:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan defence ministry evicts poor
families as part of war drive
இலங்கை பாதுகாப்பு அமைச்சு யுத்த நடவடிக்கையின் பாகமாக வறிய குடும்பங்களை
அப்புறப்படுத்துகிறது
By our reporters
31 July 2008
இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான காணிகளுக்கு உரிமை
கோரி மத்திய கொழும்பில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்களை தமது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு
கட்டளையிட்டுள்ளது.
ஜூலை 18ம் திகதி தமது வீடுகளை நொருக்கித் தள்ளும் புல்டோசர்களை எதிர்கொண்ட
குடியிருப்பாளர்கள் கலகம் அடக்கும் பொலிசாருடன் மோதிக்கொண்டதோடு உயர் நீதிமன்றத்தின் தலையீட்டையும்
நாடினர். உயர் நீதிமன்றம் ஜூலை 30ம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆயினும், இங்கு ஏற்கனவே
45 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அவசர அவசரமாகக்
கட்டப்பட்ட பலகை கூடாரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் கொம்பனி வீதியில் சேர் சிற்றம்பலம் கார்டினர் பாதையை
அன்டிய கிளினீ பெசேஜ் என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் வாழ்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஜூலை 10
அன்று விநியோகிக்கப்பட்ட கடிதத்தில், பிரதேச திட்டத்தில் "யுத்த இலாகாவாக" அடையாளங் காணப்பட்டுள்ள
அமைச்சுக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பதாகத் தெரிவித்தது.
அந்தக் கடிதம் பிரகடனம் செய்ததாவது: "அனுமதியின்றி அரச சொத்தைப் பயன்படுத்துவது
சட்டத்துக்கு முரணானதாக உள்ள அதே வேளை, தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கணக்கில் கொண்டு நீங்கள்
சட்டவிரோதமான கட்டுமானங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்." பாதுகாப்பு செயலாளர்
கோடாபய இராஜபக்ஷவின் சார்பில் என அந்தக் கடிதத்தில் கையொப்பம் இடப்பட்டிருந்தது. கோடாபய இராஜபக்ஷ
நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரர் ஆவர்.
1977ல் இருந்தே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பல தடவை இங்கு
குடியிருப்பவர்களை அகற்ற முயற்சித்திருந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சு தலையீடு செய்தது இதவே முதல்
தடவையாகும். வாழ்க்கைத் தரத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுப்பதற்கு, வடக்கு
மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிளுக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்வதற்கு இந்த
அகற்றும் நடவடிக்கை இன்னுமொரு எடுத்துக் காட்டாகும்.
கிளினி பெசேஜ் பிரதேசத்தின் ஒரு பக்கம் விமானப் படை தலைமையகமும் மறு
புறம் இராணுவத் தலைமையகமும் உள்ளன. இவை ஒரு சிறிய கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளன. யுத்த இயந்திரத்தை
இயக்குவதன் ஒரு பாகமாக, இராஜபக்ஷவின் அரசாங்கம் புதிய இராணுவக் கட்டிடங்களை கட்டுவதற்காக
கொழும்பில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.
இந்த அகற்றும் நடவடிக்கை, இந்த வாரக் கடைசியில் நடக்கவுள்ள பிராந்திய
ஒத்துழைப்புக்கான தெற்காசிய சம்மேளனத்தின் (சார்க்) மாநாட்டுக்கான அரசாங்கத்தின் தயாரிப்பு
நடவடிக்கையில் ஒன்றாகவும் உள்ளது. அது நகரை "அழகுபடுத்துவதோடு" குடியிருப்புக்கள் மற்றும் சிறிய கடைகள்
உட்பட "அதிகாரமற்ற" கட்டுமானங்களை அகற்றுகிறது.
மக்கள் இந்தப் பிரதேசங்களில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து
வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அன்றாட உழைப்பாளர்களாகவும் மற்றும் சாவி வெட்டுதல், பாதணி
திருத்துபவர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுதல் உட்பட சுய தொழில்
செய்பவர்களாகவும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் வெறும் பலகைகளில் வீடுகளைக் கட்டியிருக்கும் அதே சமயம்
சில வீடுகள் ஒப்பீட்டளவில் ஒழுங்காகக் கட்டப்பட்டவையாகும்.
