World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள சமத்துவமின்மை

Amid mounting food crisis, governments fear revolution of the hungry

உணவு நெருக்கடி அதிகரிக்கும் சூழலில், பசித்தவர்களின் புரட்சி பற்றி அரசாங்கங்கள் அஞ்சுகின்றன

By Bill Van Auken
15 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

1930களில் நேர்ந்த பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகளாவிய நிதி நெருக்கடி சூழல் தோன்றியிருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏழு நாடுகள் குழு இவற்றின் கூட்டம் வாஷிங்டனில் சென்ற வாரம் கூட்டப்பட்டிருந்தது. வோல் ஸ்ட்ரீட்டின் குழப்பங்களும் ஆழமாகும் கடன் நெருக்கடியும் விவாதங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன, உலகளாவிய நிதி அமைப்புகளின் தலைவர்கள் வளரும் உலகளாவிய உணவு நெருக்கடி நிலை, பரவலாகும் பசியின் அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை மற்றும் ஏற்கனவே தலையெடுக்க தொடங்கியிருக்கும் அரசியல் ஸ்திரமின்மை நிலை இவற்றைக் குறித்து கவலை கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஜி-7 இல் இருக்கும் ஏழு பெரிய முதலாளித்துவ சக்திகளும் -அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா- "உயர்ந்திருக்கும் எண்ணெய் மற்றும் நுகர்பொருள் விலைகளின்" அபாயம் குறித்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் இலேசாக குறிப்பிட்டதை தவிர உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து ஏறக்குறைய எந்தவொரு கருத்தினையும் குறிப்பிடவில்லை. மாறாக, முதலீட்டாளர்கள் நம்பிக்கையை முட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வாக்குறுதி அளிக்கும் வண்ணம் நிதிச் சந்தைகளின் நிலைத்தன்மை மீது தான் அவர்கள் கவனம் குவித்திருந்தனர்.

சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் தலையெடுக்கும் உலகளாவிய துயரநிலையை பகுதியாகவாவது ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன, ஏனென்றால் இந்த அமைப்புகள் எல்லாம் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் கருவிகளாக செயல்பட்டாலும் அனைத்து நாடுகளின் தேவைகளுக்கும் அவை செயல்படுவது போல் தான் காட்டியாக வேண்டும். பூகோளம் எங்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பசியின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் நிலையை மறந்து விட்டு, முக்கிய நிதி அமைப்புகளின் தலையெழுத்தை மட்டும் பிரத்யேக கவனம் செலுத்துவதற்கு கூடினால் அது தங்களை மிகவும் அவமானகரமாக வெளிக்காட்டுவதாக இருக்கும்.

இருப்பினும், மிகவும் தீர்மானமான ஒரு விஷயம் என்னவென்றால், மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள நாடுகள் மற்றும் உலகின் ஏழை மக்களின் பிரிவுகள் உலகெங்கிலும் பெரும் பகுதிகளில் அரசாங்கங்களை தூக்கியெறியும் அளவுக்கு பசியின் புரட்சியானது கட்டவிழக் கூடும் என்னும் அச்சுறுத்தல் உணரப்பட்டிருப்பது தான்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, ஹைதியில் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் அலையெனப் பரவியிருக்கும் ஏறிய உணவு விலைகள் மற்றும் பசிக்கு எதிரான பல நாள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளின் ஒரு விளைவாக அரசாங்கம் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆக்கிரமிப்பு துருப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமுற்றனர், மற்றும் மக்கள் கூட்டத்தினர் ஜனாதிபதி அரண்மனைக்குள் புகவும் முயற்சித்தனர்.

ஹைதியில் உணவுப் பொருட்களின் விலைகள் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள்ளாக சராசரியாக 40 சதவீதம் வரை ஏறி விட்டது, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை இருமடங்காகி விட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் குறித்த இதே கதை ஒவ்வொரு நாடாக, ஆபிரிக்கா முதல் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா வரை அடுத்தடுத்து நடந்தது.

