WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan unions call for further strikes and protests over pay
இலங்கை தொழிற்சங்கங்கள் சம்பள பிரச்சினை தொடர்பாக இன்னுமொரு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன
By W.A. Sunil
22 July 2008
Use this version to print |
Send this link by
email |
Email the
author
ஜூலை 10ம் திகதி நடந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஒப்பீட்டளவில்
குறைந்தளவானவர்களே பங்குபற்றிய போதிலும், இலங்கை தொழிற்சங்கங்கள் மாதம் 5,000 ரூபா சம்பள உயர்வு,
வாழ்க்கைச் செலவு கொடுப்பணவு, ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் குறைப்பு போன்ற தமது கோரிக்கைகளுக்கு
ஆதரவு கோரி மேலும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன.
ஆஸ்பத்திரிகள், ரயில்சேவை, அரசாங்க அச்சகம், அரசாங்க தொழிற்சாலை,
இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் இலங்கை மின்சார சபை, அதே போல் ஆசிரியர்கள் மற்றும் தோட்டத்
தொழிலாளர்கள் உட்பட பத்தாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் ஜூலை 10ம் திகதி வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர்.
30 வீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ள பணவீக்கத்தால் உழைக்கும் மக்களில் பரந்த
தட்டினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை குறைவாக
இருந்தமைக்குக் காரணம் இந்தக் கோரிக்கைகளை மக்கள் ஆதரிக்காமை அல்ல. மாறாக, கடந்த இரு
ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு மீண்டும் மீண்டும் அடிபணிந்த தொழிற்சங்கங்கள் மீது பரந்தளவில் அவர்களுக்கு
நம்பிக்கையீனம் ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
எந்தவொரு சம்பள உயர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை
கீழறுக்கும் என பிரகடனம் செய்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வேலை நிறுத்தத்திற்கு முன்னதாகவே சம்பளக்
கோரிக்கைகளை மொத்தமாக நிராகரித்துவிட்டார். "புலி பயங்கரவாதிகளுக்கு" உதவுவதற்காகவே தொழிற்சங்கங்களும்
தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
வேலை நிறுத்தத்தில் முன்நின்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) சொந்தமான
தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி.), இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்தை ஆதரிக்கின்றது.
யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கு மாறாக, என்.டி.யூ.சி. தலைவர்கள் வேலை நிறுத்தம் யுத்த முயற்சிகளுக்கு தடங்களை
ஏற்படுத்தாது என வலியுறுத்தினர். அவர்கள் ஜூலை 10ம் திகதி கூட்டங்களுக்கோ அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கோ
அழைப்பு விடுக்கவில்லை.
ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினரும் என்.டி.யூ.சி. தலைவருமான கே.டி.
லால்காந்த ஜூலை 16ல் நடந்த தொழிற்சங்க கூட்டத்தை அடுத்து, 5,000 ரூபா சம்பள உயர்வு கோரி அரசாங்கத்தை
நெருக்குவதற்காக மற்றுமொரு மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். என்.டி.யூ.சி. ஏனைய தொழிற்சங்கங்களையும்
பங்குபற்றக் கோரும் என லால்காந்த தெரிவித்தார். இதற்கு திகதி குறிக்கப்படவில்லை.
"முழுமையான வெற்றியை அடையும் வரை போராட்டத்தை தொடர்வதாக" உறுதியளித்து
என்.டி.யூ.சி. ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அற்பத்தனமான அரசியல் மோசடியான அது, அரசாங்கத்தின்
ஒரு தொகை வெற்று வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளதோடு, அவற்றில் சில "வெல்லப்பட்டதாக" கூறப்படும் வதந்திகளாகும்.
இவற்றில் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக அரசாங்கம் வழங்கிய 625 ரூபா சிறிய கொடுப்பணவும் மற்றும் தனியார்
துறை ஊதியத்தை 15 முதல் 45 வீதம் வரை உயர்த்துவதற்கான இன்னுமொரு வாக்குறுதியும் அடங்கும். தனியார்
உரிமையாளர்கள் எவரும் எந்தவொரு சம்பள உயர்வுக்கும் உடன்படவில்லை.
