WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
SEP-ISSE memorial meeting in Colombo
WSWS speaks to workers and youth about
Keerthi Balasuriya
கொழும்பில் சோ.ச.க.-ஐ.எஸ்.எஸ்.ஈ. நினைவுக் கூட்டம்
தொழிலாளர்களும் இளைஞர்களும் கீர்த்தி பாலசூரியாவைப் பற்றி உலக சோசலிச
வலைத் தளத்துடன் பேசுகிறார்கள்
By our correspondents
28 December 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக
மாணவர் அமைப்பும் (International
Students for Social Equality -ISSE)
இலங்கையில் நடாத்திய கீர்த்தி பாலசூரியாவின் 20வது
நினைவுக் கூட்டத்தில் பங்குபற்றிய பலருடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினார்கள். சோசலிச சமத்துவக்
கட்சியின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளரான கீர்த்தி, அதன் ஆரம்பம்
முதல் 18 டிசம்பர் 1987ல் திடீர் மாரடைப்பினால் அவர் இறக்கும் வரை அந்த பதவியில் இருந்தார். யுத்தத்தின்
பின்னைய ட்ரொட்கிச இயக்கத்திTM அவர் ஒரு முன்னணி பாத்திரத்தை வகித்தார். நாங்கள் கொழும்பு
நினைவுக் கூட்டத்தில் பங்குபற்றியவர்களின் பேட்டியை கீழே பிரசுரிக்கின்றோம்.
வடமேற்கு மாகாணத்தில் உள்ள சிலாபத்தில் இருந்து வந்த 16 வயது இளம் மாணவனான
சானக, உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: ''உங்கள் கட்சி ஏனைய கட்சிகளிடம்
இருந்து வேறுபட்டது. ஏனெனில் அவர்கள் செய்யாததை நீங்கள் செய்கிறீர்கள். நாம் என்ன நினைக்கின்றோம் என
நீங்கள் எங்களை கேட்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் எங்களை சிந்திக்க உற்சாகப்படுத்துகின்றீர்கள்,
தொழிலார்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக இருக்கின்றீர்கள்.
கீர்த்தி தனது இளம் வயதில் பு.க.க வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
என்பதை இங்கு நிகழ்ந்த உரைகளில் இருந்து அறிந்து கொண்டேன். இது எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு
மிகப்பெரிய தூண்டுதலை அளிக்கின்றது. எதிர் காலத்தில் இந்தக் கட்சியை கட்டியெழுப்புவது அவசியம் என்ற
படிப்பினையை அவருடைய வாழ்க்கையில் இருந்து இளைஞர்கள் பெற முடியும்.
"நான் உங்களுடைய வலைத் தளத்திலிருந்து கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.
இவை உணர்ச்சியைத் தூண்டுபவை. விலைவாசி ஏற்றங்களினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை
முகம்கொடுக்கின்றார்கள். எங்களுடைய பாடசாலையில் ஒப்பீட்டு ரீதியில் வசதிகள் ஓரளவு இருக்கிறது, ஆனால்
பெரும்பான்மையான பாடசாலைகளில் வசதிகள் இல்லை.
''அரசியல் அதிகாரம் ஒரு கட்சியிடம் இருந்து வேறு கட்சிக்கு மாறுகின்றது.
-ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறுகின்றது- ஆனால், நாம் பாதையை
சரியாக காட்ட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி அந்தப் பாதையை அமைத்துள்ளது இதனை
உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் தெளிவுபடுத்தவேண்டும் என நான் நினைக்கின்றேன்.''
பண்டாரகமவில் இருந்து வந்த இளம் ஆசிரியர் பிரசன்னா கூறியதாவது: ''தோழர்
கீர்த்தி நிபந்தனையற்று உண்மைக்காக போராடினார் என்பதை இப்பொழுது நான் அறிகின்றேன். இந்த பொறுப்பை
நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும், அவர் போராடிய வரலாற்று ரீதியான அறிவை அடிப்படையாகக்
கொள்ள வேண்டும் என்பதையும் அவரது வாழ்க்கையில் இருந்து நான் உள்ளீர்த்துக்கொண்டேன். நான் சோசலிச
சமத்துவக் கட்சியில் சேர தீர்மானித்துள்ளேன்''.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த விரிவுரையாளர் பிரியன்த கூறியதாவது:
''சமகாலத்தில் மனித இனம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு சோசலிசத்தின் ஊடாக மட்டுமே தீர்வுகாண
முடியும் என நான் நம்புகின்றேன். தோழர் கீர்த்தி பாலசூரிய கட்சியை கட்டியெழுப்புவதற்கு தொடுத்த
போராட்டம் சம்பந்தமான உரைகளைக் கேட்டதிலிருந்து, அந்தப் போராட்டத்துக்காக நாம் எந்தளவுக்கு
விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நான் பூரணமாக விளங்கிக்கொண்டேன். சோசலிசத்தின்
வரலாற்று அவசியம் பற்றி கிரகித்துக் கொள்வதற்கு தொடர்ச்சியாக கற்க வேண்டும் என்பதை நான் விளங்கிக்
கொண்டேன். கீர்த்தி உண்மையில் இன்னும் எங்கள் மத்தியில் உயிர் வாழ்வதாக நான் உணர்கிறேன்.
69 வயதான குணதிலக, அரசாங்க போக்குவரத்து சேவையில் தொழிலாளியாக
இருக்கும் போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் 1960 ஆண்டு இறுதிப்பாகத்தில் சேர்ந்தவர். அவர் கூறியதாவது:
''புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆரம்ப மகாநாடு நடைபெற்று இரண்டு மாதம் முடியும் தறுவாயில் நான் அதில்
சேர்ந்தேன். போக்குவரத்து தொழிலாளியாக இணைந்த போதும் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்.
"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியும் அமைத்த முதலாளித்துவ
கூட்டரசாங்கத்துக்கு எதிரான கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட போதும், எவ்வாறு ஏழை விவசாயிகளின்
பிரச்சனைகள் தீர்க்கப்படும் மற்றும் புரட்சிக்கு எந்த வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்கும் என்பதில் எனக்கு குழப்பம்
இருந்தது. நான் மாவோவாதிகளின் பத்திரிகையான கம்கறுவா [தொழிலாளி] பத்திரிகையை
வாசித்துக்கொண்டிருந்தேன். அது விடயங்களை சிக்கலாக்கியது. ஏனெனில் அவர்கள் தொழிலாளியைப் பற்றி
கதைத்தாலும் விவசாயிகள் தலைமைப் பாத்திரம் வகிக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
"நான் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக பல கலந்துரையாடல்களை கீர்த்தியுடன்
நடத்தினேன். புரிந்துகொள்ள வைப்பதற்குரிய குறிப்பிடத்தக்க ஆற்றல் அவருக்கு உண்டு. சில ஆரம்ப
கலந்துரையாடலின் பின், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம், அவர்களை தன் பின்னால் அணிதிரட்ட
வேண்டிய தொழிலாள வர்க்கமே தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் முழுமையாக
ஏற்றுக்கொண்டேன். பல கலந்துரையாடலை செய்ய எனக்கு தாகம் இருந்தது. ஏனெனில் நிரந்தரப் புரட்சித்
தத்துவம் பற்றி கீர்த்தி பூரணமாக கிரகித்துக் கொண்டிருந்தார். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அந்த
நேரத்தில் பல விவசாயிகளின் போராட்டங்கள் நடந்தன.
"என்னிடம் கீர்த்தியை பற்றி சொல்வதற்கு பல விடயங்கள் உள்ளன. ஆனால்,
சிலவற்றை இங்கு சொல்லுகின்றேன். முதலாளித்துவ சமுதாயத்துக்குள் அடிப்படை புரட்சிகர சக்தியான தொழிலாள
வர்க்கத்துக்கு ஒரு புரட்சிகரக் கட்சி அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். பப்லோவாத திரிபுவாதிகள்
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை நிராகரித்ததன் மூலம், எவ்வாறு சமசமாஜக் கட்சியின் காட்டிக்
கொடுப்புக்கு வழிவகுத்தார்கள் என்பதையும் கீர்த்தி தெளிவு படுத்தினார்.
