World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US State Department renews contract with Blackwater mercenaries

பிளாக்வாட்டர் ஒப்பந்ததாரர்களுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்பந்தத்தை புதுப்பிக்கிறது

By Kate Randall
9 April 2008

Back to screen version

பாக்தாத்திலுள்ள அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுக்கு பாதுகாப்பளிக்க பிளாக்வாட்டருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அதன் ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கிறது. செப்டம்பர் 2007ல், இந்த பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாவலர்களால் 17 ஈராக்கிய குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை FBI இன்னும் விசாரித்து வரும் நிலைமையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் புதுப்பித்தது குறித்து இராஜாங்க அதிகாரிகளின் பாதுகாப்புக்கான தற்போதைய உதவி வெளியுறவுத்துறை செயலாளர் க்ரிகோரி ஸ்டார் குறிப்பிடுகையில், "FBI அதன் புலன் விசாரணையில் என்ன கண்டுபிடிக்க போகிறது என்பதை என்னால் முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது. அது மிகவும் சிக்கலானதாகும். அமெரிக்க அரசுக்கு பாதுகாப்பு சேவைகள் தேவைப்படுகின்றன என்று நான் எண்ணுகிறேன்" என்று தெரிவித்ததுடன், "குறிப்பாக, அவர்கள் [பிளாக்வாட்டர்] திறமையாக செயல்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

2006ல் ஆரம்பித்து, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்த பிளாக்வாட்டருடனான ஐந்தாண்டு ஒப்பந்தம் மே 7ல் முடியவிருந்தது. அது அடுத்த ஒரு வருடத்திற்கு மேலும் நீடிக்கப்படும் என கடந்த வெள்ளியன்று வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னால், பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் அதிகரித்துவரும் அழுத்தத்தை சந்தித்து வரும் ஈராக்கிய அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படவில்லை.

இந்த செய்திக்கு ஈராக்கிய பிரதம மந்திரி நெளரி அல் மலிக்கி மிக கோபத்துடன் பதிலளித்திருந்தார். "ஈராக்கியர்களுக்கு எதிராக அவர்கள் படுகொலை நிகழ்த்தியுள்ளார்கள் அத்துடன் இதுவரை அந்த பிரச்சனை தீர்க்கப்படவில்லை" âù CNN இடம் கூறிய அவர் தொடர்ந்து, "எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் இழப்பீடும் அளிக்கப்படவில்லை." என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது, "இந்த நிறுவனத்துடனான தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாத வரை, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கக் கூடாது என நான் கூற விரும்புகிறேன். இந்த முடிவு ஈராக்கிய அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது என உணர்கிறேன்." என்று தெரிவித்தார்.

மலிக்கியின் கருத்துக்களை நிராகரித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சீன் மெக்கார்மேக், பாதுகாப்பு நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஈராக்கிய அதிகாரிகளின் எந்தவித கருத்துக்களையும் நிராகரித்தார். "அனைத்திற்கும் மேலாக, நம் மக்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பாக அடிப்படைரீதியாக நாம் எடுக்கவேண்டிய ஒரு முடிவாகும்" எனக் கூறிய அவர், "அம்மாதிரியாக முடிவெடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் எம்முள் இருக்க நடக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

செப்டம்பர் 16ல் பாக்தாத்தின் நிசூர் சதுக்கத்தில் அந்த படுகொலை சம்பவம் நடந்த ஆறு மாதங்களுக்கு பின்னரும் கூட, அதில் தொடர்புடைய எந்த பாதுகாவலர்களும் அந்த துப்பாக்கி சூட்டுடன் தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டப்படவில்லை. 2004ல் தற்காலிக கூட்டு ஆணையத்தால் (Coalition Provisional Authority) உருவாக்கப்பட்ட "உத்தரவு 17" என அறியப்படும் ஒரு நடவடிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்ட அதே பாதுகாப்பின் கீழ் அன்னிய ஒப்பந்ததாரர்களுக்கும் ஈராக்கிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவதில் இருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கியர்களுக்கு எதிராக ஹால்தாவில், 2005 நவம்பரில் 24 உள்ளூர்வாசிகள் படுகொலை செய்யப்பட்டது போன்ற அட்டூழியங்களில் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகளையும், படையினரையும் ஈராக்கிய நீதிமன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற இந்த உத்தரவு பயன்படுத்தப்பட்டது.

