World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

The dubious politics behind the Beijing Olympics protests

பெய்ஜிங் ஒலிம்பிக் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் உள்ள ஐயுறவான அரசியல்

By David Walsh
10 April 2008

Back to screen version

ஆகஸ்டில் பெய்ஜிங்கில் ஆரம்பமாகவுள்ள கோடை விளையாட்டுக்களுக்கான ஐந்து கண்டங்களின் நகரங்கள் வழியாக வரும் ஒலிம்பிக் தீப ஓட்டம் இலண்டன், பாரீஸ் மற்றும் தற்போது சான்பிரான்சிஸ்கோவிலும் எழுந்துள்ள குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டங்களால் குழப்பப்படலாம் என அஞ்சப்படுகிறது.

தீபெத் மீதான அடக்குமுறை மற்றும் அதன் மனித உரிமைகள் மீதான சீன ஆட்சியின் ஒட்டுமொத்தமான வரலாறு என்பதே எதிர்ப்புகளின் மத்திய புள்ளியாக இருக்கிறது. தீபெத்திய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, டார்பூர் மற்றும் பர்மாவில் சீனாவின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் உட்பட கூட்டணி குழுக்களும், தடைசெய்யப்பட்ட மத பிரிவான பாலுன் கோங்க் மதக்குழுவின் ஆதரவாளர்களும் மற்றும் மிருக உரிமை இயக்கங்களும் கூட இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இலண்டன் மற்றும் பாரீஸில், ஒலிம்பிக் தீபம் நகர வீதிகளில் கொண்டு செல்லப்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை கைப்பற்ற முயன்றார்கள் - இதில் பலமுறை வெற்றியும் பெற்றார்கள்.

செவ்வாயன்று மதியம் சான்பிரான்ஸிஸ்கோவில் பல நூறு எதிர்ப்பாளர்கள் கூடினார்கள் மற்றும் அன்று மாலையில் நகரத்தின் ஐக்கிய நாடுகள் சதுக்கத்திலும் ஒரு பெரிய கூட்டம் கூடியது. நடிகர் ரிச்சர்டு கியர், தென் ஆபிரிக்காவின் தேவாலய பாதிரியார் டெஷ்மாண்டு டுடு மற்றும் செனட்டர் டயான் பேன்ஸ்டைனின் (கலிபோர்னியா ஜனநாயகக் கட்சியாளர்) கணவரும் கோடீஸ்வர நிதியாளரான ரிச்சார்ட் புளூம் ஆகியோர் அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர். உண்மையில், புதனன்று ஒலிப்பிக் தீபம் சான்பிரான்சிஸ்கோவின் நீரோடை பக்கம் கொண்டு செல்லப்படுகையில், ஒரு பெரியளவிலான எதிர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், உரக்க கூச்சலிட்ட போதிலும், பெருமளவிலான எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டி இருக்கவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் இதை பெருமளவில் வெளியிட்டிருந்தன. பல ஆயிரம் உயிர்களை பலி கொண்ட, பெப்ரவரி 2003ல் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக பரந்த உலகளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு கூட இதில் பத்தில் ஒரு பங்கு ஒலி/ஒளிபரப்பு நேரமோ அல்லது இதழ்களில் இட ஒதுக்கீடோ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1980 ற்கு ஓர் ஆண்டு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுத்ததால், காட்டர் நிர்வாகத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டு, 1980ல் மாஸ்கோவில் நடந்த விளையாட்டுக்களை புறக்கணித்தது போன்றே பெய்ஜிங் ஒலிம்பிக்கு எதிராகவும் பிரசாரத்தை மேற்கொள்ள ஒரு பெருமுயற்சி நடந்து வருகிறது. 1980ல் நடந்த விளையாட்டுக்களில் அறுபத்திரெண்டு நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, நான்காண்டுகளுக்கு பின்னர், ஸ்ராலினிச அணி நாடுகள் லொஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்களை புறக்கணித்தன.

அமெரிக்க ஆளும் மேற்தட்டு தற்போதைய பிரச்சாரத்தில் இருந்து தன்னை அந்நியப்படுத்தி கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவத்திற்கு சீனாவின் பொருளாதார மற்றும் நிதி முக்கியத்துவத்தை சக்திவாய்ந்த பிரிவுகள் நிச்சயமாக உணர்ந்துகொண்ட அவை இதற்காக அரசிற்கு பின்னால் தமது ஆதரவை வழங்க விருப்பமில்லாமலும் இருக்கின்றன. புஷ் நிர்வாகம் தற்போதைய முயற்சியில் முழு மனதுடன் சேர்ந்து கொள்ளவில்லை, அதாவது குறைந்தபட்சம் வெளிப்படையாக சேர்ந்து கொள்ளவில்லை. காங்கிரஸிலுள்ள அவைத்தலைவர் நான்சி பிலோசியின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியினர் இந்த பிரச்சனை குறித்து நிறைய கூச்சலிட்டு வருகிறார்கள்.பெய்ஜிங்கின் ஆரம்ப விழாவை தவிர்ப்பதை குறித்து ஆலோசிக்குமாறு ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை பிலோசி கேட்டுக் கொண்டிருக்கிறார்; தனது ஜனாதிபதி கனவை தக்கவைக்க கடுமையாக போராடி வரும் நியூயோர்க்கின் செனட்டர் ஹிலாரி கிளிண்டன் இந்த ஆரம்ப விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என புஷ்ஷிடம் விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். ஜனநாயகக் கட்சியினர் கம்யூனிச எதிர்ப்பையும் மற்றும் சீன தேசியவாதத்தையும் தூண்டி விட்டு வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் புஷ், விழாவில் கலந்து கொள்வதற்கான தமது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார். தாம் ஆரம்ப விழாவில் இருக்க போவதில்லை, ஆனால் தாம் ஓர் எதிர்ப்பாளர் அல்ல என பிரிட்டிஷ் பிரதம மந்திரியான கோர்டன் பிறவுன் தெரிவிக்கிறார். அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ள திட்டமிடுகிறார். ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கெல் இந்த ஆரம்ப விழாவில் இருந்து ஒதுங்கி இருப்பார் மற்றும் பிரான்சின் நிக்கோலா சார்க்கோசியும் அதையே பின்பற்ற போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊகித்தபடியே, பெய்ஜிங் கோடை விளையாட்டுக்களுக்கு எதிரான பிரச்சாரம் ஓர் அரசியல் கால்பந்தாட்டமாக உருவெடுத்துள்ளது என்பதுடன் இதுவொரு பொதுவான பிற்போக்குவாதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. சீன ஆட்சிக்கு எதிராக 1959ல் கிளர்ச்சியை தூண்டிவிட ஆயுதங்கள் மற்றும் உதவியை வழங்கிய CIA இற்கும், தீபெத்திய தேசியவாத பிரிவுகளுக்கும் இடையிலான நீண்ட கால தொடர்புகள் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. மிக சமீபத்திய காலங்களில், CIA இன் முன்னணி அமைப்பான 1984ல் ரீகன் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய மானியக் குழு (NED), தீபெத்திய பிரிவினைவாத இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

இவற்றை கூறுகின்றபோதிலும், தீபெத்தின் மீதான சீன அடக்குமுறையுடன் ஐக்கியப்படுவதற்கு எவ்வித காரணமும் இல்லை. பெய்ஜிங் ஆட்சிக்கும் சோசலிசம் அல்லது கம்யூனிசத்துடன் எவ்வித தொடர்புமில்லை. அது நாட்டை அன்னிய மற்றும் உள்நாட்டு பெருநிறுவன நலன்களின் சூறையாடலுக்கு கையளித்துவிட்டது. அவை தற்போது இலட்சக்கணக்கான சீன தொழிலாளர்களை மோசமான கூலிக்கு சுரண்டிவருகின்றன. 'சுதந்திர சந்தை' எனும் இந்த திட்டமிட்ட பலாத்காரமானது, உலகளவில் கோடீஸ்வரர்களுக்கான விரைவாக வளர்ந்து வரும் வசூல் மையங்களில் ஒன்றாக சீனாவை உருவாக்கிவிட்டது. பெய்ஜிங் அரசாங்கம் மக்களின் வெறுப்பைப் பெற தகுதியடையுள்ளது என்பதுடன் ஒவ்வொரு முக்கிய எதிர்ப்பையும் ஒடுக்குமுறை மற்றும் வன்முறையால் பதிலளிக்கிறது.

சீன ஆட்சி அதன் ஒட்டுமொத்த மக்களின் உரிமையை நசுக்கியது போன்றே தீபெத்தியர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் காலடியில் இட்டு நசுக்குகிறது.

அதற்கு பதில், தீபெத்திய தேசியவாதம் என்பதாகாது; தீபெத்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பிற குழுக்களால் முன்வைக்கப்பட்ட பிரிவினைவாதம் என்பது புதிதாக 'சுதந்திரம்' அடைந்த நாட்டை ஒரு உயிர்வாழத்தகுதியற்றதாக்கி சாதாரணமாக ஏதாவதொரு ஏகாதிபத்திய அதிகாரத்திடம் அடகு வைத்துவிடும் என்பதால் அதனால் எந்தவித ஜனநாயக அல்லது சமூக கோரிக்கைகளும் தீர்க்கப்படாது. நிலப்பிரபுத்துவ பிற்போக்குவாதத்தினதும் மற்றும் மூடநம்பிக்கைகளின் ஓர் அடையாளமாக விளங்கும் தலாய்லாமா, இந்த தேசியவாத இயக்கத்தின் ஆன்மீக தலைவராக இருப்பதே அதன் சமூக மற்றும் வர்க்கப் பண்புகள் குறித்து தொகுதி தொகுதியாக பேசுகிறது.

சந்தேகத்திற்கிடமின்றி, சீன அரசியலுக்கு எதிரான உண்மையான எதிர்ப்பு சான்பிரான்சிஸ்கோ மற்றும் பிற பகுதிகளிலுள்ள சில ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஊக்குவிக்கிறது. எவ்வாறிருப்பினும், மனித உரிமைகள் மற்றும் கொடூரங்கள் குறித்த ஓர் சரியான தகவலற்ற தன்மை இவ்வார்ப்பாட்டங்கள் பெரிய சக்திகளின் கொள்கையுடன் (Great Power policy) தங்கள் எதிர்ப்புகள் ஒத்து போகின்றன என்பதைக் கவனிக்காத அறியாமையிலுள்ள மக்கள் சிலரை தன்நோக்கி இழுக்கின்றது. சர்வதேசியவாத மற்றும் சோசலிச முன்னோக்கு ஒன்று இல்லாத நிலையில், இதுபோன்றதொரு பிரச்சாரம் தீபெத்தில் மனித உரிமைகளுடன் எவ்விதத்திலும் தொடர்பும் இல்லாத நலன்களையும், உபாயங்களையும் மட்டுமே ஊக்குவிக்கும்.

1990களில் சேர்பிய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவு 'இடதுகள்' தம்மை இணைத்துக்கொண்ட, இந்த நாடகத்தின் ஒரு சோகமான மாதிரியை நாம் பார்த்திருக்கிறோம். அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப பால்கன்களை வடிவமைக்க இதுவொரு கருவியாக பயன்பட்டது.

முற்றிலும் எதிர்பார்க்காத மற்றும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தகூடிய தீபெத்திய பிரச்சனையில் பல முக்கிய வரலாற்றுக் கேள்விகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்க அரசாங்கத்தால், குறிப்பாக சில தசாப்தங்களுக்கு முன்னால் தாய்வான் தொடர்பாக இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், அவர்களது ஜனநாயக போராட்டங்கள் நியாயபூர்வமானவையாக இருந்தாலும், சுதந்திர தாய்வான் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்கள் முற்றிலும் பிற்போக்கானது என்பதுடன் அவை பிற்போக்கு பிரிவுகளின் கையிலெடுக்கப்பட்டன. நீண்டகாலப்போக்கில், பெரிய சக்திகளினால் நெருப்புடன் விளையாடுவது பெருமளவிலானவர்கள் பாதிக்கப்படுவதுடன், யுத்தத்திற்கும் இழுத்து செல்கிறது. ஒரேயொரு முற்போக்கான பதில் சோசலிச கொள்கையும் மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அனைத்து முகவர்களுக்கும் எதிராகவும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டுவதாகும்.

தற்போதைய பிரச்சாரத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் பின்னனி, NED யிடமிருந்து நிதியைப் பெற்ற அமைப்புகளில் ஒன்றான தீபெத்திய சர்வதேச குழுவின் ஓர் அறிக்கையால் வெளிப்படுகிறது. சான்பிரான்சிஸ்கோவில் அதன் ஏப்ரல் 8ம் தேதி விழிப்புபோராட்டத்திற்கான ஒரு அழைப்பில், ஒலிம்பிக் ஆரமப விழாவில் புஷ் கலந்து கொள்ளக் கூடாது என்றும், அது சீன கம்யூனிஸ்ட் கட்சியால் உலக அரங்கில் அதன் சட்டபூர்வதன்மைக்கு ஓர் ஆதாரமாக பயன்படுத்தப்படும் என்றும், அதனால் சீனா முழுவதும் திட்டமிட்ட மனிதஉரிமை மீறல்களின் மீது ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்றும் தீபெத்திய சர்வதேச குழு வலியுறுத்துகிறது. தம்மைத் தாமே 'மனித உரிமைகளுக்கான அதிபர்' என கருதும் ஜனாதிபதி புஷ், குடிமக்களின் உரிமைகளை திட்டமிட்டு மீறும் ஓர் அரசியல் ஆட்சியுடன் கை கோர்க்க கூடாது''. என அதில் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் தனது கண்களை கசக்கிக்ககொள்ளவேண்டியுள்ளது. திட்டமிட்டு மனித உரிமைகளை மீறும் ஓர் ஆட்சியுடன் ஒரு முக்கிய யுத்த குற்றவாளியான புஷ் ("மனித உரிமைகளுக்கான அதிபர்"!) தம்மை இணைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அவரே அதுபோன்றதொரு ஆட்சியில் முக்கியமான ஆளாக உள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் மீதான அமெரிக்க அரசியல்வாதிகளின் கண்துடைப்பு ஒரு பாரிய தன்மை கொண்டது. ஹிலாரி கிளிண்டன் தமது அறிக்கையில் தெரிவித்ததாவது, "மனித உரிமைகள் மற்றும் ஒற்றுமையை, நல்லெண்ணத்தை நிலைநிறுத்த வந்திருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீதான சர்வதேச மனித விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை சீனர்கள் பயன்படுத்திக் கொள்ள நான் அவர்களை ஊக்குவிக்கிறேன்." என்று தெரிவித்தார்.

பிலோசி அவரின் இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டார், அதாவது; "தீபெத்திய ஒடுக்குமுறை மற்றும் சூடான் ஆட்சி மற்றும் பர்மாவில் இராணுவ ஆட்சிக்கான பெய்ஜிங்கின் ஆதரவு ஆகியவற்றை உலகளவிலுள்ள சுதந்திரம் விரும்பும் மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். அமைதி மற்றும் அன்புக்கான ஒலிம்பிக் நல்லெண்ணங்கள், தீபெத் மற்றும் டர்போர் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டுமென மக்கள் ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள்." என்று தெரிவித்தார்.

தீபெத்தில் சீனர்களின் அனைத்து கொடுமைகள் மற்றும் கொடூர நடவடிக்கைகளானது, அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவத்தால் ஈராக்கில் செய்யப்பட்ட கொடூரங்களை நெருங்கவில்லை. ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர், ஒரு நாடு முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறது, நான்காயிரம் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், கணக்கெடுத்திருக்கும்படி இதன் விளைவுகள் சுமார் டிரில்லியன் டாலர் செலவுகளை அளித்திருக்கும் என கணக்கிப்பட்டுள்ளது.

கழுத்துவரை இரத்தத்தில் தோய்த்திருக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், "மனித உரிமைகள் மற்றும் ஒற்றுமை மீதான சர்வதேச மனித விருப்பங்கள்" மற்றும் "அமைதி மற்றும் அன்புக்கான ஒலிம்பிக் நல்லெண்ணங்களுக்காக" எவருக்கும் பிரசங்கம் செய்யும் அருகதையற்றவர்கள்.

ஜனநாயக கட்சியினரான கிளிண்டன் மற்றும் பிலோசி போன்றவர்கள் ஈராக்கிய படுகொலைகளில் ஆரம்பத்தில் இருந்தே உடந்தையாக இருந்ததுடன், அவர்களின் பிரதிநிதிகளும் ஜெனரல் டேவிட் பெட்ரீயஸின் முன்னால் இந்த வாரம் அடிபணிந்து நின்றமை மூலம், சர்வதேச ஆக்கிரமிப்பு மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான சர்வதேச யுத்தம்" என கூறப்படுவதன் மூலமான உலக ஆதிக்கத்திற்கான அமெரிக்க முனைவுகளை சட்டரீதியானவை என அவர்கள் தொடர்ந்து ஒத்துக் கொள்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved