WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraqi prime minister pledges new offensives in Basra
and Baghdad
ஈராக்கிய பிரதமர்
பாஸ்ரா மற்றும் பாக்தாத்தில் புதிய தாக்குதல்கள்
நடத்தும் உறுதியுடன் இருக்கின்றார்
By Peter Symonds
4 April 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சென்ற வாரத்தில் பாஸ்ரா மீது அமெரிக்க ஆதரவுடனான தாக்குதல்கள் இழிவுக்குள்ளான
பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையிலும், நேற்று ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிகி "கிரிமினல்கள்" மற்றும்
"சட்டத்திற்குப் புறம்பானோரின்" வசமிருக்கும் நாட்டின் பகுதிகளை "விடுவிக்க" நடவடிக்கைகளைத் தொடர இருப்பதாக
சபதமேற்றுள்ளார். "பாஸ்ரா ஒரு கைதி போல் இருந்தது, இப்போது அது விடுவிக்கப் பெற்றுள்ளது" என்றும், "பிற
நகரங்களிலும் இது போன்ற குண்டர் கும்பலின் கரங்களில் மக்கள் இன்னும் சிக்குண்டிருக்கக் கூடிய பாக்தாத்தின் சில
பகுதிகளிலும் இதே போர் அவசியப்படுகிறது" என்றும் அவர் அபத்தமாகக் கூறினார்.
ஷியா இனத் தலைவர் மொக்தாதா அல்-சதாருக்கு விசுவாசமான மஹ்தி இராணுவத்தால்
ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் பாக்தாத்தின் உழைக்கும் வர்க்க புறநகர்ப் பகுதிகளான சதார் நகரம் மற்றும்
சுலா இவற்றைத் தான் "விடுவிப்பதற்கான" இலக்குகளாக மாலிகி குறித்திருக்கிறார். பரவலான கோபம் மற்றும்
எதிர்ப்பை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பாஸ்ராவில் தனது அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்க
இருப்பதாகவும் 25,000 வேலைகளை உருவாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாலிகியின் கருத்துகளை அமெரிக்க அதிகாரிகளும், அலுவலர்களும் உறுதிப்படுத்தினர்.
வெளிப்படையாகப் பல பலவீனங்கள் கொண்டிருந்தாலும் கூட, தீவிரவாதிகளையும் அரசாங்க விரோத மக்களையும்
அடக்க தனது பாதுகாப்புப் படையை பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்திருப்பது ஒரு நல்ல அறிகுறி என்று அவர்கள்
தெரிவித்தனர். ஆறு நாள் சண்டையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,
ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை அதற்கும் கூடுதலானதே.
அமெரிக்க கூட்டுப் பணியாளர்களின் தலைவர் அட்மிரல் மைக் முலன் புதனன்று அறிவிக்கும்போது,
பாஸ்ராவில் யார் வென்றிருக்கிறார்கள் யார் தோற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய சற்று கால அவகாசம்
தேவைப்படுவதாகக் கூறினார். "ஈராக்கிய பாதுகாப்புப் படைகள் தலைமைப் பொறுப்புகளை உணர்ந்து தங்களது
சொந்த பாதுகாப்புக்காக கூடுதல் கடுமையாக மாறும் நேரத்தை நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
அதனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, இந்த மூலோபாய முயற்சி என்பது மிகவும் நம்பிக்கையளிக்கும்
ஒன்றாகும்" என்று அவர் வலியுறுத்தினார்.
ஈராக்கிற்கான அமெரிக்க தூதரான ரியான் கிராக்கரும் ஊடகங்களிடம் நேற்று அதே
தொனியில் பேசினார். மாலிகி "தீர்மானகரமான" நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது தன்னைக் கவர்ந்திருப்பதாகக்
கூறிய அவர், ஈராக்கிய அரசாங்கம் ஷியா இராணுவக் குழுக்களை எதிர்கொள்ள துணிந்திருப்பதை ஊக்கப்படுத்தினார்.
"இறங்கி வந்து, கூடுதல் படைகள் விஷயத்தில் தாங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதைக் காட்டி,
நெருக்கடியை அதிகரித்து, சூழ்நிலைகளின் ஒரு முழுமையான படத்தை வரைந்து, அதன் பின் அதற்கேற்றவாறு செயல்பாடு
இருக்கப் போகிறது என்று நான் புரிந்து கொண்டிருந்தேன்", "வெளிப்படையாகவே முதல் நாளில் இருந்தே ஒரு பெரிய
சண்டை இருக்கப் போகிறது என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் விளக்கினார்.
இந்த எல்லா கருத்துகளுமே ஒரு வலிமையான சுய-நியாயப்படுத்தல்களைக்
கொண்டிருக்கிறது. தாக்குதலுக்கு தானே பொறுப்பேற்கும் பொருட்டு சென்ற வாரம் பாஸ்ராவுக்கு சென்றிருந்த
மாலிகி தனது நிலைப்பாட்டுக்கு முட்டுக் கொடுக்க முயற்சிக்கிறார். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வான்வெளித்
தாக்குதல்கள் மற்றும் ஆயுத தாக்குதல்களின் ஆதரவுடனான 30,000 ஈராக்கிய துருப்புகள் மற்றும் போலிஸின்
ஈடுபாட்டிற்குப் பிறகும், இந்த நடவடிக்கையானது மஹ்தி இராணுவ வலிமையுள்ள பகுதிகளில் எந்த குறிப்பிடத்தக்க
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த மோதல்கள் சதார் நகரம் போன்ற பாக்தாத்தின் உழைக்கும் வர்க்க சேரிகளுக்கும்
மற்றும் பிற தெற்கு நகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கும் பரவின.
மாலிகி "கிரிமினல்களை" இலக்காகக் கொண்டு தாக்குவதாகக் கூறினார், ஆனால்
மஹ்தி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மட்டுமே தாக்குதலுக்குள்ளாயின. மஹ்தி இராணுவத்திற்குப்
போட்டியாக செயல்படும் மாலிகியுடன் நெருங்கிய வகையில் தொடர்பு கொண்டுள்ள ஈராக்கின் இஸ்லாமிய சுப்ரீம்
கவுன்சில் (ISCI),
மற்றும் அல் ஃபதிலா அல் இஸ்லாமியா கட்சி இவற்றின் ஆதிக்கத்தில் இருக்கும்
பகுதிகள் தொடப்படவில்லை. சதார் நாளுக்கு நாள் அமெரிக்க ஆதரவுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு
வந்து விட்டார் என்றாலும், அமெரிக்க இராணுவத்தின் இருப்பு மற்றும் அதன் அழிவுகரமான சமூக விளைவுகளுக்கு
ஆழ்ந்த எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் ஷியா தொழிலாளர்களின் பல பிரிவுகளிடம் அவர் ஆதரவைப் பெற்றுள்ளார்.
ஆறு நாள் சண்டை முடிந்திருந்த சூழ்நிலையிலும், அரசுப் படையினர்கள் மத்திய பாஸ்ராவுக்குள்ளாகவே
அடைபட வேண்டிய நிலையும் தொடர்ந்த தாக்குதல்களுக்கு உள்ளாகும் சூழ்நிலையும் தான் இருந்தது. மன உறுதி
என்பது பாதாளத்திற்கு சென்று விட்டது. போலிஸ் மற்றும் படையினர்களின் பல குழுக்கள் சண்டையில் பங்கு பெற
மறுத்து வெளிப்படையாக தங்கள் ஆயுதங்களை மஹ்தி இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிலைக்குச் சென்றன. சண்டையின்
போது தீவிரவாதிகள் பக்கம் சாய்ந்து விட்டதாகக் கூறி 407 போலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக
உள்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் கரீம் கலாஃப் இந்த வாரம் ஒப்புக் கொண்டார். லாஸ் ஏஞ்சல்ஸ்
டைம்ஸ் இதழிடம் பேசிய ஒரு மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரி, சதார் நகரம் மற்றும் பாஸ்ராவின் சில பகுதிகள்
என மஹ்தி இராணுவம் வலிமையாக உள்ள பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான போலிசார் வெளியேறிச்
சென்று விட்டதாக மதிப்பிட்டார்.
மஹ்தி இராணுவம் தெருக்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஞாயிறன்று சதார்
ஒரு உத்தரவினைப் பிறப்பித்த நிலையில் தான் சண்டை தணிந்தது. இந்த சண்டை நிறுத்தமானது மூத்த அரசாங்க
அதிகாரிகளுக்கும் நஜாஃப் மற்றும் ஈரானில் இருக்கும் சதாரிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான திரைக்குப் பின்னால்
நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவேயாகும். ஈராக்கிய நாடாளுமன்றவாதிகள் வெள்ளியன்று ஈரானுக்கு பயணம் மேற்கொண்ட
போது ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் காஸிம் சுலேய்மனியைச்
சந்தித்து உதவி கோரியதை அடுத்து ஈரானிய அரசாங்கத்திற்குள் இருக்கும் உறுப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுத்தான்
ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக McClatchy
செய்தித்தாள்களில் வந்துள்ள ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு இராணுவக் குழுக்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்கும்
ஒரு தீவிரவாத அமைப்பாக குத்ஸ் படையை முத்திரை குத்தியிருக்கும் புஷ் நிர்வாகத்தை கடுமையாக வெறுப்பேற்றும்
ஒரு விளைவுக்கு தள்ளுவதற்கு வடிவமைத்ததாகவே முல்லன் மற்றும் கிராக்கர் கூறிய கருத்துகள் இருந்தன. பாஸ்ரா
நடவடிக்கையின் இடையே, இது ஈராக்குக்கு ஒரு "முக்கியமான வரையறை செய்யும் தருணத்தைக் குறிப்பதாக"
அறிவித்தார். கிராக்கரும் ஈராக்கில் உயர்நிலை அமெரிக்க தளபதியாக இருக்கும் ஜெனரல் டேவிட் பெட்ரேஸும்
அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் சாட்சியமளிக்க இருக்கிறார்கள்.
அமெரிக்க சம்பந்தம்
இந்த தாக்குதல் ஈராக்கால் தலைமை தாங்கி நடத்தப்பட்டது, ஒருங்கிணைக்கப்பட்டது
என்று வாஷிங்டன் கூறியது. ஆனால், மொத்தமாகப் பார்த்தால் அமெரிக்கா இதில் ஆழமாக ஈடுபட்டுள்ளது. இந்த
இராணுவ நடவடிக்கையானது, பாக்தாத்துக்கு பயணம் செய்த அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி அமெரிக்க
நிறுவனங்களுக்கு ஈராக்கிய எண்ணெய் வளங்களை கூடுதலாகத் திறந்து விடும் வகையில் இன்னும் பல கூடுதல் நடவடிக்கைகளை
செய்ய வேண்டியுள்ளதாக மாலிகி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த பின், வெகு சீக்கிரம் துவங்கப்பட்டது. பாஸ்ராவின்
கட்டுப்பாடு என்பது ஈராக்கின் தெற்கு எண்ணெய் வயல்களில் உற்பத்தியை விரிவாக்கும் எந்த திட்டங்களுக்கும் மையமான
ஒன்றாகும். எண்ணெய் குழாய் வலைப் பின்னல்கள், பம்பிங் ஸ்டேஷன்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சரக்கு
ஏற்றும் நிலையங்கள் எல்லாம் நகருக்கும் மற்றும் அருகிலுள்ள துறைமுகத்திற்கும் அருகில் தான் செறிவு கொண்டிருக்கின்றன.
நேற்று நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு கட்டுரை, இராணுவத் தாக்குதலில்
எவ்வளவு ஆழமாக அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அமெரிக்க
மற்றும் ஈராக்கிய அதிகாரிகள் ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளனர். இதில் "நகரில் சண்டைச் சாவடிகளை ஸ்தாபிப்பது,
ஈராக்கிய SWAT
குழுக்கள், ஈராக்கிய சிறப்புப் படைகள் மற்றும் உள்துறை அமைச்சக பிரிவுகளையும்,
இதே போல் ஈராக்கிய படைகளையும் நிறுத்துவது" ஆகியவை அடக்கம் என்கிறது அந்த கட்டுரை. தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் மோவாஃபாக் அல்-ருபே, மற்றும் பிற மூத்த ஈராக்கிய அதிகாரிகளை மார்ச் 21
அன்று சந்தித்துப் பேசிய ஜெனரல் பெட்ரேஸ், அடுத்த நாளே மாலிகி உடனும் சந்திப்பு மேற்கொண்டார்.
முறையான தயாரிப்புகள் இன்றி மார்ச் 24 அன்று அவசரமாக மாலிகி களமிறங்கி
விட்டதாகத் தெரிவித்த அந்த கட்டுரை, சிறப்பு நடவடிக்கைகளில் அனுபவம் மிக்கவரான ரியர் அட்மிரல் எட்வர்டு
வின்டர்ஸ் மார்ச் 25 அன்று பாஸ்ராவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஈராக்கில்
இருக்கும் அமெரிக்க நடவடிக்கை தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் லாயிட் ஆஸ்டின்
III பாஸ்ரா
பயணம் மேற்கொண்டார். மார்ச் 28 அன்று, ஆஸ்டினின் மூத்த உதவியாளரான மேஜர் ஜெனரல் ஜோர்ஜ் ஃபிளைன்
அமெரிக்க திட்டம் தீட்டும் குழுவினர் மற்றும் பிற நபர்களுடன் பாஸ்ரா நடவடிக்கைகள் மையத்திற்கு அனுப்பப்பட்டார்.
"ஈராக்கிய பிரிவுகளின் சார்பாக வான்வெளித் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக
வான்வெளி கட்டுப்பாட்டு படையினர்களையும் அமெரிக்கா அனுப்பியது. அத்துடன் ஹெலிகாப்டர்களையும் ஆளில்லாமல்
இயங்கும் விமானங்களையும் பாஸ்ராவுக்கும் அருகிலுள்ள தல்லிலுக்கும் அனுப்பியது. தெற்கு நோக்கி துரிதமாக
அனுப்பப்பட்ட அனைத்து ஈராக்கிய படையினருக்கும் போதுமான இராணுவ ஆலோசகர்கள் இல்லை. எனவே அமெரிக்கா
82வது வான்வழி டிவிசனில் முதலாவது பிரிகேடில் இருந்து படைகளைச் சேர்த்துக் கொண்டது. இது பிளாட்டூன்களாகப்
பிரிக்கப்பட்டு, அவை வான்வெளி கட்டுப்பாட்டாளர்களுடன் ஈராக்கிய படைகளுக்கு உதவும் வண்ணம் பிரிக்கப்பட்டு
ஒதுக்கப்பட்டதாக" அந்தக் கட்டுரை விளக்குகிறது.
அமெரிக்கத் தூதர் கிராக்கர் அரசியல் வழிகாட்டலை வழங்குவதில் சம்பந்தப்பட்டிருந்தார்.
"நாங்கள் அவருக்கு (மாலிகி) முக்கியமான ஆயுதத்தை பயன்படுத்த வலியுறுத்தினோம், பணத்தை, முக்கிய வேலைத்
திட்டங்களை அறிவிக்க, பாஸ்ராவை சுத்தப்படுத்த, இன்னும் நிறைய", என்று கிராக்கர் நியூயோர்க் டைம்ஸிடம்
கூறினார். "தவிர, தான் சொந்தமாக செய்ய விரும்பியதை செய்வதற்கும் வலியுறுத்தினோம்: பாஸ்ராவுக்கான
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு திறம்பட நிதி செலவிடும் வகையில் பழங்குடி இனப் பெருந்தலைகளுக்கு பணமளிப்பது".
இங்கு "விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக"க் குறிப்பிடுவதெல்லாம் அன்பார் மாகாணம் மற்றும் பிற பகுதிகளில் இருக்கும்
முக்கியமான சன்னி பழங்குடி இனத் தலைவர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுவோரை ஆக்கிரமிப்பை எதிர்ப்போருக்கு
எதிரான கூலிப்படையாக மாற்றி அமெரிக்க தொகை பெறும் கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியையே ஆகும்.
பாஸ்ரா நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா வெளிப்படையாகவே தனது
இருப்பு நிலையை சரிபார்க்கத் துவங்கியுள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிகாரிகளின் கூற்று தெளிவுபடுத்துவதைப்
போல, மாலிகி அரசாங்கத்தை கைவிடும் எந்த திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை. குறைபாடுகள் இருந்தாலும்
கூட, பென்டகனும் வெள்ளை மாளிகையும் தங்களது பொம்மைப் படைகள் தங்களது முதல் சண்டையில் இரத்தவேகம்
பெற்றிருப்பதைக் கொண்டாடுகின்றன. ஏற்கனவே சண்டை நிறுத்தமானது உறுதியற்ற நிலையில் தான் இருக்கிறது.
மஹ்தி இராணுவம் வலிமையுடன் இருக்கும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு சதாரிச இராணுவக்
குழுக்களை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் அரசாங்க போலிஸ் மற்றும் துருப்புகள் இந்த சந்தர்ப்பத்தை
தங்களது நிலைகளை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது.
புதனன்று, சதாரிச ஆதிக்கம் மிகுந்த ஹயனியா மாவட்டத்தில் ஈராக்கிய இராணுவம்
தங்களது படை வலிமைக் காட்சியை நடத்தியது. டசின்கணக்கான வாகனங்களின் தொடரணி ஒன்று அப்பகுதியில்
நுழைந்து, சோதனைச் சாவடிகளை நிறுவி, பல மணி நேரங்கள் தேடுதல் வேட்டையை நடத்தி விட்டு கிளம்பிச்
சென்றது. படையினர்கள் "பல சாலையோர வெடிகுண்டுகள் மற்றும் பீரங்கிக் குண்டுகளை எதிர்கொண்டதாக"
கேமராமேன் மாசின் அல்-தயார் என்பவர் தெரிவித்தார். படையினர்கள் இரண்டு போராளிகளை கைது செய்த
கிப்லா பகுதியில் மற்றுமொரு மோதல் நடைபெற்றது. மாக்காள் மாவட்டத்தில் நடந்த இராணுவ சோதனையின்
போதும் சண்டை ஏற்பட்டது. அரசாங்கம் சண்டை நிறுத்தத்தை மீறுவதாக சதாரிச அதிகாரிகள் குற்றம்
சாட்டினார்.
புதனன்று இரவு, விமானத் தாக்குதல் மூலம் பாஸ்ராவில் உள்ள ஒரு வீடு ஒன்று
சிதைக்கப்பட்டது, இந்த வீடு ஈராக்கிய படையினர்களைத் தாக்குவதற்கு பயன்பட்டதாக அமெரிக்க இராணுவம்
கூறியது. இருப்பினும் ஹஜ் ஜுவாத் AP
செய்தி நிறுவனத்திடம் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் மாலைத் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருந்த
போது, அமெரிக்க விமானம் ஒன்று இந்த வீட்டின் மீது குண்டு வீசியது. நாங்கள் உயிருடன் இருப்பவர்களைக்
காப்பாற்றுவதற்காக வேகமாக ஓடிச் சென்று பார்த்தோம். ஆனால் வீண் தான். ஒரு தந்தை, தாய் மற்றும்
ஒரு சிறுவன் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தார்கள், மற்றும் மூன்று பேர் சிதைவுகளுக்குள் புதைந்து
விட்டிருந்தார்கள். இரண்டு பேரை நாங்கள் வெளியே எடுத்தோம். ஒருவர் இன்னும் சிதைவுகளுக்குள் தான்
இருக்கிறார்".
புதனன்று செய்தி மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க இராணுவ செய்தித்
தொடர்பாளர் மேஜர் ஜெனரல் கெவின் பெர்க்னர், கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இரண்டு ஈராக்கிய இராணுவ
பட்டாலியன்களும் ஈராக்கிய கப்பற்படைகளின் ஒரு பிரிவும் பாஸ்ரா துறைமுகங்களுக்கு சென்றிருப்பதாகத் தெரிவித்தார்.
பாக்தாத்தில் சதார் நகரம் மற்றும் சுலா என சதாரிய வலிமையுள்ள பகுதிகளைச் சுற்றி வளைப்பதை அமெரிக்க
மற்றும் ஈராக்கிய துருப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. தலைநகரின் பிற இடங்களில் தடை அகற்றப்பட்ட
நிலையிலும் இந்த இடங்களில் மட்டும் வாகன நகர்வுக்கான தடை தொடர்ந்து வருகிறது.
தனது ஆதரவாளர்களுக்கு எதிராக இராணுவமும் போலிசும் தொடர்ந்து சட்டவிரோத
கைது நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் சதார்
புகார் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவர் மாலிகி அரசாங்கத்தின் மீது எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
மாறாக, பாதுகாப்பு படைகளில் இருக்கும் "ஊழல் உறுப்புகளை" நீக்குவதற்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஏப்ரல் 9 அன்று, அமெரிக்க படைகளிடம் பாக்தாத் வீழ்ந்த ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு
எதிராக தெற்கு நகரமான நஜாபில் ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் பேரணி நடத்தவும் அவர் அழைப்பு
விடுத்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், சதாருடன் சண்டை நிறுத்தத்திற்கு பேசுவதில் ஈரானின்
உதவியை அமெரிக்கா துரிதமாக நிராகரித்து விட்டது. "சண்டை நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈரான்
என்ன செய்ய முடியும் அல்லது முடியாது என்பது குறித்து நாங்கள் அறிய வேண்டியிருக்கவில்லை....இதுவரை ஈரான்
செய்திருப்பதெல்லாம் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியும் பயிற்சியும் அளித்து ஈராக்கில் ஒரு எதிர்மறையான, உபத்திரவமாற்றும்
பங்களிப்பினை ஆற்றியிருப்பது தான்....இந்த நடத்தையில் நாங்கள் மாற்றத்தைக் காண வேண்டும்" என்று அமெரிக்க
தூதரக செய்தித் தொடர்பாளர் மிரெம்பெ நன்டோங்கோ அறிவித்தார்.
வலதுசாரி ஆய்வாளரான கிம்பர்லி ககன்
Wall Street Journal
இல் நேற்று எழுதியிருந்த கருத்தில் இன்னும் கடுமையாகக் கூறியிருந்தார். பாஸ்ராவில்
நடக்கும் சண்டையின் பின்புலத்தில் ஈரான் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர்: "எல்லாவற்றிற்கும் மேல், ஈராக்கில்
தனக்கு எதிராக முழுமையான ஒரு மறைமுக யுத்தத்தில் ஈரான் இறங்கியுள்ளது என்பதை அமெரிக்கா உணர்ந்து
கொள்ள வேண்டும். ஈரானிய ஏஜென்டுகளும் அவர்களின் இராணுவப் படைகளும் அமெரிக்க படைகள் மற்றும் ஈராக்கிய
அரசாங்கம் மீது தொடர்ந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றன... அமெரிக்கா ஈராக்கில் அல்கெய்தாவைத்
தோற்கடிக்க வேண்டும் என்பதோடு ஈரானின் நேரடியான இராணுவத் தலையீட்டில் இருந்தும் ஈராக்கைப்
பாதுகாக்க வேண்டும்" என்று முடித்தார்.
இந்த திரிக்கப்பட்ட காரணமானது ஈராக்கில் அமெரிக்காவின் கிரிமினல் ஆக்கிரமிப்பை
நியாயப்படுத்துவதோடு நில்லாமல், அருகிலிருக்கும் ஈரான் மீது மோதல் போக்குக்கான ஒரு சாக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. |