"எமது கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ல.ச.ச.க - ஸ்டாலினிச கம்யூனிஸ்ட்
கட்சி கூட்டரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததால் ல.ச.ச.க. தலைவர்கள் எங்களுக்கு
முழுமையாக எதிராக இருந்தார்கள். 1969 இல், நான் அகில-இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின்
மகாநாட்டில் பேராளராக பங்குபற்றிய போது, சமசமாஜக் கட்சி தொழிற்சங்கத் தலைமைத்துவம் என்னை
''எதிரியாக'' -அதாவது ''ஐக்கிய முன்னணி'' என அவர்களால் அழைக்கப்படுவதற்கு எதிரியாக- சித்தரித்து
வெளியேற்ற முயற்சித்தது. முன்நாள் சமசமாஜக் கட்சித் தலைவர் என்.எம் பெரேரா அங்கு பிரதம விருந்தினராக
இருந்தார். ஆனால், அவர்கள் வெற்றியீட்டவில்லை. ஏனெனில் நாம் கட்சியின் முன்னோக்கை அடிப்படையாகக்
கொண்டிருந்தோம்.
"நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் 1985-1986 இல் ஏற்பட்ட
பிளவின் பின்னர், கீர்த்தி இரண்டு வருடம் மாத்திரமே வாழ முடிந்தது என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
தொழிலாளர் புரட்சிக் கட்சி [WRP]
தலைவர்களான ஓடுகாலி ஹலீ, பண்டா, சுலோட்டர் ஆகியோருக்கு எதிராக தோழர் டேவிட் நோர்த்துடன்
இணைந்து கீர்த்தி முன்னணி பாத்திரம் வகித்தார். தோழர் நோர்த் ஒரு முறை எமது கட்சிக் கூட்டத்தில்
உரையாற்றியதில் இருந்து நாம் ஒரு உலகக் கட்சி என்றால் என்ன என்பதை மேலும் ஆழமாக கிரகித்துக்
கொண்டோம்.
"தோழர் கீர்த்தி கட்சித் தோழர்கள் சம்பந்தமாக தனிப்பட்ட ரீதியில் பெரிதும்
அக்கறை கொண்டிருந்தார். 1980ம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியதற்காக என்னைப் போல்
பல கட்சித் தோழர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள். இதனால் விவசாயம் செய்வதற்காக நான் எனது
சொந்த இடத்திற்கு திரும்பி வந்தேன். அவர் எங்களை சந்திக்கும்போது எங்களது வாழ்க்கை நிலைமைகளை
பற்றியே முதலில் கேட்பார். அதே நேரத்தில் எங்கள் மத்தியில் எதாவது அரசியல் பின்வாங்கலுக்கான அடையாளம்
தென்படுமாயின் அதற்கு எதிராக அவர் நிபந்தனையற்றுப் போராடுவார்.''
கூட்டத்தில் பங்கு பற்றிய பெயர் குறிப்பிட விரும்பாத ஐரோப்பிய மாணவி
ஒருவர் கூறியதாவது: ''தற்போதய சமூக அமைப்பு சம்பந்தமாகவும் உலக ரீதியாக நடைபெறும் பலவிதமான
சம்பவங்கள் சம்பந்தமாகவும் கோபம் அடைந்து இருந்தேன். சோசலிசம்தான் ஒரே ஒரு பதிலீடு என்பது
சம்பந்தமாக சில விளக்கம் எனக்கு இருந்தது. ஆனால், சோசலிசம் பற்றி பேசுகின்ற சில கட்சிகளின் போக்கு
சம்பந்தமாக நம்பிக்கையற்ற நிலமை இருந்தது. எப்படி இருந்தபோதும் சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்ற நோக்கத்தை ஒரு போதும் நான் கைவிடவில்லை.
