World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கிTurkey's chief prosecutor seeks to ban the ruling AKP துருக்கியின் தலைமை பிராசிக்யூட்டர் ஆளும் AKP ஐ தடை செய்யக் கோருகிறார் By Sinan Ikinci மார்ச் 14 அன்று, துருக்கியின் தலைமை பிராசிக்யூட்டர் அப்துல் ரஹ்மான் யால்சின்கயா ஆளும் AKP க்கு (நீதி மற்றும் வளர்ச்சி கட்சி) எதிராக, "மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரான நடவடிக்கைகளின் மையப் புள்ளியாக இருப்பதாகவும்", "நாட்டை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்ற முயற்சிப்பதாகவும்" குற்றம் சாட்டி ஒரு வழக்கினைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கட்சியை மூட வேண்டும் என்று கோரியுள்ள அவர், பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் ஜனாதிபதி அப்துல்லா குல் உள்ளிட்ட அவரது 70 சக உயர் பதவியாளர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்கு அரசியலில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாக, குர்திஷ் தேசியவாத DTP கட்சியை மூடக் கோரி அக்கட்சி அரசியல்சட்ட நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டது. DTP யானது பாதுகாப்பு படைகள் மற்றும் மக்கள் பாசிச இயக்கம் என இரு தரப்பில் இருந்துமே தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஒரு வருடத்திற்கும் குறைவானதொரு காலத்திற்கு முன்னதாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று, கட்சியை மூடச் செய்யும் இலக்கிலான இத்தகையதொரு வழக்கு வருவதற்கான உறுதியான வாய்ப்பினை சுட்டிக் காட்டியது நினைவிருக்கலாம். இந்த முறை, சமீபத்தில் துருக்கிய வாக்காளர்களில் 47 சதவீதத்தினரின் வாக்குகளைப் பெற்ற ஒரு அரசியல் கட்சி மூடப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. "குடியரசின் மதிப்புகளுக்கு" குறிப்பாக, மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில் தங்களது கொள்கைகளை அமைத்துக் கொண்டிருந்த துருக்கியின் முந்தைய இஸ்லாமியக் கட்சிகளின் வாரிசாக AKP அமைந்திருப்பதாக பிராசிக்யூட்டர் அறிவித்திருக்கிறார். "AKP முந்தைய இஸ்லாமிய கட்சிகளின் மூடலில் பாடம் கற்றுக் கொண்ட ஒரு குழுவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இது துருக்கியில் ஷரியத் சட்டத்தை நிறுவுவதான தனது இலக்கை அடைவதற்கான பகடைக்காயாக ஜனநாயகத்தைப் பயன்படுத்துகிறது" என்று அந்த குற்றச்சாட்டு தொடர்கிறது. இந்த 162 பக்க குற்றப்பத்திரிகை AKP இன் இஸ்லாமிய நோக்கங்களுக்கு சான்றாக பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக் காட்டுகிறது. பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பர்தாக்களை பெண் மாணவிகள் அணிந்திருப்பதன் மீதான தடையை தளர்த்தும் நோக்கத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களை ஆதரிப்பதற்காக துருக்கிய பல்கலைக்கழகங்களின் மேற்பார்வை அமைப்பான உயர் கல்வி வாரியத்தின் (YOK) புதிய தலைவரையும் இது விமர்சித்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் முழு உரையையும் பதிவிறக்குவது (download) என்பது சாத்தியமே, அது துருக்கிய மொழியில்தான் கிடைக்கும் என்றாலும் கூட, இது முழுக்கவும் திட்டமிட்ட திரிந்த புரிதல்கள் மற்றும் சிதைவுகள் நிரம்பியதாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முதலில், அன்றாட தினசரி வாசிக்கும் ஒருவர் அறிந்திராத எந்த ஒரு ஆதாரத்தையும் இந்த குற்றப்பத்திரிகை கொண்டிருக்கவில்லை. இன்னும் முக்கியமாக, பல இடங்களில், பிராசிக்யூட்டர் இது போன்ற "ஆதாரங்களை" பொருள் மாற்றிப் புரிந்து தனது சொந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இந்த குற்றப்பத்திரிகையின் பலவீனமும் ஆழமின்மையும் பிராசிக்யூட்டர் இதனை அவசரத்தில் தொகுத்துள்ளார் என்பதை