World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா Inflation fuels social unrest in Vietnam வியட்நாமில் பணவீக்கம் சமூக அமைதியின்மையை தூண்டுகிறது By Carol Divjak இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வியட்நாமில் உயர்ந்துசெல்லும் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் முறையில் தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்களை நடத்தினர். நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (Consumer price index- CPI) மிக அதிக உயர்வாக ஜூன் மாதம் 26.8 சதவீதத்தை, ஆண்டுக்கு ஆண்டு என்ற விதத்தில் அடைந்தது. வீடுகள், கட்டுமானப் பொருட்கள் 23.7 சதவீதம் அதிகரித்தன. மொத்தத்தில் உணவுப் பொருள்கள் விலையும் 74.3 சதவீதம் அதிகமாயிற்று; இதில் 45.6 சதவீதம் முக்கிய நுகர்பொருளாகிய அரிசி விலையின் உயர்வால் வந்தது. எரிபொருள் விலைகளும் இதுகாறும் இல்லாத அளவிற்கு ஜூலை 21ல் உயர்ந்தது; அப்பொழுது ஹனோய் அரசாங்கம் 36 சதவீதம் அதிகப்படுத்தியது. சில்லரை பெட்ரோல் விலை 31 சதவீதம் உயர்த்தப்பட்டது; 92 ஆக்டேனின் விலை 19,000 டாங் (அமெரிக்க $ 1.13) லிட்டருக்கு என்று 14,500 ல் இருந்து உயர்ந்தது. டீசல் விலை 14.3 சதவீதம், மண்ணெண்ணை 36.8 சதவீதம் உயர்ந்தது. இந்த விலை உயர்வுகள் இன்னும் அதிகமாக உணவு, போக்குவரத்து, வீடுகளின் விலையையும் உயர்த்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு ஆண்டு இறுதி வரை எரிபொருள் விலையை உறுதியாக வைப்பதாக உறுதி கூறி இரண்டு வாரங்களுக்குள் வந்தது. அதிக சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால், வியட்நாம் அநேகமாக இறக்குமதியைத்தான் பெட்ரோலிய பொருட்களுக்கு நம்பியுள்ளது; கிட்டத்தட்ட 5.9 பில்லியன் டாலர்களை எண்ணெய் இறக்குமதிக்காக இந்த ஆண்டு முதல் பாதியில் கொடுத்தது; 2007 இதே காலத்தில் இருந்ததைவிட இது 69 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளிகள் ஆவர்; பலரும் வெளநாட்டுக்கு சொந்தமான ஆலைகளில் வேலை செயச்பவர்கள்; இவை வியட்நாமில் விரைவாக அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவையும் விட குறைந்த ஊதியங்கள், மோசமான பணிநிலைமைகள் என்பதற்காக வியட்நாமுக்கு முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். உயரும் சமூக கஷ்டங்களானது, துணிகள், காலணி, விளையாட்டுப் பொருட்கள், மின்னணுத் தொழில்கள் ஆகியவற்றில் அதிக ஊதியம், நல்ல பணி நிலைமை ஆகியவற்றிற்காக நிறைய வேலைநிறுத்தங்களை கொண்டு வந்துள்ளன. மே மாதம் கிட்டத்தட்ட 7,000 தொழிலாளர்கள் தைவானுக்கு சொந்தமான காலணி நிறுவனம் ஒன்றில், வட வியட்நாமில் தங்கள் மாத ஊதியமான $56 க்கு இன்னும் கூடுதலாக $12 வேண்டும், நீண்ட பணி நேரம் குறைக்கப்பட வேண்டும் எனக் கோரி வேலைநிறுத்தம் செய்தனர். பெரும்பாலனவர்கள் 13 மணி நேர ஷிப்ட் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த நிறுவனம் ரிம்பர்லான்ட், பிராடா போன்ற மேலை பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட New Internationalist Magazine, ஜூன் பதிப்பின்படி, இந்த ஆண்டின் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்று தைவானுக்குச் சொந்தமான Ching Luh ஆலையில் நடந்தது; இது Nike க்கு ஸ்நீக்கர்களை தயார் செய்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் 21,000 தொழிலாளர்கள் 20 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஆலை உணவுவிடுதியில் தரமான உணவு ஆகியவற்றை கோரி வேலைநிறுத்தம் செய்தனர்; இந்த ஆலையில் சராசரி மாத ஊதியம் $59 தான். அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கம் 10 சதவீத ஊதிய அதிகரிப்பு, நல்ல உணவு இவற்றிற்கு உறுதி கூறி பேச்சு வார்த்தைகள் நடத்துவதாகக் கூறியபோது, சீற்றம் அடைந்த தொழிலாளர்கள் அதை மறுத்து ஆலைக் கதவுகளை மூடித் தடுத்துவிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் வியட்நாமில் இருந்து அதற்கு கொடுக்கும் ஆலைகளில் 10 வேலைநிறுத்தங்கள் இருந்ததாக நைக் ஒப்புக் கொண்டது. வியட்நாமிய அரசாங்க புள்ளி விவரங்களின்படி 85 சதவீத வேலைநிறுத்தங்கள் சர்வதேச பெருநிறுவனங்களுக்கு வழங்கும் ஆலைகளில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கின்றன. பணவீக்கத்தால் ஹோ சி மின் நகரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி வழிவகைப் பகுதிகளில் வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு விடையிறுக்கையில் முதலாளிகள் நாட்டில் இருந்து வெளியேறுவதாக அச்சுறுத்துகின்றனர். New Internationalist குறிப்பிடுகிறது: "வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2006ல் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டபின் அது 42 அமெரிக்க டாலர்களாக பத்து ஆண்டுகளாக அப்படித்தான் இருந்தது எனக் கூறினர். வியட்நாமிய டாங் நாணயம் டாலருக்கு எதிராக வலுவானது உண்மை ஊதிய இழப்புக்களை பல நேரம் ஏற்படுத்தியது; இருந்தபோதிலும்கூட வெளிநாட்டு முதலாளிகள் ஊதிய உயர்வு மிக அதிகம் என்று கருதுவதுடன் வருங்கால முதலீட்டைக் குறைக்கப்போவதாகவும் நாட்டை விட்டு வெளியேறப்போவதாகவும் கூறுகின்றனர்." குறைந்த, மிகக் கட்டுப்பாடாக இருக்கும் தொழிலாளர் தொகுப்பு வியட்நாமிற்கு வெளி முதலீடு வருவதற்கு பெரும் ஊக்கம் கொடுக்கும் தன்மையாகும்; அரசாங்கம் அதைப் பாதிப்பிற்கு உட்படுத்தாது. 1.2 மில்லியன் இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தொகுப்பில் நுழைகின்றனர். சமூக உறுதியை தக்க வைத்துக் கொள்ள போதிய வேலைகளை ஹனோய் தோற்றுவிக்க வேண்டும். சீனாவைப் போல், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கமும் ஒரு முதலாளித்துவ சார்பு, போலீஸ் அரசு ஆட்சியாகும்; இது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனப் போராட்டங்கள் எதுவாயினும் அதை நசுக்கிவிடும். அரசாங்கம் நடத்தும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் போலீஸ் கரங்கள் போல் செயல்படுகின்றன; தொழிற்சங்க அதிகாரிகள் நிறுவனத்திடம் இருந்து ஊதியம் பெறுகின்றனர். வியட்நாமில் சுதந்திர தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. வியட்நாம் பொது தொழிலாளர் சங்கத்தின்படி, 1995ல் இருந்து 2,300க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் நாட்டின் தொழிலாளர் சட்டப்படி சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டன. தொழிலாளர்களை மிரட்டுவதற்காக ஹனோய், வேலைநிறுத்தம் செய்தால் ஊழியர்கள் சட்டவிரோதத்திற்காக முதலாளிகளுடைய இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என்று சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப அதிகாரத்தை பெற்றுள்ளனர்; போலீஸ் தலையீடு என்ற அச்சுறுத்தலும் அதற்கு ஆதரவாக இருக்கும். உதாரணமாக சிங் லு காலணி ஆலையில் வேலைநிறுத்தத்தின்போது துண்டுப் பிரசுரங்களை கொடுத்து வந்த நான்கு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். CPVW என்னும் வியட்நாம் தொழிலாளர்களைக் காக்கும் குழு என்ற வெளிநாட்டு தளத்தைக் கொண்ட அமைப்பின் கருத்துப்படி, தொழிற்சங்கம் பேச்சு வார்த்தை நடத்திய உடன்பாட்டை எதிர்த்த 20 வேலைநிறுத்த தலைவர்கள் வேலையில் இருந்து அகற்றப்பட்டனர். டிசம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட ஐக்கிய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அமைப்பின் (UFWO) நான்கு உறுப்பினர்கள் "அரசைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் திரிக்கப்பட்ட