இந்தக் காணிகளின் பேரில் குடியிருப்பாளர்களுக்கு சட்டப்பூர்வமான ஆவணங்கள்
கொடுக்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு மின்சாரமும் தண்ணீர் வசதியும் வழங்கப்பட்டுள்ளதுடன் நகரசபைக்கும்
அவர்கள் வரி செலுத்துவதோடு, அவர்களுக்கு அடையாள அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள
பாடசாலைகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள், தமது வீடுகள் "சட்டவிரோதமானது" என எவ்வாறு கூறமுடியும் என
குடியிருப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய கிளினீ பெசேஜ் பள்ளிவாசலின் தலைவர்
டி.என்.பி. ஃபாரீஸ், இந்த குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டை
நிராகரித்தார். "சிலர் இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது
இங்கு கொண்டுவரப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களே இங்கு ஆரம்பத்தில் குடியேறியுள்ளனர். இப்போது இங்கு
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வசிப்பதோடு அவர்கள் ஒற்றுமையாகவும் வாழ்கின்றார்கள்."
கடிதத்தை விநியோகித்து ஏழு நாட்களின் பின்னர், ஜூலை 18ம் திகதி பலத்த
ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலிசாருடன் அங்கு வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள்,
மக்களுக்கு தமது உடமைகளை எடுத்துக்கொள்ளக் கூட அவகாசம் அளிக்காமல் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத்
தள்ளத் தொடங்கினர். பொலிசாரை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பிரதேசத்தின் ஊடாகச் செல்லும்
கொழும்பு-மாத்தறை ரயில் பாதையை தடுத்தனர். ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்களை கலைக்க பொலிசார்
கண்ணீர் புகையை பயன்படுத்தினர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் (யூ.டி.ஏ.) அதிகாரிகள் என கூறிக்கொண்ட
ஒரு குண்டர் குழு, இந்த சம்பவத்தை செய்தியாக்க வந்திருந்த ஊடகவியலாளர்களை தடுக்க முயற்சித்தது.
டெயிலி மிரர் பத்திரிகையின் நிருபரும் புகைப்பட பிடிப்பாளரும் தாக்கப்பட்டனர். தாக்கியவர்கள்
பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் என அந்தப் பகுதி மக்கள் கூறினர்.
உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பிக்கும் போது, டசின் கணக்கான வீடுகள்
அழிக்கப்பட்டுவிட்டன. நீதிமன்ற உத்தரவின் பின்னரும், யூ.டி.ஏ. அதிகாரிகள் நீதிமன்ற ஆவணம் கைக்கு கிடைக்கவில்லை
எனக் கூறி மொத்தம் 45 வீடுகளை அழித்துவிட்டனர்.
சில வீடுகளில் ஆடைகள், பாடசாலை சீருடைகள், சமையல் பொருட்கள் மற்றும்
டீ.வி, ரேடியோ போன்ற மின் உபகரணங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தன. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு
வெளிவரும் வரை இந்த அழிப்பு நடவடிக்கை மீண்டும் தொடங்காது என சட்ட மா அதிபர் பின்னர் உறுதியளித்தார்.
எவ்வாறெனினும், எதிர்ப்புக்களைத் தடுக்கவும் மக்களை அங்கிருந்த வெளியேறச் செய்யவும் அச்சுறுத்தல் பிரச்சாரம்
நடைபெறும் அறிகுறிகள் உள்ளன. அங்கு ஆயுதம் தரித்த பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 22 மாலை, சீருடை அணியாத பொலிசார் என தம்மை அறிமுகம்
செய்துகொண்ட ஒரு குழு, வெள்ளை வான் ஒன்றில் மாநகர சபை உறுப்பினரான எ.சீ.எம். நடூர்டீனின் வீட்டுக்கு
வந்து, அவரை தம்முடன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தது. அந்தக் குழு அவரை கடத்துவதற்கு
முயற்சிக்கின்றது என சந்தேகித்த நடூர்டீன் அவர்களுடன் செல்ல மறுத்தார். நடூர்டீன் இந்த அகற்றும் நடவடிக்கை
தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு மனு ஒன்றை முன்னர் கையளித்திருந்தார்.
கடந்த இரு ஆண்டுகளாக, பாதுகாப்புப் படையினதும் மற்றும் அதனுடன் சேர்ந்து
செயற்படும் துணைப் படைகளதும் இரகசிய கும்பல்கள், நூற்றுக்கணக்கான கடத்தல்களையும் படுகொலைகளையும்
காணாமல் ஆக்கும் சம்பவங்களையும் அரங்கேற்றியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தையும்
யுத்தத்தையும் விமர்சித்தவர்களேயாகும். இந்த கொலைப் படைகள் தண்டனையில் இருந்து விலக்களிப்புடன்
செயற்படும் அதேவேளை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பெருந்தொகையான
இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகளின் ஊடாக செல்வதற்கும் சுதந்திரம் பெற்றுள்ளன.
இங்கிருந்து வெளியற்றப்பட்ட 45 குடும்பங்கள் கொழும்புக்கு வடக்கே உள்ள
தொட்டலங்கவில் உள்ள வெளிகொடவத்தையில் வீசப்பட்டுள்ளனர். இங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 சதுர அடி
கூடாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு சில இன்னமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கூடாரங்களின் கூரைகள்
உறுதியானவையாக இல்லாததால் மழையில் இருந்து குறைந்த பாதுகாப்பே அவர்களுக்கு கிடைப்பதோடு மின்சார
இணைப்பு நடவடிக்கைகளும் தரமானவை அல்ல. மலசல கூடங்கள் தேவைக்கு குறைவாக இருப்பதோடு ஒரு பொது
குழாயில் மட்டுமே தண்ணீர் விநியோகம் உள்ளது. ஒவ்வொரு கூடாரத்திற்கும் ஒரே ஒரு மின் குமிழ் மட்டுமே
தரப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்துக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துத் தருவதாக உறுதியளித்துள்ள அரசாங்கம்,
அல்லது குடும்பங்கள் வாடகை வீடுகளைத் தேடிக்கொள்ள மாதம் 8,000 ரூபா தருவதாகவும் உறுதியளித்துள்ளது.
எவ்வாறெனினும், எமது நிருபர்களுடன் பேசிய ஒருவர் இந்த வாக்குறுதிகளை
நம்பவில்லை. 46 வயது தாய் ஒருவர் குறிப்பிட்டதாவது: "இதே வாக்குறுதியை இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு
முன்னரும் கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்கு அடுக்கு மாடிக் கட்டிடத்தை அமைக்கப் போவதாக
தெமட்டகொடை ரயில் தரிக்கும் இடத்திற்கு அருகில் அடிக்கல்லையும் நாட்டினர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
"நாங்கள் இங்கு சிறுவர்களாக இருந்த காலம் முதல் தக்க வசதிகள் இன்றி 30
ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் பொது மலசலகூடங்களையே பாவிக்க வேண்டும். எனக்கு ஐந்து பிள்ளைகள்
உள்ளனர். எனது கனவரும் இரு மகன்களும் மத்திய கிழக்கில் வேலை செய்கின்றனர். அவர்களது சம்பாத்தியத்திலேயே
நாம் வாழ்கின்றோம். எனது மூத்த மகன் திருமணம் முடித்துவிட்டார். வாழ்க்கைச் செலவு உயர்ந்துவிட்டது.
வாழ்க்கையை ஓட்டுவது மிகவும் கடினம்.
"தற்போது, எங்களது வீட்டில் ஆறு குடும்ப உறுப்பினர்கள். எனது மாமியாரும்
அவரது சகோதரரும் வீடு இல்லாத காரணத்தால் எங்களுடனேயே வசிக்கின்றனர். எனது ஒரு மகள் முடமானவர்.
நாங்கள் அவளுக்கு ஒரு தனியான மலசல கூடத்தை அமைத்தோம். இந்த நிலைமையில் எங்களால் எப்படி இந்த
சிறிய கூடாரத்தில் வாழ முடியும்?
டயர் தொழிற்சாலையில் வேலை செய்யும் 38 வயது தொழிலாளி குறிப்பிட்டதாவது:
"ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல்வாதிகள் வந்து போலி வாக்குறுதிகள் கொடுப்பார்கள். ஆனால்
எங்களுடைய வாழ்க்கை சீர்கேடான நிலையில் இருந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. அந்த வாக்குறுதிகளில்
எனக்கு நம்பிக்கை கிடையாது. [2004 டிசம்பர்] சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று
பாருங்கள் -நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் தற்காலிக கூடாரங்களில்
வசிக்கின்றனர்."
