மேற்பட்டோர்களை கொன்றதாக அது குறிப்பிட்டது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருக்கும் உள்ளூர் கிராமவாசியான கான் நவாப் CNS News க்கு தெரிவிக்கையில், இராணுவம் அதன் பொறுப்பற்ற வான்தாக்குதல்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் சாதாரண குடிமக்களை காயப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். "அவர்களை (இஸ்லாமியர்களை) விரட்ட குண்டுவீசும் ஹெலிகாப்டர்களை இராணுவம் பயன்படுத்தி வருகிறது" என்று கூறிய அவர், "ஆனால் சில நேரம் தாலிபான்களை விட சாதாரண குடிமக்களை அதிகமாக கொன்று வருகிறது. இது உள்ளூர் மக்களிடையே விரோத உணர்வை தோற்றுவித்துள்ளது என்பதுடன் இப்பிரச்சினையை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்" என்றும் கூறினார். பாகிஸ்தான் ஆய்வாளர் Zia ud Din Yousasfzai CNSக்கு கூறியதாவது: "நாங்கள் கிட்டத்தட்ட ஓர் உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் இருக்கிறோம்." என்றார். கட், பேசர், நமால், சார்பாஹ், மாலம் ஜாப்பா, மான்சா, ஷா தெஹ்ரி, ஷமோஜய், தியோலய் ஆகிய நகரங்களுக்கு எதிராக விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதனன்று, தியோலயில் அரசாங்க துருப்புக்களின் ஓர் அதிகாலை தாக்குதலில் TNSM இன் மூத்த தலைவரான Ali Bakht மற்றும் எட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அன்று மாலை நடந்த அவரின் இறுதிசடங்கில் ஏராளமான உள்ளூர் கிராமவாசிகள் கலந்து கொண்டதாக பாகிஸ்தானின் நாளேடு Dawn குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தான் எல்லையில் நடக்கும் எதையும் விட, சண்டையின் அளவு இங்கு அதிகமாக உள்ளது. அதற்கும் மேலாக, ஸ்வாட் பள்ளத்தாக்கில் TNSM உடனான யுத்தம், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும், நாட்டின் இனவழி பஷ்டூன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஒரு புதிய இஸ்லாமிய எதிர்ப்பிற்கும் இடையே முழு யுத்தமாக வளர்ந்து வரும் எண்ணிக்கையற்ற யுத்தமுனைவுகளாக சாதாரணமாக ஆகிவிட்டது. இஸ்லாமாபாத்திற்கு எதிராக தற்போது வெளிப்படையாக கலகத்தில் ஈடுபட்டுள்ள பிற இஸ்லாமிய மற்றும் பழங்குடி யுத்தப்பிரபுக்களை பற்றிய ஒரு விமர்சனமும், ஆப்கானிஸ்தானில் நடக்கும் எழுச்சிக்கான ஆதரவும், பாகிஸ்தானிய ஆட்சிக்கும் மற்றும் அமெரிக்க, நேட்டோ படைகளுக்கும் இடையிலான பாரிய மோதலைப் பற்றிய சில உட்பார்வையை அளிக்கிறது. அமெரிக்க ஆதரவைக் கொண்ட படைகள் இப்பொழுது FATA மற்றும் NWFP பகுதிகளின் பஷ்டூன் மக்களுடன் ஆழமாக தொடர்பு கொண்டுள்ள இயக்கங்களுடன் அமெரிக்க பின்புலத்திலான படைகள் யுத்தம் ஈடுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக 1980களின் கலகத்திலும் மற்றும் 1996ல் தாலிபான் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்த உள்நாட்டு யுத்தத்திலும் ஈடுபட்ட எண்ணற்ற போராளிகள் உட்பட, ஆயிரக்கணக்கான ஆயுதங்தாங்கிய போராளிகளை இந்த இயக்கங்களால் ஒன்றுதிரட்ட முடியும். கடந்த ஆண்டு பாகிஸ்தானிய முன்னாள் பிரதம மந்திரி பெனாசீர் புட்டோவின் படுகொலைக்கு பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 35 வயதான, பழங்குடியின தலைவரான ஃபைதுல்லாஹ் மெஹ்சுத், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் வடக்கு வஜிரிஸ்தானிலுள்ள FATA பிரிவுகளின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இவருடைய இயக்கமான Tehreek-e-Taliban Pakistan, ஆயுதமேந்திய 20,000 பஷ்டூன் பழங்குடி போராளிகளை கொண்டுள்ளது. ஆப்கான் தாலிபானின் யுத்தப்பிரபு ஜலாலுத்தீன் ஹக்கானிக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான கொரில்லாக்களுக்கும் மெஹ்சுத் பாதுகாப்பான புகலிடம் அளித்துள்ளார். உலகெங்கும் 500லிருந்து 8000 