தெளிவாகக் காட்டுவனவாக உள்ளன. இத்தகையதொரு நடவடிக்கை பிராசிக்யூட்டரின் தனிப்பட்ட முடிவின் விளைவாக இருக்க முடியாது. சந்தேகத்திற்கிடமில்லாமல் இது இராணுவத்தால் முடிவு செய்யப்பட்ட ஒன்று, அரசியல்சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிசெய்வதற்கு திரைக்குப் பின்னால் அவசியப்படும் தேவையான ஏற்பாடுகளையும் இராணுவம் செய்துள்ளது. இது ஒரு குண்டு புல்லட், அவர்களுக்கு அதில் இலக்கைத் தவற விட்டால் போயிற்று. இல்லையென்றால், யால்சின்காயா தனது சொந்த கெளரவத்தையும் தான் பொறுப்பு வகிக்கும் அமைப்பின் கெளரவத்தையும் அபாயத்தில் வைத்து இந்த முயற்சியில் இறங்க முடியுமா? இந்த தருணத்தில், AKP க்கு பிந்தைய சூழல் குறித்து நிறைய செய்திகள் உலா வருகின்றன. ஒரு இடைக்கால தொழில்நுட்ப (technocratic) அமைச்சரவை அல்லது ஒரு முழு அளவிலான இராணுவ கையகத்திற்கான சாத்தியக்கூறு தவிர, ரஷ்யாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் ஒரு இராணுவ சதிப் புரட்சி குறித்தும் சில பார்வையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த சூழலில் அநேகமானவை முழு ஊகத்தின் அடிப்படையில் அமைந்தவையாகவோ அல்லது சில குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது வட்டாரங்களின் கற்பனைக் திறனைப் பிரதிபலிப்பதாகவும் தான் இருக்கின்றன. பிற வழக்குகளில், அவை தவறான கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்தோடு எழுப்பப்பட்டவையாக இருக்கலாம். ஆனால், AKP க்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கினால் உருவாகியிருக்கும் நச்சுமிகுந்த அரசியல் சூழலானது இத்தகைய பயங்கர சூழல்களுக்கான வளமான வளர்ப்பிடத்தை உருவாக்குகிறது. இப்பொழுது ஏன்? துருக்கிய இராணுவத்தின் தலைமையில் இருக்கும் "மதச்சார்பற்ற" குழாம் என்று கருதப்படும் அணிக்கு ஜூலை 2007 இல் நடந்த தேசிய தேர்தல் முடிவுகள் பலத்த அடியாக அமைந்தன. தனது பெரும் தேர்தல் வெற்றியை அடித்தளமாகக் கொண்டு, AKP தனது எதிரிகளை உறுதி குலையச் செய்ததோடு வாய் மூடவும் செய்தது. அத்துடன், தற்காலிகமாகத் தான் என்றாலும் கூட, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் இராணுவ சக்தியின் தலையீட்டினை அது திறம்படக் குறைத்து விட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளூர் தேர்தலிலும் தனது வாக்குகளை AKP அதிகரிக்கும் என்று சில நாட்களுக்கு முன்னதாக எர்டோகன் தன்னுடன் இருப்பவர்களிடம் கூறி வந்தார். இது இராணுவத்திற்கும் மற்றும் பொதுவாழ்வில் இருக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் "நாங்கள் தேர்தலில் இதற்கு முன்னாலும் உங்களைத் தோற்கடித்திருக்கிறோம்; இந்தமுறையும் அதனையே நாங்கள் மீண்டும் செய்வோம்" என்ற நேரடியான செய்தியை கூறுவதாக இருந்தது. AKP இன் தேர்தல் வெற்றி என்பது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு ஒரு தீவிரமான பின்னடைவாக அமைந்தது. அத்துடன் ஜெனரல்கள் எல்லாம் பல மாதங்களுக்கும் அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று. இரண்டு மாதங்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பர்தாக்களை பெண் மாணவிகள் அணிவதின் மீதான தடையைத் தளர்த்துவதற்கு அரசியல்சட்டம் திருத்தப்படுவதன் மீது கருத்துக் கேட்கப்பட்டதற்கு பொது பணியாளர்களின் தலைவர் யாசர் பயுகனித் கூறினார், "நாங்கள் இந்த விவகாரத்தில் என்ன நினைக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை திரும்பத் திரும்பக் கூற அவசியம் இல்லை".