விலைவாசி அதிகரிப்பின் தாக்கத்தையும் அவர் குறிப்பிட்டார். "எனது அன்றாட
வருமானம் 450 ரூபா. எனது மனைவிக்கு தொழில் கிடையாது. ஆனால், முன்னர் எங்களால் சமாளித்துக்கொள்ள
முடிந்தது. எனக்கு இரு பிள்ளைகள் இருப்பதோடு எனது மனைவி இன்னொரு குழந்தையையும் வயிற்றில் சுமக்கின்றார்.
இப்போது எனது அன்றாட வருமானம் போதாது. ஒரு வேளை சாப்பாட்டுக்கு எமக்கு 450 ரூபா தேவை.
"இந்த நிலைமை தொடருமானால் சாப்பாட்டுக்கு வன்முறை நடக்கக்கூடும்.
அரசாங்கம் விலைவாசியை அதிகரிப்பதன் ஊடாக யுத்தத்தின் சுமையை சுமத்துகிறது. எங்களுக்கு யுத்தம்
தேவையில்லை. 90 வீதமானவர்கள் யுத்தத்தை எதிர்க்கின்றார்கள்."
இந்தப் பிரதேசத்தில் இருந்த பிள்ளைகள் அருகில் உள்ள புனித மைக்கல், புனித மரியாள்
மற்றும் அல் அமீன் போன்ற பாடசாலைகளுக்கு சென்றார்கள். இப்போது தொட்டலங்கவில் வசிக்கும் ஒரு 14 வயது
பாடசாலை மாணவி விளக்கியதாவது: "நானும் எனது மூன்று தம்பிமாரும் வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை செல்லவில்லை.
அவர்கள் எங்களது வீடுகளை இடித்த போது நாங்கள் எங்களது சீருடைகளையும் புத்தகங்களையும்
தொலைத்துவிட்டோம். நான் தரம் 10ல் படிக்கிறேன். இப்போது இரண்டாம் தவணை பரீட்சைக்கான காலம்.
ஆனால் என்னால் பரீட்சைக்கு அமர முடியாமல் போனது. இங்க படிப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. அடுத்த
ஆண்டு நான் சாதாரண தர பரீட்சையை எழுத வேண்டும்."
தமது பெற்றோர்களுடன் இப்போது தொட்டலங்கவில் தற்காலிக கூடாரத்தில் தங்கியிருக்கும்
ஒரு வயது குழந்தையின் தாய், 26, அவரது வீடு இடிக்கப்பட்ட போது சகலதையும் இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
"நான் உயர் தரம் வரை படித்தேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள பல பிள்ளைகளைப் போல் நானும் மண்ணெணை
விளக்கு வைத்துக்கொண்டு படித்தேன். பாடசாலை முடிந்த பின்னர் இங்கு தொழில் தேட முடியாத நிலையில் நான்
மூன்று ஆண்டுகள் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தேன். அந்த பணத்தில் நாங்கள் அந்த வீட்டைக் கட்டியிருந்தோம்.
இப்போது எனது கனவர் சவுதியில் தொழில் செய்கின்றார்.
"குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நாம் நினைத்தோம். ஆனால்,
எங்களது எதிர்பார்ப்புகள் அனைத்துக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுவிட்டது. இந்த தூசி நிறைந்த இடத்தில் எனது
குழைந்தையைப் போன்று சிறிய குழந்தைகளால் வாழ முடியாது. நாம் இங்கு வெள்ளிக்கிழமை வந்தோம். பல பிள்ளைகள்
ஏற்கனவே சுகயீனமுற்றுள்ளன. இரவைக் கழிப்பதற்கான நான் குழந்தையுடன் எனது உறவினர் வீட்டுக்கு போக
வேண்டும்.
"அரசாங்கத்தை மக்களே தேர்ந்தெடுக்கின்றார்கள். எனவே மக்களுக்கு அவர்களே
பொறுப்பாளிகள். எந்தவொரு அரசியல்வாதியும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அடுத்த தேர்தலில் எவருக்கும்
வாக்களிப்பதில்லை என நான் முடிவு செய்துள்ளேன்," என அவர் தெரிவித்தார். |