* பங்களாதேஷில் சனியன்று, ஏறிக் கொண்டே செல்லும் விலைவாசியை கண்டித்தும் சம்பள உயர்வு கோரியும் சுமார் 20,000 துணி ஆலைத்தொழிலாளர்கள் வீதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் அரிசியின் விலை இரண்டு மடங்காக ஆகி விட்டது, இதனால் மாதத்திற்கு வெறும் 25 அமெரிக்க டாலர் அளவுக்கே சம்பளம் பெறும் தொழிலாளர்கள், பசியின் பிடியில் சிக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில், கும்பலைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

* எகிப்தில், உணவுப் பொருள் விலைகள் தொடர்பாக தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் கெய்ரோவின் வடக்கிலிருக்கும் டெக்ஸ்டைல் மையமான மஹல்லா அல்-கோப்ராவை, சென்ற வாரத்தின் இரண்டு நாள்கள் உலுக்கின, பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், தொழிலாளர்களை வேலை செய்ய நிர்ப்பந்திக்க போலிசார் சீருடையின்றி தொழிற்சாலைகளுக்குள் அனுப்பப்பட்டார்கள். கடந்த வருடத்தில் எகிப்தில் உணவுப் பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

* மேற்கு ஆபிரிக்க நகரமான பர்கினோ ஃபஸோவில் அதிகரித்துள்ள விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்களும் கடைக்காரர்களும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை சென்ற வாரம் மேற்கொண்டிருந்தனர். வேலைநிறுத்தம் செய்தவர்கள் அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை "குறிப்பிடத்தக்க மற்றும் பயனளிக்கத்தக்க" வகையில் குறைக்க வலியுறுத்தினர்.

* கம்போடியாவின் ஃப்னோம் பெனில் ஏப்ரல் 6 அன்று நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உணவு விலை ஏற்றத்தினை கண்டித்து நாடாளுமன்றத்தினை நோக்கி பேரணி நடத்தினர். சராசரி வருமானம் ஒரு நாளைக்கு 50 சென்டுகள் என்றிருக்க கூடிய ஒரு நாட்டில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 1 டாலர் என்கிற அளவுக்கு உயர்ந்து விட்டது. தார்க்கம்புகளுடன் வந்த போலீசார் போராட்டத்தை அடக்கினர்.

* இந்த மாத தொடக்கத்தில், ஐவரி கோஸ்டில் நூற்றுக்கணக்கானோர் ஜனாதிபதி லோரன்ட் க்பாகோவின் இல்லத்தை நோக்கி "நாங்கள் பசியுடன் இருக்கிறோம்", "எங்களுக்கு வாழ்க்கை மிகவும் செலவு மிகுந்ததாக ஆகி விட்டது, நீங்கள் எங்களை கொல்லப் போகிறீர்கள்" என்று கோஷமிட்டவாறே பேரணி நடத்தினர். ஒரு வாரத்திலிருந்து இன்னொரு வாரத்திற்குள்ளாக உணவுப் பொருட்கள் விலை 30 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை அதிகரிக்கும் ஒரு நிலையை இந்த நாடு கண்டிருக்கிறது. கண்ணீர்ப் புகை மற்றும் லத்திகள் மூலம் போலிசார் இந்த போராட்டத்தை அடக்கினர், பலர் இதில் காயமுற்றனர்.

இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் மோதல்கள் பொலிவியா, பெரு, மெக்ஸிகோ, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஏமன், எத்தியோப்பியா, மற்றும் துணை சகாரா ஆபிரிக்காவின் அநேக பகுதிகளில் நடைபெற்றன.

அச்சுறுத்தும் ஒரு துரித கதியில், புவியெங்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை பெறும் சக்தியின்மையால் எதிர்கொள்ளப்பட்டுள்ளனர். உலகளாவிய முதலாளித்துவ சந்தையானது வர்க்க போராட்டத்தின் உலகளாவிய வெடிப்பினைத் தூண்டி விடும் வகையில் ஒவ்வொரு கண்டத்திலும் சகிக்க முடியாத சூழல்களை கட்டளையிடுகிறது.

இவ்வாறு போராட்டம் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடலாம் என்கிற கவலை தான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்கள், நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்களுடன் வாஷிங்டனில் கூடி வெளியிட்ட கவலை அறிக்கைகளில் வெளிப்படுகிறது.

"உணவுப் பொருட்கள் நிலை இன்றிருக்கும் நிலையில் செல்லுமானால், பின் அதன் விளைவுகள் ஆபிரிக்கா உள்ளிட்ட, ஆபிரிக்கா மட்டுமல்ல, ஏராளமான நாடுகளில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் வாடுவார்கள். குழந்தைகள் போதிய சத்துணவின்றி பாதிப்புற்று, தங்கள் வாழ்நாள் முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரும்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ரவுஸ்-கான், ஏப்ரல் 12 அன்று வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"அரசாங்கங்கள் தாங்கள் இதுவரை செய்து வந்ததெல்லாம் மொத்தமாக சிதைக்கப்படுவதையும், மக்களை நோக்கிய அவர்களது நம்பகத்தன்மை சிதைவுறுவதையும் காண நேரிடும்" என்று அவர் எச்சரித்தார். ஸ்ட்ரவுஸ்-கான் இன்னமும் கூறினார்: "எனவே இது ஒரு மனிதாபிமானம் குறித்த கேள்வி மட்டுமல்ல. இது ஒரு பொருளாதாரக் கேள்வி மட்டுமல்ல. இது ஒரு ஜனநாயகக் கேள்வியும் கூட. இத்தகைய கேள்விகள் சிலசமயமங்களில் போரில் கொண்டு போய் விட்டு விடுகின்றன".

நிதி அமைச்சர்களின் கூட்டத்தின் ஆரம்ப உரையில் பேசிய உலக வங்கி தலைவர் ரொபேர்ட் ஸோலிக், "இரண்டு மாதங்களுக்குள் அரிசி விலைகள் வரலாறு காணாத நிலைக்கு உலகளாவிய அளவில் 75 சதவீதமும் இன்னும் சில சந்தைகளில் அதற்கும் அதிகமாகவும் உயர்வு கண்டிருக்கிறது, இன்னும் உயரும் நிலையில் தான் இருக்கிறது" என்றார்.

"பங்களாதேஷில் 2 கிலோ அரிசிப் பை", அத்தகையதொரு பையை கையில் வைத்துக் கொண்டு அவர் கூறினார், "இப்போது ஒரு ஏழை குடும்பத்தின் வருமானத்தில் பாதியை ஆக்கிரமித்து விடுகிறது".

கோதுமை விலைகள், ரொட்டித் துண்டு விலையை விட இரு மடங்காக, சுமார் 120 சதவீதம் அதிகரித்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

"உணவுப் பொருள் விலைகள் இன்றைய நிலையில் தொடருமானால், ஏராளமான நாடுகளில் மக்கள் மீதான அதன் விளைவுகள்..... கடுமையாக இருக்கும்" என்று ஸோலிக் தெரிவித்தார்.

"இந்த வளரும் நெருக்கடியின் பெரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான விளைவுகளை தவிர்ப்பதற்கு சர்வதேச சமுதாயம் அவசரமான மற்றும் ஒருமித்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்" என்று வாஷிங்டனில் வார இறுதிக் கூட்டத்தை அடுத்த ஐநா கூட்டத்தில் பேசிய ஐநா செயலர் பான் கி-மூன் சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

உணவுக்கான உரிமை பிரிவின் ஐநா சபை சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ழான் ஸீக்லர், தொடரும் நெருக்கடி குறித்த மிக விரக்தியான கணிப்பினை வெளியிட்டார். "மக்கள் தொகையில் அநேக பலவீனமான பிரிவுகளின் நம்பிக்கையின்மையுடன் நீண்ட கால கலவரங்கள், மோதல்கள் மற்றும் கட்டுப்படுத்தமுடியாத பிராந்திய நிலையற்ற தன்மைகளின் அலைகள் இவற்றை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்", Liberation Monday என்ற ஃபிரெஞ்சு தினசரியிடம் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு முன்னரே, ஒவ்வொரு 5 விநாடிக்கு ஒரு முறையும் பத்து வயதுக்கும் குறைவான ஒரு குழந்தை பசியால் உயிரிழந்து வந்தது, 854 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் வயிறு நிரம்பாமல் வாழ்ந்து வந்தார்கள். இப்போது எழுந்திருப்பது "ஒரு உடனடியான படுகொலை நிகழ்வு" என்று ஸிக்லர் எச்சரித்தார்.

நெருக்கடி கடுமையானதாக இருக்கிறது என்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த நிதி அமைச்சர்கள் உடன்பாடு கொண்டிருக்கிறார்கள் என்றாலும், ஒரு மனித குலப் பெருந்துயரத்தை தடுக்க எடுக்க வேண்டிய முயற்சி குறித்து முக்கிய முதலாளித்துவ சக்திகள் எந்தவித திட்டமும் கொண்டிருப்பதாக தெரியவில்லை.

விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தினை சரிக்கட்ட உலக வங்கி விடுத்த கோரிக்கையை அடுத்து 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை உடனடி நிவாரண நிதியாக வெளியிட இருப்பதாக திங்களன்று வெள்ளை மாளிகை அறிவித்தது. ஈராக் ஆக்கிரமிப்பு போருக்காக அமெரிக்கா செலவு செய்யும் சுமார் அரை நாள் செலவு தான் இந்தத் தொகை. மலையென வளர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய துயர நிலையில் ஒரு வாளியில் ஒரு துளித் தண்ணீர் தான் இந்தத் தொகை.