தகவலை பரப்பும்" "பிற்போக்குத்தன" வலைத்தள செய்தி கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டனர். அடக்கு முறைகள் இருந்தபோதிலும்கூட, தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. CPVW பொதுச் செயலாளர் Trung Doan கூறினார்: "எங்கள் நபர்கள் சிங் லு தொழிலாளர்களுடனும் அவர்களுடைய உறவினர்களுடனும் பேசியபோது குறைந்த ஊதியம் பற்றி கோபமான சொற்களைக் கேட்டனர். இது நைக் தொழிலாளர்கள் என்று இல்லாமல் நாங்கள் தொடர்பு கொள்ளும் அனைத்துத் தொழிலாளர்களிடமும் காணப்படுவதுதான்.' சாதாரண மக்களுடைய வாழும் நிலைமையும் சரிந்து கொண்டு வருகிறது ஐக்கிய நாடுகளுடன் இணைந்த மனிதாபிமான அமைப்பான IRIN வியட்நாமிய தொழிலாளர்களை ஜூன் மாதம் பணவீக்கத்தின் பாதிப்பு பற்றி பேட்டி கண்டனர். ஹனோயில் மாதம் அமெரிக்க $60 ஊதியம் பெறும் ஆலைத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முறைதான் குடும்பத்தினருக்கு உணவு கொடுக்க முடியும். இப்பொழுது ஊதியங்கள் ஒற்றை தொழிலாளர் செலவைக் கூட சரிக்கட்டுவதில்லை; அதுவும் கூட்டான பெரும் அறையில் அவர்கள் வசித்தாலும்; உணவு மற்ற செலவுகளை அவர்கள் பிறருடன் பகிர்ந்து கொண்டாலும். டின் டு ட்ரின் என்னும் ஜப்பானுக்கு சொந்தமான ரப்பர் ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர் விளக்கினார்: "நான் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் ஏதும் மிஞ்சுவது கிடையாது." பிரதம மந்திரி Nguyen Tan Dung தேசிய சட்டமன்றத்திற்கு மே மாதம் கொடுத்த அறிக்கையின்படி, பசியில் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட இருமடங்காகிவிட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஹனோய் தற்காலிகமாக அரிசி ஏற்றுமதிக்கு உச்ச வரம்பு வைத்துள்ளது. மார்ச் மாதம் ஹனோய் சிமென்ட், மின்சாரம் போன்ற 10 முக்கிய பொருட்களின் விலைகளை முடக்கி வைத்தது. அரிசி ஏற்றுமதி மீது உச்சவரம்பு ஜூன் மாதம் பழையபடி நீக்கப்பட்டது; நஷ்டத்தில் இருக்கும் தனியார் வணிகம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் இரண்டிலும் இருந்தும் விலை முடக்கத்தை கைவிடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. அரசாங்கம் கொடுக்கும் பயன்பாடான மின்சாரம் வியட்நாமில் ஆண்டின் முதல் பகுதியில் $124.7 மில்லியன் நஷ்டத்தை பதிவு செய்தது. Pertolimex International Trading Joont Stock Co. என்னும் அரசாங்கத்திற்கு சொந்தமான விவசாய, தொழில்துறை பொருட்கள் நிறுவனம் $107 மில்லியன் நஷ்டத்தை கண்டது. பெருகும் பொருளாதார முரண்பாடுகள் ஜூன் மாதம் பிரதம மந்திரி என்குயென் அமெரிக்காவிற்குச் சென்று முன்னாள் பெடரல் ரிசர்வ் போர்ட் தலைவரான அலன் கிரீன்ஸ்பானை சந்தித்து பணவீக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று ஆலோசனை கேட்டார். அரசாங்க மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் பணப் புழக்கம் கடினமாக்கப்பட வேண்டும் என்றும் அலன் கிரீன்ஸ்பான் அவரிடம் கூறினார். பொருளாதார திட்ட அமைப்பு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இந்த ஆண்டு 7 சதவீதத்திற்கு சரி செய்துள்ளது --2007ல் இருந்ததை விட 1.5 சதவீதம் குறைவு ஆகும். வியட்நாம் ஸ்டேட் பாங்க் சொத்தை எளிதில் பணமாக மாற்றமுடியாத்தன்மையை உட்கிரகித்துக்கொள்வதற்காக வட்டிவீதத்தை 12ல் இருந்து 14 சதவீதத்திற்கு உயர்த்தியது. ஆக்கிரோஷமான வங்கிக் கடனை குறைக்கும் வகையில் வணிக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தேவைகளை 5ல் இருந்து 12 சதவீதம் என்று ஜூன் 27 ம் தேதி உயர்த்தியது. ஆனால் உலக உற்பத்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை ஹனோய் கட்டுப்படுத்த முடியாது. பணவீக்கமானது உலகம் முழுவதும் உயரும் விசை, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உந்துதலைக் கொண்டுள்ளது. ஆசியாவின் புதிய ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் "புலி" பொருளாதாரமானது, நாட்டின் வணிகப் பற்றாக்குறை ஆண்டின் முதல் அரைப் பகுதியில் $15 பில்லியனாயிற்று எனினும், 2007 முழுவதிற்குமாக இது $12 பில்லியன் என்று இருந்தது. தற்போதைய கணக்குப் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். வெளிநாட்டு நாணய இருப்புக்கள் $20 மில்லியன்தான் என்று இருக்கும் நிலையில் வியட்நாம் இந்த ஆண்டு இறுதிக்குள் பணம் கொடுப்பதில் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். இத்தகைய ஆபத்தான பொருளாதார நிலைமை அமெரிக்க டாலருக்கு பீதியில் அதிகத் தேவையை தோற்றுவித்துள்ளது; டாங்கின் மதிப்பு 4.5 சதவீதம் கறுப்புச் சந்தையில் இறங்கிவிட்டது; இதற்குக் காரணம் எரிபொருள் விலை உயர்வு ஆகும். டாங்கிற்கும் டாலருக்கும் இடையே நடைமுறையில் ஒரு விகிதத்தை ஹனோய் தக்கவைத்து இருப்பதால், ஒரு குறுகிய அளவு மட்டுமே அதன் மாற்று இருப்பதால், பலரும் தங்கக் கடைகளுக்கும் பணம் மாற்றும் கடைகளுக்கும் சென்று டாலர்களை திருட்டுத்தனமாக வாங்க முற்படுகின்றனர். பங்குச் சந்தை ஜனவரியில் இருந்து ஜூனுக்குள்ளாக 60 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து விட்டது. அரசாங்க அதிகாரிகள் பெருகும் நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) ஒரு "ஆரோக்கியமான" பொருளாதாரத்தின் அடையாளம் என்று கூறினாலும், வெளிநாட்டு நேரடி முதலீடும் பணவீக்க அழுத்தங்களுக்கு பங்களிப்பை தருகிறது. வியட்நாமில் அந்நிய நேரடி முதலீடு 2008 முதல் பகுதியில் $31.6 பில்லியன் என்று ஆயிற்று -- 2007 முழுவதும் இது $20 பில்லியனாக இருந்தது. ஒப்புமையில் சீனா $52.4 பில்லியனை ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெற்றது; அதன் பொருளாதாரமோ இதைவிட 40 மடங்கு அதிகமாகும். ஜூலை 25 அன்று வியட்நாம் செய்தி நிறுவனம் பெரும்பாலான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சீனாவில் நடைமுறைத் திட்டங்களாக விரைவில் மாற்றப்பட்டுவிட்டன என்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு வியட்நாமில் உள்ளூர் அதிகாரிகளால் மாறுதலுக்கு வரவேற்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. Standard Chartered Bank பொருளாதார வல்லுனர் Tai Hui விளக்கினார்: "இந்தப் பணம் முழுவதும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பை அது ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது; ஏனெனில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் திட்டங்களுக்கு அனைத்து முனைகளில் இருந்தும், மக்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் என்று அதிக தேவைகள் வரும். இது அதிக பணவீக்கம் அல்லது கூடுதலான இறக்குமதி அல்லது இரண்டிற்குமே வகை செய்யும்." மற்றொரு பொருளாதார வல்லுனரான Le Dang Doanh முற்றிலும் எதிரான கவலையைச் சுட்டிக் காட்டுகிறார்; "நேரடி வெளிநாட்டு முதலீட்டை விரைவாக பகிர்ந்து கொடுக்கவில்லை என்றால் பணம் நமக்கு அழுத்தம் கொடுத்துவிடும்." மிக அதிக வெளிநாட்டு மூதலனம் திட்டங்களாகவோ பொருட்களாகவோ மாற்றப்படவில்லை என்றும் அது பணச் சுற்றிலோ வங்கி முறையிலோ நுழைந்துவிட்டால் அதிக பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்றும் லீ எச்சரித்தார். ஒரு புதிய முதலாளித்துவ அற்புதத்தை காண்பற்கு அப்பால், வியட்நாமின் ஆட்சி சந்தை உறவுகளை தழுவியது ஒரு வெடிப்புத் தன்மை நிறைந்த பொருளாதார முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது; இவை தொழிலாள வர்க்கத்தை ஒரு போராட்டத்திற்கு தள்ளிச் செல்கின்றன. |