World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French nuclear industry has repeated accidents

பிரெஞ்சு அணுசக்தித் தொழிலில் பலமுறையும் விபத்துக்கள்

By Olivier Laurent
1 August 2008

Back to screen version

Tricastin அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்ட பெரும் யுரேனியக் கசிவு பிரான்ஸின் அணுசக்தி தொழிலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிகழ்வுகள் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது; அங்கு உள்ள தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய தீவிர சந்தேகங்களை இது எழுப்பியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பிரான்ஸின் பொதுத்துறை அணுசக்தி பெருநிறுவனமான Areva ஆகியவற்றின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள முரண்பாடான அறிக்கைகளும் மூடி மறைத்தல் என்ற சந்தேகத்தை உயர்த்திக் காட்டுகிறது.

ஜூலை 7-8 இரவில், பிரான்ஸின் தென்கிழக்கில் Drôme பிராந்தியத்தில் இருக்கும் Tricastin அணுசக்தி நிலையத்தில் 30 கன மீட்டர்கள் யுரேனிய அடர்த்தி நீர் கசிந்தது. இது ஓரளவு ஆலைப் பகுதியில்தான் இருந்தது; இங்கு குறைந்த கதிர்வீச்சு உடைய அணுசக்தி கழிவுப்பொருள் சுத்தப்படுத்துதல், வேறு ஒன்றாக மாற்றப்படுதல் உள்ளது; இதைத் தவிர கசிவு வெளியேயும் கொட்டியது. HCTISN (High Commission for Transparency and Information on Nuclear Safety) எனப்படும் அமைப்பு இந்த நிகழ்வும் இது பின்னர் இயக்கப்பட்ட முறையும், Areva வின் துணைநிறுவனமான Socatri பங்கில் இந்த ஆலையை நடத்திக் கொண்டிருப்பதின் "தவறான செயற்பாடுகளின் பிணைப்பு மற்றும் மனித அளவில் கவனிப்பு இன்மை" ஆகியவற்றை வெளிக்காட்டுகிறது என்ற முடிவிற்கு வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை பற்றி கொடுத்துள்ள அறிக்கைகளில், Socatri வெளிவந்த யுரேனியத்தை தான் முதலில் 360 கிலோ கிராம்கள் என்றும் பின்னர் 224 கிலோ கிராம் என்றும் அறிவித்தது; இதில் 74 கி.கிராம் "மட்டும்தான்" ஆலைக்கு வெளியே கொட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது; மேலும் இது சர்வதேச அணுசக்தி அமைப்பின் சர்வதேச அணுசக்தி நிகழ்வுகள் பற்றிய அளவின் தரத்தில்தான் இருந்ததாகவும் கூறியிருக்கிறது. இந்த நிகழ்வு சாதாரண விலகல் ("Simple deviation") 0 லிருந்து 7 என்ற பெரும் விபத்து ("Major accident") என்ற அளவிலான தரத்தில் 1 என்ற அளவில் இருந்ததாக வகைப்படுத்தப்பட்டது.

INES (International Nuclear Events Scale) தரம் பிரித்துள்ளதே மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது: ஒரு அணுசக்தி நிலையத்திற்கு வெளியே மாசு ஏற்படுகிறது என்றால் INES வகைப்படுத்தல் இந்த நிகழ்வு குறைந்த பட்சத் தரமான 3ல் வகைப்படுத்தப்பட்ட வேண்டும் என்று கோருகிறது.

இத்தகவல், நிகழ்வின் தீவிரத்தை மதிப்பீடு செய்யப் போதுமானதாக இல்லை. Socatri வெளியிடப்பட்ட யுரேனிய அளவைத்தான் கொடுத்துள்ளது; ஆனால் பொருத்தமான அளவு கதிரியக்கத்தின் அளவு ஆகும், அது Becqueels என்பதில் அளக்கப்படுகிறது. இப்படி கொடுக்காதது பீதியை தவிர்ப்பதற்காக செய்யப்பட்டுள்ளது. 74 கிலோகிராம் இயற்கையான, செறிவூட்டப்படாத யுரேனியம் கசிந்தாலும், அரசுசாரா அமைப்பான CRIIRAD (Independent Commission of Research and Information on Radioactivity) வெளியிடப்பட்ட கதிரியக்கம் அனுமதிக்கப்பட்ட அளவான ஆண்டு ஒன்றிற்கு 71.7 மெகாபெக்கீல் என்பதற்குப் பதிலாக 1918 மெகாபெக்கீலாக ஒரு இரவில் இருக்கக்கூடும், என்று மதிப்பீடு செய்துள்ளது.

உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சி நடந்தது எப்பொழுது என்பதும் தெளிவாக இல்லை. ஜூலை 8 காலை 6.30 க்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு காலை 7.30க்குத் தெரிவிக்கப்பட்டது; அருகில் இருக்கும் நகரத்தின் (Lapalud) மேயருக்கு பிற்பகல் 1.30க்கு தகவல் கொடுக்கப்பட்டது; செய்தி ஊடகத்திற்கு பிற்பகல் 4 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் Journal du dimance க்கு ஜூலை 30ல் கொடுத்த பேட்டியில், Areva வின் தலைமை நிர்வாக அதிகாரி Anne Lauvergon "அதிகாரிகளுக்கு அதிகாலை 4.45க்கே தெரிவித்திருக்க வேண்டும்" என்றார்.

ASN என்னும் Nuclear Safety Authority இன் ஆய்வு ஜூலை 10ம் தேதிதான் நடந்தது; இதன் பின்னர் Socatri யின் தலைமை நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அரசாங்க அதிகாரிகள் நிகழ்வை பெரிதுபடுத்த விரும்பவில்லை. சுற்றுச் சூழல் மந்திரியான Jean-Louis Borloo 2007 ல் 1ம் தர "குறைபாடுகள்" 86 இருந்ததாகவும், 2006ல் 114 ஆக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை -- இதுவே ஒன்றும் அச்சத்தைப் போக்கவில்லை-- ஏன் ஒரு சாதாரண "குறைபாடு" தலைமை நிர்வாகியை பணி நீக்கம் செய்யும் அளவிற்கு சென்றது என்பதை விளக்கவில்லை.

2003 ஜூலை 23 இயற்றப்பட்ட ஆணை, மற்றும் 2006, ஜூன் 13 ல் இயற்றப்பட்ட சட்டம் இரண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அணுசக்தி நிலையங்களில் நடக்கும் தகவல்கள் பகிரங்கமாக்கப்பட மாட்டாது என்று கூறுகின்றன. அதேபோல் நிகழ்வுகளை பற்றி குறைவாகத்தான் கூறப்படும். இந்த நடவடிக்கைகள் இருப்பு, பாதுகாப்பு, நடைமுறை, அணுசக்தி பொருள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது அனைத்தையும் உயர்மட்ட இரகசியமாக வைத்துள்ளது. அணுசக்தி பாதுகாப்பு பயிற்சிகளுக்கும் இது பொருந்தும்.

Tricastin நிலையம் அணுசக்தித் தொழிலில் ஒரு முக்கிய பகுதி ஆகும்; இங்கு 5,000 ஊழியர்கள் உள்ளனர்; இதைத்தவிர பல துணை ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளன. இதில் Pierrelatte இராணுவ ஆராய்ச்சி நிலையம், EDF (பிரான்ஸின் பொது நிறுவனம் மின் ஆலைகளுக்காக செயல்படுவது). மின் ஆலை, இயற்கை யுரேனியத்தை மாற்றும் ஆலை, யுரேனிய செறிவூட்டல் ஆலை (Eurodiff) ஆகியவை உள்ளன. கடைசி இரண்டும் Areva வின் துணை நிறுவனங்கள் ஆகும். Socatri யே Eurodiff உடைய துணை நிறுவனம் ஆகும்.

ஏற்கனவே CRIIRAD இந்த இடத்தில் நடக்கும் பல தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளது. அதிக கதிரியக்க தரங்கள் 2002ல் Tricastin னில் பல இடங்களில் அளக்கப்பட்டன. இன்னும் சமீபத்தில் கழிவுக்குழாய்களில் (ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் 2007ல்), சேமிப்புத் தொட்டிகளில் (அக்டோபர் 2007) அல்லது கழிவு துப்புரவு செய்யப்படும் இடத்தில் (நவம்பர் 2007) கசிவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் ஜனவரி மாதம் கதிரியக்க கழிவு கவனக்குறைவாய் ஒரு மாற்று தொட்டியில் விடப்பட்டது. விதிமுறைக்கு மீறிய அதிகமான வெளியீடுகள் சுற்றுச் சூழலில் 2006ல் விடப்பட்டன என்றும் கூறப்படுகிறது. மேலும் Areva அதிகபட்ச வெளியீட்டுத் தரங்களை அதிகரிக்குமாறு கோரியுள்ளது; இதுவும் விவாதத்தில் உள்ளது.

ஜூலை 7 நிகழ்வு பற்றிய விசாரணை ஒரு நீர்ப்பரப்பு மாசுபட்டுள்ளதையும் கண்டுபிடித்தது; இது Pierrelatte இல் இருக்கும் இராணுவ அணுசக்தி கழிவுப் பொருள் கிடங்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. முதல் நிகழ்வினால் தூண்டுதல் பெற்ற உணர்வை அடுத்து, 58 பிரெஞ்சு விசை ஆலைகளிலும் இருக்கும் நீர்ப்பரப்பு பற்றி ஆய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆரம்ப Tricastin கசிவு ஒரு எரிபொருள் வழிவகை ஆலையில் இருந்தது, மின்விசை ஆலையில் இல்லை என்பதை மேற்கோளிட்டு, Greenpeace France இன் அணுசக்தி பிரச்சினைகளுக்கான செய்தித் தொடர்பாளர் Frederic Marillier, ஜூலை 17 செய்தி ஊடகத்திற்கு விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்: "இந்தப் பகுப்பாய்வு அணுவாலைகளில் மட்டும் இல்லாமல் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் விரிவாக்கப்பட வேணடும். வழிவகை செய்யும் இடங்கள் (Cadarache, Marcoule, Hague போன்றவை) அதைத்தவிர உபயோகத்தில் இல்லாத யுரேனிய சுரங்கங்கள் (Bessines போன்றவை), இராணுவப் பகுதிகள் (Valduc போன்றவை), கழிவு சேமிப்பு மையங்கள், குறிப்பாக Manche பகுதி மற்றும் Soulaines ஆகியவற்றிலும் ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்."

இதற்கு அடுத்த வாரங்களில் வேறு நிகழ்வுகள் இருந்தன; இதைப்பற்றி தவகல் குறைந்தது: ஜூலை 11 ல் Nogent-sur-Seine அணுசக்தி ஆலை; ஜூலை 12ல் Gravelines ல் உள்ள ஆலை; ஜூலை 18 அன்று Saint-Albans-Saint-Maurice மற்றும் ஜூலை 23ல் Tricastin இல் உள்ள கதிரியக்க நிலையம். ஜூலை 17ல் மற்றொரு கசிவு FBFC ஆலை Romans-sur-Isere (Drôme லும்) கண்டுபிடிக்கப்பட்டது; இவை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய் வெடிப்பினால் நிகழ்ந்தன. மொத்தத்தில் CRIIRAD புள்ளிவிவரங்களின்படி, 126 தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக Le Monde நாளேடு கூறுகிறது.

ஜூலை 25ல் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் CRIIRAD, "நிகழ்வுகள் மறுபடியும் ஏற்பட்டுள்ளது பாதுகாப்பு முறை பற்றி குறிப்பான கவலையைத்தான் சுட்டிக் காட்டுகின்றன." என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் Journal du dimance ஜூலை 19 பதிப்பில் லுவர்ஜியான் இந்த நிகழ்வை கையாண்டவிதம் "தொழிற்துறையில் இருக்கும் பகிரங்கத்தன்மைக்கு நிரூபணம்", என்று வெற்றுத்தனமாக கூறியுள்ளார். இதன்பின் அவர், "இந்நிகழ்வு முடிந்துவிட்டது" என்றார். Associated Press க்கு கொடுத்த தொலைபேசிப் பேட்டி ஒன்றில் அணுசக்தி அமைப்பு தலைவரான Luis Echavarri அறிவித்தார்: "எந்த தொழிலும் முழுமையை நீங்கள் எதிர்பார்க்கமுடியாது." Tricastin நிகழ்வு "குறைந்த தன்மை உடையது" என்றும் பொதுமக்கள் கருத்தில் எதிரிடை பாதிப்பு ஏதும் இராது என்றும் அவர் கூறினார்.