இந்த இணக்கத்தினை இராணுவத்திற்கும் AKP க்கும் இடையில் தொடரும் சமரசத்தின் ஒரு அடையாளமாக சிலர் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் AKP -ஐ தடை செய்யும் முயற்சியும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதொரு அரசை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தூக்கியெறிய மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் அதற்கு நேரெதிரான போக்கையே காட்டுகின்றன. இராணுவத்திற்கு மற்றுமொரு அடியாக சொல்லப் போனால் இன்னும் கூடுதலான நேரடி அடியாகக் கருதப்படுவது எர்ஜெனிகான் கும்பல் என்று அழைக்கப்படும் அமைப்பிற்கு எதிரான நடப்பு மற்றும் சற்று வெற்றிகரமான காவல்துறை நடவடிக்கையாகும். ஒரு கிளாடியோ அல்லது எதிர்புரட்சி கெரில்லா வகை கிரிமினல் அமைப்பான இதில் ஓய்வுபெற்ற ஜெனரல்கள், உயர் அதிகாரத்துவத்தினர், மாஃபியா உறுப்பினர்கள், கிமாலிச-மாவோயிச தொழிலாளர்கள் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட உறுப்பினர்களாக இருக்கிறார்கள். "வேரூன்றிய அரசாங்கம்" என்று பிரபலமாக அழைக்கப்படும் இதன் நோக்கம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாகும். எர்ஜெனிகான் கும்பலுடன் இராணுவத்திற்கு இருக்கும் தொடர்பினை விமர்சிப்பவர்கள் சமயங்களில் மிகவும் வெளிப்படையாகவே பேசத் துவங்கியிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் பேசிய பயுகனித், "இராணுவத்தினரில் சிலர் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுகிறார்கள்; துருக்கிய இராணுவத்தை ஒரு கிரிமினல் அமைப்பு போல் பிரதிநிதித்துவப்படுத்த எவரும் முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார். எர்ஜெனிகான் கும்பல் மீதான நடவடிக்கைகள் AKP இப்போது காவல் அமைப்பு மீதான முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்குவதாக இருந்தது. சமீபத்திய படையெடுப்பு மற்றும் வடக்கு ஈராக்கில் உள்ள PKK இலக்குகளுக்கு எதிரான நடப்பு எல்லை தாண்டிய வான்வெளி நடவடிக்கைகள் இவையெல்லாம் இராணுவம் தனது பிம்பத்தை கொஞ்சம் மீட்டெடுப்பதற்கு உதவியுள்ளன. இருப்பினும், நாடாளுமன்றத்தால் குல் (Gul) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் இருந்ததைப் போல, தலைமை ஜெனரல்கள் இன்னமும் AKP மீது நேரடியாகத் தாக்கும் நிலையை எட்ட முடியவில்லை. துருக்கியில், ஜனாதிபதிக்கு சில முக்கிய அதிகாரங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்த ஆண்டு சுமார் 22 பல்கலைக்கழக தலைவர்கள் ஓய்வு பெறும் நிலையில், குல் அவர்களது இடத்தில் இஸ்லாமியவாதிகளை நியமிப்பார். அவர்கள் குல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரான உயர் கல்வி வாரியத் தலைவர் யூசுப் ஷியா ஓஸ்கானின் கீழ் பணியாற்றுவார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில், அரசியல்சட்ட நீதிமன்றத்தின் மூன்று கீமலிச (Kemalist) உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள், புதியவர்களை ஜனாதிபதி தான் நியமிப்பார். நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள், இவர்களில் 8 பேர் தற்போது நம்பிக்கைக்குரிய கீமலிசர்கள். DTP மற்றும் AKP -ஐ மூடுவதற்குக் கொண்டு வரப்பட்டுள்ள வழக்குகள் முழுக்கவும் ஜனநாயக விரோதமானவை, பிற்போக்கானவை. சென்ற ஏப்ரலில் குல் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக ஒரு மெல்லிய கைப்பற்றும் அச்சுறுத்தலை தனது வலைத் தளத்தில் இராணுவம் வெளியிட்டதும், அரசியல்சட்ட நீதிமன்றம் தேர்தல் நடைமுறையை நிறுத்தியது. ஆரம்ப நாடாளுமன்ற தேர்தலில் AKP இன் பெரும் வெற்றிக்குப் பிறகு தான் குல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது. இப்போது, அரசியல்சட்ட நீதிமன்றத்தின் மூலம் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தூக்கியெறிவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளம் இந்த பூர்சுவா தரப்புகள் எதற்கும் தனது எந்தவொரு அரசியல் ஆதரவையும் வழங்காமல், இந்த இரண்டு வழக்குகளையும் உறுதியாக எதிர்க்கிறது.துருக்கி மறுபடியும் ஒரு ஆட்சி நெருக்கடியின் பிடியில் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியின் வேரானது துருக்கி பூர்சுவாக்களின் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான ஆழ்ந்த வரலாற்று ரீதியிலான பிளவில் தான் காணப்பட முடியும். இஸ்லாமிய இயக்கமானது தனது வலிமையை 1990களின் ஆரம்பத்தில் துரிதமாக அதிகரித்தது. 1994 உள்ளூர் தேர்தல்களில் அநேக பெரிய நகர சபைகளை கைப்பற்றியதோடு, 1996 இல் ஒரு கூட்டணி அரசாங்கத்தின் மூலமாக அதிகாரத்திற்கும் வந்தது. பூர்சுவாசியின் சில பிரிவை எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த இந்த இயக்கமானது, மாகாணப் பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்ததுடன், இஸ்தான்புல், அங்காரா, இஸ்மீர், கொசேலி மற்றும் ஆதனா போன்ற தொழில் மற்றும் நிதி மையங்களில் இருக்கும் பெரும் ஏகபோகக் குழுக்களுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றது. "மதச்சார்பற்ற" மற்றும் "இஸ்லாமிய" முகாம்கள் என்றழைக்கப்படும் இரண்டு பெரும் அளவிலான பிரிவுகளுக்கு இடையிலான சமூக-கலாச்சார சமூகப் பிளவுடன் இணைந்து இந்த பிரிவானது ஆளும் மேல்தட்டின் அடுக்குகளின் ஆழமான அரசியல் பிளவை வெளிப்படுத்துகிறது. துருக்கிய பூர்சுவாசிகளுக்குள் பொதுவான கூரிய மாற்றங்களுடன், இஸ்லாமிய அனுதாபங்களுடனான பிரிவுகளும் ஆழமாக மாற்றம் கண்டுள்ளன. துருக்கிய பூர்சுவாக்களின் தொழில்துறைப் பிரிவானது 1960கள் மற்றும் 1970களில் துவங்கி 1980களில் முதிர்ச்சியுற்ற ஒரு செயல்முறையின் வழியே தன்னை ஒரு நிதி மூலதனமாக உருமாற்றிக் கொண்டது. தாராளமயமாக்கல், சந்தை-ஆதரவு கொள்கைகள் மற்றும் உற்பத்தியின் பூகோளமயமாக்கல் ஆகியவற்றால் உருவான சூழ்நிலைகளின் கீழ், இஸ்லாமிய மூலதனத்தின் ஒரு பிரிவும் கூட நிதி மூலதனத்தின் அதே அந்தஸ்துக்கு வளர்ந்திருக்கிறது. இஸ்லாமிய வங்கியை சட்டப்பூர்வமாக்கி 1983 இல் துர்குட் ஓஸல் எடுத்த நடவடிக்கை இந்த செயல்முறையில் ஒரு முக்கிய பங்கினை வகித்தது. கடுமையான பிளவுகளையும் மற்றும் "மதச்சார்பற்ற" கட்சிகளின் பக்கத்திலான நம்பகத்தன்மை மற்றும் வலிமை இழப்புகளையும் - ஒரு சமயத்தில் வலிமையுடன் இருந்த "மத்திய-வலது" கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் தற்போது எந்த பிரதிநிதித்துவமும் இல்லை" - கருத்தில் கொண்டு பார்த்தால், நிதி மூலதனத்தின் மேற்கத்தியப் பிரிவின் சார்பில் ஒரு சக்தி மட்டுமே செயல்பட முடிந்தது. அதுதான் இராணுவம். மற்றும் மேல்கூறிய முன்னேற்றங்களின் விளைவாக, இராணுவம் AKP க்கு எதிரான கடைசி ஆயுதமாக நீதித்துறையைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அரசியல்சட்ட நீதிமன்றம் வழியே அகற்றுவது என்பது உழைக்கும் வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான ஒரு பெரும் தாக்குதலாகும். ஒரு இடைக்கால அரசோ அல்லது இராணுவத்தால் ஆதரிக்கப்படும் வேறொரு அரசோ சாத்தியமானால், அது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துவதோடு மக்களின் கோரிக்கைகளை அடக்க கூடுதலான அடக்குமுறை நடவடிக்கைகளையும் கையாளும். அரசு பிராஸிக்யூட்டர் மற்றும் அரசியல்சட்ட நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்பதால், AKP அல்லது எர்டோகன் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வதாகவோ அவற்றுக்கு ஆதரவளிப்பதாகவோ அர்த்தமில்லை. அவர்கள் அதே விலைபோகும் ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பிரிவுதான். கடுமையான மோதல்களும் மாறுபாடுகளும் இருந்தாலும் கூட இராணுவத்துடன் கருத்து உடன்பாட்டை மறுபடியும் மறுபடியும் அவர்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள். தனது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க, துருக்கிய உழைக்கும் வர்க்கத்திற்குத் தேவைப்படுவதெல்லாம் சர்வதேச சோசலிச முன்நோக்கிற்காகப் போராடும் ஒரு சொந்த சுயாதீனமான கட்சியாகும்.
|