World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSenior Sri Lankan minister killed in bomb blast குண்டுத் தாக்குதலில் இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர் கொல்லப்பட்டார் By Sarath Kumara இலங்கையில் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளில் ஒருவரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஞாயிற்றுக் கிழமை காலை கொழும்பில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெலிவேரிய நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராவார். கொழும்பு அரசாங்கம் இந்தக் கொலையை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அது நடத்திவரும் இனவாத யுத்தத்தை உக்கிரமாக்க உடனடியாகப் பற்றிக்கொண்டது. மரதன் ஓட்டப் போட்டியின் ஆரம்ப ஸ்தானத்தில் கூட்டம் நிறைந்திருந்த வேளையில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் மேலும் 14 பேர் உயிரிழந்ததோடு கிட்டத்தட்ட 100 பேர்வரை காயமடைந்துள்ளனர். இந்தவாரக் கடைசியில் இலங்கையின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக இந்த மரதன் ஓட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமைச்சர் அங்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். உயிரிழந்தவர்களிலும் காயமடைந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர். தேசிய மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் லக்ஷ்மன் டி அல்விஸ், முன்நாள் மரதன் சாம்பியனான கே. ஏ. கருணாரட்ன மற்றும் பல ஓட்ட வீரர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். பிரமாண்டமான வெடிச் சத்தத்துடன் பெரும் தீப்பிளம்பைக் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நளின் வர்னசூரிய அசோசியேடட் பிரஸ்ஸுக்கு தெரிவித்ததாவது: "நான் துண்டிக்கப்பட்ட தலைகள், கைகள் மற்றும் கால்களையும் கண்டேன். இரத்தமும் உடற் பாகங்களும் எல்லா இடங்களிலும் கிடந்தன. பேரச்சம் நிறைந்த ஒரு காட்சியையே நான் கண்டேன். புலிகள் இதற்குப் பொறுப்பேற்காவிட்டாலும், இந்தத் தாக்குதலை பெரும்பாலும் அவர்களே நடத்தியிருக்கக் கூடும். மிக அண்மையில், ஜனவரி 1ம் திகதி பட்டப் பகலில் கொல்லப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் உட்பட, பல முன்னணி எதிர்தரப்பு அரசியல்வாதிகளை படுகொலை செய்ததில் இலங்கை இராணுவமும் மற்றும் அதனுடன் இயங்கும் துணைப்படைகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக பரவலாக நம்பப்பட்டது. ஆயினும், ஞாயிற்குக் கிழமை நடந்த தாக்குதலில், இதுவரை உள்ள ஆதாரங்களின்படி இந்தக் குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரி ஒருவராலேயே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இது புலிகள் பின்பற்றும் வழிமுறையின் ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்ததோடு புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பெருங்கூச்சலிடும் பரிந்துரையாளரும் ஆவார். தற்போதைய பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க ஓய்வு பெற்றபின்னர், பெர்னாண்டோபுள்ளே அடுத்த பிரதமராவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டது. அவர் ஏப்பிரல் 5 அன்று கடைசியாக நிகழ்த்திய பகிரங்க உரையொன்றில், "பயங்கரவாதிகளை முற்றாக அழிக்கும் வரை யுத்தத்திற்கு முடிவு கிடையாது", "கிழக்கில் நாம் செய்தது போல் விரைவில் நாம் வடக்கையும் விடுவிப்போம்" என பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். அவர் சிரேஷ்ட அமைச்சராக இருந்த அதே வேளை, பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், பெர்னாண்டோபுள்ளே அரசாங்கத்தின் அதிகரித்துவரும் ஜனநாயக-விரோத வழிமுறைகளை பலமாக பாதுகாத்தார். கொழும்பை நிரந்தர வதிவிடமாகக் கொண்டிராத அனைத்து தமிழர்களையும் பலாத்காரமாக வெளியேற்றுவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அரசாங்கத்தின் அட்டூழிய செயலை பகிரங்கமாக பாதுகாக்கும் பணி பெர்னாண்டோபுள்ளேயிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மீண்டும், கொழும்பு நகரில் உள்ள ஏராளமான நிரந்தர பாதுகாப்பு வீதித் தடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் கட்டளையிட்ட போதும், பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் அந்த முடிவை தீவிரமாக கண்டனம் செய்தவரும் பெர்னாண்டோபுள்ளே ஆவார். மே 10 அன்று நடக்கவுள்ள கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களுக்கான அரசாங்கத்தின் பிரச்சாரத்தை வழிநடத்தவும் பெர்னாண்டோபுள்ளே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இராஜபக்ஷவின் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, புலிகளில் இருந்து பிரிந்துவந்த ஆயுதக் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுடன் (டீ.எம்.வி.பீ.) தேர்தல் கூட்டு ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளது. இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் டீ.எம்.வி.பீ. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் வாக்காளர்களை அச்சுறுத்துவதில் பெயர்பெற்றிருந்தது. தொடர்ச்சியாக நடக்கும் அரசியல் படுகொலைகள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களின் பிரதான சந்தேகக் குழுவாக டீ.எம்.வி.பீ. உள்ளது. பெர்னாண்டோபுள்ளே, டீ.எம்.வி.பீ. யை நிராயுதபாணியாக்க எதிர்க்கட்சி விடுத்த அழைப்பை தீவிரமாக எதிர்த்தவராவார். ஆயினும், அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றதோடு நடந்த பெர்னாண்டோபுள்ளேயின் கொலையானது, அரசாங்கத்தின் கைகளில் நேரடியாகப் பயன்படுகின்றது. இனவாத குரோதங்களை கிளறுவதற்கு இந்தக் குண்டுத் தாக்குதலை உடனடியாக பயன்படுத்திக்கொண்ட இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் தமது ஒடுக்குமுறை கொள்கைகளை நியாயப்படுத்தினர். புலிகளின் இலக்குகள் எனக் கூறப்படுபவற்றுக்கு எதிராக பழிவாங்கல் விமானத் தாக்குதல்களை நடத்துமாறு கட்டளையிட ஜனாதிபதி இராஜபக்ஷ காலதாமதம் செய்யவில்லை. இதற்கு முன்னர் நடந்த அத்தகைய விமானத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான, இல்லையெனில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது முடமாக்கப்பட்டுள்ளனர். பழிவாங்கும் படுகொலைகளை நியாயப்படுத்த அரசாங்கம் அப்பாவி பொதுமக்களை கொல்வதை பயன்படுத்த முடியாது. இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் சாவுகள் அழிவுகளுக்கு "சிங்கள இனத்தை" - அதாவது அனைத்து சிங்களவர்களையும் - குற்றஞ்சாட்ட புலிகள் முயற்சிப்பது பிரிவினையானதும் பிற்போக்கானதுமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சாதாரண சிங்களவர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. இலங்கையர்களில் பெரும்பான்மையினர் - சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களும் - யுத்தத்தையும் மற்றும் அது உழைக்கும் மக்களுக்கு கொண்டு வந்துள்ள துயரத்தையும் எதிர்க்கின்றார்கள். புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டம் தமிழ் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக அது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பேரில் தமக்கென்று சொந்தமாக ஒரு மலிவு உழைப்புக் களத்தை ஸ்தாபிக்கவும் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான ஒரு அரசை நிறுவவும் விரும்பும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. பெர்னாண்டோபுள்ளே போன்ற உயர்மட்ட புள்ளிகளை இலக்கு வைப்பதானது புலிகளின் வடக்கு கோட்டைக்கு எதிராகத் தொடரும் தாக்குதல்களை நிறுத்துமாறு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிடப்பட்டதாகும். அதே சமயம், யுத்தத்தை நிறுத்தி சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க தலையீடு செய்யுமாறு அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளான "சர்வதேச சமூகத்திற்கு" புலிகள் தொடர்ந்தும் அழைப்பு விடுக்கின்றனர். புஷ் நிர்வாகத்தின் வழிகாட்டும் குறிப்பை பின்பற்றும் "சர்வதேச சமூகம்", இராஜபக்ஷ அரசாங்கம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்ததையும், அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகளையும் மற்றும் குற்றங்களையும் கண்டும் கண்களை மூடிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல் சம்பந்தமான புதிய கண்டனங்கள், வாஷிங்டனிலும் ஏனைய உலக தலைநகரங்களிலும் உள்ள பாசாங்கிற்கு இன்னுமொரு உதாரணமாகும். அரசாங்கம் கிழக்கு மாகாணசபை தேர்தல் தயாரிப்புகளில் யுத்தத்தையும் மேலும் கொடூரமான தாக்குதல்களையும் உக்கிரமாக்குவதற்கு முன்னோடியாக தேசப்பற்று பேரிகையை கொட்டத் தொடங்கியுள்ளது. குண்டுத் தாக்குதலை கண்டனம் செய்த இராஜபக்ஷ, "எங்களிடையே இருந்து பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதற்கும் மற்றும் எங்கள் மக்கள் அனைவருக்கும் சமாதானம், நல்வாழ்வு மற்றும் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கும் எங்களுக்குள் உள்ள உறுதிப்பாட்டை இது பலவீனப்படுத்திவிடாது" என பிரகடனம் செய்தார். முழு தேசிய மரியாதைகளுடன் பெர்னாண்டோபுள்ளேக்கு மரணச்சடங்கு செய்யப்பட்டதோடு அன்றைய தினம் தேசிய அஞ்சலி தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அரசாங்கத்துக்கு கொழும்பில் உள்ள ஏறத்தாள முழு ஊடங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபனமும் ஆதரவளித்தது. பொதுச் நிகழ்ச்சிகளை நிறுத்தி நாடு முழு யுத்த நிலையில் இருத்தப்பட வேண்டும் என அழைப்புவிடுத்து ஐலண்ட் பத்திரிகை முன்பக்க ஆசிரியர் தலைப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. "யுத்தம் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கும் போது, வாகன போட்டிகள், கண்காட்சிகள், மரதன் ஓட்டங்கள், சைக்கிள் ஓட்டங்கள், அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுவது ஏன் என்பது மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் வேறு ஏதாவது ஒரு நாடு யுத்தநிலையில் இல்லாமல் இருக்குமா," என அது பிரகடனம் செய்கின்றது. சிங்களத் தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) யுத்தத்தை உக்கிரமாக்க அழைப்பு விடுக்கின்றது. யுத்தத்திற்கு அரசியல் தீர்வுகாணும் எந்தவொரு பாசாங்கையும் கைவிடுமாறு அழைப்புவிடுக்கும் ஜே.வி.பீ. யின் அறிக்கை, "பிரிவினைவாத அதிகாரப் பரவலாக்கல் பிரேரணையில் காலத்தை வீணாக்காமல், அரசாங்கம் புலிகளை முழுமையாக தோற்கடிக்க வீரமிக்க பாதுகாப்பு படையினர்களுக்கு முழு ஆதவரையும் உற்சாகத்தையும் வழங்க வேண்டும்" என பிரகடனம் செய்துள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர், புலிகளின் தலைமையகம் உள்ள கிளிநொச்சிக்கு அருகில் மாங்குளம் பிரதேசத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்திய இராணுவம், தற்கொலைப் போராளிகளை பயிற்றுவிக்கும் "கரும்புலி முகாம்" ஒன்றைத் தாக்கியதாக கூறிக்கொண்டது. விமானத் தாக்குதல்களிலும் தரை நடவடிக்கைகளிலும் வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு பிரதேசங்களில் 48 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறிக்கொண்டார். பத்திரிகையாளர்கள் யுத்த முன்னரங்குகளுக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் சுயாதீனமான செய்திகள் எதுவும் கிடையாது. எப்போதும் போலவே, உயிரிழந்தவர்களில் பொதுமக்கள் இருந்திருப்பர். இராணுவம் வவுனியாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தடை செய்தது. வவுனியா தீவின் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பயணிகள் இடம்மாறும் மையமாகும். வெலிவேரிய மற்றும் அதை அன்டிய நகர்களான கம்பஹா மற்றும் கட்டுநாயக்கவில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டதோடு பல தமிழ் "சந்தேகநபர்களை" கைது செய்தன. |