இந்த சிடுமூஞ்சித்தனமான அறிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மூலோபாய நலன்கள் சக்தி வாய்ந்து விளங்குகின்றன. உலகில் இருக்கும் மிக முன்னேறிய அணுசக்தி தொழிலில் பிரான்சும் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட பிரான்சில் 80 சதவிகித மின்விசையை கொடுக்கிறது; 2007ல் Areva வின் இலாபம் 743 மில்லியன் யூரோக்கள் ஆகும். சமீபத்திய நிகழ்வுகள் காட்டுவது போல், இலாப உந்ததுதல்கள் Areva வை தரக்குரைவான பாதுகாப்பு முறையில் ஈடுபட வைத்துள்ளதுடன் உள்கட்டுமான முதலீடும் போதுமானதாக இல்லை என்பதைத் தெரிவிக்கிறது.

மேலும், நிலத்தடி எரிபொருள்களின் மகத்தான விலையுயர்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளிப்பாடு பற்றிய கவலைகளின் எழுச்சி ஆகியவை உலகம் முழுவதும் அணுசக்தி விசையில் புதிய ஆர்வத்தை தூண்டியுள்ளன. ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் தலைமையில் பிரெஞ்சு முதலாளித்துவம் வணிக மற்றும் புவி அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளது. தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் பவற்றில் முக்கியமான அம்சமாக அணுசக்தி உள்கட்டுமான விற்பனையை சார்க்கோசி வாடிக்கையாக்கி கொண்டுள்ளார். பிரான்ஸின் அணுசக்தி தொழில் முற்றிலும் நம்பகத்தன்மை உடையது என்ற போலித்தோற்றத்தை தக்க வைப்பது பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு முக்கியமாகும்; அதிலும் குறிப்பாக அவர்களுடைய விளம்பரம், அணுசக்தி விசை சூரிய, காற்று சக்திகளுக்கு சுத்தத்தில் இணையானது என்று பறை சாற்றுகிறது.

நீண்ட காலமாகவே மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும் முன்னாள் பிரெஞ்சு குடியேற்றமான நைகரில் இருந்து கிடைக்கும் குறைந்த விலை யுரேனியத்தால் Areva பலன் அடைந்துள்ளது. கனடாவிலும் இது யுரேனிய சுரங்கங்களை நடத்திவருகிறது; அமெரிக்காவில் 40 இடங்களில் செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி Areva, இங்கிலாந்தில் இருக்கும் Sellafield நிலையத்திற்கு உகந்த ஏலம் எடுத்தவர் என்று அறிவிக்கப்பட்டது; அது ஆண்டு ஒன்றுக்கு 1.6 பில்லியன் யூரோ மதிப்பை தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது. 10 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு வர்த்தக உடன்பாட்டின் பாகமாக ஒர் அணுசக்தி ஒப்பந்தமும் சார்க்கோசிக்கும் லிபிய சர்வாதிகார மு அம்மர் கடாபிக்கும் இடையே டிசம்பர் 2007ல் செய்து முடிக்கப்பட்டது. அதற்கு முன்பு சார்க்கோசி ஒரு 8 பில்லியன் யூரோ மதிப்புடைய அணு ஆலை விற்பனையை சீனாவிற்கு நவம்பரில் வழங்கினார்; ஜூன் 2007ல் தெற்கு கொரியாவில் யுரேனிய செறிவூட்டல் ஒப்பந்தம் ஒன்றை 1 பில்லியன் யூரோவிற்கு Areva பெற்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved