World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
Global trade talks collapse சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன By Bill Van Auken சர்வதசே கட்டுப்பாட்டற்ற வர்த்தக உடன்படிக்கை மீதான எதிர்பார்ப்புகள், இந்த வாரம் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கசப்பான எரிச்சல் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் தகர்ந்தன. ஒன்பது நாட்கள் தொடர்ச்சியான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், வர்த்தக மந்திரிகள் ஒன்றுமில்லாமல் மேஜையை விட்டகன்றனர். தடையற்று சந்தைகளை திறந்து விடுவதற்கான மேற்கத்திய முதலாளித்துவ சக்திகளின் கோரிக்கைகளுக்கும், குறிப்பாக அமெரிக்க விவசாய தொழிலால் உருவாக்கப்பட்ட மலிவு ஏற்றுமதியிலிருந்து தங்கள் விவசாயத் துறையை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை தக்க வைப்பதன் மீது "வளர்ந்து வரும்" பொருளாதாரங்களான இந்தியா மற்றும் சீனாவின் வலியுறுத்தல்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியை போக்க அவர்கள் தவறினார்கள். "சுற்றிவளைத்து பேசுவதில் ஒன்றும் பலனில்லை. இந்த கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. தங்கள் வேறுபாடுகளை உறுப்பினர்களால் சரிகட்ட முடியவில்லை." என சர்வதேச வர்த்தக அமைப்பு (WTO) பொது-இயக்குனர் பாஸ்கல் லாமி ஊடகங்களிடம் தெரிவித்தார். கடந்த ஏழு வருடங்களில் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி என்பது எப்போதுமில்லாத ஒரு நிகழ்வாகும். 2003இல் கன்குனிலும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்காங்கிலும் நடந்த மந்திரிகள் மட்டத்திலான கூட்டங்களும் மற்றும் 2006ல் ஜெனிவாவிலும் மற்றும் கடந்த ஆண்டு ஜேர்மனியின் போஸ்டாமில் நடந்த பிற சுற்று பேச்சுவார்த்தைகளும் ஓர் உடன்படிக்கையை எட்டுவதில் தோல்வியுற்றன. எவ்வாறிருப்பினும், டோஹா சுற்று (2001 இல் சர்வதேச வர்த்தக உடன்படிக்கை மீது தொடங்கிய பேச்சுவார்த்தைகள் கட்டார் தலைநகர் பெயரால் குறிப்பிடப்பட்டது) என்றழைக்கப்பட்ட இந்த முறை, முன் எப்போதுமில்லாத வகையில் அடுத்த சில ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்படுமா என்று முக்கிய பங்களிப்பு நாடுகள் கேள்வி எழுப்பின. இறக்குமதி கூடியளவில் அதிகரிக்கும்போது விவசாய பொருட்கள் விலைகளை நாடுகள் தற்காலிகமாக உயர்த்த அனுமதிக்கும் "சிறப்பு பாதுகாப்பு முறை" (SSM) என்பது மீதான ஒரு முரண்பாடே பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைக்குரிய புள்ளியாக இருந்தது. இதுபோன்றதொரு கட்டுப்பாட்டு விதிக்கு எந்த மட்டத்திலான உயர்வு தேவை என்பதே பிரச்சனையாக இருந்தது. இறக்குமதியில் 40 சதவீத உயர்வின் போது மட்டுமே அது அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்திய போதில், இறக்குமதிகளில் 10 சதவீதம் அதிகரிக்கும் போது அதை நிர்மாணிக்க வேண்டும் என்று இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தின. நிலையான உள்நாட்டு உணவு வினியோகத்தை விட்டு கொடுக்க விரும்பாததால், இந்த பிரச்சனையில் பெய்ஜீங் மற்றும் புது டில்லி தங்களின் பிடிவாதத்தை தக்க வைத்திருந்தன. "ஒவ்வொரு நாடும் அதன் சொந்த உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று கூறிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி மற்றும் நாட்டின் முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தையாளர் கமல்நாத், "அபிவிருத்தி அடைந்த நாடுகளின் வர்த்தக நலன்களுக்காக ஏழை விவசாயிகள் பலவீனமான நிலைமையை வர்த்தகம் செய்ய முடியாது." என்றார். சீனா மற்றும் இந்தியா இரண்டு ஆட்சியாளர்களும் கிராமப்புற மக்களின் அதிகரித்துவரும் அமைதியின்மையை காண்கிறார்கள். இந்தியாவில் சுமார் 700 மில்லியன் மக்கள் விவசாயத்தை நம்பி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், சீனாவில் சுமார் 500 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். வெளிநாடுகளின் மலிவான இறக்குமதிகளின் போட்டியால் பெருமளவிலான ஏழை விவசாயிகள் தங்களின் நிலங்களை விட்டுதுரத்தப்பட்டுவிட்டதால், இரண்டு நாடுகளிலும் சமூக எழுச்சிகான அச்சம் முன்நிற்கிறது. காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், மக்கள் தொகையில் பெருமளவில் இருக்கும் ஏழை கிராமப்புற மக்களின் சீற்றத்திற்கு உள்ளாக்கும் ஓர் உடன்படிக்கைக்கு உடன்பட இந்திய பேச்சுவார்த்தையாளர்கள் விரும்பவில்லை. புதனன்று, பெய்ஜீங் ஆட்சியின் உத்தியோகப்பூர்வ சீன தினசரியில் பதிப்பிக்கப்பட்ட ஒரு தலையங்கம் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கு முன்னால் பேச்சுவார்த்தையின் கீழ் இருந்த உடன்படிக்கை வரைவை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது. "வளமிக்க நாடுகளில் இருந்து மலிவு விலை விவசாய பொருட்களின் இறக்குமதியால், வளரும் நாடுகளின் வறிய விவசாயிகளின் வாழ்க்கையை இந்த உடன்படிக்கை அபாயத்திற்கு இட்டு செல்கிறது," என்று அது குறிப்பிட்டது. சீன செய்தி நிறுவனமான Xinhuaவும் அமெரிக்காவின் நிலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. "தொடர்ச்சியாக தீங்கான விளைவுகளுக்கு இட்டு செல்லக்கூடிய, இந்த சுயநலமான மற்றும் குறுகிய கண்ணோட்ட நடவடிக்கை, நேரடியாக இந்த சிறிய அளவிலான சர்வதேச வர்த்தக அமைப்பின் மந்திரிகள் அளவிலான கூட்டத்திற்கு தோல்வி அளித்தது." என்று குறிப்பிட்டது. வளரும் நாடுகளின் சந்தைகள் திறந்து விடப்படுவதற்கு மாற்றாக விவசாயத்துறை மானியங்களை வெட்டுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதினும், இந்த சலுகைகள் பயனற்றவையாகவே பரவலாக பார்க்கப்பட்டன. "வர்த்தக விவகாரங்களில் சலுகைகள் அளிப்பதில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பக்கத்தில் வெகு குறைவான விருப்பங்களே இருந்தன, ஆனால் அவர்களுக்கு தேவையான இலாபங்களை பெறுவதற்கு நிறைய ஆசைப்பட்டார்கள்." என்று அர்ஜென்டினாவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜோர்ஜ் டாய்னா தெரிவித்தார். இதேபோன்று, இந்தோனேஷிய வர்த்தக மந்திரி மரி எல்கா பன்கெஸ்து, வாஷிங்டனின் பிடிவாதம் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள மறுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுப்புகளினால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக குற்றஞ்சாட்டினார். உள்நாட்டு விவசாயத்தை பாதுகாப்பதற்கான இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளின் கோரிக்கை ஒரு "நியாயமான கோரிக்கையாக" இருந்தது என்று தெரிவித்த அவர், ஆனால் "அது வளைந்துகொடுக்கும் தன்மை காட்ட போவதில்லை" என்பதை அமெரிக்கா வெளிப்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பாக, பரிந்துரைக்கப்படும் இந்த பாதுகாப்பு முறைமை "பாதுகாப்புவாத கூச்சலுக்கான ஒரு கருவி" என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சூசன் ஸ்கூவப், "சர்வதேச வர்த்தக முறையை ஓர் ஆண்டு அல்லது 5 ஆண்டல்ல, 30 ஆண்டுகள் பின்னால் தள்ளியுள்ள இவ்வாறான முடிவுடன் நாம் வெளிவந்திருப்பது மனசாட்சியற்றதன்மை" என்றார். சர்வதேச உணவு நெருக்கடியையும் "மனசாட்சியற்றதன்மை" என்று குறிப்பிட்ட ஸ்கூவப், "உணவு பொருட்கள் இறக்குமதிக்கு எத்தனை நாடுகள் தடை எழுப்புகின்றன என்பதன் கீழ் இது அமைகிறது." என்றார். கடந்த ஏழு ஆண்டு டோஹா பேச்சுவார்த்தைகளில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான அனைத்து நான்கு நிறைவேறாத முயற்சிகளிலும், சர்வதேச வர்த்தகத்தில் வெறும் 7 சதவீதம் மட்டும் கொண்டிருக்கும் விவசாயம் தடுக்கும் தடையாக இருந்திருக்கிறது. ஒருபுறம், சக்திவாய்ந்த விவசாய நலகுழுக்களால் பொறாமையுடன் பாதுக்கப்படும் அரசு மானிய முறையை ஒழிக்க விருப்பமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளன. மற்றொருபுறம், கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிகளால் உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்கள் முற்றிலுமாக துடைக்கப்பட்டிருப்பதால், வளரும் நாடுகள் எனக் கூறப்படுபவைகளின் அரசாங்கங்கள் பாதுகாப்புவாத முறைமைகளை ஒழிக்க விரும்பவில்லை. ஆயிரக்கணக்கான மக்களை பட்டினியில் தவிக்கவிட்டிருக்கும் சமீபத்திய சர்வதேச உணவு பொருட்கள் விலையேற்றத்தால் இந்த பிரச்சனை மீதான பதட்டங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. சர்வதேச வேளாண்தொழில் பெருநிறுவனங்கள் பாரிய இலாபங்களை அறுவடை செய்யும் போதில், உணவு மற்றும் பிற அடிப்படை உணவுபொருட்களின் விலையுயர்வால் உருவாக்கப்பட்ட உறுதியற்ற சூழலை கட்டுப்படுத்துவதற்கான திறனை இழந்து விடுவோமோ என்று இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளின் அரசாங்கங்கள் அஞ்சுகின்றன. ஆரம்பத்தில், இருபது நாடுகளின் குழுமம் என்றழைக்கப்படுவதில் இந்தியாவுடன் இணைந்து பிரேசில் வளர்ந்து வரும் விவசாய உற்பத்தி நாடுகள் என்பதை வழி நடத்தியது. அது வர்த்தக உடன்படிக்கை மீது வாஷிங்டனுடன் முரண்பட்டிருந்தது. அந்த பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயத்துறை மீதான கணிசமான சலுகைகளை நாஜி பிரச்சாரத்திற்கு ஒத்ததாக வழங்குகின்றன என்று ஒப்பிட்டு பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி செல்சோ அமோரிம் ஒரு சிறிய கிளர்ச்சியை உருவாக்கினார். "ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகிவிடும் என்று கோயெபெல்ஸ் கூறுவதுண்டு," என்று ஏமாற்றும் அமெரிக்க-ஐரோப்பிய வாதங்கள் குறித்து அமோரிம் கூறினார். எவ்வாறாயினும், இறுதியில், பிரேசிலில் செயல்படும் முக்கிய வேளாண்தொழில் பெருநிறுவன நலன்களையும் மற்றும் நாட்டின் உயிரிஎரிபொருள் (biofuel) ஏற்றுமதி துறையின் மாபெரும் அபிவிருத்திக்கான பிரேசில் அரசாங்கத்தின் ஆதரவையும் முன்னிட்டு அது ஒப்பந்தத்தை ஆதரித்தது. ஐரோப்பிய சங்கங்களின் வர்த்தக ஆணையாளர் பீட்டர் மன்டல்சனும் வாஷிங்டன் மீது பெரும்பான்மை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸால் கொண்டு வரப்பட்ட ஐந்தாண்டு விவசாய மானிய திட்டத்தால் விவசாயத்தின் முடிவு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். "அமெரிக்க வரலாற்றில் பிற்போக்கான விவசாயத்துறை மசோதாக்களில் இதுவும் ஒன்று," என்று இத்திட்டம் குறித்து அவர் குறிப்பிட்டார். Reuters செய்தி நிறுவனத்துடனான ஒரு பேட்டியில், ஏழை நாடுகளில் சந்தைகளைத் திறந்து விடுவதற்கும், பணக்கார நாடுகளில் மானியங்களை வெட்டுவதற்கும் இடையிலான வர்த்தகத்திற்கு டாலருக்கு டாலர் எனும் அணுகுமுறையை கொண்டிருக்கும் வாஷிங்டனை மன்டெல்சன் குற்றஞ்சாட்டினார். உண்மையில், டோஹா சுற்று வளரும் உலகம் என்றழைக்கப்படுவதன் (குறிப்பாக விவசாயத்தில்) அபிவிருத்தியை முன்னேற்றுவது என்ற வெளிவேஷமிட்ட இலக்குடன் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.புதனன்று அவரின் வலைப்பதிவில் எழுதும் போது, அமெரிக்க நிலையின் மற்றொரு மெல்லிய முகத்திரையும் கிழித்தார். "இதுபோன்றதொரு ஒரு ஓட்டப்போட்டியில் கடைசி மைல்கல்லில் தோல்வியை சந்திப்பது என்பது மிகவும் மோசமாகும்," என்று எழுதிய அவர், "மேஜையில் கூடி இருந்தவர்களில் சிலர், வெற்றிக்காக உழைப்பதற்கு பதிலாக, உண்மையில் தோல்விக்காக தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அறியும்போது கடினமாக இருந்தது." என்று குறிப்பிடுகிறார். பேச்சுவார்த்தையில் இருந்து தப்பி ஓட இந்தியா மற்றும் சீனாவால் எடுக்கப்பட்ட சாக்குபோக்கு நிலைப்பாட்டை அமெரிக்க பிரதிநிதித்துவம் வரவேற்றதை பலர் கூர்ந்து கவனித்தனர். ஓர் ஆண்டில் தேர்தல் இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை குறைத்த முகத்தோற்றத்துடன் விவசாயிகளை எதிர்கொள்ள வெள்ளை மாளிகையிடம் எந்த ஆர்வமிக்க முகாந்திரமும் இல்லை. அனைத்திற்கும் மேலாக, தேர்தல் ஆணைய அட்டவணை இந்த செயல்முறையை பாரியளவில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும் கூட, அத்துடன் கொலாம்பியா, பனாமா மற்றும் தெற்கு கொரியாவுடன் உடன்படிக்கை கைசாத்திட காங்கிரஸின் முட்டுக்கட்டை இருந்தாலும் கூட, இருதரப்பு கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அதன் முயற்சிகளை புஷ் அரசாங்கம் தீவிரமாக்கி உள்ளது. ஓர் உடன்படிக்கை எட்டுவதற்கு தேவையான சலுகைகளை வழங்குவதில் எந்தவகையிலும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கியப்படவில்லை. விவசாய மானியங்களை வெட்டுவது என்பது ஓர் சிக்கலான அரசியல் பிரச்சனையாக உள்ளது, குறிப்பாக ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வெளிப்படையாக ஐரோப்பிய ஆணைக்குழுவை குற்றஞ்சாட்டிய பிரான்சின் பேரம் பேசும் நிலை மன்டெலினால் எடுத்துக்காட்டப்பட்டது. பேச்சுவார்த்தையின் உடைவு ஏற்கனவே தளர்வுற்றிருக்கும் சர்வதேச முதலாளித்துவ பொருளாதாரத்தின் மற்றொரு பின்னடைவாக பரவலாக பொருள்படுத்தப்பட்டது. உடன்படிக்கையை சட்டமாக நிறைவேற்றி இருந்தால் முக்கிய தொழில்துறை நாடுகளுக்கு புதிய ஆண்டு இலாபமாக 110 பில்லியன் டாலரை உருவாக்கி அளித்திருக்கும், மேலும் வளரும் நாடுகள் என்பனவற்றிற்கு அதற்கு இரண்டு மடங்கு கூடுதலாக கிடைத்திருக்கும் என்று சர்வதேச வர்த்தக அமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டிருந்தனர். "சர்வதேச பொருளாதாரம் மீதான நம்பிக்கையில் அதுவொரு பாரிய தாக்கமாகும்," என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் பாவர் தெரிவித்தார். "நமக்கு மிக முக்கியமாக தேவைப்படும் அமைப்பின் மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது. அது இனி நடைபெறப்போவதில்லை." என்றார். ஜேர்மனியில், வர்த்தக நாளிதழ் Handelsblatt பின்வருமாறு எச்சரித்தது: "நீண்ட கால