இறுதியில், இந்த நெருக்கடியே முதலாளித்துவ சந்தையின் ஒரு தயாரிப்பு பொருள் தான். உணவளிக்கும் தேவையுடன் நிறைய பேர் வந்து விட்டார்கள் என்பதோ அல்லது மனித தேவைகளுக்கு வழங்கும் அளவுக்கு பத்தாமல் குறைவான உணவே இருக்கிறது என்பதோ இதன் பொருளல்ல. உணவு இருக்கிறது, ஆனால் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடுகளில், வளர்ந்து கொண்டே செல்லும் மனித சமுதாயத்தின் பெரும் பிரிவினருக்கு எட்டாத ஒரு நிலையிலுள்ள விலைக்கு சந்தை அதன் விலைகளை தள்ளியிருக்கிறது, அதே சமயத்தில் மிகவும் முன்னேறிய முதலாளித்துவ உலகிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை திறம்படக் குறைத்து விட்டது.

இந்த நடைமுறையானது சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஏராளமானவற்றால் உந்தப்படுகிறது, ஆஸ்திரேலிய பஞ்சம் கோதுமை உற்பத்தி மீதும் பங்களாதேஷ் வெள்ளம் அரிசி உற்பத்தி மீது ஏற்படுத்தியதையும் போல. இந்தியா மற்றும் சீனாவில் வளரும் மத்திய தர வர்க்கத்தினர் அடுக்கில் இருந்து தேவை அதிகரிப்பதும் நிகழ்ந்து வருகிறது.

ஆனால் மிகவும் அடிப்படையான விஷயம் என்னவென்றால் உணவுப் பொருளை கச்சா எண்ணெய் மற்றும் ஆபரண உலோகங்கள் போல ஊக வணிக நுகர்பொருளாக மாற்றியதன் விளைவு தான் இது. வீட்டு அடமானக் கடன் சந்தை மற்றும் பிற நச்சுத்தன்மை வாய்ந்த கடன் தயாரிப்பு பொருள்கள் மூலமான நிதி ஆதாரங்கள் என்னும் கறை படிந்த காகித சொத்துகளில் இருந்து மாற்று தேடி வரும் நிதி முதலீட்டாளர்களுக்கான புகலிடமாக இந்த உணவுப் பொருள் ஊக வணிகச் சந்தை ஆகியிருக்கிறது. வாங்குவோர் வெள்ளமெனத் திரண்டிருப்பது விலைவாசியை உயர்த்தி உலகின் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களை எட்டாப் பொருட்களாக்கி இருக்கிறது.

"நிதிப் பணம் விவசாயத் துறைகளுக்குள் பாயத் தொடங்கியிருப்பது விலைவாசியை கடுமையாக உயர்த்தியிருக்கிறது", என்று ஸ்டான்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் உணவு பொருள் ஆய்வாளர் அபா ஒபான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இது நாகரீகமாகி விட்டது. இது விவசாயப் பண்டங்களுக்கான வருடம்".

உணவுப் பொருட்களை ஊக வணிக நுகர்பொருளாக அணுகும் நடைமுறை டாலர் மதிப்பின் சரிவினாலும், எகிறும் கச்சா எண்ணெய் விலைகளாலும் அமெரிக்கா மற்றும் பிற எங்கிலும் உயிரி எரிபொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளாலும் துரிதப்பட்டுள்ளது. ஒரு புதிய முதலீட்டு "குமிழி"யை உருவாக்கும் இந்த முயற்சியானது, மக்காச்சோளத்தை எத்தனாலாக மாற்றுவது புதைபடிவ எரிபொருள்களுக்கான ஒரு "பசுமையான" மாற்று என்று கூறும் மோசடியை அடிப்படையாக கொண்டது, இது மக்காச்சோளத்தின் விலையை மட்டுமன்றி, பிற தானியங்களின் விலையையும் உயர்த்தியுள்ளது, உணவு உற்பத்தி நடைமுறையின் பெரும் பங்கினை கூடுதல் ஆதாயமளிக்கும் பயிர் முயற்சிகளுக்குத் திருப்பி விடுவதாலாகும்.

அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் மானியத்தால் கவரப்பட்டு, அமெரிக்க விவசாயிகள் மக்காச்சோள உற்பத்தியின் 30 சதவீதத்தினை முழுமையாக எத்தனால் உற்பத்தி திட்டத்திற்காகத் திருப்பி விட்டுள்ளனர், இதனால் கால்நடைகள் உண்ணக் கொடுக்கும் உணவுப் பொருட்களுக்கு, மாற்றான தானியங்கள் விலை கூடுதல் விலை கொண்டதாக ஆகியிருக்கின்றன.