நிசூர் சதுக்க சம்பவத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட ஓர் ஈராக்கிய விசாரணையினதும் மற்றும் ஓர் அமெரிக்க இராணுவ அறிக்கையிலும் இந்த படுகொலைகள் ஆத்திரமூட்டும் செயல்களின் பின்னர் நிகழ்ந்ததல்ல என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சுடப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களும் சுடப்பட்டதாகவும் அந்த அட்டூழியத்தை பார்த்த எண்ணிலடங்கா சாட்சியங்கள் அந்த கொடூர நிகழ்வை வர்ணித்தனர்.

வெளியுறவுத்துறை இராஜாங்க பாதுகாப்பு புலனாய்வாளர்களிடம் இருந்து தங்கள் வசம் எடுத்துக் கொண்ட FBI இதுவரை அதன் முடிவை வெளியிடவில்லை. அது முடிவை வெளியிடும் போது, குற்றத்திற்கான ஏதேனும் தண்டனை அளிக்கப்படுமா இல்லையா என்பது அமெரிக்க நீதித்துறை தீர்மானித்திற்குட்பட்டு இருக்கும். கடந்த நவம்பரில், FBI அதிகாரிகள் நியூயோர்க் டைம்ஸிடம் கூறும் போது, குறைந்தபட்சம் மூன்று குடிமக்களின் உயிரிழப்புகள் நியாயப்படுத்தப்படலாம் என்பதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவித்தனர்.

அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களுக்கு வெளியுறவுத்துறை ''கட்டுப்படுத்தப்பட்ட'' பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்ததாக, கடந்த ஆண்டின் அந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் வந்த உடனடி செய்திகள் தெரிவித்தன. இது எதை குறிக்கிறது என்றால், அவர்கள் அளித்த எந்தவிதமான அறிக்கையும் மற்றும் அதன் விளைவாக சேகரிக்கப்பட்ட எந்தவிதமான ஆதாரமும் எதிர்கால வழக்குகளில் அவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்பதையே குறிக்கிறது. இதன் விளைவாக, பாதுகாப்பு காவலர்கள் மீது நீதித்துறை குற்றம்சாட்டாமல் விட முடிவெடுக்கலாம் அல்லது அவர்களை தண்டிக்க தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் விடலாம்.

மேலும், அமெரிக்க இராணுவத்திற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை இராணுவ பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட நீதிச்சட்டம் அனுமதிக்கும் போதிலும், படைத்துறைசாரா அரசுத்துறைகளுக்கு பணியாற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அது பொருந்தாது என குறிப்பிடுவதால், அமெரிக்க நீதிமன்றங்களில் ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்படலாமா என்ற சட்ட நிலையில் தெளிவற்ற தன்மையை உருவாக்குகிறது.