வரையிலானவர்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாத போக்கினர், ஹக்கானி மற்றும் மெஹ்சுத்தின் படைகளுடன் இணைந்து போரிட்டு கொண்டு, வஜிரிஸ்தான்களில் இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். FATA அமைப்புகள் ஒசாமா பின்லேடன் மற்றும் 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலில் தப்பி பிழைத்த அல்கொய்தா போராளிகளின் விருப்பமான இடமாக இருக்கின்றன. 2004 இலிருந்து, அந்த பகுதியை அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான தோல்வியுற்ற தொடர் தாக்குதலில் பாகிஸ்தான் துருப்புகளின் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை இணைக்கும் முக்கிய சாலைகளில் கவனிக்கும் ஹைபர் FATA அமைப்பு, லக்ஷர்-ஈ-இஸ்லாம் அல்லது இஸ்லாம் இராணுவம் என்று அறியப்பட்ட ஓர் இயக்கத்திற்கு தலைமை வகித்த தீவிர இஸ்லாமியவாதியான மங்கல் பாங் இன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டிற்கு முன்னதாக, 180,000 போராளிகளை திரட்ட முடியும் என்று பாங் கூறியிருந்தார். உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக குறைவு என்ற போதினும், பாங்கிற்கு விசுவாசமான போராளிகளால், சில மாதங்களிலேயே NWFPக்கு அருகிலிருக்கும் அனைத்து பகுதிகளின் கட்டுப்பாட்டையும் கைப்பற்ற முடிந்திருந்தது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், பேஷாவர் மாகாண தலைநகருக்கு அருகில் அவர்கள் ஆக்கிரமித்திருந்த தளங்களிலிருந்து பாங்கின் படைகளை அகற்ற பாகிஸ்தான் துருப்புகள் கடுமையான யுத்தங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. தனக்கென நீதிமன்றங்களையும், சிறைச்சாலைகளையும் செயல்படுத்தி வருவதாக கூறப்படும், பழங்குடி மக்கள் அதிகார செல்வாக்கு பெற்ற மெளல்வி ஒமர் காலிட்டினால் மொஹ்மண் FATA அமைப்பு ஆளப்படுகிறது. இவரின் படைகள் மெஹ்சுத்தின் ஆதரவாளர்களுடன் ஆயுதமேந்திய மோதல்களில் ஈடுபட்டுள்ளன; ஆனால் ஆப்கானிய போராளிகளுக்கும் உதவிகள் அளித்து வருவதாக நம்பப்படுகிறது. ஆப்கானிய படைத்தலைவர் குல்புதீன் ஹெக்மத்யாருக்காக போராடி வரும் கொரில்லாக்களுக்கு பாதுகாப்பான புகலிடம் அளித்திருக்கும் பாகிஸ்தானிய இஸ்லாமியவாதி மெளல்வி ஒமரின் வலுவான பிடியில் பாஜோர் FATA அமைப்பு உள்ளது. கடந்த மாதம் ஸ்வாட் பள்ளத்தாக்கிலுள்ள ஃபஜூல்லாவின் TNSMக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அதன் மீது யுத்தம் தொடுக்கப்படும் என்று ஒமர் அச்சுறுத்தினார். ஆப்கான் கிராமமான வனாட்டிலுள்ள அமெரிக்க தளத்தின் மீது ஜூலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதல், பஜோருக்கு வெளியில் இருந்து செயல்படும் கொரில்லாக்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் ஒன்பது அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமுற்றனர். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து ஒரு பாகிஸ்தானிய அரசியல்வாதியான, அஃப்ராசியாப் கட்டக் Free Europe வானொலியிடம் இம்மாதம் கூறியதாவது: "எங்களுடைய பழங்குடி மக்கள் பகுதியில் இருக்கும் நிலைமை, செப்டம்பர் 11க்கு முன்பு ஆப்கானிஸ்தான் இருந்தது போல் உள்ளது. இப்பகுதிகளில் அரசாங்கத்தின் அதிகாரம் கிட்டத்தட்ட நடைமுறையில் இல்லை. தற்போது இப்பகுதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டிலும் சண்டையிட்டு வரும் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது." பாகிஸ்தானுக்குள் இருக்கும் பாதுகாப்பான உறைவிடங்கள் தான் ஆப்கானிஸ்தானத்தில் பெருகியுள்ள கலகங்களுக்கு முக்கிய காரணியாக உள்ளன. அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஜூலை 13ஐ ஒட்டி 3,590ஐ எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 50 சதவிகிதம் அதிகமாகும். தாக்குதல்களில் மூன்றில் இரு பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இருக்கும் ஆப்கான் மாகாணங்களில் நடந்துள்ளன. 2007 ஆண்டு முழுவதிற்கும் 117 ஆக (யுத்தத்தில் ஓர் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகளவாகும்) இருந்ததுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை, ஆப்கானிஸ்தானில் 94 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் விரிவாக்கம் என்பது சோவியத் ஒன்றியத்தை உடைக்க, ஆப்கானிஸ்தானில் சோவியத் பின்புலத்திலான மதசார்பற்ற ஆட்சிக்கு எதிராக ஓர் இஸ்லாமிய விரோத உணர்வை தூண்டிவிட, 1970களின் இறுதியிலிருந்து நடத்தப்பட்ட அமெரிக்க பிரச்சாரத்தின் நேரடி துணை விளைவாக உள்ளது. பாகிஸ்தானின் பஷ்டூன் பழங்குடி பகுதி, எல்லையோரங்களில் ஜிஹாத் அல்லது புனிதபோர் நடத்துவதற்காக உலகின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் குவியும் இடமாக மாறி இருந்தது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களால் பொருளாதாரத்திலும், வறுமையிலும் முழுமையாக மிகவும் பின்தங்கிய நிலையில் இந்த பகுதி விடப்பட்டிருந்த போதினும், இது ஆயுதங்களாலும், இஸ்லாமிய பிரச்சாரங்களாலும் நிரம்பியுள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள பஷ்டூன் இளைஞர்கள், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இச்சூழலில்தான் வளர்ந்துள்ளார்கள். தீவிர இஸ்லாமிற்கு கடந்த காலத்தில் அமெரிக்கா ஆதரவளித்த மரபியம், மூன்று மில்லியனுக்கும் மேலான மக்கள் வாழும் FATA பகுதிகளில் தீவிரவாத படைத் தளபதிகளின் கட்டுப்பாட்டிற்கான சூழலை உருவாக்கி இருப்பதுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த பல மில்லியன் அகதிகள் உட்பட, 21 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும் அவர்களின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. ஆச்சரியத்திற்கிடமின்றி, ஆப்கானிஸ்தானின் நவ-காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு புதிய ஜிஹாத்திற்கான பரந்த ஆதரவையும் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் வாஷிங்டனின் ஒரு பொம்மை அரசாங்கம் என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் வென்றிருக்கிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசாங்கம் அழிக்க வேண்டும் என்ற அமெரிக்கா வலியுறுத்தலானது, நாட்டு மக்களின் ஒரு கணிசமான சதவீதத்தினருக்கு எதிராக அது பல ஆண்டுகளாக போரிடவேண்டும் என்ற கோரிக்கையாகும். 2004 இல் இருந்து அதுபோன்றதொரு பிரச்சாரத்தை தொடர தவறியதற்கு பின்னர், பாகிஸ்தான் இராணுவத்திற்கு அவ்வாறு செய்வதற்கான தகுதி உண்டு என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. வலுவான 600,000 துருப்புகளை கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தில் பெரும்பாலானவர்கள், FATA மற்றும் NWFP இல் இருந்து நியமிக்கப்பட்ட பஷ்டூன் இனத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் தங்களின் சொந்த மக்கள் மீதான் ஒடுக்குமுறைக்கும் மற்றும் குண்டுவீசுவதிலும் விருப்பமின்றித்தான் செயல்படுவார்கள் என்பதுடன், அரசாங்கத்திற்கு எதிரான வெளிப்படையான கலகம் மற்றும் எழுச்சியின் முக்கிய மூலங்களாகவும் இருப்பார்கள். 2001 இல் இருந்து, ஆப்கானிஸ்தானில் பொம்மை அரசை ஸ்தாபிக்க வாஷிங்டனின் ஏகாதிபத்திய முயற்சி, சிறிதும் குறைவற்ற பேரழிவாக இருக்கிறது. மத்திய ஆசியாவின் வளங்கள் மீது அமெரிக்காவின் செல்வாக்கிற்கு உதவுவதற்கு பதிலாக, அன்னியப் படைகள் வெளியேறும் வரையிலும் அது கலகங்களை தூண்டிவிட்டது என்பதுடன், ஓர் உள்நாட்டு யுத்ததிற்கு கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தில் பாகிஸ்தானை அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டினராக தற்போது கொண்டு வந்துள்ளது. |