போக்கில் ஜெனிவாவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஒரு மிகபெரிய முக்கியத்துவத்தின் உடைவை குறிக்கிறது. வர்த்தகத்தை அமைக்கும் விதிகள் மேலும் தெளிவற்றதாகும், ஏனென்றால் சர்வதேச அளவில் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்பை தனிப்பட்ட நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மாற்றியமைக்கும். பிரச்சனைகளுக்கான நடுவராக இருப்பதற்கான அதன் செல்வாக்கை சர்வதேச வர்த்தக அமைப்பு இழக்கும். இதற்கான விலை படிப்படியாக வியாபாரங்களால் மட்டும் உணரப்படும். ஆனால் அது அதிகமாக இருக்கும். ஏற்றுமதியாளர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்புத்தன்மையை இந்த வர்த்தக முறை இழந்து வருகிறது." அந்த ஜேர்மன் பத்திரிகை, சர்வதேச வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகளின் தோல்வியை "உலகில் மாறி வரும் அதிகார உறவுகள்" என்றும் குறிப்பிட்டது. அது குறிப்பிட்டதாவது: "அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தங்களின் குரலை உயர்த்திய மற்றும் அவர்களுக்குள் உலக வர்த்தக உடன்படிக்கையை பெரியளவில் ஏற்படுத்திய காலமெல்லாம் போய்விட்டன. சீனா மற்றும் இந்தியா ஒரு முக்கிய நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. அவை தங்களின் நலன்களுக்காக கடுமையாக போராடும் என்பதுடன் கட்டுப்பாடற்ற வர்த்தகம் அவற்றிற்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே அவை ஆதரவளிக்கும். பழைய தொழில்துறை சக்திகள் இந்த கசப்பான உண்மையை மெதுவாக உணர்வார்கள். ஜெனிவா வெறும் முன்னனுபவம் மட்டும் தான்." புதனன்று வாஷிங்டன் போஸ்ட், "டோஹா மாற்றம்" என்ற தலைப்பிலான ஒரு சிடுசிடுப்பான தலையங்கத்தை பிரசுரித்தது. "சமீபத்திய கசப்பான பொருளாதார செய்திகளின் நீண்ட பட்டியலில் ஜெனிவாவில் இருந்து வரும் இந்த மகிழ்ச்சியற்ற அறிக்கையும் சேர்கிறது: டோஹா சுற்று என்று அறியப்படும் சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இல்லாமல் நேற்று முறிந்தது," என்று கூறி அந்த தலையங்கம் தொடங்கியது. "எதிர்கால தொலைநோக்கிற்கான ஓர் உடன்படிக்கைக்கு தயாராக இல்லை என்பதை சர்வதேச வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் நிரூபித்தன. இந்த முடிவு சர்வதேச வர்த்தக அமைப்பின் எதிர்கால முக்கியத்துவத்தின் மீது ஒரு நீண்ட நிழலிடுகிறது, மேலும் சர்வதேச வர்த்தகம் பிராந்திய அல்லது குறிப்பிட்டதுறைக்கான குழுக்களுக்குள்ளான போட்டியாக சிதறுவதற்கான சூழலை அதிகரித்துள்ளது." இந்த கருத்துக்களுக்கு அடித்தளத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டங்களுக்குள், டோஹா சுற்று தோல்வி மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்பின் செல்வாக்கு வீழ்ச்சியுற்றிருப்பதானது இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து வர்த்தக உறவுகளுக்கு அடித்தளமாக இருந்த பன்முகவாதத்தின் முறிவுக்கு இட்டு செல்லும் என்ற ஆழ்ந்த கவலை உள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பயம் என்னவென்றால் அதன் இடத்தில், 1930களின் பாரிய மந்தநிலையின்போது சர்வதேச பொருளாதாரத்தை பீடித்த நெருக்கடியின் முக்கிய மூலங்களை திரும்ப உருவாக்கும் மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்பின்மையை உருவாக்கி உலக யுத்தத்திற்கு வழிகோலும் ஒரு தொடர்ச்சியான போட்டி வர்த்தக அணிகள் மற்றும் பாதுகாப்புவாத வளர்ச்சி உருவாகும் என்பதேயாகும். |