அரசாங்கம் அதனது நவம்பர் மாத வரவு செலவுத் திட்டத்தில் 2,000 ரூபா
சம்பள உயர்வு வழங்கும் என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஜூலை 13ம் திகதி வெளியான
இரிதா லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் பெற்ற இன்னுமொரு "வெற்றியாக"
இதையும் என்.டி.யூ.சி. எந்தவொரு உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் இன்றி தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
"அடையப்பட்ட வெற்றிகள்" மற்றும் "இறுதிவரை போராட்டம்" பற்றிய இந்த சகல
வீறாப்புப் பேச்சுக்களும் இந்தப் பிரச்சாரத்திற்கு ஒரு முடிவுகட்டுவதன் பேரிலான மூஞ்சியை காப்பாற்றும் உடன்படிக்கை
ஒன்றை எட்டுவதில் என்.டி.யூ.சி. அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றது என்ற உண்மையை மறைத்துக்கொள்வதற்கே
ஆகும். தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள மேலும் மேலும் மோசமடைந்துவரும் நிலைமைக்கு பிரதிபலிப்பாக வேலை
நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் முடிவு எடுக்கப்படவில்லை. மாறாக, நகர்புற மற்றும் கிராமப்புற பிரதேசங்களில்
சரிந்துவரும் ஜே.வி.பி.க்கான ஆதரவை தூக்கி நிறுத்துவதற்கே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் மக்கள் மீதான தனது அனுதாபத்தை ஜே.வி.பி. பறைசாற்றிக்கொள்ளும்
அதே வேளை, அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நவம்பரில் அரசாங்கம் கொண்டுவந்த யுத்த வரவு செலவுத்
திட்டத்திற்கு வாக்களித்தனர். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் தொழில் மற்றும் ஊதியங்களை
வெட்டி பாதுகாப்புக்காக 166 பில்லியன் ரூபா சாதனை தொகை ஒதுக்கப்பட்டதோடு நலன்புரி சேவைகள்,
கல்வி மற்றும் சுகாதார சேவைக்கான நிதியும் வெட்டிக் குறைக்கப்பட்டது.
சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக மற்றுமொரு நடவடிக்கைக்கு "ஆகஸ்ட் 4 இயக்கம்"
என்ற பெயரிலான தொழிற்சங்க கூட்டணி ஒன்றும் அழைப்பு விடுத்துள்ளது. நவசமசமாஜக் கட்சி போன்ற மத்தியதர
வர்க்க தீவிரவாதக் கருவிகளுடன் சேர்ந்த பலர் உட்பட, சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டணி, அதே போல்
ஏனைய பொதுத் துறை தொழிற்சங்கங்களும் இந்த இயக்கத்தில் அடங்குகின்றன.
ஜூலை 19 நடந்த கூட்டத்தில், இந்தத் தொழிற்சங்கங்கள் செப்டெம்பர் 9ம் திகதி
ஒரு கண்டனப் போராட்டத்திற்கும் மற்றும் மீண்டும் அக்டோபர் 7ம் திகதி ஒரு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தன.
நவசமசமாஜக் கட்சி, என்.டி.யூ.சி. யின் முன்நோக்கை சவால் செய்வதற்குப் பதிலாக, வெகுஜனங்களின் நலன்களுக்காகவும்
மற்றும் யுத்தத்திற்கு எதிராகவும் ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. வெகுஜனங்களின்
அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்ற ஆபத்தான மாயையை முன்நிலைப்படுத்துகிறது. பிரதான வலதுசாரி எதிர்க் கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியை (யூ.என்.பி.) சார்ந்த தொழிற்சங்கங்களுடனும் மற்றும் தமது கூட்டணியுடனும்
போதுமானளவு நெருக்கமாக ஒத்துழைக்கத் தவறுகிறது என்பது மட்டுமே என்.டி.யூ.சி. பற்றிய அவர்களது விமர்சனமாகும்.
நவசமசமாஜக் கட்சி யுத்தத்தின் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளும் அதே வேளை,
மோதல்களுக்கு முடிவுகட்டும் வழியாக புலிகளுடன் மீண்டும் சமாதானப் பேச்சுக்களை நடத்துமாறு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும்
பயனற்ற அழைப்புக்களை விடுக்கின்றது. எவ்வாறெனினும், இராஜபக்ஷ 2006 ஜூலையில் மீண்டும் நாட்டை யுத்தத்திற்குள்
தள்ளியதோடு 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை இந்த ஆண்டு ஜனவரியில் கிழிந்தெறிந்து, பெரும் வல்லரசுகளின்
அனுசரணையிலான சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை ஒழித்துக்கட்டியமைக்கு நேரடி பொறுப்பாளியாவார்.
வேலை நிறுத்தத்தை அடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் அதற்கு இல்லை
என்பதை அரசாங்கம் மீண்டும் தெளிவுபடுத்திவிட்டது. அரசாங்க ஊழியர்களுக்கு உயர்ந்த சம்பளத்தை வழங்குவதற்கு
மாறாக, அது தனது இனவாத யுத்தத்திற்கு மேலும் நிதியை எதிர்பார்க்கின்றது. இராணுவத்திற்காக மேலும் 50
பில்லியன் ரூபா இந்த ஆண்டு அரசாங்கத்திற்குத் தேவைப்படுவதாக வேலை நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக அரசாங்க
பாதுகாப்புப் பேச்சாளர் கேஹெலியே ரம்புக்வெல்ல ராய்ட்டருக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி இராஜபக்ஷ, தொழிற்சங்கங்களை துரோகிகள் என விளைபயனுள்ள வகையில்
கண்டனம் செய்ததன் மூலம் அவற்றின் மீதான அழுத்தத்தை இறுக்கினார். ஜூலை 11 மாகாண சபை உறுப்பினர்களின்
கூட்டம் ஒன்றில், "தாய் நாட்டிக்கு தீர்க்கமானதாக உள்ள ஒரு சந்தர்ப்பத்தில், பிற்போக்கு உள்நாட்டுக்காரர்களாலும்
அந்நிய சூழ்ச்சிக்காரர்களாலும் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என அவர் பிரகடனம் செய்தார்.
"வேலை நிறுத்தத்தை தோற்கடிப்பதில்" தமது தேசப்பற்றுள்ள கடமையை தொழிலாளர்கள் செய்துள்ளதற்கு ஆதாரமாக
அவர்களின் குறைந்தளவான பங்களிப்பை அவர் பாராட்டினார்.
ஜூல 14ம் திகதி, சுய தொழிலாளர் சம்மேளனத்தின் முன் உரையாற்றிய ஜனாதிபதி
தெரிவித்ததாவது: "புலிகளை இராணுவ ரீதியில் நசுக்க வேண்டும். அரசாங்கத்தை புலிகளுடன் போராடும் சக்தியில்
இருந்து பயனற்ற வாய் வீச்சுக்களை வீசும் மட்டத்திற்கு கீழ் இறக்கியுள்ளது. ஆயினும், தெற்கில் நடக்கும் வேலை
நிறுத்தங்கள் பயங்கரவாதிகளுக்கு சுவாசிக்க வழி ஏற்படுத்துகிறது." ஜலை 10 வேலை நிறுத்தத்தை நேரடியாக
சுட்டிக்காட்டிய அவர், "இலங்கையில் குறிப்பிட்ட அரசாங்க விரோத சக்திகள் தெற்கை ஆட்டங்காணச் செய்வதற்காக
புலிகளுடன் ஒன்று சேர்ந்தது இதுவே முதல் தடவை" என அவர் அச்சறுத்தும் விதத்தில் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு எதிரான தனது அச்சுறுத்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க அரசாங்கம்
தயாராகிக் கொண்டிருக்கின்றது. வேலை நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக, அடுத்த நாள் வேலை நிறுத்தம் செய்யும்
தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்காக தகவல்களைத் திரட்டுமாறு அரசாங்கம்
அதிகாரிகளுக்கு கட்டளையிட்டது. ஜூலை 10ம் திகதி "வருகை தராமைக்கு" ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை
தராவிட்டால் நிரந்தர ஊழியர்களிடம் விளக்கம் கோரவும் நிரந்தரமற்ற ஊழியர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான மருத்துவம் சாராத ஊழியர்கள் வேலை
நிறுத்தம் செய்தனர். அரசாங்கம் பல ஆஸ்பத்திரிகளில் வேலையை முன்னெடுப்பதற்காக பாதுகாப்புப் படைகளைச்
சேர்ந்த சிப்பாய்களை நிறுத்தியது. மருந்து விநியோக திணைக்களம் மற்றும் சுகாதார கல்வி நிறுவனத்தில் உள்ள
ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ விளக்கம் கோரி இப்போது கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள்
வேலை நிறுத்தம் செய்தவர்களின் விபரங்களை திரட்டுவதாக ஆசிரியர்களும், ரயில் ஊழியர்களும் மற்றும் ஏனைய
போக்குவரத்து தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர். இலங்கை போக்குவரத்துச் சபையில், வேலை நிறுத்தம் செய்தவர்களிடம்
அறிக்கைகளைப் பெறுவதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஆத்திரத்துடன் பதிலளித்தனர்.
ஜூலை 14 அன்று கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி, களுபோவிலை மற்றும் கண்டி ஆஸ்பத்திரிகள் உட்பட அரசாங்க
ஆஸ்பத்திரியைச் சேர்ந்த பல நூறு சுகாதார ஊழியர்கள் மதிய போசன இடைவேளையின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
களுபோவிலை ஆஸ்பத்திரியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச
வலைத் தள நிருபர்களுக்குத் தெரிவித்ததாவது: "வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக அரசாங்கம்
தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு முயற்சித்தது. வேலை நிறுத்தம் அன்று, மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க
அரசியல்வாதிகள் தமது குண்டர்களுடன் இங்கு வந்து எங்களை அச்சுறுத்தினார்கள். வேலை நிறுத்தக்காரர்களின்
தொழிலை செய்வதற்காக பாதுகாப்பு படையினரையும் அரசாங்கம் அனுப்பிவைத்திருந்தது.
"நாங்கள் சம்பள உயர்வு கேட்கும் போது, யுத்தத்திற்கு நிதி வழங்கவேண்டி இருப்பதால்
எங்களது கோரிக்கைகளை வழங்க முடியாது என அரசாங்கம் சொல்கின்றது. ஆயினும், அரசியல்வாதிகளுக்கும் உயர்
அதிகாரிகளுக்கும் வழங்குவதில் வறையறைகள் கிடையாது. எத்தனை ஆண்டுகாளாக இந்த யுத்தம் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது? முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் இந்த யுத்தத்திற்கு முடிவு காண முடியாது.
"தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராட வேண்டும். எவ்வாறெனினும்,
தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சரியான வேலைத்திட்டம் கிடையாது. வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்களின் முழு
பலத்தையும் அவர்களால் அணிதிரட்டிக்கொள்ள முடியாமல் போனது. இப்போது அரசாங்கம் முன்னேற்றம் காண முயற்சிக்கின்றது."
இந்தப் பிரச்சாரம் தொழிற்சங்கங்களின் கைகளிலேயே விடப்படுமானால், பெறுபேறு
நிச்சயமாக தோல்வியானதாக இருக்கும். யுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும்
பிரகடனம் செய்யும் ஜே.வி.பி. மற்றும் என்.டி.யூ.சி.யும் தமது மன்னிப்புக் கேட்கும் இடதுசாரிகளுக்கு பின்னால்
இழுபட்டு "ஆகஸ்ட் 4 இயக்கத்துடன்" அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணியும்.
"சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச
வேலைத் திட்டம்" என்ற தலைப்பில், யுத்தத்திற்கும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கும் எதிராக
தொழிலாளர் வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு அடித்தளம் அமைக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின்
அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள அரசியல் விடயங்களைப் பற்றி அக்கறையுடன் கவனம் செலுத்துமாறு நாம் அனைத்து
தொழிலாளர்களையும் ஊக்குவிக்கின்றோம். |