"உயிரி எரிபொருள் கொள்கை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட 6 பில்லியன் டாலர் மானியத் தொகையின் விளைவாக சந்தையில் இருந்து 138 மில்லியன் தொன்கள் மக்காச்சோளத்தை இடம்பெயர்த்தும் உயிரிஎரிபொருள் மூலம், எரிபொருளுக்கான ஒருவரின் தாகத்தை நிவர்த்தி செய்ய மனித குலத்திற்கு எதிரான ஒரு குற்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது" என்று உணவு உரிமைக்கான ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ழான் ஸீக்லர் Liberation பத்திரிகையிடம் தெரிவித்தார்.

இந்த மதிப்பீடானது இந்திய நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் மூலம் மீண்டும் கூறப்பட்டது. அவர் அறிவித்தார், "மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் சமயத்தில், உயிரி எரிபொருளுக்காக உணவுப் பொருள் உற்பத்தியை திருப்புவது என்பது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம் தான்.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமெரிக்க அதிகாரிகள் உயிரி எரிபொருள் உற்பத்தி என்பது பல காரணங்களுள் ஒன்று தான் என்று கூறினர். அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்கா, மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிதி அமைப்புகளின் தொடர்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து அமலான "தாராள சந்தை" கொள்கைகளால் உலகளாவிய பண்ணடங்களின் விலைகள் ஒவ்வொரு நாடாக பலவீனமான நிலையில் விடப்படுவது என்பது தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்கள் உலக சந்தையாக நெருக்கமாக பின்னப்பட்டிருப்பது சிறப்பு ஏற்றுமதி பயிர்களின் மீதான கூடுதல் கவனத்துடன் சேர்ந்து கொள்கிறது. விலை நிர்ணய தடைகள் சிதைக்கப்படும்நிலை மிக முன்னேறிய நாடுகளில் இருந்து மானியம்பெறும் விவசாயப் பயிர்கள் உள்ளூர் சந்தைகளை கைப்பற்றுவதற்கான பாதையை இது திறந்து விடுகிறது.

இப்போது, தனிப்பட்ட தேசிய அரசாங்கங்கள் இந்த பிரச்சினையை தீர்க்க தங்களது நாட்டு எல்லைகளுக்குள்ளாக செய்யும் முயற்சிகளானவை - இவை பெரும்பாலும் பண்ட நுகர்பொருள் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிகள் மீது தடைகளை எதிர்கொள்ளும் வடிவத்தை எடுக்கிறது - சர்வதேச ரீதியாக இந்த நெருக்கடியை அதிகப்படுத்தவே செய்திருக்கிறது. இந்தியா முதல் அர்ஜென்டினா வரை நாடுகளின் விவசாயிகள் ஒரு பக்கம் போராட்டங்களை தொடக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை இன்னமும் அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உலக வங்கி கருத்துக் கணிப்பு ஒன்றின் படி, குறைந்தபட்சம் 58 நாடுகளாவது உணவு-வர்த்தக பாதுகாப்புவாத நடவடிக்கைகளின் சில வடிவத்தையேனும் அமல்படுத்தியுள்ளன.

உணவுப் பொருள் நெருக்கடியினால் விளைந்துள்ளதெல்லாம் உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கு முறிவுற்றதன் கலக வெளிப்பாடுதான் அது. உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களை எதிர்கொண்டுள்ள பெருந்துயரத்தை தனியார் ஆதாயம் மற்றும் தேசிய அரசாங்கம் இவற்றின் அடிப்படையிலான ஒரு அமைப்பின் எல்லைகளுக்குட்பட்டு தீர்த்து விட முடியாது.

இந்த நெருக்கடியின் புரட்சிகர விளைவுகள் ஆளும் கட்டமைப்பிற்குள்ளாக இருக்கும் உறுப்புகளின் மீதாகவும் விடியத் தொடங்கியிருக்கிறது. திங்களன்று வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த டைம் இதழ் குறிப்பிட்டது: "குளிர் யுத்தத்தில் தீர்மானமாக முதலாளித்துவம் வெற்றி பெற்றது முதல் பசித்த மக்கள் வெறுப்புற்று வீதியில் இறங்கி தங்களது பயனற்ற அரசாங்கங்களை தூக்கியெறிவது என்பது சாத்தியமில்லாத ஒரு விநோதமாகத் தான் காட்சியளித்திருக்கிறது.... இருந்தும், கடந்த மாத தலைப்புச் செய்திகள் காட்டுவதெல்லாம் விண்ணைத் தொடும் உணவு பொருட்களின் விலைகள் உலகெங்கிலும் அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகியிருக்கின்றன என்பதுதான்".