''இலங்கையில் ஒரு விரிவுரையில் இருந்து ஒரு விடயத்தை தெரிந்துகொண்டேன்.
'ஊட்டச்சத்து குறைவு காரணத்தால் உருவாகும் நோய்களை தீவிரமான முறையில் சுகமாக்க முடியும் என எம்மால்
எதிர்பார்க்க முடியாது. முறையான சிகிச்சை மூலமே சுகப்படுத்த முடியும். அலைக்கழிக்கும் தொல்லை,
மனக்கவலை மற்றும் பதட்ட நிலைமையை தோற்றுவித்துள்ள, இலாபத்தை கறந்தெடுக்கும் வர்க்க சமுதாயமே
இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதில் பெரும் தடையாக இருக்கின்றது.' எனவே, சமுதாய நோய்களை தீர்க்கும்
போராட்டத்தை சமுதாயத்தை மாற்றியமைக்கும் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. இந்த வார்த்தைகள்
எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
"இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியதன் மூலம் விபரிக்க முடியாத சந்தோசத்தை
உணர்கிறேன். முழுக் கூட்டத்தையும்் தமிழில் மொழி பெயர்க்க தலைமைத்துவமும் உறுப்பினர்களும்
அர்ப்பணித்துக்கொண்டுள்ளமை என்னை ஈர்த்துள்ளது. நான் தனி ஒருவராக இருந்த போதும் எனக்கு
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினீர்கள்.
"கீர்த்தி பாலசூரிய தனது மிகவும் இளம் வயதில் ஆரம்ப பொதுச் செயலாளராக
இருந்து ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என எனக்கு தோன்றுகின்றது. பேச்சாளர்களால் சில உதாரணங்களை
மாத்திரமே எடுத்துக்கொள்ள முடிந்தது என நான் நினைக்கின்றேன். மறைந்த தலைவர் ட்ரொட்கிசத்தில்
ஆயுதபாணியாக இருந்த படியால்தான் அவரால் ஆய்வுகளில் ஈடுபட முடிந்தது. மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி.) சம்பந்தமான அவருடைய புத்தகத்தை ஏனைய மொழிகளிலும் வெளியிடுவதற்கு கட்சி அவசியமான
நடவடிக்கைகளை எடுக்கின்றது என நான் நம்புகின்றேன். அது உலகம் பூராகவும் உள்ள இளம் சந்ததியினருக்கு
வழிகாட்டியாக இருக்கும்.
"கீர்த்தியினுடைய வாழ்க்கைத் துணைவியார் விலானி பீரீஸ், அவர் கட்சியில் ஆற்றிய
பங்களிப்பை பற்றி ஆற்றிய உரையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உலகத்தில் என்ன நடக்கின்றது, அதனை
மாற்றுவது எப்படி என்பதை இக்கூட்டத்தில் இருந்து பெற்ற அறிவில் இருந்து இப்பொழுது விளங்கிக்கொள்ள
ஆரம்பித்துள்ளேன்.''
தனியார் ஸ்தாபனத்தில் வேலை செய்யும் பொறியியளாளரான புத்திக
விபரித்ததாவது: "விசேடமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாறு சம்பந்தமாக தோழர் விஜேயினுடைய
பேச்சை அவதானித்த பின்னர் நான் இப்பொழுது புரட்சிகரக் கட்சியை கட்டி எழுப்புவதற்கு கோட்பாடு மற்றும்
அரசியல் போராட்டம் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டேன். இது கட்சிக்கு மாத்திரம் அன்றி மனித இனத்தின்
எதிர் காலத்துக்கும் பொருத்தமானது. 1971 ம் ஆண்டில் கீர்த்தியின் தலைமையின் கீழ் வங்காளதேஷில் இந்தியாவின்
தலையீட்டை நாம் எதிர்த்திராவிட்டால், வட-கிழக்கில் இலங்கையின் இராணுவ தலையீட்டை எதிர்த்திருக்க முடியாது.
இதே நிலைப்பாடு தான் ஈராக் யுத்தத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டிலும் பிரதிபலிக்கின்றது என நான்
நினைக்கின்றேன்.
"1964 ம் ஆண்டில் இளைஞர்கள் சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்புக்கு
எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அமைத்தார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் போது கவர்ச்சியாக
இருக்கின்றது. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் இல்லாவிட்டால் சோசலிச சமத்துவக் கட்சியை
அமைத்திருக்க முடியாது. பேச்சுக்களை அவதானித்த பின்னர், கட்சியை கட்டியெழுப்புவதில் கொள்கைக்காக
போராடுவது முக்கியம் என்பதையும், கோட்பாட்டு ரீதியிலான போராட்டம் இல்லாமல் புரட்சிகரக் கட்சி இல்லை
என்ற லெனின் நிலைப்பாட்டிலும் ஈர்க்கப்பட்டுள்ளேன்.
"பலவகையான புத்திஜீவிகள் தொலைக்காட்சியில் தோன்றி அரசியல் சம்பவங்கள்
சம்பந்தமாக தெரிவிக்கும் கருத்துக்கள் முரண்பாடானவை. ஆனால், இந்தக் கூட்டத்தில் கீர்த்தினுடைய நிலைப்பாடு
பற்றி தெரிவிக்கப்பட்டவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. இதுவும் ஒரு வழியில், சோசலிச சமத்துவக்
கட்சியின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு சாட்சியளிக்கின்றது."
தென் மாகாணத்தில் அம்பலாங்கொடையை சேர்ந்தவரும் நீண்டகால பு.க.க மற்றும்
சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளருமான கே. மாலினி, 57, கூறுகையில்: "தோழர் கீர்த்தியை எனக்கு
நீண்டகாலமாகத் தெரியும். ஆனால், அவரின் கடைசி ஐந்து வருட வாழ்கையில்தான் நெருங்கிய தொடர்பு
இருந்தது. எனது கணவனால் ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக
கொழும்பிலிருந்து 200 கி.மீ தூரத்தில் இருக்கும் தங்காலையில் உள்ள எமது வீட்டிற்கு அவர் வந்தார். அவர்
அமைதியானவரும் நட்புடையவரும் பொறுமையானவரும் ஆவர்.
"எமது பிரதேசத்துக்கு அவர் வரும்போது கூட்டத்தில் அவரது பேச்சை ஆர்வமாகக்
கேட்டிருக்கிறேன். அவருடைய விளக்கம் சக்தி வாய்ந்த முறையில் எம்மீது செல்வாக்கு செலுத்தியது. எதிர்காலத்தை
தூரநோக்குடன் அறியும் திறமை, மற்றய தோழர்களையும் விட அவருக்கு இருந்தது என்பது எனக்கு ஞாபகம்
இருக்கிறது. அவருடைய குரல், அத்துடன் முக்கியமான பிரச்சனைகளை விளங்கப்படுத்தும் முறை எனக்கு
பிடித்திருந்தது. அவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
"நான் மாணவியாக இருக்கும்போது ஐே.வி.பி. யின் ஆதரவாளர்களின்
நிலைப்பாட்டிற்கு எதிரான விவாதங்களில் நான் அடிக்கடி அவரிடமிருந்து மேற்கோள் காட்டுவேன். அவர் மிகவும்
கவர்ச்சியான மனிதப் பண்பு உடையவர். கீர்த்தியினுடைய வாழ்க்கை துணைவியான விலானியுடன் கொழும்பில் உள்ள
அவர்களது வீட்டிற்கு கலந்துரையாடல்களுக்காக சென்றுள்ளேன். கலந்துரையாடும்போது சூழ்நிலை நட்பு ரீதியாக
இருக்கும். இந்தக் கலந்துரையாடல்களின் போது கீர்த்தி எங்களுக்கு அடிக்கடி தேனீர் கொண்டு வருவார். பல
பிற்போக்கு பழக்க வழக்கங்களில் ஆணாதிக்கவாதம் வெளிப்படும் ஒரு நாட்டில் இவை சிறிய விடயங்கள் அல்ல.
அவருடைய அகால மரணம் ஒரு பேரிழப்பாகும்.''
30 வயது தமிழ் இளைஞரான சசிகரன் பேசுகையில்: ''யாழ்ப்பாணத்தில்
பாதுகாப்பின்மை காரணமாக எட்டு வருடத்திற்கு முன்பு நான் கொழும்புக்கு வந்தேன். வெளிநாட்டுக்கு போகும்
நோக்குடன் எனது பல்கலைக்கழக கல்வியையும் கைவிட்டு இங்கு வந்தேன். ஆனால், நான் இங்கு வந்த பின்னர்
வழமையான தேடுதல் நடவடிக்கையின் போது பல தொல்லைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதனால்
வெளிநாடு போகமுடியவில்லை.
"நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் போது சாதாரண சிங்கள மக்களும்
இராணுவத்தைப் போல் கொடூரமானவர்கள் என நம்பினேன். ஆனால், நான் கொழும்பில் இருந்த வேளையில் அது
உண்மை அல்ல என்பதை கிரகித்துக்கொண்டேன்.
"இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின், சமுதாயத்தின் எல்லா பகுதியினரையும்
ஐக்கியப் படுத்தும் அரசியல் ரீதியாக பலமான இயக்கம் ஒன்று இருக்கிறது என்பதை காணமுடிகிறது. சோ.ச.க
எப்படி ஒவ்வொரு பிரஜையினதும் சம உரிமையை பாதுகாக்கின்றது என்பதை இக் கூட்டம் விளக்கியது. மறைந்த தலைவர்
பற்றி இங்கு குறிப்பிட்டதிலும் பார்க்க அவர் கூடுதலாக பங்களிப்பு செய்திருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது.
என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு இவை சென்றடையுமாயின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கு என்ன அவசியம்
தேவை என்பதை அவர்கள் அறியமுடியும்.
"எனக்கு அண்மையில்தான் இந்தக் கட்சியை பற்றி அறிய முடிந்தது. அத்துடன் அதன் வெளியீடுகளையும்
வாசிக்க முடிந்தது. கீர்த்தியினுடைய ஜே.வி.பி. சம்பந்தமான புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்
என நான் நினைக்கின்றேன்.
"நான் முன்பு1983 இனக்கலவரம் தான் உள்நாட்டு யுத்தத்திற்கு காரணம் என
நம்பினேன். ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள, தமிழ் மக்களை பிரிப்பதற்கு இனப் பாகுபாடு
உபயோகப்படுத்தப்பட்டது என்பதை இப்பொழுது நான் விளங்கிக்கொண்டேன்.
"உயர்ந்த வாழ்க்கை செலவினங்களாலும் ஏனைய தாக்குதலினாலும் அவஸ்தைப்படும்
தென்பகுதி மக்கள் மிக வரைவில் போராட்டத்திற்கு வருவார்கள் என நான் நம்புகின்றேன். யுத்தத்தினால் வடக்கில்
அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. மக்கள் பாரிய சிரமத்தின் மத்தியில் வாழ்கிறார்கள்.
"இந்த அமைப்புக்குள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்கள் கட்சி கூறுவதுபோல்
யுத்தத்தை நிறுத்த முடியாது. சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சோசலிசத்திற்காக போராடுவதே ஒரேவழி.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோருகின்றது. ஆனால், புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்துக்கு -இப்பொழுது சோசலிச சமத்துவக் கட்சி- மட்டுமே யுத்தத்திற்கு எதிரான உறுதியான கொள்கை
உண்டு என்பதை நான் உணர்கின்றேன்" என அவர் தெரிவித்தார். |