அந்த துப்பாக்கி சூட்டிற்கு பின்னர், ஏபிசி நியூஸ்.காம் செய்தி நிறுவனத்தால் வெளியுறவுத்துறையின் இராஜாங்க பாதுகாப்பு சேவையிடமிருந்து பெறப்பட்ட ஒரு நேர்காணலில் ஒரு பீரங்கி சூட்டாளரான பெளல் கூறுகையில், அவர் எண்ணிலடங்கா சம்பவங்களில் எவ்வாறு குடிமக்களை சுட்டு வீழ்த்தினார் என்று விவரித்தார். "நான் ஒவ்வொருவரையும் தனித்தனியாக குறி வைத்தேன் மற்றும் எச்சரிக்கை செய்வதையும் நிறுத்திக் கொண்டேன்" என அவர் நினைவு கூர்ந்தார். தான் சிறிய துப்பாக்கிகள் மற்றும் AK-47 ஆகியவற்றால் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், இந்த துப்பாக்கி சூடு ஆத்திரமூட்டும் செயல்களின் பின்னர் நிகழ்ந்ததல்ல என்ற முந்தைய கண்டுபிடிப்புகளை FBI இன் ஆரம்ப அறிக்கைகள் உறுதிப்படுத்தி இருந்தன. FBI இனால் விசாரிக்கப்பட்ட மூன்று சாட்சிகள், அவர்களின் கேள்விகளுக்கு பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் பேசும் போது, பாதுகாப்பு காவலர்கள் மீது யாரும் துப்பாக்கி சூடு நடத்தியதை தாம் காணவில்லை என தாங்கள் FBI இடம் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

விசாரிக்கப்பட்டவர்களில் ஒருவரான 37 வயது நிரம்பிய ஹபித் அப்துல் ரஜ்ஜாக்கின் 10 வயது மகன் அலி இந்த படுகொலையில் கொல்லப்பட்டான். தம் காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த தம் மகன் சுடப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்னால் வரை, பாதுகாப்பு குழுவின் மீது யாரும் சுடுவதை தாம் ஒருபோதும் பார்க்கைவில்லை என ஹபித் தெரிவித்தார். "Christian Science Monitor இதழிற்கு அவர், இந்த துப்பாக்கி சூட்டு அட்டூழியம் மிகவும் "அசுரத்தனமானதாகும்". இறந்த மக்கள் மீது அவர்கள் மீண்டும் மீண்டும் சுடுவதை நான் பார்த்தேன்." என அவர் குறிப்பிட்டார்.

2007ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நடந்த சம்பவங்கள் தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை உள்ளடக்கிய மிகவும் பகிரங்கப்படுத்தப்பட்ட நிகழ்வாக இருந்த போதிலும், அவை ஒரு வழக்கத்திற்கு மாறானவை அல்ல. வெளியுறவுத்துறையின் சொந்த ஆவணங்களின்படி, 2007ல் மட்டும் பிளாக்வாட்டர் பாதுகாவலர்கள் குறைந்தபட்சம் 1,873 நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள், மேலும் 56 சந்தர்ப்பங்களில் அவர்கள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளார்கள்.

இந்த முகவர்களின் நடவடிக்கை அமெரிக்க இராணுவ விதிகளுக்கு பொருந்தி இருக்கின்றன, ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்கையில் அதற்கெதிராக "படைப்பலத்தை அதிகமாக பிரயோகிக்கலாம்" என கோருகின்றன. இராணுவத்தின் இந்த நடைமுறை விதிகளால் சோதனைச்சாவடிகளிலும், தெருக்களிலும் மற்றும் தங்களின் வீடுகளிலும் எண்ணிலடங்கா ஈராக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிளாக்வாட்டர் மற்றும் பிற பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகள் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் மிக முக்கிய மூலங்களாக விளங்குகின்றன. அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஒட்டுமொத்தமாக பிளாக்வாட்டர் குறைந்தபட்சம் 800 மில்லியன் டாலர் அளவிளான ஒப்பந்தங்களை பெற்றிருக்கிறது.

பிளாக்வாட்டர், டைன்கார்ப் இன்டர்நேஷனல் மற்றும் டிரிப்பிள் கனோப்பி ஆகிய நிறுவனங்களில் இருந்து 20,000 முதல் 30,000 வரை மதிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்த பாதுகாவலர்களும் தற்போது ஈராக்கில் உள்ளனர். பிளாக்வாட்டரின் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான வெளிவிவகாரத்துறையின் முடிவானது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் எவ்வித தண்டனைக்குள்ளாமல் தொடர்ந்து செயல்பட அவர்களுக்கு அதிகாரம் வழங்க அமெரிக்க அரசாங்கத்தின் திட்டங்களையே அடிக்கோடிடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved